“சீரியஸா இருந்து என்னப்பா செய்யட்டும்?” என வித்யா கேட்க
“அம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்றவன்,
அவினாஷிடம்,” உக்கார் டா பேசணும் “என்றான் அழுத்தமாக
“என்னத்த பேசலாம்?, இனிமே பேசறதுக்கு என்ன இருக்கு ?”என்று கடுப்படித்தவனை முதுகின் மேல் ஒன்று போட்டு,” அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா நீ?” என கேட்கவும்
” அதான் சின்ன பிள்ளைன்னு சொல்லிட்டீங்களே,” என்றான் இன்னும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே.
அழகினியனின் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை தென்படவே,
வித்யா வேகமாக அவன் அருகில் வந்தவர் ,”எப்பா பொண்ணு வீட்டுல அப்ப பேசிடலாமா?!” என்று ஆர்வத்துடன் கேட்க அவரை நிமிர்ந்து முறைத்தான்.
” இல்ல தம்பி, சமாதானமா பேசக்கூப்டியா,சரி பண்ணதான் பேசி முடிச்சுட சொல்றியோ நினைச்சேன்.”என்று அதற்குமே அவர் பதில் சொல்ல
” ஏன் வேற பொண்ணே இல்லையா இந்த ஊர் உலகத்துல, அந்த ஒரு பொண்ணு தானா என்ன?” என்று கேட்கவுமே அவிநாஷின் முகம் வாடிப்போனது.
சட்டென்று மீண்டும் எழுந்தவன்,”எனக்கு அந்த பொண்ணுன்னா ஓகே. மத்தபடி வேற பொண்ணு பார்க்கறதா இருந்தா கல்யாணம் வேண்டாம் இப்போதைக்கு” என்றான் நேரடியாக .
“என்ன சார் கண்டவுடன் காதலா ?!”என்று நக்கலாய் அழகினியன் கேட்கவும்
“அண்ணா ப்ளீஸ் ண்ணா “என்றான் சற்று முகவாட்டத்துடன்.
“என்ன ப்ளீஸ், என்ன ப்ளீஸ் னு கேட்கிறேன் பதில் சொல்லுடா” என்ற அதட்ட
அவினாஷ் ஒரு வாரத்திற்கு பிறகு வாயைத் திறந்தான்.
“அந்த பொண்ணு கிட்ட பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன், இரண்டாவது அந்த பொண்ணு ரொம்ப படிக்க ஆசைப்படுது, வேற மாப்பிள்ளை பார்த்து அவங்க கட்டி வச்சா கண்டிப்பா அவளால படிக்க முடியாது. நான் நிறைய நம்பிக்கை தந்துட்டேன் அந்த அஞ்சு நிமிஷத்துல, அப்பா கண்டிப்பா படிக்க வைக்க மாட்டார்னு அதுக்கு அவளுக்கு அவ்வளவு கலக்கம்.அதனாலதான் சொல்றேன்” என்றான் கண்களில் பரிதவிப்புடன்.
“படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ற, அப்போ அந்த பொண்ணு கூட வாழ இஷ்டம் இல்ல” என்று வேண்டுமென்றே அழகினியன் கேட்க
அவினாஷ் வேகமாக,” அது எப்படி வாழ இஷ்டம் இல்லாமல் இருக்கும். எல்லாம் புடிச்சு தான் சொன்னேன்”என்று சொல்லிவிட மூவரின் முகத்திலும் புன்னகை முகிழ்த்தது.
” அப்புறம் எதுக்கு சார் எங்க அண்ணா சொன்னா சரிதான்னு வந்தீங்க வெளியில?” என்று கேட்கவும்
“என்ன இருந்தாலும் பொண்ணு தானே பார்க்க போனோம். அப்போ அவங்க நமக்கு மூன்றாவது மனுஷங்க தானே!, அவங்க முன்னாடி என் அண்ணனை எப்படி நான் விட்டு தருவேன்? அண்ணன் சொன்னா நான் கேட்பேன், அப்படி எல்லாம் முகத்தில் அடிச்ச மாதிரி உங்களை அங்க விட்டுத்தர சொல்றீங்களா?” என்று பட்டென்று பதில் தர
அழகினியன் அமைதியாக,”சரி சாப்பிட்டு ஆபீஸ் போயிட்டு மதியத்துக்கு மேல் பர்மிஷன் போட்டுட்டு வா பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என்றான்.
“நெஜமாவா…?!” என்று ஆவலுடன் வினவ
“நிஜமா தான். “
“அப்போ லீவ் போட்டுடவா…?”
“டேய் !”என்றதும்,” இல்ல அந்த ஊருக்கு போக அன்னைக்கே ரொம்ப நேரம் ஆச்சு. மதியத்துக்கு மேலன்னா போகவே ஈவ்னிங் ஆகிடும் அப்புறம் நைட் ஆகிட்டுனு சீக்கிரம் வந்திடுவோம்.” என்றான் இழுவையாக
இனியனுக்கு அத்தனை சிரிப்பு. நால்வருமாய் செல்வோம் என்று முடிவு செய்து அவரவர் அறைக்குச் சென்றனர்.
ஆனாலும் வித்யாவிற்கு மனதில் அத்தனை குழப்பம். அதை தனஞ்செனயனிடம் பகிர்ந்தும் விட்டார்.
“ஏங்க, அழகு அன்னைக்கு அவங்களை அத்தனை பேசிட்டான். மறுபடியும் போய் உங்கப் பொண்ணை கட்டி வைங்கனு கேட்டா ஒத்துப்பாங்களா?” என்றார் தயக்கமாக.
“மாட்டாங்க தான். அதுக்காக சின்னவன் ஆசையை விட்டுட முடியுமா…? அழகு இன்னைக்கு இதைப் பத்தி பேசலைனா நானே பேசியிருப்பேன். நம்ம அவிக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு வித்தி.” என்றவர்,
“இருந்தாலும் பெரிய பொண்ணு பாவமில்ல” என்றார்.
“ஆமாங்க. இப்படியுமா இருப்பாங்க மனுசங்க. நான் மட்டும் அவங்களைப் பார்த்தேன் பளார் பளார் னு நாலு அப்பு விட்டுடுவேன்” என்றார் ஆத்திரமாக
“விடும்மா என்னைக்காவது மாட்டாமல் போறாங்க. இருந்தாலும் இவங்களும் இப்படியே விட்ருக்க வேண்டாம்” என்றபடி தோள்ப்பையை மாட்டிக் கொண்டு மனைவியிடமிருந்து விடைபெற்றார் கடைக்குச் சென்று வருகிறேன் என்று .
**********
அறைக்குள் இருந்த இனியன், “டெடி என்ன செய்றீங்க. ஸ்கூல் போயிட்டு வந்தாச்சாடா.?”என்று வினவ
“வந்துத்தேன் டாதி. எனக்கு போர் போரா அதிக்குது. நீங்க எப்ப வதீங்க?” என்று வினவினாள் அந்தக் குட்டிவாண்டு.
“டாடி ரெண்டு நாள்ல வந்திடுவேனாம். பாப்பா சமத்தா இருப்பீங்களாம்.” என்று சொல்ல
“பாப்பா சமத்து பாப்பா. டாதி சமத்து டாதி.” என்று காணொளியில் தெரிந்த அவன் கன்னத்தை கிள்ளி ஒற்றிக் கொண்டது குழந்தை.
“இனியா அங்கிருந்து எப்போ கிளம்புற?” என்ற குரலில் திரும்பியவன்,” நாளைக்கு ஃப்ளைட் அத்தை, வந்திடுவேன்.”என்றான்.
“கல்யாணம் பண்ணிக்காம குழந்தையானு கேட்டா என்ன சொல்வீங்க?”என்றான் பட்டென்று.
“அழகு…!”
“அழகுதான், அந்த அழகுதான் ஆணவத்துல ஆடவச்சிடுச்சு. ப்ப்ச் போங்க “என்றான் ஆற்றாமையாக.
“விடுடா தம்பி.”என்று மகனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் இதற்குமேல் இவனிடத்தில் பேச முடியாதென்று.
அழகினியனுக்கு தன்னை நினைத்தே அத்தனை கோபம் ,வருத்தம்.அது பெற்றவர்களிடமும் நிரம்பவே இருந்தது. ஏன் தன்னை இவர்கள் கண்டிக்கவில்லை, தண்டிக்கவில்லை என்ற கோபம், வருத்தம் அவனின் குண இயல்பையே மாற்றியிருந்தது.
அழகினியன் பெயருக்கேற்றார் போல அத்தனை அழகு நிரம்பிக் கிடந்தது அவனிடத்தில். அதுவே அவனுக்கு ஆபத்தாகவும் முடிந்தது. நன்றாக படித்து கேம்பஸிலேயே நேர்காணலில் வெற்றி பெற்றவன் சிலிக்கான் வேலியில் தனக்கென ஒரு வேலையையும் தேடிக் கொண்டு தம்பியையும் வரவழைத்துக் கொண்டான்.
அதில் பெற்றவர்களுக்கு ஏகபெருமை. இரு பையன்களும் பொறுப்பாய் இருக்க இதுவல்லவோ குடும்பம் என்று சொந்தங்கள் சிலாகிக்கும் அளவிற்கு இருந்தனர்.
தனஞ்செயனுக்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேனேஜர் பணி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் ஓய்வு பெற்றுவிட, வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்து கொண்டார். அதில் அழகினியன் அவினாஷ் இருவருக்குமே வருத்தம்.
“அம்மா ரிட்டயர்ட் ஆகற வரைக்கும்டா தம்பிகளா, அப்புறம் நீங்க சொல்ற மாதிரியே இருப்பேன்.” என்று சமாதானம் செய்து வைக்க அமைதி காத்தனர் அவர்கள்.
வித்யா கலெக்டர் அலுவலகத்தில் க்ளெர்க் வேலை பார்க்கிறார். இன்னும் ஐந்து வருடம் பணி இருக்கிறது அவருக்கு.
இருவருமே கலகலப்பான பேர்வழிகள். அவினாஷும் அவர்களை கொண்டு பிறந்திருக்க அழகினியனோ சற்று அமைதியானவன். அவ்வளவு எளிதில் யாரிடமும் பேசிவிட மாட்டான் குடும்பத்தினரை தவிர.
**************
“ம்மா, இன்னும் கொஞ்சம் பூ வாங்கிப்போமா?” அவினாஷ் முல்லைப்பூவை பார்த்தபடி கேட்க
“அடேய்! இவ்வளவு பூ இருக்கே போதாதா வேணும்னா ரெண்டு கூடை வாங்கிப்போமா இல்ல இதோ கல்யாணத்திற்காக கட்டி இருக்காங்களாம் ரோஜாமாலை வாங்கிட்டு போய் கல்யாணத்தையே முடிச்சுடுவோமா?” என்று வித்யா கேட்கவும்,” சரி சரி போதும்.” என்றான் அமைதியாக
“அண்ணா, மேரேஜுக்குள்ள டெடிக்கு லீவ் விட்டுடுவாங்க தானே…?! டெடிக்கு என்ன ட்ரெஸ் எடுக்கலாம். பட்டுப்பாவாடை தான் எடுக்கவே இல்லை. மேரேஜ்ல எடுப்போம். ம்மா உங்களுக்கு, பாலாக்கு, அப்புறம் டெடிக்கு ஒரே கலர் ட்ரெஸ் எப்படி?” என்று குதூகலமாக பேசிக் கொண்டு வந்தான் அவினாஷ்.
மனதின் மகிழ்ச்சி எல்லாம் வார்த்தைகளாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது அவனுக்கு.
“நீ இப்படி குதிக்கிற அந்த பொண்ணு உன்னைப் பார்த்ததும், யார் மேன் நீ ன்னு கேட்கப் போகுது” என்றார் தனஞ்செயன்
“ப்பா… மீ பாவம் கிண்டல் பண்ணக் கூடாது.” என்று பாவமாய் சொல்ல, அழகினியன் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான்.