“என்ன சொல்லி உன்னை இந்த நிச்சயத்துக்கு ஒத்துக்க வச்சாங்க அன்னம். உன்னோட நம்பர் ரீச் ஆகலைனும் போதே நினைச்சேன். நம்ம காதலை தெரிஞ்சி உன்னை வீட்டோட அடைச்சி வச்சிருந்தாங்க தானே. அதனால தானே யாருக்கும் சொல்லாம இவ்வளோ அவசரமா நிச்சயம் செய்றாங்க. இனி நீ யாருக்காகவும் பயப்பட வேண்டாம். வா நாம இங்கிருந்து போய்டலாம்”
அன்னத்தின் வீட்டின் அருகிலிருக்கும் பூந்தோட்டத்தில் நின்று அன்னத்திடம் பதட்டமும் கவலையுமாய்க் கூறிக் கொண்டிருந்தான் மோகன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மோகனின் வீட்டிலிருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிச் சற்று இளைப்பாற நேரம் கிடைக்கவும் தான் அன்னத்தின் நினைவே வந்தது அவனுக்கு. அவளுடைய பழைய எண்ணிற்கு அழைத்துப் பார்த்தவனுக்குத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற செய்தியே வர, அலுவலகச் சகப்பணியாளர்களிடம் அழைத்துக் கேட்டான். அவள் அலுவலகத்திற்கும் வரவில்லை என்று அறிந்த பின் தான் சந்தேகம் எழுந்தது அவனுக்கு. எவரிடத்திலும் அவளின் புதிய எண் இல்லை. இரண்டு நாட்களாய் திண்டுக்கலில் இருந்தவாறே அலுவலகத் தோழர்கள் மூலமாக இவளின் எண்ணைப் பெற முயற்சித்தவனுக்கு நேற்றிரவு தான் இவளுக்கு வேறொருடன் நிச்சயம் நடக்கவிருக்கும் செய்தி கிடைத்தது. தங்களது காதலை பற்றித் தெரிந்ததும் அவளை வற்புறுத்தி இந்த நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக எண்ணிக் கொண்டு உடனே மதுரை நோக்கி கிளம்பி விட்டான்.
காலை அலுவலகத் தோழமை மூலம் கிடைக்கப்பெற்ற அன்னத்தின் புதிய எண்ணிற்கு, தான் அவளது வீட்டின் அருகிலிருக்கும் தோட்டத்தில் இருப்பதாகவும், வந்தால் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் குறுஞ்செய்தி அனுப்பிவித்தான். அச்செய்தியை படித்து விட்டு தான் வெளியே சென்றாள் அன்னம்.
கலங்கிய கண்களுடன் காலை அணிந்திருந்த புடவையும் நகையுமாய் அப்படியே அவன் முன் சென்று நின்றவளைக் கண்டதும் தன்னுடன் வருவதற்காகத் தான் அப்படியே வந்திருக்கிறாள் என எண்ணி அகமகிழ்ந்து போனான் மோகன்.
“ஏன் மோகன் நீ ஏற்கனவே ஒரு பொண்ணைக் காதலிச்சதை என்கிட்ட சொல்லலை” எனக் கேட்டாள் அன்னம்.
“அன்னம்!” என அதிர்ந்தவாறு அவளைப் பார்த்தவன்,
“உனக்கெப்படி தெரியும்” என்றவன் சுதாரித்தவனாய் சோகமான குரலில், “அந்தப் பொண்ணு சரியில்ல அன்னம். என்னை ஏமாத்திட்டா! காலேஜ் படிக்கிற வரைக்கும் என்னைக் காதலிச்சவ, ஐடில வேலை கிடைச்சதும் என்னை விடப் பணக்கார பையனை லவ் பண்ணிட்டு என்னைக் கழட்டி விட்டுட்டு போய்ட்டா!” என்று கண்களைத் துடைத்தான்.
‘அடப்பாவி! எவ்ளோ ஈசியா அந்தப் பொண்ணு மேல பழியைத் தூக்கி போடுறான். நாளைக்கு என்னையும் இப்படித் தானே பேசுவான்’ அவனது பேச்சை அதிர்ச்சியுடன் கேட்டிருந்தவள்,
“இதை நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லும் போதே சொல்லிருக்கனும் மோகன். அதுவுமில்லாம தப்பு அந்தப் பொண்ணு மேல இல்ல. உன் மேல தான்னு எனக்குத் தெரியும். நீ என்னை ஏமாத்திட்ட மோகன்! எனக்கு நீ வேண்டாம்” கண்களில் நீர் வழிய உரைத்திருந்தாள்.
அதிர்ந்து விழித்தவனாய், “அன்னம்! யாரோ உன்கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லி உன் மனசை கலைச்சிருக்காங்க. நான் அப்படி இல்லை” என்று மோகன் உரைக்க,
“தப்பா சொல்லலை மோகன். உன்னைப் பத்தின உண்மை எல்லாத்தையும் சொன்னாங்க. நீ என்னைக் காதலிச்சது உண்மையோ பொய்யோ ஆனா நான் உன்னைக் காதலிச்சது உண்மை. இனி என் வாழ்க்கை உன்னோட தான்னு பெரிசா மனக்கோட்டை கட்டியிருந்தேன். அதெல்லாம் தூள் தூளாகி பொய்யானவனைக் காதலிச்சிருக்கேன்ற வலியோட நிக்கிறேன். அதுக்குக் காரணம் நீ மட்டும் தான். அதுக்கான தண்டனையை நீ கண்டிப்பா அனுபவிப்ப மோகன். உனக்குத் தேவை என் பணமும் அழகும் தானே. ஆனா எனக்குத் தேவை என் மேல் உண்மையா அன்பு செலுத்துற மனசு மட்டும் தான்! அதை உன்கிட்ட எதிர்பார்த்து தான் ஏமாந்து நிக்கிறேன்! இனி என்னைக் கான்டேக்ட் பண்ணாத! தொந்தரவு செய்யாதனு சொல்ல தான் வந்தேன். சில நாட்களுக்கு இந்த வலி கண்ணீரை வர வைக்கத் தான் செய்யும். கலங்கி நிப்பேன் தான். கண்டிப்பா அது உன் மேல உள்ள காதல்னால இல்லை. நீ எனக்குக் கொடுத்த ஏமாற்றத்தினால வர்ற கண்ணீர் அது. கண்டிப்பா கடந்திடுவேன். இனி என் வாழ்க்கைல நீ இல்லை. குட் பை” என்று அவள் நகரவும்,
“அடியேய் என்னை விட்டு நீ வேறொருத்தனை கல்யாணம் செஞ்சிருவியாடி! எப்படிச் செய்றேன்னு நானும் பார்க்கிறேன்” என்றவன் கோபமாய் உக்கிரத்துடன் உரைக்க,
“ஓ பொண்ணோட அப்பா விவசாயம் செய்றவருன்ன உடனே அப்பாவியா இருப்பாருனு நினைச்சியோ! அவர் பொண்ணுக்கு ஒன்னுன்னா உன்னை வெட்டு வீசிட்டு போய்ட்டே இருப்பாரு. இந்த ஊருலயே பிரபலமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கடை ஓனர் ஈஸ்வரண்ணாவைத் தெரியுமா?ஈஸ்வரண்ணாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும் பொண்ணை ஏமாத்திட்டனு போலீஸ்கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சி போலீஸை உன் வீட்டுக்கு அனுப்பி முட்டிக்கு முட்டி தட்ட வச்சிருவாங்க ஜாக்கிரதை!” கண்களில் அனல் பறக்க அழுத்தமாய் உரைத்தவள் தோட்டத்தின் வாசலை நோக்கி நடந்தாள்.
தோட்டத்திலுள்ள பூக்களின் நறுமணம் அவளின் நாசியைத் தீண்ட சுவாசத்துடன் வாசத்தை இழுத்துப் புத்துணர்வு பெற்றவளாய் அங்கிருந்து வெளியே வந்தாள்.
மனத்தைக் கவ்விய பயத்துடன் அவளைப் பார்த்திருந்தான் மோகன். ‘அய்யோ அந்த சுந்தரேஸ்வரன் குடும்பமா இது! இது தெரியாம போச்சே! நிறைய நில புலன் வச்சிருக்க விவசாயியோட பொண்ணுன்னுல நினைச்சேன். என்னைக் காதலிச்சிட்டு வேறொருத்தனை கட்டிப்பாளாமா? எப்படி இவ சந்தோஷமா வாழுறானு பார்க்கிறேன். என்னை இவ ஏமாத்திட்டு நான் அவளை ஏமாத்திட்டேன்னு பேசிட்டு போறா! இவளை சும்மா விடக் கூடாது’ மனதில் கோபமாகக் கறுவிக் கொண்டவனாய் அங்கிருந்து சென்றான்.
இந்த முழு நிகழ்வையும் பார்த்திருந்தான் அன்னத்தின் மாப்பிள்ளையான சிவசுந்தரம்.
அன்னத்தின் வீட்டின் முன்பு தனது மகிழுந்தை நிறுத்தியவனாய் அதிலிருந்து இறங்கிய சமயம், அன்னம் அருகிலிருக்கும் தோட்டத்தினுள் செல்வதைக் கண்டான்.
அங்கு அவள் பேசிய அனைத்தையும் இறுகிய முகத்துடன் பார்த்திருந்தவன், படிக்கட்டின் வழியாக அவளது அறைக்குச் செல்வதைப் பார்த்து விட்டு வீட்டினுள் நுழைந்தான்.
மாப்பிள்ளை வந்து விட்டார் என்றதும் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது.
முகப்பறையில் இருந்த ராஜனும் நங்கையும், மாப்பிள்ளையை வரவேற்று நின்றனர்.
“ஜெர்மனில பார்த்தப்ப கூட நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளையா வருவீங்கனு நாங்க நினைக்கலைங்க” என்றவாறு கைக்குலுக்கி வாழ்த்துக் கூறினான் ராஜன்.
ராஜனையும் நங்கையையும் இன்ப அதிர்ச்சியுடன் பார்த்த சிவா, “நீங்க எப்படி இங்க? வெ.. அன்னத்துக்கு என்ன உறவு?” எனக் கேட்டான்.
“எனக்குத் தங்கச்சி முறை! என் அண்ணியோட மாமா பொண்ணு. தூரத்து சொந்தம்னாலும், அவ சென்னைல வேலைக்குச் சேர்ந்த பிறகு மனசளவுல நெருங்கின சொந்தமாகிட்டோம்” என்றான் ராஜன்.
“ஓ நீங்களும் சென்னை தானா, ரொம்பச் சந்தோஷம்ங்க” என்றான் சிவா.
குழந்தை நந்திதாவை நோக்கி சிவா கையை நீட்ட, அவனிடம் தாவினாள் சின்னவள்.
அவளைக் கொஞ்சியவாறு மடியில் அமர்த்திக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான் சிவா.
அந்நேரம் வந்த ஈஸ்வரனும் சிவாவுடன் அமர்ந்தவாறு பேசிக் கொண்டிருந்தான்.
தன்னவளுக்குத் தானே முதல் காதலாய் இருக்க வேண்டுமென்ற விருப்பம் அவனுக்கு உண்டு. அதனால் மோகனுடனான அன்னத்தின் இந்த உரையாடல் அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
அதே சமயம் மோகனை வெளுத்து வாங்கும் அளவு கோபம் கொண்டது மனது.
இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்க, தான் இந்த நேரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டுமென்ற குழப்பத்தில் இருந்தான் சிவா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்னம் மாப்பிள்ளை வீட்டினர் அளித்த சேலையை அணிந்தவாறு மிதமான ஒப்பனையுடன் அழகு பதுமையாகச் சபையோர் முன் வந்து நின்றாள்.
அமைதியாய் அன்னத்தின் முகம் பார்த்திருந்தான் சிவா.
இனி தந்தை பார்த்திருக்கும் இந்த மாப்பிள்ளை தான் தன் வாழ்வென மனதினுள் உருப்போட்டவளாய் தனக்கு அவனை பிடித்திருக்க வேண்டுமென்ற வேண்டுதலுடன் குனிந்த தலை நிமிராது அமர சொன்ன இடத்தில் அமர்ந்தாள் அன்னம்.
நங்கை அருகில் அமர்ந்திருந்த மீனாட்சி, “கல்யாணப் பேச்சு எடுத்தாலே பொண்ணுங்களுக்கு வெட்கம் தானா வந்துடும் போல! என்னம்மா வாயடிப்பா, இப்ப எப்படிக் குனிஞ்ச தலை நிமிராம உட்கார்ந்திருக்கா பாருங்க நங்கை” சிரித்தவாறு கூறினாள்.
‘அவள் வெட்கத்தில் உட்கார்ந்திருக்கிறாளா அல்லது விருப்பமில்லாது அவ்வாறு அமர்ந்திருக்கிறாளா’ ஆராயும் பார்வையுடன் அவளைப் பார்த்திருந்தாள் நங்கை.
சுற்றமும் உறவுகளும் பேசியவாறு இருக்க, திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டுப் பத்திரிக்கை வாசிக்கப்பட இருந்த நேரத்தில், “நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றான் சிவா.
பெரியவர்கள் அனைவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்தவராய் அமர்ந்திருக்க, “அன்னம் மாப்பிள்ளைய உன் ரூம்க்கு கூட்டிட்டு போ மா! தங்கம் நீயும் போ” என்றார் ஆச்சி.
எதற்காகத் திடீரென மாப்பிள்ளை பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டுமெனக் கூறுகிறார் என மீனாட்சி மற்றும் ஈஸ்வரனுக்குக் கலக்கமாய் இருந்தாலும், தங்களின் பெண் பார்க்கும் நிகழ்வை எண்ணி மனதினுள் சிரித்துக் கொண்டனர். அதே அறையில் தானே அவர்களும் பெண் பார்க்கும் நாளில் தனியாகப் பேசிக் கொண்டார்கள்.
அன்றைய பேச்சுக்கள் அனைத்தும் அப்படியே அவளின் மனத்திரையில் ஓட, சிரித்தவாறே அன்னத்தை அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள் மீனாட்சி.
“உன் வாய் துடுக்கை காமிச்சு மாப்பிள்ளையை ஓட விட்டுடாதடி” அன்னத்திடம் உரைத்த மீனாட்சி, “நான் அந்தப் பக்கம் படிக்கட்டுக்கிட்ட நிக்கிறேன். பேசிட்டு கூப்பிடு! என்னை மாதிரி நீயா வெளில போய் ஏணி படி வழியா கீழே போறேன்னு மயங்கி விழுந்துடாத” என்றவாறு சிரித்தாள்.
“ஓஹோ மேடமுக்கு மலரும் நினைவுகளோ!” என்று சிரித்தாள் அன்னம்.
“ஆமா இப்ப தான் கல்யாணம் நடந்தா மாதிரி இருக்கு! அதுக்குள்ள ஆறு வருஷம் ஆகிடுச்சு பாரேன்” என்றாள் மீனாட்சி.
“நான் உள்ளே வரலாமா?” என்று கதவை தட்டியவாறு சிவா கேட்கவும்,
“வாங்க மாப்ள! நீங்க பேசிட்டு இருங்க. நான் கீழே நிக்கிறேன்” என்றவாறு மறுபுறமிருந்த வாசல் வழியாக வெளியே சென்று படிக்கட்டில் நின்று கொண்டாள் மீனாட்சி.