கைபேசியில் நங்கையின் சுந்தர் என்ற விளிப்பில் அவளை அதிர்வுடன் பார்த்தான் இன்பா.
‘சுந்தரையா இவ கல்யாணம் செஞ்சிருக்கா’ பேரதிர்ச்சியான செய்தியாய் இருந்தது அவனுக்கு.
கண்கள் ஒளிர அந்த அழைப்பை ஏற்றுப் பேசியவளின் முகம் அவனுடன் பேசிய சில நொடிகளில் சுருங்கிப் போக, “சரி நான் இப்ப பிசியா இருக்கேன்! அப்புறம் வீட்டுக்குப் போய்ப் பேசுறேன்” என்று உரைத்து அழைப்பைத் துண்டித்தாள்.
அவளின் முக மாற்றங்களைக் கவனித்தவனாய் அமர்ந்திருந்த இன்பாவிற்கு அவள் சுந்தருடன் மகிழ்வாய் வாழவில்லையோ என்று தோன்றியது.
அந்நேரம் நிகழ்ச்சி துவங்கவும் அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் மாறியது. மேடையைக் கவனித்த வண்ணம் இருந்தாலும் நங்கையின் கண்கள் கலங்கி அவள் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதைப் பார்த்தும் பாராதது போல் பார்த்திருந்தான் இன்பா.
சில மணி நேரங்களுக்குப் பிறகு இவர்களின் பிராஜக்ட்டை குறிப்பிட்டு அழைக்க, அனைவரும் மொத்தமாக அங்கே செல்ல, அவர்களின் குடும்பத்தினர் அமர்ந்திருந்து கைத்தட்டி மகிழ்ந்திருந்தனர்.
நங்கை மென்னகை புரிய, “இன்பாக்கு அன்னத்தைப் பார்க்கும் போது அவரைப் பார்த்த மாதிரியே இருந்துச்சுனு சொன்னாரு. அவரோட டிவின் மாதிரி ஃபீல் ஆகுதுனு சொன்னாரு. அவர் வேலைக்குச் சேர்ந்த புதுசுல இவளை மாதிரி தான் இருந்தாராம். அப்புறம் வாழ்க்கையோட அனுபவம் பிளஸ் அவரோட வேலைன்னு அமைதியாகிட்டதா சொல்வாரு. முதல் நாள் அவளை இன்டர்வியூ எடுத்துட்டு வந்து, வீட்டுல தானா சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. என்னனு கேட்கும் போது தான் அன்னத்தைப் பத்தி சொன்னாரு. அதுக்குப் பிறகு தினமும் அவ செய்ற சேஷ்டைகள் எல்லாமே சொல்வாரு. என்னடா அவ இவனு பேசுறேன்னு நினைக்க வேண்டாம். தினமும் அவளைப் பத்தி பேசி பேசி அவ எங்க வீட்டுல ஒரு ஆளு போலத் தான் எனக்கு. அன்னத்தைப் பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை! இன்னிக்கு நிறைவேறிருக்கு” என்று சிந்துஜா பேசிக் கொண்டே போக, அனைவரும் சேர்ந்து வெற்றிக் கோப்பையை வாங்கி விட்டு அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
அதன் பின்பு சினிமா பாடல்களுடன் மெல்லிசைக் கச்சேரி நடைபெற, பஃபே முறையில் தானே பரிமாறிக் கொண்டு உண்ணும் வகையில் வைக்கப்பட்டிருந்த பலவிதமான உணவினை அவரவருக்குப் பிடித்தவாறு எடுத்து வந்து அமர்ந்து உண்டு கொண்டே கேட்டு ரசித்திருந்தனர்.
சூப்பர் சிங்கர் பாடல் போட்டி மூலம் பிரபலமான இளம் பாடகர் ஒருவரும், பாடகி ஒருவரும் இந்த இசை கச்சேரியில் பாடல்கள் பாடித் தெறிக்க விட்டிருக்க, உணவை உண்டவாறே ரசித்துக் கொண்டிருந்தனர் பணியாளர்கள்.
நன்றியுரை பேசியவாறு நிகழ்ச்சி நிறைவுப் பகுதியை எட்டியிருந்த சமயம், சிந்துஜா தனது மகனைத் தூக்கியவாறு கழிவறைக்குச் செல்ல வேண்டுமென வழி கேட்க, தானே அழைத்துச் செல்வதாய்க் கூறி உடன் சென்றாள் அன்னம். மற்ற டீம் ஆட்கள் ஆங்காங்கே நின்று கொண்டு பேசியவாறு உண்டு கொண்டிருக்க, இன்பாவும் நங்கையும் அந்த வட்ட மேஜையில் தனித்து அமர்ந்திருந்தனர். நங்கை உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை மார்போடு அணைத்து தட்டிக் கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவளிடம் என்னவெல்லாமோ பேச மனம் துடித்தாலும், வார்த்தை வராது தடுமாறியவனாய் நங்கையை அவன் பார்த்திருக்க, “அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க இன்பா?” எனக் கேட்டாள் நங்கை.
தன்னை அவள் நினைவு வைத்திருக்கிறாள் என்பதில் நெஞ்சில் நிம்மதி படர, குரலை செருமியவனாய், “நல்லா இருக்காங்க” என்றான்.
“உங்க அண்ணன் அண்ணி கூட உன் குடும்பம் சேர்ந்தாச்சா?” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் அம்மா அப்பா அவங்க கூடத் தான் இருக்காங்க” என்றான்.
“சிந்து உங்கம்மா பார்த்த பொண்ணா? ஐ மீன் அரேஞ்ச் மேரேஜா?” எனக் கேட்டாள்.
ஆமென அவன் தலையசைக்க, “குட்” என்றாள் அவள்.
“குட் செலக்ஷன்” என்றவள்,
“உன் பாஸ்ட் லவ் பத்தி உன் மனைவிக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள்.
‘எதுக்கு இப்ப இதைக் கேட்குறா?’ என யோசித்தவாறே இல்லையென அவன் தலையசைக்க,
“ஹ்ம்ம் கேவலமா ஒரு பொண்ணைத் திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?” நக்கலாய் கேட்டிருந்தாள் நங்கை.
வெகு இயல்பாக இருந்த அவளின் முகத்தில் இருந்து அவளின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.
“நங்கை” என்றவன் அதிர்ந்தவாறு பார்க்க,
“பட் பாஸ்ட் இஸ் பாஸ்ட்ல! அதைப் போய் எதுக்கு ப்யூச்சர் லைஃ பார்ட்னர்கிட்ட சொல்லிட்டு இருக்கனும். யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்குப் பழக்கமே இல்லையே” வெகு இயல்பாய் கூறியிருந்தாள் நங்கை.
“நங்கை” என அடிக்குரலில் சீறியவனோ, தன்னைக் கட்டுப்படுத்தியவனாய்,
“இன்னுமா அதெல்லாம் மறக்காம இருக்க நீ” எனக் கேட்டான்.
“இதெல்லாம் ஆயுளுக்கும் மறக்க முடியாதுனு தான் ஒரு காலத்துல நினைச்சேன். தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு” என்றாள் நங்கை.
சுருக்கென நெஞ்சில் நெருஞ்சி முள் குத்திய வலி அவனுக்கு.
“ஏன் இப்படிப் பேசுற நங்கை” எனக் குற்றவுணர்வுடன் அவன் கேட்க,
“எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னைச் சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன். சுந்தர் மட்டுமே என் மொத்த வாழ்க்கையிலும் நிறைஞ்சி இருந்திருப்பான். கரும்புள்ளியா கூட உன்னை என் வாழ்க்கைல நுழைய விட்டிருக்க மாட்டேன்” என்றாள்.
இன்பா ஏதோ கூற வாயெடுக்கும் போது, சிந்துஜா தனது மகனுடன் அங்கு வந்து விட, அமைதியாகி விட்டான் இன்பா.
இத்தனை தவறானவனாகத் தான் தன்னை அவள் நினைத்து வைத்திருக்கிறாளா? இன்பாவிற்கு மனது ஆறவேயில்லை.
தன் மீது இன்னும் இத்தனை கோபமாய் அவள் இருப்பாளென அவன் நினைத்திருக்கவே இல்லை. அவளிடம் மன்னிப்பு கேட்கவே அவன் எண்ணினான். ஆனால் அவளின் இந்த நேர்முகத் தாக்குதல் அவனை நிலைகுலைய செய்திருந்தது. குற்றவுணர்வு அதிகமாகி மனது பாரமாகி போனது.
நங்கைக்கு நெஞ்சமெல்லாம் கோபத்தில் காய்ந்து கிடந்தது. ஏன் தான் இத்தனை கோபம் கொள்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு.
அச்சமயம் அவளின் அலைபேசி அலற, மகளைத் தோளில் தூக்கியவாறு கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நடந்தவாறு சென்றவள் அழைப்பை ஏற்றாள்.
“என்னடா பப்ளிமாஸ்! இன்னும் வீட்டுக்கு போகலையா?” மறுபக்கம் கேட்ட சுந்தரின் குரலில் இங்குச் சரேலெனக் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
பதறி விட்டான் சுந்தர். “என்னடா? என்னாச்சு? அங்கே எதுவும் பிரச்சனையா?” எனப் பதறியவாறு கேட்டான்.
“இல்ல இல்ல! அதெல்லாம் ஒன்னுமில்லை!” அவனின் பதட்டமான குரலில் தன்னை மீட்டுக் கொண்டவளாய்,
“ஐ மிஸ்டு யூ சோ மச்! அதான் அப்படிச் சொல்லிட்டேன்! இங்க ஒரு பிரச்சனையும் இல்லை” என்றாள்.
“உஃப்” என்ற அவனின் பெருமூச்சு கேட்டது அவளுக்கு.
“அதான் நான் வர இன்னும் மூனு நாள் ஆகும்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னேன்” என்றவன் சொன்னதும் தான், தான் அவன் மீது அந்நேரம் கோபம் கொண்டு பிசியாக இருப்பதாக உரைத்துப் பின்பு பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
“ஸ்ஸ்ஸ் ஆமால்ல! உன் மேல நான் கோபமா இருந்தேன். உன்கிட்ட பேசவே கூடாதுனு நினைச்சேன்” என்றாள்.
தன்னை அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கும் அவனது அன்பில் நெக்குருகிப் போனாள்.
“எனக்கு உடனே உன்னைப் பார்க்கனும் போல இருக்கு!” மீண்டுமாய்க் கண்களில் நீர் சூழ அவள் உரைக்க,
“இப்ப என் பப்ளிமாஸ் பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேருவியாம். அப்புறம் உன் புருஷனுக்கு வீடியோ கால் போடுவியாம். அப்புறம் நைட் முழுக்க என்னைப் பார்த்துட்டே இருப்பியாம்! சரியா! கண்ணைத் தொட” என்றதும்,
கைபேசி வைத்திருந்த கையைக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டு, “சரி நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றேன்” என்றவளாய் தனது இருக்கைக்குச் சென்றாள்.
அங்கே அன்னம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, “அன்னம் எங்கே சிந்து?” என்று கேட்டாள்.
ஓ என்றவள் மேலும் சிந்துஜாவிடம் பேசிக் கொண்டிருக்க, மேடையின் பின்புறமாக அன்னத்தை வரச் சொல்லியிருந்த மோகன், அவளை மேடைக்குப் பின்னே சற்றுத் தள்ளியிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான்.
“எங்க கூட்டிட்டுப் போற மோகன்” என்று கேட்டவாறே அவள் அவன் பின்னே செல்ல,
“சர்ப்ரைஸ்” என்றவனாய் முன்னே சென்றான் மோகன்.
மேடையில் பாடிய பிரபல சூப்பர் சிங்கர் பாடகியின் முன்பு அன்னத்தைக் கொண்டு போய் நிறுத்தினான்.
அந்த அறையில் மூவர் மட்டுமே இருக்க, அப்பாடகியைப் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த அன்னத்தின் காதில், “பேசு” என்றான் மோகன்.
மனம் மகிழ்ச்சியில் துள்ள தன்னுணர்வுக்கு வந்தவளாய், “ஐம் அன்னம்! எனக்கு உங்க வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும்! நீங்க டிவி ஷோல வந்தப்ப உங்களுக்கு நான் நிறையத் தடவை வோட் செஞ்சிருக்கேன்” என்று தொடர்ந்து பூரிப்பாய் பேசிக் கொண்டிருந்தாள் அன்னம்.
அந்தப் பாடகியும் அன்னத்திடம் சிறிது நேரம் மகிழ்வாய் பேசிவிட்டு அவளுடன் சுயமி எடுத்துக் கொண்டாள்.
அந்த அறையை விட்டு வெளியே வரும் போது மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்தாள் அன்னம்.
“தேங்க்யூ சோ மச் மோகன்! டோட்டலி அன்எக்ஸ்பெக்டட்! எனக்கு இவங்களைப் பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டாள் அன்னம்.
“அதான் அவங்கப் பாடும் போதெல்லாம் எக்சைட் ஆகி கத்திட்டு இருந்தியே! அதான் உன்னை சர்ப்ரைஸ் செய்யலாம்னு இந்த ஷோ அரேஞ் செஞ்ச பையன்கிட்ட பேசி பர்மிஷன் வாங்கினேன்” என்றான்.
மின்னொளி பொருத்தப்பட்ட ஒரு மரத்தின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.
“நீ ஹேப்பி தானே?” எனக் கேட்டான்.
“ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்” முகத்தில் மகிழ்வின் பொலிவைத் தேக்கி அவள் கூற,
“இந்தச் சந்தோஷத்தோடயே ஒரு விஷயம் சொல்லிடலாம்னு நினைக்கிறேன்” பீடிகையுடன் ஆரம்பித்தான் மோகன்.