டேய் கண்ணா.. நேரம் ஆச்சு பாரு.. எழுந்திரு டா காலேஜுக்கு டைம் ஆச்சு” என தன் மகனை எழுப்பிக் கொண்டிருந்தார் கலைவாணி.
“மா.. அஞ்சு நிமிஷம்.. அஞ்சு நிமிஷம்” என அவன் கடந்த அரை மணி நேரமாக தன் தூக்கத்தை தொடர்ந்து கொண்டே இருக்க அன்பரசனுக்கு கோவம் வந்து விட்டது.
அறைக்குள் வேகமாக நுழைந்து, “ஆமா உன் புள்ள வாங்குற மார்க்குக்கு கொஞ்சல் மட்டும் தான் குறைச்சல்” என கலைவாணியிடம் முகத்தை காட்டியவர் ஃபேனை நிறுத்திவிட்டு, “படிக்கிற படிப்புக்கு துரைக்கு தூக்கம் ஒரு கேடு” என்றுவிட்டு போக அரை தூக்கத்தில் இருந்தவனுக்கு காலையிலே அவரின் பேச்சு எரிச்சலை தந்தது.
தூக்க கலக்கத்தில் அப்படியே அமர்ந்திருந்தவனின் கையில் காபியை குடுத்தவர், “அவர் அப்படி தான இனியா.. நீ போய் காலேஜுக்கு கிளம்பு நேரம் ஆச்சு” என அவனை குளிக்க துரத்தினார்.
குளித்து கல்லூரிக்கு தயாராகி வந்தவன், சாப்பிட உட்கார கடைக்கு சென்றிருந்த அன்பரசன் அப்போது தான் வீட்டின் உள்ளே நுழைந்தவர் நேரத்தை பார்த்துவிட்டு, “கலை இவன் இன்னுமா கிளம்பல? மணி என்னாச்சு தெரியுமா? ஒன்னு காலேஜ் போறதில்ல இல்ல பஸ்ஸ விடுறது, இவனுக்கு காலேஜுக்கு கட்டுற பணம் எல்லாம் தண்ட செலவு தான்” என அவர் பேச
“ஆமா பெரிய பொல்லாத காலேஜ், காலேஜ்னு ஸ்கூல்ல சேர்ந்து விட்டுட்டு..” என வாய்குள் முனங்கினான்.
“இன்னிக்கு மட்டும் இவன் பஸ்ஸ விட்டான் நான் நல்லவனா இருக்க மாட்டேன் கலை, பஸ்ஸுக்கு மட்டும் நான் வருஷத்துக்கு முப்பதாயிரம் கட்டுறேன்.. போட்டுக்க துணி வேளா வேளைக்கு நல்ல சோறு கிடைக்கிற திமிறு இவனுக்கு” என எம்டன் ரேஞ்ஜுக்கு மனைவியிடம் கத்த தமிழுக்கு கோவம் வந்து விட்டது டிஃபன் பாக்ஸ் எடுத்து பையில் வைத்தவன், “நான் கிளம்புறேன் மா..” என அன்னையிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சாப்பிடாமலே சென்றுவிட்டான்.
அவன் பேருந்து நிறுத்தம் வந்து பத்து நிமிடத்தில் பேருந்து வர, ஏறியவன் அவன் சீட்டில் அமர்ந்து ஹெட் செட்டை மாடிக் கொண்டு பாடல்களை கேட்க தொடங்கினான்.
மகன் சாப்பிடாமல் சென்றது பொறுக்காமல், “ஏன் எப்போ பாரு அவன திட்டீட்டே இருங்கீற? நீங்க பேசுன பேச்சுல சாப்பிடாம வேற போய்டான்.. நேத்து காலேஜில ஏதோ பிரச்சினை போல ராத்திரியும் ஒழுங்கா சாப்பிடல இப்பவும் சாப்பிடல.. பாவம் பையன் பசி தாங்க மாட்டான்” என ஆற்றாமையில் கலைவாணி கூறிவிட்டு செல்ல அன்பரசனுக்கும் கொஞ்சம் கஷ்டமாக போனது.
அவன் அக்கவுண்டிற்கு இருநூறு ரூபாய் அனுப்பியவர் மகனை அழைத்தார். தந்தை காலையில் பேசியப் பேச்சில் கடுப்பாக இருந்தவன் அதை எடுக்கவில்லை. இதை அன்பரசன் ஏற்கனவே எதிர்ப்பார்த்தார்.
“கலை, அவன் அக்கவுண்டிற்கு இருநூறு ரூபாய் அனுப்பியிருக்கேன் கேண்டீன்ல ஏதாவது சாப்பிட்டு கிளாசிக்கு போக சொல்லு” என்றார் கலைவாணியிடம்
“நீங்களே சொல்ல வேண்டியது தான” என்று கலைவாணி கேட்க
“கால் பண்ணேன் அவன் எடுக்கல நீயே சொல்லீரு. பாப்பாக்கு நேரம் ஆகுது நான் அவள ஸ்கூல்ல விட்டுட்டு வந்தறேன்” என மகளை பள்ளியில் விட சென்றார்.
“புள்ள மேல இருக்கிற பாசத்தை அவன்கிட்ட காட்டுனா என்னவாம்.. அப்பாக்கும் புள்ளைக்கும் ஈகோக்கு மட்டும் ஒரு குறைச்சலும் இல்லை” என வாய் விட்டே புலம்பியவர் இனியனை அழைத்தார்
அன்னையின் அழைப்பை ஏற்றவன்,
“சொல்லு மா” என்றான் சலிப்பாக
“இனியா அப்பா உன் அக்கவுண்ட்க்கு இருநூறு ரூபாய் அனுப்பியிருக்காரு பசியோட கிளாசுக்கு போகாத.. ஏதாவது கேண்டீன்ல சாப்பிட்டு போ..”
“அப்போ வேணும்னே தான் நீ அப்பாவோட கால் அட்டென்ட் பண்ணலையா?” என கோவமாக கேட்க
“அம்மா நீ காலைல அவரு பேசுனது எல்லாம் கேட்டீல.. அப்பறம் எப்படி நீ நான் அவர் கால் அட்டென்ட் பண்ணனும்னு எதிர்ப்பார்க்கிற?” என்றான் அவனும் அதே கோவத்துடன்.
“அதுக்கு? அவர் உன் அப்பா டா.. உன் மேல இருக்கிற பாசம் அக்கறையில நீ நல்லா இருக்கனும்னு தான அப்பா திட்டுறாரு.. எல்லாம் உன் நல்லதுக்கு தான் டா”
“அம்மா சும்மா உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாத.. பாசமெல்லாம் ஒன்னும் இல்லை, அவருக்கு முல்லை மட்டும் தான பொண்ணு.. என்ன தவுட்டுக்கு தான வாங்குனீங்க” என்றான் கோவமாக.
“அப்படி எல்லாம் இல்ல டா இனியா..” என அவர் சாமாதானம் செய்ய
“அப்படி தான் ம்மா.. நீயே சொல்லு அவர் என்னையும் முல்லையையும் ஒரே மாதிரியா நடத்துறாரு?” என கேட்க என்ன சொல்லுவதென புரியாமல் விழித்தார் கலைவாணி. அவன் என்ன தவறாக கேட்டகிறான் அன்பரசன் மகனிற்கும் மகளிற்கும் நிறைய வித்தியாசங்களை காட்டுகிறாரே .
இருந்தும் மகனிடம் கணவனை விட்டுக் கொடுக்க விரும்பாதவர், “அதெல்லாம் வீட்டுல பேசிக்கலாம்.. நீ ஒழுங்கா சாப்பிட்டு கிளாசுக்கு போ” என போனை வைத்துவிட்டார்.
அன்பரசனின் பூர்வீகம் கோவை. கோவையின் மத்திய பகுதியில் சொந்தமாக ஒரு சிறிய துணிக்கடை நடத்தி வருகிறார் கடந்த பத்து வருடங்களாக. முழுவதும் அவரின் உழைப்பில் உருவானது.
அன்பரசன் அவரின் பெற்றோர் கந்தசாமி-முல்லைக்கு ஒரே மகன். வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் பிறந்ததால் பெற்றோருக்கு ரொம்ப செல்லம். அன்பரசன் பெரியதாக படிக்கவில்லை பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கிறார். தன் வாலிப வயதில் இவனை போல் தான் படிப்பு மீது நாட்டம் இல்லாமல் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தார்.
படிப்பு வராததால் தந்தையின் நண்பரின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். பின் அவர் அன்னையின் ஆசைப்படியே பெற்றோர் பார்த்த கலைவாணியை திருமணம் செய்து கொண்டார் . அன்னையின் ஆசை என்று மட்டும் இல்லை கலைவாணியை விரும்பியே திருமணம் செய்தார். கலைவாணி பி.ஏ வரை படித்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் கணவன் தன்னை விட படிப்பில் குறைந்தவர் என நடந்து கொண்டதும் இல்லை நினைத்ததும் இல்லை. அவரை புரிந்துக் கொண்டு அவருக்கு ஏற்ற துணையாக இருந்தார் இப்போதும் இருக்கிறார்.
அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் தமிழினியன் பிறந்தான். தமிழுக்கு இரண்டு வயது இருக்கும் போது அன்பரசனின் தந்தை கந்தசாமி உடல்நல குறைவால் இறந்து போனார். அதில் அன்பரசனின் அன்னை முல்லை மிகவும் பாதிக்கப்பட்டார். கணவன் இறந்த சோகத்தில் இருந்த முல்லைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போக ஆரம்பித்தது.
தந்தையின் இறப்பிற்குப் பின் வீட்டின் வருமானம் குறைந்தது. ஒரு பக்கம் செலவு அதிகமானது. தந்தை இருக்கும் போது வேலைக்கு செல்வார் வீட்டு செலவுக்கான பணத்தை பெற்றோரிடம் கொடுத்துவிடுவார். குடும்பத்தை அவர்கள் தான் பார்த்து கொள்வர்.
தந்தையின் இறப்பிற்குப் பின் இவரே குடும்பத்தை முழுவதுமாக பார்க்க வேண்டியதாக போனது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சமாளிக்க தெரியாமல் திண்டாடினார். தமிழை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்த கலை, வீட்டின் செலவுகளை குறைக்க வேலைக்கு போக துவங்கினார்.
மூன்று ஆண்டுகள் அப்படியே செல்ல, முல்லைக்கு மீண்டும் உடல் நலம் மிகவும் மோசமடைய ஆரம்பித்தது. அவரை பார்த்துக் கொள்ள கலைவாணி அவர் வேலையை விட்டார். எவ்வளவு வைத்தியம் பார்த்தும் முல்லையை காப்பாற்ற முடியவில்லை. அன்பரசன் மிகவும் உடைந்து போனார். அப்போது கலை தான் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.
இழப்பு மேல் இழப்பு ஏற்பட்டிருந்த குடும்பத்திற்கு வரவாக வந்தது கலை கருவுற்றிருக்கும் செய்தி. அன்பரசன் மனைவியை உள்ளங்கையில் தாங்கினார் என்று கூட சொல்லலாம் அப்படி பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு மகள் பிறந்தாள். மகள் தன் அன்னையின் ஜாடையில் இருக்க தன் அன்னையே தனக்கு மகளாக பிறந்ததாக எண்ணி பூரித்து போனார் அன்பரசன். தன் மகளுக்கு அன்னையின் பெயரான முல்லை என்பதை சேர்த்து தமிழ்முல்லை என பெயரிட்டார் அன்பரசன்.
முல்லைக்கு இரண்டு வயது இருக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை கண்டுபிடித்தனர். அவள் அடிக்கடி மயங்கி விழவும். மருத்துவரிடம் பரிசோதித்த போது முல்லை இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூற பெற்றோர் இருவரும் மிகவும் உடைந்து போனார்கள்.
மகளை எப்படியாவது காப்பாற்றி ஆகனும் என்று முடிவெடுத்த பெற்றோர். அவர்களிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து முல்லைக்கு அறுவை சிகிச்சை செய்து ஓட்டையை சரி செய்தனர் சிகிச்சைக்குப் பிறகும் முல்லைக்கு மருந்து மாத்திரை என நிறைய செலவு இருந்தது. முல்லையை பார்த்துக் கொள்வதால் கலையால் இந்த முறை வேலைக்கு சென்று கணவனுக்கு உதவ முடியவில்லை. குடும்பத்தின் செலவுகளை அதிகமானது, வருமானம் மட்டும் உயரவே இல்லை.
மற்றவரிடம் வேலை செய்யும் வரை நல்ல வருமானம் பார்க்க முடியாதென புரிய தனியாக தொழில் தொடங்க முடிவு செய்து அதற்காக உழைக்க தொடங்கினார். அதனால் வீட்டினருடன் பெரியதாக நேரம் செலவிட முடியாமல் போனது. விடுமுறையில் மட்டுமே குடும்பத்துடன் நேரம் செலவிடுவார் அதுவும் தன் செல்ல மகள் முல்லையுடன் தான் அதிக நேரத்தை செலவிடுவார்.
அவரின் கடின உழைப்பின் பயன்தான் அவர்களின் சொந்த வீடும் சிறிய ஜவுளிக் கடையும்.
வீட்டில் இத்தனை விஷயங்களை மாறி மாறி நடக்க பெற்றோர் இருவரும் தமிழை ஒழுங்காக கவனிக்க தவறிவிட்டனர். இன்றளவும் அந்த குற்ற உணர்வு கலைவாணிக்கு அதிகமாக உள்ளது. அவன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனதுக்கு இதுவும் ஒரு காரணம்.
தன்னைவிட அதிகமாக படித்த நண்பர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதை பார்த்த அன்பரசனுக்கு அப்போது தான் படிப்பின் அருமை புரிந்நது. தன் பெற்றோர் அதிகமாக செல்லம் கொடுத்ததால் தான், படிக்காமல் இத்தனை கஷ்டப்பட்டோம். ஒரு வேளை பெற்றோர் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்திருந்தால் நன்றாக படித்திருப்பாரோ, நன்றாக படித்திருந்தால் வாழ்க்கையில் இத்தனை கஷ்டப் படாமல் நல்ல நிலையில் இருந்திருக்கலாமோ என நிறைய முறை சிந்தித்துள்ளார். தன் மகன் வாழ்க்கையில் இப்படி கஷ்டப்பட கூடாது என நினைத்த அன்பரசன் தமிழை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார், இன்றளவும் அந்த கண்டிப்பில் குறைவில்லை.
அதே சமயம் மகளை நிறைய சலுகைகளுடன் வளர்த்தார். முல்லை தன் அன்னையை போல் இருக்க, முல்லைக்கு இதயத்தில் கோளாறு என அவள் மீது ஒரு பரிவு. தந்தைகளுக்கு பொதுவாக மகள்கள் மீது இருக்கும் அதீத பாசம். மகளின் முகம் கொஞ்சம் சுனங்கினாலும் அன்பரசனின் மனது தாங்காது துடித்து போய்விடுவார்.
பற்றாத குறைக்கு தமிழ் எந்த அளவிற்கு தந்தையை போல் மோசமாக படிப்பானோ அந்த அளவிற்கு முல்லை அவள் அன்னையை போல் அருமையான மதிப்பெண்களை பெறுவாள். ஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது ஆசிரியர் மகளை பாராட்டுவதை கேட்டு உச்சி முதல் பாதம் வரை குளிர்ந்து போவார். ஆனால் தமிழ் ஆசிரியரிடம் இவர் தலை குனிந்து தான் நிற்க வேண்டும் அவன் வாங்கும் மதிப்பெண்களுக்கு.