மாலையிலும் கல்லூரி விட்டு வரும்போது தமிழ் இசையிடம் பேச முயற்சி செய்ய அவள் அவனை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள்.
இசையும் எழிலும் பேசாமல் இருக்க தமிழுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களை சமாதானப் படுத்தவேண்டும் என்ற மனநிலை மாறி இருவர் மீதும் கோவம் தான் வந்தது.
“ஏன் இவங்க ரெண்டு பேரும் என்ன புரிஞ்சுக்க மாட்டிங்கிறாங்க.. என்னோட இடத்துல இருந்து யோசிச்சா தானே என்னோட ஃபீலிங்ஸ் புரியும். இசைக்கு புரியாட்டி கூட பரவாயில்லை. இந்த எழிலுக்கு கூடவா புரியல..?” என மன வருத்தத்தில் இருந்தான் தமிழ்.
எழில் வீட்டிக்கு வந்தவன் உடை மாற்றிக் கொண்டு வர அவனின் தந்தை கோபால் கிட்சனில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தார்.
“என்ன தகப்பா.. என்ன பண்றீங்க?” என்றபடி கிட்சன் மேடையில் ஏறி அமர்ந்தான் எழில். “வா டா மவனே.. உன்ன தான் தேடீட்டு இருந்தேன்” என்றபடி திரும்பியவர் கிட்சன் மேடையில் அமர்ந்திருந்தவனை பார்த்து டென்ஷன் ஆகி, “ஏ நாயே, கீழ இறங்கு டா.. இப்ப தான் அங்க தொடச்சுவிட்டேன்” என்று அவன் முதுகில் ஒரு போடு போட “ஏன் நைனா இப்ப அடிச்ச..?” என்று முதுகை தேய்த்துக் கொண்டே இறங்கினான் எழில்.
“பின்ன நான் கஷ்டப்பட்டு கிட்சன சுத்தம் பண்ணி தொடச்சு வைச்சா நீ பாட்டுக்கு எருமையாட்ட வந்து ஏறுர” என்றவர் மேலும் ஒரு அடி வைக்க, “ஆஆ.. என்ன பா நீ வர வர ஓவரா மேன்ஹேன்டில் பண்ற” என்று அவரை முறைத்தான்
“நீங்க ரெண்டு பேரும் தான் டா என்ன மேன்ஹேன்டில் பண்றீங்க.. வயசான அப்பங்காரன் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு கஷ்டப்படுறானேனு எவனுக்காது கவலை இருக்கா.. கொஞ்சமாச்சும் எவனாது உதவி பண்றீங்களா?” என கோபால் கேட்க
எழிலோ “மகன் காலேஜ் போய் படிச்சு படிச்சு களச்சு போய் வந்திருக்கானே.. அவனுக்கு சூடா ஒரு காபி போட்டு தரணும்னு உனக்கு தோனுதா.. சீக்கிரம் காபி போடு” என கூற காபி போட தொடங்கியவர், “நான் என்ன சொல்றேன்.. நீ என்ன பேசுற. உங்க ரெண்டு பேருக்கும் என் மேல அக்கறையே இல்ல டா..” என்று அவர் வருத்தமாக பேச
“நீ கவலைப்படாதே டேடி.. உனக்காகவே நான் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்பறம் என் பொண்டாட்டியே எல்லா வேலையும் பாத்துக்குவா.. நீ லைஃப்ப ஜாலியா.. என்ஜாய் பண்ணு மேன்.” என்றபடி அவர் மீசையை அவன் முறுக்கி விட, “இன்னும் காலேஜே முடிக்கல அதுக்குள்ள கல்யாணம் கேக்குதா டா கழுத” என்றபடி அவன் வாயில் அடித்தார்.
“மம்மி இந்த மனுசன என் தலையில்ல கட்டீட்டு நீ பாட்டுக்கு ஜாலியா ஹெவனுக்கு போய்ட.. பாரு பெத்த பையனு கூட பாக்காம வாயிலையே அடிக்கிறாரு” என ஹாலில் இருந்த அன்னையின் புகைப்படத்தை பார்த்து எழில் புலம்ப, “உங்கள தான் டா என் தலையில கட்டீட்டு போய்டா..” என அவன் கையில் காபியை குடுத்தார் கோபால்.
இத்தனை நேரம் அண்ணனும் தந்தையும் அடித்துக் கொண்டிருந்த கூத்தை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த எழிலின் தம்பி அவன் தந்தையை முறைக்க, “ஐயோ இவன மறந்துட்டேனே” என மனதில் நினைத்தவர், “டேய் தம்பி காபிய குடிச்சுட்டு அப்படியே விதுவ கொண்டு போய் தமிழ் வீட்ல விட்டுட்டு வந்துரு..” என்றார்.
“எதுக்கு?” என எழில் விதுரனிடம் கேட்க “நாளைக்கு ஸ்கூல்ல எக்ஸ்போ இருக்கு பிராஜெக்ட் பண்ணும்” என அவனை முறைத்துக் கொண்டே கூறினான் விதுரன்.
விதுரனின் சட்டையை பிடித்து அவனை தன் அருகே இழுத்து எழில், “போன மாசம் 3ஆம் தேதி சாயங்காலம் ஆறு இருவத்தி ரெண்டுக்கு தண்ணி எடுத்து தர சொன்னே தந்தியா?” என கேட்க விதுரன் தந்தையை முறைத்தான்.
“டேய் தம்பி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.. டைம் ஆகுது அவனை கொண்டு போய் விட்டுட்டு வாடா” என கோபால் குரல் உயர்ந்த
“அட இரு தகப்பா இதை விட்டா எனக்கு இவன பழிவாங்க சான்ஸ் கிடைக்காது..” என்ற எழில் மேலும் விதுரனிடம் வம்பு இழுக்க கோபமான விதுரனும் “நீ ஒன்னும் என்ன கொண்டு போய் விடத் தேவையில்லை எனக்கு வழி தெரியும் நானே போய்டுவேன்” என்றவன் வேகமாக கிளம்பி சென்றுவிட “ஏன் டா நாயே.. எப்போ பாரு அவன வம்பிழுத்துடே இருக்க.. ஒழுங்கா போய் அவன் தமிழ் வீட்ல விட்டுட்டு வா” என எழிலை துரத்தினார் கோபால்.
விதுரனை கூட்டிக் கொண்டு தமிழ் வீட்டிற்கு வந்த எழில் கலைவாணியுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
எழில் வரும்போதே அவன் வண்டி சத்தத்தை வைத்து அவன் வந்ததை அறிந்து கொண்ட தமிழ், எழிலே வந்து அவனிடம் பேசட்டும் என அறையை விட்டு வெளியே வரவில்லை. எழிலின் பேச்சு சத்தம் கேட்டுக் கூட தமிழ் வெளியே வரவில்லை என்றதும் கோவமானா எழில், “ஓஓ அவனுக்கு அவ்வளவு திமிரு ஆயிருச்சா..” என அவனை மனதில் கடிந்து கொண்டு அவனை பார்க்க செல்லாமல் கலைவாணியிடமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
இரவு நேரம் ஆக கலைவாணி சமையல் செய்ய சென்றுவிட எழிலுக்கு பொழுது போகாமல் போர் அடித்ததால் தமிழின் அறைக்கு சென்றான்.
எழிலை பார்த்ததும் அவனுக்கு இடம் தராமல் தமிழ் கட்டிலை முழுதாய் ஆக்கிரமித்து படுக்க கடுப்பான எழிலோ தமிழை சுவரின் பக்கமாக எட்டி உதைத்தவன் கட்டிலின் மறுப்பக்கம் படுத்துக் கொண்டான்.
“ஆஆஆ.. எரும ஏன் டா எட்டி உதைச்ச” என தமிழ் அவன் உதைத்த வலியில் கத்த எழில் அவனை திரும்பி பார்த்தவன் மீண்டும் அவனை கண்டுக் கொள்ளாமல் போனை நோண்ட தமிழுக்கு கோவம் தலைக்கு ஏறியது.
“ஏய் என்ன இரண்டு பேரும் பேசி வச்சிட்டு வேணும்னே பண்றீங்களா?” என தமிழ் கோவத்தில் கத்த எழில் ஏதோ பிறவியில் இருந்து காதே கேளாதவன் போல் போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
அதில் இன்னும் எரிச்சலான தமிழோ, “ஏன் டா.. அவ தான் ஏதோ சின்ன பொண்ணு சொன்னா புரிஞ்சுக்க மாட்டிங்கிறா.. உனக்கு கூடவா நான் சொல்றது புரியல.. நீ இவ்வளவு நாள என் கூட இருந்து நான் கஷ்டப் படறதெல்லாம் பார்த்துட்டு தான இருக்க. நீ கூட இப்படி புரிஞ்சுக்காட்டி எப்படி..? எனக்கு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா..” என கோவமாக தொடங்கியவன் வேதனையாக பேசி முடிக்க எழில் எந்த பதிலும் சொல்லாமல் அவனை பார்த்தவன் மீண்டும் போனை நோண்ட தமிழுக்கு வெறுத்தே போனது.
“ஓஓ.. இப்போ கூட பதில் பேச மாட்ட.. பாக்குறேன் டா இன்னும் எத்தனை நாளைக்கு நீயும் அவளும் இப்படி பண்றீங்கனு..” என கத்தியவன் எழிலிற்கு மறுபுறம் முகத்தை திருப்பி படுத்தவன் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்.
ஒரு மணிநேரம் கழித்து விதுரன் பிராஜெக்ட் எல்லாம் முடித்துவிட்டதாக எழிலை அழைக்க, “வெயிட் பண்ணு வரேன்” என அவனை அனுப்பி வைத்தான் எழில்.
விதுரனின் சத்தத்தில் விழித்துக் கொண்ட தமிழ், போகும் போதாவது எழில் சொல்லிக் கொண்டு கிளம்பிவான் என பார்த்துக் கொண்டிருக்க எழில் பாட்டுக்கு எதுவும் சொல்லாமல் எழுந்து செல்ல தமிழுக்கு அப்படி ஒரு கோவம்.
கதவு வரை சென்றவன் தமிழிடம் திரும்பி, “இங்க பாரு நான் ஒன்னும் அவளுக்கோ உனக்கோ சாப்போர்ட் பண்ணல, எனக்கு நியாயமா பட்டத பண்றேன்.. நீ நிறைய கஷ்டப்பட்டிருக்க நான் இல்லனு சொல்லல.. பட் இத்தெல்லாம் சாதாரணமா எல்லாரும் வாழ்க்கையில சந்திக்கிறது தான். ஏதோ நீ மட்டும் கஷ்டப்படும் மாதிரி பில்டப் பண்ணாத.. எப்பவும் உன் கம்ஃபோர்ட் சோன்லயே இருக்கனும்னே நினைக்காத.. அப்படி இருந்தா இந்த உலகத்துல வாழவே முடியாது.” என்றவன் வெளியே சென்றுவிட தமிழ் அவன் பேசியதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
“ஆமா பெரிய இவன் அட்வைஸ் பண்ண வந்துட்டான்” என சத்தமாகவே முணுமுணுத்தவன் மீண்டும் தூங்கிவிட்டான்.
அதன் பிறகு வந்த இரண்டு நாட்கள் தமிழும் அவர்களிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டிருக்க, “என்ன அண்ணா.. ‘நீ பேசாம மட்டும் இரு அவனே வந்து பேசுவான்’ னு சொன்னீங்க?..இப்போ பாருங்க அவரும் மூஞ்சிய திருப்பீட்டு போறாரு” என இசை வருத்தமாக கூற “இரண்டு நாள் தான் இசை.. நாளைக்கு பாரு, ‘இப்போ உங்க இரண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சினை.. நான் காம்பெட்டீஷன்ல கலந்துக்கனும் அவ்ளோ தான நான் கலந்துக்கிறேன்’னு இதே டைலாக்க அப்படியே பேசுவான் பாரு” என்றான் எழில்.
“எப்படி அண்ணா சொல்றீங்க?”
“எனக்கு அவன தெரியும் இசை.. அவன் அப்படி சொல்லாட்டி நான் என் பேர மாத்திக்கிறேன்..” என்ற எழிலின் பதிலுக்கு “அப்போ சீக்கிரம் நல்ல பேரா யோசிச்சு வெச்சுக்கோங்க” என மலர் கவுண்டர் கொடுக்க அவளை கட்டுப்பாக முறைத்த எழில், “மொதல்ல இவள எதுக்கு கூட்டீட்டு வந்த?” என்றான் இசையிடம் எரிச்சலாக.
“ஹலோ.. இது பொதுவிடம் யாரு வேணா வரலாம் போகலாம்.. நீங்க எதுக்கு அதெல்லாம் சொல்றீங்க?” என மலர் சண்டைக்கு வர அவளை அலட்சியமாக பார்த்தவன், “மொதல் வேலையா இவ ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணு அப்போ தான் நீ வாழ்க்கையில உறுப்படுவ” என்றான் இசையிடம்.
எழிலின் பேச்சில் கடுப்பானவளோ கோவமாக ஏதோ சொல்ல வர, “கொஞ்ச நேரம் உன் வாய வச்சுட்டு சும்மா இருரேன்டி” என இசை அவள் வாயை அடைத்தாள். இசையை முறைத்த மலர் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் போனில் கவனமானாள்.
“அண்ணா.. ஆனா சீனியருக்கு விருப்பம் இல்லாம நம்ம அவர கட்டாயப்படுத்துறது தப்பில்லையா?.. அவரோட ஃபீலிங்ஸ்ஸ புரிஞ்சுக்க மாட்டிங்கறோம்னு வருத்தப்படுவார்ல.. பேசாம அப்படியே அவர் இஷ்டத்துக்கே விட்டர்லாமா..” என்ற இசையை முறைத்தவன் “அவன கெடுக்க நீ ஒருத்தியே போதும் போ ” என்றான் கடுப்பாக.
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“பின்ன.. இரண்டு நாளா அவன்ட பேசாம இருந்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிரும். அவன் சரியான சோம்பேறி இசை.. லைஃப்ல எப்போவுமே அவனோட கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கணும்னு நினைப்பான். இப்ப இவன் கஷ்டப்படுறதுலாம் ஒன்னுமே இல்ல.. இப்போ வாழ்க்கையில நல்ல நிலையில இருக்கிற எத்தனையோ பேர் இந்த மாதிரி எத்தனையோ பிரச்சினை அவமானத்த கடந்து தான் வந்திருப்பாங்க. இப்ப இந்த விஷயத்துக்கு பயத்துட்டு உட்கார்ந்துட்டு இருந்தா.. அவன் வாழ்க்க முழுக்க வருத்தப்படுவான். அதனால நீ அவன் ஃபீல் பண்றான்னு யோசிக்காத.. என்னோட போக்குல போனா தான் அவன் சரிப்பட்டு வருவான்”.
“உங்க ஃப்ரண்ட ரொம்ப நல்ல தான் புரிஞ்சு வைச்சிருக்கீங்க” இசை சிரிப்புடன் கூற பதிலுக்கு புன்னகைத்தான் எழில். போன் நோண்டிக் கொண்டே எழிலின் சிரிப்பை ஓரக்கண்ணால் பார்த்த மலர், “ப்பா இந்த சிடுமூஞ்சி ஃப்ரண்ட்ஷிப்ல நண்பன் விஜயையே மிஞ்சும் போலயே..” என மனதில் அவனை மெச்சிக் கொண்டாள்.
“ம்ம் சொல்ல மறந்துட்டேன்.. நாளைக்கோ நாளானைக்கோ.. அவன் வந்து பேசும் போது.. ‘ஐயோ நம்ம சீனியர் பாவம்னு’ ஒடனே பேச கூடாது கொஞ்ச நேரம் பிகு பண்ணி அப்பறம் தான் அவன்ட பேசனும் புரியுதா..” என எழில் கூற, “ஏன் அண்ணா பாவம் ஆல்ரெடி அவரே வருத்தத்துல இருப்பாரு..” என இசை தமிழுக்காக பேச “அம்மா தாயே.. நீங்க ரொம்ப இரக்க குணம் கொண்டவங்க தான்.. அத அவன்கிட்ட காட்டாத. அவன எப்படி ஹேண்டில் பண்றதுனு எனக்கு தெரியும்.. நீங்க நான் சொன்ன மாதிரி செஞ்சு கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணா உங்களுக்கு புண்ணியமா போகும்” என எழில் கூற அவன் சொன்ன விதத்தில் சிரித்தவள் சரி என தலையாட்டினாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.