செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 48_2
இரயில் புறப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பச்சைக் கொடி அசைக்கப்பட, பம்பாய் தாதரிலிருந்து மதராஸ்-சிற்கு செல்லும் இரயில் மெல்லப் புறப்படத் தயாரானது.
இரயில் மெல்லக் கிளம்ப ஆரம்பிக்கவும், துளசி, அவன் சுவாசம்.. அவளைக் காணும் ஆவலில் இரயில் நிலையம் வந்து சேர்ந்தான்.
கிளம்பிய இரயிலோ… வழியை அடைத்து நின்றிருந்த கூட்டமோ மூர்த்தியை நிறுத்துவதாக தெரியவில்லை.
கழுகைப் போல் இலக்கை மட்டுமே நோக்கி.. அதைக் குறிவைத்துப் பிடிக்க, கடந்த ஒரு வருடம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தது.
இரயில் பெட்டியின் கதவுகள் திறந்திருக்க, அந்த வழி மட்டுமே அவன் இலக்காய் இருக்க, அந்த திறந்திருந்த கதவின் வழி, நடைபாதை முடியும் தருவாயில், வேகம் பிடித்திருந்த இரயிலில் ஏறினான்.
அவன் மிடுக்கான தோற்றம் அங்கு நின்றிருந்த முதியவரைக் கவர்ந்திருக்க வேண்டும். இன்னும் அதே மிடுக்கான, வாட்டசாட்டமான கம்பீர தோற்றம் தான் மூர்த்தியிடம், புதிதாய் பார்ப்பவர்களுக்கு.
வெள்ளை வேட்டி சட்டையும், கையிலிருந்த காப்பும், தீர்க்கமான பார்வையும், அழுத்தமான உதடும், முறுக்கி விட்ட மீசையும், இன்றும் அவனைத் தனியே நிறுத்திக் காட்டியது.
ஆனால் அவனை அறிந்தவர்களுக்குத் தெரியும்.. அவன் நிறம் மங்கி, மெலிந்திருக்கிறான் என்று. அவளுக்கு மட்டும் தெரியும், உடலோடு உள்ளமும் களைத்து போயிருக்கிறான் என்று. அவளுக்கு மட்டும் தான் அவனை உள்ளும் புறமும் தெரியும்.
அவனுக்காக, அவள் எதையும் செய்வாள். அவன் துளசிக்காக, அவனும் எந்த எல்லைக்கும் செல்வான். அவளுக்காகத் தான் அவன் கர்வம் கலைந்த பின்னும், அவன் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டும் மீசையை இன்னும் அதே போல் வைத்திருக்கிறான்.
“உங்க மீசை அழகா.. இல்ல நீங்க அத தூக்கிவிடுற ஸ்டைல் அழகான்னே தெரியலையே..? இன்னும் ஒரு தரம் செய்யுங்களேன்..”
ஆசை ஆசியாய் அவன் மனைவி அவனிடம் கேட்ட நாட்கள் அவை. முதன் முதலாக அவன் புகைப்படத்திற்கு தானே அவள் விரல் தீண்டும் பாக்கியம் கிடைத்தது.
நினைவில் வந்தபின்னும் இடக்கை ஆட்காட்டி விரல் மீசையை மேல் தூக்கி விடவில்லை.
ஒரு வருடம் முன் இரத்த கரையோடு கீழே கிடந்த துளசியின் தாலியைக் கண்டதும் அவன் கர்வம் எல்லாம் அவன் விட்ட கண்ணீரோடு கரைந்து போயிருக்க.. மீசையை அவன் இடக்கை ஆட்காட்டி விரல் தீண்டுவதில்லை.
அவன் முறுக்காவிட்டால் என்ன… அவனைப் பார்த்ததும் மடியில் அமர்ந்து கொண்டு கண்டிப்பாக மீசையை முறுக்கி விடுவாள். மனம் கூறியது.
இப்படியே நித்தமும் துளசியை அசைபோடுவது இவனுக்குப் புதிதல்ல.. இதைத் தானே ஒரு வருடமாகச் செய்கிறான். இன்றும் ரயில் ஏறியவன் உள்ளே செல்லாமல் அவள் நினைவில் தேங்கி நின்றான்!
ஒருவருடனும் இவன் அதிகம் பேசுவதில்லை. நித்தமும் அவள் பேசிக்கொண்டே இருப்பாள். அவன் கேட்டுக்கொண்டே இருப்பான். நிமிடத்திற்கு ஒரு முறை “மூர்த்தி சார்” என்று விடுவாள். இன்றும்.. இந்த இரயிலின் தட தடப்புக்கு நடவிலும், கேட்கிறதே அவள் சத்தம்.. புல்லாங்குழலுக்குள் சுற்றும் தென்றலாய் அவள் சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
இரயில் ஏறியவனை, வாசலில் நின்றிருந்த முதியவர் கூர்ந்து பார்த்தார். தெரிந்த முகம் ஆனால் பிடிபடவில்லை அவருக்கு. நேரம் பிடித்தது அவனை அடையாளம் காண. அவன் நொடிப் பொழுதில் கண்டுகொண்டான், அவரை.
காற்றில் கலைந்த கேசத்தை கை கொண்டு படிய வைத்தான். அடர்த்தியாயிருந்த முடிச் சற்று அடர்த்தி குறைந்து நெற்றி ஏறி இருந்தது. ஒன்றிரண்டு வெள்ளி கம்பியும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தது.
“கொஞ்சம் குனியிங்க மூர்த்தி சார்.. இப்படி விறைப்பா நின்னா, நான் எப்படி தலை வாருவேன்?”, அவன் காலில் நின்று கொண்டு கண்ணாடி வளையல் குலுங்க.. அவள் அவனுக்குத் தலை வார.. அவள் விழாமல் இருக்க அவளை இடையோடு கட்டி கொண்ட நாட்கள் அவன் இதழை விரியச் செய்தது.
அண்ணாந்து பார்த்திருந்த முகம் அவன் முன் இருப்பது போல்.. மனம் ஒவ்வொன்றாய் ரசித்தது.. துளசியில் விரிந்த, விழுங்கும் விழியும்.. பவள இதழும்.. கொழுத்த கன்னமும்.. தாய்மை தந்த பளபளப்பும்..
தாய்மை? அவன் துளசியின் மேடிட்ட வயிறு? அது இடிக்கவும் தானே அவன் காலில் ஏறி நின்று கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுவதை நிறுத்தினாள்.
மனம் நிலையில்லாமல் துளசியில் வயிற்றை வருட… வயிற்றுக்குள் இருந்த அவன் குட்டி கண்ணமாவிற்காக மனம் அலைபாய்ந்தது.
“’ப்ப’ன்னு கூப்பிடுவா துளசி.. என் கன்னம் முழுசும் அவ எச்சில் தான் இருக்கும் பாரேன்.. அவ அழகு காலுல கொலுச போட்டு எனக்கு ஆட்டி காட்டுவா.. நீ தள்ளி நின்னு பெருமூச்சு விடு..” அதெல்லாம் அன்றைய கனவு.
குட்டி மகளை இவன் கொஞ்சினால் துளசிக்குத் தான் பொறாமை துளிர்த்துவிடுமே. அதனால் எத்தனை செல்ல சண்டைகள்.. எத்தனை சமரசங்கள்! சமரசங்கள் எல்லாம் கன்னத்திலோ உதட்டிலோ தான் ஆரம்பிக்கும். மணிக் கணக்காக சமரசம் செய்த நாட்கள் தான் எத்தனை.
அதற்காகத் தான் இவன் சீண்ட, அவள் சண்டை இடுவாளோ என்னவோ.. நினைவில் மிதந்து கொண்டிருந்தவன் இதழ் ஓரம் சிறு கீற்று முறுவல்.
‘துளசி மா..’ மனம் ஏங்கியது மனைவியின் சண்டைக்கும் சமரசத்திற்கும். கூடவே அவள் தொண்டைக் குழி வாசத்திற்கும். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டான்.
அவன் உதட்டோர லேசான புன்னகையைப் பார்த்ததும் முதியவருக்கு தெரிந்துவிட்டது போலும்.
“நீங்களா தம்பி…? ஆளையே அடையாளம் தெரியலை. எப்படி இருக்கீங்க?” முதியவர் கேட்டார் அவனிடம். முதன் முதலாகத் துளசியோடு வந்த அன்று இதே ரயில் பயணத்தில் தான் இவரைப் பார்த்தது. இன்று தான் மீண்டும் பார்க்கிறான்.
“குழந்த நல்லா இருக்காளா தம்பி? பார்த்து எத்தன வருஷம் ஆச்சு!” முதியவர் பேச, மீண்டு வந்தவன், மீண்டும் புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தான்.
அவர் துளசியைத் தான் குழந்தை என்கிறார் என்று தெரியும். அன்று பதின்ம வயதில் இருந்த அவள் முகம் அப்படி தானே இருந்தது. பதினாறு வயதில் பார்த்தானா..? அந்த அழுக்கு பரட்டை குட்டியை..! அன்று நினைத்தும் பார்க்கவில்லை… இப்படி அந்த குட்டி பரட்டையிடம் மனதைத் தொலைத்து அவள் நினைவோடே சுற்றி திரிவான் என்று.
கடைசியாக பார்த்த அன்று குழந்தை முகம் இல்லை.. கண்ணையும் மனதையும் கொள்ளை கொண்ட அரிவையின் முகம். ஆனால் குணம் மட்டும் அப்படியே! அதே கள்ளம் கபடமில்லா குணம். எதற்கும் அவன் முகம் பார்த்து நிற்பாளே… மூன்று வயது பிள்ளைபோல், கண்ணில் நீர் தேக்கி, உதடு பிதுக்கி அவனைப் பார்க்க… புயலில் தாக்கப்பட்ட மரமாய் அவள் கடலடியில் வேரோடு சாய்ந்து விழுவான். அவன் கோடையின் மழை அவள்… அவன் துளசி!
இம்முறை பெரியவரும் அவனும் எதிர் எதிரே அமரவில்லை.
“பாப்பாவ விசாரிச்சதா சொல்லுங்க தம்பி”, கூறியவர் சென்றுவிட்டார்.
இவனுக்கான இடத்தை தேடிப் பிடித்து ஜன்னல் அருகே கண் மூடி அமர்ந்து கொண்டான். மீண்டும் பல வருட நினைவில் மூழ்கினான்.
அவள் அவன் வானம்… அதில் அவன் ஒரு காற்றாடி.. அவள் நினைவுகளில் இலக்கில்லாமல் பறந்து கொண்டிருந்தான்.
அன்று அவன் மடியில் துளசி தலை சாய்த்திருந்தாள். இன்று இவன் மடியில் அவளில்லை. துளசியின் மடி தேடியது மனது.
இரயில் மாறியது. அவன் மன நிலையில் மாற்றமில்லை. பேச்சு சத்தம் நடுவில், அவனிடம் பேரமைதி. கவனம் அங்கில்லை.. யாரிடமும் பேசவில்லை. ஜன்னல் வழி இரவு முழு நிலவைப் பார்த்தான்.
“நிலா.. மூர்த்தி சார்! என்ன ஒரு அழகு?” அன்றொரு நாள் துளசி கூறினாளே, மொட்டை மாடியில் தென்னங்கீற்றின் இடையே தெரிந்த நிலவைப் பார்த்து.
“உன்ன விடவா துளசி…” இன்றும் அதே பதில் தான் அவனிடம். அன்று அவள் மடி சாய்ந்து, அவள் பஞ்சு கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு.. மேகம் மீது படுத்தால் இப்படி தான் இருக்கும் என்று நினைத்து லயித்த காலம் அது.
அன்று மாடியில் இசைத்த பாடல்..
“என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்…”. இன்று நினைவில் வந்தது. எத்தனை உண்மையான வரிகள். அவன் வானில் அவள் மட்டுமே.. “நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்” – உண்மை தானே துளசி?
‘துளசி..’ மனம் ஏகத்திற்கும் ஏங்கியது அவள் மடி சாய.
இரவு முழுவதும் கண்ணயரவே இல்லை. மனம் முழுவதும் அவள் தான். இன்பமான நினைவில் மூழ்கியிருந்தவனுக்குத் தூக்கம் எங்கிருந்து வரும்? அவளைச் சேரும் பேராவலில் தூக்கம் என்ற ஒன்றை மறந்திருந்தான். அதை அவன் மறந்து வருடம் ஒன்றாகிவிட்டது என்பது தான் உண்மை.
துளசியிடம் சென்ற பின் நிம்மதியான நித்திரையில் ஆழலாம். இன்னும் சில மணி நேரப் பயணம் தான், விடியலில் அவன் தோட்டத்தை அடைந்துவிடுவான்.
அவன் துளசி அவனுக்காகக் கண்டிப்பாக அங்குக் காத்திருப்பாள். இனி அவர்களை யார் பிரிப்பது? அவன் தனித்திருக்கக் காரணம் இல்லை.
இரயில் மிதமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அவன் எண்ணங்களும்.
பல வருட எண்ணங்கள் பசுமையாய் அவனை நிறைத்தது.
ஒரு வருடப் பிரிவு! மூடிய இமைகளின் நடுவே ஒரு சொட்டு நீர் எட்டிப்பார்த்தது. கூடவே மூடியிருந்த இமைகளின் நடுவே அவள் வந்துவிட்டாள்.
புன்னகை முகமாய், “மூர்த்தி சார்” என்றாள். கண்டிக்கும் தோரணை. அவன் இதழும் தன்னால் விரிந்தது. எதற்கும் ‘மூர்த்தி சார்’ தான்! ஆனால் பல விதமாய் அதை உச்சரிப்பாளே.
அந்த அழைப்பில்… அந்த உச்சரிப்பிலேயே அவனுக்கு அவள் மனம் புரிந்து போகுமே. கடைசியாக அவள் அழைத்த அழைப்புகள் தான் மறக்க முடியுமா..? சிணுங்கலாய்.. கொஞ்சலாய்.. காதலாய்.. காமமாய்… ஏக்கமாய்.. (https://www.newportworldresorts.com/) மயக்கமாய்… இன்னும் இன்னும் எப்படி எல்லாம் அழைத்தாள்.
‘அவ்வளவு தானா துளசி.. இனி நான் கேட்கவே முடியாதென்று ஒரே நாளில் அழைத்து முடித்தாயா?’ மனம் ஏங்கி நின்றது.
‘துளசி’ வெந்து.. வடிந்த மனம் அவளை மட்டும் தான் நினைத்தது.
அவன் துளசி.. அவன் ஜீவனின் அச்சாணி. அவளின்றி அவனில்லை. ஒரு வருடமாய் வெறும் மூச்சு விடும் கூடாய் சுற்றித்திரிந்தான்.
இறங்க வேண்டிய இடம் வந்தது. அவன் வருவது தெரியாததால் சுவாமி அண்ணன் வெள்ளை அம்பாசிடரோடு காத்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார்.
ஒரு வருடத்தில் வீட்டில் அனைவரும் இழப்புக்கு பழகி இருந்தனர். மண்ணோடு மறைந்தவரோடு நாம் மறைய முடிவதில்லையே… வீடு என்றும் போல் இயக்கிக் கொண்டிருந்தது.
“மூர்த்தி சார்…” மீண்டும் துளசியின் சத்தம், ஏக்கமாய் ஒலித்தது. மாம்பழ கொட்டைக்குள் இருக்கும் வண்டாய் அவள் சத்தம் அவனுள் ரீங்காரம் இட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
“நீங்க இல்லாம நான் நல்லாவே இல்ல மூர்த்தி சார்!”, அவனைப் பார்க்காமல் போனால் அப்படி தானே கூறுவாள்.
இம்முறை அவனும் கூறிக்கொண்டான், “நான் கூட துளசி!”, என்று!
“இன்னும் ரொம்ப நேரம் ஆகுமா மூர்த்தி சார்?” அவள் தனிமையில் தவித்தால் வரும் கேள்வி இது!
“இதோ துளசி…. வந்துட்டேன்..” சொல்லிக் கொண்டான்.
மிக நீளமான ரயில் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
மிக நீளமான அவன் பயணம் இன்னும் சில மணித் துளிகளில் முடிந்துவிடும் என்ற வாஞ்சையோடு மகிழம் மரத்தைத் தேடி.. துளசியின் மூர்த்தி சார்.