காலையிலிருந்து அழுததாலோ என்னவோ யாழினிக்கு தலை வின் வின்னென்று தெரிக்க, வர்ஷினியிடம் கேட்டு தலைவலி மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டவள் மெல்ல உறங்கியும் போனாள்.
மீண்டும் அவள் கண்விழித்தப்போது, நிலைக்கண்ணாடிமுன் இடுப்பில் டவலுடன் யாதவ் ஈரமான சிகையை உலர்த்திக்கொண்டிருக்க, அவனை இப்படிப் பார்த்தவளுக்கோ திக்கென்றது.
அவசரஅவசரமாக எழுந்து அமர்ந்தவள் “ச்சீ” என்றவாறு முகத்தை திருப்பிக்கொண்டதோடு, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?” என்றாள் அதீத கோவத்துடன்.
“நான் அதக் கேக்கல.. இதென்ன கோலம்.. ஒரு பொண்ணு இருக்கற ரூம்-ல இப்படிதான் அரைக்குறையா நின்னுக்கிட்டு இருப்பீங்களா..?” என்றவள் கேட்க, அப்போதுதான் அவள் கேள்வியின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது.
இதழ்பிரித்து அழகாய் சிரித்துக்கொண்டவன் அடுத்து சென்று நின்றது என்னவோ அவள் முன்னால் தான்.
தன்னால் முன்னால் வந்து நின்றவனைப்பார்த்து முகம் திருப்பிக் கொண்டவள், “இப்போ எதுக்கு இப்படியே என் முன்னாடி வந்து நிற்குறீங்க..?” என்க.
“இப்படி இருக்கற என்ன பார்க்க பிடிக்கலையா..? இல்ல பார்க்க ரொம்ப ஹாட்-ஆ இருக்கனா..?” என்றவனின் குறும்பு கேள்வியால் அவளுக்குதான் ஐய்யோ என்றிருந்தது.
“ஐய்யோ படுத்துறானே” என்று உள்ளுக்குள் குமுறியவள், “டிரஸ்-அ போடுங்க” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.
“ஓகே” என்று தோளைக்குலுக்கியவன், அவளை நோக்கி குனிந்தான்.
தன்னை நோக்கி வந்தவனின் வெற்று மார்பின் கைவைத்து தடுத்தவள், உள்ளுக்குள் ஏற்பட்ட பதற்றத்தை மறைத்துக்கொண்டு “என்ன..?” என்றாள் விழிகள் விரித்து.
அவனோ தன் ஆடைமீது ஜம்பமாக அவள் அமர்ந்திருப்பதை கண்ஜாடையால் காட்ட, அவள் அப்போதுதான் குனிந்துப்பார்த்தாள்.
“என்ன யாழினி இப்படி மாட்டிக்கிட்ட” என்று தன்னை அவள் நொந்துக்கொண்டிருந்த வேலையில் அவளுக்கு அடியில் இருக்கும் ஆடையை எடுக்கும் பொருட்டு அவன் மேலும் குனிய,
“இருங்க.. நானே எடுத்துதரேன்” என்றாள் அவசர அவசரமாக.
“ஓகே.. நீயே போட்டும் விட்டுடு” என்றவன் சொல்ல, அவளோ மலைத்துப்போய் அவனை பார்த்தாள்.
மலங்க மலங்க தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் விழிகளையே சில கணங்கள் பார்த்திருந்தவன், “உன்னால முடியாதுல்ல.. அப்போ நானே எடுத்துக்கறேன்” என்று கூறியவாறே அவளை கட்டியணைப்பதுபோல அவன் குனிய, யாழினியோ படுக்கையின் மீது சாய்ந்து கொண்டாள்.
அவள் சாய்ந்து படுத்ததில் அதுவரை அவள் இடையை மறைத்திருந்த புடவை விலகி அவனுக்கு காட்சி கொடுக்க, யாதவின் விழிகளோ அவளின் இடையின் மீதுதான் படிந்தது. இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டவன், அவளின் இடைக்குப்பின்னால் கைக்கொடுத்து மெல்ல தூக்கி அவளுக்கு கீழியிருந்த தன் ஆடையை எடுக்க, அவனின் ஸ்பரிசத்தாலும், ரோமங்களின் குறுகுறுப்பாலும் அவள்தான் உள்ளுக்குள் திண்டாடிப்போனாள்.
ஆடையை எடுத்துக் கொண்டவன் கள்ளப்புன்னகையுடன் அவளிடமிருந்து விலக,
“இப்படியும் எடுக்கலாம்” என்றான் அவளைப் பார்த்து குறும்பாய் கண்ணடித்து.
மேற்கொண்டு அவனை பார்க்க முடியாமல் போகவே குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் யாழினி.
குளித்து முடித்து மீண்டும் அவள் வெளியில் வந்தபோது அவன் அறையில் இல்லை என்பதே அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
காலையிலேயே ஈவ்னிங் பார்ட்டிக்கு இதைத்தான் அணியவேண்டுமென்று வர்ஷினி சொல்லி கொடுத்து சென்ற ஆடை சோஃபாவின் மீது இருக்க, அதை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.
அது ஆலிவ் கிரீன் நிறத்தில் நெட் மெட்டாலிக் ஃபாயில் வொர்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்த பார்ட்டி வியர் முழு நீள கவுன். அதை அணிந்துக்கொண்டவள் அப்போதுதான் கவனித்தாள் ஆடையின் பின்புறம் இருந்த நீண்ட ஜிப்பை.
இருக்கைகளையும் பின்னால் கொண்டு சென்று ஜிப்பை இழுத்தாள். அவள் இழுத்த வேகத்தில் ஜிப் பாதியில் ஆடையில் மாற்றிக்கொண்டு நிற்க, யாழினிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இனி யாராவது உதவினால்தான் உண்டு என்று நினைத்தவள், கதவைத்திறந்து மெல்ல தலையை நீட்டிப்பார்த்தாள் யாராவது பெண்கள் இந்த வழியாக வருகிறார்களா என்று. ஆனால் யாரும் வராமல் போகவே தானே அதை சரிசெய்ய நினைத்தவள், நிலைக்கண்ணாடியில் பார்த்து பார்த்து ஜிப்-பை சரிசெய்துக்கொண்டிருந்தபோதுதான், அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் யாதவ் கிருஷ்ணன்.
அவனை இங்கு சற்றும் எதிர்ப்பார்க்காதவள், சட்டென்று பின்னால் இருந்த கையை விலக்கியதோடு, “இங்க எதுக்கு வந்தீங்க..?” என்றாள் கோவம் துளிர்க்கும் குரலில்.
“ஃபோன்” என்றவாறு படுக்கையின் மீதிருந்த ஃபோனை எடுத்துவிட்டு நிமிர்ந்தபோதுதான் நிலைக்கண்ணாடியில் அவள் நின்ற கோலம் அவனுக்கு புரிந்தது.
கையில் எடுத்த போனை மீண்டும் படுக்கையின் மீதே வைத்தவன், மெலிதாக புன்னகைத்தவாறே அவளை நோக்க சென்றான்.
போனை எடுக்காமல் தன்னை நோக்கி வருபவனை கண்டுக்கொண்டவள் “உங்க போன் அங்க இருக்கு..” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவளை நெருங்கியிருந்தான் யாதவ் கிருஷ்ணன்.
அவன் அருகாமையால் அவளுக்குதான் ஒருமாதிரியாகி போனது. மெல்ல அங்கிருந்து நகர முற்பட்டவளின் இடையை வளைத்து பிடித்து அவளை தன் அருகே இருத்த, அவளோ மிரண்டுபோய் அவனை பார்த்தாள்.
மிரண்டு போய் தன்னையே பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து மந்தகாசமாய் புன்னகைத்தவாறே, அவளின் இடையை அணைப்பதுபோல இன்னொருக்கையையும் அவளுக்கு பின்னால் அவன் கொண்டு செல்ல அவளுக்கோ மூச்சே நின்றுவிடுவதுபோல இருக்க பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் யாழினி.
விழி மூடி நின்றவளைப் பார்த்து இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டவன், பாதியில் நின்றுக்கொண்டிருந்த ஜிப்பை இழுத்துப்போட்டு விட யாழினிக்கு அப்போதுதான் உயிரே வந்ததுபோல இருந்தது.
மீண்டும் அவள் கண்விழித்தப்போது அவனோ போனை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல ஆயத்தமாக, “ச்சி தப்பா நினைச்சிட்டோமே” என்று அவளுக்குதான் சங்கடமாக இருந்தது.
“தேங்க்ஸ்” என்றவள் சொல்ல,
திரும்பி நின்று அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், “சைஸ்-ல சின்னதா இருந்தாலும் உன் முதுகுல ரைட் சைட் இருக்கற அந்த மச்சம் ரொம்பவே ஹாட்தான். உன்ன மாதிரி” என்று சொல்லிவிட்டு செல்ல, அவளோ கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“முன்னாடி இருந்தவனுக்கு எப்படி முதுகுல இருந்த மச்சம் தெரிஞ்சிது..?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டவளுக்கு அப்போதுதான் தனக்கு பின்னால் இருந்த நிலைக்கண்ணாடி நினைவிற்குவர, பின் தன்னையே நொந்துக்கொண்டாள் யாழினி.
மணமக்களுக்கு வாழ்த்து சொல்லும் பொருட்டு நெருங்கிய நண்பர்கள், பிஸ்னஸ் பார்ட்னர்களுக்கென்று வீட்டிலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மிர்னாலி. டீஜே, ஆட்டம், பாட்டம் என்று பார்ட்டி களைக்கட்டி கொண்டிருக்க அப்போதுதான் கீழே வந்தாள் யாழினி.
“அண்ணி” என்று ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி.
“வாங்க அண்ணி டான்ஸ் ஆடலாம்” என்று வர்ஷினி அவளை அழைத்தபோது, அவளோ முடியாது என்று ஒரு ஓரமாக சென்று அமர்ந்துக்கொண்டாள்.
ஒரு பார்வையாளராக அங்கு நடப்பவைகள் அனைத்தையும் அவள் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவள் முன்னால் வந்து நின்றான் யாதவ் கிருஷ்ணன்.
தன் முன்னால் வந்து நின்றவனை என்ன என்பதுபோல அவள் நிமிர்ந்து பார்க்க,
அவனோ ஒற்றை கரத்தை நீட்டி, “ஷால் வீ டான்ஸ்” என்க,
“இல்ல.. எனக்கு டான்ஸ் வராது” என்றாள் அவள்.
“நோ பிராப்ளம்.. எனக்கு வரும்” என்றவனோ, அதன் பின் அவளின் அனுமதியையெல்லாம் கேட்கவில்லை.
அவளின் கரத்தை பற்றி இழுத்து அழைத்து சென்றவன், ஒருக்கையால் அவள் இடையை அணைத்து மறுக்கையால் அவள் வலக்கரத்தை பிடித்துக்கொண்டு,
“லுக் அட் மை ஐஸ் அழகி” என்றுக் கூறியதோடு அங்கு ஒளித்துக்கொண்டிருந்த இசைக்கு ஏற்றவாறு ஆட ஆரம்பித்தோடு அவளையும் ஆடவைத்திருந்தான்.
அவன் சொன்னதுபோல அவள் பார்வை அவன் பார்வை மீதே படிந்திருக்க, அவன் பார்வையும் அவள் பார்வை மீதுதான் படிந்திருந்தது. விழிகள் மூலமாகவே அவன் காதல் மொழி பேச அவள் விழிகளுக்கும் அது நன்றாகவே புரிந்து.
நடனத்தின் இறுதியில் அவள் முகம் நோக்கி குனிந்து, “லவ் யூ அழகி” என்று தன் காதலை அத்தனை பேர் முன்னிலையிலும் அவன் தெரிவிக்க, அதுவரை அவர்களின் நடனத்தை பார்த்து இரசித்து கொண்டிருந்த அனைவரும் அவனின் புரோபசலைப் பார்த்து கைத்தட்டி ஆரவாரப்படுத்த அவளுக்கோ ஒரு மாதிரியாகி போனது.
“லவ் யூ டூ சொல்லுங்க அண்ணி” என்று பெண்கள் இருவரும் கத்தி சொல்ல, யாழினிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. விழிகளில் கலக்கத்துடன் அவள் அவனையே பார்க்க, “ரிலாக்ஸ்” என்றவனோ எப்பவும் போல அவள் நாசியோடு தன் நாசியை உரசிவிட்டு அதன் பின்னே அவளை விலக்கி நிறுத்தினான்.
அதேநேரம் அவனின் செல்போன் சிணுங்க ஆரம்பிக்க அதை எடுத்து பார்த்தான். அவனின் கிரானி அழைத்திருக்க, பாட்டு சத்தத்தில் காதில் விழாது என்று நினைத்தவன் விழிகளால் அவளிடம் சொல்லிவிட்டு போர்டிகோ பகுதிக்கு சென்றான்.
செல்லும் அவனையே பார்த்திருந்தவள், பின் அறைக்கு திரும்பும் போதுதான் மணமகனின் நண்பன் ஒருவன் அதீத குடிபோதையில் அவள் வழியை மறித்து நின்றதோடு,
“ஷால் வீ டான்ஸ்” என்று கூறியவாறு அவள் முன் அவன் கைநீட்ட,
“நோ” என்றவள் வேறு வழியில் செல்ல முற்பட்ட போது மீண்டும் அவள் வழியை மறித்து நின்றவன்.
“ஓவரா சீன் போடாம.. வா.. அவன விட நான் உன்ன எல்லாத விதத்தியுலயும் நல்லா கவனிச்சிக்கிறேன்” என்று இரட்டை அர்த்தத்தில் சொல்ல அவன் வார்த்தைகளைக் கேட்டு அவளுக்கு கோவம்தான் வந்தது.
“இல்லனா… என்னடி பண்ணுவ…” என்று கேட்டவாறே அவளின் இடையை தொட முற்றபட்டவனின் கரத்தை இலாவகமாக பற்றி உடைத்திருந்தான் யாதவ் கிருஷ்ணன்.
அவன் எப்போது அவள் வழியை மறித்து நின்றானோ அப்போதே யாதவ் அதை கவனித்துவிட்டான். பெரிதாக எதுவும் நடப்பதற்கு முன்னால் அங்கு சென்று விட வேண்டுமென்றுதான் அவனும் விரைந்து வந்தது. ஆனால் அதற்குள் அவன் அவளிடம் தவறாக நடக்க முற்பட வந்த கோவத்திற்கு அவன் கையை உடைத்தே விட்டான் யாதவ் கிருஷ்ணன்.
அவன் கையை உடைத்தும் அவன் கோவம் குறையாமல் போகவே, மேலும் அவனை பலமாக கவனிக்க ஆரம்பித்திருந்தான் யாதவ் கிருஷ்ணன். அவன் கோவத்தைப் பார்த்து அவள் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே கொஞ்சம் அதிர்ந்துதான் போயினர். எங்கே யாதவின் அடியில் அவன் இறந்துவிடுவானோ என்று பயந்தவர்கள் அதன் பின்னே யாதவின் பிடியிலிருந்து அவனை காப்பாற்றி மருந்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தன் கோவத்தை ஆற்றும் வழித்தெரியாது அங்கிருந்த கண்ணாடி மேஜை மீது அவன் ஓங்கி குத்த, அவன் குத்திய வேகத்தில் அது உடைந்து சிதறியதோடு கண்ணாடி துகள்கள் அவன் கரத்தையும் நன்றாகவே பதம் பாத்திருந்தது.
அவன் நிலையை பார்த்து அவன் அருகில் செல்ல யாழினிக்குமே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஒரு மருத்துவராக இரத்தம் கசிந்துகொண்டிருந்த அவன் கரத்தை பார்த்தப்பின் அவளால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
மெல்ல அவனருகில் சென்று காயம் பட்ட அவன் கரத்தை பற்ற, இருக்கைகளாலும் அவள் முகத்தை ஏந்திக்கொண்டான் யாதவ் கிருஷ்ணன். அவன் செயல் புரியாமல் அவள் அவன் விழிகளையே மாறி மாறி பார்க்க,
“நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது அழகி. ஐம் சாரி. ஐம் ரியலி சாரி” என்றும் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கின. சிலக் கணங்கள் அவள் விழிகளையே அசையாது பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ யாரிடமும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேற, செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அதன் பின் அமைதியான முறையில் பார்ட்டி நடக்க, அங்கிருக்க பிடிக்காமல் யாழினியும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.
கார்டன் ஏரியாவில் எரிந்து கொண்டிருந்த கேம்ப் ஃபையரின் முன் எரிமலை குழம்பாய் அவன் அமர்ந்திருக்க, பால்கனியில் நின்றப்படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அவனின் கலங்கிய விழிகளை பார்த்ததிலிருந்தே அவளுக்கும் உள்ளுக்குள் ஒரு மாதிரியாகதான் இருந்தது. அதேசமயம் அவனை இப்படி பார்க்கவும் ஏனோ அவளுக்கு சங்கடமாக இருந்தது. அதுவும் அடிப்பட்ட கரத்துடனே அவன் இருப்பது மேலும் அவளை சங்கடப்படுத்த, வர்ஷினியிடம் முதலுதவி பெட்டியை வாங்கிக்கொண்டு கார்டன் பகுதிக்கு விரைந்தாள்.
அவள் வந்தது கூட தெரியாமல் அங்கு எரிந்துக்கொண்டிருந்த நெருப்பையே அவன் பார்த்திருக்க, மெல்ல அவன் அருகில் சென்று அமர்ந்தாள் யாழினி.
“ஹாஸ்பிட்டலேந்து போன் வந்துது” என்று அவள் சொன்னபோதும் அவன் அவளை பார்க்கவேயில்லை.
“இரண்டு கையிலயுமே பயங்கர ஃப்ராக்சர்-ஆம். எப்படியும் சரியாக இரண்டு வருஷத்துக்கு மேலயாவது ஆகுமாம்” என்றவள் சொல்ல, அப்போதும் அவன் அவளை பார்க்கவேயில்லை.
“ஆனா எனக்குதான் ஒரு சந்தேகம்தான்” என்றவள் சொல்ல, அப்போதுதான் அவளை கேள்வியாய் பார்த்தான் யாதவ்.
“கை சரியாகுற வரைக்கு அவன் எந்த காலால சாப்பிடுவான்னுதான் சந்தேகம்” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க, அதுவரை முகத்தில் இருந்த இறுக்கம் மாறி அவனுமே மெலிதாக புன்னகை புரிந்தான்.
“கோவம் போய்டுச்சா..?” என்று கேட்டவளுக்கு, அவன் மௌனத்தையே பதிலாக தர,
“கைய காட்டுங்க” என்றாள்.
வேண்டாம் என்பதுபோல தலையை மறுப்பாய் அவன் அசைக்க, பின் அவள் தான் பிடிவாதமாய் அவன் கரத்தை இழுத்து காயத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
கையில் குத்தியிருந்த கண்ணாடி துகள்களையெல்லாம் அகற்றி, சுத்தம் செய்து மருந்துபோட்டு முடிக்கும் வரை அவளையேதான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் யாதவ் கிருஷ்ணன்.
சிலக்கணங்கள் அங்கே அமைதி நிலவ, “ஏன் இவ்வளோ கோவம்..?” என்றாள் அவனை ஏறிட்டு பார்த்து.
“பதில் தெரிஞ்சிக்கிட்டே கேட்டா நான் என்ன பதில் சொல்ல” என்றவன் குதர்கமாய் சொல்ல அவளோ அமைதியாகி போனாள்.
“அண்ணா… அண்ணி” என்று அழைத்தவாறு அவர்கள் முன் வந்து நின்ற வர்ஷாவோ, “அம்மா கொடுக்க சொன்னாங்க” என்று கூறியவாறே உணவு பிளேட்டை கொடுக்க,
யாதவோ “எனக்கு பசியில்ல வர்ஷினி” என்றான்.
பின் யாழினிதான் அவன் பிளேட்டையும் வாங்கிக்கொண்டு அதன்பின்னே வர்ஷினியை அனுப்பி வைத்தாள்.
“கோவத்த ஏன் சாப்பாடு மேல காட்டுறீங்க..? சாப்பிடுங்க” என்று கூறியவாறே பிளேட்டை அவன் முன் நீட்ட, ஏனோ வர்ஷினியிடம் மறுத்தவனால் அவளிடம் மறுக்க முடியவில்லை.
வலது கையில் அடிபட்டிருப்பதால் இடது கையால் ஸ்பூனைப்பிடித்து உணவை எடுக்க முடியாமல் அவன் திணற, பின் அவள்தான் ஸ்பூனால் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
அவனின் இந்த நிலைமைக்கு தான் மட்டும்தான் காரணம் என்பதை அவளும் அறியாமல் இல்லை. அத்தோடு அவளுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்தவனை அவளால் எப்படி அப்படியே விட முடியும். அதை அவள் மனசாட்சிதான் ஏற்றுக்கொள்ளுமா..?
அவன் தன் அணுகுமுறையை எப்படி எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று நினைத்தவள் அதன் பின் தான் அவனைத்தேடி சென்று அவனிடம் பேசி, அவன் காயத்திற்கு மருந்திட்டது கூட.
அவளால் மட்டுமே சகஜநிலைக்கு திரும்பியவனிடம் மாப்பிளை வீட்டார் அனைவரும் வந்து மன்னிப்புக்கேட்ட தலையை மட்டும் அசைத்தானே தவிர வேறெதுவும் பேசவில்லை.
அடுத்த நாள் காலையில் ஷைலு மணமகன் வீட்டிற்கு கிளம்ப மிர்னாலியும், வர்ஷினியும் அழுதே விட்டனர் அவளின் பிரிவை நினைத்து. அவர்கள் அழுவதைப் பார்த்து யாழினியின் கண்களும் மெல்ல பளபளக்க,
அவள் தோள் மீது ஆகாசமாய் கைப்போட்டவன் “கல்யாணத்துக்கப்புறம் நமக்கு இந்த பிரச்சனைலாம் வராது அழகி.. ஏன் தெரியுமா..? இந்த ராதை இருக்கும் இடம்தானே இந்த கிருஷ்ணனுக்கு பிருந்தாவனம்” என்று வசீகரமாக புன்னகைத்தப்படியே அவன் சொல்ல,
“ஆனா காதலுக்கு பரிட்ச்சயம் ராதாகிருஷ்ணன் தானே” என்று கூறிவிட்டு அவன் கண்ணடிக்க, அவளோ பேச்சற்றுப்போனாள்.
அன்று மதியமே இங்கு இருந்து கிளம்புவதாக நேற்று இரவே அவன் சொல்லியிருக்க, அவளும் அதற்கு ஏற்றார்போல் கிளம்பிக்கொண்டிருக்கும் போதுதான் அவர்கள் அறைக்குள் வந்தார் மிர்னாலி.
புடவை, நகைகள் அடங்கிய தாம்பூலத்தட்டை அவளிடம் கொடுக்க, முதலில் தயங்கியவளை பின் அவர்தான் வற்புறுத்தி வாங்க வைத்தார்.
பின் அவளை கட்டியணையத்து உச்சி முகர்ந்தவர், “மன்னிச்சிடுமா” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, “மா.. என்னமா..? அப்படிலாம் எதுவும் இல்ல” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றாள் யாழினி.
“யாதவ் மனசதான் நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்று சொல்லும் போதே மீண்டும் அவர் குரல் தழுதழுத்தது.
பின் அவளின் கரத்தை பற்றியவரோ, “யாதவ் ரொம்ப நல்ல பையன் யாழினி. எனக்கு தெரிஞ்சவன்னு சொல்லல… இன்னைக்கு என் குடும்பம் ஒரு நல்ல நிலமைக்கு வர யாதவ் மட்டுதான் காரணம். அன்னைக்கு அவன் மட்டும் பணம் கொடுத்து உதவலனா இன்னைக்கு நானும் இல்ல.. என் பொண்ணுங்களும் இல்ல..” என்றவரின் கண்களோ மெல்ல கலங்கின.
“இப்படி ஒரு புள்ளை எனக்கு பொறக்கலையேன்னு நான் நினைக்காத நாளே இல்ல யாழினி. ஆனா அப்படிப்பட்ட புள்ள வர்ஷாவ கல்யாணம் பண்ணிக்கபோறன்னு சொன்னப்போ எங்களுக்கு ரொம்பவே கஷ்டமாபோயிடுச்சி. எல்லாம் நன்மைக்கேன்னு சொல்வாங்க.. அதுபோல அன்னைக்கு நடந்த ஆக்சிடண்டும் ஒரு நல்லதுக்குதான்னு எனக்கு அப்புறமாதான் புரிஞ்சிது. நல்லவேளை அந்த கடவுள் யாதவுக்கு மறுபடியும் உயிரக்கொடுத்து அவன் தலையில உன் பேர எழுதிட்டான். யாதவ் உன் மேல உயிரையே வச்சியிருக்கான் யாழினி. ஏன்னா அவன் இந்த அளவுக்கு கோவப்பட்டு நான் என்னைக்குமே பார்த்தது இல்ல. ரொம்ப யோசிக்காத… வாழ்க்கையில எல்லாமே நாம நினைக்கிறமாதிரி நடந்துடாது யாழினி. படிச்ச பொண்ணு நீ” என்றவர் சொல்ல அவளோ அமைதியாகவே இருந்தாள்.
பின் அனைவரிடமும் சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பி, மும்பை விமானநிலையத்தை வந்தடைந்தனர். விமானத்தில் ஏறியப்பின் தலைவலிக்கிறது என்று பொய்சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக்கொள்ள அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.
அதேசமயம் பார்ட்டியில் அவளுக்கு நடந்த அவமானத்தை நினைத்து உள்ளுக்குள் அவன் தன்னை நிந்தித்துக்கொண்டிருக்க, யாழினியோ எதற்காக தன் வாழ்வில் இதெல்லாம் நடக்கிறது என்று குழப்பத்தில் மூழ்கிப்போயிருந்தாள்.
காசிக்கு சென்றிருந்த சத்யமூர்த்தி தம்பதியினர் அன்றுதான் சென்னையை வந்தடைந்திருந்தனர். அவர்கள் வந்த செய்தியை கேள்விப்பட்டு உடனே அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார் கைலாஷ்.
இருவரும் வெகுநேரம் நட்பு ரீதியாகவே பேசிக் கொண்டிருக்க, திருமண விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் உள்ளுக்குள் கைலாஷ் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அதற்கான வழியை சத்யமூர்த்தியே ஏற்படுத்தி கொடுத்தார்.
“வர்ஷாவுக்கு எதுவும் பார்க்க ஆரம்பிக்கலையா கைலாஷ்..?” என்றவரின் கேள்விக்கு,
“என்னத்த பார்க்க..? அவ தான் இன்னும் யாதவ்-அ மறக்காமலே இருக்காளே” என்றார் கைலாஷ்.
“சத்யா நான் ஒன்னு கேட்பேன் என்ன தப்பா நினைக்கமாட்டியே” என்று கேட்டவர், “நாம் ஏன் இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணக் கூடாது” என்று மனதிலிருப்பதை நேரிடையாகவே கேட்டுவிட,
சத்யமூர்த்தியோ, “இல்லடா… நீதன அன்னைக்கு..” என்று ஆரம்பிக்கும் முன்பே,
“ஆமாம் டா நான் தான் சொன்னேன். ஆனா அவங்க இரண்டு பேரும் இன்னும் காதலிக்கிறாங்களே… அவங்கள பிரிக்கறது பாவமில்லையா..?” என்று கேட்க அதற்கு மேல் சத்யமூர்த்தி யோசிக்கவில்லை.
தன் மனைவியையும், தாயையும் அழைத்து விஷயத்தை அவர் சொல்ல,
“நீங்களா முடிவெடுத்தா எப்படி..? சம்மந்தப்பட்டவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கறது இல்லையா..?” என்று கேள்வியெழுப்பினார் சுமதி.
“மா.. இது ஏற்கனவே முடிவுப்பண்ணதுதன..” என்று சத்யமூர்த்தி சொல்ல,
“அது அப்போடா… இப்போ யாதவ் வேறொரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சிக்கிட்டு இருக்கான்” என்று சொல்ல, இருவரும் அதிர்ச்சியாய் அவரைப் பார்க்க, கைலாஷின் முகமோ இறுகி போனது.
தன் போனிலிருந்த அவர்களின் புகைபடத்தை சுமதி காட்ட, “இது நம்ம டாக்டர். யாழினிதன” என்றார் முகத்தில் புன்னகையுடன் சத்தியமூர்த்தி.
“ஆமாம்டா.. அந்த பொண்ணதான் என்பேரன் காதலிக்குறான். அவளத்தான் கல்யாணமும் பண்ணிக்கபோறான்.” என்றார் சுமதி கைலாஷ்-க்கு நன்றாக கேட்கும் படி சற்று சத்தமாகவே.
கைப்பேசியை வாங்கிப்பார்த்த பார்த்த யசோதாவின் முகமும் புன்னகையால் மலர, “பார்க்க மகால்க்ஷிமி போல இருக்கா அத்த” என்றார் அவரும் மகிழ்ச்சி ததும்பும் குரலில். அதுவரை நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கைலாஷிற்கோ தேகமே பற்றி எரிவதுப்போல இருந்தது.
“என்ன சத்யா இதெல்லாம்… பையன் ஆசைப்படுறான்னா.. நாமதான் அவனுக்கு எடுத்து சொல்லணும். நமக்குன்னு ஒரு தராதரம் இல்லையா..” என்று கைலாஷ் கேள்வியெழுப்ப, மூவருக்குமே கோவம்தான் வந்தது கைலாஷின் வார்த்தைகளை கேட்டு.
“என்ன தராதரம் வேணும்..? என் பேர உயிர அந்த பொண்ணு காப்பாத்தியிருக்கா… இதுக்கு மேல என்ன தராதரம் வேணும்” என்று சுமதியும் பட்டென்று கேட்டு விட அதற்கு மேல் கைலாஷ் வாயைத் திறக்கவேயில்லை.
இதற்குமேல் இவர்களிடம் பேசுவது சரியன்று என்று நினைத்தவர் இந்த விஷயத்தை வேறு விதமாகத்தான் கையாள வேண்டுமென்ற முடிவோடு அங்கிருந்து தன் காரை கிளம்பிக் கொண்டு செல்ல, அதேநேரம் யாழினியை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தது யாதவ் கிருஷ்ணனின் கார்.