“ரொம்ப ஆழமா போகுறதுக்கு பயமா இருக்கு தம்பி, குளத்துல எனக்கு தெரிஞ்சு என்னைக்குமே நீர் வத்துனது இல்ல, புதை குழி எல்லாம் இருக்கும்னு என் அய்யன் சொல்லிருக்காரு”
“ஐயோ ஐயோ என் புள்ளை என்ன விட்டு போச்சே” தலையில் அடித்து கணக்குப்பிள்ளை கண்ணீர் வடிக்க, அவரை விட அதிகமாக குழந்தையின் அன்னை அழுதத்தை பார்த்த தேவாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“கணக்குப்புள்ள என்ன ஆனாலும் உன் பிள்ளையை நான் காப்பாத்துறேன்” சட்டையை அவிழ்த்து தரையில் போட்டவனை தடுத்து நிறுத்தினான் ஒருவன்,
“என்ன தம்பி நீங்க குதிக்க போறிங்களா?”
அவனை மேலும் கீழும் பார்த்த தேவா, “ஆமா அதுக்கு இப்ப என்னங்கிற?”
“நீ குதிச்சா அப்றம் நாங்க எதுக்கு விலகு நீ” தேவாவின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டான் அவன்.
“ஏன்டா ஒரு உசுரு ஆபத்துல இருக்கு, அந்த புள்ளைய காப்பாத்தாம என்கிட்ட சவடால் மயிறு பேசிட்டு இருக்க” எகிறினான் தேவா அவனிடம்.
அதற்குள் வந்த இன்னொருவன், “என்னடா ரவுசு காட்டுறியா? உள்ள போனன்னு வையி மவனே உசுரோட வர மாட்ட” என்றவன்,
கணக்குப்பிள்ளையிடம் திரும்பி, “என் உசுர பணயம் வச்சு உள்ள போறேன், ஆனா எனக்கு ஒன்னு ஆச்சுன்னா என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு யார் பதில் சொல்லுவா? காசு அதிகமா செலவாகும் பார்வைல்லையா?”
நெருப்பாக கொதித்த ஆத்திரத்தை அடக்கியவன் கையிலிருந்த காப்பை முறுக்கி அவன் சட்டையை பற்றினான் தேவா, “புள்ள பாசத்தை காட்டி உசுருக்கு பேரம் பேசுறியா? அறுத்துப்புடுவேன் ஜாக்ரத்தை”
இருவரையும் பிரிக்க முயன்று கூட்டம் தோற்க தேவா தானாகவே அவனை உதறி தள்ளி நொடி வீணாகாமல் குளத்திற்குள் குதித்தான். தேவா குதித்தது அவருக்கு இன்னும் பதட்டத்தை கொடுக்க.
“எவ்ளோ செலவானாலும் பரவால்ல என் புள்ள பொணத்தையாவது எனக்கு கண்ணுல காட்டிடுங்க ய்யா உங்க கால புடிச்சு கெஞ்சி கேட்டுக்குறேன்” கணக்குப்பிள்ளை கைகளை கூப்பி யாசிப்பதை பார்த்த பலரின் கண்கள் கலங்கியது.
“நீ எதுக்குடா ஒடையிற, என் பேரன் உள்ள போயிருக்கான்ல வந்தா ரெண்டு உசுரா வருவான் இல்ல ரெண்டு உசுரும் இல்லாம அவனை நீங்க தூக்கிட்டு வருவீங்க”
ஆணித்தரமாக பேரன் மேல் வேறூன்றியிருந்த நம்பிக்கையில் இளங்கோவன் திமிராய் நிற்க பேரம் பேசிய கூட்டத்தை பார்த்து, “புள்ள உசுர காப்பாத்திட்டு உங்கள கவனிச்சுக்குறேன், டேய் குணா கூட போய் மேலாப்ல நில்லுங்க, கயிறு எடுத்துட்டு போ. டாக்டர் இல்லையா நம்ம பேச்சியம்மா நர்ஸை ஒருத்தன் வேகமா கையோட கூட்டியா”
பேரன் அதீத கோவத்தோடு நேற்று சொல்லாமல் கிளம்பியதிலிருந்து இருப்பு கொள்ளாமல் காலையிலேயே கிளம்பி வந்திருந்தார் அர்ஜுனனும். குளத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கேள்வியுற்று இளங்கோவன் கிளம்ப தானும் வருவதாக வந்திருந்தார் அர்ஜுனனும்.
தேவாவின் நண்பர்கள் சிலர் குளத்தின் மேல் பக்கமாக படர, வெற்றி வைத்தியரை அழைக்க சென்றான். உள்ளே சென்ற தேவா மூச்சு காற்றுக்காக சில நொடிகள் வந்த ஆழ்ந்த மூச்சை எடுத்து மீண்டும் உள்ளே சென்றான்.
மக்கள் சில நிமிடங்களாகவே தண்ணீரில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்த காரணத்தால் குளம் கலங்கி கண்களை தெளிவாக பார்க்க முடியவில்லை தண்ணீரினுள்.
மழைக் காலமாதலால் குளத்தில் எப்பொழுதும் இருப்பதை விட தண்ணீரின் ஆழம் அதிகம் இருந்தது. தண்ணீரை விளக்கி ஆழத்திற்கு சென்று செடிகளுக்குள் ஒவ்வொரு இடமாக தேடி பார்க்க காற்றுக்காக உடல் ஏங்குவது பெரும் அவஸ்தையை கொடுத்தது ஆணுக்கு.
தன்னை நம்பி மற்றொரு உயிர் உள்ளதே என்னும் எண்ணமே தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மேலும் அங்கிருந்த செடிகளுக்கு நடுவே ஊடுருவி பார்க்க சற்று தொலைவில் அந்த குழந்தையின் கால்கள் தெரிய விரைந்தவன், அவள் காலில் கொடிகள் பல சுற்றியிருப்பது தெரிய வந்தது.
கடினப்பட்டு கைகளால் அதனை பிரிக்க முயன்று தோற்று போக தண்ணீருக்கு மேலே வந்து மூச்சை இழுத்து சுற்றி கண்களை சுழலவிட்டு கண்ணுக்கு முதலில் தெரிந்த தோழனிடம்,
“கத்தி அருவா ஏதாவது வேகமா தா” என கத்த,
அதற்குள் கரையில் நின்ற ஒருவர் குளத்தில் குதித்து அரிவாளை தேவாவின் பக்கம் தூக்கி வீச தண்ணீருக்குள் விழுந்த அரிவாளை உள்ளே சென்று கைப்பற்றி குழந்தையை நோக்கி போனவன் சில நொடிகளில் அதன் காலை சுற்றியிருந்த கொடிகளை அறுத்து குழந்தையை மேலே அழைத்து வர, தேவா சென்ற அதே இடத்தில் பலர் காத்துக்கொண்டிருந்தனர்.
குழந்தையை தேவாவிடமிருந்து வாங்கி கரைக்கு கொண்டு செல்ல அந்த நேரமே வெற்றி அந்த ஊரிலிருந்த ஒரு வைத்தியரை அழைத்து வந்திருந்தான்.
குழந்தையை தரையில் கிடத்தி முதலில் நாடி துடிப்பை பார்த்த பொழுது, “பல்ஸ் கம்மியா இருக்கு, நான் பர்ஸ்ட் எயிட் பண்றேன், வண்டி ஏற்பாடு பண்ணுங்க ஹாஸ்பிடல் உடனே போகணும்”
மருத்துவர் முதலுதவி செய்ய அடுத்த சில நொடிகளில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
“மாப்பிள்ளை கூட போ” தன்னுடைய சட்டையை எடுத்து அதிலிருந்த காசை மொத்தமாய் நண்பன் கையில் கொடுத்தான் தேவா, “இன்னும் வேணும்னாலும் தகவல் சொல்லு உன் அக்கவுண்டுக்கு காசு அனுப்புறேன், தகவல் சொல்லுடா” குணாவை உடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
“யய்யா உன் கால்ல ரத்தம் வருது” பதட்டத்தோடு இளங்கோவன் அவன் காலை கட்டி கீழே அமர அதற்குள் அர்ஜுனன் தன்னுடைய வேஷ்டியின் நுனியை கிழித்து அவன் காலில் கட்டினார்.
இருவரையும் சமாதான படுத்தி வீட்டிற்கு செல்ல வாசலிலே பதட்டமாக நின்றனர் கடற்கரைதாயம்மாளும் பார்வதியும். வீட்டிற்கு போனவுடன் அவர்களை சமாதானம் படுத்துவதே பெரும் பாடாகி போனது.
குழந்தையின் உடல்நிலையை பற்றி அடிக்கடி கைபேசி மூலம் கேட்டுக்கொண்டே இருந்தவன், அதன் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிந்த பிறகே உணவை உண்டான் அதுவும் காலை உணவு மதிய உணவாகியது.
ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியில் தேவா சோபாவில் தன்னுடைய ஆச்சியின் மடியில் படுத்திருந்தான்.
வீட்டினுள் பேரமைதி நிலவ நீ பேசவா நான் பேசவா என்னும் வீம்பிற்கு பதிலாக தயக்கம் இருந்தது.
“பட்டிமன்றம் வேகமா ஆரமிச்சா அத பாத்துட்டே நான் தூங்குவேன்”
“நடந்தது எல்லாமே கை மீறி போய்டுச்சு, இனி எந்த கசப்பான சம்பவம் எதுவும் நமக்குள்ள வேணாம். முறைப்படி நான் உங்ககிட்ட சொல்லி தான் பிள்ளைகளை கூட்டிட்டு போயிருக்கணும் ஆனா பேரபுள்ளைங்கள பாத்த சந்தோஷத்துல உங்ககிட்ட வந்து பேசாம கூட்டிட்டு போய்ட்டேன். அதான் இப்போ பேச வந்தேன்” – அர்ஜுனன்
“இல்ல சாமந்தி தப்பு என் மேலையும் இருக்கு, நீங்க பிள்ளைங்களை ஏத்துக்கலைனு தெரிஞ்சு நானே ஊர் கூட்டி கல்யாணம் பண்ணலானாலும் பெரிய மனுசனா உங்ககிட்ட வந்து ஒரு வார்த்தை பேசிருந்தா இன்னேரம் இந்த பிரிவு கூட இல்லாம இருந்திருக்கலாம்”
இத்தனை நாட்களாக தன்னுடைய மனதை குடைந்துகொண்டிருந்த வருத்தத்தை இளங்கோவன் உரியவரிடம் கொட்டிவிட்டார்.
அர்ஜுனனுக்கும் இந்த எண்ணம் பலமுறை வர தான் செய்தது, ஊரை கூட்டி திருமணம் செய்து வைத்திருந்தவர் தன்னிடம் ஒரு முறை கூட வந்து பேசாமல் போனது சிறு கோவமாய் கூட இருந்தது.
“பழசெல்லாம் பேசுனா தேவையில்லாதது தான் நியாபகத்துல வரும், சந்தோசமா ஆரம்பிக்கலாம். குடும்பத்தோட எங்க வீட்டுக்கு நீங்க வரணும் அத சொல்ல தான் நாங்க வந்தோம் சம்மந்தி” – அர்ஜுனன்
“அதுக்கு ஏன் சம்மந்தி நீங்க இவ்ளோ தூரம் சிரமப்பட்டு மெனக்கெட்டு வரணும்? போன்ல ஒரு வார்த்தை சொல்லிருந்தா நாங்க ஓடி வந்துருக்க போறோம்”
பெருந்தன்மையோடு பேசிய இளங்கோவனின் உறவை தன்னுடைய வறட்டு கௌரவத்தால் இத்தனை வருடங்கள் தூர வைத்திருந்தோமே என வருத்தம் அர்ஜுனனிடம்.
“உங்க பெருந்தன்மை அது, ஆனா முறையா நாங்க வந்து அழைக்கிறது தானே நல்லது? அடுத்த வாரம் குலதெய்வம் கோவில்ல பூஜை வச்சிருக்கேன் பேரன் பேத்திக்காக.
பேரனை வேதனையோடு பார்த்த அர்ஜுனன், “ஏன் தேவா நீ சொல்லாம கொள்ளாம ஊருக்கு கெளம்பி வந்துட்ட?” என்க,
“ஆமா ராசா, உன் அய்யப்பா ராத்திரி எல்லாம் தூங்காம காலைல முதல் வேலையா உன்ன பாக்க தான் கெளம்பி வந்தார்” என்றார் பார்வதியும்.
அர்ஜுனன் இளங்கோவனை பார்க்க அவர் முகத்திலிருந்த சுணக்கம் மகன் மேல் இருந்த தவறை இது புதிதல்ல என கூறியது.
“விடுங்க அய்யப்பா, அவர் பேச்ச எடுக்க வேணாம்” – தேவா
“மருமக புள்ளைக்கு இருக்குற பொறுப்பு, பொறுமை எல்லாம் தேவாவ பாத்தா பறந்துடுது” மனம் தாங்காமல் முன்மொழிந்தார் இளங்கோவன்.
“சின்ன வயசுல இவ்ளோ கோவம் வந்து அவனை நான் பாத்தது இல்ல சம்மந்தி, எங்கேயிருந்து தான் இந்த வெறுப்பு வந்துச்சோ, எதிரியை பாக்குற மாதிரி பெத்த புள்ளைய பாக்குறான். நானும் கோவம் பட்டேன் தான் அவன் மேல. அதுவும் வேற இடத்துல அவனுக்கு நான் சம்மதம் பேசிட்டு இருக்கேனு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிட்டு வந்து நினைப்ப கோவப்பட்டேன்.
ஒரு தடவ என்னோட கோவத்தை காட்டுனதுக்கே என் பையன் இருபத்தி எட்டு வருஷம் இல்லாம போய்ட்டான். இப்போ தெரிஞ்சும் ஒவ்வொரு நாளும் தேளு கொட்டுற மாதிரி பேசுனா அந்த புள்ள மனசு எந்த பாடு படும்னு யோசிச்சு பாக்க மாட்டிக்கிறான்”
“உங்ககிட்ட இன்னொரு விசயமும் சொல்ல தான் வந்தேன், என்னோட பேரன் விக்னேஷுக்கும் மூத்த பொண்ணு மக இந்துமித்ராவுக்கும் கோவில்ல வச்சே சின்னதா பூ வச்சு உறுதிப்படுத்திடலாம்னு இருக்கோம்” – அர்ஜுனன்
“என்னது? கல்யாணமா செட்அப் பண்ணி குடுத்த எனக்கே அந்த பிக்காளி பயே ஒரு வார்த்தை என் காதுக்கு கொண்டு வரல?”
“வீட்டுல இருக்க எல்லாருக்கும் தெரியும், எங்ககிட்ட சொல்ல ரெண்டு பேருக்கும் இத்தனை வருஷம் ஆச்சு, அதான் கையோட பேசி முடிச்சி பூ வச்சிடலாம்னு யோசிச்சாச்சு” – அர்ஜுனன்
“நல்ல விசியம் சம்மந்தி” தேவாவிற்கு உள்ளுக்குள் ஒரு பக்கம் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது, இவர்கள் ஆட்டையை முடித்தால் தான் தன்னுடைய கதைக்கு விரைவில் வருவார்கள் என்று.
இன்னும் சில நிமிடங்கள் இருந்தவர் இளங்கோவனின் கைபேசியிலிருந்தே அவருடைய மகனுக்கு அழைப்பு கொடுத்து அவரையும் விசேஷத்துக்கு அழைத்து மன நிறைவோடு கிளம்பினார் அர்ஜுனன்.
பேரனை விட்டு செல்லவே மனமில்லாமல் தங்கள் ஊருக்கு பயணப்பட, “அடுத்தவங்களுக்காக உசுரையே குடுக்க துணியிற இந்த புள்ளைய கண்ணுக்குள்ள வச்சு தாங்க வேணாம் ம்மா?” வருத்தமாக மனைவியிடம் புலம்பினார் அர்ஜுனன்.
அடுத்த வாரம் கோவிலில் விசேஷம் தடபுடலாக நடந்து முடிய இன்னும் ஒன்றரை மாதத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதோ திருமணம் இன்னும் இரண்டு நாளில் இருக்க வேலை காரணமாக தேவா நிச்சயத்தன்று காலை வருவதாக கூறிவிட்டான்.
ஆனால் ராஜரத்தினம் அடிக்கடி தந்தை வீட்டிற்கு வர, அவர் மகள் இஷாவோ சகோதரன் விக்னேஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியிலிருந்து மொத்தமாக அங்கேயே தங்கிவிட்டாள், அந்த வீட்டில் அவளுக்கு கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்க வேண்டுமென.
இரவு ஒரு லோட் ஏற்றவென கிளம்பிய தேவாவிற்கு தான் நினைத்ததை விட வேலை வேகமாக முடிய அதிகாலை மூன்று மனைக்கு அர்ஜுனன் வீட்டின் முன்பு நின்றான் தயக்கமாக. நல்ல உறக்கத்தில் இருப்பார்களே என யோசித்தே வீட்டின் அழைப்பு மணியை அடிக்காமல் வாசலில் அமர்ந்திருக்க, உறக்கம் வேறு ஒரு பக்கம் இழுத்தது.
வாசலிலே கூச்சப்படாமல் படுத்தவன் கண்களை மூடி தூக்கத்தை அணைக்க முயல கொசு அவனை மெல்ல உண்ண துவங்கியது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்களை திறந்தவன் சத்தம் வந்த அவனின் அத்தை வீட்டை பார்த்தான்.
கொஞ்சமாக திறந்திருந்த கதவின் அருகே இவனை பார்த்த பைரவி சற்று வழி விட்டு நிற்க அவளின் செயல் புரியாது இருந்தான் தேவா. மணியை பார்த்தான், மூன்று பத்து என காட்டியது.
“இந்த நேரத்துல என்ன பண்ற? தூங்கலையா?”
அக்கறையாக அவன் கேட்க அவளோ, “உள்ள வாங்க” என்றாள் சுரத்தையே இல்லாமல்.
“நான் உங்கிட்ட ஒன்னு கேட்டா நீ அதுக்கு பதில் சொல்லாம ஆர்டர் போடுற” குறைபாடினான்.
“மாடி ரூம் யூஸ் பண்ணிக்கோங்க”
மீண்டும் வேறு பதில் வர, “நீ போ நான் வரல” – தேவா
“இது உங்க ஊர் மாதிரி இல்ல, இந்த நேரம் நாம பேசுறத பாத்தா தப்பா இருக்கும்”
நன்றாக கதவை திறந்து வைத்து காத்திருக்க அவனும் வீம்பிற்கு நகரவில்லை, “இருக்கட்டும் நான் வீட்டுல கதவை தொறந்ததும் போய்க்கிறேன். நீ படு” என்ற தேவாவை அழுத்தமாக பார்த்தது பைரவியின் கண்கள்.
“உள்ள வாங்க” உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட அந்த முகத்தை போலவே அவளின் குரலும் இருக்க, அதையும் தாண்டி அவள் குரலில் ஆணை இருந்தது.
“ஏய் என்ன என்னை ஆர்டர் பண்ற நீ?” மெல்ல எகிறினான் தேவா.
உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவளை கெஞ்ச வைக்க வேண்டும் என்று ஆசைகொண்டது. அவன் ஆசைக்கு தீ வைக்க நினைத்த விதி அவளை சில நொடிகள் தேவாவை பார்க்க வைத்து உள்ளே அனுப்ப, வேகமாக சென்று கதவை பிடித்து நிறுத்தினான்.
புருவத்தை உயர்த்தி பைரவி பின்னே செல்ல, “நீ சொன்னான்னு எல்லாம் நான் உள்ள வரல, கொசு கடி தங்களான்னு தான் வந்தேன், உன் கண்ண பாத்து எல்லாம் பயப்புடல சரியா?”
அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பைரவி கதவை அடைத்து அவனுக்கு பதில் சொல்லாமல் படியில் ஏற்றினாள்.
அவளை தொடர்ந்து சென்றவன், “நிவேதா எப்போ வருவா?”
“தெரியல” – பைரவி
“ஓ… அவளுக்கு என்ன புடிக்கும்?” தேவாவின் கேள்வியில் படியில் சென்றவள் திருப்பத்தின் பொழுது அவனை பார்த்து மீண்டும் மேலே ஏற,
“புடிச்சதுனா இந்த சாக்லேட், கலர், சாப்பாடுனு இல்ல. அவளோட ஆசைகள் சில இருக்கும்ல அது கேக்குறேன்”
நொடிகள் சில அமைதியாக செல்ல, அறையை நெருங்கி அவனை திரும்பி உன்னிப்பாக பார்த்தவள், “637*****22 நிவேதா போன் நம்பர்”
அவள் கூறியதை அப்படியே மனப்பாடம் செய்தவன் உல்லாசமாக, “அடடா பிரமன் புத்திசாலி, அவனை விட நான் அதிர்ஷ்டசாலி சென்யோரீட்டா…” பாட்டோடு அன்று தங்கியிருந்த அதே அறைக்குள் சென்று கதவை அடைக்க, அமைதியாக பைரவியும் தன்னுடைய கூட்டிற்குள் அடைந்துகொண்டாள்.
மறுநாள் காலை வீடே மகிழ்ச்சியில் மூழ்கியிருக்க, அர்ஜுனன் வீட்டின் பின் தோட்டத்தில் கூடியிருந்த ராஜத்தினம், சீதாவின் கணவர் கண்ணன், அர்ஜுனன் பெரும் யோசனையில் அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு பெரியவர்களை நெருங்கிய சந்தோஷ்,
“நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ண ஒத்துக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன். உங்க மக எங்க வீட்டுக்கு மருமகளா வர்ற மாதிரி என் தங்கச்சி உங்க மருமகளா உங்க வீட்டுக்கு முதல போகணும்” ராஜரத்தினத்தை பார்த்து அழுத்தமாக சந்தோஷ் கூற மூன்று ஆண்களுக்கும் அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.
Hello… epdi iruku? last chapter ku comments ae varala…