நான்கு நாட்கள் கழிந்திருக்க அன்று கடைசி தேர்வு, முதலில் கோர் சப்ஜெக்ட் எனப்படும் முக்கிய பாடங்கள் முடிந்திருக்க இறுதியில் மொழிப்பாடங்கள். இன்று ஆங்கில தேர்வு.
தேர்வு அறையில் எழிலின் அருகே அமர்ந்திருந்த மலர்விழி, ஹச்.. ஹச்.. என வந்ததிலிருந்து தும்மிக் கொண்டே இருந்தாள். எல்லாம் நேற்று முன்தினம் மழையில் நனைந்ததின் விளைவு.
நேற்று உடல்நலமின்மையுடன் சோர்வும் சேர்ந்து கொள்ள நாளை ஆங்கில பரிட்சை தானே என அலட்சியமாக இருந்துவிட்டாள். ஆனால் வினாத்தாள் கடினமாக இருக்க பதில் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
பரிட்சை எழுதாமல் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்த மலரை பார்க்கவே பாவமாக இருந்தது எழிலிற்கு. அருகே அமர்ந்திருந்தவளின் உடல் அனலை தான் அவனால் உணர முடிந்ததே.
“என்னாச்சு..” எழுதிக் கொண்டே எழில் கிசுகிசுக்க “ஃபீவர்” என முனங்கலாக பதிலளித்தாள். “ஓஓ..” என்றவன் சட்டென இருவரின் வினாத்தாள்களையும் இடம் மாற்ற “என்ன பண்றீங்க?” என படபடத்தாள் மலர்.
“ஷ்ஷ்…” அவளை அமைதிபடுத்தியவன் அவள் வினாத்தாளில் அவனுக்கு தெரிந்த ஒரு மதிப்பெண் மற்றும் இலக்கண கேள்விகளுக்கு பதில் எழுதி அவளிடம் நீட்ட அவனை சந்தேகமாகப் பார்த்தாள் மலர்.
“என்ன?” அவள் பார்வையில் எழில் கேட்க “இதுவும் ரிவெஞ்சா?” என்றாள் அவனை நம்பாமல். அவளை முறைத்து, “தேவைனா எழுது.. இல்ல ஃபெயிலா போ” என்றவன் “உடம்பு சரியில்லை பாவம்னு ஹெல்ப் பண்ணா ஓவரா பண்றது.. காய்ச்சல்ல கூட கொழுப்பு குறையுதா இவளுக்கு” என முணுமுணுத்தபடடியே தேர்வை தொடர்ந்தான்.
“லாஸ்ட் தேர்ட்டி மினிட்ஸ்..” எக்ஸாமினரின் குரலில் தெளிந்தவளுக்கு எழிலை தவிர வேறு வழியின்றி போக அவன் எழுதித் தந்த பதில்களையே எழுதினாள்.
தேர்வு முடிந்ததும் அறையைவிட்டு மலர் வெளியே வர இசையும் அவள் தேர்வு அறையிலிருந்து வந்தாள். அவளுடன் விடைகளை கலந்தாலோசித்தவளுக்கு எழில் எழுதித் தந்த பதில்களெல்லாம் சரியானவை என புரிய, “ஒரு நிமிஷம்..” இசையிடம் சொல்லிவிட்டு எழிலை தேடிச் சென்றாள்.
அவனிடம் சென்றவள், “தேங்க்ஸ் சீனியர்..” என்க “எதுக்கு?” என்று அவள் முகம் பார்த்தான்.
“ஆன்ஸர் எழுதி குடுத்ததுக்கு”
“ஓஓ..” என்றவன் சரியென தலையாட்டிவிட்டு சென்றுவிட, “தேங்க்ஸ் சொல்றனே திருப்பி ஒரு ஸ்மைல் பண்ணா என்னவாம்.. சிடுமூஞ்சி.. மேனர்ஸே இல்ல” என திட்டியவள் அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.
தமிழிடம் சென்ற எழில் ஏதோ பேசி புன்னகைக்க மலரின் இதழ்களும் தன்னால் விரிந்தது, “இருந்தாலும் கொஞ்சம் நல்லவன் தான்..” புன்னகைத்தவள் அவன் மறையும் வரை பார்த்துவிட்டு திரும்ப அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் இன்னிசை.
மலர் இசையை கண்டு சமாளிப்பாக சிரிக்க, “உன் சிரிப்பே சரியில்லையே.. என்ன நடக்குது?” புருவம் உயர்த்தினாள் இசை. “அதெல்லாம் ஒன்னும் இல்ல டி..” என்றவள் எழில் உதவியதை சொல்ல “நான் தான் சொன்னேன்ல எழில் அண்ணா ஸ்வீட்னு..” என்ற இசை “அப்போ ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆகிடீங்களா?” என கேட்க, “அதெல்லாம் இல்ல..” என உடனடியாக மறுத்தவள் “ஹெல்ப் பண்ணான் தேங்க்ஸ் சொன்னேன் அவ்ளோதான்..” என்றாள். ‘இவள திருத்த முடியாது..’ என நினைத்த இசை மேற்கொண்டு வேறு விஷயங்களை பேசினாள்.
அடுத்த இரண்டு பீரியட்கள் சிக் ரூமில் ஓய்வெடுத்திருந்த மலருக்கு மாத்திரையின் வீரியத்தில் காய்ச்சல் குறைந்து உடல்நிலை தேறியிருந்தது. அங்கு கைபேசி பயன்படுத்த அனுமதியில்லை என்பதால் போர் அடிக்க, உடல் தேறியதும் வகுப்புக்கு சென்றுவிட்டாள்.
கடைசி பீரியட் லேப், இவர்களின் எக்ஸ்பெரிமென்ட்டுக்கு ரிசல்ட் வர தாமதமானதால் இசை மலர் இருவரும் கல்லூரி பேருந்தை தவறவிட்டு தாமதமாக வீட்டிற்கு சென்றனர்.
கல்லூரியிலிருந்து பேருந்து பிடித்து வந்த இருவரும் வீட்டிற்கு நடந்து செல்ல மெல்ல இசையின் கைகளை சுரண்டினாள் மலர்.
“எனக்கு பசிக்குது இசை.. நம்ம ஜூஸ் ஏதாவது குடிச்சுட்டு போலாமா?”
“மதியம் வர சிக் ரூம்ல படுத்திருந்திருந்தது மறந்திருச்சா..”
“ஐஸ் போடாம குடிச்சா ஒன்னும் ஆகாது டி” இசையை வழிக்கு கொண்டு வர பேசிக் கொண்டிருந்தாள் மலர்.
“இசை அக்கா..” கோரஸ்ஸாக குரல் வந்த திசையில் திரும்ப முல்லை, தியா, விதுரன் மூவரும் நின்றிருந்தனர். “யாரு டி இது..” மலர் இசையின் காதுகளை கடிக்க “நான் சொன்னேன்ல.. சீனியர் தங்கச்சி, அவ ஃபிரண்ட் தியா” என அறிமுகப்படுத்தியவள் விதுரனை பார்க்க “அக்கா இவன் எங்க ஃபிரண்ட் விதுரன்” என அறிமுகப் படுத்தினாள் தியா.
எழிலின் ஜாடையிலிருந்த விதுரனை கண்ட இசை, “எழில் அண்ணாவோட தம்பியா?” என கேட்க, “அவன் தான் என் அண்ணன்” என்றான் விதுரன் மிடுக்காக.
விதுவின் பேச்சையெல்லாம் கேட்ட மலருக்கு எழிலின் மினியேச்சரை (miniature) பார்ப்பது போலிருந்தது. “அண்ணனுக்கு தப்பாம பொறந்திருக்கு..” முணுமுணுத்த மலர் மீண்டும் இசையின் கைகளை சுரண்டி கண்களாலேயே பசிக்குது என சைகை செய்ய, அருகே இருந்த கஃபேக்கு சென்றனர். சிறியவர்கள் மூவரையும் தவிர்த்துவிட்டு சாப்பிட மனம் இல்லாமல் உடன் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சென்றது ஒரு செல்ஃப் சர்வீஸ் கஃபே. “சரி என்ன சாப்பிடுற?.. நான் வாங்கிட்டு வரேன்” என இசை எழ “நானே போறேன்” என்றாள் மலர்.
“உனக்கு தான் உடம்பு சரியில்லைல நானே போறேன்”
“நான் நல்லா தான் இருக்கேன். சாதாரண காய்ச்சல் தான் ஏதோ நோயாளி ரேஞ்சுக்கு என்ன டிரீட் பண்ணாத” மலர் கடுப்பாக பேச
“சரி நீயே போய் வாங்கீட்டு வா” என்ற இசை அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
மற்றவர்களுக்கு என்னென்ன வேண்டும் என கேட்ட மலர் ஸ்நாக்ஸ் வாங்க தியாவையும் அழைத்துச் செல்ல, வம்பு செய்து அவர்களுடன் ஒட்டிக் கொண்டான் விதுரன். இந்த வம்புகளில் தலையிடாத முல்லை அமைதியாக இசையின் அருகே அமர்ந்து கொண்டாள்.
முல்லையை கண்டு புன்னகைத்த இசை, “நீயும் தியாவும் கலர் டிரெஸ்.. விதுரன் மட்டும் யூனிஃபார்ம்ல இருக்கான்?” என கேட்க “அது இன்னிக்கு ஸ்கூல்ல ஒரு ஃபங்ஷன் க்கா.. நானும் தியாவும் தான் ஹோஸ்ட் பண்ணோம் ஸோ கலர் டிரெஸ்” என்றாள்.
முல்லையின் டிரெஸில் கழுத்தின் அருகே இருந்த எம்பிராய்டரியை வருடிய இசை, “அழகா இருக்கு.. நீ போட்ட எம்பிராய்டரியா?” என கேட்க ஆச்சிரியப்பட்டவள், “உங்களுக்கு எப்படி க்கா தெரியும்..” என கேட்டாள்.
“தெரியும்..” என புன்னகைத்தவள், “உங்க அண்ணா சொல்லிருக்காரு” என்றாள்.
அதில் மகிழ்ச்சியடைந்த முல்லை, “அண்ணா என்ன பத்தியெல்லாம் உங்க கிட்ட பேசுவானா க்கா?” என ஆர்வமாக கேட்டாள்.
இசையின் கூற்றில் முல்லையின் மகிழ்ச்சி மொத்தமாய் வடிந்தது. “இந்த அக்கா கேட்டு தான் சொல்லிருக்கான் அவனா எதுவும் சொல்லலை” என மனம் வாடியவள் “உங்க கூடலாம் நல்லா பேசுவானா க்கா..” என அண்ணனின் மறுபக்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க
“ஓஓ பேசுவாரே.. அவரு ஃபோன் எடுத்தா வைக்கவே மாட்டாரு.. உனக்கு தெரியாதா என்ன” என்றாள் இசை இயல்பாக, ‘இவளை விடவா இவள் அண்ணனை பற்றி எனக்கு தெரியும்’ என்ற எண்ணம்.
“அவ்ளோ நல்லா பேசுவானா க்கா.. எனக்கு தெரியாது.. அவன் என் கூட சரியா பேசவே மாட்டான்..” என்றாள் கரகரத்த குரலில் வருத்தமாக. அவள் பதிலில் அதுவரையிருந்த இலகு தன்மை நீங்க, “ஏன்?” என முகம் பார்த்தாள் இசை.
“எனக்கு சின்ன வயசுல ஹார்ட்ல ஹோல் இருந்திச்சு க்கா.. ஆப்ரேஷன் பண்ணீருக்கு. ஒரு தடவ நான் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்கிறப்போ விளையாடீட்டு இருந்தோம்.. அப்போ அண்ணா என்ன தெரியாம தள்ளிவிட்டுட்டான்.. நான் கீழ விழுந்து எனக்கு அடிப்பட்டு மூச்சு விட முடியாம போய் ஹாஸ்பிட்டல் போற அளவுக்கு ஆகிருச்சு. அதுல டென்ஷன் ஆகி அப்பா அண்ணன செம அடி அடிச்சிட்டாரு. அதுல இருந்து அவன் என் கூடவும் அப்பா கூடவும் சரியா பேச மாட்டான்..” என முல்லை சொல்ல என்ன பதிலளிப்பது என தெரியாமல் அமைதியாக இருந்தாள் இசை.
“அன்னிக்கு அண்ணா மேல தப்பே இல்ல அக்கா அவன் வேணும்னு பண்ணல. அது தெரியாம நடந்த ஒரு ஆக்சிடென்ட். ஆனா அப்பா கொஞ்சம் கூட யோசிக்காம ரொம்ப அடிச்சிட்டார். எல்லா என்னால தான்.. என்னால தான் அவன் அப்பாட்ட அடிவாங்குனான்” என்று அழுதவளுக்கு அகமெல்லாம் செய்யாத தவறுக்கு தன்னால் தமையன் தண்டனை அனுபவித்தானே என்ற குற்றவுணர்வு.
முல்லையின் அழுகையில் இசைக்குமே மனம் கனத்து போனது. என்ன சொல்லி அவளை தேற்றுவதென புரியாதவள் அவள் கைகளை பிடித்துக் கொண்டு, “அழாத முல்லை” என்றாள் ஆறுதலாக.
“உங்களுக்கு தெரியுமா அக்கா.. எனக்கு எங்க அண்ணாவ ரொம்ப பிடிக்கும். எழில் அண்ணா தீபக் அண்ணாலாம் விது தியா கூட சண்ட போடுறது வம்பிழுக்கிறதெல்லாம் பாக்குறப்போ எனக்கும் ஆசையா இருக்கும்.. ஆனா அவனுக்கு என்ன சுத்தமா புடிக்காது.” என விசும்பலுடன் சொன்ன முல்லையை பார்க்க இசைக்கு பாவமாக இருந்தது.
“அப்படியெல்லா இல்ல முல்லை உங்க அண்ணாக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்” என சமாதானப்படுத்தியவள் அவளை இலகுவாக்கும் நோக்கில் அவளை கண்டு புன்னகைக்க
மறுப்பாக தலையாட்டிவள், “இல்ல நீங்க சும்மா சொல்றீங்க.. நான் தான் பாக்குறனே.. அவனுக்கு என்ன சுத்தமா புடிக்காது.. தேவைக்கு மட்டும் தான் என் கிட்ட பேசுவான்” என்றாள் விசும்பலுடன்.
இசையால் முல்லையை உணர முடியவில்லை என்றாலும் புரிந்து கொள்ள முடிந்தது. உடன்பிறப்புகள் இல்லாத அவளுக்கே சில நேரங்களில் இது போன்ற ஏக்கங்கள் இருக்கையில் முல்லையின் ஏக்கங்கள் அவளுக்கு புரிந்தது.
“அழாத முல்லை..” இசை அவளை சமாதானம் செய்ய விதுரன் வருவதை பார்த்த முல்லை “ஐயோ அக்கா.. விது வரான்” தன் கைக்குட்டையில் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டவள், “அக்கா நான் அழுததை அவன் கிட்ட சொல்லாதீங்க அப்பறம் அப்பாகிட்ட சொல்லீருவான்” என்று இசையிடம் கெஞ்சலாக சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்.
மூவரும் ஸ்நாக்ஸ் வாங்கி வர முல்லையின் அருகே வந்த விதுரன், “ஏன் மூஞ்சியெல்லாம் ஒரு மாதிரி இருக்கு அழுதியா?” முல்லையை குறுகுறுவென பார்த்தபடி கேட்க “கண்ணுல தூசி விழுந்திருச்சு” என்றாள் சமாளிப்பாய்.
“நிஜம்மா?” விது உறுதி செய்யும் விதமாக கேட்க எரிச்சலான முல்லை, “அதான் தூசி விழுந்திருச்சு சொல்றேன்ல ஏன் துருவி துருவி கேள்வி கேட்கிற?” என சிடுசிடுத்தாள்.
“சரி சரி கேட்கல.. அதுக்கு ஏன் இப்படி கத்துற” என்றவன் அவளிடம் கேக்கை கொடுக்க மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் முல்லை சாப்பிட மற்றவர்களும் அவர்களின் உணவை பேசிக் கொண்டே உண்டனர்.
சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவர்கள் விடைபெற்றுக் கொண்டு அவரவர் நட்புகளுடன் தங்களின் வீடு நோக்கி நடந்தனர்.
அமைதியாக வந்த இசையின் முக வாட்டத்தை கண்ட மலர், “ஏன் உன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு.. முல்லை முகமும் சரியில்ல என்னாச்சு ரெண்டு பேருக்கும்?” என கேட்க
“ஒன்னும் இல்ல டி..” என அவளுக்கும் முல்லைக்கும் இடையே நடந்த உரையாடலை கூறியவள், “எனக்கு முல்லை அழுதது ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு” என்றாள்.
“பாவம் டி முல்லை சின்ன பொண்ணு தானே.. ஏன் இந்த சீனியர் இப்படி பண்ணுறாரு?” என்ற மலர் “ஆனா அவர் இடத்தில இருந்து பார்த்தா தானே அவர் ஃபீலிங்க்ஸும் புரியும்” என அதற்கு பதிலும் அளித்தாள்.
இசை அதை ஆமோதிக்க, “பேசாம நம்ம இத பத்தி சீனியர்ட்ட பேசுவோமா?” என்றாள் மலர்.
மறுப்பாக தலையாட்டிவள், “வேண்டாம்.. இது அவர் ஃபேமிலி விஷயம்.. அவரு நம்ம கூட நல்லா பழகுறாருங்கறதுக்காக அவர் பர்சனல் லைஃப்ல தலையிடுறது நல்லாவா இருக்கும்”.
“அதுவும் சரி தான்..” என்ற மலர் “ஆனா நீ ஏன் இப்படி பேசுற?” என அவளின் குரலை சுட்டிக் காட்டி கேட்க
“எப்படி?” என்றாள் இசை.
“ஏதோ அழற மாதிரி பேசுற..”
“அது.. முல்லை அழுதது கஷ்டமா இருக்கு”
“எனக்கும் தான் கஷ்டமா இருக்கு.. அதுக்குனு இப்படியா?”
“வேறென்ன பண்ணனும்.. அந்த பொண்ணு வந்து அவ ஃபீலிங்க்ஸ சொல்லி அழும் போது கல்லு மாதிரி நிக்க சொல்றியா..” இசை குரல் உயர்த்த “உன்ன கல்லு மாறி யாரும் நிக்க சொல்லல.. ஓவரா கரையாதனு சொல்றேன்.” என்றவள் “ஸ்டாப் பீயிங் சோ சென்சிடிவ் இசை” என்று அதட்டினாள்.
“அன்னிக்கு என்னடான்னா சீனியர் அழுதது கஷ்டமா இருக்குனு அழற இன்னிக்கு என்னடான்னா அவர் தங்கச்சி அழுதது கஷ்டமா இருக்குனு ஃபீல் பண்ற.. இவ்ளோ சென்சிடிவ்வா இருக்காத.. ரொம்ப ஃபீல் பண்ணாத.. ஓவர்திங்க் பண்ணாத.. நாளைக்கு இதே உன் மென்டல் ஹெல்த்த அஃபெக்ட் பண்ணும்” மலர் பேச இசை அமைதியாக இருந்தாள்.
“என்ன கோச்சிக்கிட்டியா?” மலர் அவளின் கைகளை பற்ற அவளின் கைகளை உதறினாள் இசை. அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள், “இசை” என அதட்ட
“நான் டிரை பண்ணேன் அனா என்னால முடியல..” என்றவளின் கண்கள் கண்ணீரை கோர்த்துக் கொள்ள “இப்ப எதுக்கு அழற?” என அதட்டினாள் மலர்விழி.
“நீயும் அப்பாவும் இத அடிக்கடி சொல்றீங்க.. நீங்க ஏன் சொல்றீங்கனு எனக்கு புரியுது. ஆனா யாராது அழுதாவோ ஃபீல் பண்ணாவோ எனக்கு கஷ்டமா இருக்கு.. அழுக வருது.. நான் என்ன பண்ணட்டும்? நான் முயற்சி பண்ணேன் ஆனா என்னால சட்டுனு மாத்திக்க முடியல” என்றாள் இயலாமையுடன்.
‘ஏன் தான் இவ இப்படி இருக்காளோ’ என மனதில் நினைத்த மலர், “சட்டுனுலா உன்ன யாரும் மாத்திக்க சொல்லல.. மாத்தவும் முடியாது கொஞ்ச கொஞ்சமா தான் மாத்திக்கணும். ஓரே விஷயத்த போட்டு ரொம்ப யோசிச்சா அது உன் மென்டல் ஹெல்த்த தான் பாதிக்கும் புரியுதா?” என்க “புரியுது” என்றாள் இசை.
வீட்டின் அருகே வரவும், “சரி வீடு வந்திருச்சு உள்ள போ..” என்ற மலர் இசை உள்ளே சென்ற கேட்டை பூட்டியதும், “சொன்னது புரிஞ்சிதுல.. அடுத்தவங்க பிரச்சினைக்கு ஓவரா ஃபீல் பண்ணாம உன்னோட பிரச்சினைய பாரு. அப்சர்வேஷன், ரெக்கார்ட்னு நமக்கே ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு அத போய் பாரு”.
இசை சரியென தலையாட்டிவிட்டு செல்ல அவள் வீட்டினுள் நுழையும் வரை நின்று பார்த்த மலர்விழி அதன் பின் நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் அவளின் வீட்டிற்கு சென்றாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.