அந்த மருத்துவ வளாகத்தின் உள்ளே கர்ப்பிணிகள் நடை பயிலும் இடத்தில் தன் வயிற்றை பிடித்து நடந்துக் கொண்டிருந்தாள் அக்ஷிதா.
மருத்துவர் கூறிய நாளிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அக்ஷிதாவின் அழுத்தம் காரணமாக வலி வந்து விட இதோ இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
அதிகாலை 3 மணியிலிருந்து வலி விட்டு விட்டு வர தேவகி அனலிற்கு தகவலை சொல்லிவிட்டு உடனே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டார்.
அனலும் உடனே விடுமுறை சொல்லியவன் மனைவியை காண ஓடி வந்துவிட்டான்.
இப்போது தான் வலி வர ஆரம்பம் ஆகி இருப்பதனால் மகப்பேறு மருத்துவர் அவளை தொடரந்து நடக்க சொல்லியிருந்தார்.
அங்கு அதிகபட்சம் நார்மல் டெலிவரி தான் செய்வார்கள். அவர்களால் இயலாத பட்சத்தினால் மட்டுமே ஆப்ரேசன் மேற்கொள்வார்கள்.
அனல் தந்திரன் கைகளை பிடித்துக் கொண்டு அந்த வளாகத்தினுள் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தாள் அக்ஷிதா, சுளிர் என்ற வலி இடுப்பை வெட்டி இழுக்கும் போதெல்லாம் அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
” அக்ஷி டோன்ட் பேனிக்… கொஞ்ச நேரம் தான் எல்லாம் சரியாயிடும் மெல்ல ஸ்லோ ஸ்லோவா நட ” என்று அனல் சொல்ல வலியுடன் அவனைப் பார்த்து தலையாட்டியவள் ” கொஞ்சம் தண்ணி வேணும் அத்தான் ” என்றாள்.
கொஞ்சம் தள்ளி கல் மேடையில் அமர்ந்து இருந்த தேவகியை பார்த்த அனல் ” அத்தை கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று சத்தமாக சொன்னான்.
தேவகி வேகமாக தண்ணீர் பாட்டிலுடன் வர அவரிடம் இருந்து வாங்கி மனைவிக்கு பருக கொடுத்தான்.
சில மணி துளிகள் நடந்திருக்க திடீரென்று இடுப்பை வெட்டி வலி வர தாங்க முடியாத வலியில் நீர் காலோடு போக அக்ஷி தாங்க முடியாமல் அவன் மேல் சாய்ந்தாள்.
” அக்ஷி என்ன டா ஆச்சு ” என்று தேவகி ஒரு புறம் அவளை பிடிக்க ” அக்ஷி என்ன பண்ணது ” என்று அனல் கேட்க கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்ட ” என்னை மீறி வெட் பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன் ” என்று ஒரு வித அவமானத்துடனும் அழுகையுடனும் சொன்னாள்.
” ஹே இதுக்கு எதுக்கு அழுகுற குழந்தை பொறக்கும் போது தாங்க முடியாத வலில எல்லாம் வர தான் செய்யும் இதுக்கு அப்புறம் தான் குழந்தையே வரும் ” என்றான் ஒரு மருத்துவராக.
அக்ஷி சமாதானம் ஆகமால் கண்ணீர் வழிந்த விழிகளுடன் இருக்க அக்ஷி கால்களுக்கு இடையே திடீர் உதிர போக்கு ஏற்பட ” அக்ஷி ” என்ற அனல் மயங்கி சாய இருந்தவளை தன் இரு கைகளிலும் அள்ளி கொண்டு வேகமாக உள்ளே சென்றான்.
அதற்குள் அங்கிருந்த நர்ஸ் ஸ்ட்ரெச்சருடன் வர அவளை அதில் படுக்க வைத்து உடனே ஆப்ரேசன் அறைக்கு அழைத்து சென்றார்கள்.
அவளுக்கு உதிர போக்கு ஏற்பட்டதனால் வேறு வழி இல்லாமல் உடனே ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர்.
அக்ஷிதா அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அனல் தந்திரனின் சாயலிலும் அக்ஷிதாவின் நிறத்திலும் அழகு தேவதையாக இருந்தது அந்த ரோஜா மொட்டு.
குல்கந்தில் போட்ட ரோஜா இதழ்களைப் போல் வெள்ளை நிற பூந்துவாளை சுத்தப்பட்டு பிங்க் நிறத்தில் கண்ணை கவரும் வண்ணம் இருந்தாள் அனல் அக்ஷிதாவின் மகள்.
அதன் பின் வீட்டினர் அனைவருக்கும் தகவல் சொல்ல குழந்தை பிறந்த 10 நிமிடத்தில் கண்ணாயிரம் விசாலாட்சியுடன் வந்து விட்டார்.
அக்ஷிதா மயக்கத்தில் இருக்க இன்குபேட்டில் இருக்கும் குழந்தை பக்கத்தில் இருந்தான் அனல்.
கண்ணாயிரம் முதலில் மகன்கள் சம்மந்தி வீடு எல்லாம் தகவல் சொன்னவர் அவர்கள் பக்கம் உறவினர்களுக்கு பேத்தி பிறந்ததை சந்தோஷமாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.
அக்ஷிதா கண்விழிக்கும் போது அவளை நார்மல் வாடிற்கு மாற்றி இருந்தார்கள். அந்த அறையில் அவர்களுடைய சொந்த பந்தங்கள் குழந்தையை பார்க்க காத்திருந்தார்கள்.
அனலிர்க்கு குழந்தை பிறந்தது தெரிந்தவுடன் விஷ்ணு லீவு சொல்லிவிட்டு வந்துவிட செழியன் கடையை மேனேஜரை பார்க்க சொல்லிவிட்டு வந்துவிட்டான்.
அக்ஷிதா கண் விழித்தவுடன் ” அம்மா ” என்று முனங்க ” என்னடா என்ன வேணும் ” என்று தேவகி மகளிடம் விரைய ” பேபி எங்க ” என்றாள்.
” குழந்தை சீக்கிரம் பிறந்துருச்சுல அதனால இன்னைக்கு மட்டும் இன்குபேட்ல வைக்க சொல்லி இருக்காங்க ” என்று சொல்ல தாயாய் குழந்தையை நினைத்து பயம் கொண்டாள்.
” அம்மா நா பேபியை பார்க்கணும் ” என்று பரிந்துவிப்புடன் சொல்ல ” மாப்பிள்ளை அங்க தான் இருக்கார் அக்ஷி பயப்படாத… குழந்தையை எங்க கிட்ட காண்பிச்சாங்க ” என்று தேவகி அவளை சமாதானம் செய்ய அவருடைய எந்த வார்த்தையும் அவள் மனதை சென்றடையவில்லை.
” அம்மா ப்ளீஸ் ” என அவள் கண்கள் கலங்க கெஞ்ச ” புரிஞ்சுக்கோ அக்ஷி… அம்மா இவ்வளவு சொல்றேன் நீ கேக்க மாட்டேங்கிற ” என்று மகள் இவ்வாறு அனைவரின் முன்பும் பிடிவாதம் பிடிக்கிறாளே என்கிற வருத்தத்தில் சொன்னார்.
ஏனெனில் சற்று முன் தான் கண்ணாயிரத்தின் ஒன்று விட்ட அக்கா ஒருவர் அக்ஷிதாவின் பெற்றோர் அவளை ஒழுங்காக கவனித்து கொள்ளததினால் சீக்கிரம் குழந்தை பிறந்தது போல் பேசியிருந்தார்.
இப்போது மகள் உடனே குழந்தையை பார்க்க பிடிவாதம் பிடித்தால் மீண்டும் அந்த பேச்சை ஆரம்பித்து விடுவார்களோ என்ற கோபமும் அத்துடன் மருத்துவர் இன்று முழுவதும் குழந்தை இன்கு பெட்டில் இருந்தால் நல்லது இல்லை என்றால் குழந்தைக்கு சுலபமாக இன்ஃபெக்சன் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி பயமுருத்தி இருக்க குழந்தைக்காகவாது ஒரு நாள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
கண்ணாயிரத்தின் சொந்தக்காரர்கள் சிலர் குழந்தையை பார்க்க வேண்டும் தூக்க வேண்டும் என்று சொல்ல குழந்தை தாயிடம் இருந்தால் நிச்சயம் அனைவரும் தூக்குவார்கள் அது குழந்தைக்கு நல்லது இல்லை என்று அனல் சொல்லியிருக்க எனவே அனைவரையும் ஒருவாரு சமாளித்து வைத்திருந்தார் தேவகி.
ஆனால் அக்ஷிதா இவ்வாறு பிடிவாதம் பிடித்தால் செவிலியர் குழந்தையை தூக்கி வந்துவிடுவார்களோ என்ற பயம் இருக்க மகளை அடக்க பார்த்தார்.
தாயும் மகளும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் அப்போதுதான் தன் தாயுடன் உள்ளே நுழைந்த நித்யா ” என்ன அக்ஷி இவ்ளோ சீக்கிரம் உனக்கு வலி வந்துருச்சுன்னு சொன்ன உடனே நான் கூட ஆம்பள பிள்ளையா இருக்குன்னு நினைச்சேன் ஆனா பாரு பொண்ணு தான் பொறந்திருக்கு உனக்கும்… ” என்று வருத்தப்படும் குரலில் தன் மகிழ்வை வெளிப்படுத்திக் கொள்ள தேவகி நித்யாவை வெறுப்பாக பார்த்தார்.
எதற்குமே அதிகம் பேசாத அக்ஷிதாவின் தந்தை மனோகன் ” என்ன குழந்தை இருந்தா என்னமா தாயும் சேயும் நலமா இருக்காங்க அதுவே நமக்கு போதும் ” என்று தன் பேத்திக்காக பேசினார்.
அக்ஷிதாவிற்கு அப்போதுதான் தனக்குப் பிறந்த குழந்தை பெண் குழந்தை என்று தெரியவந்தது. கணவனுக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்த அக்ஷிதா அவனின் சந்தோஷத்தை காண ஆசைப்பட்டாள்.
” அம்மா அவர் எங்கே ” என்று மெல்லிய குரலில் கேட்க அக்ஷிதாவின் சந்தோஷத்தை கெடுக்கும் வகையில் நித்யா ” அனல் தம்பி இங்க எப்படி இருப்பாரு… அவருக்கு அவர் குழந்தை தானே முக்கியம் இந்நேரம் குழந்தையை பார்க்க ஓடி இருப்பாரு… இப்போதைக்கு அவர்களுக்கு குழந்தை தவிர வேற எதுவும் தெரியாது ” என்று கொழுந்தனை பெருமை பேச இங்கோ அக்ஷிதாவின் மனதினுள் சுருக்கென்று வலி.
” அப்புறம் சித்தி அக்ஷிதாக்கு சாப்பாடு கொடுக்கலாமா டாக்டர் சொல்லிட்டாங்களா ” என்று தேவகியிடம் கேட்க ” இல்லம்மா இன்னும் சொல்லல ” என்றார்.
” ஓ அப்படியா ” என்றவள் ” அப்போ நீங்க கையை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் அக்ஷிதாக்கு டாக்டர் கிட்ட கேட்டு கொடுத்துக்குவோம் ” என்றாள்.
இப்போதைக்கு வேறு எந்த பேச்சையும் வளர்க்க விரும்பாத தேவகி மகளை ஒரு பார்வை பார்த்தவர் கணவன் மொபைலை வாங்கி ஒரு மெசேஜ் செய்து விட்டு சாப்பிட சென்றார்.
தேவகி நித்யாவிடம் ” அம்மாடி நித்யா இந்த மருந்து வாடைல நம்மளால எல்லாம் சாப்பிட முடியாது வாங்க வெளில இருக்க கேண்டினுக்கு இல்லாட்டி பார்க்குக்கு போயிடுவோம்… சாப்பிட்டு அப்புறம் வருவோம்… ” என்றவர் ” ஏங்க மத்தவங்க எல்லாருக்கும் டீ காபி எதுவும் கூட்டிட்டு போய் வாங்கி கொடுங்க ” என்று அங்கிருந்த டிக்கெட்களை அப்புறப்படுத்திவிட்டு சென்றார்.
விசாலாட்சி மருமகளை தனியே விட்டு செல்ல தயங்கி ” நா இருக்கேன் அண்ணி நீங்க போய்ட்டு வாங்க… மருமக கூட யாராச்சும் இருக்கணும்ல ” என்று சொல்ல ” அதெல்லாம் மயக்க மருந்து கொடுத்தது அவளுக்கு தூக்கம் தான் வரும் அண்ணி நம்ம போய்ட்டு சாப்பிட்டு வந்துர போறோம் எவ்வளவு நேரம் ஆகும் வாங்க அண்ணி போய்ட்டு வந்துரலாம் ” என்றார் தேவகி.
” அதுக்கில்ல அண்ணி ” என்று விசாலாட்சி தயங்க நித்யா அம்மாவிடம் கண் காண்பிக்க ” அண்ணி ஒங்க ரெண்டாவது மருமக மேல ஓவர் அக்கறையால இருக்கு… இங்கன இருக்க கேன்டீன் கூட வர மாட்டேங்கிறீங்க… பொண்ண பெத்ததுக்கே இப்படி தாங்குறீங்களே இதே பையனை பெத்து இருந்தா ” என்று அங்கலாய்பாக பேச அவர் பேச்சை கேட்டு அங்கிருந்த அக்ஷிதா வீட்டினர் முகம் சுளித்தனர்.
அக்ஷிதாவிற்கு அந்த வார்த்தை மிகவும் வருத்தம் கொடுக்க லேசாக கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.
தேவகி இதனை பெருசுப்படுத்த விரும்பாமல் ” வாங்க அண்ணி அவ தனியா இருந்துப்பா ” என்று அழுத்தமாக சொல்லி அழைத்து சென்றுவிட்டார்.
அவர் சென்ற சில நிமிடங்களிலே அனல் தந்திரன் அங்கே வந்துவிட்டான்.
அக்ஷி குழந்தையின் நினைவாக இருந்தாலும் மருந்தின் வீரியத்தில் லேசாக கண் அசந்து இருந்தாள்.
அனல் கதவை திறக்கும் சத்தத்தில் மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள் கணவனை கண்டவுடன் அழுகை ” அத்தான் ” என்று கலங்கிய குரலில் அழைத்தாள்.
” ஷ்ஷ்ஷ் இப்போ எதுக்குடி அழுகுற ” என்று அனல் கேட்க ” நான் பாப்பாவ பாக்கணும் ” என்றாள் அக்ஷிதா.
அவள் அருகே மெத்தையில் அமர்ந்தவன் அவள் கண்களை துடைத்து விட்டு ” பேபியை கண்டிப்பா பாக்கலாம் அழுகாத ” என்று சொல்ல ” ஏன் பாப்பாவை ரூம்மு கூட்டிட்டு வரல ” என்று பரிதவிப்புடன் கேட்க ” இந்த ரூம்ல எத்தனை பேர் இருக்காங்கன்னு பாரு… எல்லாரும் உங்கள பாக்க தான் இப்ப வந்திருக்காங்க… இப்ப பாப்பாவ கூட்டிட்டு வந்தா யாரையும் தூக்காதீங்கன்னு சொல்ல முடியாது… எல்லாரும் தூக்குறது பேபிக்கு நல்லது இல்ல… சோ கொஞ்சம் அமைதியா இரு நானே பாப்பாவ கொண்டு வந்து உன்கிட்ட காண்பிக்கிறேன் ” என்று அவளுக்கு பொறுமையாக எடுத்து சொன்னான்.
கணவனின் வார்த்தைகளில் ஓரளவுக்கு சமாதானமாக அடைந்தவள் ” பேபி எப்படி இருக்கா ” என்று கேட்க ” ஒன் செக் ” என்று தன் மொபைலை எடுத்து பிறந்த சில மணி நேரங்களிலே எடுத்திருந்த புகைப்படத்தை காட்டினான்.
அதனை தடவி பார்த்தவள் ” நான் பாப்பாவ பாக்கணும் ” என்று மீண்டும் ஆரம்பிக்க அவளை வெளிப்படையாக முறைத்த அனல் ” ஈவினிங் பார்க்கலாம் ” என்று அழுத்தமாக சொன்னான்.
” ம்ம்ம் ” என்று அமைதியாக தலையாட்ட ” இப்போ நீ தூங்கி ரெஸ்ட் எடு… ஈவினிங் நான் பாப்பாவை தூக்கிட்டு வரேன்… அத்தையை டிஸ்டர்ப் பண்ண கூடாது ” என்று அதட்டலாக சொன்னவன் தன் மாமியாருக்கு ஒரு மெசேஜ்ஜை தட்டிவிட்டு அவள் கைகளை பற்றி அழுத்திவிட்டு கிளம்பினான்.
தேவகி தான் அனலிடம் சொல்லி மகளை சமாதானம் செய்ய சொல்லியிருந்தார். அதற்காக தான் கணவரை வைத்து அந்த அறையில் இருந்த அனைவரையும் வெளியேற்றி இருந்தார்.
தேவகி மனிதர்களை கையால்வதில் மிக திறமை மிக்கவர். தன்னுடைய கருத்தை எந்த வாதமும் இன்றி ஒப்புக்கொள்ள செய்வதில் சிறந்தவர்.
அதனாலே மகளுக்கு வரும் பல இக்கட்டான சூழ்நிலைகளை தன் கைகளில் எடுத்து கொள்வார் ஏனென்றால் மகள் இந்த விடயத்தில் தந்தையை கொண்டு இருந்தாள். பெரும்பாலான விஷயத்தை அவள் புரிந்து கொள்வதே இல்லை அவ்வாறு புரிந்து கொண்டாலும் அதனை கையாள தெரிவது இல்லை மனோகன் மாதிரி. கணவன், மகள் இருவருக்கும் சேர்த்தே சமாளிப்பார் தேவகி.
அன்றைய மாலை நேரத்தில் தான் தேவகியின் தங்கை ராதா தேஜாவின் தாய் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
” வாடி உள்ள வா… தேஜா எப்படி இருக்கா?… எங்க உன் வீட்டுக்காரு ” என்று தேவகி கேட்க ” ம்ம்ம் நல்லா இருக்கா அக்கா… அவர் இப்போ தான் வேலை முடிச்சு வந்தாரு… தேஜாவுக்கு துணைக்கு வச்சுட்டு வந்தேன் ” என்றவர் ” எப்படி டா இருக்க அக்ஷி ” என்றார்.
” நல்ல இருக்கேன் சித்தி ” என்று சொன்னவள் கையில் தேவகி ஜூசை திணிக்க ” ஆமா குழந்தை எங்க ” என்று தேவகியிடம் கேட்க ” ரெண்டு வாரம் முன்னாடியே பொறந்துட்டால அதான் இன்குபெட்ல வச்சிருக்காங்க இன்னைக்கு மட்டும் இதோ இப்போ கொண்டு வந்துருவாங்க ” என்று சொல்ல ” ம்ம்ம் நல்லது தான் ” என்றார் ராதா.
நித்யா சும்மா இல்லாமல் ” ஆமா சித்தி தேஜா வரலையா ” என்று கேட்க ” அவ இந்த மாதிரி சமயத்துல எப்படிமா வர முடியும் ” என்று கேட்க ” ஏன் வந்து பார்த்துட்டு போறதுல என்ன வர போகுது…. அதோட அக்ஷி உங்க அக்கா பொண்ணா இருக்கலாம் முன்ன வேணா ரெண்டு பேரும் அக்கா தங்கச்சியா இருக்கலாம் இப்போ அப்படியா ” என்று கேட்க ” இப்போ மட்டும் என்னமா ரெண்டு பேரும் நாத்தனராவ மாறிட்டாங்க ” என்று கிண்டலாக கேட்டார் ராதா.
அவருக்கு தேவகி போல் பொறுமையாக பேச தெரியாது எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லி விடுவார்.
” அதுக்கும் மேல சித்தி… ரெண்டு பேரும் ஓரகத்திங்க… தேஜா ஒரு தங்கச்சியா வரலாட்டியும் விஷ்ணுவோட பொண்டாட்டியா அனல்லோட பொண்டாட்டியா வந்து தான் ஆகணும்…. ” என்று சொல்ல ” அது என்னவோ சரிதான்… இப்போ என் பொண்ணுலாம் எதுக்கு வந்து கிடக்குற… நாளைக்கு ஒரு சொல்லு வந்துர கூடாதுனு தான்… ஆனா பாருங்க நாங்க தான் சொந்தம் சொந்தம்னு வந்து நிக்கிறோம் போல ” என்று பத்மாவதி நித்யாவிற்கு ஒத்து ஊதுவது போல் ஊசி ஏற்றினார்.
ராதா ஏதோ பேச போக சட்டென்று அவர் கையை பிடித்த தேவகி ” வா நாம போய் குழந்தைக்கு கொஞ்சம் பொருள் வாங்கணும் வாங்கிட்டு வருவோம் ” என்று தங்கையை இழுத்து சென்றார்.
காரிடாரில் நடந்துக் கொண்டே ” எப்படி பேசுறாங்க பாரு ” என்று ராதா கோபமாக சொல்ல ” பொறுமையா போடி கூட கூட பேசுனா பிரச்சனை தான் வரும் ” என்று தேவகி சொல்ல ” எல்லாத்துக்கும் உன்ன சொல்லணும் ஊர்லே இல்லாத குடும்பம் மாதிரி தேடி பிடிச்சு பொண்ண கொடுத்திருக்க இதுல இடையில புகுந்து என்ன வேற மாட்டிவிட்ட ” என்று கடுப்பாக சொல்ல ” அதெல்லாம் ஒண்ணுமில்ல நம்ம சமாளிப்போம் வா ” என்று தங்கையை கேன்டீன் இழுத்து சென்று கேட்டதை வாங்கி கொடுத்து சமாதானம் செய்து அழைத்து வந்தார்.
அது எல்லாம் அவர் அந்த அறைக்குள் நுழையும் வரை தான் இருந்தது மறுபடியும் நித்யாவின் பேச்சுக்கள் அவரை கொதிநிலைக்கு அழைத்து சென்றது.
நித்யா ” என்ன சொல்லுங்க ஆம்பிள பிள்ளைக்கு இருக்க மவுசு பொண்ணுக்கு இருக்காது தான்… எனக்கு முதல ஆம்பள புள்ள பொறக்கலனு எங்க வீட்டுல வருத்தம்… இதோ இப்போ கூட ஏதோ பேருக்குனு சிரிச்சுட்டு இருக்காங்க இனி உனக்கு ரெண்டாவதா பொறந்தா தான் அக்ஷிதா… ” என்று சொல்ல அவள் முகம் சுருங்கி அமர்ந்திருந்தாள்.
” எப்படியும் அந்த தேஜா பேசுற வாய்க்கு பொம்பள புள்ள தான் பொறக்கும் அதுவும் அவ வீட்டுல மாதிரி ஒத்த புள்ளையா நின்னா கூட ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை ” என்று சொல்ல ” ஒரு புள்ளையா இருக்கதுனால தான் என் பொண்ணு இன்னும் என் வீட்டுல இளவரசியா இருக்காமா நித்யா ” என்று சொல்ல அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்றாலும் ” ஹாஹா நானும் அதேதான் சித்தி சொன்னேன் பாருங்க நீங்க தேஜாவை ஒன்னுக்கு ஆறு மாசம் கூட சீராட்ட முடியும் அந்த கொடுப்பினை அக்ஷிக்கு இருக்காதுனு சொன்னேன்… அவங்க வீட்டுல அவளுக்கு தம்பி தங்கச்சி இருக்காங்களே அவங்க படிப்ப பார்க்க முடியுமா இல்லை இந்த குழந்தையை வளர்க்க முடியுமா ” என்று நக்கலாக கேட்க தேவகி கோபத்தில் பல்லை கடித்தார்.
” அதை பத்தி நீ ஏன் மா கவலை படுற… அக்ஷி என்ன தான் இருந்தாலும் எனக்கு பொண்ணு தான் அவங்க அம்மா வீட்டுல பார்த்துக்க முடியலையாட்டி நா பார்த்துட்டு போறேன்… நீ அதை பத்தி வறுத்த படாத ” என்றவர் அக்ஷியிடம் அமர்ந்து குழந்தையை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.