கடையில் அன்று வந்த லோடுகளை சரிபார்த்துவிட்டு வந்து அமர்ந்த அன்பரசன் தன் தொலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்க தமிழின் கல்லூரியில் இருந்து ஏதோ குறுஞ்செய்தி வந்திருந்தது.
தமிழ் காலையில் பரிட்சைக்கான கட்டணத்தை செலுத்திருந்ததை உறுதி செய்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர். இந்த செமஸ்டரில் ஆறு தாள்கள், ஆரியர் ஐந்து மொத்தம் பதினோரு தாள்களுக்கான தொகையையும் செலுத்திவிட்டதாக தெளிவான விவரத்துடன் குறுஞ்செய்தி அனுப்பிருந்தனர்.
படித்து பார்த்த அன்பரசனுக்கு அதிர்ச்சி, அப்படி ஒரு கோவம். அவருக்கு தெரிந்து இரண்டு அரியர் தான். மீதி மூன்று? அவன் சொல்லவில்லை. மகனின் செயலில் பெரும் அதிருப்தி. அன்புவிற்கு அவன் அரியர் வைத்ததை விட அவன் பொய் சொன்னதே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மகன் தன்னிடம் உண்மையாய் இல்லை என்பதை எளிதாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
படிக்க மாட்டான்.. பொறுப்பில்லாமல் சுற்றுவான்.. இப்போது பொய் சொல்லவும் ஏமாற்றவும் ஆரம்பித்து விட்டானா? என்ற சிந்தனையே அவரின் சினத்தை அதிகரிக்க போதுமானதாய் இருக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் மகனை காண வீட்டிற்கு புறப்பட்டார்.
“இப்போ தான சாப்பாட்டுக்கு வந்துட்டு போனீங்க.. ஏன் ஏதாவது மறத்து வச்சுட்டீங்களா?” சற்று முன் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பிய கணவர் மீண்டும் வரவும் கலைவாணி கேட்க அவரை அழுத்தமாய் ஓர் பார்வை பார்த்தவர், “எங்க உன் புள்ள?” என்றார்.
கணவரின் கடுமையில் ஏதோ சரியில்லை என்பது மட்டும் கலைவாணிக்கு விளங்க, “வர நேரம் தான்..” என மெதுவாகவே பதிலளித்தார்.
மனைவியின் முகத்தையே உற்று பார்த்தவர், “துரைக்கு எத்தன அரியர்?” என நக்கலாக கேட்க கலைக்கு கணவனின் வருகைக்கான காரணம் ஓர் அளவு புரிந்தது. ஆனால் அவர் முகத்தை ஆராய்ந்தவருக்கு தெரிந்து வைத்துக் கொண்டு கேட்கிறார இல்லை போட்டு வாங்க நினைக்கிறார என்பது மட்டும் விளங்கவில்லை.
பின் தானாக ஏதும் உளறி கொட்ட வேண்டாம் என நினைத்து, “ரெண்டு அரியர் தான்” என பதிலளித்தவர் “பொய் சொல்லாத கலை” என்ற கணவனின் உறுமலில் மிரண்டு போனார்.
“அம்மாவும் புள்ளையும் கூட்டா.. உண்மைய சொல்லு அவனுக்கு எத்தனை அரியர்?” என அவர் குரல் உயர்த்த “அ.. அஞ்சு அரியர்” என்றார் தயக்கத்துடன்.
கலைவாணியின் பதில் அவரின் கோவத்திற்கு இன்னும் தூபம் போடுவதாக தான் இருந்தது. மனைவியிடமும் இதை அவர் எதிர்பார்க்கவில்லை. மகன் தன்னிடம் உண்மையை மறைத்ததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் மனைவி? இவளும் தனக்கு உண்மையாக இல்லையே மகனுடன் சேர்ந்து பொய் பேசுகிறாளே என மனதளவில் வருந்தினார்.
அரியர் பொதுவாக கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர்க்கு இருப்பது தான். படிப்பின் அருமை புரிந்தவருக்கு பட்டப் படிப்பின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். அதற்கென அதை மட்டுமே முக்கியமாக நினைக்கும் ஆளில்லை அன்பரசன். ஒழுக்கத்தையும் உழைப்பையும் அதைவிட முக்கியமாக நினைக்கும் நபர்.
இன்று அவர் வெளியே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கௌரவத்துடன் வழ அவரின் ஒழுக்கமும் உழைப்புமே முழுக் காரணம் என நம்புகிறவர் அதை தன் மகனிடம் எதிர் பார்ப்பதில் தவறில்லையே.
தமிழ் ஐந்து அரியர் இருக்கும் விஷயத்தை மறைக்காமல் முன்பே கூறியிருந்தால் அந்நேர கோவத்தில் அதிகபட்சமாக அவனை சற்று கடுமையாக திட்டியிருப்பார் அவ்வளவு தான். அடித்திருக்க கூட மாட்டார் அவன் பத்தாவது வந்ததிலிருந்தே தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை அடிப்பது தவறு என அவன் மீது கை வைப்பதை கூட விட்டுவிட்டார்.
அன்பரசன் அமைதியாய் அமர்ந்திருக்க, அவர் அமைதி பயத்தை கொடுக்க மெல்ல கணவனின் அருகே சென்றார் கலைவாணி. “ஏங்க இந்த முறை அவன் கண்டிப்பா கிளியர் பண்ணீருவான்..” அப்போதும் அவர் மகனுக்கு ஆதரவாக பேச “நீ பேசாத கலை.. அவன கெடுக்கறதே நீ தான்.. எல்லாம் தெரிஞ்சிட்டே நீயும் அவன் கூட சேர்ந்துட்டு பொய் பேசுற.. அப்பறம் அவன் எப்படி எனக்கு உண்மையா இருப்பான் என்ன மதிப்பான்?” என காட்டமாக கேட்டார்.
“இல்லைங்க நீங்க திட்டுவிங்கனு தான்.. அவன் எங்கிட்டயே இன்னிக்கு காலைல தான் சொன்னான்..” கலை கணவனுக்கு புரிய வைக்க முயல அன்பு விடுவதாக இல்லை.
“காலையில சொன்ன நீ சொல்ல மாட்டியா? மிஞ்சி போனா என்ன பண்ணீற போறேன் துரைய? கோவத்துல நாலு வார்த்த பேசுவேன் ரெண்டு திட்டு திட்டுவேன்.. ஏன் அது கூட உன் புள்ளைய சொல்ல கூடாதா? அதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா?” ஆத்திரமும் ஆதங்கமுமாய் கேட்டார்.
கணவனின் உணர்வுகளை கலைவாணியால் உணர முடிந்தது. மகனின் பக்கம் மட்டுமே யோசித்தது தவறோ கணவனின் பக்கமும் யோசித்திருக்க வோண்டுமோ என தன்னையே நொந்து கொண்டார். கணவனுக்கும் மகனுக்கும் இடையே மாட்டிக் கொண்டு முழித்தவர், “ஏங்க அப்படி இல்ல..” என அவருக்கு சூழ்நிலையை விளக்க நினைக்க “போதும் கலை நீ எதுவும் பேசாதே.. இருக்கிற கோவத்துல நான் ஏதாவது பேசிருவேன்.. அப்பறம் ரெண்டு பேருக்கும் சங்கடம் ஆயிரும்” என தடுத்துவிட்டார் அன்பரசன்.
“என்ன இந்த மனுஷன் இந்நேரத்தில வீட்ல இருக்காரு” என வெளியே நின்ற தந்தையின் வண்டியை பார்த்துக் கொண்டே தமிழ் வீட்டிற்குள் நுழைய, “வாங்க சார் இன்னிக்கு காலேஜ் எப்படி போச்சு?” என்று அன்புடன் வரவேற்றார் அன்பு.
“ந.. நல்லா இருந்திச்சு ப்பா..” அவரிடம் பம்மியவன் ‘வரவேற்பெல்லாம் பயங்கயமா இருக்கே அப்போ கண்டிப்பா ஏதாவது வில்லங்கமா இருக்கும். இங்க நிக்காத தமிழ் எஸ்கேப்’ என தனக்குள்ளே பேசிக் கொண்டவன் அங்கிருந்து நழுவ பார்க்க “எங்க டா போற இங்க வந்து நில்லு..” என்றார் அன்பரசன் அதட்டலாக.
தன் முன் நின்றவனை சற்று நேரம் பார்வையால் தூளைத்தவர் சுற்றி வளைக்காமல், “மொத்தம் எத்தன அரியர்?” என நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
தந்தையின் கேள்வியில் அதிர்ந்தவன் தாயை பார்த்தான். கலை கணவருக்கு தெரியாமல் ஏதோ ஜாடை காட்ட, “அங்க என்ன பார்வை கேட்டது நான்” என்றவர் மனைவியை முறைத்தார்.
அன்புவின் பேச்சிலே அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு தான் கேட்கிறார் என்பது புரிய, “அஞ்சு அரியர்..” என்று உண்மையை உரைத்தான்.
“எதுக்கு டா பொய் சொன்ன?”. அவன் பதிலளிக்காமல் இருக்கவும் “உன்ன தானே கேட்கிறேன்?” என்றவர் இருக்கையில் இருந்து எழுந்து விட இரண்டடி பின் சென்றவன், “திட்டுவிங்கனு தான்..” என்றான் மெல்லிய குரலில்.
“இப்ப மட்டும் திட்ட மாட்டனா?.. இத்தன நாள் படிக்கமாட்ட.. பொறுப்பில்லாம சுத்துவ.. இப்போ எங்கிருந்து வந்துச்சு இந்த புது பழக்கம் பொய் சொல்றதும் ஏமாத்துறதும்?”
“ஏங்க அவன் ஏதோ தெரியாம செஞ்சிட்டான் விடுங்க..” கலை இடைபுகுந்து மகனை காப்பாற்ற “கலை உன்ன எதுவும் பேசாதனு சொல்லீட்டேன்.. எங்க ரெண்டு பேருக்கு நடுவுல நீ வராத” என மனைவியை அடைக்கியவர் “தெரியாம செய்ற வயசில்ல இவனுக்கு.. எல்லா தெரிஞ்சு தான் செஞ்சிருக்கான்” என்று மகனை முறைத்தார்.
தந்தையின் கேள்விகள் பேச்சுக்கள் எதற்குமே தமிழிடம் பதிலில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க அமைதியாகவே நின்றான்.
“இத்தன பேசுறேனே வாய திறக்கிறியா நீ.. இங்க பாரு டா உன் படிப்பு எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே அளவு ஒழுக்கமும் ரொம்ப முக்கியம்.. இந்த பொய் சொல்றதையும் ஏமாத்துறதையும் இத்தோட விட்டுடு” என அன்பு எச்சரிக்க, இத்தனை நேரம் அமைதியாய் நின்றவனுக்கு ஒழுக்கத்தை பற்றி பேசவும் அப்படி ஒரு கோவம்.
“இப்போ நான் என்ன ஒழுக்கம் கெடுப்போயிட்டேன்?” அவன் சீற்றமாக கேட்க “பொய் சொல்றதும்.. ஏமாத்துறதும் ரொம்ப ஒழுக்கமான விஷயமா?” என எதிர் கேள்வி கேட்டார்.
“பொய் சொன்னேன் தான்.. போன தடவ உங்களுக்கு தெரியாம கிளியர் பண்ணிடலாம்னு நினைச்சு தான் பொய் சொன்னேன் ஆனா முடியல.. உங்களுக்கு தெரியாம செய்யனும்னு நினைச்சேனே தவிர உங்கள ஏமாத்தணும்னு நினைக்கல.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு”.
“பின்ன வேற எப்படி? நீ பேசி பேசி செஞ்ச தப்ப நியாப்படுத்த நினைக்காத.. இது தான் நான் உனக்கு சொல்றது கடைசி.. இனி ஒழுக்கமா நடந்துக்கோ”
“சும்மா அதையே சொல்லாதீங்க.. இப்ப நான் என்ன ஒழுக்கம் கெடுப்போயிட்டேன்? திருடினேனா? சரக்கு அடிச்சனா? தம் அடிச்சனா? இல்ல பொருக்கி தனம் பண்ணிட்டு சுத்தரனா? வெளியே போய் பாருங்க மத்த பசங்கெல்லாம் எப்படி இருக்காங்கன்னு..”
“எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன? எனக்கு என் பையன் நீ ஒழுக்கமா எனக்கு உண்மையா இருக்கனும். அதுக்கு தான் பேசிட்டு இருக்கேன்”
தந்தையின் குற்றம் சாட்டும் பேச்சுகளை அதற்குமேல் பொறுக்கமுடியாமல் “இது ஒரு சாதாரண விஷயம்.. ஊர் உலகத்தில எவனுமே அரியர் வைக்கிறது இல்லையா.. ஏதோ குற்றவாளி மாதிரி நிற்க வச்சு கேள்வி கேட்காதீங்க” என தமிழ் குரல் உயர்த்த
“கேட்க தான் டா செய்வேன்.. ஆயிரக் கணக்குல காச தூக்கி காலேஜ்க்கு கட்டறேன்ல.. நான் கேட்க தான் செய்வேன்” என அவனுக்கு மேல் கத்தினார் அன்பரசன்.
அதற்கு மேல் அப்பா மகனின் வாக்குவாதம் கைமீறி செல்ல இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் செய்வதறியாத நிலையில் நின்றிருந்தார் கலைவாணி.
அவரை காப்பாற்றும் விதமாக அன்புவின் தொலைபேசி ஒலிக்க அதை ஏற்று பேசியவர் உடனே வருவதாக கூறி அழைப்பை துண்டித்தார்.
“சொன்னது புரிஞ்சுதுல.. என் வீட்டுல இருக்கணும்னா நான் சொல்றத கேட்டு தான் நடந்துக்கனும்.. இனி பொய் பேசுனே ஏமாத்துனேனு ஏதாவது தெரிஞ்சுச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன்..” என மகனை எச்சரித்தவர் மனைவியை முறைத்துவிட்டு வெளியேறிவிட்டார்.
தந்தை சென்ற மறுநொடி தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டான் தமிழ்.
முல்லை பள்ளி முடிந்து வீட்டிற்கு வர வீடே புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது. என்றும் இல்லாமல் அன்று வீடு இயல்புக்கு மாறாக அமைதியாக இருக்க அன்னையை தேடி சென்றாள். கலைவாணி பின் வாசலில் அமர்ந்திருந்தார்.
“அம்மா..” அவள் தோளை தொடவும் கண்களை துடைத்துக் கொண்டு வேகமாக எழுந்தவர் “வந்துட்டியா..” என அடுப்படிக்கு செல்ல “என்னாச்சு அழுதியா..” என அவரை பின்தொடந்தாள்.
“ம்மா உங்கிட்ட தானே கேட்குறேன்.. என்னாச்சு ஏன் அழுகுற?”
அவர் பதிலளிக்காமல் இருக்கவும், “இப்போ நீ சொல்ல போறியா இல்லையா?” அவள் அதட்ட “திட்டு டி திட்டு.. நீ ஒருத்தி தான் திட்டாம இருந்த இனி நீயும் பேசு” என கோவத்தை அவள் மீது காட்டினார்.
“இப்போ எதுக்கு என்ன திட்டுற? என்னாச்சு? எதுக்கு இப்போ அழுதுட்டு இருந்த?”
“எல்லா உங்க அப்பாவும் அண்ணனும் தான்..” என்றவர் சற்று முன் நடந்ததை சுருக்கமாக கூறினார்.
“இருந்தாலும் நீ அப்பா கிட்ட உண்மைய சொல்லிருக்கலாம் ம்மா.. முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளோ கோவப்பட்டிருக்க மாட்டாரு” என்ற முல்லையை கலைவாணி முறைக்க “சரி விடு விடு.. அண்ணா எங்க?” என்று கேட்டாள்.
“உங்க அப்பா கிளம்புனதும் போய் கதவ அடச்சவன் தான் எவ்ளோ தட்டியும் திறக்க மாட்டிங்கிறான்”
“சரி நான் போய் பார்த்துட்டு வரேன்” என்றவள் தமிழின் அறைக்கு சென்றாள்.
“அண்ணா கதவ திற..” முல்லை கதவை தட்ட “என்ன வேணும் முல்லை” என உள்ளிருந்தே குரல் குடுத்தான்.
“நீ கதவ திற.. நான் உங்கிட்ட பேசணும்”
“நான் இப்போ பேசுற மனநிலையில இல்ல.. ஏதாவது முக்கியமான விஷயம்னா அங்கிருந்தே சொல்லு இல்லைனா என்ன கொஞ்சம் நேரம் தனியா விடு” என்றான் கரகரத்த குரலில்.
“அண்ணா ஒரு அஞ்சே நிமிஷம் ப்லீஸ்..”
“ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா” என கடிந்தவன் “ப்ளீஸ் கொஞ்சம் தனியா விடு” என்று கெஞ்ச அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றுவிட்டாள் முல்லை.
தமிழுக்கு அந்நேரம் அனைத்துமே வெறுத்து போனது. ஓர் சாதாரண விஷயத்தை ஏன் இந்த அளவிற்கு பெரிதுபடுத்துகிறார்.. ஏதோ கொலை குற்றம் செய்ததை போல் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார் என தந்தையின் செயலில் அப்படியொரு எரிச்சல்.
அதில் ஒழுக்கத்தை பற்றி பேசியதெல்லாம் இன்னும் அவனை காயப்படுத்தியது. சின்னதாக ஒரு பொய் பேசியதிற்கு இவர் என் ஒழுக்கத்தை கேள்வி கேட்பாரா? என்ற எண்ணம் கோவத்தை விட வேதனையே அளித்தது.
இதையே நினைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைத்தவன் முகம் கழுவிட்டு உடை மாற்றி வந்தான்.
இன்று முடிக்க வேண்டிய பாடங்களை முடித்துவிடலாம் என எண்ணி புத்தகத்துடன் அமரந்தவனுக்கு சுத்தமாக படிக்க முடியவில்லை. அவனையும் மீறி தந்தை பேசிய பேச்சுகளே மாறி மாறி மனதில் ஓட எத்தனை முயன்றும் படிப்போடு ஒன்ற முடியவில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனின் மொத்த மனநிலையையும் மாற்றிவிட்டார் அன்பரசன்.
எட்டு மணி போல் முல்லை சாப்பிட அழைக்க மறுத்தவன், கலைவாணியின் அதட்டலில் பெயருக்கு இரண்டு இட்லியை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் தன் அறைக்குள் அடைந்து கொண்டான். தாயிடமும் தங்கையிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.
தமிழின் பார முகம் முல்லையை சலனப்படுத்த, எழிலை அழைத்தாள். தந்தைக்கும் தமையனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை சுருக்கமாக கூறியவள், “எனக்கு கஷ்டமா இருக்கு ண்ணா.. நீங்க கொஞ்சம் அவன் கிட்ட பேசுங்க” என கூற அவளை சமாதானம் செய்தவன், “விடு முல்லை நான் பாத்துக்கிறேன்.. நீ கவலைப்படாதே.. எரும தூங்கிட்டு தான் இருக்கும்” என அழைப்பை துண்டித்துவிட்டு தமிழை அழைத்தான்.
எழில் எத்தனை அழைத்தும் தமிழ் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ்அப்பில் “எதுக்கு டா சும்மா சும்மா கால் பண்ற..” என குறுஞ்செய்தி தட்டிவிட்டான்.
“டேய் நீ முதல்ல ஃபோன எடு டா.. தனியா ரூம் குள்ள உட்கார்ந்துட்டு என்ன பண்ற..” என்று எழில் அதற்கு பதில் அனுப்ப
“என்னமோ பண்றேன்.. என்ன கொஞ்ச நேரம் தனியா விடு சும்மா சும்மா ஃபோன் பண்ணாத” என குறுஞ்செய்தி அனுப்பியவன் அதன் பிறகு எழிலின் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
எழில் முல்லையை அழைத்தவன், “அவன் ஃபோன் எடுக்க மாட்டிங்கிறான் முல்லை.. மெஸேஜ் பண்ணாலும் தனியா விடுனு ரிப்ளை பண்றான்.. விடு கொஞ்ச நேரத்தில அவனே சரி ஆயிருவான்” என்க முல்லைக்கு மனம் ஒப்பவில்லை.
“என்ன ண்ணா அவன் உங்க பெஸ்ட் ஃபிரண்ட் தானே கொஞ்சம் கூட இப்படி அக்கறையே இல்லாம பேசுறீங்க”
எழிலுக்கு மண்டை காய்ந்தது, “அண்ணனும் தங்கச்சியும் என் தலைய போட்டு உருட்டுதுங்க” மனதில் புலம்பியவன், “இப்ப நான் என்ன தான் மா பண்ணனும்?” என அவளிடமே கேட்க
“ஏதாவது பண்ணி அவன நார்மல் ஆக்குங்க எனக்கு அவன இப்படி பாக்கவே கஷ்டம்மா இருக்கு” என்றாள்.
யோசித்தவன், “இசை நம்பர் இருக்கா?” என கேட்க இருப்பதாக கூறினாள்.
“அப்போ இசை கிட்ட உங்க அண்ணனுக்கு கால் பண்ணி பேச சொல்லு பேசுவான்..”
“அண்ணா நீங்க கால் பண்ணியே எடுக்கல அவன்.. அந்த அக்கா கால் பண்ணா மட்டும் எடுத்துடுவானா?”
“நம்மள கண்டா தான் அவனுக்கு இளக்காரம்.. அவ கால் பண்ண எடுப்பான்” என்றான். சரியென்றவள் இவன் அழைப்பை துண்டித்துவிட்டு இன்னிசையை அழைத்தாள்.