“பயம் எதுக்கு? உனக்குக் கொடுக்கிற வேலையை உன்னால முடிஞ்ச வரைக்கும் சரியா செய்யனும்னு மட்டும் நினைச்சிக்கோ அன்னம். அது உன்னை வளர்த்துட்டே போய்டும் . என்ன கொஞ்சம் பொறுமை வேணும்! அது வந்துடும். மாசா மாசம் பேங்க் அக்கவுண்ட்க்கு வர்ற சம்பளத்தைப் பார்த்ததும் வந்துடும்” என்று சிரித்தவள் மேலும் தொடர்ந்தாள்,
“நான் இப்ப சொல்ல போறது தான் ரியாலிட்டி அன்னம்! வாழ்க்கை நிலையில்லாதது மாதிரி இப்ப நாம செய்ற எந்த வேலையும் நிலையில்லாதது தான் அன்னம். எத்தனை வருஷம் இந்த பிராஜக்ட் இருக்கும், போகும்னு ஒன்னும் நாம சொல்ல முடியாது. பிராஜக்ட் மாறிட்டே இருக்கும். சப்போஸ் அது மாறலைனா பிடிக்காத இடத்துல ரொம்ப நாள் இருக்கிறதுக்குப் பதிலா நாம மாறிடலாம்னு மாறிடனும்.
கண்டிப்பாக இங்கே முக்கால்வாசி பேர் பிடிக்காம தான் ஐடி வேலை செய்றாங்க தெரியுமா. அதிலும் கல்யாணமான பொண்ணுங்க பெரும்பான்மை பேருக்கு வேலை செய்யப் பிடிக்கிறது இல்லை. எல்லாரும் குறிக்கோளோட வேலைக்குச் சேர்ந்தவங்க தான். அவங்க புகுந்த வீட்டுல வர்க் லைஃப் பேலன்ஸ் செய்ய அவங்களுக்கான சப்போர்ட் கிடைக்காம போகும் போது, குறிக்கோளாவது மண்ணாவதுனு முதல்ல வேலையை விடத் தான் தோணும்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும்னு தோணும். அப்ப குழந்தை வந்துட்டா வேலைல இருந்து ரிலாக்ஸ் ஆனாலும் குழந்தைக்காகனு நிறைய வேலை வந்துட்டு இருக்கும்.
சோ ரிலாக்ஸ்ங்கிறது எந்தவிதமான வேலை செஞ்சாலும் நாமளா எடுத்துக்கிறது தானே. அதனால் அப்படி மனசும் உடம்பும் ரிலாக்ஸ்ஸை கேட்கும் போது வேலையை விட்டுடாம பிரேக் எடுத்துக்கலாம்” என்றாள்.
“என்னமோ வேலைக்குப் போக ஆரம்பிச்சதுலருந்து ஓடிட்டே இருக்க மாதிரி இருக்கு! நிம்மதியான நேரம்னு இல்லவே இல்லை” என்றாள் அன்னம்.
“இரண்டு மாசத்துக்கே இப்படியா?” என்று சிரித்த நங்கை, “இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்குலாம் எல்லாம் ஈசியா சூப்பர் பாஸ்ட்டா நடந்துடனும். அப்படித் தானே!” என்று அவளின் தலையைப் பிடித்து ஆட்டினாள்.
“எதுலயுமே நிரந்தரமான நிம்மதினு ஒன்னு கிடையவே கிடையாதுடா. நம்ம மனசுல எதை நிம்மதினு நாம் எடுத்து வைக்கிறோமோ அது தான் நமக்கு நிம்மதி. சோ நமக்குப் பிடிச்சதை செஞ்சி நாம தான் நம்ம மனசை அப்பப்ப திசை திருப்பி நிம்மதியா வச்சிக்கனும்.
நமக்கான நிம்மதியை தேடிக்க என்ன வழினா, நமக்குப் பிடிச்ச மாதிரியான விஷயத்தைப் பார்ட் டைம்மா இல்லைனா வீக்கெண்ட்ல செய்ற மாதிரி பழகுறது தான். இந்த பார்ட் டைம் வீக்கெண்ட் வேலை மன நிம்மதியை தரும். இந்த ஐடி வேலை பொருள் நிம்மதியை தரும்” தனது அனுபவங்களை வைத்து நங்கை கூறிக் கொண்டே போக,
“பிடிச்ச மாதிரி விஷயம்னா எதைச் சொல்றீங்க அண்ணி?” எனக் கேட்டாள் அன்னம்.
“வரையுறது, பாடுறது, ஆடுறது, ஸ்விம்மிங் கத்துக்கிறது, எழுதுறது, படம் பார்க்கிறது, ரிவ்யூ சொல்றது, சமைக்கிறது! இப்படி நிறைய இருக்கே! உனக்கு எது விருப்பமோ அதைச் செய்! மனசு ரிலாக்ஸ் ஆகி ரிஃபெரஷிங்கா ஃபீல் ஆகும்” என்றவள் மேலும் சில மணி நேரங்கள் அவளுடன் பேசிக் கொண்டிருக்க, ராஜன் வீட்டின் அழைப்பொலியை அழுத்தினான்.
“சரி நீ தூங்கு! நாளைக்கும் மார்னிங் ஷிப்ட் தானே! குளிக்கப் போகும் போது என்னை எழுப்பு! டீ காபி ஏதாவது போட்டுத் தரேன்” என்றாள் நங்கை.
“நீங்க எதுக்கு எழுந்துக்கிட்டு! நான் ஆபிஸ்ல போய்க் குடிச்சிக்கிறேன் அண்ணி! பாப்பாவை வச்சிக்கிட்டு லேட்டா தானே தூங்குவீங்க” என்றாள் அன்னம்.
“சரி காலைல பார்ப்போம்! குட் நைட்” என்றவாறு அறையை விட்டு வெளியே வந்தவள் வாசல் கதவைத் திறந்தாள்.
அவனுடன் பேசியவாறே படுக்கையறைக்கு வந்தவள் குழந்தை இன்னும் சாப்பிடாமல் உறங்குவதை அவனிடம் கூற, குழந்தையிடம் பேசியவாறே எழுப்பி அமர வைத்தவன், நங்கை கலக்கி வைத்திருந்த பாலை அவளுக்கு வழங்கினான். கண்களைத் திறவாமலேயே பால் முழுவதையும் குடித்தவள், படுத்துக் கொள்ளப் போக, “நந்துமா பால் குடிச்சதும் தூங்க கூடாதுமா” என்றவாறு முதுகைத் தடவி விட, உட்கார்ந்து கொண்டே உறங்கினாள் நந்துக்குட்டி, சில நிமிடங்களுக்குப் பிறகுப் படுக்க வைத்தான்.
“நான் எழுப்பும் போது எப்படி அழுது சிணுங்கினா தெரியுமா! பால் பாட்டிலை வாயில வச்சாலே தட்டி விட்டுட்டு அப்படி ஒரு தூக்கம். உன் குரல் கேட்டதும் தூக்கத்துலயும் எழுந்து குடிச்சிட்டு தூங்குறா! சரியான அப்பா கோந்து” என்று இவள் அவனை முறைக்க,
“உனக்கு ஏன்டா பப்ளிமாஸ் பொறாமை” என்று சிரித்தவாறு அவளைத் தன்னருகே இழுத்தான் ராஜன்.
“சுந்தர், நான் வேலையை விட்டுடவா! சம் டைம்ஸ் ரொம்ப ஹெக்ட்டிக்கா ஃபீல் ஆகுது” என்றாள் நங்கை.
“சரி விட்டுடு” என்றவன் சொன்னதும்,
“அதெப்படி விடுறது! எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மேனேஜர் பொசிஷன்க்கு வந்திருக்கேன். விட்டுட்டா இவ்ளோ நாள் உழைப்பும் கஷ்டமும் வீணான மாதிரி ஆகிடாதா?” எனக் கேட்டாள்.
“சரி விடாத!” என்றான் ராஜன்.
“டேய்” என்று எழுந்து அமர்ந்தவள், “நானே குழப்பத்துல கேள்வி கேட்டா நீயும் அதையே சொல்ற! ஏதாவது ஒன்னு சொல்லுடா” என்றவாறு அவனை முறைத்தாள்.
“தூங்கித் தொலை” என்றவள் குழந்தையின் மறுபுறம் சென்று படுத்துக் கொள்ள, குழந்தை இவனின் விரலைப் பிடித்துக்கொண்டு படுத்திருந்தாள்.
நங்கையைப் பார்த்து சிரித்தவனாய் படுத்துக் கொள்ள, சிறிது நேரம் கழித்து மறுபுறம் வந்தவள் அவனை அணைத்தவாறு படுத்து அவனோடு ஒட்டிக்கொள்ள, கண்களை மூடியவாறே, “அதான் தனியா படுத்தா தூக்கம் வராதே உனக்கு! அப்புறம் எதுக்கு இந்த வீண் ஜம்பம்” என்றவன்,
“விழுந்து வச்சிடாத” என்றவனாய் சற்று உள்ளே தள்ளிப்படுத்து ஒரு கையால் அவளையும் மறு கையால் குழந்தையையும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“என்னோட நிம்மதியே நீ தான்டா” என்றவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து மார்பில் முகம் புதைத்தாள். குறுநகை அவனிதழில்!
—-
இங்கே விருந்தினர் அறையில் படுத்திருந்த அன்னம், அன்றைய நாளின் அலுவலக நிகழ்வுகளை மோகனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தாள்.
இந்த இரண்டு மாதத்தில் மோகன் அவளுக்கு உற்றத்தோழனாய் மாறியிருந்தான். பிரித்வி சொல்லிக் கொடுத்ததைத் தாண்டி மோகன் மூலம் நிறையக் கற்றுக் கொண்டாள்.
அலுவலகத்தில் இருவரும் வெவ்வேறு ஷிப்ட்டில் வரும் பொழுது, அங்கு நடந்த அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொள்வாள்.
இன்று அவன் மதிய ஷிப்டில் வந்திருக்க, இவள் காலை ஷிப்ட் முடித்துக் கிளம்பி வந்திருந்ததால் தற்பொழுது அவனின் ஷிப்ட் முடிந்ததும் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் தூங்கலையா நீ? காலைல எழுந்திருக்கனும்ல! ஒழுங்கா தூங்கு. காலைல பேசிக்கலாம்” என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப, இவள் சில நிமிடங்கள் குறுஞ்செய்தி மூலம் பேசிவிட்டே உறங்கிப் போனாள்.
மறுநாள் மதியம் அவளின் பணியிடத்தில் அனைவரும் டீம் லன்ச் பற்றிப் பேச, இவள் புரியாமல் விழிக்க, “நம்ம ரொம்ப உழைச்சு களைச்சு போய்ருப்போம்னு மூனு மாசத்துக்கு ஒரு தடவை டீம் பிராஜக்ட் பார்ட்டிக்குனு கொஞ்ச அமௌண்ட் கிளையண்ட் பட்ஜட்ல ஒதுக்குவாங்க. பொதுவாக ஒருத்தருக்கு இருநூறு ரூபானு கொடுப்பாங்க” என்று மோகன் சொன்னதும்,
“என்னாது இருநூறு ரூபா தானா?” முகத்தை அஷ்டகோணலாக்கி அவள் கேட்க, “ஆமா அவ்ளோ தான் தருவாங்க. நாங்க என்ன செய்வோம்னா, அதுல கூடக் கொஞ்சம் காசு போட்டு நல்ல பெரிய ஹோட்டலா போய்ச் சாப்பிடுவோம், இல்லனா தியேட்டர் போய்ப் படம் பார்ப்போம். இல்லனா ஒன் டே ரிசார்ட் டிரிப் இல்லனா டூ டேஸ் வெளியூர் டிரிப்னு போவோம். இந்தத் தடவை லன்ச் போகலாம்னு பிளான். யூஸ்வலி லன்ச் போனா இன்பாவே எக்ஸ்ட்ரா காசு போட்டுடுவாரு” என்றான்.
“ஓ சூப்பர்! எந்த ஹோட்டல் போகப் போறோம். என்னிக்குப் போகப் போறோம்?” என ஆர்வமாய்க் கேட்டாள் அன்னம்.
“அதான் பேசிட்டு இருக்கோம். மோஸ்ட்லி வீக்கெண்ட் சனிக்கிழமை மதியம் டைம்ல தான் இருக்கும். அப்ப தான் எல்லா ஷிப்ட் ஆளுங்களும் இருப்பாங்க. ஆனா சில பேர் வாரயிறுதில தான் சொந்த ஊருக்கு போவாங்க. அதையும் பார்க்கனும். எல்லாரும் இருக்கிற மாதிரி ஒரு நாள் ஃபிக்ஸ் செய்வாங்க” என்றான்.
“ஓ ஓகே! ஆமா எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! ஏன் இன்பாவே டி எல் அண்ட் மேனேஜராக இருக்காங்க” எனக் கேட்டாள்.
“அது பழைய மேனேஜர் போனதும் அந்த இடத்துக்கு வேற ஆளை எடுக்கலை. இன்பாவையே பார்த்துக்கச் சொல்லிட்டாங்க. இன்பா இல்லாதப்போ பாலாஜி தான் எல்லாமே. இன்பா மேனேஜர் பிரோமோஷன்காக வெயிட்டிங். அடுத்து பாலாஜி டி எல் ஆகிடுவாரு” என்றான் மோகன்.
அடுத்து வந்த வாரயிறுதி நாளில் மொத்தக்குழுவும் பெரிய உணவகத்திற்குச் சென்று மதிய உணவை உண்டு விட்டு திரையரங்கிற்குச் சென்று திரைப்படமும் பார்த்து விட்டு வந்தனர்.
அத்திரைப்படத்தில் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவனின் நடிப்பும் பலரால் புகழப்பட்டு நிறைய நேர்காணலில் அவனைக் காண முடிந்தது.
மோகன் மூலம் ஏற்கனவே சிவாவின் கைபேசி எண்ணை வைத்திருந்தவள், அவ்வப்போது அவனது இன்ஸ்டா பக்கத்திற்காகத் தயாரிக்கப்படும் காணொளியை அவனுக்கு அனுப்பி வைப்பாள். இதன் மூலம் சிவாவும் அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவான்.
இத்திரைப்படத்தின் கதாபாத்திர புகைப்படத்தை வைத்து ஏற்கனவே வீடியோ செய்திருந்தான் மோகன். சிவாவிற்காகவே இப்படத்தைப் பார்க்கலாமெனக் கூறி அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தான்.
இன்று இத்திரைப்படத்தில் அவனின் கதாபாத்திரத்தில் கவர்ந்தவளாய், அவனுக்குப் பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பினாள் அன்னம். அவனும் மகிழ்ந்து பதிலளித்து அவளுக்கு அழைத்தே பேசியிருந்தான்.
அன்று இரவு அன்றைய நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளை நங்கையிடம் அன்னம் பகிர்ந்து கொள்ள, “டீம்ல எல்லாருமே கேரிங் பசங்களா தான் இருக்காங்க. ஸ்டில் நீ கொஞ்சம் ஒதுங்கியே பழகுடா அன்னம்!” என்றாள்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க அண்ணி?” என்று அன்னம் கேட்க,
“லைஃப்ல எல்லாருமே பாசிங் கிளைவுட்ஸ் (கடந்து போறவங்க) தான். நீ ரொம்ப அவங்க அன்பை எதிர்பார்த்துப் பழகிப் பின்னாடி அவங்க உன்னை அவாய்ட் செய்யும் போது ஹர்ட் ஆகும். அதுக்குத் தான் சொல்றேன்” என்றாள் நங்கை.
“ஹ்ம்ம் புரியுது அண்ணி! ஆனா என் மேனேஜரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு ரோல் மாடல் மாதிரி! பிற்காலத்துல நான் மேனேஜர் ஆனாலும் இவர மாதிரி தான் இருக்கனும்னுலாம் நினைச்சிருக்கேன். மோகன் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் மாதிரி ஆகிட்டான் தெரியுமா. இவங்க இரண்டு பேரையும் தவிர மத்தவங்ககிட்டலாம் நான் ஒதுங்கித் தான் பழகுறேன் அண்ணி” என்றாள்.
ஆனால் இவ்விருவரும் தான் இவளை கவலைக்குள்ளாக்கப் போகிறார்கள் என்பதை அறியாமல் போனாள் அன்னம்!
அன்னத்தின் தலையைத் தடவியவளாய், “இதே போல் நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அன்னம்! எனக்கு அது போதும்” என்று அணைத்துக் கொண்ட நங்கை, அவளை உறங்க சொல்லி விட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.