“சந்தோஷ் ஸ்டோர் ரூம் சாவி கீழ கேக்குறாங்க இத குடுத்துட்டு வாயேன்” கீழ் தளத்திலிருந்த சமயலறைக்கும், மணமேடை இருந்த தளத்திற்கும் ஏறி இறங்கி கால்கள் வலிக்க துவங்க பேரனிடம் மளிகை பொருட்கள் இருந்த அறையின் சாவியை கொடுத்தார்.
“சரிங்க தாத்தா”
திருமணத்திற்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்க அவசரமாக சமைக்க தேவைப்படும் பொருள் போல என்ற எண்ணமுடம் வேகமாக கீழே இறங்கி ஸ்டோர் ரூம் இருந்த இடத்தை நெருங்கிய பொழுது அங்கு நின்ற மாமன் மகளை பார்த்ததும் கால்கள் தடுமாறி வேகத்தை தானாக குறைத்துக்கொண்டான் சந்தோஷ்.
எப்பொழுதும் வற்றாத சிரிப்போடு மிளிரும் அவள் கண்கள் இன்று உடைந்து மிகவும் சோர்ந்திருந்தது.
சந்தோஷின் வருகையை எப்படி தான் உணர்த்துக்கொண்டதோ அந்த மனது, சரியாக அவன் வந்த திசைக்கு கண்களை திருப்பிய பெண்ணின் கண்கள் அப்பட்டமான வேதனையை சுமக்க, கண்ணீரை மறைக்க தலையை தாழ்த்திக்கொண்டாள் விக்னேஷின் தங்கை, உதயநிலா.
அசைய மறுத்து நின்ற கால்களை செயலுக்கு கொண்டு வந்து அவளை நோக்கி நடந்தவன் அவளிடம் சாவியை கொடுக்க, சந்தோஷை திரும்பியும் பார்க்காமல் அறை கதவை திறந்து வெற்றிலை பாக்கை தேட, மனம் கேட்காமல் அவளுக்கு காவலாய் நிற்கும் சாக்கில் உள்ளே சென்றான் சந்தோஷ்.
“நிலா” அந்த வார்த்தையை கூற கூட தகுதியில்லை என தோன்ற உள் இறங்கிய குரலில் அழைத்தான் அவளை.
அவன் குரலில் இருந்த குற்ற உணர்ச்சி உதயநிலா மனதை குத்தி கிழிக்க அவனிடம் திரும்பி, “நீங்க குற்ற உணர்ச்சில இருக்க அவசியம் இல்ல” என்றவள் மேலும், “இனிமேல் நான் உங்களுக்கு உதயநிலாவா இருக்கேன்”
“என்ன மன்னிச்சுடு நிலாமா” நிலாவை சுற்றி வந்து அவள் முன் நின்று இறைஞ்சினான்.
வேகமாக அவன் பக்கம் திரும்பியவள், “இதுல நான் மன்னிக்க என்ன இருக்கு? பைரவி வாழ்க்கை நல்லா இருந்தா போதும்” என்றவள் முகம் அடுத்த நொடியே அழுகையில் சிவந்தது,
“ஆனா என்னால உங்கள மறக்க முடியுமான்னு தெரியல சந்தோஷ். ரொம்ப கனவு கண்டுட்டேன் உங்ககூட வாழ போற வாழ்க்கையை நினைச்சு” தேம்பி அழுத்தவளை உரிமையோடு இனி அருகில் சென்று ஆறுதல் படுத்தவும் முடியவில்லை.
ஆறு ஆண்டுகள், காதலின் அர்த்தம் தெரிய துவங்கிய பொழுதே காதலித்து வீட்டில் உள்ள எவருக்கும் தெரியாமல் வளர்த்த காதல், இன்று எவருக்கும் தெரியாமல் மாண்டும் போனது.
பைரவியின் திருமணம் நின்று போனதிலிருந்து அவன் மனம் அடைந்த வேதனையை வீட்டினரிடம் பகிராமல் உதயநிலாவிடம் தானே வந்து கண்ணீர் வடிப்பான். அவனை விட அவளுக்கு தான் அதிகம் பாரமடைந்தது மனம். இப்பொழுது தான் காதலித்தவன் மனம் குளிர தன்னுடைய காதலை நெருப்பிலிட வேண்டுமெனில் அதை தவிர வேறு வழி தெரியவில்லை.
“எனக்காக விக்கிட்ட பேசி சென்னைல மாஸ்டர்ஸ் பண்ண பெர்மிஷன் வாங்கி தாங்க, உங்க கல்யாணத்த பாக்குற தைரியம் எனக்கில்லை”
மனதில் பொங்கி நின்ற வலியை அடக்கிய சந்தோஷ் சரி என தலையை அசைக்க வெற்றிலை பாக்கை எடுத்த நிலா முகத்தை புடவை கொண்டு துடைத்து அவனை கடந்து வெளியில் செல்ல, சந்தோஷின் கண்களில் சொல்ல முடியாத வேதனையோடு வெளியேறியது பல துளி கண்ணீர்.
விடிய விடிய உறக்கமே வராமல் தத்தளித்த பைரவி காலை எட்டு மணி போல் சிகப்பு நிற புடவையில், அடர் நீல நிற ரவிக்கை அணிந்து வந்து கலக்கத்தோடு அறையை விட்டு வெளியில் வராமல் இருக்க, சீதா தான் நேரமாகிவிட்டதென மகளை இழுத்து வந்தார் திருமண மண்டபத்திற்கு.
மண்டபத்திற்கு வந்ததும் சீதா வேலையை கவனிக்க சென்றுவிட, இந்த முறையும் கூட்டத்தோடு ஒன்றாமல் ஓரமாக அமர்ந்திருந்த தன்னை அடிக்கடி தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டே இருந்த தாயை பார்த்த பைரவிக்கு மனம் துடியாய் துடித்தது.
நாற்காலியின் கை பிடியை இறுக்கமாக பற்றிக்கொண்டு அமர்ந்திருக்க, தனக்கு முன்னே அமர்ந்திருந்த சிலர் மிகவும் மெதுவாக பேசுவதிலும் தன்னுடைய பெயர் அடிப்படுவதை உணர்ந்து தலையை தரை நோக்கி தாழ்த்தினாள்.
இந்த பச்சாபம், ஏசுதல், அக்கறை, இரக்கம் எதுவும் வேண்டாமென்று தானே இத்தனை மாதங்கள் வீட்டை விட்டே வெளியில் வராமல் இருந்தது, இப்பொழுது வாயிக்கு அவலாக அவள் திருமணம் பற்றிய பேச்சுகளும் காது படவே கேட்டது.
குனிந்திருந்த அவள் கண்களுக்கு முன் பட்டது ஒரு நாற்காலி. மனமேடையை பார்க்காமல் தன்னை நோக்கி திரும்பியிருந்த அந்த நாற்காலியை கவனித்து பைரவி வேகமாக தலையை தூக்க அங்கு கால் மேல் கால் போட்டு வந்தமர்ந்தான் தேவா.
அவள் தன்னை பார்த்ததும் இதழ் விரியா புன்னகை முகத்தில் மலர ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்றான். திடீரென தன் மேல் அவன் காட்டும் இந்த கவனிப்பு பைரவிக்கு மூச்சை முட்ட செய்தது,
நாற்காலியிலிருந்து எழ இருந்தவள் கையை பிடித்து மீண்டும் அமர வைத்தான் தேவா, “எங்க போற?” என்ற கேள்வியோடு.
பதில் கூற முடியவில்லை கண்கள் அவனை தவிர்க்க, மணமகன் அறைக்கு வெளியில் நின்றிருந்த அவள் வீட்டின் இளசுகள் தங்களை பார்ப்பது தெரிய, “ப்ளீஸ் போங்க எல்லாரும் உங்கள தான் பாக்குறாங்க”
அவள் கண்கள் பயணித்த திசையை பார்த்தவன், “இவனுங்க வேற” என பளிச்சென புன்னகையோடு சலித்துக்கொண்டு, “போங்கடா” சைகை செய்தான்.
மாட்டேன் என தலையை ஆட்டி அவர்கள் பார்வையை மாற்றாமல் இருக்க தலையில் அடித்து பைரவி பக்கம் திரும்பினான், “அவனுங்க நீ அங்க வராம அமைதியாக மாட்டானுங்க”
“மாட்டேன், நீங்க போங்க” வேகமாக வந்தது பைரவி பதில்.
“ஏன் வர மாட்ட?” அவளோடு பேசுவதற்கு ஏதுவாக நாற்காலியை இன்னும் அருகில் எடுத்து போட, அதிர்ந்தவள் சுற்றம் கருதி தன்னுடைய நாற்காலியை பின்னுக்கு இழுத்தாள், “ஏன் வரணும்?” என்று.
“அங்க நடக்க போறது நம்ம வீட்டு கல்யாணம்” – தேவா
“எனக்கு வர முடியல. ஏற்கனவே எல்லாரும் நம்ம…” வார்த்தைகள் வராமல் தலையை தாழ்த்தினாள்.
“என்ன நம்ம?” – தேவா
அவன் விடப்போவதில்லை என தெரிந்து, “கல்யாணத்த பத்தி தான் எல்லாரும் பேசுறாங்க”
“இருக்கட்டும் பேசிட்டு போறாங்க, அடுத்தவன் வார்த்தைக்கு மதிப்பு குடுத்தா நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாது. ரெண்டு நாள் பேசுவானுங்க, மூணாவது நாள் திக்கு திசை தெரியாம அவன் அவன் வேலைய பாத்து ஓடிருவான்.
இவிங்களுக்காக இன்னைக்கு சந்தோசத்தை நீ இழந்துட்டா, ரெண்டு வருஷம் கழிச்சு இந்த நாள நீ நினைச்சு பாக்குறப்போ இந்த மூலை மட்டும் தான் நியாபகத்துல நிக்கும்”
அவன் பேசுவதை தலையை உயர்த்தாமல் பைரவி கேட்க, “சரி வர்றியா எல்லாரும் வைட்டிங்” மீண்டும் அங்கேயே வந்து நிற்க கண்ணீர் வெளியேறியது பைரவிக்கு.
“நம்ம வீட்டோட முதல் விசேஷம்டி, எல்லாரும் ஒண்ணா நிக்கிறப்போ நீ மட்டும் இல்லனா யாருக்கு சந்தோசம் இருக்கும் சொல்லு?”
மௌனமாய் நின்ற பைரவியின் மனம் சற்று மாறுவதை உணர்த்த தேவா, “நீ வரலைனா நானும் இங்கேயிருந்து நகருறதா இல்ல” சட்டமாய் அமர்ந்து அவளையே தேவா பார்க்க அமர்த்த இடத்திலே நெளிந்தாள் பைரவி.
“சிகப்பு சேலை உனக்கு ரொம்ப அழகா இருக்கு” ஆசையாய் அவளை பார்த்து அவன் மொழிந்த வார்த்தைகள் அவள் செவிகளை மட்டும் எட்டாமல் அங்கிருந்த பலரின் கவனத்தை ஈர்க்க பைரவிக்கு மேலும் சங்கடம் கூடியது.
“இந்த கண்ணுக்கு மை போடாமையே இவ்ளோ அழகா இருக்கே, இதுல மை போட்டா எம்புட்டு அழகா இருக்கும்?” பெருமூச்சோடு வைத்த கண்ணை எடுக்காமல் தேவா கூற கெஞ்சலான பார்வையோடு அவனை பார்த்தாள்.
அந்த பார்வைக்கெல்லாம் அசராத தேவா, “ஹே நீ ஏன் பூ வைக்கல? இரு”
திரும்பி தூரத்தில் நின்ற அவன் அன்னையை சத்தமாக அழைத்தான், “ம்மா, உங்க மருமகளுக்கு பூ எடுத்துட்டு வாங்க”
மொத்த மண்டபமும் அதிரும்படி அவன் கேட்டதில், அனைவரின் கவனமும் தன் பக்கம் தான் அடுத்தது வருமென உணர்த்த பைரவி வேகமாக எழுந்து மணமேடை நோக்கி நடக்க, தன்னுடைய எண்ணம் பூர்த்தியானத்தில் சிரிப்போடு தன்னையே முறைத்து பார்க்கும் அன்னையிடம் வந்தான்.
“என்ன மம்மி?” கேலியாக அவரிடம் கேட்டான்.
“என்ன டா இதெல்லாம்? நான் அந்த கல்யாணத்தையே நடக்க விட கூடாதுன்னு பாத்தா, நீ ஊரே கூடி இருக்க இடத்துல அவளை என் மருமகனு சொல்ற?”
பெரிதாக விரித்திருந்த அன்னையின் கண்களை பார்த்து அதே உறுதியோடு, “நான் தான் நேத்தே சொன்னேன்ல அவ தான் என் வருங்காலம்னு” தேவா சொல்ல,
“நான் நினைச்சா எல்லாத்தையும் மாத்திட முடியும் தேவா” அன்னையின் எச்சரிக்கையை சிரிப்பு தேவாவிற்கு.
“ச்சோ மம்மி ஏன் இப்டி சீரியல் வில்லி மாதிரி பேசுறீங்க? சரி நீங்க என்ன வேணா பிளான் போட்டுக்கோங்க, நான் இன்னைக்கு எங்க கல்யாணத்துக்கு பைரவிக்கு முகுர்த்த புடவை எடுக்க பிளான் போட்டுட்டேன், அதுவும் நாங்க ரெண்டு பேர் மட்டும்” கண் சிமிட்டி, “வரட்டாாாா…”
அமைதியாக இருந்த புல்லில் தீயை வைத்து நிம்மதியாக திருமண வேலைகளில் தேவா இறங்கிவிட பைரவி செல்லும் திசை எங்கும் வெறுப்பை கக்கி கக்கி பார்த்தும் நாயகிக்கு ஆற்றாமை அடங்கவில்லை.
திருமணத்திற்கு வந்திருந்த இளங்கோவன், கடற்கரைதாயம்மாள், மற்றும் அவரது மகனையும் வரவேற்ற தேவா, தாய் மாமனை அன்னையோடு பேசவிட்டு இளங்கோவன் மற்றும் அர்ஜுனனை தனியாக அழைத்து திருமணத்திற்கு இன்றே பைரவியோடு பட்டு எடுக்க போவதை கூற, முதலில் யோசித்த பெரியவர்கள் பிறகு பைரவியின் மனநிலை புரிந்து அனுமதி கொடுத்தனர்.
“இங்க இருக்க பெருமாள் கோவில்ல எங்க கல்யாணம் நடந்தா போதும் அய்யப்பா, கூட்டம் வேணாம், சொந்தம் பந்தம் எதுவும் வேணாம். நாம மட்டும் போதும்” – தேவா
“அது எப்படி தேவா? இந்த கல்யாணத்துக்காக அந்த பொண்ணு வாங்காத பேச்சுகளே இல்ல, ஊர் கூடி கல்யாணம் பண்ணா தான அவளோட மனசு குளிரும்? நீயும் ஒரே ஆம்பள பையன் ரத்தினத்துக்கு, உன் கல்யாணத்த எப்படி எல்லாம் நடத்தணும்னு உன் அப்பனுக்கும் ஆசை இருக்கும்ல?” – அர்ஜுனன்
“சம்மந்தி சொல்றது சரி தான் ய்யா, யாருக்காகவும் யோசிக்க வேணாம், அந்த புள்ளைக்காக யோசி. உண்மையையே ஏதோ தப்பு இருக்கு போல அதான் காதும் காதும் வச்ச மாதிரி சின்னதா கல்யாணத்த வச்சிட்டு முடிச்சிட்டாங்கனு சொன்னா என்ன பண்றது?” – இளங்கோவன்
“தாத்தா, யாரு என்ன பேசுனாலும் எனக்கு கவலை இல்ல. எல்லாரையும் கூப்ட்டு கல்யாணம் நடந்தா நான் என்னமோ அவளுக்கு வாழ்க்கை குடுத்த தியாகி மாதிரி பேசுவாங்க. கேட்டா ரொம்ப கஷ்டப்படுவா. அதுக்கு தான் சொல்றேன்”
அவன் கூறுவதும் சரியாக தோன்ற வீட்டினரிடம் பேசுவதாய் கூறினர் பெரியவர்கள். பெரியவர்களிடம் அனுமதி பெற்றவன் நேராக அவன் பெரியம்மா கயாத்திரியிடம் சென்று பைரவிக்கு பூவை வாங்கி அவளிடமே மீண்டும் வந்தான்.
வீட்டின் இளைய சமுதாயத்தின் நடுவே நின்றிருந்த பைரவியிடம் நேராக பூவை நீட்டி, “நிவிமா அக்காக்கு பூ வச்சு விடு”
“டேய் ஆனாலும் உன் அலப்பறை தங்களைடா” விக்னேஷ் நொந்துகொள்ள,
“உனக்கு தான் கல்யாணம் ஆக போகுதுல்ல உன் ஆள கொஞ்சு யார் வேணாம்னு சொன்னா?” விக்னேஷிடம் சண்டைக்கு நின்றான் தேவா.
“மச்சான் அப்போ என்ன நிவிமா நிவிமா னு நீங்க சொன்னதெல்லாம் பொய்யா?” போலியாக அவள் கண்ணீர் வடிக்க தேவா முதலில் பார்த்தது தலை தாழ்த்தி நின்ற பைரவியை தான்.
“போச்சுடா” நொந்தவன் நிவேதா தலையில் கொட்டு ஒன்று வைத்து, “போய் பூ வச்சு விடு” விரட்டியவன் நின்ற தடயம் தெரியாமல் கீழே சென்று மறைந்துவிட, சகோதரியை நினைத்து மனம் வேதனையுற்றது பைரவிக்கு.
திருமண வேலைகள் வெகு விமர்சரியாக நடக்க, பைரவியை தங்களை விட்டு எங்கும் அகழாதவாறு பார்த்துக்கொண்டனர் அவள் வீட்டினர்.
நேற்று தான் தனித்திருந்த பொழுது வீட்டினரோடு ஒன்றியிருக்க ஆசைகொண்ட மனதுக்கு இந்த நெருக்கமும் இதத்தை தர, மறுப்பின்றி இசைந்தது உள்ளமும். மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்து விக்னேஷ், இந்துமித்ரா திருமணம் இனிதாக நடைபெற்று முடிய, பைரவியை உடனே அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான் தேவா.
அன்னையை பார்த்துக்கொண்டே தயக்கமாக அவனோடு வெளியில் வந்தவளை, “அத்தைகிட்ட அப்றம் சொல்லிக்கலாம், வா” என அவசரப்படுத்தினான்.
இரு சக்கர வாகனத்தில் ஏறி நின்று தன்னை அழைப்பவனிடம் செல்லாமல், “கார்ல போகலாமா?” தயங்கி தயங்கி கேட்க,
அவளோடு முதல் பயணத்தை தன்னுடைய வாகனத்தில் அனுபவிக்க எண்ணிய தேவாவிற்கு ஏமாற்றமாய் இருந்தாலும் அவளுக்காக எண்ணி தன்னுடைய தாத்தா ஆச்சி வந்த வாகனத்தை டிரைவரிடம் கேட்டு வாங்கி அவளோடு பயணித்தான்.
வாகனம் விருதுநகரை தாண்டி ஹைவேயில் பயணிப்பதை பார்த்து புடவை முந்தானையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். “எங்க போறோம்னு கேக்க மாட்டியா?” அவள் பதட்டத்தை தணிக்க பேச்சை எடுத்தான் தேவா.
“எங்க போறோம்?” சாஸ்திரத்திற்காக பைரவி.
“நம்ம கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போறோம்”
காரின் கதவை இறுக்கமாக பற்றிய கைகளோடு, “வீட்டுல என்ன இறக்கி விடுங்களேன், நீங்க உங்களுக்கு புடிச்ச டிரஸ் எடுங்க” கெஞ்சியது அவள் கண்களும் தான்.
“எனக்கு புடவை எடுத்து பழக்கம் இல்ல” – தேவா
பைரவிக்கு கை கால்கள் நடுங்கியது அந்த பத்தி நிமிட அவனோடான தனிமை, “பரவால்ல, விருதுநகர்ல எடுக்கலாம், ப்ளீஸ் என்ன வீட்டுல விடுங்க” இத்தனை பலவீனமாய் தன்னிடம் கெஞ்சியவளை அப்படியே அவள் போக்கில் விட மனம் இல்லை தேவாவிற்கு.
லாக் செய்யப்பட்டிருந்த கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவள் இரண்டு கைகளையும் தன்னுடைய ஒரே கையில் பிடித்து தன்னை நோக்கி திருப்பிக்கொண்டான்.
“சைல்ட் லாக் வச்சது எவ்ளோ வசதியா போச்சு பாரேன்” அவளை பார்த்து சாலையை பார்த்தான்.
கண்ணில் நீர் பெருகி நிற்க தன் கைகளோடு பிணைத்திருக்கும் அவன் கையை பார்த்து, “கை எடுங்க ப்ளீஸ்” என்றாள்.
“அடம் பிடிக்க மாட்டேன்னு சொல்லு கொழந்தை” மென் புன்னகையோடு தேவா அவளை பார்த்தான் ஓரக்கண்ணால். உடனே வந்தது பதில், “மாட்டேன்”
அவனும் அவள் கையை விட, கதவோடு ஒட்டிக்கொண்டு பெரிய பெரிய மூச்சுகள் விட, ஜன்னல் கதவை அவளுக்காக திறந்துவிட்டு வாகனத்தின் வேகத்தை குறைத்தான்.
அவள் விழிகளை பார்த்து மெல்லிய புன்னகையோடு சிரித்தவன் ஒரு ஹோட்டலில் வாகனத்தை நிறுத்தி, “ஜூஸ் ரெண்டு வாங்கிட்டு வா” என்றான்.
“இல்ல எனக்கு வேணாம். பசிக்கல” – பைரவி
“நான் உனக்கு சொல்லல எனக்கு கேக்குறேன்” அவள் கையில் ஐநூறு ரூபாய் தாளை கொண்டு கொடுத்து கைபேசியில் மூழ்கிவிட யோசனையாக கீழே இறங்கிய பைரவி, “என்ன ஜூஸ்…” என முடிப்பதற்குலேயே,
“இன்னும் நீ போகலையா வேகமா போ” விரட்டினான்.
நொந்துகொண்டு இரண்டு மாதுளை ஜூஸை வாங்கி வந்து அவன் முன்பு நீட்ட, ஒன்றை மட்டும் வாங்கி, “அத நீ குடி” என்றான்.
“இல்ல எனக்கு வேணாம்” – பைரவி
“நீ குடிக்கிற வர வண்டி இந்த இடத்தை விட்டு நகராது” அவளை பார்த்து சிரித்துக்கொண்டே தேவா கூற வேறு வழி இல்லாமல் விழுங்கி மீண்டும் வாகனத்தினுள் ஏற, அவன் பிடிவாதத்தால் வீட்டிற்கு சென்று விடு என கேட்கும் தைரியம் காற்றோடு போனது.
மதுரையில் உள்ள ஒரு பெரிய ஜவுளி கடையின் முன்னே நிறுத்தினான்.
எதுவும் பேசாமல் தேவாவை தொடர்ந்தவள் பட்டு பிரிவிற்கு வந்ததும் தேங்கிவிட, ஒரு பார்வையிலேயே அவளை தனக்கு அருகில் அமர வைத்தான்.
“ண்ணா அருவதுக்கு மேல எடுத்து போடுங்க”
“அவ்ளோ எல்லாம் வேணாம், ஒரு நாளுக்கு தான?” பைரவி மறுத்தாள்.
“அந்த ஒரு நாள் சாதாரண நாள் இல்ல, நம்ம காலம் எல்லாம் நம்ம சிந்தனைல இருக்க போற நாள், புடவை புடிச்சிருக்கா அத மட்டும் பாரு. விலை பத்தி எல்லாம் யோசிக்க வேணாம்” கண்டிப்பாக கூறி அவளையே அவளுக்கான புடவையை தேர்ந்தெடுக்க வைத்தான்.
விலை ஏறிக்கொண்டே சென்று தொன்னூறாயிரத்திற்கு வந்து நிற்க, “உங்க அப்பாக்கு உங்ககிட்ட காசு இருக்குன்னு ப்ரூவ் பண்ண இந்த ஆடம்பரம் தேவ இல்ல”