ஒரு வாரம் கடந்திருந்ந நிலையில் ஒரு வார நாளில் வேலையை முடித்து விட்டு நேரே ராஜனின் வீட்டிற்குச் சென்றாள் அன்னம்.
நங்கையைக் கண்டதும் ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டவள், “லவ் யூ அண்ணி” என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளைப் பார்த்தவாறு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நந்திதா, ஓடோடி வந்து அன்னத்தின் துணியைப் பிடித்திழுத்தாள். தாயினருகில் நிற்பவளைத் தள்ள முயற்சித்தாள்.
“என்ன பாப்பா?” என்று சின்னவளை அவள் தூக்க முயல, அவளிடம் செல்லாது தாயிடம் சென்றவள் அவளின் கால்களைக் கட்டிக் கொள்ள, நங்கை குனிந்து குழந்தையைத் தூக்கினாள்.
உடனே நங்கையின் கன்னத்தில் முத்தமிட்ட சின்னவள், “பாப்பா தான் முத்தா தருவா” என்று மீண்டும் முத்தமிட்டாள்.
“பாரேன் இந்தக் குட்டிப்பொண்ண” என்று கன்னத்தில் கை வைத்து விட்டாள் அன்னம்.
“என்னா பொசசிவ் அம்மா மேல இந்த வயசுலேயே! உங்க அப்பா பாடு திண்டாட்டம் தான்” என்று அன்னம் கேலிச் செய்ய, “பேச்சை பாரு!” என்று அன்னத்தின் கையில் அடித்தவள்,
“அவன் இல்லாத போது தான் இந்தப் பாசமெல்லாம். சுந்தர் வந்துட்டா அப்பா அப்பானு அவன் பின்னாடியே சுத்துவா! அப்படித் தானடா கன்னுக்குட்டி” என்று சின்னவளின் கன்னத்தை நங்கை கிள்ள, கிளுக்கிச் சிரித்தாள் அவள்.
“அட போங்க அண்ணி! எவ்ளோ பெரிய உதவி நீங்களும் அண்ணனும் எனக்குச் செஞ்சிருக்கீங்க தெரியுமா! சொந்த பொண்ணைப் பாதுகாக்கிற மாதிரி என்னைக் காத்திருக்கீங்க அண்ணி! உங்களுக்கு ஆயுளுக்கும் நான் கடன்பட்டிருக்கேன் அண்ணி” என்று கண் கலங்கியவாறு உரைத்தாள்.
“ம்ப்ச் என்ன பெரிய வார்த்தைலாம் பேசிட்டு இருக்க” என்று நங்கை அவளை அதட்ட,
“பெரிய வார்த்தை பேசுற அளவுக்குப் பெரியவ ஆகிட்டாளா அன்னம்! அப்படி என்ன பெரிய வார்த்தை பேசினா?” என்று கேட்டவாறு சமையலறையில் இருந்து வந்தார் நங்கையின் தந்தை சுரேந்தர்.
அவருக்கு மோகன் பற்றிய விவரங்கள் தெரியாது என்பதால் சின்னவளின் செய்கையைக் கூறி சிரித்துப் பேசியவாறு இருந்தனர்.
ராஜன் அந்நேரம் வேலையிலிருந்து வரவும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.
பால்கனியில் நங்கையுடன் நின்றிருந்தாள் அன்னம். ராஜன் தனது மகளுடன் விளையாடியவாறு அமர்ந்திருந்தான்.
“மோகனுக்குப் பூனே பிராஜக்ட் கொடுத்து அனுப்பி விட்டாங்களாம் இன்பா. ராஜாண்ணா பேசி தான் செஞ்சதா சொன்னாங்க. இந்தளவுக்கு எந்தச் சொந்தக்காரங்க இந்தக் காலத்துல உதவுவாங்க அண்ணி. அதுவும் நீங்க நெருங்கின சொந்தம் கூட இல்லையே” அன்னம் நன்றியுணர்வுடன் பேச,
நங்கை அதற்கு ஏதோ பதில் கூற எத்தனிக்க, “நீ சிவாவுக்குத் தான் நன்றி சொல்லனும்” என்றான் ராஜன்.
இவள் புரியாது அவனைப் பார்க்க, மோகனின் சோஷியல் நெட்வொர்க்கிங்கை கண்காணிக்க ஆள் வைத்தது முதல் மோகனின் கைப்பேசி பேச்சை ரெக்கார்ட் செய்து காவலரிடம் புகாரளித்து அவனிடம் பேசி எழுதி வாங்கியது வரை அனைத்தையும் கூறி முடித்தான் ராஜன்.
“நிஜமா இவ்வளோ செஞ்சாங்களா?” ஆனந்த அதிர்ச்சியுடன் அவள் கேட்க,
“ஆமா அன்னம். ஆனா அந்தப் பையனை நேர்ல பார்த்தப்ப சும்மா வாய் சவடால் விடுறவன் மாதிரி, பெரிசா எதுவும் செய்ற தைரியம் இல்லாத பையன் மாதிரி தான் தெரிஞ்சான் எனக்கு.
பார்க்க அப்படித் தான் இருப்பாங்க. இப்படி ஆளுங்களை நம்பக் கூடாதுனு அண்ணா சொன்னாங்க” என்றான் ராஜன்.
“என்னது ஈஸ்வரண்ணா வந்தாங்களா?” என ஆச்சரியமாய் அவள் கேட்க,
“ஆமா நம்ம குடும்பப் பொண்ணோட பிரச்சனையை நீங்க பாருங்கனு சிவாவை தனியாவா அனுப்ப முடியும். அண்ணாக்கு தான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துலாம் அனுபவம் இருக்குனு அவர்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். உடனே நானே வரேன்னு வந்துட்டாரு” என்றாள்.
“அய்யய்யோ அப்ப மீனாட்சிக்கு இது தெரியுமா?” என்று பதறியவாறு அன்னம் கேட்க,
“அப்பாடா! எனக்கும் அதே பயம் தான் இருந்துச்சு ராஜாண்ணா” என்றவள் மேலும் சில மணி நேரம் அவர்களுடன் பேசி விட்டு உறங்குவதற்காக விருந்தினர் அறைக்குச் சென்று விட்டாள்.
“சாபமா போக இருந்த என் வாழ்க்கைக்கு வரமாக வந்திருக்கீங்க சிவசு அத்தான். உங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்குது சிவசு அத்தான்” என்று அவனுக்கு மெசேஜ் செய்து விட்டு நெடு நாளைக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினாள் அன்னம்.
****
இரண்டு மாதங்களுக்குப் பிறகு
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த வண்ணமிருக்க, திருச்செந்தூர் முருகன் கோவிலிற்குச் சென்று தனது வேண்டுதலை முடித்து விட்டு வந்திருந்தான் சிவா.
மோகனின் பிரச்சனைக்குப் பிறகு சோஷியல் மீடியாவை உபயோகிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டாள் அன்னம்.
இணையத்தை உபயோகித்து வாட்ஸ்அப்பையும் சிவாவின் யூ டியூப் சானலை மட்டும் பயன்படுத்தி வருகிறாள்.
அந்த வாரயிறுதி நாளில் சனிக்கிழமை காலை வேளையில் ருத்ரனின் வீட்டில் அமர்ந்திருந்தான் சிவா.
சிவா மாலை கழட்டியப்பின் அவனுடன் வெளியே செல்ல திட்டமிட்டு அவனை வர சொல்லியிருந்தாள் அன்னம்.
“ரொம்ப நல்லா போகுது பெரியப்பா. சூப்பர் டேன்சர் ஷோல ஒரு ஜோடிக்கு நான் தான் கொரியோகிராப் செய்றேன்” என்றான்.
“அது இன்னும் கொஞ்ச நாள்ல முடியுதுனு சொன்னாங்களே” என அவர் கேட்க,
“ஆமா பெரியப்பா! கல்யாணத்துக்கு அடுத்த நாள் தான் ஃபைனல்ஸ்” என்றான்.
“அப்ப கல்யாணம் முடிஞ்ச உடனே சென்னைக்குக் கிளம்பிடுவீங்களா?” எனக் கேட்டார்.
“ஆமா வந்தாகனும்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே வந்து நின்றாள் அன்னம்.
திருமணம் நிச்சயமான நாளில் இருந்து அன்று தான் சிவாவை தாடி இல்லாது பார்க்கிறாள் அன்னம்.
ரசனையாய் அவனைப் பார்த்தவள், “செம்ம சூப்பரா இருக்கீங்க அத்தான்” என்று அவனுக்கு மட்டுமே கேட்குமாறு உரைத்து விட்டு அருகில் அமர்ந்து விட்டாள். கன்னங்கள் சிவக்க மென்னகை புரிந்தான் அவன்.
“சரி வாங்க சாப்பிடலாம்” என்றவாறு காலை உணவை உண்பதற்காக ருத்ரன் எழுந்து உணவு மேஜையை நோக்கி செல்ல,
“நீங்க வெட்கப்படும் போது அவ்ளோ அழகு அத்தான்” என்றாள் அவனிடம்.
“வெள்ளப்புறா” எனத் தலைகோதியவாறு சிரித்துக் கொண்டான் அவன்.
அனைவருமாய் ஒன்றாக அமர்ந்து காலை உணவை உண்டப்பின், “சரிங்க மாமா நாங்க கிளம்புறோம்” என்றாள் அன்னம்.
“பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க. சீக்கிரம் வந்துடுங்க” என்று வழியனுப்பி வைத்தார் ருத்ரன்.
சிவாவின் இருச்சக்கர வாகனமான புல்லட் வண்டியில் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் அன்னம்.
வாகனத்தை இயக்கியவனாய், “முதல்ல எங்க போகனும் வெள்ளப்புறா” எனக் கேட்டான்.
“கல்யாண ஷாப்பிங் தானே பிளான் செஞ்சிருக்கோம்! டி நகர் போகலாம். நங்கை அண்ணி கூட ஒரு தடவை போய்ருக்கேன்” என்றாள் அன்னம்.
“அப்படியே அஞ்சலி ஜீவனுக்குலாம் ஒரு டிரஸ் எடுத்துக் கொடுத்துடலாம் அன்னம்” என்றான் சிவா.
“ஓ ஓகே எடுக்கலாம். ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சேன். உங்களுக்கு அஞ்சலியை எப்ப எப்படித் தெரியும்? அஞ்சலி உங்களை அண்ணானு தானே கூப்பிடுறாங்க. அப்புறம் ஏன் எல்லாரும் உங்களையும் அஞ்சலியையும் லவ்வரா சேர்த்து வச்சு பேசினாங்க. எங்க ஆபிஸ்ல உங்க ஷூட்டிங் நடந்தப்ப அங்க வேலை செய்றவங்களே அப்படிப் பேசினாங்க தெரியுமா” ஆதங்கத்துடன் கேட்டிருந்தாள் அன்னம்.
“ஆக்சுவலி அஞ்சலி என்னைச் சிவானு தான் கூப்பிடுவா! ரொம்பச் சாதாரணக் குடும்பத்து பொண்ணு. டேன்ஸ் மேல் இருக்க ஆசைனால பேக் டான்சரா இருந்தவ அஞ்சு வருஷமா என்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கா! எல்லா ஃபங்ஷன்லயும் டேன்ஸ் ஷோ எல்லாத்துலயும் என் கூடவே தான் இருப்பா. அவ இருந்தா என் வேலையைப் பத்தி நான் கவலைப்படவே வேண்டாம். அந்தளவுக்கு டெடிகேட்டா வேலை செய்வா. அதனால் நான் அவகிட்ட பாஸ் மாதிரியே நடந்துக்க மாட்டேன். ஃப்ரண்ட்லியா தான் இருப்பேன்.
உங்க ஆபிஸ்ல ஷூட் செஞ்ச அந்தச் சீரியல்ல அவளுக்கும் ரோல் இருக்கு. நீ சீரியலையே பார்த்திருப்பியே அது தான் அவளுக்கு முதல் தடவை ஆக்டிங். அதனால அவ சீன் ஷூட்டிங் இருக்கும் போது நானும் வருவேன் அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன். என் ஷூட்டிங் நடக்கும் போது அவ இருப்பா.
அந்த ஷூட்டிங் டைம்ல இரண்டு பேரும் சேர்ந்து நிறைய ரீல்ஸ் போட்டிருக்கோம். டப்ஸ்மேஷ் மாதிரி ரீல்ஸ் தான். நீ கூடப் பார்த்திருப்பியே! ஹீரோ ஹீரோயின் பேசுற சினிமா டயலாக்ஸ் அண்ட் சின்னச் சின்ன டேன்ஸ் கிளிப்ஸ்லாம் என்னோட சேர்ந்து எடுத்துட்டு அவளோட இன்ஸ்டா பேஜ்ல என்னை டேக் செஞ்சி ரீல்ஸ் போடுவா. இப்படி இரண்டு பேரும் ஒன்னா இருக்கனால எல்லாரும் அப்படிப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி எல்லாரும் எங்களை ஜோடியா சேர்த்து பேசவும் என்னை அண்ணானு கூப்பிட ஆரம்பிச்சிட்டா” என்றான்.
இத்தனை நாட்களில் பல முறை அன்னம் நடனப்பள்ளிக்கு சென்றிருக்கிறாள். செல்லும் பொழுதெல்லாம் அத்தனை இனிமையாகப் பழகுவாள் அஞ்சலி. சிவாவின் குணாதிசயங்களையும் இத்தனை நாட்களில் அறிந்த வகையில் அவளால் சிவா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடிந்தது.
“அன்னிக்கு அவங்களைத் தூக்கிட்டு வந்தீங்களே! அவங்க கால்ல எதுவும் அடிபட்டுடுச்சா?” எனக் கேட்டாள் அன்னம்.
“அவங்க எங்க தங்கியிருக்காங்க. யார் கூட இருக்காங்க” எனக் கேட்டாள்.
“இங்க தனியா ரூம் எடுத்து தான் தங்கியிருக்கா. மீடியால வேலை செய்ற பெண்கள் சில பேர் கூடத் தங்கியிருக்காங்க. ரூம் ஷேரிங் மாதிரி தான். அவளோட அம்மா அப்பாலாம் திருச்சில இருக்காங்க” என்றான் சிவா.
அதன் பிறகு அவள் ஏதும் கேட்காமல் அமைதியாக வர, “நீ ரொம்ப யோசிக்காத அன்னம். அஞ்சலி நம்ம மேரேஜ் வரைக்கும் தான் நம்ம டேன்ஸ் ஸ்கூல்ல வேலை பார்ப்பா. அதுக்குப் பிறகு ஜீவன் முழுசா பார்த்துப்பான். அஞ்சலிக்கு பதிலா வேறொருத்தரை வேலைக்கு எடுத்துருக்கேன்” என்றான் சிவா.
“இல்ல இல்ல அவங்க இருக்கிறதுல எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை” என்று அன்னம் ஏதோ கூற,
“ஓ ஆனா அவங்க உங்களைச் சிவான்னே தான் கூப்பிட்டுட்டு இருந்திருக்கனும். திடீர்னு அண்ணாக்குக் கூப்பிட்டா தான் எல்லாருக்கும் சந்தேகம் வரும்” என்றாள் அன்னம்.
“நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவ கேட்கலை” என்றான்.
அவள் மீண்டும் அமைதியாகி போனாள்.
“என்ன அமைதியாகிட்ட! வாட் இஸ் ஈட்டிங் யுவர் ஹெட்” என்று கேட்டான் சிவா.
“நிஜமாவே நீங்க இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணது இல்லையா? அன்னிக்கு கேட்கும் போதும் எதுவும் சொல்லலை. சின்ன வயசுலேயே மீடியாக்குள்ள வந்துட்டீங்க. அதுக்குப் பிறகு தான் காலேஜ் கரஸ்ல படிச்சிருக்கீங்க. கிரஷ்லாம் இருந்திருக்கும் தானே” என்று கேட்டாள் அன்னம்.
அவர்கள் செல்லும் பாதையிலிருந்த ஐ பேக்கோ ஐஸ்கிரீம் கடையில் நிறுத்தினான் சிவா.
“இங்கே ஏன் நிறுத்தியிருக்கீங்க?” எனப் புரியாமல் அன்னம் கேட்க,
“ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டே பேசலாம் வா” என்று கடைக்குள் அழைத்துச் சென்றான்.
கடைக்குள்ளே ஒரு மேஜையில் மட்டுமே ஆட்கள் இருக்க, அவளுக்குப் பிடித்த ஃபிளேவரை கேட்டு வாங்கிக் கொண்டு, மாஸ்க்கை கழட்டி விட்டு அங்கிருந்த மேஜையில் அவளுடன் அமர்ந்தான் சிவா.
ரசனையாக அவன் முகத்தை அவள் பார்த்திருக்க, மென்மையாய் சிரித்தான் அவன்.
“என்ன பார்வை இது?” என்று அவன் கேட்க,
“என் புருஷன் நான் பார்க்கிறேன்! உங்களுக்கு என்ன?” சிரிப்புடன் கேட்டாள்.
கண்கள் மின்ன சிரித்தான் அவன்.
அவளின் மனம் அவனுடனான ஒவ்வொரு நொடியையும் ரசித்துப் பூரிப்பாய் மனதிற்குள் சேமித்துக் கொண்டிருந்தது.
நீல நிற ஜீன்ஸூம் மஞ்சள் நிற சட்டையும் அணிந்திருந்தவனைப் பார்த்தவள், “எப்பவுமே உங்க காஸ்ட்யூம் செலக்ஷன் செம்ம அத்தான். இனி எனக்கும் சேர்த்து நீங்களே எடுத்துக் கொடுத்துடுங்க” என்றாள்.
“மை பிளஷர் பொண்டாட்டி” என்றான் அவன்.
“அப்புறம் முக்கியமான விஷயம்” என்றவள் சொன்னதும்,
“என்ன?” என்று தீவிர பாவனையுடன் அவன் கேட்க,
“உங்க ஹேர் ஸ்டைல் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றாள்.
அவள் கேலி செய்கிறாளா அல்லது உண்மையைக் கூறுகிறாளா என்று புரியாத பாவனையில் பார்த்தவன், “ஹேர் ஸ்டைலா? கிண்டல் செய்றியா?” என்றான்.
“இல்ல நிஜாமாப்பா! மோஸ்ட்லி மீடியால இருக்கிறவங்க தலை முடியை அடர்த்தியா காண்பிக்கிற மாதிரி எதையாவது செஞ்சி தலைக்கு என்னென்னமோ போடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நீங்க எப்பவுமே இப்படியே கேசுவலா லேசா படிய வாருறது பிடிச்சிருக்கு. அதே மாதிரி அடர்த்தியும் இல்லாம ரொம்ப குறைவாவும் இல்லாம அளவான மீசை! அதுவும் பிடிக்கும். தாடி இருந்தப்ப ஒரு விதமான அழகுனா இப்ப தாடி இல்லாமலும் ஒரு விதமான அழகு தான். ஆனா லேசான தாடியோட ரொம்பப் பிடிச்சிது”
அப்பட்டமாய்த் தன்னை சைட் அடித்துக் கொண்டிருக்கிறாள். தன்னிடம் அவள் ரசிப்பனவற்றை அவளையும் மீறி இயல்பாய் கூறிக் கொண்டிருக்கிறாள். சற்றாய் வெட்கமும் ரசனை பாவனையும் அவன் கண்களில்.
அவனின் இமை சிமிட்டாத பார்வையில், கூச்சங் கொண்டு, “என்ன அப்படிப் பார்க்கிறீங்க?” என்றவள் சுதாரித்துக் கொண்டவளாய், “நீங்க என்னை டைவர்ட் செஞ்சிட்டீங்க. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க” என்றாள்.
“ஹ்ம்ம் நான் டைவர்ட் செஞ்சிட்டேனா? சரி தான்” என வாய்க்குள் சிரித்தவனாய், தனது வாழ்க்கையைக் கூறலானான்.
“அப்பாக்கு நான் படிச்சு பெரிய ஆளாகனும்னு ஆசை. எனக்குப் படிப்பு ஏறலை. திருச்செந்தூர்லருந்து சொல்லாம கொள்ளாம வந்துட்டேன்” என்றான்.
“அச்சோ வீட்டை விட்டு வந்துட்டீங்களா?” எனக் கேட்டாள்.
“ஆமா ஏன் வந்தேன் தெரியுமா?” என்று புருவத்தை உயர்த்தினான்.
“ஏன் வந்தீங்க?” பலவிதமான காரணங்களைச் சிந்தித்தவளாய் அவள் கேட்க,
“காதல் தான்” என்றான் தீவிரமாக.
“என்னது காதலா? டீனேஜ்ல தானே வீட்டை விட்டு வந்தீங்க! உங்களோட முதல் காதல் அது தானா? இல்ல அதுக்கு முன்னாடி மல்லிக்கா டீச்சர், விமலா அக்கானு ஏதும் இருக்கா” என முறைத்தாள் அன்னம்.
‘என்னென்னமோ யோசிச்சு சொதப்பிட்டியே அன்னம்’ என்று முழித்தவளாய், “சாரி” என்றாள்.
“நல்லாயிருக்கு! எனக்காக வந்த இந்தக் கோபம், அதை நீ முறைப்பா காட்டின விதமெல்லாம் நல்லா இருக்கு. என்கிட்ட இப்படி நீ உரிமையா நடந்துக்கனும் தான்டா வெள்ளப்புறா எனக்கு ரொம்ப ஆசை” உணர்வுபூர்வமாக அவன் கூற,
“அவ்ளோ சின்ன வயசுலேயே டான்ஸ் மேல் காதலா?” பேச்சை மாற்றினாள் அவள்.
“ஆமா அன்னம். அங்க தெருல ஏதாவது ஃபங்ஷனுக்குப் பாட்டு போட்டாலே வீட்டுக்குள்ள ஆட ஆரம்பிச்சிடுவேன். வருஷா வருஷம் திருவிழா நேரத்துல போடுற ஸ்டேஜ்ல போய் ஆடிட்டு வருவேன். ஆக்சுவலி அப்பாக்கு இதுலாம் பிடிக்காது.
அப்பா சரியா படிக்கலைனா அடி வெளுத்துடுவாரு. அவர் அங்க ஒரு மில்லுல வேலை பார்த்தார். அவரோட பசங்க நாங்க இரண்டு பேரும் அவரோட முதலாளி அளவுக்கு வளரனும் சொந்தமா தொழில் செய்யனும்னு அவருக்கு ஆசை. அதுக்காக நல்லா படிக்கனும்னு என்னை வெளுத்து வாங்குவார். தம்பி சூப்பரா படிப்பான். அதனால அவனை ஒன்னும் சொல்ல மாட்டாரு. எனக்குப் படிக்கப் பிடிக்கலைனுலாம் அவர்கிட்ட சொல்ல தைரியம் இல்லை. அதான் வீட்டை விட்டு வந்துட்டேன்” என்றான்.
“உங்கப்பா அம்மா ரொம்ப வருத்தப்பட்டிருப்பாங்க தானே! ஏன் அப்படிச் செஞ்சீங்க? வீட்டை விட்டு வரும் போது எத்தனை வயசு இருக்கும்” கோபமாகவே கேட்டாள்.
சிறுவயதில் தனியாக வந்து என்னென்ன கஷ்டமெல்லாம் பட்டானோ என்று அவளது மனது உருகியது அவனுக்காக.
“லெட்டர் எழுதி வச்சிட்டு தான் வந்தேன். அங்க ஊருல பெரிய வீட்டுகாரங்கனு ஊர் பெரியவர் குடும்பம் இருக்கு. அவங்க பையன் கூடச் சேர்ந்து அவங்க வீட்டுல தான் படம் பார்ப்போம் நானும் தம்பியும். அந்த அண்ணா காலேஜ் படிக்கச் சென்னைல சேர்ந்திருந்தாங்க. எனக்குப் பதினைஞ்சு வயசு இருக்கும் போது சென்னைக்குக் கிளம்பி வந்து அந்த அண்ணா கூடத் தங்கிட்டேன்” என்றதும்,
“ஹப்பாடா இங்கே தனியா வந்து என்னலாம் கஷ்டப்பட்டீங்களோனு ஒரு நிமிஷம் மனசு பதறிப் போச்சு” என்றாள் அன்னம்.
“பிடிச்சவங்க தாண்டி அடுத்த நிலைக்கு உன் மனசுல நான் வரவே இல்லையா?” சற்றுச் சோகமாக அவன் கேட்க,
“இன்னும் காலம் இருக்குப் பாஸ்! முயற்சி திருவினையாக்கும்!” என்றவாறு சிரித்தாள்.
“ஹ்ம்ம் என் பொழப்புச் சிரிப்பா சிரிக்குது. முருகா நீ தான் காப்பாத்தனும்” என்றவன் மேலே கை தூக்கி பார்த்தவாறு சொன்னதும் மேலும் சிரித்தாள் அவள்.
“நீங்க முருகா முருகானு சொல்லும் போதெல்லாம் ஆச்சி எங்கப்பாவை கூப்பிடுற மாதிரியே இருக்கு” எனச் சிரித்தாள் அன்னம்.
“அட ஆமா உங்க அப்பா பேரு முருகன் தான்ல! அய்யய்யோ அவர் முன்னாடி பழக்க தோஷத்துல முருகானு சொல்லிட கூடாது முருகா” என்று மீண்டுமாய்க் கையை மேலே தூக்க வாய்விட்டு சிரித்திருந்தாள் அவள்.
ஐஸ்கிரீமை உண்டு விட்டு மீண்டுமாய் இவர்கள் பயணத்தைத் துவங்க, மழை தூரலாய் அவர்களை நனைத்தது.
மழையிலிருந்து ஒதுங்கி கொள்ள, பயணத்தின் பாதையில் இருந்த தேநீர் கடையில் நிறுத்தினான்.
ஹெல்மெட்டை மட்டுமாகக் கழட்டியவன், மாஸ்க்குடனே தேநீர் கடையின் நிழலில் அவளுடன் நின்றான்.
கைகளை நீட்டி மழை நீரை அவள் உள்ளங்கையில் தட்டியவாறு நிற்க,
அவளின் மற்றொரு கையைப் பற்றினான் அவன். அவளின் விரல்களுக்குள் தனது விரல்களைக் கோர்த்தான்.
“மை வெள்ளப்புறா பாட்டு!” சத்தம் வராமல் வாயசைத்து அவன் கூற, இதழ் விரிய சிரித்தாள் அவள்.
தனது விரல்களுடன் கோர்த்திருந்த அவனது கரத்தினை மற்றொரு கைக்கொண்டு பற்றியவளாய் அவனது தோள் மீது லேசாகத் தலையைச் சாய்த்து நின்றாள்.
மழை நின்றதும் மீண்டுமாய்த் தொடங்கிய பயணம் தி நகரில் நின்றது. அங்கு வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அவனது கரத்தை தானே சென்று பிடித்துக் கொண்டாள். அவனை ஒட்டியவாறே அவள் நடக்க, அவளின் தோள் மீது கைப்போட்டு கொண்டவனாய், இருந்த கூட்டத்தில் எவர் மீது இடிப்படாதவாறு அவளை அழைத்துச் சென்றான்.
ரங்கநாதன் தெருவில் எந்தவொரு பெரிய கடைக்குள்ளும் நுழையவில்லை அவள். தெரு நெடுகிலும் சாலையோரத்தில் இருந்த சின்னச் சின்னக் கடைகளிலேயே குறைந்த விலையினில் அவளுக்குத் தேவையானவற்றை வாங்கியிருந்தாள் அன்னம்.
மதியம் இரண்டு மணியளவில் அவர்களின் ஷாப்பிங் நிறைவுற, “ஐ லைக் யுவர் ஷாப்பிங்” என்றான்.
புரியாது அவள் பார்க்க, “சின்னச் சின்னப் பொருளுக்கும் காசு என்னனு பார்த்து, அதே பொருள் இன்னொரு கடைல என்ன விலைனு கம்பேர் செஞ்சி தரத்தை பார்த்து, சேமிக்கவும் செய்ற தரமாவும் வாங்குற அண்ட் ரொம்ப முக்கியமா சட்டு சட்டுனு செலக்ட் செஞ்சிடுற” என்றான்.
“ஆமாப்பா காசு எண்ணி எண்ணி தான் செல்வு செய்வேன். கொஞ்சம் கஞ்சபிஸ்னாரினு கூடச் சொல்லலாம்” என்று சிரித்தாள்.
“பரவாயில்லை இனி என் பணம்லாம் வீணாகாம சேவிங்க்ஸ் ஆகிடும்னு நம்பிக்கை வந்திருக்கு” என்றவாறு வண்டியினருகே சென்றான்.
இருவருமாக ஓர் உணவகத்தில் மதிய உணவை உண்டு விட்டு கிளம்ப,
“சரி என்னை வீட்டுல டிராப் செஞ்சிடுங்க! செம்ம டயர்ட்டா இருக்கு” என்றவள் சொன்னதும்,
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என்றவன் அவளை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
தனித்தனி வில்லா போன்ற வீடுகள் இருக்கும் குடியிருப்பு அது.
வாசலுக்குள் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தியவன், அவளின் கேள்வியான பார்வையைக் கண்டு கொள்ளாமல், “உள்ளே வா” என அவளின் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
வீட்டின் கதவை திறந்தவனாய், “வெல்கம் ஹோம் பொண்டாட்டி! வலது காலை எடுத்து வச்சி வா!” என்றவாறு அவளின் கைகளைப் பற்றியவனாய் தானும் அவளுடன் வலது காலை எடுத்து வைத்தவனாய் உள்ளே சென்றான்.
வீட்டின் உள்ளே காலை வைத்து வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.
அத்தனை அற்புதமாக அனைத்தும் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட நேர்த்தியான வீடாக இருந்தது.
“நீங்க பிளான் செஞ்சி கட்டின வீடாப்பா” எனக் கேட்டாள்.
“ஆமா இந்த வீடு கட்டி அஞ்சு வருஷம் இருக்கும். லோன்ல தான் வாங்கினேன். அப்புறம் பணம் வர வர கட்டி போன வருஷம் ஃபுல் செட்டில்மென்ட் செஞ்சேன். நான் மட்டும் தான் இருக்கேன். அப்பப்ப அம்மா தம்பி வந்துட்டு போவாங்க. வீட்டு வேலைக்கு ஆளுங்க இருக்காங்க!” என்றான்.
இவன் முகப்பறையிலிருக்கும் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டவனாய், தலையைச் சாய்த்துக் கொள்ள, “நான் எல்லா ரூமையும் பார்த்துட்டு வரேன்” என்று அவளே சென்று வீட்டை சுற்றி பார்த்து விட்டு வர,
சோஃபாவில் அமர்ந்தவாறு தலையைப் பின்னோக்கி சாய்த்தவன் அப்படியே கண்கள் மூடி உறங்கியிருந்தான்.
இவள் அமைதியாகச் சென்று கதவை சற்றிவிட்டு வந்தவளாய், அவனது மடியில் தலை வைத்து உடலை குறுக்கி கொண்டு கண்கள் மூடி படுத்துக் கொண்டாள். அடுத்த நிமிடத்திலேயே உறங்கியும் போனாள்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் உறக்கம் கலைந்தவனாய் முழித்துப் பார்க்க, மடியில் அவள் படுத்திருப்பதை உணர்ந்தவனோ, தனது கைகள் அவள் மீது பட்டு உறக்கம் கலைந்துவிடக் கூடாது என்று கையைச் சோபாவில் மேலே வைத்துக் கொண்டான். கால்களைச் சிறிதும் அசைக்காமல் அப்படியே வைத்தான்.
‘என் மேல் எவ்ளோ நம்பிக்கை இருந்தா இப்படித் தன்னை மறந்து என் மடியிலேயே தூங்குவா’ நெஞ்சம் பூரித்துப் போனது அவனுக்கு.
அவள் தன்னிடம் உரைக்காத காதலை விட இந்த நம்பிக்கை போதும் ஆயுள் முழுவதும் மகிழ்வுடன் வாழ என்று எண்ணி நெகிழ்ந்து போனான் சிவா.