தனது கைபேசியின் வாட்ஸ்அப்பில் அவன் அனுப்பியிருந்த அந்தப் பாடலைக் கேட்டவளுக்குக் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் சட்டென இமையை விட்டு கீழிறங்கியது.
‘இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம் உன் கழுத்துல நான் தாலி கட்டுற காட்சியும், உன்னை அணைச்சு நெத்துல முத்தமிடுற காட்சியும் தான் என் கண்ணுல வந்து போகும் அன்னம்’ அவன் அவளிடம் எப்பொழுதும் கூறும் அந்தச் சொற்கள் அவள் செவியை இப்பொழுதும் காற்றோடு வந்து தீண்டியதைப் போல் உணர்ந்தாள் அன்னம்.
மூச்சடைப்பதைப் போல் உணர்ந்தவள், ஜன்னலைத் திறந்துவிட்டு கம்பிகளைப் பற்றியவாறு வெளியே வெறித்துப் பார்த்தாள்.
அந்த வீட்டின் அருகில் இருக்கும் தோட்டத்தில் உள்ள பூக்களின் நறுமணத்தைக் காற்றுச் சுவாசமாய் அவளின் நாசிக்குள் செலுத்திச் சிந்தையைக் கலைக்க முயற்சித்தப் போதும், அன்னத்தின் மனதினுள் நிகழ்ந்து கொண்டிருந்த எண்ணச்சுழற்சியிலும் மனத்தின் வேதனையிலும் எந்நறுமணமும் அவளைச் சீண்டிட முடியாமல் காற்றோடு கலந்து தான் போனது.
மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திரக்கடையின் அதிபர்கள் மீனாட்சியும் அவளின் கணவர் சுந்தரேஸ்வரனும் தான். இவர்களுக்கு ஐந்து வயதில் சிவரஞ்ஜனி என்ற மகள் இருக்கிறாள்.
“அன்னம் இன்னும் கிளம்பாம என்ன செய்ற?” எனக் கேட்டவாறே அறைக்குள் நுழைந்த மீனாட்சி, அன்னம் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து, “என்னடி இன்னும் புடவையே கட்டாம நிக்கிற?” எனக் கேட்டாள்.
“ஆமா நான் சீவி சிங்காரிச்சிட்டு அவர் முன்னாடி போய் நிக்கிறதுக்கு அப்படியே எனக்குப் பிடிச்ச புடவையை வாங்கி கொடுத்துட்டாரு பாரு நான் கட்டிக்கப் போறவரு! ” உதட்டைச் சுழித்தவாறு அன்னம் உரைக்க,
“ஆத்தீ இப்பவே இந்தப் பேச்சுப் பேசுறியே! உன் கூட ஃபோன்ல பேச ஆரம்பிச்சிட்டாருனா எனக்கு இந்த பொண்ணே வேணாம்னு அவரை ஓட வச்சிடுவ போலயே!” எனச் சிரித்தாள் மீனாட்சி.
“இல்லனா மட்டும் அவரை நான் ஓட விட மாட்டேனாக்கும்” எனப் புருவத்தை உயர்த்தியவாறு கேட்டாள் அன்னம்.
“நீ செஞ்சாலும் செய்வடி! கல்யாணத்துக்குப் பிறகு ஓட விடுவியோ உட்கார விடுவியோ! அப்ப என்னனாலும் செய்யுடி! இப்ப கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடிக்கவாவது செய்!
என்கேஜ்ட்மெண்ட் முடிஞ்சதும் அவர் போன் நம்பர் கேட்டு வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன். நீ பேசுற பேச்சுக்கு கொஞ்சம் யோசிக்கனும் தான் போலயே” எனத் தாடையில் கை வைத்து யோசித்தவாறு மீனாட்சி கூற,
“ஆமா நீங்க பேசி வாங்கிக் கொடுக்கிற வரைக்கும் நான் பார்த்துட்டு இருப்பேன் பாருங்க. இந்த கைல மோதிரம் மாட்டின அடுத்த செகண்ட் அந்த கைல போன் நம்பரை வாங்கிட மாட்டேன். ஆச்சிக்காக தான் கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு இப்ப வரைக்கும் நம்பர் வாங்காம இருக்கேன்” வம்பளத்தாள் அன்னம்.
“நீ எதுவும் ஏடாகூடமா பேசி மாப்பிள்ளையைத் தெறிச்சி ஓட வைக்காம இருந்தா சரி தான். சரி நேரமாகுது பாரு! புடவையைக் கட்டு! இன்னும் இரண்டு மணி நேரத்துல ஃபங்ஷன் ஆரம்பிச்சிடுவாங்க. புடவையைக் கொடுக்கத் தான் மாப்பிள்ளையோட அம்மாவும் தம்பியும் முன்னாடியே வந்துட்டாங்க. மாப்பிள்ளை வெளியூர்ல இருந்து வந்துட்டு இருக்காராம். மேக்கப் போட பார்லர் அக்கா கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க” என்றவாறு மாப்பிள்ளை வீட்டார் எடுத்துக் கொடுத்த புடவையை அன்னத்தின் கையில் கொடுத்து விட்டு, கதவைச் சாற்றியவாறு வெளியே சென்றாள் மீனாட்சி.
ஹ்ம்ம் என்ற நீண்ட பெருமூச்சுடன் தாழ்ப்பாள் போட்ட அன்னத்தின் முகத்தில் இத்தனை நேரமாய் இருந்த சிரிப்புக் காணாமல் போயிருக்க, முகத்தில் குழப்பமும் வேதனையும் சரிவிகிதமாய் பிரதிபலித்தன.
மெத்தையில் அமர்ந்து கைபேசியை கையில் எடுத்து பார்த்தவளுக்கு அவனுடனான முந்தைய குறுஞ்செய்திகள் எல்லாம் கண்ணில் பட, அவற்றை வாசிக்கும் போதே சுவாசம் தடைப்படுமளவு நெஞ்சம் விம்மி அடங்க, அதன் பொருட்டு விளைந்த கண்ணீரினால் உண்டான விம்மல் தொண்டையை அடைக்கச் செய்ய, கண்ணீரைத் துடைத்து விட்டு தண்ணீரை அருந்தியவள், திடமான முடிவெடுத்தவளாய் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அந்த அறையின் மறுபுறமாக இருந்த படிகட்டின் வழியாக வெளியே சென்றிருந்தாள்.
*****
எட்டு மாதங்களுக்கு முன்பு
ஸ்டைலிஷ் தமிழச்சி
இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ்
தமிழ் கச்சி
அலாரம் அலறி அடங்க, சாவகாசமாக மெத்தையில் உருண்டவள் போர்வையை இழுத்து மூடியவாறு உறங்கச் செல்ல, மீண்டும் அடித்தது அவளின் கைபேசி. காதினுள் சத்தம் கேட்காதவாறு கையை வைத்து மூடியவள் அப்படியே உறங்கிப் போக, மீண்டுமாய் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி எனக் கதறியது கைப்பேசி.
ஆழ்ந்த உறக்கம் கலைந்த கடுப்பில் “ஆஆஆஆஆ எங்க அந்த போன்னு” என மெத்தையில் கைகளைத் துழாவித் தேடியவள், “பிடிச்ச பாட்டை அலாரமா வச்சிடவே கூடாதுடா சாமி! ஒரு காலத்துல எவளோ பிடிச்ச பாட்டு. இப்ப ஸ்டைலிஷ் தமிழச்சினு கேட்டாலே காண்டாகுதே” என்றெண்ணியவாறே அதனைத் தேடி எடுத்தவள் பாட்டு முடியும் முன்பே தானே நிறுத்தி வைத்தாள்.
கைகளை உயர்த்தி சோம்பல் முறித்து கொட்டாவி விட்டவாறே எழுந்து அமர்ந்தவள், நேரம் என்ன என்று பார்த்தாள்.
மணி காலை ஏழே கால் என காண்பிக்க, “அய்யோ டைம் ஆகிடுச்சே!” என எழுந்து அரக்கப்பரக்க கிளம்பியவள், முகப்பறையில் மாமனுடன் அரட்டை அடித்தவாறு காலை உணவை உண்டாள்.
“ஏன்மா இப்படி அடிச்சி பிடிச்சி இரண்டு மூனு பஸ் மாறி ஆபிஸ்க்கு போறதுக்கு பதிலா காலைலயே எழுந்து ஆபிஸ் பஸ்ல போக வேண்டியது தானே” எனக் கேட்டார் மீனாட்சியின் தந்தையும் அவளின் மாமனுமான ருத்ரன்.
அன்னம் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து ஒரு மாதமாகிறது.
சொந்த ஊரான மதுரையிலேயே பள்ளி கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவள், பணி நிமித்தமாய் சென்னையில் தங்க வேண்டிய சூழல் வர, அவளது தந்தையின் தங்கை கணவரான ருத்ரனின் இல்லத்தில் தங்கி வேலைக்குச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
தாய் பரமேஸ்வரி, தந்தை முருகன் மற்றும் தந்தையின் அன்னையான ஆச்சி ஆகியோர் அடங்கிய அளவான அன்பான குடும்பம் அன்னத்தினுடையது.
ருத்ரனின் மகளான மீனாட்சியும் முருகனின் மகளான அன்னமும் ஐந்தாறு வயது வித்தியாசம் கொண்டிருந்தாலும் தோழிகள் போல் தான் பழகுவர்.
மீனாட்சியின் தாய் அவள் கல்லூரி பயிலும் போதே இறைவனடி சேர்ந்து விட்டார். மீனாட்சியை மதுரையிலுள்ள சுந்தரேஸ்வரனுக்கு மணமுடித்தப்பின் அவள் மதுரைப்பெண்ணாக மாறிப்போக, அன்னம் இங்கே மீனாட்சியின் அறையில் தங்கி வேலைக்குச் சேர்ந்து சென்னை பெண்ணாக மாற முயன்று கொண்டிருந்தாள்.
முதல் ஒரு மாத காலத்தில் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்தவள், இப்பொழுது பிராஜக்ட்டில் சேருவதற்காகக் காத்திருந்தாள்.
“ஆமா இன்னிக்கு ஏதோ பிராஜக்ட் இன்டர்வியூ இருக்குனு சொல்லிருந்தியேமா! பிரிபேர் செஞ்சிட்டியா?” எனக் கேட்டார் ருத்ரன்.
“அதெல்லாம் ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ஸா பிரிப்பேர் செஞ்சிருக்கேன் மாமா! கண்டிப்பாக இந்த பிராஜக்ட் கிடைச்சிடும்” என்றவாறு சமையலறைக்குள் கை கழுவச் சென்றவள், “செண்பாக்கா தக்காளி சட்னி ஏ ஒன்” எனப் பாராட்ட,
“தினமும் நீ இப்படி புகழ்ந்து தான் எனக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கிச்சு” எனச் சிரித்தார் செண்பாக்கா.
“பார்த்தீங்களா என் கூட சேர்ந்து நீங்களும் கேலி பேச கத்துக்கிட்டீங்க பார்த்தீங்களா” என்று அன்னம் இல்லாத தனது சுடிதார் காலரைத் தூக்கி விட,
“ஆமா தான் செல்லம்! மீனு பொண்ணு ரொம்ப அமைதி! பயந்து பயந்து வேலை செய்யும். அதுவா வேணும் வேண்டாம்னு கூட எதுவும் கேட்டுக்காது. நான் தான் பார்த்து பார்த்து செஞ்சி கொடுப்பேன். நீ இப்படி போல்ட்டா பேசுறதை பழகுறதை பார்க்கவே சந்தோஷமா இருக்கு செல்லம்” என அன்னத்தின் கன்னத்தைக் கிள்ளி செல்லம் கொஞ்சினார் செண்பாக்கா.
“ஆஹா இப்ப எனக்கு ஜலதோஷம் பிடிக்க வைக்க பார்க்கிறீங்களா?” என்றவாறு சிரித்துக்கொண்டே சமையலறையை விட்டு வெளியே வந்தவள்,
“பை மாமா நான் கிளம்புறேன்! டைம் ஆகிடுச்சு” என்றவாறு துள்ளலாய் துள்ளிக்குதித்து செல்ல,
‘முதல்ல இவளுக்கு ஒரு டூ வீலர் வண்டி வாங்கி கொடுக்கனும்’ மனதோடு நினைத்துக் கொண்டார் ருத்ரன்.
மிதமான கூட்டமுள்ள பேருந்திற்குள் ஏறி இருக்கையை ஆராய்ந்தவளுக்கு, ஓர் ஆணின் இருக்கை அருகே காலியான இருக்கை தென்பட, அவனருகில் சென்று அமர்ந்தாள்.
அவள் இருக்கையில் அமரும் சமயம் சரியாக,
மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
என்று அவளது அலைபேசி அலறி, மீனாட்சியிடம் இருந்து அழைப்பு வருவதை உணர்த்தியது.
இந்த அலைபேசி அலறலில் அருகிலிருந்தவன், ‘யார்டா அது இந்த காலத்துல இப்படி பழைய பாட்டெல்லாம் ரிங் டோனா வச்சிருக்கிறது’ என்று திரும்பி அன்னத்தைப் பார்த்தான்.
ஜீன்ஸ், டீ ஷர்ட், லூஸ் ஹேர் என இருக்கும் பெண்ணின் கைபேசியில் கேட்ட இப்பாடலில், ‘ஹ்ம்ம் பழமையும் புதுமையும் கலந்தவங்க போல’ என்று நினைத்தவாறு முகத்தை ஜன்னலை நோக்கித் திருப்பிக் கொண்டான்.
“ஆமாமா இப்ப தான் ஈஸூப்பா ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாங்க. நானும் கொஞ்ச நேரத்துல கடைக்கு கிளம்புவேன். சரி இன்னிக்கு பிராஜக்ட் இன்டர்வியூ இருக்குனு சொன்னியே ஒழுங்கா படிச்சியா?” எனக் கேட்டாள் மீனாட்சி.
“ம்ப்ச் கடுப்பா இருக்கு மீனு! இதோட ஆயுசுக்கும் படிக்கவே மாட்டேன்னு கடைசி எக்சாம் அன்னிக்கு சபதம் எடுத்த ஆளு நானு! ஆண்டவா இந்த படிப்புக்கு ஒரு எண்ட் கார்ட் இல்லையான்னு புலம்ப விட்டுட்டாங்க! இந்த இன்டர்வியூவை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சான்” ஆக்ரோஷமாய் பேசிக் கொண்டிருந்த அன்னத்தின் குரல் பாவனைகளில் அங்கே மீனாட்சி வாய்விட்டு சிரித்திருக்க, அதே நேரம் அன்னத்தின் அருகே இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவனின் இதழும் சட்டெனப் புன்னகையில் விரிந்தது.
“டிஸ்டிங்ஷன்ல இஞ்சினியரிங்கை முடிச்ச பொண்ணு இப்படி பேசலாமா! வாழ்க்கை முழுக்கவும் நாம படிக்க கத்துக்க ஏதாவது இருந்துட்டே தான் இருக்கும் அன்னம்” என்று மீனாட்சி ஆரம்பிக்கவும்,
“போதும் இத்தோட நிறுத்திக்கோ! மாம்ஸ் மாதிரி சொற்பொழிவு செய்ய ஆரம்பிச்சிடாத! உன் புருஷன் கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்ட நீ!” என்றாள் அன்னம்.
“அதென்னடி மாம்ஸ்ஸூ! மாமான்னு தானே கூப்பிட்டுட்டு இருந்த! ஒரு மாசமா தானடி சென்னைல இருக்க! என்னமோ ஃபாரீன் ரிட்டன் மாதிரி பீட்டர் விட்டுட்டு இருக்க” என இதற்கும் மீனாட்சி வகுப்பெடுக்க,
“மீனூஊஊஊ நீ ஆச்சிக்கிட்ட வளர்ந்திருக்கனும் நான் உன் அப்பாகிட்ட வளர்ந்திருக்கனும். இனி பாரு! எப்படி லைஃப்பை என்ஜாய் பண்றதுனு நான் உனக்கு சொல்லி தரேன். மொக்கை போடாம போய் வேலையைப் பாரு” என்று போனை வைத்தவளைப் பற்றிய கணிப்பு தான் அவளருகில் இருந்தவனுக்கு ஓடிக் கொண்டிருந்தது.
மனதிலுள்ளதை அப்படியே ஒப்புவிக்கும் கள்ளம் கபடமற்ற பெண்ணாய் தான் அன்னம் அவனுக்கு தோன்றினாள்.
— தொடரும்
சொக்கனின் மீனாள் மற்றும் நனிமதுர நங்கை கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤️
இப்பொழுது கதை எந்த காலத்தில் பயணப்படுகிறது என்கின்ற குழப்பம் வாசிப்பவர்களுக்கு எழலாம் என்பதனால் அதை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.
சொக்கனின் மீனாள் கதை கொரோனாவிற்கு முன்பான வருடங்களில் நிகழ்வது. 2017ஆம் ஆண்டிற்கு மேல் நிகழ்வது.
நனிமதுர நங்கை முக்கால்வாசி முன் கதையாக சென்று அடுத்து ராஜனின் திருமணம் 2019க்குள் நிகழ்கிறது.
ஐந்து வருடங்களுக்கு பிறகு என முடிவுரையில் குறிப்பிட்டிருப்பதில் அனைவருமே கொரோனா காலத்தை கடந்து 2023ன் தொடக்கத்தில் இருப்பதாக தான் குறிக்கிறது.
ஆக அழகிய அன்னமே கதை சமகாலத்தில் தான் நிகழ்கிறது.
மூன்று ஜோடிகள் இந்த கதையில் இடம்பெறுவார்கள்.
சுந்தரேஸ்வரன் மீனாட்சி மற்றும் சுந்தரராஜன் மதுரநங்கை அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளுடன் அன்னத்தின் காதல் மற்றும் திருமணமென செல்லும் கதையில் இன்பாவின் வாழ்வும் பிணைக்கப்பட்டதாய் இருக்கும்.
இந்த கதைக்கும் தங்களின் ஆதரவை அளித்து கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.