அன்னம் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகி இருந்தது.
இன்று மோகனுடன் மதிய ஷிப்ட்டில் இருந்தாள் அன்னம்.
மதியம் இரண்டு மணியளவில் அலுவலகத்திற்கு வருபவள், இரவு பதினோரு மணிக்கு தான் அலுவலகத்திலிருந்து கிளம்புவாள்.
ஒன்பது மணியளவிலேயே இரவு ஷிப்ட் ஆட்கள் வந்துவிடுவார்கள்.
ஒவ்வொரு ஷிப்ட்டின் முடிவிலும் ஷிப்ட் ஹேண்ட் ஓவர் (hand over) என்ற ஒன்று நடைப்பெறும். அதாவது அந்த ஷிப்ட்டில் பாதியில் நிற்கும் வேலையை அடுத்த ஷிப்ட் ஆட்களிடம் ஒப்படைப்பதைத் தான் ஷிப்ட் ஹேண்ட் ஓவர் என்று கூறுவார்கள். அடுத்த ஷிப்ட்டில் செய்து முடித்து, மீதமுள்ள வேலைகளை அதற்கு அடுத்த ஷிப்ட் ஆட்களிடம் ஒப்படைப்பார்கள். இப்படியாகத் தொடர்ந்து கொண்டே போகும்.
அடுத்த ஷிப்ட் ஆட்களான பாலாஜி மற்றும் அசோக்கிடம் ஷிப்ட் ஹேண்ட் ஓவரை கூறிக் கொண்டிருந்தாள் அன்னம்.
அவள் கூறி முடித்ததும் பாலாஜி அவளிடம், “அன்னம் ரெஸ்ட் ரூம் போகும் போது ஜாக்கிரதையா போ! நேத்து நைட் ஒரு பொண்ணு பாத்ரூம் கதவை யாரோ தட்டின மாதிரி இருந்துச்சாம். இந்த எமர்ஜென்சி எக்சிட் கதவு எப்பவும் மூடி தானே இருக்கும். அங்க யாரோ நடமாடுற மாதிரி இருந்துச்சாம். கண்ணாடி கதவுல நிழலாடிச்சாம்” என்றான்.
இது வரையில் அவளின் டீம் மக்கள் யாரும் இவ்வாறான அனுமானுஷ்ய நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்து கொண்டதில்லை.
இன்று பாலாஜி அவ்வாறு சொன்னதில், சற்றுப் பயந்து தான் போனாள் அன்னம்.
“நிஜமாவா பாலாஜி” மிரண்ட விழிகளுடன் அவள் கேட்க, அவளின் பயந்த முகத்தைக் கண்டதும், “ஆமா அன்னம்! உனக்குத் தெரியாதா என்ன? நம்ம ஆபிஸ் மொட்டை மாடிலருந்து ஒருத்தர் கீழே விழுந்து இறந்துட்டாரு. அவர் ஆவி சுத்திட்டு இருக்கிறதாகவும் சிலர் பார்த்ததாகவும் சொல்லுவாங்க” என்றான் மோகன்.
“எல்லாரும் சும்மா என்னைப் பயமுறுத்த தானே சொல்றீங்க?” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டவளாய் அன்னம் கேட்க, “அட உண்மைய சொன்னா நம்ப மாட்டேங்குற! உன்கிட்ட பொய் சொல்லி என்னவாகப் போகுது” என்ற பாலாஜி, தனது கைபேசியின் கூகுளில் தங்களது அலுவலகப்பெயரை போட்டு அந்தச் சம்பவம் நடந்த வருடத்தைக் கூகுளில் தேடி எடுத்து அச்செய்தியை அவளிடம் காண்பித்தான்.
“சரி விடு! நீ நம்பாம இருக்கிறது தான் நல்லது! அப்ப தான் பயப்பட மாட்ட” என்று மேலும் அவளின் பயத்தை மோகன் அதிகப்படுத்த, இதனைத் தனது கேபினின் இருக்கையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்பா, இவர்களின் அருகில் வந்தவனாய், “என்ன இங்க பேச்சு! எல்லாரும் வேலையைப் பாருங்க” என்று அனுப்பி விட்டான்.
அன்னத்தின் இருக்கை அருகே வந்து நின்ற இன்பா, “அவங்க சும்மா உன்னைப் பயமுறுத்த அப்படிச் சொல்றாங்க! நீ பயப்படாத சரியா! நீ பயந்து வச்சி எங்கேயும் மயக்கும் போட்டு விழுந்துடாத” என்றான் சிரித்தவாறே!
“ஹப்பா இப்ப தான் எனக்கு ஹார்ட் நார்மலா துடிக்குது இன்பா” என்ற அன்னத்தைப் பார்த்து அருகில் வேலை செய்து கொண்டிருந்த மோகன் சிரித்து வைக்க,
“பாருங்க இன்பா! இந்த மோகன் கூட என்னை ஏமாத்திட்டான்” என்றவாறு கைகளை நீட்டி அவனின் முதுகில் ஓரடி போட்டாள்.
இன்பாவும் அவளின் இச்செயலில் சிரித்திருந்தான்.
“உனக்கு இங்க எப்ப என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு அன்னம்! நான் சரி செய்யப் பார்க்கிறேன்” என்ற இன்பா,
“பாலாஜி கம் டூ மை பிளேஸ்!” என்றவாறு தனது இருக்கைக்குச் சென்றான்.
இன்பா சென்றதும் அன்னம் மேலும் தொடர்ந்து மோகனை அடிப்பதும் அவனின் முடியைப் பிடித்து இழுப்பதுமாய்ச் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவளின் செயலினைக் கண்டு தனது இடத்தில் அமர்ந்திருந்த இன்பாவின் வாய்ச் சிரித்திருந்தாலும், உள்ளத்தில் ஏதோ ஒரு நெருடல்.
பாலாஜி இன்பாவின் இடத்தில் வந்து நின்று, “என்ன இன்பா? எதுக்கு வர சொன்னீங்க?” எனக் கேட்டான்.
“டீம்க்கு ஷிப்ட் அலோகேஷன் (ஒதுக்குவது) நீங்க தானே செய்றீங்க பாலாஜி?” எனக் கேட்டான்.
ஆமென அவன் சொன்னதும், அன்னம் வந்தது முதல் இப்பொழுது வரைக்குமான ஷிப்ட் அலோகேஷனை பாலாஜி பராமரிக்கும் ஷீட்டில் பார்வையிட்டான்.
“ஏன் அன்னம் வந்ததுலருந்து எல்லா நைட் ஷிப்ட்டும் மோகன் கூடவே போட்டிருக்கீங்க! மத்த ஷிப்ட் லாம் வேற ஆளுங்க கூடச் செஞ்சிருக்கா! மார்னிக் தனியா இது வரைக்கும் அவளைப் போடலை. அனுபவம் வந்தப்பிறகு போடலாம்னு லாஸ்ட் டைம் தான் உங்களோட போட சொன்னேன். ஆனா நைட் மோகன் கூட மட்டுமே ஏன் போட்டிருக்கீங்க. பிரித்வி போன பிறகு உங்க கூட அசோக் கூடலாம் போட்டிருக்கலாமே” எனக் கேட்டான்.
இன்பாவின் இக்கேள்வியில் பாலாஜி இன்பாவை சற்று விநோதமாகத் தான் பார்த்து வைத்தான். பெரும்பாலும் ஷிப்ட் அலோகேஷனில் தலையிடவே மாட்டான் இன்பா. அவரவர் பணியைச் சரியாகச் செய்தால் போதும் என விடுப்பு மற்றும் ஷிப்ட் போன்றவைகளைப் பணிக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் விருப்பப்படி பேசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவான். இது நாள் வரை அவ்வாறு தான் ஆண்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி தங்களது பெர்சனல் வேலைக்கேற்ப தேவையான ஷிப்ட்டையும் விடுப்பையும் எடுத்து கொள்வர்.
அதனாலேயே இன்று இன்பா இவ்வாறு கேட்டது, அதுவும் அன்னத்தை முன்னிருத்தி கேட்டது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
“ஏன் இன்பா? எனி பிராப்ளம்? மோகன் தான் அன்னம் கூட நைட் ஷிப்ட் போட சொன்னான். இரண்டு பேருக்குமே அது கம்ஃபெர்டபிள்னு சொன்னாங்க. மோகன் எங்களுக்குலாம் ஜூனியர்ன்றனால எங்க கூட நைட் ஷிப்ட் வந்தா அவன் தான் எல்லா வேலையும் பார்ப்பான். அன்னம் அவனுக்கு ஜூனியர். சோ அன்னம் கூட வரனால அவன் தூங்கிட்டு அன்னத்தை வேலை பார்க்க வைக்கிறான் போலன்னு நாங்க நினைச்சோம்” என்றான் பாலாஜி.
“இல்லை! She has to come out of her comfort zone! அதுக்காகச் சொன்னேன்” என்ற இன்பா,
“அடுத்த வாரம் மட்டும் மோகன் கூட வரட்டும்! அதுக்குப் பிறகு மத்த ஆளுங்க கூட ரோடேஷன்ல அவளுக்கு நைட் ஷிப்ட் போடுங்க” என்றான் இன்பா.
சரியெனத் தலையசைத்து விட்டு பாலாஜி வெளியே வரவும், இன்பா கிளம்பிச் சென்றான்.
அன்னம் மற்றும் மோகனிடம் வந்த பாலாஜி, “மோகனு! அன்னம் உன் ஆளுனு இன்பா கண்டுப்பிடிச்சிட்டாரு போலயே” என்று தீவிரமாய்க் கேட்டான்.
எப்பொழுதும் அன்னத்தை மோகனுடன் இணைத்துப் பேசி கேலிச் செய்யும் பாலாஜியின் செயலாய் பார்த்த மோகன், “ஏன்! நாங்க எப்ப கல்யாணம் செஞ்சிக்கப் போறோம்னு இன்பா கேட்டாரா?” என விளையாட்டாய் கேட்டான்.
“ஏய் மோகன் என்ன பேச்சு இது?” என்று முறைத்த அன்னம், “பாலாஜி ரொம்ப ஓவரா தான் கிண்டல் செய்றீங்க! நான் அப்புறம் இன்பாகிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சிடுவேன்” என்றாள்.
“பார்ரா கேட்டதே இன்பா தான்னு சொல்றேன். அவர்கிட்டயே புகார் சொல்லுவாளாமே” என்று மேலும் அவளைக் கேலி செய்ய, இன்பா தன்னிடம் கூறியதை உரைத்தான் பாலாஜி.
அன்னத்தினால் நம்ப முடியவில்லை. அப்படி ஆண் பெண் நட்பை தவறாகச் சந்தேகிக்கும் ஆளாய் இன்பாவை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
“அவர் கண்டிப்பாக வேற ஏதாவது காரணத்துக்காகத் தான் சொல்லிருப்பாரு. உங்களை மாதிரி ஜோடி சேர்த்து பேசுற ஆளு அவர் இல்லை” என்று இதழைச் சுழித்துப் பழிப்புக் காட்டினாள்.
அவளின் சிறுப்பிள்ளைத்தனமான செயலில் சிரித்து விட்டு தனது இருக்கைக்குச் சென்று விட்டான் பாலாஜி.
அன்னத்துடன் இரவுணவு உண்ணச் சென்ற மோகன், “இன்பா உன்னை ரொம்ப நோட் செய்ற மாதிரி தோணுதே” என்றான்.
“இதுல நோட் செய்ய என்ன இருக்கு?” என்று அன்னம் கேட்க,
“இல்ல என் கூட மட்டுமே நைட் ஷிப்ட் வர்றனு நோட் செஞ்சிருக்காரே! அதைச் சொன்னேன்” என்றான் மோகன்.
“மேனேஜர்னா இதெல்லாம் பார்க்கத் தானே செய்வாங்க” என்றாள் அன்னம்.
ஆமாம் என்றவன் அதற்கு மேல் அதனைப் பற்றி ஏதும் பேசவில்லை. ஆனால் அவனின் மூளையில் இன்பா ஏன் அன்னத்தின் மீது அதீத அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
அன்றைய வாரயிறுதியில் அன்னத்தின் வீட்டிற்குச் சென்றான் மோகன்.
ருத்ரன் மாமாவிடம் இவனை அறிமுகம் செய்து வைத்தாள்.
மோகனிடம் சிறிது நேரம் பேசிய ருத்ரன், செண்பாக்காவிடம் மோகனுக்குப் பழச்சாறு அளிக்குமாறு உரைத்தவர், அன்னத்தின் அறை நோக்கி சென்றார்.
“இரண்டு பேரும் எங்கெல்லாம் போகப் போறீங்க?” எனக் கேட்டார் ருத்ரன்.
“அதான் சொன்னேனே மாமா! சிவாவோட டேன்ஸ் ஸ்கூலுக்குப் போகப் போறோம். எனக்கு டேன்ஸ் கத்துக்கனும்னு ரொம்ப நாள் ஆசை! சும்மா வீக்கெண்ட் மட்டும் பரதநாட்டியம் தான் கத்துக்கப் போறேன் மாமா! நேத்து கூடச் சொன்னேனே மாமா! மறந்துட்டீங்களா?” எனக் கேட்டாள்.
“அது ஞாபகம் இருக்கு! டேன்ஸ் ஸ்கூலுக்குப் போன பிறகு எங்கெல்லாம் போகப் போறீங்க?” எனக் கேட்டார்.
“வேறெங்கேயும் போகுற பிளான் இல்லை மாமா. இதுவே சிவாவை பார்க்கப் போறனால தான் மோகனை வரச் சொன்னேன். நான் இங்க ஒரு பையன் கூட ஊரு சுத்துறேன்னு அங்க ஆச்சிக்குத் தெரிஞ்சிது என்னை சூப் ஆக்கிடாத” என்று சிரித்தாள்.
அவளின் சிரிப்புடன் தானும் இணைந்து சிரித்தவராய், “சரி அப்ப நானும் வரேன். சிவாவைப் பார்த்த மாதிரி இருக்கும்! அப்படியே டான்ஸ் ஸ்கூல் எப்படி இருக்குனு பார்த்தா எனக்குத் திருப்தியாகிடும்” என்றார்.
மகிழுந்தை ருத்ரன் இயக்க, மூவருமாகச் சிவாவின் நடனப் பள்ளியை நோக்கிச் சென்றனர்.
“அப்புறம் மோகன் உன் சொந்த ஊரே சென்னை தானாப்பா? குடும்பத்துல எத்தனை பேரு?” அவனிடம் பேசியப்படி வண்டியை ஓட்டினார்.
“இல்ல அங்கிள். சொந்த ஊரு திண்டுக்கல். இங்க ஃப்ரண்ட்ஸ்ஸோட ரூம் எடுத்துத் தங்கிருக்கேன். அப்பா அம்மா ஒரு தம்பி அவ்ளோ தான். தம்பி மதுரை காலேஜ்ல படிச்சிட்டு இருக்கான்” என்றான்.
“வேலைக்குச் சேர்ந்து எவ்ளோ வருஷமாகுதுப்பா?”
“ஒரு வருஷம் ஆகப் போகுது அங்கிள்” என்றான்.
“நீங்க எங்க வேலை பார்த்தீங்க அங்கிள்? நீங்க சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையில் இருந்ததாக அன்னம் சொல்லிருக்கா” என்றவன் கேட்க, அவரும் அவனின் கேள்விகளுக்குப் பதிலளித்த வண்ணம் வந்தார்.
மோகனின் மீது நல்ல அபிப்ராயம் வந்திருந்தது அவருக்கு.
ஆருத்ரன் நடனப் பள்ளி என்றிருந்த பேனரைப் பார்த்தவாறு மகிழுந்திலிருந்து இறங்கினாள் அன்னம்.
“மோகன், சிவா இருப்பாரு தானே! அவர்கிட்ட சொல்லாம கொள்ளாம வந்திருக்கோம். நம்மளைப் பார்த்ததும் ஷாக் ஆவாரா?” என்று அவனிடம் பேசியவாறு வாயிலை நோக்கி நடந்து சென்றாள்.
மூவருமாக உள்ளே நுழைந்த சமயம், “ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை சைட் ஆரா (என் கண்ணு முன்னாடி நிக்காம போய்டு ஆரா)” என்ற சிவாவின் கர்ஜனையான குரலே இவர்களை வரவேற்றது.