வெடுக்கென அவள் பேசியதில் அவளை முறைத்தவன், “என் அப்பாவை நான் வெறுப்பேத்தனும்னா, ஒரு பைசா செலவில்லாம உன்ன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிருந்தாலே போதும். உன்ன கூட்டிட்டு வந்து இதெல்லாம் பண்ணனும்னு அவசியமே இல்ல”
முழு மனதோடு அவளை தன்னுடைய சரி பாதியாய் ஏற்க அவன் தயாராக நின்ற பொழுதும் குற்றம் சுமத்தும் பாவனையோடு அவள் நிற்பது வேதனையை கொடுத்தது தேவாவிற்கு. எழுந்து சென்றான் அவ்விடத்தை விட்டு.
கடையை விட்டு வெளியே வந்தவன் கோவத்தை தணிக்க சூடாக ஒரு டீயை குடித்து ஆண்கள் பிரிவிற்கு சென்று தனக்கான திருமண உடையை தேர்வு செய்து அவளை பார்க்க வர, சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தாள், அவன் விட்டு சென்றதை போலவே இருந்தது அந்த புடவைகள் மொத்தமும்.
“நீ இன்னும் எடுக்கலயா?” ஆழ்ந்து வந்த அவன் குரலில் தலையை உயர்த்திய பைரவியின் கண்களிலிருந்து ஓர் சொட்டு நீர் வெளியேற தன்னையே நொந்து நெற்றியை நீவி விட்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான் தேவா.
“இதுக்கு தான் கூட்டிட்டு வந்திங்களா?” வலி நிறைந்த குரலோடு அவள் கேட்க,
“மனசு மொத்தமும் சந்தோசம் தான் இருந்தது, நீ அந்த கேள்விய கேக்குற வர” என்றான் அவனும் சலிக்காமல்.
“அண்ணே நீ எடுத்து போடு” சாந்தமாக பேசியவனை பார்க்காமல் அவன் மனம் விரும்புவதை செய்ய முடிவெடுத்து அவளே அவளுக்கான புடவையை பார்க்க துவங்கினாள்.
அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு வெங்காய சருகு நிற புடவையில் அடர்ந்த நீல நிற பார்டர் வைத்த புடவையில் பூக்கள் இழையோடி மொத்த புடவையையும் அலங்கரித்திருக்க அதனை பார்த்ததுமே பைரவியின் மனம் அதனை தன்னுடையதாக்கியது.
யோசனையோடு அவன் முன்பு அதை நீட்ட, “அழகா இருக்கே” என்றான் சில நிமிடங்களுக்கு முன்பு அவள் பேசியதை மறந்தவனாக.
“உனக்கு ஓகே தான?” பைரவி ஆம் என தலையை அசைக்க,
“கம்மியான ரேட்க்கு எடுக்கலாமா?” கேலியான புன்னகையோடு தேவா அவளை பார்த்தான். அவன் சூட்சமம் புரிந்து,
“உங்களுக்கு எடுக்கலாம் வாங்க” என பேச்சை மாற்ற தான் வாங்கிய பில்லை காட்டினான்.
“ஏறு பொழுதுக்குள்ள முகுர்த்த டிரஸ் எடுக்கணும்னு சொன்னாங்க, அதான் நான் எடுத்துட்டு வந்துட்டேன், இப்போ பொறுமையா உனக்கு இன்னும் அஞ்சு புடவை அப்றம் வீட்டுல இருக்க எல்லாருக்கும் ஒன்னு எடு” அன்னைக்கும் தங்கைக்கும் அவன் தேர்வு செய்ய, வீட்டினருக்கு பைரவி எடுத்தாள்.
வேக வேகமாக தேர்வு நடக்க புடவைகள் அனைத்தையும் வாங்கிய பிறகு மதுரையில் தோழி ஒருத்தி மூலம் ரவிக்கை தைக்கும் கடைக்கு அவளை அழைத்து சென்று அந்த வேலையையும் முடித்து ஒரு பெரிய உணவகம் அழைத்து வந்தான்.
செல்லும் வழி எங்கும் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான ஒரு நிகழ்வை அவளிடம் பகிர்ந்துகொண்ட வர, அவன் பேசுவதை அரை மனதாய் கேட்டுவந்தாள் பைரவி.
ஹோட்டல் வந்ததும் அவள் ஆர்டர் கொடுப்பாள் என காத்திருக்க தேவாவின் பசி தான் கூடியது, பொறுத்து பார்த்தவன் தானே அந்த வேலையை கையிலெடுத்து சில பல உணவு வகைகளை ஆர்டர் கொடுத்து அவளை பார்த்தான்.
தங்களுக்காக பேச தனிமை வேண்டுமென ஆசைப்பட்டு எ.சி ஹாலிற்குள் அழைத்த வந்திருக்க அங்கு இவர்களை தவிர வேறு எவரும் இல்லை.
தங்கள் சுற்றத்தையே பார்த்திருந்தவள் கண்கள் பயத்தில் நர்த்தனமாட, “வெளிய போய் ஒக்காரலாமா?” – பைரவி
“ஏன் இங்க அமைதியா தனியா நல்லா தானே இருக்கு?” – தேவா
“ப்ளீஸ் இங்க எனக்கு புடிக்கல” அவள் கெஞ்சலில் மனம் இறங்காமல்,
“வெளிய கஸ கஸ-னு இருக்கும் பைரவி, அமைதியா இரு”
இவன் வரப்போவதில்லை என்பது தெரிய அதற்கு மேல் அங்கு தனியாக இருக்க மனம் ஒவ்வவில்லை, இருக்கையை விட்டு எழுந்த பைரவி, “எனக்கு சாப்பாடு வேணாம், நான் கார்ல இருக்கேன்” – பைரவி
“என்னடி உனக்கு பிரச்சனை” அவளோடு தானும் எழுந்தான், “சரி வா வெளிய ஒக்காரலாம், ஆனா அங்க வந்துட்டும் ஏதாவது சொல்லிட்டு இருக்காத”
கட்டளையோடு அவளை வெளியிலிருந்து டேபிள் ஒன்றை பார்த்து அமர வைத்தவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
உள்ளே இருந்த பொழுது பயத்தில் வெளிறியிருந்த அவள் கண்கள் இப்பொழுது சற்று ஆசுவாசமடைந்தது.
உணவு வந்ததும் அவளுக்கு முதலில் வைத்தவன் பைரவி உண்பதற்காக காத்திருந்து பிறகு தன்னுடைய இலையில் பரிமாறிக்கொண்டான்.
“ஏன் பைரவி உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா?” விழிகள் விரித்து அவனை பைரவி பார்க்க, “அதுவும் இந்த மம்பட்டியான் பாட்டுக்கு ஸ்டெப் எல்லாம் தெரியுமா?”
மிக ஆர்வமாய் அவன் கேட்கவும் உண்ட உணவின் காரத்தோடு அவன் கேள்வியின் காட்டம் உணவு புரையேறியது. அவள் தலையிலடித்து கையில் தண்ணீரை திணிக்க இன்னும் அவன் மேல் இருந்து அதிர்ச்சியான பார்வையை விலகவில்லை பைரவி. அவளுக்கு எதற்காக இந்த கேள்வி அவனிடமிருந்து வந்ததென குழப்பம்.
“தெரியலனா தெரியலனு சொல்லுடி அத விட்டு இது என்ன பார்வை?”
இரண்டு கவளம் உண்டவன், “நீ என்ன படிச்ச?” கேள்வி எழுப்பினான்,
“சிவில்” – பைரவி
“எந்த காலேஜ்?” – தேவா
“மெப்கோ” – பைரவி
“நல்ல காலேஜ் தான், ஆனா நான் படிச்ச காலேஜ் அளவுக்கு இல்ல” அவன் கேலியில் தலை தூக்கி, “எந்த காலேஜ்?” என்றாள்.
மெல்ல வந்த அவள் பேச்சிற்காக காத்திருந்தவன், “அதுவும் இருக்கு” என்றவன் சட்டென தலையை தூக்கி, “ஹே அப்போ நீ என்ன பத்தி முன்னாடியே கவனமா தெருஞ்சு வச்சிருக்கியா?” ஆசையாக அவளிடம் கேட்டான் தேவா.
இந்த கோணத்தில் அவன் கேள்வியை எதிர் பார்க்கவில்லை பைரவி, “இல்ல, இல்ல, வீட்டுல பேசிட்டு இருந்தப்போ கேட்டேன். உங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியாது”
“இனி தெரிஞ்சுக்கோ” என்றவன் தன்னுடைய கைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
யோசனையோடு வாங்கி பைரவி பார்க்க அவனுடைய இரண்டு காளைகளின் படம், அதை தாண்டி சேவல்கள், நாய், என அவனுடைய சொத்துகளின் வித விதமான படங்கள் வரிசையாக நின்றது.
சில புகைப்படங்களில் தேவாவும் நிற்க, ஒரு புகைப்படத்தில் காளையனுக்கு அருகில் தேவா மிரட்சியாக புன்னகையோடு நிற்பதை பார்த்து தானாக சிரிப்பு ஒட்டிக்கொண்டது.
“இந்த மாடு ரொம்ப கம்பீரமா இருக்கு, உங்களுக்கு பயம் இல்லையா?” அவன் முகம் பார்த்து சிரிப்போடு கேட்டாள்.
“அவனை பாத்து நான் எதுக்கு பயப்புடனும், பாக்க தான் முரடன்” பேச்சுவாக்கில் அவள் இலையில் இன்னும் கொஞ்சம் பிரியாணி வைத்தான்,
“ஆனா அவனுக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை வந்துட்டா குழந்தையா மாறிடுவான்”
“பேர் என்ன வச்சிருக்கீங்க?” – பைரவி
“காளையன், இன்னொரு சின்ன காளை இருந்ததுல, அவன் புலி வேந்தன், புலிக்குளம் வகை. இப்ப தான் ரெண்டு வயசு ஆகுது” அதனை வாங்கியது அதன் வளர்ப்பு, பயிற்சி என தேவா கொடுத்த பேச்சில் உணவு பைரவிக்கு சளைக்காமல் சென்றது.
“இதுனால தான் மாமா உங்க மேல கோவமா இருக்காங்களா?”
சிரித்தான் தேவா, “மாடு மேய்க்கிறேன்னு சொல்லுவார், சொல்லிட்டு போகட்டும். எம்.பி.எ படிச்சவன் லுங்கி கட்டிட்டு விவசாயம் பண்ணா யார் தான் ஏத்துக்குவாங்க?”
அவன் முகம் பார்த்து, “இன்னும் இருவது வருசத்துல விவசாயி தான் கோடீஸ்வரனு புரிஞ்ச யாரும் அந்த விவசாயத்தை தப்பா பேச மாட்டாங்க” இலையிலுருந்த உணவை உண்டு கை கழுவ செல்லும் அவளையே விழி அகலாமல் பார்த்திருந்தான் தேவானந்த்.
விருதுநகர் செல்லும் வழியிலே வீட்டினருக்கு அழைக்க இன்னும் மண்டபத்தில் தான் அனைவரும் இருப்பதாக கூற, வாகனத்தை மண்டபத்தின் பார்க்கிங்கில் நிறுத்தி அமைதியாக இருக்க பைரவி சில நிமிடங்கள் அமர்த்திருந்தவள் கதவை திறந்து இறங்க, “ஏய் சக்கரை” அவன் அழைப்பில் பைரவி தேவாவை திரும்பி பார்த்தாள் உணர்ச்சிகளற்று.
“தாத்தா ஆச்சிகூட ஊருக்கு போறேன், நம்ம கல்யாணம் அன்னைக்கு தான் திரும்ப வருவேன்” சரி என தலை அசைக்க,
“பாய் சொல்ல மாட்டியா?” ஏக்கம் வழிந்தோடிய அவன் குரல் அவளை தவிப்புக்குளாகியது.
தலை தாழ்த்தி தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து அவனை பார்த்து, “சாரி” மன்னிப்பு ஒன்றை வைத்து நிற்காமல் பைரவி சென்றுவிட, அவளை பார்த்துக்கொண்டே இருந்த தேவாவின் முகத்தில் அத்தனை பிரகாசமாய் புன்னகை.
எதற்காக இந்த புன்னகை என புரியவில்லை, அன்னை பேசிய அன்று அந்த முகத்திலிருக்கும் வேதனை பாதித்ததா என தெரியவில்லை, அவள் கைகளில் மோதிரமிட்ட நொடி அவன் கண்களை நனைத்த அந்த கண்ணீர் துளி அவனை மொத்தமாய் கரைத்திருந்தது.
அதன் பிறகு அன்னை பேசியதை கேட்டு அவள் உடல் குலுங்கி அழுத அந்த நிமிடம் உறுதி பூண்டது மனம், ‘இவள் தான் இனி உன் வாழ்க்கை என’ எத்தனை இலகுவாய் சுற்றி வந்தவன் பைரவி என்னும் வரும் பொழுது அவனால் அவளை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை.
அவளை பார்த்த முதல் நாளிலிருந்து அவள் முகம், அதில் அப்பிக்கிடந்த வருத்தம் அவனை சலனமே இல்லாமல் பைரவியை திரும்பி பார்க்க வைத்தது. அதனால் தான் என்னவோ மற்றவர்களிடம் பேசுவது போல் அவளிடம் எளிதாக வரிந்துகட்டி பேச முடியவில்லை.
பைரவியின் திருமண புடவை தவிர ஏனைய அவளது புடவைகளை தானே வைத்துக்கொண்டு மற்றவர்களின் உடைகள் அத்தனையையும் பார்வதி கையில் ஒப்படைத்தான் தேவா.
“கல்யாணம் ஆக முன்னாடியே இந்த ஆட்டம் ஆட வக்கிரா அவ, இதுல கல்யாணம் ஆனதும் என்ன பண்ண காத்துருக்காளோ அந்த மகராசி”
“அப்பா ஆடுறத விட நான் கம்மியா தான் மம்மி ஆடுறேன். உங்க இஷ்டத்துக்காக தான கல்யாணத்துக்கு முன்னாடி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணீங்க?”
சுற்றி இருந்த காதுகள் தங்கள் பேச்சை தான் கேட்கின்றதென தெரிஞ்சு மகன் பேசுவதை உணர்ந்தவர் கணவனை பார்த்து முறைக்க,
“டேய் பேசாத நீ. எங்களை கேக்காம உன் இஷ்டத்துக்கு புடவை எடுத்தா கேக்காம அமைதியா இருக்கணுமா?” வீட்டினரை தவிர எவரும் அங்கில்லாததால் ரத்தினத்துக்கு வசதியாகியது.
“அங்கையும் வந்து முறைச்சிட்டே சுத்தவா?” அன்னையை பார்த்தபடியே கேட்டான். மகன் காலையிலிருந்து தன்னை கவனித்ததை உணர்ந்தவர் முகத்தை வெட்டி திரும்பிவிட்டார்.
“நான் தான் ரத்தினம் போக சொன்னேன், வா என்கிட்ட வந்து சண்டைக்கு நில்லு” அர்ஜுனன் இடைபுகவும் மொத்தமும் அமைதியாகிவிட்டது கூட்டம். அனைவரிடம் கூறி தாத்தா ஆச்சியோடு தேவா கிளம்பிவிட விக்னேஷ் திருமணத்தில் விட்ட சம்ரதாயங்கள் தொடர்ந்தது.
நாட்கள் வேகமாக உருண்டோட இதோ இன்று திருமணம். விருதுநகரில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்றில் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார் அர்ஜுனன்.
இறைவன் சன்னிதானத்திற்கு வெளியில் போட்டிருந்த கம்பிகளுக்கு இரு பக்கமும் உறவுகள் நிற்க, தேவா எடுத்து கொடுத்த புடவையில் மிதமான ஒப்பனையோடு மணப்பெண்ணுக்கான அலங்காரத்தில் மிளிரும் மகளை பார்த்த சீதாவிற்கு அத்தனை நிறைவாக இருந்தது உள்ளம்.
“விக்கி பாப்பாவே கெளம்பி வந்துட்டாடா, இன்னும் என்ன தான்டா பண்ணுறான் அவன்?”
ரத்தினம் கைபேசி வழியாக மகனை கேட்க சரியாக கழுத்தில் மாலையோடு பைரவி அருகில் வந்து நின்றான் தேவானந்த். தந்தை முறைத்ததையோ அன்னையின் எரிச்சலான பார்வையோ தன்னை சிறிதும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டான்.
பைரவிக்கு தான் தன்னை சுற்றி இருந்த கூட்டமும், கழுத்தில் மாலை, அணிகலன், சற்று தூரத்தில் விடாமல் இசைந்துகொண்டிருக்கும் மேள தாளங்களின் சத்தமும் கை கால்களுக்கு நடுக்கத்தை கொடுக்க முன்னாலிருந்த இரும்பு கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
மனம் ரத்தம் சிந்தி அழுவது போல் ஊர் உணர்வு, மூச்சு விட கூட அந்த கூட்டத்தினுள் சிரமமாகி போனது. சகோதரர்களோடு பேசி சிரித்துக்கொண்டிருந்த தேவா எதேச்சையாக பைரவியை பார்க்க முகமெல்லாம் வியர்த்து கைகள் வலிக்குமளவு இரும்பை கெட்டியாக பிடித்திருப்பது தெரிந்தது.
“என்ன ம்மா ஆச்சு இப்டி வேர்க்குது” அர்ஜுனன் பேத்தியின் நிலை பார்க்க அதற்குள் அவள் கை பிடித்து கூட்டத்தை விட்டு வெளியே இழுத்து சென்றான் தேவா.
மகன் செயலில் சுற்றம் ஏதேனும் பேசி விடுவார்களோ என பயந்து, “தேவா என்ன பண்ற நீ?”
பயத்தோடு அவனை தொடர, மகளும் மனைவியும் உடன் வந்தனர். தந்தையை பார்த்தவன், “எனக்கு அவளை பாத்துக்க தெரியும், வராதீங்க ம்மா”
தந்தைக்கு பதில் சொல்லாமல் அன்னையிடம் கூறி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு சற்று தள்ளி வந்து மரத்தினடியில் நின்றான்.
சீதாவிற்கு மகளின் நிலை வருத்தத்தை அளிக்க, அன்னையின் பயத்தை உணர்ந்து சகோதரியை நெருங்க வந்த சந்தோஷ், நாயகிக்கு தேவா கொடுத்த பதிலை கேட்டு இடைவேளை விட்டு நின்று அன்னையிடம் கண்களை மூடி திறந்து சமாதானம் கூறினான்.
பைரவியை அங்கிருந்த ஒரு சிறிய கல் மண்டபத்தில் அமர வைத்து அவள் மூச்சு சீராக காத்திருந்த தேவா, அவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை சிறிதும் குறையாமலிருப்பதை பார்த்து தன்னுடைய கை குட்டையை கொடுக்க வாங்கி துடைத்த பின்னர் தான் உடலின் நடுக்கம் நின்றது.
“நீ ஒன்னும் பயப்புட வேணாம், நான் திருடலாம் மாட்டேன்” என்றான் தேவா.
புரியாமல் விழி உயர்த்தி அவனை பைரவி பார்க்க, “இல்ல செயின் திருட மாட்டேன், பயம் வேணாம்னு சொல்றேன்” கேலியாக அவன் இதழ்கள் விரிந்திருக்க மனம் சற்று ஆசுவாசமடைந்தது பெண்ணுக்கு.
அவளை கூர்ந்து பார்த்தவன், “ஏன் பைரவி இந்த பதட்டமும் பரிதவிப்பும்?” சட்டென அவள் கண்கள் குளம் கட்டி நின்றிட, அவள் அழுவதை எவரும் பார்த்துவிட கூடாதென்று அவளை மறைத்து நின்றுகொண்டான் தேவா.
“எனக்கு பய… பயமா இருக்கு ஆனந்த்” அழுதாள், “ரொம்ப பயமா இருக்கு. உங்களுக்கு நல்ல மனைவியா இருக்க முடியுமான்னு தெரியல, உங்களோட ஆசையெல்லாம் என்னால பூர்த்தி செய்ய முடியுமான்னு கூட தெரியல” முகத்தை மூடி அழுத்தவளோடு அவள் மெல்லிய தேகமும் குலுங்கியது.
அவளது சிறப்பான அழைப்பில் மனம் குளிர்ந்த தேவா, “டைம் எடுத்துக்கலாம் பைரவி, உனக்கு எவ்ளோ டைம் வேணுமோ அவ்ளோ டைம் எடுத்துக்கோ.
என்ன பத்தி யோசிக்காத, உன் மனசு என்னைக்கு முழுசா மாறி வருதோ அன்னைக்கு நமக்கான வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிக்கலாம். அதுவுமில்லாம கல்யாணத்துக்கு அப்பறமும் பேச்சிலர் வாழ்க்கையை வாழுறதுக்கு எத்தனை பேருக்கு குடுத்து வச்சிருக்கும்?”
பெண்ணின் அழுகை விக்கலை உருமாற்றம் பெற்றிருக்க அவன் பேச்சில் தலையை நிமிர்த்து அவனை பார்த்தாள்,
“இல்ல எனக்கு தோணுறத நானும் பண்ணலாம்ல, பாரு நாம இங்க வந்ததுல இருந்து அந்த கோல்டன் சுடி போட்ருக்க பொண்ணு என்ன பாத்துட்டே இருக்கு. எந்த விதமான சங்கடமும் இல்லாம இப்ப பாக்குறேன், உன் கழுத்துல தாலி கட்டிட்டா உள் மனசு உறுத்தும்.
இதுவே உனக்கு வேணும்கிற டைம் எடுத்துக்காட்டா, நான் குற்ற உணர்ச்சியே இல்லாம போய் அந்த பொண்ணுகிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்துடுவேன்ல” கண் மொத்தமும் தேவாவிற்கு அந்த பெண் மேல் தான் இருந்தது.
தலையை திருப்பி பைரவி பார்க்க அவன் கூறுவது போல் தான் தோழிகளோடு பேசுவது போல் அந்த பெண் தேவாவை பார்த்தாள் சில நொடிகள்.
“நீங்க யார்கிட்ட வேணாலும் பேசுங்க, நான் யாரு அத கேக்க?” விருட்டென வந்த கண்ணீரை பார்த்த தேவா சிரிப்போடு அதை துடைக்க வர, பயத்தில் பின்னால் சென்றது பைரவின் உடல்.
“சரி தொடல… தொடல ரிலாக்ஸ் ஆகு, உன்ன தொடைல, உனக்கு வேணும்கிற ஸ்பேஸ் எடுத்துக்கோ. எதுக்கும் நான் உன்ன அவசர படுத்த மாட்டேன். ஆனா இப்போ நீ பயம், பதட்டம் எது இருந்தாலும் தூக்கி ஓரமா வச்சிட்டு வந்து என் பக்கத்துல நில்லு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்”
அவன் கண்களில் தெரிந்த உண்மை பைரவிக்கு சற்று நம்பிக்கையை கொடுக்க தலை அசைத்து கண்ணீரை துடைத்தாலும் அவள் விக்கல் இன்னும் மட்டுப்படாமல் இருப்பதை கவனித்து சந்தோஷிடம் தண்ணீர் கேட்டான்.
சந்தோஷ் வந்து கொடுக்க தண்ணீர் பருகி தன்னை பார்த்தவளிடம் முகம் எல்லாம் புன்னகையோடு, “பைரவி சரி”
குனிந்து அவள் முகம் பார்த்து அவன் கெஞ்சியதில் வரவழைத்த புன்னகையோடு சந்நிதானத்தை நோக்கி நடந்தாள் பைரவி. தெளிந்த முகமாய் வந்த பைரவியை பார்த்த வீட்டினருக்கு நிம்மதி ஏற்பட்டு போனது.
நல்ல நேரம் முடியும் தருவாயிலிருக்க அய்யர் மந்திரங்கள் ஓத இறைவன் முன்பு வைத்து ஆசீர்வாதம் பெற்ற பொன் தாலி தேவாவின் கைகளுக்கு வந்தது.
தலை தாழ்த்தி கண்களை மூடி பைரவி நிற்க தாலியை அவளருகே எடுத்துச் சென்று, தாலியை ஏந்தியிருந்த கையோடே ஒற்றை விறல் கொண்டு அவள் நாடியை உயர்த்தி,
“சக்கரை…” அத்தனை ஆசையோடு தன்னை அழைப்பவனின் பேச்சை தன்னை போலே அவன் கண்களை தலை தூக்கி நோக்கினாள் பரிதவிப்போடு.
அந்த பார்வைக்காகவே காத்திருந்தவன் நிம்மதியோடு சிரிப்பாய், “அழகிடி நீ”
அவளுக்கு மட்டும் கேட்கும் கெஞ்சலோடு குலைந்தவன் முழு மனதோடு அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து தன்னுடைய சரி பாதியாய் ஏற்றுக்கொண்டான் திருத்தங்கள் தேவைப்படும் அவள் வாழ்க்கையையும் அவளையும்.