ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், அசோக் தனது விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க, மோகனும் அன்னமும் இணைந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் உருவானது.
அந்த வாரம் இரவு ஷிப்ட்டில் வேலை அதிகமாக இருக்க, மோகனும் அன்னமும் இரவு ஷிப்ட்டில் ஒன்றாக வேலை பார்த்தனர்.
மோகன் தன்னிடம் காதலை மொழிந்த நாளில் இருந்து, தன்னையும் மீறி அவனது செயல்களை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள் அன்னம். அவள் மீதான அவனின் அக்கறையே அவனது ஒவ்வொரு செயலிலும் வெளிபடுவதாகத் தோன்றியது அவளுக்கு.
அந்த வார நாளில் இரவு ஷிப்ட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல தொண்டை வலி எடுத்து உடல் கொதிக்க ஆரம்பிக்க, இயல்பாய் அவளுடன் பேசியவாறு பணி செய்து கொண்டிருந்த மோகன், அவளின் மாற்றத்தைக் கவனித்தவனாய், “முகம் ஏன் இவ்வளோ சோர்வாக இருக்கு! தொண்டை கூடக் கட்டினா மாதிரி இருக்கே! போய் டீ குடிச்சிட்டு வருவோமா?” எனக் கேட்டு கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான்.
“அன்னம் ஒரு விஷயம் தெரியுமா? நம்ம சிவாண்ணா புதுப்பட ஷூட்டிங்காக வெளிநாட்டுக்கு போய்ருக்காங்க. மூனு மாசம் கழிச்சி தான் இந்தியாக்கு வருவாங்களாம்” என்றான்.
ஆனாலும் அவ்வப்போது தும்மியவாறும் மூக்கை சீந்தியவாறும் அவள் இருக்க, அவர்கள் அமர்ந்திருந்த இடத்தினருகே இருந்த ஏசியைக் குறைக்குமாறு ஏசி டீம்க்கு அழைத்துக் கூறினான்.
அவளது குடிநீர் போத்தலில் சுடுநீர் பிடித்து வந்து கொடுத்துக் குடிக்கச் செய்தான்.
சிறிது நேரம் உறங்கியவளுக்கு மண்டை வலி எடுக்க, “ரொம்பத் தலை வலிக்குது மோகன்” கூறும் போதே குரலும் மாறியிருந்தது.
அவளின் வலியைக் கண்டு மனம் சுணங்கியவனாய், “இரு! இங்க எதுவும் மாத்திரை கிடைக்குமானு பார்த்துட்டு வரேன்” என்றவன், ஒரு மணி நேரம் கழித்து ஒரு டீ கோப்பையுடன் வந்தான்.
அவளுக்குக் குடிக்க டீ அளித்துவிட்டு, தான் வாங்கி வந்த மாத்திரைகளை அளித்தான்.
“எங்கடா மாத்திரை வாங்கின? பக்கத்துல எதுவும் மெடிகல் ஷாப் இல்லையே” எனக் கேட்டாள் அன்னம்.
“ஆமா பக்கத்து டீம் பையன்கிட்ட இருந்த வண்டியை வாங்கிட்டு போனேன். பக்கத்துல எந்தக் கடையும் ஓபனா இல்லை. அதான் வர லேட் ஆகிடுச்சு” என்றவன், அவளை அந்த நாற்காலியிலேயே சாய்ந்து உறங்கச் சொன்னான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் சற்றுத் தெளிந்திருந்தாள் அன்னம்.
பாலாஜியிடம் பேச்சு வாக்கில் இரவு தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், மோகன் தனக்காக மாத்திரை வாங்கி வந்து கொடுத்ததையும் அன்னம் உரைக்க, “ஹ்ம்ம் மனசுல ஒன்னுமில்லாம தான் அவன் உன்னை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறானா? எப்படியோ நல்லா இருந்தா சரி தான். எப்ப வீட்டுல சொல்லி கல்யாணம் செஞ்சிக்கிறதா இருக்கீங்க” என்றான் பாலாஜி.
பாலாஜியின் பேச்சில் அவனை முறைத்தாள் அன்னம்.
“ஹே என்ன முறைக்கிற! நிஜமா சொல்றேன்! உன் போனை கொடு” என்று அன்னத்தின் கைபேசியைப் பாலாஜி வாங்கிய சமயம் ஓய்வறையிலிருந்து வந்திருந்தான் மோகன்.
தனது இருக்கையில் அமர்ந்து மோகன் தனது வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென அலறியது அவனது கைப்பேசி.
அன்னத்திற்காகப் பிரத்யேகமாக மோகன் வைத்திருந்த அந்தப் பாடலை அன்னத்தைத் தவிர அந்த அலுவலக அறையில் அனைவருமே முன்பு கேட்டிருக்கின்றனர். இன்று அதனை அன்னத்திற்குக் காட்டிக் கொடுத்து விட்டான் பாலாஜி.
திடீரென அலறிய தனது கைபேசியின் பாடலில் அன்னத்திடம் பிடிபட்டவனாய் அதிர்ந்து அவளைப் பார்த்தான் மோகன்.
“நான் ரொம்ப நாளா இந்தப் பாட்டை வச்சிருக்கேன் அன்னம். இதுக்கும் அன்னிக்கு நடந்ததுக்கும் முடிச்சி போட்டு பார்க்காத! நீ என் ஃப்ரண்ட் மட்டும் தான் ஓகே” என்று மோகன் அவளிடம் கெஞ்சியவாறு கூறவும், சிரித்து விட்டு போய் விட்டாள் அன்னம்.
நாளுக்கு நாள் மோகனின் அன்பான அக்கறையான செயல்கள் அவளைக் கவர்ந்த வண்ணம் இருக்க, ஏன் தான் மோகனை மணம் செய்து கொள்ளக் கூடாது எனத் தோன்றியது அன்னத்திற்கு. அவனை ரசிக்க ஆரம்பித்தாள். அவன் தன்னுடன் பேசாத நாளில் வெறுமையை உணர ஆரம்பித்தாள்.
அவள் மீதான அன்பும் அக்கறையும் அவனுக்கு இருந்தாலும், அவளைக் கவர்வதற்கான அவனின் மெனக்கெடலாய் இச்செயல்களை அவள் பார்க்காமல் போனாள்.
—
ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை அலுவலகக் கேண்டீனில் அமர்ந்திருந்த அன்னத்தின் கண்கள் நீரை பொழிய, “அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல! எதுக்கு அழுதுட்டு இருக்க நீ! நீயே அழுது காட்டி கொடுக்காத” எனச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் மோகன்.
“பாலாஜி ஃபோன் செஞ்சி சொன்னான் ஏதோ பிரச்சனைனு! எப்படிடா திடீர்னு சர்வர் டவுன் ஆகும். நம்ம சைட்ல எதுவும் பிரச்சனையா? நைட் ஷிப்ட்ல ஒழுங்கா தானே மானிட்டர் செஞ்சிட்டு இருந்தீங்க” எனக் கேட்டான் இன்பா.
“நம்ம மேல எதுவும் தப்பில்லை இன்பா. இது வேற டீம் பிராப்ளமா தான் இருக்கனும். என்னனு நான் பார்த்து சரி செஞ்சிட்டு தான் கிளம்புவேன்” என்று இணைப்பைத் துண்டித்தான் மோகன்.
மோகனும் அன்னமும் இரவு ஷிப்ட் வேலையில் இருந்த போது, மோகன் உறங்கி விட, அன்னம் செய்த தவறான அப்டேட்டால் காலை சைட்டில் இஷ்யூ வந்து விட்டது. முதலில் அன்னத்திற்கே தன்னால் தான் இஷ்யூ வந்ததென்றே புரியவில்லை. ஆனால் மோகன் அதனை உடனே கண்டுபிடித்து விட்டான்.
அவள் என்னவெல்லாம் செய்தாள் எனக் கேட்டு வெப்சைட்டை பரிசோதித்தவன், அவளால் தான் இப்பொழுது சைட் வேலை செய்யாமல் இருப்பதாகவும், அதைச் சரி செய்யாமல் யாராலும் இப்பொழுது டிரேடிங் செய்ய இயலாதென்றும் உரைத்தவன், அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபட்டான்.
இந்நிலையில் பிரச்சினையின் தீவிரத்தை எவரிடமும் கூறாமல் தானே தீர்த்து வைக்கத் தனக்குத் தெரிந்த உபாயங்களை யோசிக்கத் தொடங்கினான் மோகன்.
இதைச் சரி செய்வதற்கான தீர்வு மோகனுக்குத் தெரிந்தாலும், அதற்காக அனுமதி (access) சர்வர் டீம்க்கு தான் உள்ளது என்பதால் அவர்களைத் தொடர்பு கொண்டு கூறினான்.
அதற்குள் காலை ஷிப்ட்காகப் பாலாஜி வந்து விட, அவரைப் பார்த்துக் கொள்ளக் கூறிவிட்டு அன்னம் அழுவதைக் கண்டு அவளைக் கேண்டீனுக்கு அழைத்து வந்து சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்.
இருவரும் மீண்டுமாய் அலுவலக அறைக்குச் சென்றதும், “மோகன் அவங்க மேனேஜர் அப்ரூவல் இல்லாம சர்வர் டீம் இதைச் செய்ய மாட்டோம்னு சொல்றாங்க. இன்பா தான் இப்ப அவங்க மேனேஜர்கிட்ட பேசி அப்ரூவல் வாங்கிச் செய்யச் சொல்லனும்” என்றான்.
‘இன்பாகிட்ட நடந்ததைச் சொல்லி அவங்க மேனேஜர்கிட்ட பேச சொல்வோமா மோகன்’ என அவனின் காதருகே அன்னம் கூற,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உன்னால் தான் இந்தப் பிரச்சனைனு தெரிஞ்சா, உனக்கு இந்த வருஷம் வர வேண்டிய ஹைக் (hike – சம்பள உயர்வு) ரேட்டிங் எதுவும் வராது. இது தானே உன்னோட ஃபர்ஸ்ட் அப்ரைசல்” என்ற மோகன்,
“எதுவும் சொல்லாமலே இன்பாவை நான் செய்யச் சொல்றேன்” என்றான்.
இன்பாவிடம் பேசி ஒத்துக்கொள்ள வைத்து, சர்வர் டீம் மேனேஜரிடம் பேசி அந்தத் தீர்வை அவர்களைச் செய்ய வைத்து என இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய மாலை நேரமானது. அது வரை அன்னமும் மோகனும் அலுவலகத்தில் தான் இருந்தனர். முந்தைய நாள் இரவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் மறுநாள் மாலை வரை அலுவலகத்தில் தான் இருந்தனர்.
மாலை வரை கிளைண்ட் எவராலும் டிரேடிங் செய்ய முடியாததால் இப்பிரச்சனை அவர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்தது.
பிரச்சனையைச் சரி செய்ததும் கிளைண்ட்டுடன் மீட்டிங் இருந்தது இன்பாவிற்கு.
கிளைண்டுடன் பேசிவிட்டு வந்த இன்பா தனது டீமுடன் மீட்டிங் வைத்தான்.
இன்பாவின் முகத்தில் பிரச்சனை முடிந்த மகிழ்வை விட அதிகமான குழப்பமும் வாட்டமுமே தென்பட்டது.
“சைட் இப்ப வர்க் ஆனாலும், நாம இதைச் சரி செய்ய லேட் செஞ்சிட்டதா கிளையண்ட் சொல்றாங்க. அவங்க நஷ்டத்துக்கு நாம பொறுப்பேத்துக்கனும்னு சொல்றாங்க. எதனால் இந்தப் பிரச்சனை வந்துச்சுனு கண்டுபிடிச்சு, எதிர்காலத்துல இந்த மாதிரி பிரச்சனை வராதுன்னு நாம உறுதி மொழி அளிக்கனும்னு சொல்றாங்க. கடைசியா ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க, அவங்களுக்கு இன்னிக்கு ஆன நஷ்டத்துக்கான பெனாலிட்டி (அபராதம்) நாம கட்டனும்னு சொல்றாங்க” மீட்டிங் அறையில் மொத்த குழுவின் முன் அமர்ந்து இன்பா இதைக் கூற, மோகனும் அன்னமும் ஸ்தம்பித்துப் போயினர்.
‘எதனால் இந்தப் பிரச்சனை வந்துச்சுனு பார்க்கும் போது நாம செஞ்ச தப்பு தான்னு கண்டுபிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கே! அவங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நாமளே சொல்லிட்டா என்ன’ எனத் திருதிருத்த முழியுடன் யோசித்தாள் அன்னம்.