“இப்படி ஏதாவது காரணம் சொல்லி நல்லா காலேஜ் கட் அடிங்க” என்றவன் மலரின் தலையில் லேசாக தட்ட ஏற்கனவே எழிலின் மீது கடுப்பில் இருந்தவள் அதை அரவிந்தின் மீது காட்டினாள்.
“ஆஆஆ… மென்டல் ஏன் டி அடிச்ச” என கத்தியவனை கடுமையாக முறைத்தாள் மலர்விழி.
அவள் முறைக்கவும் அமைதியான அரவிந்த், என்ன? என்பதாக இசையிடம் சைகையில் கேட்க அவனை அமைதியாக இருக்க சொல்லி சைகையிலே பதிலளித்ததாள் இசை.
மலர் எழில் சண்டையில் அங்கு சூழல் சரியில்லாமல் இருக்க அதை சகஜமாக்க நினைத்து இன்னிசையே பேசினாள்.
“சாரி நான் உங்களுக்கு இன்ட்ரோ குடுக்க மறந்துட்டேன்..” என்றவள், “சீனியர் இது அரவிந்த், மலர் ஓட கசின். எனக்கு இவன் ஸ்கூல் சீனியர்..” என அரவிந்தை இருவரிடமும் அறிமுகப்படுத்த, “ஓஓ இவன் மட்டும் அவன் இவன்.. என்ன மட்டும் இவ அண்ணானு கூப்பிடுவா..” என மனதில் இசையை திட்டினான் தமிழ். அதுவரை அவளுடன் இருந்த இதம் கலைந்த உணர்வு அவனுக்கு.
“இன்ட்ரோலா ஒன்னும் தேவையில்ல.. நாங்க ஆல்ரெடி ஃப்ரண்ட்ஸ்..” என்ற அரவிந்த் “கங்கிராட்ஸ் டா இனியன்.. சூப்பரா பாடுன..” என தமிழுடன் கை குலுக்க பதிலுக்கு கை குலுக்கி கடமைக்கு புன்னகைத்தான்.
“அப்படியா?.. இதுவரை நீ சொன்னதே இல்ல?”, இசை கேட்க “எனக்கு எப்படி நீங்க ஃபிரண்ட்ஸ்னு தெரியும்..?” என்றான் அரவிந்த்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க அரவிந்த் போன் ஒலித்தது. அவன் அண்ணி மது தான் அழைத்திருந்தாள். அவள் ஏதோ வாங்கி வர சொல்ல,”ஹான் முடியாது முடியாது.. அதெல்லாம் உங்க புருஷன் கிட்ட சொல்லுங்க..” என்றான் எரிச்சலா.
“பிளீஸ் டா..” என மது கெஞ்ச “என்ன காலையிலே இருந்து அக்காளும் தங்கச்சியும் மாறி மாறி என்னைய மண்டைய காய விடுரீங்களா..” என அவன் கத்தவும், “மலர் உங்கூட வா இருக்கா?.. அவ கிட்ட போனை குடு” என்றாள் மது.
“ஹான் இருக்கா.. இருக்கா.. இருங்க” என்றவன் மலரிடம் போனை நீட்டினான். அதை வாங்கியவள் மதுவிடம் பொதுவாக நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க, “மலர் உன்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சு.. அரவிந்த் ஓட வீட்டுக்கு வா ப்ளீஸ்.. நான் சாயுங்காலம் அவர் வந்ததும் உன்ன கொண்டு போய் விட சொல்றேன்” என மது சொல்ல, “போடி நான் வரல.. உன் மாமியார் ஓவரா பேசும். அதுவும் இல்லாம இசை தனியா இருப்பா” என்றாள் மலர்.
“ஹே அத்த இல்ல டி அவங்க ஏதோ அவங்க சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போயிருக்காங்க.. அப்பறம் இசை என்ன சின்ன குழந்தையா அவளே தனியா போயிப்பா..” என்றாள் மது.
“ம்ச் சொன்னா புரிஞ்சுக்க மது இசை தனியா இருப்பா நான் வரல..”
“நீ போன இசை கிட்ட குடு..”
“எதுக்கு?.. மது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் வரல.. நீ வீட்டுக்கு வந்து என்ன பாத்துக்கோ..”
“ஏய் போனை இசை கிட்ட குடு டி..” என மது அதட்டவும் வேறு வழியின்றி மலர் போனை இசையிடம் நீட்டினாள்.
இசையிடம் பொதுவாக நலம் விசாரித்த மது மலரை அனுப்பி வைக்குமாறு சொல்ல, “எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல க்கா.. நான் தனியா போயிருவேன். நீங்க அவள வர சொல்லுங்க” என்றாள் இசை.
“சரி க்கா.. நீங்க அவகிட்ட இன்னோரு தடவ சொல்லுங்க” என்ற இசை போனை மலரிடம் கொடுக்க மலர் பேசுவதற்கு முன்னே, “இப்போ நீ அரவிந்த் ஓட வீட்டுக்கு வராட்டி நான் இனி உங்கூட பேசவே மாட்டேன்” என்ற மது மலரின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.
“இவ வேற இரிட்டேட் பண்ணீட்டு..” என்ற மலர் இசையை இயலாமையாக பார்க்க, “அது தான் மது க்கா அவ்ளோ ஆசையா கூப்பிடுறாங்கல.. போயிட்டு வா” என்றாள் இசை.
“நீ தனியா போயிடுவியா..?.. எனக்கு உன்ன தனியா விட்டுட்டு போகவே மனசில்ல..” என்ற மலர் இசையின் கைகளை பிடித்து கொள்ள, “நான் பத்திரமா போருவேன் டி நீ போய்ட்டு வா” என்றாள் இசை.
“வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு.. பார்த்து ரோட் கிராஸ் பண்ணு” என கலக்காமாக பார்த்த மலர் அவள் கைகளை மேலும் இறுக்கி பிடித்துக் கொள்ள அமைதியாக அவளை பார்த்த இசை, “சரி டி..” என்றாள்.
“ஏன்டி உனக்கு ரோடு கூட கிராஸ் பண்ண தெரியாதா..” என அரவிந்த் கிண்டலாக சிரிக்க கடுப்பான இசை, “எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ வாய மூடு” என அவனை திட்டியவள் “நான் பார்த்துக்கிறேன் டி.. நீ மொதல்ல கிளம்பு” என மலரை கிளம்பினாள்.
“சரி இசை பத்திரமா போ.. வரேன் டா எழிலு.. வரேன் இனியா” என அரவிந்த் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “இசை.. பத்திரமா போ..” என அவளிடம் ஆயிரம் அறிவுரை சொன்ன மலர் தமிழிடம் மட்டும், “வரேன் சீனியர்” என சொல்லிக் கொண்டு அரவிந்துடன் கிளம்பினாள். மலர் எழிலிடம் ஏதும் சொல்லிக் கொள்ளவில்லை அவனும் அதை எதிர்பார்க்கவில்லை.
மலரும் அரவிந்தும் கிளம்பியதும் மூவரும் பேசிக் கொண்டே அந்த கல்லூரியின் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர்.
“அவங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா..?” என தமிழ் கேட்க “ஆமா சீனியர் அரவிந்த் மலர் ஓட மாமா பையன். அவ அக்கா மது அரவிந்த் ஓட அண்ணா அருண் தான் கல்யாணம் பண்ணியிருக்காங்க” என்ற இசை, “நீங்க ஆல்ரெடி ஃப்ரண்ட்ஸா?” என கேட்க “ம்ம் தெரியும் ஃபிரண்ட்ஸ் தான்.. பட் ரொம்ப கிளோஸ் இல்ல” என்றான் தமிழ்.
பேசிக்கொண்டே மூவரும் பேருந்து நிறுத்தம் வர சரியாக எழிலின் போன் ஒலித்தது, கோபால் தான் அழைத்திருந்தார். “டேய் மவனே.. சீக்கிரம் வீட்டுக்கு வாடா உன் வண்டி வேணும்.. என் வண்டி பஞ்சர்.. எனக்கு முக்கியமான வேலையா வெளிய போகனும்” என்றார் கோபால்.
“அந்த ஓட்ட வண்டிய கட்டீட்டு அழுவாதனு சொன்னா கேக்கிறியா டேடி.. சரி ஒரு ஃபிப்டீன் மினிட்ஸ் வந்துடறேன்” என ஃபோனை வைத்தான் எழில்.
“டேய் அப்பா வண்டி பஞ்சராம நீ வா நான் உன்ன வீட்ல விட்டுட்டு போறேன்” என எழில் தமிழை அழைக்க அவனும் எழிலுடன் கிளம்பிவிட்டான்.
அதுவரை அவன் வண்டியை தள்ளிக் கொண்டே வந்த எழில், வண்டியில் அமர்ந்து வண்டியை உயிர்பித்தான்.
“சரி இசை பத்தரமா போ.. வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு” என தமிழும் அவளிடம் சொல்லிவிட்டு எழிலுடன் புறப்பட்டான்.
இவ்வளவு நேரம் இவர்கள் அனைவருடன் நேரம் கழித்த இசைக்கு எல்லோரும் ஒரே நேரத்தில் புறப்பட சட்டென அவளை தனிமை சூழ்ந்துகொண்ட உணர்வு.
மதிய நேரம் பெரியதாக ஆள் நடமாட்டமற்ற பகுதி, அங்கு அந்த கல்லூரி மட்டுமே அதிகமாக ஆள் நடமாட்டமிருக்கும் இடம். சுற்றி ஆங்காங்கே அலுவலகங்களும் ஒன்றிரண்டு வீடுகளும் மட்டுமே இருந்தது. இருவரும் கிளம்பும் வரை அங்கே நின்றவள், கிளம்பியதும் அருகே இருந்த டீ கடையில் அடுத்த பேருந்து எப்போதும் வரும் என விசாரிக்க அவர் ஒரு மணிநேரம் ஆகும் என்றார்.
இசை நேரத்தை பார்க்க, மதியம் ஒன்றரை என்று காட்ட ‘இன்னும் ஒரு மணிநேரமா..’ என அலுத்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்தில் இருந்து இருக்கையில் அமர்ந்தவள் போனை நோண்ட தொடங்கினாள்.
போனில் மூழ்கி இருந்தவள் அருகே கேட்ட அரவத்தில் திரும்ப அவளருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான் தமிழினியன். அவனை கண்டதும் அவளின் குட்டிக் கண்களை அகல விரித்தவள், “சீனியர் இங்க என்ன பண்றீங்க?.. வீட்டிற்கு போகலையா?” என கேட்க “உன்ன தனியா விட்டுட்டு எப்படி போக” என புன்னகைத்தான் தமிழ்.
அதுவரை சகஜமாக இருந்த இசையின் முகம் இருவரும் கிளம்பவும் வாடியதை தமிழின் கண்கள் தவறாமல் கண்டு கொண்டன. அதுவும் இல்லாமல் அவனுக்கே மலரின்றி அவளை தனியா விட்டு செல்ல மனமில்லை. உள்ளத்தில் ஏதோ ஒரு உறுத்தல்.
இருவரும் கொஞ்ச தூரம் வந்திருப்பார்கள், “டேய் எழிலு.. சீக்கிரம் வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து..” என தமிழ் கத்தியதில் பதட்டமான எழில் வண்டியை நிறுத்திவிட்டு, “ஏன் டா என்னாச்சு? ஏதாவது தொலச்சுட்டியா?” என கேட்க அவனுக்கு பதில் சொல்லாமல் வண்டியில் இருந்து இறங்கினான் தமிழ்.
“ஏன் டா.. எதுக்கு இப்போ இறங்கின? நேரம் ஆச்சு..”
“இல்ல நீ போ.. நான் வேணா பஸ்ல வரேன்”.
“ஏன்?..”
“அது.. அங்க.. அங்க இசை தனியா இருப்பா.. மதியான நேரம் பஸ்ஸும் சீக்கிரம் வராது.. எப்படி அவ்ளோ நேரம் தனியா இருப்பா. நான் வீட்டுக்கு போனாலும் சும்மா தானே இருப்பேன். நான் வேணா அவ கூட இருந்துட்டு பஸ்ல வரேன்.. நீ வீட்டுக்கு போ”.
“ஓஓ கதை அப்படி போகுதோ..” ராகமாக எழில் இழுக்க
“டேய் காம்பெட்டீஷனுக்குலாம் ஹெல்ப் பண்ணீயிருக்கா டா.. தனியா விட்டுட்டு போக என்னமோ மாதிரி இருக்கு”
“சரி.. சரி.. நீ அவ கூட இருந்துட்டு அவள பத்தரமா பஸ் ஏத்தி விட்டுட்டு அப்பறம் வீட்டுக்கு போ.. நான் கிளம்புறேன்” என்ற எழில் வீட்டுக்கு செல்ல தமிழ் மீண்டும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான்.
“உன்ன தனியா விட்டுட்டு எப்படி போக..” என்ற தமிழின் வார்த்தைகள் மனதில் ஒலிக்க, இசையின் மனதில் ஏதோ ஒரு சலனம். “எனக்காக வந்தாங்களா?”. அவனை பார்த்தவள், “தேங்க்ஸ் சீனியர்..” என்க “என்ன மேடம் டீலிங்லாம் எங்களுக்கு மட்டும் தானா?” என்றான் தமிழ். அவன் பேச்சில் இசை புன்னகைக்க தமிழும் சிரித்தான்.
“இன்னோ முக்கால் மணி நேரம் இருக்கா..” நேரத்தை பார்த்த இன்னிசை சலித்துக் கொள்ள “அதெல்லாம் பேசீட்டே இருந்தா சீக்கிரம் போயிரும்” என்றவன் “சரி இசை உனக்கு காஃபியா? இல்ல டீயா?..” என கேட்க அவன் கேள்வியில் விழித்தவள், “என்ன சீனியர் திடீர்னு ?” என்றாள் கேள்வியாக “ம்ச் சொல்லு இசை…” என அவன் வம்படியாக கேட்க “காபி..” என்றாள்.
“சரி” என அருகே இருந்த டீ கடையில் இரண்டு காபி வாங்கி வந்தவன் அதை அவளிடம் நீட்ட, “எதுக்கு சீனியர் இப்போ தான சாப்பிட்டோம்..” என்றாள் இசை.
“சும்மா சொல்லாத இசை.. நான் தான் பாத்தேனே.. இந்த எழில் எரும பண்ண வேலைல மலர் சரியா சாப்டல சோ நீயும் சாப்பிடல. பஸ் வர லேட் ஆகும். ரொம்ப பிகு பண்ணாம குடி”.
“நம்மள இவ்ளோ கவனிச்சிருக்காங்களா..” என நினைத்தவள் மறுக்காமல் காபியை வாங்கிக் கொள்ள, “வேற ஏதாவது சாப்பிடறியா இசை?”, கேட்டான் தமிழ். வேண்டாம் என மறுப்பாக தலையாட்டிவள் காபியை பறுக தமிழும் அவனுடைய காபியை பறுகினான். இருவரும் கதைத்தப்படியே நேரத்தை கடத்தினர்.
நேரம் இரண்டரையை கடக்க பேருந்தும் வந்தது. மதிய நேரம் என்பதால் பெரியதாக கூட்டம் இல்லை, இருவரும் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். இசை அவளின் நிறுத்தம் வர இருக்கையில் இருந்து எழுந்தவள் தமிழிடம் ‘போய்டு வரேன்’ என தலையசைக்க பதிலுக்கு தலையசைத்தவன், “வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு..” என்றான் சைகையில் அதற்கு ஆமோதிப்பா தலையாட்டியவள் பேருந்து நின்றதும் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு கீழே இறங்கி சென்றாள். தமிழும் அவனின் நிறுத்தம் வந்ததும் இறங்கியவன் வீட்டுக்கு சென்றான்.
வீட்டிற்கு வந்தவன் கிட்சனில் இருந்த கலைவாணியை சென்று அணைத்துக் கொள்ள “என்ன டா இனியா சீக்கிரமே வந்துட்டே..?” என கேட்டார் கலைவாணி. “ஆமா கலை சீக்கிரமே வந்துட்டேன்..” என்றபடி அவர் கன்னத்தை கிள்ளினான்.
“என்ன டா ஒரே கொஞ்சல்ஸ்ஸா இருக்கு?.. என்னாச்சு?”
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..” என்றவன் தன் பேக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து, “இதுல ஒன்பதாயிரத்தி ஐநூறு ரூபா இருக்கு.. சாரி ஒரு ஐநூறு ரூபா மட்டும் செலவாயிருச்சு ஃப்ரண்ட்ஸ்க்கு ட்ரீட் வெச்சுட்டேன்..” என்றான்.
அவனை அதிர்ச்சியாக பார்த்தவர், “ஏது டா உனக்கு இவ்வளவு பணம்?”, “இன்னிக்கு ஏன் சீக்கிரம் வந்துட்டே?” என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக
“மா.. நான் எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்ல வந்தா நீ இப்படி கேள்வியா கேட்டுட்டு இருக்க போ..” என்றவன் கிட்சனில் இருந்த வெளியே போக அவனை பிடித்து நிறுத்தியவர், “சரி சரி.. என்ன சர்ப்ரைஸ்? உனக்கு எப்படி இவ்வளவு காசு ?” என கேட்டார்.
போட்டியில் அவன் வாங்கிய கோப்பையையும் சான்றிதழையும் அவர் முன் நீட்டியவன், “இது ஐயா காம்பெட்டீஷன்ல இன்னிக்கு பாடி பிரைஸ் வாங்குனது.. அதுக்கு கிடைச்ச கேஷ் பிரைஸ் தான் அந்த பத்தாயிரம்” என கூற கலைவாணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் முகத்தில் அப்படியொரு சிரிப்பு அத்தனை சந்தோஷம்.
அன்னையின் சந்தோஷத்தை பார்த்தவனுக்கு மகிழ்ச்சியா இருந்தது. அதிலும் அவரின் சிரிப்புக்கு அவன் காரணம் என நினைக்க நினைக்க மனதில் ஒரு நிறைவான உணர்வு தமிழிற்கு.
“கங்கிராட்ஸ் இனியா” என அவனை அணைத்துக் கொண்டவர், “என் பையன் தான் திறமைசாலி ஆச்சே” என பெருமை பேசி அவனுக்கு திருஷ்டி எடுத்தார். “இருந்தாலும் நீ ரொம்ப அலும்பு பண்ற” என தமிழ் சிரிக்க அவன் தலையை வருடி புன்னகைத்தவர், “இரு நான் கேசரி பண்றேன்..” என சமையலில் இறங்கினார்.
மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்தார் அன்பரசன். “ஏங்க இன்னிக்கு இவ்ளோ நேரம்?” என கலை கேட்ட
“இன்னிக்கு கடையில் நல்ல கூட்டம் அதான்” என்றார் அன்பரசன்.
சாப்பாட்டுடன் கலைவாணி கேசரியையும் வைக்க “என்ன விஷேசம்?” என்றார் அன்பு. “இன்னிக்கு நம்ம இனியன் பாட்டு போட்டியில பிரைஸ் வாங்கியிருக்காங்க..” என அவன் வாங்கிய கோப்பை சான்றிதழ் பரிசு தொகையையும் காட்ட , “ம்ம் சூப்பர் டா..” என ஒரே வரியில் பாராட்டியவர் “இதே ஆர்வத்த கொஞ்சம் படிப்புலையும் காட்டு” என கூற “அதானே பார்த்தேன்.. எங்க தொடங்கினாலும் இந்த மனுசன் படிப்புல வந்து தான் முடிப்பாரு” என நொடித்துக் கொண்டான் தமிழ்.
அன்பரசன் கிளம்பியதும் அவன் அறைக்கு வந்த தமிழுக்கு இசையிடமிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக குறுஞ்செய்தி வர, அவளுக்கு பதிலளித்தவன் அவளுடன் உரையாடியே அன்றைய பொழுதை கழித்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.