“ப்ச்.. நான் இத கேட்கல.. என்னோட நோக்கியா போன் எங்க..?” என்றாள் மீண்டும்.
“உன் நோக்கியா போன்” என்று யோசிப்பது போல நடித்தவன்,
“என் வீட்ல, என் ரூம்ல, என் கையில தான் இருக்கு அழகி” என்று கூறியவாறே, அதுவரை தன் பாக்கெட்டிலிருந்த அவளின் செல்போனை எடுத்துக் காட்ட,
“எனக்கு என் போன் வேணும்” என்றாள் அவள்.
“வந்து எடுத்துக்கோ” என்று சிரித்து கொண்டே சொன்னவனை முறைத்துப் பார்த்தவள்,
“என்ன விளையாடுறீங்களா..? நான் எப்படி உங்க வீட்டுக்கு வரமுடியும்..?” என்றாள் சற்றே கோவம் துளிர்க்கும் குரலில்.
“வரகூடாதுன்னு நான் சொல்லலையே” என்று அவனும் குதர்க்கமாக பதில் சொல்ல அவள் தான் உள்ளுக்குள் திணறிப்போனாள்.
எதுவும் பேசாமல் அவள் மௌனமாகவே இருக்க, அவளையே சிலகணங்கள் ஆழப்பார்த்திருந்தவன்
“எப்போ வீட்டு-க்கு வர..?” என்று மீண்டும் ஆரம்பிக்க,
அவளோ, “நான் வரமாட்டேன்” என்றாள் வீம்பாக.
“அப்போ நோக்கியா வேண்டாமா..?” என்றவனின் அடுத்த கேள்வியால் அவள் தான் பதில் சொல்லாமுடியாமல் திணறிப்போனாள்.
ஆத்விக்கின் நினைவாக அவளிடம் இருப்பது என்றால் அது இந்த போன் மட்டுமே. அதையும் அவளால் இழக்க முடியாது. அதற்காக அவன் வீட்டிற்கும் அவளால் செல்ல முடியாது. தன்னுடைய தர்மசங்கடமான சூழ்நிலையை நினைத்து உள்ளுக்குள் அவள் தவித்துக்கொண்டிருக்க, அவள் நிலையை திரையில் பார்த்து இரசித்துகொண்டிருந்தான் யாதவ் கிருஷ்ணன்.
அவனுக்கு மட்டும் என்ன அவளை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்த வேண்டுமென்று ஆசையா..? என்ன செய்ய அவன் நிலை அவனை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இதை செய்தாலாவது.. இல்லை அதை செய்தாலாவது அவள் மனம் மாறுமா என்றுதான் அவனும் முயற்ச்சி செய்துபார்க்கிறான். அதற்காக அவன் முயற்சிகளும் வெற்றி அடையவில்லை என்று சொல்லிவிடமுடியாதே. யாரிடமும் பேசாமல் இருந்தவளை தன்னிடம் இந்த அளவிற்கு அவன் பேச வைத்திருப்பதே மிகப் பெரிய வெற்றியல்லவா…
அவளின் அனுமதியில்லாமலே அவளின் தனிமையை களைந்தான், அவளின் நடை உடைகளை மாற்றினான், பேச வைத்தான், கோவப்பட வைத்தான், தன்னிடம் உரிமையோடு சண்டை போட வைத்தான். சிரிக்க வைத்தான். எல்லாம் செய்தவன் அவளிடம் பெரிதாக கேட்பது என்ன..? அவள் மனதின் ஓரம் ஒரு இடத்தைத்தானே. அதற்காகத்தானே இத்தனை போராட்டமும்.
கழுத்திலிருந்த மெல்லிய செயினை நுனிப்பற்களால் கடித்தப்படி அவள் யோசித்து கொண்டிருக்க,
“ஏய் அழகி” என்று அழைத்து அவளின் சிந்தையை களைத்தான் யாதவ்.
அவன் குரல் கேட்டு அவள் என்ன என்பது போல அவனை பார்க்க,
“நாளைக்கு எப்போ ஹாஸ்பிட்டல் வருவ..?” என்றவன் கேட்டு முடிக்கும் முன்பே,
“சொல்ல முடியாது” என்றாள் அவள்.
அவள் சொன்ன தோணியைப் பார்த்து அவனுக்கோ சிரிப்புதான் வந்தது.
“சரி சொல்லவேண்டாம். ஆனா வரும் போது சேரி கட்டிட்டு வா. உனக்கு ரொம்ப அழகா இருக்கும் அழகி” என்றவன் இரசணையோடு சொல்ல,
சிலகணங்கள் அவளையே இமைக்காமல் பார்த்தவன், “நீ மட்டும் சேரி கட்டாம வந்த.. ஹாஸ்பிட்டல்-னு கூட பார்க்க மாட்டேன்.. தர தரன்னு என் கேபின்னுக்கு இழுத்துட்டுப்போய் நானே என் கையால சேரி கட்டி விட்டுடுவேன்” என்றவன் சொல்ல, அவளுக்குத்தான் அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.
“என்ன” என்பதுபோல அவன் குறுநகையுடன் புருவம் உயர்த்த, அவள் பதில் எதுவும் சொல்ல முடியாமல் ஊமையாகி போனாள்.
பின் அவளிடம் சிறிதுநேரம் பேசியிருந்து அவன் போனை வைக்க, அவளுக்கோ அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. இருந்தும் எப்படி அவனிடமிருந்து தன் போனை வாங்குவதுயென்ற தீவிரமான யோசனையிலேயே அன்றைய இரவுப்பொழுதை கழித்தாள் யாழினி.
காலையிலேயே ஆப்ரேஷன் இருக்கிறது என்று நேற்றே சக மருத்துவர் சொல்லியிருந்ததால், காலையிலேயே குளித்து முடித்தவள் வாட் ரோப்பை திறந்த போது அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன.
அவளின் பழைய ஆடைகள் எதுவுமின்றி புத்தம் புதிய காட்டன் மற்றும் பட்டு புடவைகளால் ஆக்கிரமிக்க பட்டிருந்தது அவளின் வாட்ரோப்.
அவன் சொன்னதுபோல் செல்லாவிட்டால் நிச்சயம் அவன் சொன்னதை செய்துவிடுவான் என்று நினைத்தவள், எதற்கு வம்பு என்று இருக்கும் புடவைகளிலே சிம்புளான ஒன்றை தேடி பிடித்து கட்டிக்கொண்டவள், அதன் பின்னே மருத்துவமனைக்கு விரைந்தாள்.
முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்காமலேயே கரத்தை மட்டும் வெளியில் நீட்டி அருகில் இருந்த டேபுள் மேல் இருந்த போனை கையில் எடுத்தவன், போனை முகத்திற்கு முன் கொண்டு வந்து ஆன் செய்ய, திரையில் பள்ளிச்சென்று மின்னியது அவளின் முகம்.
மெல்ல இமைத்திறந்து திரையில் அவளை பார்த்தவனின் இதழ்களில் புன்னகை அரும்ப, “குட் மார்னிங்க் அழகி” என்றான் யாதவ். பின் அவள் புகைப்படத்தையே சிலக்கணங்கள் இமைக்காமல் பார்த்திருந்தவன், காதலோடு திரையில் தெரிந்த அவளின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்தவன், பின் அவளுக்குதான் அழைத்தான்.
நீண்ட ரிங்க சென்று முடிய, அவள் மருத்துவமனைக்கு சென்றிருப்பாள் என்று யூகித்தவன், தானும் மருத்துவமனைக்கு செல்லும் பொருட்டு ஆயத்தமானன்.
இத்தனைக் காலையில் கிளம்பி வந்தவனைப்பார்த்து பார்வதியின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிய, கண்களால் அவரிடம் விடைப்பெற்றவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான் மருத்துவமனை நோக்கி.
தன்னுடைய அசிஸ்டண்ட் மூலமாக அவள் ஆப்ரேஷன் தியேட்டரில் இருக்கிறாள் என்று அறிந்தவன் பின் தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு வாரம் இங்கு இல்லாததால் மலைப்போல் குவிந்திருந்த தன் வேலைகளையெல்லாம் அவன் பார்த்து முடிக்கவே மதியம் தாண்டியிருந்தது. அனைத்து வேலைகளையும் பார்த்து முடித்தவன் பார்வையில் அப்போதுதான் பட்டது அன்று அவள் வைத்துவிட்டு சென்ற இராஜினாமா கடிதம்.
அந்த கடிதத்தை கையோடு எடுத்துக்கொண்டே அவளுடைய கேபின் கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சிதான் அங்கு சால்வையை போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த பார்வதியை பார்த்து.
தான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர் இங்கு வந்திருப்பதை பார்த்து அவனுக்கு கோவம்தான் வந்தது. இருந்தும் அவள் முன்னால் எதையும் காட்டிக்கொள்ள கூடாது என்று சிரமப்பட்டு தன்னை அடக்கியவன், மெல்ல அவள் கேபினிற்குள் நுழைந்தான்.
யாழினி அவருக்கு பிளட் பிரஷர் செக் செய்துக்கொண்டிருக்க, மெல்ல அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் கோவப்பார்வையோடு பார்வதியை பார்க்க, அவரோ அவன் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் தலையை திருப்பி கொண்டார்.
“பிபி-லாம் நார்மலாதான் இருக்கு ஆண்டி” என்றவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எமர்ஜென்சி என்று செவிலியர் அழைக்க, அவளோ அவரிடம் சொல்லிவிட்டு ஐ.சி.யூ-விற்கு விரைந்தாள்.
அவள் சென்று மறையும் வரை பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு காத்திருந்தவன், “மாம்” என்று கர்ஜிக்க, பார்வதியோ தன் காதில் எதுவும் விழவில்லை என்பதுபோல அவனை திரும்பி பார்க்காமலேயே இருந்தார்.
“மாம் அப்பட்டமா தெரியுது மாம் நீங்க நடிக்கிறீங்கன்னு” என்றவனை அவர் திரும்பி பார்க்க,
“உங்கள இங்க வராதீங்கன்னு சொல்லிட்டுதன வந்தேன்.. நான் சொல்லியும் நீங்க இங்க வந்தா என்ன மாம் அர்த்தம்.” என்று அவன் காய,
“டேய் நான் என்ன யாதவோட அம்மா-வாவா இங்க வந்தேன். இங்கப்பாரு” என்றவர் சுற்றியிருந்த சால்வையை சுட்டிகாட்டி, “காய்ச்சல் வந்த நோயாளி மாதிரி என் மருமகள பார்க்க வந்திருக்கேன். நீயே கத்தி அவளுக்கு காட்டிக்கொடுத்துடுவ போல..” என்றவர் சொல்ல,
“ஆமா நான் காட்டிக்கொடுத்துட்டாலும்… காய்ச்சலுக்கு யாராவது கார்டியாலஜிஸ்ட்-அ பார்க்க வருவாங்களா..?” என்றவன் கேள்வியெழுப்ப,
“ஐய்யயோ இத பத்தி நான் யோசிக்கலையேடா…” என்று வருத்தப்பட்டவர், “வேணும்னா நான் அவ வந்ததுக்கப்புறம் நெஞ்சும் வலிக்குதுன்னு சொல்லட்டுமா..?” என்றுக் கேட்ட அவனோ கோவத்தை அடக்கும் வழித்தெரியாது புருவ மத்தியை விரலால் அழுத்தியபடி அவன் கண்களை மூடிக்கொள்ள, பார்வதிக்கோ அவன் நிலையைப் பார்த்து பயம்தான் வந்தது.
“டேய் யாதவ்” என்று மெல்ல அவன் தோளைப்பற்றி அவர் உலுக்க, மெல்ல இமைகளை திறந்தவனோ, “ஆ… சொல்லுங்க.. டீனோட அம்மா சரியான மெண்டல்-னு நினைப்பா… உங்ககிட்டலாம் ஒரு விஷயத்த ஷேர் பண்ணேன் பாருங்க என்ன சொல்லணும். கண்டிப்பா அவ கண்டுபிடிச்சியிருப்பா” என்றவன் சிடுசிடுத்து கொண்டிருக்கும் போதே அவள் உள்ளே நுழைய, இருவருமே வாயை மூடிக்கொண்டனர்.
அவரை முழுவதுமாக செக் செய்து முடித்தவள், “காய்ச்சல் அதிகமா இருக்கறமாதிரி தெரியல ஆண்டி. மே பீ உள் காய்ச்சலா இருக்கலாம். நான் எழுதிதர்ற டேப்ளட்-அ டூடேஸ் கண்டினியூ பண்ணுங்க” என்று கூறியவாறே அவள் எழுத,
“நான் காய்ச்சலுக்காக மட்டும் உன்ன பார்க்கவரலம்மா” என்றார் பார்வதி. அவரின் வார்த்தையைகேட்டு அவள் புரியாமல் அவரை பார்க்க, யாதவோ என்ன உளறப்போறாங்களோ..? என்ற பயத்தில் அவரை பார்த்தான்.
இருவரையும் மாறி மாறி பார்த்தவர், “இன்னைக்கு யாதவ் உயிரோட இருக்கான்னா அதுக்கு முழுக்க முழுக்க நீ மட்டும்தான்மா காரணம். உனக்கு நாங்க ரொம்பவே நன்றிக்கடன் பட்டு இருக்கோம். ஒரு நாள் வீட்டுக்கு கூப்டு உனக்கு விருந்து வைக்கணும்னு உங்க சார் அடிக்கடி சொல்லிட்டு இருப்பாரு. யாதவ் பாட்டியோட வேண்டுதல நிறைவேத்தறதுக்காக காசிக்கு போய்ட்டோம். அதான் உன்ன நேர்ல பார்த்து இன்வைட் பண்ணலாம்னு வந்தேன்” என்றவர் முடிக்க, யாதவிற்கோ அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது.
இருந்தும் “மாம் அவங்க இனி இங்க வேலைக்கே வர்றப்போறது இல்ல.. அப்புறம் எப்படி வீட்டுக்கு வருவாங்க..?” என்றவன் அதுவரை கையிலிருந்த அவளின் இராஜினாமா கடித்ததை அவரிடம் காட்ட, அதை வாங்கி படித்து பார்த்தவர்.
“ஏன்மா..? என்னாச்சி…? இங்க யாராவது எதாவது சொன்னாங்களா..? இல்ல” என்றவர் அருகில் அமர்ந்திருந்த யாதவை சுட்டிக்காட்டி, “இவன் வேலை விஷயமா உன்ன டார்ச்சர் பண்றானா..?” என்றுகேட்க அனைத்தையும் அவரிடம் சொல்லிவிடலாம் என்றுதான் அவளுக்கு தோன்றியது.
ஆனால் அவன் இருக்கும் உடல்நிலையில் தான் எதாவது சொல்லபோய் அது அம்மா மகன் நடுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிட்டால்..? என்று நினைத்தவள் பின் அந்த எண்ணத்தையும் மாற்றி கொண்டாள்.
கடைவிழிப்பார்வையால் அவள் அவனைப் பார்க்க, அவனோ தாயின் முன்னிலையிலேயே மந்தகாசப்புன்னகையுடன் அவளைப்பார்த்து கண்ணடித்ததோடு, முத்தம் கொடுப்பதுப்போல உதடு குவித்து காட்ட, அவளுக்கோ அவன் செயலை பார்த்து மூச்சே நின்று விடுவது போல இருந்தது.
பின் அவரின் கேள்விக்கு இல்லை என்பது போல அவள் தலையை மட்டும் அசைக்க, “அப்புறம் என்னம்மா.. உன் சேவை இந்த ஹாஸ்பிட்டலுக்கு ரொம்பவே தேவை. ஸோ இது தேவையில்லை” என்றவர் அந்த கடிதத்தை கிழித்து குப்பை தொட்டியில் போட, “லவ் யூ மாம்” என்று உள்ளுக்குள் அவரை மெய்ச்சி கொண்டான் யாதவ்.
“சரிமா வீட்டுக்கு எப்போ வரன்னு சொல்லவே இல்லையே நீ..?” என்றவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்கு தெரியவில்லை. சிலகணங்கள் உள்ளுக்குள் தயங்கியவள்,
“இன்னொரு நாள் வர்ரேன் ஆண்டி” என்று சமாளிக்க,
“ஏன் இன்னொருநாள் நாளைக்கே வாயேன்” என்று சொல்ல, அவளோ யோசனையோடே தலையை அசைத்தாள்.
அதன் பின் சிறிதுநேரம் அவளிடம் பேசியவர், கேண்டினில் காஃபி குடிப்பதற்காக அவளை வற்புறுத்தி அழைத்து செல்ல, யாதவும் அவர்களுடனே சென்றான்.
பார்வதி அவளுடன் பேசிக்கொண்டே முன்னால் நடந்து செல்ல, அவர்களுக்கு பின்னால் நடந்து சென்றுக் கொண்டிருந்தவனோ அந்த ஃப்ளோரின் வளைவில் அவள் சற்றும் எதிர் பார்க்காவண்ணம் சட்டென்று அவளின் கரத்தை பிடித்திழுத்து அவளை பக்க சுவற்றில் சாய்க்க, யாழினிக்கோ இங்கு என்ன நடக்கிறது என்றே விளங்கவில்லை.
அவள் தப்பித்து செல்லாதவாறு இருக்கைகளையும் சுவரில் ஊன்றி அவளை சிறை செய்தவன், மெல்ல எட்டிப்பார்த்தான். அவர்கள் இருவரும் தன் பின்னால் வரவில்லை என்று கூட தெரியாமல் பார்வதி சென்று கொண்டிருக்க, மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன் திரும்பி அவளை பார்க்க, அவளோ விழிகளில் மிரட்ச்சியுடன் அவனை பார்த்தாள்.
அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவனோ, “சேரி கட்டிட்டு வரமாட்டன்னு சொன்ன..? ம்” என்று கேட்டு அவன் புருவம் உயர்த்த, அவனின் அருகாமையாலும் கேள்வியாலும் அவளுக்குத்தான் குப்பென்று வியர்த்தது.
இருந்தும் தன்னை சமாளித்துக்கொண்டவள், “ஒழுங்கு மரியாதையா வழிய விடுங்க… இல்லன்னா ஆண்டி-க்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்” என்றவள் ஆள்காட்டிவிரலை உயர்த்தி அவனை மிரட்ட,
“சொல்லிக்கோ… இதையும் சேர்த்து சொல்லிக்கோ” என்றவன் சட்டென்று அவள் நீட்டியிருந்த விரலில் இதழொற்றி எடுக்க, யாழினிதான் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.
அதன் பின் காஃபி அருந்தியது, அவர்களை வழியணுப்பி விட்டு அறைக்கு வந்தது என்று எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லாதவாறு அவன் கொடுத்த முதல் முத்தம் அவளுக்குள் தாறுமாறாக வேலை செய்து கொண்டிருந்தது.
அவள் தேய்த்து தேய்த்து கழுவியதில் அந்த விரல் தேய்ந்தே போயிருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். என்னதான் அவள் தேய்த்து கழுவினாலும் அவன் இதழில் அவள் விரல் உணர்ந்த இதமான சூடும், அவன் மீசை முள்ளின் ஸ்பரிசமும்தான் அவள் நினைவிற்கு வந்த வண்ணமாகவே இருந்தது.
காதலில் ஆரம்பித்து அவன் முத்தம் என்று முன்னேறியிருக்க பாவம் அவள்தான் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் அவனை கையாளும் வழிதெரியாமல் முதல் நிலையிலேயே இருந்தாள்.
அதற்கு காரணம் அவன் உடல் நலன் மீது அவள் கொண்ட அக்கறை என்றுதான் சொல்லவேண்டும். இதுவே சராசரியான பெண்ணாக இருந்திருந்தால் அவனின் பெற்றோர், போலீஸ் என்று இந்த பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்திருப்பாள்.
ஆனால் அவள் இப்போது யோசிப்பது ஒரு மருத்துவராக மட்டுமே. ஆப்ரேஷன் முடிந்த பின் ஒரு வருடக் காலம் நோயாளியின் வாழ்வு எவ்வளவு சாவல்கள் நிறைந்ததென்று ஒரு மருத்துவராக அவளும் அறிந்துதான் வைத்திருந்தாள். அதுவும் இதயம் சம்மந்தபட்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் எந்தவிதத்திலும் மனகஷ்டமோ, எமோஷ்னலோ ஆகவே கூடாது. அது அவர்களின் இதயத்திற்கும் நல்லதல்ல.. ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. காரணம் இதயமென்பது உணர்வுக் குவியலின் இருப்பிடமாயிற்றே.
அதனால் தானே ஒவ்வொரு முறை அவளை அவன் நெருங்கும் போதெல்லாம் அவள் அமைதியாக பொறுத்துப்போனது. தான் எதாவது சொல்லப்போய் அது அவனை பாதித்தால் அவன் இழப்பைத்தான் அவர்கள் குடும்பத்தால் தாங்கி கொள்ள முடியுமா..? அதனால் தானே அவள் இதுநாள் வரை ஆத்விக்கை பற்றி கூட அவனிடம் வாய்திறக்கவில்லை.
எப்படி பார்த்தாலும் இன்னும் நான்கு மாத காலங்கள் அவன் செயல்களை அவள் பொறுத்துதான் ஆகவேண்டும்.
இதில் அவன் அம்மாவேறு நாளை அவளை வீட்டிற்கு அழைத்திருக்க, அவளுக்கோ நாளை அவனை எப்படி அவன் வீட்டில் எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. அவரே நேரில் வந்து அழைத்திருக்கும் போது அவளால் போகாமலும் இருக்க முடியாதே. அத்தோடு அவளுக்கும் அந்த வீட்டில் ஒரு வேலை இருக்கிறதே. அவனிடம் இருக்கும் தன் போனை வாங்குவதற்காகவாவது அவள் அங்கு சென்றுதானே ஆகவேண்டும்.
“ஓ… அப்படியா…” என்று நிறுத்தியவன், “அப்போ ஏன் நீ என் கண்ணுக்கு தெரியவே இல்ல அழகி..?” என்றவனின் கேள்வியால் அவளுக்குத்தான் இதயமே நின்றுவிடுவதுபோல இருந்தது.