சித்ரா,’ஓவியமலருக்குத் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் இந்நேரம் அழகினியனுக்கும் மலருக்கும் திருமணம் முடிந்திருக்கும்’ என்று சொல்ல காந்தவள்ளி அவளை அதட்டினார்.
“தேவையில்லாத பேச்சு பேசாம ஆகற வேலையைப் பாரு சித்ரா. “என்றவர்,” அந்த தம்பிக்கு ஒரு பொம்பளைப்பிள்ளை இருக்குது.”என்றார்.
“ஆமாம்மா, அவங்க கூட சொன்னாங்க. பேர் ஆத்யாவாம். ஆனா டெடி டெடினு தான் சொல்றாங்க. தினமும் ஒரு தடவைனாச்சும் அந்த பாப்பாவை பத்தி பேசாம இருக்க மாட்டாங்க. எனக்கே அந்த பாப்பாவை பாக்கத் தோணிடுச்சு. பாவம் அம்மா இல்லையாம். அழகினியன் மாமாவே தனியா வளர்க்கிறாங்களாம்” என்றாள் கூடுதல் தகவலாக.
“ம்ம்ம்,சம்மந்தி கூட சொன்னாங்க. நான் வளர்த்திடுறேன்டான்னாலும் கேட்க மாட்டேங்கிறான்னு சங்கடமா சொன்னாங்க”என்றார் காந்தவள்ளியும்.
“வேற ஒரு கல்யாணம் கூட பண்ணி வச்சிருக்கலாம். சின்னப்பையனா தான் இருக்காப்டி. பத்திரிக்கையில கூட அந்த பொண்ணு பேரை போடக் காணோம். என்ன ஏதுனு தெரியல.”
“ஓஓஓ ! சரி எங்க அதை எல்லாம் நான் கேட்க?, நம்ம கதையே இங்க முடிவுரை காணாம கெடக்கு. இதுல அடுத்தவங்க சங்கதியை என்னத்த பேச. வளவன் விசாரிச்ச வரைக்கும் மாப்ள தம்பியை நல்லா தான் சொல்றாங்க, அக்கம் பக்கத்தில் குடும்பம் எல்லாம் நல்ல குடும்பம்’னு தான் சொல்லி இருக்காங்க. அதை நம்பி தான் இவ்வளவு ஏற்பாடும். இந்த வரன் கொண்டு வந்த உங்க காரைக்குடி மாமாவும் நம்பிக்கையா தான் சொல்லி இருக்காரு என்ற காந்தவள்ளி மலரு செத்த போய் படு. அப்பறமா ஏதாவது செஞ்சு தரேன்.” என்று கணவனைப் பார்க்கப் போய்விட்டார்.
ஓவியமலர் பார்வையாளராக மட்டும் இருந்து விட்டு, எழுந்து சென்றவள்,’ இன்னும் ஒரு வாரம் பாப்பா, அப்புறம் நாம தனியா போயிடலாம்.’ என்று குழந்தையிடம் பேசியபடி முழுவதும் படுக்காமல் தலையணையை முதுகிற்கு வைத்து சாய்ந்து கொண்டாள்.
கண்ணில் நிழலாடியது அவளது திருமணம். அவ்வீட்டின் முதல் திருமணம் ஓவியாவுடையது தான். வந்த முதல் மாப்பிள்ளையே தகைந்ததில் அத்தனை மகிழ்ச்சி மணியரசு குடும்பத்தினருக்கு.
நகைகள் எல்லாம் சற்று அதிகமாகவே எடுத்திருப்பதாக தோன்றியது ஓவியாவிற்கு.
“ஏன்ப்பா எதுக்கு இவ்வளவு நகை…?”என்று மனம் தாளாமல் கேட்டுவிட
“என்னம்மா நீயி, எல்லா புள்ளைகளும் இன்னும் ரெண்டு பவுனு சேத்து கேட்கும். நீ என்ன டான்னா எதுக்கு இம்புட்டுனு கேட்கிற… ஏற்கனவே சேர்த்து வச்சது பத்து பவுனு தான்ம்மா. அதோட சேத்து பத்து அவ்வளவு தான்.” என்றார் மணியரசு.
“பத்து பவுனு போட்டா பத்தாதாப்பா. எவ்வளவு செலவு?” என்று சங்கடப்பட்டவளிடம்
“சம்மந்தி வீட்டில் பார்த்த தான அத்தனை பேரும் கழுத்தை நெறைச்சுகிட்டு வந்திருந்தாங்க. அங்கன மதிப்பா நீயும் நிக்க வேண்டாமா… என்னால முடியுது செய்றேன்மா” என்றவர் மறந்தும் மாப்பிள்ளை வீட்டில் போடச் சொன்ன 25 பவுனைப் பற்றி சொல்லவில்லை. திருமணம் முடிந்த பிறகு தான் ஓவியாவிற்கு தெரிய வந்தது விஷயம்.
மாப்பிள்ளைக்கு வண்டி, சீர்வரிசை, தனியே அவருக்கு மூன்று பவுன் செயின் என்று வரிசை கட்டி நின்றதில் மணியரசுவின் கடனும் எகிறித்தான் நின்றது. விளைவு சித்ராவின் படிப்பிற்கு தடைபோட்டு விட்டார் மனிதர்.
மண்டபம் நிறைக்க மக்கள், கண் நிறைய செய்திருந்தாலும் மாப்பிள்ளையின் அம்மா தன் வீட்டாரோடு சீர் பற்றி பேசுகையில் பித்தளை பாத்திரங்கள் குறைவாக இருக்கிறது என்று அலுத்துக் கொண்டதும் நினைவில் வந்து போனது.
கணவனோடு கலர் கலர் கனவுகளோடு வாழச் சென்றவளுக்கு வாழ்வு நன்றாகவும் போனது. விருந்து என்ற பெயரில் திருவிழா போல நடத்தி அமர்க்களம் செய்திருந்தனர். எல்லாவற்றிலும் மாப்பிள்ளை அத்தனை பொறுமை நிதானமாக இருந்தது தான் ஆச்சரியம். ஒரு பரபரப்பு இருந்தது. அது அப்போது பரபரப்பாய் தெரிந்தாலும் அவன் பதற்றத்துடன் இருந்திருக்கிறான் என்பது இப்போது தெள்ளத் தெளிவாக ஓவியாவிற்கு விளங்கியது.
“அக்கா விழுந்துடாத!” என்ற சத்தத்தில் சுயம் வந்தவள் ,சட்டென்று சுதாரித்து அமர்ந்தாள்.
“எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா? ஓரத்துல உட்கார்ந்து பயங்காட்டிக்கிட்டு” என்ற தங்கையை பாவமாக பார்த்து விட்டு,” தூக்கம் கலக்கம் சித்து.” என்றாள்.
“சரி சரி தள்ளி உட்காரு !”என்றவள் குறுகுறுவென்று அவளையேப் பார்த்தாள்.
“என்னடி ஏதோ விநோத ஜந்துவை பார்க்கிற மாதிரி பார்க்கிற?” என்றதும்,”ஏன்க்கா வயித்துக்குள்ள இருக்கிற குழந்தை முண்டுமாமே நெசமாவா?!” என்று சித்ரா கேட்டுவைக்க
“இதுவரைக்கும் அந்த மாதிரி எதுவும் இல்லையே… நிஜமாவே முண்டுமா. ?அப்ப எனக்கு ஏன் எதுவும் செய்யலை. “என்றவள் பதற்றமாய் தன் அம்மாவை அழைத்தாள்.
“என்னடி எதுக்கு கத்துற? எங்கேயாவது வலிக்குதா?”என்று அவரும் தன் பங்கிற்கு பதற
“ம்மா பாப்பா வயித்துக்குள்ள முட்டுமாம். சித்து சொல்றா ஆனா எனக்கு எதுவுமே தெரியலை. ஹாஸ்பிடல்ல காட்டுவோமா. பாப்பா இருக்கு தானே. ஸ்கேன் பார்த்தம்ல அதுல டாக்டர் காட்டினாங்களே” என வியர்த்து வழிந்தபடி கேட்க
காந்தவள்ளிக்கு அச்சோவென்றானது.
“ஏன் பாப்பா என்னை பதட்டத்துலையே வச்சிருக்க நீ?” என்றவர்,” ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும்டி. ஒரு சில குழந்தைங்க ஏழு மாசத்துல தான் உருளும். சாப்பிடாம இருந்தா அந்த மாதிரி இருக்கும். புள்ள முழிச்சிருந்தா அப்படி செய்யும் “என தனக்கு தெரிந்த வகையில் மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
“அப்ப சரிம்மா !”என்ற ஓவியா,” நீ போ!” என்று சித்ராவை மட்டும் தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.
காந்தவள்ளி மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.
“சித்து கதவை சாத்திட்டு வாயேன்.” என்றவள், தனது பெட்டியை மெதுவாய் இழுத்து வைத்து திறந்தாள்.
“என்னக்கா பார்க்கிற…?
“இருடி “என்றவளோ நகைப்பெட்டியை வெளியே எடுத்தாள்.
“ஓஓஓ கல்யாணத்துக்கு போட நகைலாம் எடுத்து வைக்கிறியா. எல்லாம் இங்கேயா இருக்கு, நீ உன் மாமியார் வீட்டுல வச்சிருப்பன்னு நினைச்சேன்.” என்றவள் ஒரு அட்டிகையை எடுத்து வருடிக் கொண்டிருந்தாள்.
ஓவியா மெலிதான புன்னகையுடன், “அது உனக்கு குடுக்க தான்… ரொம்ப பிடிச்சதுன்னு சொன்னியே!” என்று சொல்ல
“ஆத்தி உன் மாமியா என்னை அம்மியில் வச்சு அரைக்கவா… விருந்தன்னைக்கு போட்டதுக்கே தாம்தூம்னு குதிச்சது. எனக்கு வேணாம்பா “என்று பெட்டிக்குள்ளேயே சட்டென்று போட்டுவிட்டாள்.
“அது கெடக்குது. இது ஒனக்குன்னு நான் அப்பவே தீர்மானிச்சு எடுத்து வச்சுட்டேன். அப்பா நகை போடுவாங்க தான். ஆனா நானும் தரணுமில்ல. இதைப் போட்டுக்க. “என்றாள்.
“அம்மா திட்டும்கா” என்று அப்போதும் சித்ராவிற்கு பயம் மட்டுமே வேண்டாமென மறுக்க காரணமாய் இருந்தது.
“நான் சொல்லிப்பேன். நீ வச்சுக்க. “என்றவள்,” என்னால தானே உன் படிப்பு கெட்டுப் போச்சு.” என்றாள் ஆதங்கமாக.
மனதிலோ,’ கல்யாணத்திற்கு செலவு செஞ்ச பணத்தில் நீ படிச்சிருந்தா படிப்பாவது மிஞ்சி இருக்கும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.
************
“ம்மா மேரேஜ் இன்விடேஷன் எல்லாம் தந்து முடிஞ்சதுல்ல. அப்புறம் ஏன் அப்பா அலையறாங்க?” என்று திட்டியபடி நின்றான் அழகினியன்.
“பத்திரிக்கை தர இல்ல தம்பி. வேறொரு விஷயமா வெளியே போயிருக்காங்க” என்றார் வித்யா தயக்கத்துடன்.
“வேற விஷயம்னா நகை எதுவும் எடுக்கணுமா. துணி எதுவுமா… வேற எதுக்கு…பணம் பத்தலையா நான் தான் தர்றேன்னு சொன்னேனே… ம்மா என்ன சொல்லுங்க?” என்று எரிச்சலுடன் கேட்டபடி அமர
“அப்பா வந்திடட்டுமே தம்பி !”என்று பயந்தவருக்கு,’ கடவுளே இன்னைக்கு ராத்திரி நான் தாண்டிட்டேன் ஜெயிச்சுட்டேன். விஷயத்தைக் கேட்டா என்ன செய்வானோ… எதுவா இருந்தாலும் சமாளிக்கணும்… ‘அவருக்கு ஆயிரம் வேண்டுதல் மனதில்.
“நீங்க இன்னும் விஷயத்துக்கு வரலை “என்றான் அவன் அமர்த்தலாக.
‘பெக்கும்போது நல்லாத்தானே பெத்தேன். எடையில கல்லைக்கண்டா முழுங்கிட்டானோ… பேசுறது எல்லாம் கரடு மொரடா தான்… பிள்ளை கிட்ட பேசுற மாதிரியா இருக்கு, ஏதோ கணக்கு வாத்தி கிட்ட மாட்டுன மாதிரியே இருக்கு.’என்று இன்னும் மனதின் குரலில் கருத்து பரிமாற்றம் நடத்த அழகினியனோ பார்வை மாறாமல் பார்த்திருந்தான் அவரை. அதற்குள் டெடி விழித்துக் கொண்டு சிணுங்க வித்யா தப்பித்தோம் பிழைத்தோம் என குழந்தையிடம் ஓடினார்.
“என்னவோ செய்றீங்க… ஏதாவது மாத்தி பண்ணிங்க அப்புறம் இருக்கு “என்று சத்தமாய் கூறியவன் எழுந்து சென்றான்.
************
“பொண்ணை தரமாட்டேன்னு சொன்னா நீங்க சரின்னு மண்டையை ஆட்டிக்கிட்டு வந்திருக்கீங்க” என்று மதுரையில் ஓவியாவின் மாமனார் வீட்டில் களேபரம் நடந்து கொண்டிருந்தது.
“தம்பி வேற ஊருக்காரன் வந்து நிச்சயம் பண்ணிப்பிட்டான் பெறவு நாம என்னத்தன்னு அங்க நிக்க…?”என்று ஓவியாவின் மாமியார் சொல்ல
“என்ன மயனி… கொஞ்சங்கூட மாமியான்ற கூறில்லாம பேசிட்டு இருக்கீக. ஒம்ம மருமவ அங்கனத்தான இருக்கா. இழுத்துப் போட்டு நாலு நவத்து நவத்தி போட்டு பொண்ணை தூக்கறதை விட்டுட்டு” என்று குதிக்க
‘கட்டையில போற வயசுல கல்யாணம் பண்ணி இந்தாளு என்ன செய்ய போறான். ஸ்ஸ்ஸப்பா மாசமா இருக்கறவளை நவத்தனுமாம் இவனுக்கு வாய்ல புத்து வைக்க’ இன்னும் கற்பகம் மைன்ட் வாய்ஸில் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“அவளுக்கு கொஞ்சங்கூட பயமே இல்ல கொழுந்தனாரே… குதிராட்டம் நிக்குதான்றேன். ஒன்னையும் வாழ விட மாட்டேன்டினு சொல்றேன் அசராம நிக்குதா. செரித்தான் கழுதையன்னு அவளை இழுத்துட்டு வந்துரலாம் அவனுக தன்னால வழிக்கு வருவானுகன்னு பார்த்தா ஒம்மவனை வந்து கூப்பிட சொல்லுங்கிறா” என்றார் அவர்.
“ஓஓஓ அந்தளவுக்கு ஆகிப் போச்சா…?எல்லாம் இங்கருக்கறவனை சொல்லணும் ஓடுனவேன் அவளை அங்க விடாம இங்கனயே விட்டுப் போயிருந்தா தெரிஞ்சிருக்கும் சங்கதி. மிதிக்கிற மிதியில தன்னால சின்னவளை எனக்கு கட்டி தந்திருக்க மாட்டாவ… இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு… மணமேடைக்குப் போவமின்ன அவளை தூக்குறேன்” என சபதமிட்டவரை எரிச்சலாய் பார்த்திருந்தாள் கற்பகம்.
‘எவனாச்சும் வாயைத் தெறந்து நீ செய்யிறது தப்புனு சொல்றாங்களா பாரு… பூராப்பேத்துக்கும் வெள்ளாட்டங்கறியில வெசத்தை வச்சுப்பிடனும்…’என்று நினைக்கத்தான் அவளால் முடிந்தது.
வயதிற்கு வந்த தன் மகளை பார்த்தாள் கற்பகம்.
‘இவளுக்கு எந்த கெழடுகட்டையையும் பார்க்காம இருந்தா சரி ‘என்று எண்ணியபடி கணவனைப் பார்க்க ,அவனோ எவனுக்கு வந்த விருந்தோ என்பது போல மாட்டிற்கு கழுநீரை கலக்கிக் கொண்டிருந்தான்.
‘வாய் பேசுறதுக்கு கூட வவிசான ஆளைக் கெட்டியிருக்கணும். இல்ல வாரிசை பெத்திருக்கணும் போல’ என்று முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்கு சென்றாள்.
இங்கே சுந்தரேசனோடு சித்ராவைத் தூக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
“பொண்ணழைச்சுட்டு போவையிலயே தூக்குறோம் அவளை “என்று முடிவெடுத்துக் கொண்டனர்.
********
இதோ அதோவென அவினாஷ் சித்ரபாலா திருமணநாளும் வந்து விட்டது.
பெண்வீட்டாரை அழைத்துக் கொண்டு சென்னை வந்துவிட்டனர் இரண்டு நாட்கள் முன்பே.
……தொடரும்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.