இரண்டு வாரங்கள் கடந்திருக்க, அன்று சனிக்கிழமை விடுமுறை. எட்டு மணி போல் எழுந்து வந்த முல்லை தந்தையை காணமல், “அப்பா எங்க மா?” என அன்னையிடம் விசாரிக்க “இப்போ தான் போன் வந்துச்சு.. ஏதோ முக்கியமான வேலையா திருப்பூர் கிளம்பிட்டாரு..”என்றார் கலைவாணி.
“திருப்பூரா.. எப்போ வருவாரு?”
“ராத்திரி ஆயிரும்”
“ராத்திரி ஆகுமா.. ம்மா நான் தான் எனக்கு ப்ராஜெக்ட் இருக்குனு சொன்னேன்ல.. எனக்கு நிறைய திங்கஸ் வாங்கனும் பிரிண்ட் அவுட் எடுக்கனும் நிறைய வேலை இருக்கு.. நான் தான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே அப்பாட்ட சொன்னேன்ல” கோவமாக கத்தியவள் தந்தைக்கு ஃபோன் போட அவளிடமிருந்து போனை பிடிங்கிய கலை, “இப்போ எதுக்கு அவருக்கு கால் பண்ணுற? அவரு அங்க என்ன டென்ஷன்ல இருக்காரோ. சும்மா அப்பாவ தொல்ல பண்ணாத பாப்பா” என மகளை அதட்டினார்.
“இப்போ நான் எப்படி மா ப்ராஜெக்ட் பண்ணுறது?” முல்லை கேட்டுக் கொண்டிருக்க அன்னையும் தங்கையும் போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்து வந்தான் தமிழ்.
அவனை கண்டதும், “இத உங்க அண்ணனுக்கு இன்னிக்கு லீவு தான இவன கூட்டீட்டு போய்டு வா..” என முல்லையிடம் கூறிய கலை, “டேய் பாப்பாக்கு ஏதோ ப்ராஜெக்டாமா அவள கூட்டீட்டு போய் என்ன வேணுமோ வாங்கி குடுத்து கூட்டீட்டு வா” என தமிழிடம் சொல்ல தூக்கம் கலைந்த கடுப்பில் இருந்தவன் அவருக்கு பதிலளிக்காமல் எரிச்சலுடன் நின்றான்.
“காலேஜ் படிக்கிற இவனே இத்தனை ப்ராஜெக்ட் பண்ணது இல்ல.. நீ சும்மா செலவு வைச்சுக்கிட்டே இரு”, முல்லையை கலைவாணி திட்ட அவரை முறைத்தவன் “பத்து மணிக்குள்ள ரெடியாகு” என முல்லையிடம் கூறி, “லீவு நாள்ல கூட இந்த வீட்ல நிம்மதியா தூங்க முடியல..” என முணுமுணுத்து கொண்டே தயாராக சென்றான்.
முல்லை முதலில் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என சொல்ல பத்து மணி போல் அவளை பிரிண்ட் அவுட் எடுக்க அழைத்து சென்றான் தமிழ்.
பிரிண்ட் எடுக்க வேண்டியதையெல்லாம் அவர்களின் மெயிலுக்கு அனுப்பிவிட்டு வந்தவனிடம் அவள் சையின்ஸ் புக்கை நீட்டிய முல்லை, “அண்ணா இது எப்படி?” என சந்தேகம் கேட்க வாங்கி பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தங்கையிடம் தெரியாதென சொல்ல கூச்சப்பட்டு, “நான் ஆர்ட்ஸ் குரூப்” என சமாளித்தான் தமிழ்.
மேற்கொண்டு முல்லை ஏதும் கேள்வி கேட்பாளோ என உள்ளுக்குள் பதறியவன் தீவிரமாக போனை நோண்ட முல்லையும் அவனை தொல்லை செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“ஹாய் சீனியர்” என்ற குரலில் நிமிர்ந்தவன் அந்த குரலுக்கு சொந்தக்காரியை கண்டதும், “ஹே இசை இங்க என்ன பண்ற?” என ஆச்சிரியத்துடன் புன்னகைத்தான்.
இதை கண்ட முல்லையோ, “என் கூட மட்டும் தான் உர்ர் னு இருக்கான்” என அண்ணனை மனதில் கடிந்து கொண்டாள்.
“ப்ராஜெக்ட் பிரிண்ட் எடுக்க வந்தேன் சீனியர்”
“ஓஓ.. சரி மலர் எங்கே?” என மலரை தேடியபடி அவன் வினாவ “அவ வரல சீனியர்.. இது டீம் ப்ராஜெக்ட் அட்டெண்டன்ஸ் ஆர்டர்ல, சோ நான் வேற டீம் அவ வேற டீம்” என்றாள் இசை.
“சரி சரி தனியாவா வந்த?”
“இல்ல சீனியர்” என்றவள் பின்னால் கண்ணைக் காட்ட ஒருவன் வெட்கத்துடன் போனில் பேசிக் கொண்டிருந்தான். தமிழ் அவனை பார்த்ததும் புன்னகைக்க, “சிரிக்காதீங்க.. எனக்கு இரிட்டேட் ஆகுது” என்றாள் கடுப்பாக.
அதில் சத்தமாக சிரித்தவன், “உனக்கு ஏன் கமிட்டெட்ஸ் பாத்து எரியுது?” என கிண்டலாக கேட்க, “எனக்கு என்ன எரிச்சல்? என் இடத்தில இருந்து பாருங்க அப்போ தெரியும். வந்ததுல இருந்து போனே பேசீட்டு இருக்கான். அப்படி என்ன தான் பேசுவானோ தெரியல ஒரு வேலையும் செய்யல. இதுக்கு நான் தனியாவே வந்திருப்பேன்” என்று சலித்துக்கொள்ள
“விடு விடு டீம் ப்ராஜெக்ட்னா அப்படி தான் இருக்கும்..” என்க “அப்போ நாங்க கஷ்டப்பட்டு எல்லா வேளையும் பண்ணுவோம் இவன் ஜாலியா மார்க் வாங்கிட்டு போவானா” என இசை தமிழை முறைத்தாள்.
“அப்படி சொல்ல வரல இசை.. டீம் ப்ராஜெக்ட்னா இப்படி முன்ன பின்ன தான் இருக்கும். உனக்கு மார்க் வேணும்னா பண்ணிதான் ஆகனும். சின்ன சின்ன விஷயத்துக்கும் பிரச்சனை பண்ண முடியுமா சொல்லு?” என்க அவனை முறைத்தவள், “அப்போ எதுவுமே கேட்கக் கூடாதுன்னு சொல்றீங்க?” என கோவமாக கேட்டாள் இசை.
“அப்படி இல்ல.. ஆல்ரெடி ரிப்போர்ட் ரெடி பண்ணீருப்பீங்க. இப்போ அத ப்ரிண்ட் எடுத்து பையின்டிங் இல்ல ஸ்பைரல் போடனும் அவ்ளோ தானே.. இதுல பெருசா என்ன வேலை இருக்குனு அவன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு எக்ஸ்பெக்ட் பண்ற?” என்க இசையால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இசை சமாதானம் ஆகாமல் இருக்க, “இசை…” என்றிழுத்தவன் “சரி நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” என சமாதானக் கொடியை பறக்க விட “ஒன்னும் வேண்டாம் போங்க நானே எல்லாம் முடிச்சுட்டேன்” என முகத்தை திருப்பியவள் அப்போது தான் முல்லையை கவனித்தாள்.
முல்லை இசையை பார்த்து தயக்கத்துடன் புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்த இசை, “இவங்க..?” என தமிழை பார்த்துக் கொண்டே இழுக்க, “என் தங்கச்சி முல்லை” என தமிழ் தங்கையை அறிமுக படுத்தினான்.
தங்கை என்றதும், “ஹாய்..” என இசை இன்னும் விரிந்து புன்னகைக்க தயக்கம் விடுத்து, “ஹாய் அக்கா” என்ற முல்லையும் மேலும் இசையுடன் சகஜமாக பேசினாள்.
“உங்களுக்கு தங்கச்சி இருக்கா? நீங்க இது வர சொன்னதே இல்ல” என்ற இசையின் கேள்வியில் முல்லையின் முகம் வாடிவிட்டது. இன்னிசையும் அதை கவனிக்க தவறவில்லை.
“தங்கச்சி இருக்கானு கூட இவன் சொல்லலையா.. அந்த அளவுக்கு நான் என்ன வேண்டாம போய்டேன்?..” என முல்லையின் மனம் குமுறியது.
தமிழ் சொல்லக் கூடாதென்றெல்லாம் நினைக்கவில்லை, இத்தனை நாள் அவர்களின் உரையாடல்கள் இருவரின் பொதுவான விருப்பம் ரசனைகளை பற்றியோ அல்ல அவர்களின் கல்லூரி வட்டத்தை சுற்றியே இருக்க இதுவரை அவரவர் குடும்பங்களை குறித்த பேச்சுக்கள் இருவரிடையில் எழுந்ததே இல்லை. ஒரு வேளை வீட்டை பற்றிய பேச்சுக்கள் இருந்திருந்தால் தங்கை இருக்கிறாள் என சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது.
இசை அதை ஆமோதித்தாலும் ஏனோ முல்லையால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை அவள் முகமே பிரதிபலித்தது.
முல்லை தமிழின் இந்த பக்கத்தை பார்த்ததே இல்லை. தமிழிற்கு நண்பர்கள் மிகவும் குறைவு எழில் மட்டுமே முதன்மையானவனாக இருக்க மற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் பெண்கள்? அவளுக்கு தெரிந்து யாருமே இல்லை. அதற்கென அவன் பெண்களுடனே பேசாதவன் இல்லை. அவனிடம் பேசுபவர்களிடம் சகஜமாக பேசுவான். ஆனால் நட்பு பாராட்டும் அளவிற்கு யாரும் நெருக்கம் இல்லை எல்லாம் தேவைக்கு பேசுபவர்களே.
இசையுடனான தமிழின் இந்த இயல்பான இலகுவான பேச்சுக்கள் அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது. “அண்ணாக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா?..” என நினைத்தவள், “என்கிட்ட கூட இவன் இப்படி எல்லாம் பேசுனதே இல்லயே..” என மனதில் குறைப்பட்டுக் கொண்டாள்.
“பாப்பா உன் புக்க குடு” என்ற தமிழின் குரலில் சிந்தனையில் இருந்து தெளிந்தவள் அவனிடம் புத்தகத்தை நீட்டினாள்.
“இசை நீ சையின்ஸ் ஸ்டூடென்ட் தானே.. முல்லைக்கு ஏதோ டவுட்டாமா. அவளுக்கு சொல்லிதரியா?” என தமிழ் கேட்க சரி என்றாள் இசை.
“ஏதோ டவுட்னு சொன்னல.. இசை கிட்ட கேட்டுக்கோ” என முல்லையிடம் கூறியவன் பிரிண்டவுட்களை வாங்க செல்ல; முல்லையின் ஐயங்களை விளக்கினாள் இன்னிசை.
தமிழ் பிரிண்டவுட்களை வாங்கி வர அவனிடம் வந்த முல்லை, “அண்ணா.. நம்ம திங்க்ஸ் வாங்க இசை அக்காவையும் கூட்டீட்டு போலாமா?” என கேட்க மறுத்துவிட்டான் தமிழ்.
“அவங்க என் ப்ராஜெக்ட்க்கு ஒரு ஐடியா சொன்னாங்க சூப்பரா இருந்திச்சு. ப்ளீஸ் அவங்களும் வந்தா எனக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்” முல்லை கெஞ்ச இசையை தயக்கமாக பார்த்தான் தமிழ்.
“இசை நீ ஃபிரீயா?.. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” தமிழ் கேட்க “இல்ல சீனியர் ஃபீரி தான்” என இசை சொல்ல சிரிப்புடன் அவள் கைகளை பிடித்து கொண்டாள் முல்லை.
“ஐ! சூப்பர் க்கா.. நம்ம ஒன்னா ஜாலியா ஷாப்பிங் போலாம்” என குதுகலித்தவள் “இருங்க என் ஃபிரண்ட் தியாவும் வந்துட்டா.. நான் கூட்டீட்டு வரேன்” என வெளியே ஓடினாள்.
முல்லை வெளியே செல்லவும்,”ஃபை மினிட்ஸ் சீனியர்” என்ற இசை பையின்டிங் முடித்த ப்ராஜெக்டை அவள் நண்பனுடன் சென்று வாங்கியவள், அதை அவனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு வர தமிழோ, அதற்குள் இசையும் முல்லையும் எப்படி இத்தனை நெருக்கமானார்கள் என யோசனையில் இருந்தான்.
“போலாமா சீனியர்?” என்ற இசையின் குரலில் தெளிந்தவன், அவளுடன் நடந்தபடியே “சாரி இசை.. முல்லை உன்ன ரொம்ப தொல்லை பண்றா” என்க, “நான் அப்படி சொன்னன்னா? தொல்லையெல்லாம் இல்ல முல்லை செம ஸ்வீட்” என்றாள்.
“ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆய்டீங்க போல?” அவன் சிரிப்புடன் கேட்க “பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்..” என புன்னகைத்தாள் இசை.
இவர்கள் வெளியே வர தியாவுடன் வந்த முல்லை, அவளை இசைக்கு அறிமுகபடுத்தினாள். ஸ்டேஷனரி கடைகள் அருகே இருக்க நால்வரும் நடந்தே சென்றனர். இசை, முல்லை, தியா மூவரும் கதையளந்து கொண்டே நடக்க இடைவெளி விட்டு அவர்களுக்கு இரண்டடி பின்னே நடந்தான் தமிழ்.
கடைக்குள் நுழைந்ததும் மூவரும் ப்ராஜெக்ட்க்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மூழ்கிவிட மூவரின் உடைமைகளுக்கு காவல் காத்துக் கொண்டிருந்த தமிழோ ‘இவளுகளுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்க தான் என்ன அனுப்பி வைச்சாங்க போல’ என மனதில் அன்னையை கடிந்தான்.
ஒருவழியாக ஒரு மணிநேரத்தில் மூவரும் தேவையானவற்றை எல்லாம் வாங்கி வர அதற்குள் முல்லைக்கும் தியாவிற்கும் பசியெடுக்க தொடங்கிவிட்டது. மூவரையும் அருகே இருந்த கேஃபேக்கு அழைத்து சென்ற தமிழ் அவர்கள் வேண்டியதை வாங்கி தந்தான்.
சாப்பிட்டு முடித்தவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் ஸ்டாப் வந்தனர். தியாவும் முல்லையும் அவர்களின் பள்ளிக் கதைகளை பேசிக் கொண்டிருக்க, இசை மெல்ல தமிழ் அருகே வந்த நின்றாள்.
அவளை பார்த்து புன்னகைத்தவன், “ஷாப்பிங்லாம் முடிஞ்சிச்சா?” என கேட்க “முடிஞ்சிருச்சு சீனியர்” என்றாள் இசை. இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க; அதற்குள் இசையின் போனில் எக்கச்சக்க நோட்டிஃபிக்கேஷன்கள். அதை பார்த்தவளின் முகம் அஷ்டகோணலானது.
“என்னாச்சு?” அவள் பாவனையை பார்த்தவன் கேட்க, “இன்டர்னல் எக்ஸாம் டைம் டேபிள் வந்திருச்சு” என அவனிடம் காட்டினாள்.
இன்டர்னல்ஸ் டைம் டேபிள் வந்ததும், அதற்கு தயாராக வேண்டுமே என்ற சிந்தனைகளில் இசையிருக்க; தமிழுக்கு அதுபோன்ற எண்ணங்கள் ஏதுமில்லை, அவனுக்கு தான் பரிட்சைக்கு முன்பே முடிவுகள் தெரியுமே.. எப்படியும் ஏதாவதில் போய்விடும். அதனால் பெரியதாக அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
தியாவை அவன் அண்ணண் வந்து அழைத்துச் செல்ல இவர்களும் அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
நாட்கள் வேகமாக ஓட இன்டர்னல்ஸ் தேர்வுகளும் தொடங்கியது. அனைத்து தமிழ் படங்களையும் பார்த்துவிட்டு பல ஆசைகளோடு பரிட்சை ஹாலுக்கு சென்ற மலரோ அங்கு எழிலை கண்டு கடுப்பானாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.