இத்தனை நேரம் இதற்காக தானே காத்திருந்தான் தமிழ். பின் இசையுடன் பேசலாம் என அத்தனை ஆசையாய் அழைத்தவனுக்கு மலர் உடன் இருந்தது சற்று ஏமாற்றம் தான். ஓர் இரு வார்த்தைகள் பேசிவிட்டு அவள் நகர்ந்து விடுவாள் என இவனாக பேச்சு கொடுக்க மலரோ மனசாட்சியே இல்லாமல் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துவிட்டாள்.
இப்போது இசையுடன் கிடைத்த தனிமையை சரியாக பயன்படுத்த நினைத்தவன் அவளுடன் பேச்சை வளர்க்க சிவ பூஜையில் கரடி போல் நுழைந்துவிட்டாள் முல்லை.
புத்தகம் எடுக்க அறைக்குள் வந்தவள் இவன் இசையுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், “ஹாய் இசை அக்கா..” என வலிய வந்து ஒட்டிக்கொண்டாள். இசை இவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்த பின் முல்லை அவளிடம் நன்றி கூறி நட்பு பாராட்ட இப்போது இருவரும் மேலும் நெருக்கமாகி விட்டனர்.
தங்கையின் செயலில் தமிழுக்கு எங்காவது முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது. பாவம் அனைத்து பக்கத்திலிருந்தும் அம்பெய்தால் அவனும் என்ன செய்வான்?
கடுப்பானவன் சைகையில் ஜாடை பேசி தங்கையை அப்புறப்படுத்த அவளோ அண்ணனை சந்தேக பார்வை பார்த்தாள். அவளும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள் இசை என்றாலே இவன் முகம் டால்லடிப்பதும் அவளுடன் பேசும் போதெல்லாம் பால் விளம்பரத்திற்கு வரும் பசுவை போல் இவன் பல்லை பல்லை காட்டுவதையும். ஏன் இப்போது கூட இவன் பல்லை காட்டியதை வைத்து தான் இசையுடன் பேசுகிறான் என்பதை அறிந்து கொண்டாள்.
தங்கையின் பார்வையை உணர்ந்த தமிழ் மேற்கொண்டு அவளை துரத்தவில்லை. பின் கடந்த வாரம் சந்தேகம் தாளாமல் நேரடியாகவே கேட்டுவிட்டாளே “நீ இசை அக்காவ லவ் பண்றியா?” என்று.
தங்கையின் கேள்வியில் திணறியவன் “இல்ல ஃபிரண்ட்டு தான்” என அப்போதைக்கு சமாளித்தான். தன் உணர்வுகளில் தனக்கே தெளிவில்லாத போது அவளிடம் என்ன சொல்ல? அதுவுமில்லாமல் சின்ன பெண்ணிடம் காதல் கீதல் என பேச சங்கடமாக இருந்தது.
தமிழை கண்டு கொள்ளாத முல்லை தொலைபேசியுடன் தனியே போய், “எப்படி இருக்கீங்க அக்கா..” என கதை பேச தொடங்கிவிட அவனோ “ஃபோன குடு முல்லை” என தங்கையின் பின் சுற்றிக் கொண்டிருந்தான்.
“பாப்பா இங்க வா” சற்று நேரத்தில் கலைவாணி அவளை அழைக்கவும் இது தான் சந்தர்ப்பமென முல்லையிடமிருந்து ஃபோனை பிடிங்கியவன் “அம்மா கூப்பிடுறாங்க போ..” என அவள் முறைப்பையும் பொருட்படுத்தாமல் தங்கையை துறத்திவிட்டான்.
நிம்மதியா ஒரு ஃபோன் பேச முடியுதா.. புலம்பியவன் எங்கே இசை அழைப்பை துண்டித்து விட்டாளோ என்ற சந்தேகத்தில் “ஹலோ இசை..” என மெதுவாக அழைக்க இவன் புலம்பலையெல்லாம் கேட்டவள், “ஃபோன குடுக்க மாட்டிங்கறாங்களா சீனியர்..” என சிரிப்புடன் கேட்க “நீ தான் பாக்கிறியே” என்று தமிழும் சிரித்தான்.
இன்னிசையுடன் ஓர் பத்து நிமிடம் பேசியிருப்பான் அதற்குள் வந்துவிட்டான் வில்லன். அரவிந்திடமிருந்து இசைக்கு விடாமல் அழைப்பு வர, “சீனியர் இந்த அரவிந்த் வேற கால் பண்ணிட்டே இருக்கான்.. நான் அப்பறம் பேசுறேன்” என அழைப்பை துண்டித்துவிட்டாள்.
இதுவரை “தூக்கம் வருது.. கால் வருது.. அப்பறம் பேசலாமா.. சாரி சீனியர்” என தன்மையாக பேசி துண்டிப்பவள் இன்று சட்டென வைத்துவிட தமிழுக்கு என்னவோ போல் ஆனது அதுவும் அரவிந்த்திற்காக என்பது இன்னும் எரிச்சலை தந்தது.
அது என்ன என் அழைப்பை துண்டித்து விட்டு அவனுடன் பேசுவது? என்னைவிட அவன் அத்தனை முக்கியமா? ஏன் என் உணர்வுகள் மட்டும் ஒருதலை பட்சம்? என்னை போல் இவளுக்கு எந்த உணர்வுகளும் இல்லையா? என்ற கேள்விகளெல்லாம் மனதில் மாறி மாறி ஓட மனதளவில் சோர்ந்து போனான் தமிழினியன்.
“ஏய் எரும எதுக்கு நச்சுனு நச்சுனு கால் அடிச்சுட்டே இருக்க?” இசை கடுப்பாக கேட்க “என்னடி கால் வெயிட்டிங்லையே வருது..” என்றான் அரவிந்த்.
“சீனியர் கிட்ட பேசிட்டு இருந்தேன்”
“ஓஓ.. சீனியர் கிட்டயா..” அவன் ராகம் இழுக்க “ஏய் ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் தான்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல” என உடனே மொழிந்தாள் இசை.
சிரித்தவன், “நான் இப்போ எதுவுமே சொல்லலையே..” என போட்டு வாங்க தன்னையே கடிந்து கொண்டவள், “இப்ப வெட்டி கதை பேச தான் கால் பண்ணியா எனக்கு நிறைய வேலை இருக்கு.. நான் வைக்கிறேன்” என அழைப்பை துண்டிக்க போக
தன் விளையாட்டை கைவிட்டு, “இசை.. இசை..” என தடுத்தவன் “தேங்க் யூ சோ மச்” என்றான் மனதார.
“எதுக்கு டா?”
“அது இன்னிக்கு கயல்..” அவன் ஆரம்பிக்கும் போதே இசையிடமிருந்து ஃபோனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்ட மலர்விழி, “உன் தேங்க்ஸ தூக்கி குப்பைல போடு” என்றாள் வெடுக்கென்று. இசை அரவிந்த்தின் அழைப்பை ஏற்பதற்கு முன்பே தன் வேலையை முடித்து விட்டு வந்துவிட்டாள்.
“ஏன் டி இப்படி பேசுற?” அவன் ஆதங்கமாய் கேட்க
“நாங்க கயல் அக்காவ இருக்க வச்சதுக்கு ஏதாவது பிரயோஜனம் இருந்தா நீ தேங்க்ஸ் சொல்றதுல ஒரு அர்த்தம் இருக்கு.. நீ தான் அவங்க கிட்ட பேசவே இல்லையே”.
இசையும் அதை ஆமோதிக்க “அது.. எனக்கு அவள பாத்தாலே ஒரு மாதிரி படபடப்பா பேச்சே வர மாட்டிங்கிது” என்றான் தயக்கத்துடன்.
“ஏன் உனக்கு பிளட் பிரஷர் டயாபடீஸ் ஏதாவது இருக்கா?” மலர் கடுப்பாக கேட்க “சும்மா அவன் திட்டாதே.. கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தவங்க கிட்ட எப்படி உடனே சகஜமா பேச முடியும்” இசை அவனுக்கு பரிந்து பேச அதை மறுத்தவன் “கொஞ்ச நாள் முன்னாடி இல்ல ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தே தெரியும்..” என்றான்.
அவன் பதிலில் “அடப்பாவி ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தா..” அதிர்ந்தவர்கள் “இத்தன நாள் எங்க கிட்ட சொல்லவே இல்ல?” என ஒருசேர கேட்க “என்னனு சொல்ல? நான் லவ் பண்ற பொண்ணுக்கு நான் யாருனே தெரியாதுனா” என்றான் எள்ளலாக. பேச்சில் கேலி இருந்தாலும் குரல் என்னவோ உடைந்து தான் வந்தது.
இந்த பேச்சில் அரவிந்த் அமைதியாகிவிட அவன் உணர்வுகள் புரிந்த இசை, “விடு டா ஃபீல் பண்ணாத” என்க அழ மூச்சிழுத்து தன்னை நிதானித்துக் கொண்டவன், “இல்ல ஐம் ஓகே” என்றான் சிறிய சிரிப்புடன்.
அவனை இயல்பாக்க நினைத்த மலர், “சரி சரி சொல்லு உன் லவ் ஸ்டோரிய” என கேட்க கயலின் முகம் கண்முன்னே வரவும் மெல்ல முறுவலித்தவன் பேச தொடங்கினான்.
“ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு ஒரு வாரம் இங்கிலீஷ் ஹார் மட்டும் எங்களுக்கு கம்பையின் கிளாஸ் போட்டாங்க அப்போது தான் கயல்ல முதல் தடவ பார்த்தேன்”
“ஓ.. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா..” மலர் இடைபுக
“அதெல்லாம் இல்ல..” மறுத்தவன் “அன்னிக்கு கிளாஸ்ல எல்லாரையும் ஒவ்வொரு பக்கம் படிக்க சொன்னாங்க. கயலோட முறை வந்தப்போ படிச்சவ தெரியாமா ஒரு சுலபமான வார்த்தைய தப்பா உச்சரிச்சிட்டா.. ஸ்கூல் முழுசா தமிழ் மீடியம் தானே படிச்சா அதனால கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும் போல.. எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. அந்த ஸ்டாஃப்வும் இந்த வார்த்தைய கூட படிக்க தெரியாதானு கடுமையா எல்லார் முன்னாடியும் இன்சல்ட் பண்ற மாதிரி திட்டீட்டாங்க.. பாவம் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்தா.. எனக்கு கஷ்டமா இருந்திச்சு.. ஒரு பொண்ணோட அழுக அந்த அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணும்னு அன்னிக்கு தான் உணர்ந்தேன்” என உணர்ச்சி வசமாக பேச “அப்போ சிம்பத்தில உனக்கு லவ் வந்துச்சா..?” என இம்முறை இசை இடைபுகுந்தாள்.
கடுப்பானவன், “என்ன கொஞ்சம் முழுசா தான் சொல்ல விடுங்களேன்..” என சத்தம் போட இருவரும் அமைதியாகிவிட்டனர்.
“அடுத்த நாள் அதே ஸ்டாஃப் கயல்ல கார்னர் பண்ணி ஸ்பீச் பேச சொன்னாங்க.. நான் கூட என்ன பண்ணவாளோனு கொஞ்சம் பயந்தேன்.. ஆனா பேசுனாளே ஒரு பேச்சு.. அங்கேயே நான் ஃபிளாட்.. அந்த மேம்க்கு மூஞ்சியே இல்ல.. என்ன சரளமாக திக்காம திணறாம அவ்ளோ தெளிவா பேசுனா தெரியுமா” என்றவன் குரலில் வியப்பும் ரசனையும் போட்டி போட்டது.
“அப்போ இருந்து அவ மேல ஒரு க்ரஷ் அது போக போக லவ் ஆகிருச்சு.. என் கயல் செம கேரக்டர் தெரியுமா இதுவர அவள மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்ல” என்றவன் சலிக்காமல் தன் காதலியை பற்றி பேசினான்.
“ஏன்டா அந்த அக்காவ இவ்ளோ லவ் பண்ற அப்பறம் ஏன் இத்தன நாள் அவங்க கிட்ட பேச முயற்சி பண்ணல..” அவன் பேச்சை கேட்ட மலர்விழிக்கு அத்தனை ஆதங்கம் இந்த காலத்தில் இப்படி இருக்கிறானே என்று.
“பண்ணாம இருப்பனா மலரு.. அதெல்லாம் நிறைய முயற்சி பண்ணியிருகேன் ஆனா ஒன்னும் வேலைக்காகல” என்றான் சோர்வாக.
“இத்தன நாள் நீ எந்த நம்பிக்கையில டா இருந்த?” இசையால் இன்னும் நம்ப முடியவில்லை.
“சத்தியமா தெரியல.. ஆனா என் மனசு சொல்லும் காலத்துக்கும் கயல் மட்டும் தானு.. அந்த நம்பிக்கையா கூட இருக்கலாம்” என்று புன்னகைத்தான்.
விவரம் தெரிந்த வயதிலிருந்து அரவிந்த்தை பார்க்கும் இருவருக்கும் அவனின் இந்த பக்கம் வியப்பாக இருந்தது. என்ன நடந்தாலும் அவன் காதல் கைகூட வேண்டும் என நினைத்தனர்.
மேலும் அவனுடன் ஒர் கால் மணி நேரம் பேசிவிட்டு இருவரும் அழைப்பை துண்டித்தனர்.
மாறி மாறி ஃபோன் பேசியதில் அதன் சார்ஜ் மொத்தமும் வடிய இசை அதை சார்ஜில் போட்டுவிட்டு வர மலர் எழிலின் சட்டையை கையில் வைத்துக் கொண்டு உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அறைக்குள் வந்த இசை, “என்ன டி ஆச்சு?” என கேட்க “துவச்ச அப்போ கறையே இல்ல இப்போ ஃபேன்ல கொஞ்சம் காய வெச்சதும் அங்கங்க லேச தெரியுது” என சட்டையை காட்டினாள்.
“எனக்கென்னமோ இது போகும்னு தோணல.. பேசாம நீ எழில் அண்ணாகிட்ட ஒரு தடவ பேசி பாரு” என்றாள் இசை.
“நீ சீனியர் கிட்ட பேசும் போது பேசுனேன் டி.. திமிரு பிடிச்சவன் கறை போகலைனா புது சட்டை வாங்கி குடினு சொல்றான்.. அதுவும் இது ரெண்டாயிரமாம் அதே ரெண்டாயிரத்துக்கு வாங்கி குடுக்கனும்மாம். ஒரு எம்பது ரூபா ஜூஸுக்கு நான் ரெண்டாயிரம் தண்ட செலவு பண்ணனும் மா..”
“அப்போ என்ன டி தான் பண்றது?” இசை சலிப்புடன் கேட்கவும் “எனக்கு ஒரு யோசன.. இரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என வீட்டிற்கு ஓடியவள் ஒரு பையுடன் வந்தாள்.
“என்னடி இது? என் டி பண்ண போற?” என்றவளிடம் “ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்” என்றவள் பையிலிருந்து வெள்ளை நிற ஃபேப்ரிக் பெயிண்டை எடுத்து அதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து பெயிண்ட் செய்ய உபயோகிக்கும் ஸ்பான்ஜை கொண்டு மெல்ல சட்டையில் கறையான இடத்தில் ஒற்றி எடுத்தாள். லேசாக தெரிந்த கறையும் மறைந்து விட்டது. தண்ணீர் சரியான அளவு கலந்ததால் பெயிண்ட் தனியே எல்லாம் தெரியவில்லை.
“மலரு சூப்பர் டி.. எப்படி உனக்கு தோணுச்சு?” இசை சிரிப்புடன் கேட்டாள்.
“சட்டுனு தோணிச்சு டி ஆனா எந்த அளவுக்கு வரும் கொஞ்சம் பயமா இருந்துச்சு.. பட் பரவால நான் நினைச்சத விட நல்லா தான் வந்திருக்கு”.
“இந்த பெயிண்ட் அடுத்து அவங்க துவைக்கிற அப்போ போயிருச்சுனா என்ன பண்றது?” இசை சந்தேகமாக கேட்க “இது ஃபேப்ரிக் பெயிண்ட் தான் எனக்கு தெரிஞ்சு போகாது.. பட் போனாலும் பரவாயில்ல.. எனக்கு இப்போதைக்கு இதுல இருந்து தப்பிச்சா போதும்” என்று தோளை குலுக்கினாள் மலர்.
மறுநாள் காலை முதல் வேளையாக வகுப்புகள் தொடங்கும் முன் எழிலை சந்தித்து அவன் சட்டையை அவனிடம் குடுத்துவிட்டாள் மலர்விழி. வாங்கிக் கொண்டவன் அதை பிரித்து பார்த்து கறை இருக்கிறதா என ஆராய்ந்தான். கறை இல்லையென்றதும் சரி என்றவன் அவ்விடத்தை விட்டு நகர முற்பட்ட மலருக்கு கோவம் தலைக்கேறியது.
இருக்காதா? அவள் நேரம் உழைப்பு என அத்தனையும் அதில் செலவழித்திருக்கிறாளே.. மனதார வேண்டாம் ஒரு பேச்சிற்காகவாது நன்றி கூறலாம் இல்லையா.. அவள் மனம் அதை எதிர்பார்த்தது.
“ஹலோ.. உங்களுக்கு சின்ன வயசுல குட் மேனர்ஸ் எல்லாம் சொல்லி தரலையா? ஒருத்தங்க உதவி செஞ்சா தேங்க்ஸ் சொல்லணும்னு” பொறுக்காமல் கேட்டுவிட்டாள்.
அவளை தெனாவட்டாக பார்த்தவன், “இது ஒன்னும் உதவி இல்ல.. நீ செஞ்ச தப்ப சரி செஞ்சிருக்க அவ்ளோ தான்.. அதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்ல முடியாது” என்றான்.
“இப்போ கூட எவ்ளோ திமிரா பேசுறீங்க..” மலரின் வாய் அடங்குவதாக இல்லை. மனம் அவனை நன்றி சொல்ல வைக்க வேண்டும் என கங்கணம் கட்டியது.
“என்ன தான் பிரச்சினை உனக்கு?” எழில் எரிச்சலாகவே கேட்க “உங்களுக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தலையா” என்றாள்.
ஓர் அளவு அவளை கண்டு கொண்டவன், “இங்க பாரு நீ எவ்ளோ முயற்சி பண்ணாலும் நீ நினைக்கிற வார்த்த என் வாயில இருந்து வராது.. சோ நேரத்த வீணடிக்காம கிளாசுக்கு போ” என அவளுக்கு பதிலளிக்க நேரம் தராமல் தன் வகுப்புக்கு சென்றுவிட்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.