“கேவலமா ஒரு பொண்ணைத் திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?”
“யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்குப் பழக்கமே இல்லையே”
“தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு”
“எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னைச் சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன்”
நங்கையின் இந்த வதைக்கும் வார்த்தைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் அவனது செவியில் விடாமல் ஒலிக்க, அன்றைய நிகழ்ச்சி நடந்த அந்த இரவு இன்பாவிற்கு உறங்கா இரவாகிப் போனது.
தன்னை இத்தனை கேவலமானவனாகவா அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என மனம் வெதும்பிப் போனான் இன்பா.
எவ்வாறேனும் அன்றிருந்த தனது நிலையைப் பற்றி அவளிடம் விளக்கிட வேண்டுமெனத் துடித்தது அவன் மனது.
மறுநாள் அன்னத்திடம் இயல்பாய் பேசி எப்படி நங்கையின் திருமணம் சுந்தருடன் நிகழ்ந்ததென அறிந்து கொண்டான். அவர்கள் வீட்டில் நிச்சயித்துச் செய்த திருமணமாய் இத்திருமணம் நிகழ்ந்ததைக் கேட்டு மகிழ்ந்து போனான் இன்பா. மேலும் சுந்தர் மற்றும் நங்கையின் புரிதலையும் காதலையும் அன்னம் மூலம் அறிந்து கொண்டவனுக்கு, சுந்தர் தான் அவளுக்கானவன் என்று நன்றாகப் புரிந்தது. அவள் மகிழ்வாய் வாழ்வதைக் கேட்டு மனம் சந்தோஷித்தது.
அன்றிரவு தனது மனைவியிடம் நங்கை அளித்திருந்த எண்ணை வாங்கி அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் இன்பா.
நங்கை தனது குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டதை நீல நிற குறியீட்டின் மூலம் அறிந்து கொண்ட இன்பா, “ஹாய் நங்கை! ஹௌ ஆர் யூ (எப்படி இருக்க?)” எனக் கேட்டு அனுப்பியிருந்தான்.
அந்த வாட்ஸ்அப் எண்ணிலிருந்த புகைபடத்தைப் பார்த்தாள். இன்பாவின் மகன் தான் அதில் இருந்தான்.
குழப்பத்துடன் அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்தவள், ஏதும் பதில் அனுப்பாமல் அந்த எண்ணை பிளாக் செய்து விட்டாள் நங்கை.
அவள் தனது எண்ணை பிளாக் செய்து விட்டதை உடனே அறிந்து கொண்டான் இன்பா.
அவள் தன்னைப் பிளாக் செய்தது மனத்தை வருத்த, கண்டிப்பாக எப்படியேனும் அவளைத் தொடர்பு கொண்டு தன்னைப் புரிய வைத்துவிட வேண்டுமெனத் தீர்க்கமாய் முடிவு செய்தான் இன்பா.
அடுத்த இரண்டு நாட்களில் ராஜன் வந்து விட, அலுவலகத்தில் இருந்து நேராக ருத்ரனின் வீட்டிற்குச் செல்வதாக அன்னம் உரைக்க, அந்த வாரயிறுதி நாளில் தாங்களே அழைத்துச் சென்று விடுவதாய் உரைத்து விட்டான் ராஜன்.
அன்றிரவு ராஜனின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த நங்கையின் அலைபேசியில் தொடர்ந்து கேட்ட குறுஞ்செய்தி சத்தம், ராஜனின் உறக்கத்தைக் கலைக்க, நங்கையை அருகே மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளின் கைபேசியை எடுத்துப் பார்த்தான்.
நங்கையின் முகநூல் உள் பெட்டியில் குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருந்தன. யாரிடமிருந்து வருகிறது எனத் திறந்து பார்த்தவனுக்கு முகம் கோபத்தில் இறுகியது.
“எப்படி இருக்க நங்கை?”
“நல்லாருக்கியா?”
“ஏன் என் நம்பரை பிளாக் செஞ்ச நங்கை?”
“ஒரே ஒரு தடவை மட்டும் என்கிட்ட பேசு நங்கை”
“நீ என்னைத் தப்பா புரிஞ்சிட்டு இருக்க நங்கை”
“நீ நினைக்கிற மாதிரி நான் இல்லைனு உனக்குப் புரிய வைக்கனும் நங்கை”
இவ்வாறாகத் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான் இன்பா.
பால்கனி ஊஞ்சலில் அமர்ந்த ராஜன், “நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கிறது எவ்ளோ பெரிய தப்புனு உங்களுக்குப் புரியுதா இன்பா” எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அங்கே தனது வீட்டின் முகப்பறையில அமர்ந்திருந்த இன்பா, நங்கை தான் பதில் அளிப்பதாய் எண்ணி மகிழ்ந்தவனாய், “சாரி மிட் நைட்ல டிஸ்டர்ப் செய்றது தப்பு தான். இப்ப தான் உன் ஐடி கண்டுபிடிச்சேன். அதான் உடனே மெசேஜ் செஞ்சேன் நங்கை” என்று அனுப்பினான்.
“இது நங்கை இல்ல! நான் அவ ஹஸ்பண்ட் சுந்தர் பேசுறேன்! ஐ வாண்ட் டு டாக் டூ யூ (உன்கிட்ட கொஞ்சம் பேசணும்)! கேன் ஐ கால் யூ நௌ (இப்ப உனக்கு ஃபோன் செய்யவா)” எனக் கேட்டான்.
திக்கென நெஞ்சம் அதிர அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்திருந்தான் இன்பா.
என்ன கூறவெனத் தெரியாது அவன் தடுமாற, “உங்க நம்பரை ஏற்கனவே அன்னம்கிட்ட நான் வாங்கிட்டேன். ஆர் யூ ஃப்ரீ நௌ? (இப்ப நீங்க ஃப்ரீயா?)” எனக் கேட்டான் ராஜன்.
“யெஸ்” என மட்டும் இன்பா அனுப்பியிருக்க, உடனே அவனது கைபேசிக்கு அழைத்து விட்டான் ராஜன்.
“ஹாய் இன்பா! எப்படி இருக்கீங்க?” என இயல்பாய் பேச்சை ஆரம்பித்தான் ராஜன்.
இருவரும் பரஸ்பரம் அவரவர் வேலையைப் பற்றிப் பேசிய பிறகு,
“குட்” என்ற சுந்தர், “நம்ம நாட்டுல முக்கால்வாசி லவ் ஃபெய்லியர் பசங்க செய்ற தப்பை தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க இன்பா” என்றான்.
“சுந்தர், அது வந்து” என்று தயங்கியவாறே அவன் ஆரம்பிக்கவும்,
“உங்க மனைவிக்கு நீங்க இப்படி நடுராத்திரில வேறோரு பொண்ணுக்கிட்ட பேசுறது தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க” எனக் கேட்டான் ராஜன்.
“அய்யோ சுந்தர்! நான் அப்படிப்பட்ட ஆளு இல்லை. நீங்களும் நங்கை மாதிரி என்னைத் தப்பா நினைச்சிட்டு இருக்கீங்களா?” என ஆதங்கமாய்க் கேட்டான் இன்பா.
“நீங்க தப்பானவரு இல்லை இன்பா. ஆனா நீங்க செஞ்சிட்டு இருக்கிறது தப்பானதுனு சொல்றேன்” என்றான் ராஜன்.
“இல்ல சுந்தர்! நங்கையைப் பார்த்ததுலருந்து மனசு வலிக்குது சுந்தர்! என்னை அவ பேசின பேச்சு, கேவலமா பார்த்த பார்வை அதெல்லாம் என் நெஞ்சை குத்தி கிழிக்குது சுந்தர்” வருத்தமான குரலில் உரைத்தவன்,
“நான் அவ மேல வச்சிருந்த காதல் உண்மை. அவளைத் திட்டிட்டு நானும் அதே மனவலியோட தான் இருந்தேன்னு அவளுக்குச் சொல்லனும் சுந்தர். ஒரே ஒரு தடவை அவகிட்ட பேசி என்னைப் புரிய வச்சா என் மனசு நிம்மதியாகிடும்னு தோணுச்சு. அதான் மெசேஜ் செஞ்சேன். எங்கிருந்தாலும் அவ சந்தோஷமா வாழனும்னு தான் நான் எப்பவும் நினைப்பேன் சுந்தர்” என்றான் இன்பா.
“நல்லவேளை வச்சிருந்த காதல்னு பாஸ்ட்ல சொன்னீங்க. இல்லனா போனை கட் செஞ்சிட்டு போய்ட்டே இருந்திருப்பேன். இதை நீங்க வார்னிங்கா எடுத்தாலும் சரி! அட்வைஸ்ஸா எடுத்துக்கிட்டாலும் சரி! இனிமேலும் என் மனைவிக்கிட்ட பேச முயற்சி செய்யாதீங்க! உங்களைப் பத்தி அவளுக்குத் தெரிய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது.
ஒன்ஸ் ஒரு விஷயம் ஓவர்னா ஓவர் தான் இன்பா. எந்தவிதமான காரணமா இருந்தாலும் இந்த மாதிரி ரிலேஷன்ஷிப்லாம் தொடருவது இரண்டு பேரோட வாழ்க்கைக்கும் நல்லதில்லை. இந்தக் காலத்துல இது நிறையப் பேருக்கு புரியுறதில்லை. என்னமோ நாகரிகம் ஃபேஷன்னு உணர்வுகளைக் குழப்பிக்கிட்டு உண்மையா வாழுறதுனா என்னனு தெரியாம வாழ்க்கையைக் கிரிட்டிக்கல் ஆக்கிட்டு இருக்காங்க.
என் மனைவி அன்னிக்கு உங்ககிட்ட பேசினது தப்பு தான். நீங்க ஒரு காலத்துல அவளுக்குக் கொடுத்த வலியை இன்னிக்கு உங்களுக்குக் கொடுத்துட்டா! அதுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். ஆனா அதுக்காக உங்களை அவகிட்ட பேச என்னால் அனுமதிக்க முடியாது. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்! இனி உங்ககிட்ட இருந்து என் மனைவிக்கு மெசேஜ் அண்ட் கால்ஸ் வராதுனு நம்புறேன்” என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான் ராஜன்.
அச்சமயம் தூக்கத்திலிருந்து விழித்து அவனைத் தேடியவாறு பால்கனி வந்த நங்கை கண்களைத் தேய்த்தவாறு சுருக்கிப் பார்த்தவளாய், “என்ன இங்க உட்கார்ந்திருக்க? தூக்கம் வரலையா?” எனக் கேட்டாள்.
அவளின் கையினைப் பற்றி இழுத்து, தன்னோடு அணைத்தவாறு அவளை ஊஞ்சலில் அமர்த்திக் கொண்ட ராஜன்,
இன்பா முகநூலில் அனுப்பிய குறுஞ்செய்திகளை அவளிடம் காண்பித்தான். அவள் பார்த்து முடித்ததும், “அந்த ஐடியை பிளாக் செய்திடவா” என அவளிடம் கேட்டு விட்டு பிளாக் செய்தவன், இன்பாவை அழைத்துத் தான் பேசியதை அவளிடம் கூறினான்.
“சாரி அன்னிக்கு நான் அவன்கிட்ட அப்படிப் பேசினது தானே இப்படி அவனை இவ்வளோ தூரம் என்கிட்ட பேசனும்ன்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கு!
அவன் வாட்ஸ்அப் மெசேஜ் பார்த்து பயந்தே போய்ட்டேன் தெரியுமா! ஃபேஸ்புக்ல அவன் மெசேஜ்ஜை நானே பார்த்திருந்தாலும் பிளாக் செஞ்சி விட்டிருந்திருப்பேன் சுந்தர்! பேசியிருக்க மாட்டேன்” என்றாள் நங்கை.
“ஐ நோ யூ டார்லிங் (உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்)” என்றவனாய் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான் ராஜன்.
“யூ ஆர் மை கிரேட்டஸ்ட் பிளஸ்ஸிங்டா (நீ எனக்குக் கிடைச்ச வரம்டா)” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள் நங்கை.
—-
தனது இல்லத்தில் முகப்பறையில் இருந்த சோஃபாவில் பின்னோக்கி தலையைச் சாய்த்து அமர்ந்திருந்த இன்பாவின் மனசாட்சியே அவனைக் கடிந்தவாறு இருந்தது.
‘அவ என்ன நினைச்சா உனக்கென்னனு போய்ருக்கனும் நீ! அவன் மனைவிக்கு அவன் உண்மையா இருக்கான். நீ அப்படியா இருக்க! இன்னமும் உன்னோட பழைய காதலை அவகிட்ட சொல்ல முடியாம தானே இருக்க! சொன்னா புரிஞ்சிக்கக் கூடிய மனைவி உனக்கு இல்லைனு நல்லாவே தெரியும். அப்ப எப்படி இருக்கனும் நீ’ எனக் கடிந்து கொள்ள, தனது நிலையிலிருந்து தாழ்ந்து விடலை பையன் போல் நடந்து கொண்டோமே எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டான் இன்பா.
ஆனாலும் அன்னம் கூறியது போல் நங்கையின் மீதான ராஜனின் காதலை அவனது உரிமையான பேச்சில் அறிந்து கொண்டதில் நெஞ்சில் நிம்மதி பரவியது.
இவற்றை யோசித்தவாறு கண்களை மூடி சாய்ந்தமர்திருந்த இன்பாவின் அருகே வந்த சிந்துஜா, “இன்னும் தூங்காம என்ன செய்றீங்க? ஆபிஸ் கால் எதுவும் வந்துச்சா?” எனக் கேட்டாள்.
திடீரெனக் கேட்ட குரலில் சட்டெனக் கண் திறந்தவனாய், மனைவியைப் பார்த்து மெல்ல சிரித்தவாறு இல்லையெனத் தலையசைத்தப்படி சிந்துஜாவின் கைகளைப் பற்றித் தன்னருகே அமர வைத்தான்.
“நீ ஏன் எழுந்து வந்துட்ட? தூக்கம் வரலையா?” அவளின் கலைந்த தலைமுடியை சரி செய்தவனாய் கேட்டான்.
“பக்கத்துல நீங்க இல்லைனதும் தூக்கம் கலைஞ்சிடுச்சு” என்றவளாய் அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள்.
“நான் உன்னைச் சந்தோஷமா வச்சிருக்கேனா சிந்து? நான் உனக்கு எப்படிப்பட்ட புருஷன்?” எனக் கேட்டான்.
சுந்தரராஜனின் பேச்சு அவனை இவ்வாறு கேட்க வைத்தது.
“என்ன திடீர்னு இப்படியொரு கேள்வி?” அவன் முகத்தைப் பார்த்தவாறு அவள் கேட்க,
“சும்மா கேட்கனும்னு தோணுச்சு” என்றான்.
“நீங்க கண்டிப்பா நல்ல புருஷன் தான். அன்பா அக்கறையா என்னையும் நம்ம பையனையும் பார்த்துக்கிறீங்க. எந்தக் கஷ்டமும் தராம என்னை நீங்க சந்தோஷமா தான் வச்சிருக்கீங்க. என்னைக் கேட்காம எந்த முடிவையும் எடுக்கிறதில்லை. வீட்டுலேயே இருக்கிறவளுக்கு எதுக்கு ஆபிஸ் கதைனு இல்லாம உங்க ஆபிஸ்ல நடக்கிற எல்லாத்தையும் என்கிட்ட வந்து சொல்வீங்க. எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். இவ்ளோ படிச்சி பெரிய வேலைல இருக்கிறவருக்குப் படிக்காத என்னைக் கட்டி வைக்கிறாங்களேனு கல்யாணமான புதுசுல பயந்தேன் தான். ஆனா இப்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்” என்றாள் அவள்.
சிரித்தவாறு அவளின் நெற்றியில் முட்டியவன், அன்றைய தினம் தனது அலுவலகத்தில் நிகழ்ந்ததை அவளிடம் கூறலானான்.
அசோக் விடுப்பில் இருப்பதையும் அதனால் நிகழ்ந்த ஷிப்ட் மாற்றத்தை பற்றியும் அவளிடம் கூறினான்.
“மோகன் மேல சந்தேகமா இருக்கு! மோகனையும் அன்னத்தையும் ஒரே ஷிப்ட்ல போடக்கூடாதுனு சொல்லிட்டு இருந்தீங்களே! இப்ப சில மணி நேரமாவது இரண்டு பேரும் ஒன்னா வேலை செய்ற மாதிரி ஷிப்ட் போட்டிருக்கீங்களே” எனக் கேட்டாள் சிந்துஜா.
“ஆமா ஷிப்ட்டுக்கு ஷாட்டேஜ் ஆகுது சிந்து! வேற வழியில்லாம போட்டிருக்கேன். நான் லவ் மேரேஜ்க்கு எதிரி இல்ல சிந்து. ஆனா மோகனுக்கான பொண்ணு அன்னம் இல்லை. மோகனோட வாழ்க்கை முறை அன்னத்துக்கு ஒத்து வராது. மோகன் நல்லவன் தான். ஆனா மோகனை விட நல்ல பையனா அவளுக்கு அமையனும்னு நினைக்கிறேன்” என்றான் இன்பா.
“ஆமா அழகும் அறிவும் கூடவே வெகுளித்தனமும் உள்ள பொண்ணு. நல்லா வாழுற இடத்துல தான் கட்டிக் கொடுக்கனும்! அந்தப் பொண்ணோட அப்பா அம்மாகிட்ட மாப்பிள்ளை பார்க்கும் போது சொல்லுங்க” என்றாள் சிந்துஜா.
மனைவியின் இந்த அன்பான அக்கறையான பேச்சில் நெகிழ்ந்தவனாய், “அவங்கள மீட் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது சொல்றேன். நீயே நேரடியா பேசு” என்றான்.
சரியெனத் தலையசைத்தவளாய், “வாங்க படுக்கலாம். ரொம்ப நேரமாகிடுச்சு” என்றவாறு அறைக்கு அழைத்துச் சென்றாள்.