அவள் மருத்துவம் நான்காமாண்டு படித்துகொண்டிருக்கும் சமயத்தில் அவளின் தாத்தா படுத்த படுக்கையில் விழுந்தபோது, அவரின் கடைசி ஆசைக்காக இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என்று பெரியோர்கள் முடிவுசெய்தனர். ஆனால் அவளோ படிப்பை காரணம்காட்டி ஒரேயடியாக மறுத்துவிட அதன்பின் யாரும் அவளை கட்டாயபடுத்தவில்லை. அதன்பின் ஜென்ரல் சர்ஜன் படிப்பை காரணம்காட்டி மேலும் மூன்றாண்டுகளை தள்ளிப்போட்டாள். அதேசமயம் என்று அவள் படிப்பு முடிந்ததோ அடுத்தநாளே சிவகாமி தென்னரசிற்கும் அவளுக்குமான திருமணபேச்சிவார்த்தையை ஆரம்பிக்க யாழினிதான் உள்ளுக்குள் அதிர்ந்து போனாள்.
காதல் என்றால் என்னவென்றே அறியாத அந்த சிறுவயதில் அவன் மீது ஏற்பட்ட ஒருவித ஈர்ப்பிற்கு கல்லூரிக்காலத்தில்தான் அவள் காதல் என்று பெயர் வைத்தாள்.
சம்மந்தப்பட்ட தென்னரசுவிடம் பேசினால் மட்டுமே தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வுண்டு என்று நினைத்தவள் உடனே அவனை தேடி சென்றாள்.
எடுத்த எடுப்பிலேயே தான் சிறுவயதிலிருந்தே ஒருவரை காதலிப்பதாகவும், தனக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்று சொல்ல அவளை நிராசையுடன் அதிர்ந்து பார்த்தான் தென்னரசு. சிறுவயதுமுதலே அவள்தான் தன் மனையாள் என்ற கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு அவள் வார்த்தைகள் வலியைதான் ஏற்படுத்தியது. சிலகணங்கள் அங்கே அமைதி நிலவ, தன்னை சமன்படுத்திகொண்டு “யார்-னு நான் தெரிஞ்சிகலாமா யாழினி?” என்றவனின் கேள்வியால் அவளுக்குதான் இதயம் படபடவென அடித்து கொண்டது.
ஒரு கணம் கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் தைரியத்தை வரவழைத்து கொண்டு “ஆத்விக்” என்ற பெயரை சொல்லும்போதே அவள் விழிகள் முழுவதும் கலங்கி போயின.
அந்த பெயரை கேட்டவனுக்கோ அதிர்ச்சிதான். இருந்தும் அதை வெளிக்காட்டாமல் ”யாரு..? சின்ன வயசுல நம்ம ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்தானே.. அவனா..?” என்றவன் கேள்வியை முடிக்கும் முன்பே, ஆமாம் என்பது போல அவள் தலையை மேலும் கீழுமாக அசைக்க தென்னரசோ விளக்கமுடியாத வலிகளுடன் அவளை ஏறிட்டு பார்த்தான். சிலகணங்கள் அங்கே அமைதி நிலவ, தென்னரசுதான் மீண்டும் தொடர்ந்தான்.
“எதுவுமே தெரியாம எப்படி யாழினி..? அட்லீஸ்ட் நீ அவன காதலிக்கறதாவது அவனுக்கு தெரியுமா..?” என்றான் புருவம் சுருக்கி.
“தெரியாது மாமா. எனக்கு எதுவுமே தெரியாது மாமா” என்றவளுக்கு அந்நேரம் அழுகைதான் பீறிட்டது. அழுகையை தவிர வேறென்ன பதில் சொல்ல முடியும் அவளால். சொல்லபோனால் அவளுக்கே இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
தன் காதல் ஒருதலை காதலா.. இல்லை சொல்லியகாதலா.. இல்லை மறுக்கப்பட்ட காதலா.. என்று அவளுமே குழம்பிபோய்தான் இருக்கின்றாள். கடந்த ஐந்து வருடங்களாக அவளும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டாள்தான். ஆனால் பலன் என்னவோ பூஜியம்தான்.
“தெரியாதுனா என்ன அர்த்தம் யாழினி..?” என்றவனின் வார்த்தைகளில் லேசாக கோவம் துளிர்த்தது.
அவன் கோவம் புரிந்தும் “தெரியாதுதான் மாமா” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவள்,
“ஆனா அவர தவர வேற யாரையும் என் மனசு ஏத்துக்காதுன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் மாமா. இதனாலதான் நான் கல்யாணத்த கூட இவ்வளோ வருஷம் படிப்ப காரணம் காட்டி தள்ளிபோட்டது. அம்மாகிட்ட என்னால சொல்லி புரியவைக்கவும் முடியாது புரிஞ்சிக்கற மன நிலமையிலும் அவங்க இல்ல. அதே சமயம் என்னாலயும் அவர மறக்கமுடியாது. இதுக்கு மேலயும் என்னதான் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னா எனக்கு உயிர விடுறத தவிர வேற வழியில்லை” என்று தான் சொல்ல நினைத்த அனைத்தையும் ஒரே மூச்சில் அவள் சொல்லிமுடிக்க, அவளின் கடைசி வார்த்தையை கேட்டு தென்னரசுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. அவள் இந்த அளவிற்கு பிடிவாதம் பிடிப்பாள் என்பதே அவனுக்கு இன்றுதான் தெரிந்தது. அதற்காக அவள் இஷ்டத்திற்கு அவளை விடவும் அவனுக்கு விருப்பமில்லை.
“பைத்தியம் மாதிரி பேசாதா யாழினி. உனக்கு பசங்கள பத்திஎன்ன தெரியும்..? ஒரு விஷயம் வேணும்னு முடிவுபண்ணிட்டாங்கன்னா உலகத்தோட எந்த மூலைக்கு வேணும்னாலும் போய் அத அடஞ்சே தீருவானுங்க. அதே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா மொத்தமா ஒதுங்கிபோயிட்டே இருப்பானுங்க யாழினி. அந்த ஆத்விக்…” என்றவன் சொல்லி முடிக்கும் முன்பே,
“என் ஆத்விக் அந்த ரகம் இல்லை” என்றாள் சற்றே கர்வமாக.
“யாழினி…” என்றவனை, “பிளீஸ் மாமா” என்று தடுத்தவள்,
“நான் ஆத்விக் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். உங்கள விட அவரபத்தி எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்துக்கும் மேல நான் அவருக்கு எவ்வளோ விருப்பம்னு எனக்கு நல்லாவே தெரியும்.” என்றவளின் வார்த்தைகளில்தான் எத்தணை கர்வம்.
ஆம் அவளுக்கு தெரியும்தான் அவனுக்கு அவள் எவ்வளவு பிடித்தமென்று. ஆனால் அந்த பிடித்தத்திற்கு அவன் என்ன உறவு முறை வைத்திருந்தான் என்பதைதான் அவள் அறிந்திருக்கவில்லை.
“எதோ என் பிரச்சனைக்கு ஒரு முடிவு தேடிதான் நான் உங்ககிட்ட வந்தேன். உங்களால முடிஞ்சா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. இல்லன்னா” என்று நிறுத்தியவள், அவனைப்பார்த்து இருக்கரம் கூப்பிவிட்டு செல்ல,
“யாழினி.. யாழினி..” என்று அழைத்தவாறே, அவள் செல்லும் வழியை இடைமறித்து நின்றான் தென்னரசு. வழி மறித்து நின்றவனை என்ன என்பதுபோல அவள் பார்க்க,
“நீ அவன லவ் பண்ற, அவனுக்காக வெயிட் பண்ற எல்லாம் ஓகே தான். ஆனா அவன் எங்க இருக்கான்..? என்ன பண்ணிட்டு இருக்கான்னு..? எதுவுமே தெரியாம இன்னும் எவ்வளோ நாள் நீ இப்படியே இருப்ப..? கொஞ்சமாவது உன் லைஃப் பத்தி யோசிச்சியா..?” என்றவனின் கேள்விக்கு,
“நான் கூடிய சீக்கரத்துல கண்டுபிடிச்சிடுவேன் மாமா” என்றாள் அவசர அவசரமாக.
“அதான் எப்படி..?” என்றவன் கேட்க,
“என் கிட்ட அவர் வீட்டு லேண்ட் லைன் நம்பர் இருக்கு” என்றவள் சொல்லிமுடித்ததுதான் தாமதம் அவளிடமிருந்த போன் நம்பரை வாங்கி அவன் டயல் செய்ய, அதுவோ ‘அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை’ என்று சொல்ல, புருவ முடிச்சிகளுடன் அவளை பார்த்தான்.
“அது வந்து மாமா” என்று மென்று விழுங்கியவள், “இப்போ மூணு வருஷமாதான் நாட் இன் யூஸ்-னு வருது. அதுக்கு முன்னாடி ஃபுல் ரிங் போச்சி.”
“போச்சினா..? யாரும் அட்டண்ட் பண்ணல அதானே” என்று மடக்கினான் தென்னரசு.
ஆம் என்பதுபோல தலையை மேலும் கீழுமாக அவள் அசைக்க, “இங்க பாரு யாழினி. உபயோகத்துல இல்லாத ஒரு ஃபோன் நம்பர்-அ வச்சிகிட்டு இத்தன வருஷாம எந்த நம்பிக்கையில நீ அவனுக்காக காத்துகிட்டு இருக்க..? உனக்கே இது முட்டாள்தனமா இல்ல..?”
“உங்களுக்கு வேணும்னா இது முட்டாள் தனமா தெரியலாம். ஆனா எனக்கு என் காதல் மேல நிறையவே நம்பிக்கை இருக்கு. போன் நம்பர் வச்சி அட்ரஸ் கண்டுபுடிச்சிடலாம்னு ஃப்ரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க. என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட் மும்பைல இருக்காங்க. அவங்க விசாரிச்சி சொல்றனு சொல்லியிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல எனக்கு என் ஆத்விக் மேல நம்பிக்கை இருக்கு மாமா” என்று முடித்தவள்,
“நீங்க மனசு வச்சா மட்டும்தான் மாமா இந்த கல்யாணத்த நிறுத்த முடியும். பிளீஸ் மாமா. எனக்காக..” என்று மீண்டும் கைகள் கூப்பி அவனிடம் அவள் கெஞ்ச, தென்னரசுவிற்கோ தன்னை நிராகரித்தவள் மீது கோவப்படுவதா..? இல்லை அவள் நிலையை பார்த்து பரிதாபப்படுவதா என்று புரியாமல் நின்றான்.
சிறு வயது முதலே அவளை அவன் பார்த்து வருகிறான். இதுநாள் வரை எது வேண்டியும் அவள் அவன் முன் சென்றுநின்றதில்லை. முதன்முறையாக தன்னிடம் கேட்கிறாள்.. முடியாது என்று மறுக்கவும் அவனால் முடியவில்லை. அதே சமயம் அவள் மீதான காதலை துறக்கவும் அவனால் முடியவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் முன்னுச்சியை அழுந்த கோதிவிட்டவாறு அவளை பார்த்தான். அவளோ கலங்கிய விழிகளுடன் எங்கேயோ பார்த்து கொண்டிருந்தாள்.
திருமணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று தென்னரசும் ஒரு வாரம் அமைதியாகவே இருக்க, யாழினியோ எதிலும் ஈடுபாடு இல்லாமல் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் நாளும் மெலிந்துகொண்டே போக அதை தென்னரசும் கவனிக்கவே செய்தான். அதன் பின் இரண்டு மூன்றுதரம் இதுக்குறித்து அவளிடம் பேசிப்பார்த்தான். அவள் தன் பிடிவாதத்தில் பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறி அந்த திருமண பேச்சுவார்த்தைக்கு முற்றுபுள்ளி வைத்தான் தென்னரசு.
விஷயம் கேள்விபட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்க, அவளோ யாரும் அறியாவண்ணம் கைகள் கூப்பி அவனிடம் தன் நன்றியை தெரிவித்தோடு அன்று இரவே சென்னைக்கு கிளம்பிவிட்டாள். அதன் பின் கார்டியோ சர்ஜன், பிராக்டீஸ், ஹாஸ்பிட்டல் என்று ஐந்தாண்டுகள் உருண்டோடின. வருடங்கள்தான் உருண்டோடினவே தவிர ஆத்விக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் ஆரம்பித்த புள்ளியிலேயே இருந்தாள் யாழினி.
போன் நம்பரை வைத்து கண்டுபிடித்த விலாசத்தில் இப்போது அங்கு யாரும் இல்லை என்பதும், அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அந்த பங்களாவில் இருந்தவர்கள் எங்கே சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை என்றும் தெரியவர யாழினி அதிகமாகவே உடைந்துபோனாள். இந்த விவரத்தை கூட தென்னரசு மூலமாகத்தான் அவள் அறிந்திருந்தாள். என்னதான் அவள் தன்னை நிராகரித்தாலும் அவளை அப்படியே விட்டுவிட அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் அவனே நேராக மும்பைக்கு சென்று விவரம் அறிந்து வந்து அவளுக்கு தெரிவித்தான்.
தற்போது உள்ள காலகட்டமாக இருந்திருந்தால் பரவிக்கிடக்கும் சமூக ஊடகங்கள் மூலமாக எப்படியாவது அவனை கண்டுபிடித்திருப்பாள். ஆனால் அவள் கல்லூரி படித்த காலகட்டத்தில் அரிதாக யாரோ ஒருசிலர் கைகளில் இருக்கும் நோக்கியா செல்போன்களே அதீத ஆடம்பரம்தான். இதில் வெறும் லேண்டைன் லைன் நம்பரை மட்டும் வைத்துக்கொண்டு எங்கிருந்து அவளால் அவனை கண்டுபிடிக்க முடியும்.
இந்த ஐந்து வருடங்களில் சிவகாமியும் அவளுக்கு எத்தனையோ வரன்களை பார்த்துவிட்டார். அனைத்திலும் எதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்துகொண்டே சென்றவள், ஒருகட்டத்தில் தனக்கு திருமணமே வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லிவிட சிவகாமியோ வெகுண்டெழுந்துவிட்டார்.
“கல்யாணம் வேண்டாம்னா என்ன அர்த்தம்..? இதுக்குதான் ஒத்த ஆளா காட்டுலயும், மேட்டுலயும் கஷ்டப்பட்டு உன்ன படிக்கவச்சனா? நாலு விஷயம் தெரிஞ்சிக்கத்தான் உன்ன படிக்க வச்சது. இப்படி முட்டாள் தனமா முடிவெடுக்க இல்ல.. சம்பாதிக்கறதால கட்டிகொடுக்காம கடைசி வரைக்கும் உன் கூடவே வச்சிக்கப் பார்க்குறீயான்னு அந்த செல்வி என்ன பார்த்து கேட்குறா..? எனக்கும் வயசாகுது.. இப்பவே நின்னா கால் நடுங்குது, நடந்தா மூச்சி வாங்குது. இன்னும் எவ்வளோ நாள் இருக்கப்போறனோ..? கண்ண மூடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி என் பேர புள்ளைங்கள பார்க்கணும்னு ஆசப்படுறது தப்பா..? என்ன பாவம் பண்ணனோ தெரியல கட்டுனவனும் தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்துட்டான். இவளும் இவ பங்குக்கு என்ன நோகடிக்குறா” என்று புலம்ப ஆரம்பித்துவிட, யாழினியோ உங்கள் இஷ்டம் என்றதோடு முடித்து கொண்டாள்.
இந்த சமுதாயத்தில் தனி ஒரு ஆளாக இருந்து தன்னை படிக்க வைத்து நல்ல நிலமைக்கு கொண்டுவர அவர் பட்ட கஷ்டநஷ்டங்களை அவளும் அறிந்ததே. அதனாலே மனதை கல்லாகி கொண்டு தனக்கு சம்மதம் என்றாள். அவர்களின் மன திருப்திக்கு மாப்பிளை பார்க்கட்டும். எப்படியும் தன் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்துவிட போவதில்லை. (Modafinil) எதுவாக இருந்தாலும் பார்த்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் அவள் சம்மதித்து கூட.
அதன் பின் அவளிடம் அபிப்பிராயம் கேட்காமல் சிவகாமி மாப்பிளையை தேர்வு செய்ய, யாழினி அவர்களை போனிலோ அல்லது நேரிலோ சந்தித்து பள்ளியிலிருந்தே தான் ஒருவரை காதலித்ததாக மட்டும் சொல்ல, அதன் பின் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராமல் போனது.
திருமணத்திற்கு முன் காதலித்து தோல்வியுறும் ஆண்களின் காதலை இயல்பாக பார்க்கும் அதே சமுதாயம், திருமணத்திற்கு முன் பெண்களுக்கு ஏற்படும் காதல் தோல்வியை மட்டும் ஏன் சந்தேகபார்வையோடு பார்க்கிறது. கணவனின் கடந்து போன காதலை பற்றி அறிந்திருக்கும் மனைவிமார்களின் கடந்துபோன காதலைபற்றி எத்தனை கணவன்மார்கள் அறிந்திருப்பார்கள். அப்படியே அறிந்திருந்தாலும் அதை இயல்பாக கடந்து சென்றவர்கள் எத்தனைபேர்…? சந்தேகதீயில் எரித்து பார்த்தவர்கள் எத்தனைபேரோ..?
இதில் அவள் காதலித்ததாக சொன்ன பின்னும் அவளை நேரில் சந்தித்து அவளின் முழு காதல் கதையையும் கேட்டது வெங்கட் மட்டுமே. காதலித்ததாக சொன்ன உடனே காணாமல் போன அத்தனைபேர் மத்தியில் வெங்கட் அவள் மனதில் உயர்ந்தே நின்றான். என்னதான் அனைத்தும் தெரிந்தபின்னும் அவன் அவளை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தாலும் யாழினிக்கு இந்த திருமணத்தில் பிடித்தமில்லாமலே இருந்தது. தன் விருப்பத்தை யாராவது கேட்டால் கூட தன் மனதில் இருப்பதை சொல்லியிருப்பாள். ஆனால் கேட்கும் மனநிலையில்தான் அங்கு யாரும் இல்லையே. எப்படி இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவது என்ற யோசனைலேயே நாட்கள் நகர்ந்துவிட்டன.
அதுவரை கையிலிருந்த பத்திரிக்கையையே கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், மேஜை மீதிருந்த நோக்கியா போனை அவசரஅவசரமாக எடுத்து மீண்டும் அந்த லேண்ட் லைன் நம்பருக்கு டயல் செய்துபார்த்தாள். அது எப்போதும் போலவே உபயோகத்தில் இல்லை என்று வரவே, அந்த நோக்கியா போனை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவளுக்கு ஆத்திரம் அடைக்க கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
ஆத்திரம், கோவம் என்று அனைத்துமே அந்நேரம் அவள் மீதுதான் அவளுக்கு இருந்தது. ஒன்பது வருட காலம் தன் அருகிலேயே இருந்தவனை பற்றி ஏதும் அறிந்து கொள்ளாமல், தன் மனதில் இருக்கும் காதலையும் வெளிப்படுத்தாமல் இருந்த தன் மீதுதான் அவள் அதிகம் கோவம்கொண்டாள்.
இருவருக்குமிடையே கிட்டதட்ட ஒன்பது வருடக் கால பழக்கவழக்கம் இருந்தபோதும் அவள் அதிகம் அவனைப்பற்றி அறிந்திருக்க வில்லை. அதே சமயம் அவனும் பெரிதாக தன்னை பற்றியோ தன் குடும்பத்தாரை பற்றியோ அவளிடம் சொன்னதில்லை. சென்னையில் அவள் சித்திவீடு இருக்கும் அதேதெருவில்தான் பெரிய பங்களாவில் ஆத்விக் அவன் பாட்டியுடன் வசித்து வந்தான். அவன் சொந்த ஊர் மும்பை என்பதுகூட அவள் சித்தி பார்வதி சொல்லிதான் அவளுக்கு தெரியும்.
அறிவு, அழகு, வசதி என்று அனைத்திலும் ஓங்கிநிற்கும் அவனை தூரத்திலிருந்து அவள் பார்த்து இரசித்ததுதான் அதிகம். அவனாக அவளிடம் வந்து பேசினாலும் அவளுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையும், நாணமும் அவனை நிமிர்ந்து பார்க்க கூட அவளை அனுமதித்ததில்லை. ஆனால் ஆத்விக்கோ எவ்வளவு கூட்டத்தில் அவளை பார்த்தாலும் புருவத்தை உயர்த்தி மெலிதாக புன்னகைத்து விட்டு செல்வதை வழமையாக கொண்டிருந்தான். அவனிடம் பேசுவதற்காக ஏங்குவோர் மத்தியில் அவனோ அவளை தேடிசென்று பேசினான். அவள் கேட்காமலே அவளுக்கு பள்ளி பாடங்களை சொல்லி கொடுத்தான். சந்தேங்களை தீர்த்துவைத்தான். அடுத்தவர் முன்னிலையில் அவளுக்காக அவன் பேசினான். எதற்கும் இலாயிக்கு இல்லை என்று கேலி பேசியவர்கள் முன்னிலையில் அவனால் தலை நிமிர்ந்தாள். அவன் சொல்லி மருத்துவத்தில் சேர்ந்தாள்.
என்னதான் நட்பு ரீதியாக அவன் அவளை நெருங்கினாலும், அவனைபோல் சகஜமாக அவளால் அவனை நெருங்க முடியவில்லை. காரணம் நட்பிற்கும் காதலுக்கும் இடையில் சிக்கி தவித்துகொண்டிருந்தது பெண்ணவளின் மனம். அதுவும் சிலகாலம்தான். அவனைப்பார்க்கும் போது மட்டும் தனக்குள் ஏற்படும் தடுமாற்றமும், ஒருவிதபதற்றமும் தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடம் அவள் உணர்ந்ததில்லை, ஏன் அவளின் முறைமாமன் தென்னரசுவிடம் கூட அவள் இப்படியெல்லாம் உணர்ந்தது கிடையாது. இந்த உணர்விற்கு என்ன பெயர் என்று பின்நாளில்தான் அவள் அறிந்தாள். என்ன அறிந்து என்ன பயன்..? அவனைத்தான் அவள் முழுவதுமாக தொலைத்துவிட்டாளே..
ஒரே ஒரு தடவை அவனை பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான் அவளின் ஏழு வருட பிராத்தனையாக இருந்தது. அழுதபடியே மேஜையை வெறித்துப்பார்த்து கொண்டிருந்தவளின் பார்வையில் அவளின் டைரிக்குள் இருந்து மெல்ல தலைக்காட்டிக்கொண்டிருந்தது ஆத்விக்கின் புகைப்படம். டைரியிலிருந்து அவன் புகைபடத்தை கையில் எடுத்தாள் கனத்த இதயத்துடன்.
எப்போதோ அவனுக்கு தெரியாமல் அவள் திருடி வைத்திருந்த அவனின் புகைப்படம் அது. கிட்டாரை பிடித்து கொண்டு அவனுக்கே உரிய அந்த அழகான புன்னகையுடன் இருந்த அவனின் புகைப்படத்தை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள்.
ஆறடி தாண்டிய உயரம், ஸ்போர்ட்ஸ் விரும்பி என்பதால் உயரத்திற்கு ஏற்ப கட்டுக்கோப்பான உடல்வாகு, கிளீன் ஷேவ் செய்யப்பட்ட முகம், அடர்த்தியான புருவத்திற்கு கீழே இருந்த கண்களில் ஒருவித குறுகுறுப்பு, பார்ப்பவரின் மனதை கவர்ந்திழுக்கும் அவனின் வசீகர புன்னகை அவனிடம் அதிகம் அவளுக்கு பிடித்தது. அதிலும் சிரிக்கும் போது ஒருபக்க கன்னத்தில் மட்டும் நட்சத்திரம் போல ஒளிர்ந்து மறையும் அந்த கன்னக்குழியில் லட்சம் முறையாவது அவள் விழுந்திருப்பாள்.
அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தவளுக்கு இறுதியாக அவனைபார்த்தது, பேசியது என்று அனைத்தும் பசுமையாக அவள் மனக்கண் முன்னே விரிய அவன் புகைப்படத்தை தன் மார்போடு அணைத்தப்படி மெல்ல விழி மூடினாள் யாழினி.