எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முதலில் தடுமாறிய கைலாஷ், பின் சிகிச்சைக்காக வர்ஷாவை வெளிநாடு அழைத்து செல்வதாக சொன்னப்போது, சத்யமூர்த்தியோ, “சரிடா உன் விருப்பம்” என்றதோடு முடித்துக்கொள்ள,
யசோதாவோ, “எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க அண்ணா.. பசங்க இரண்டுபேரும் நல்லபடியாக சரியாகட்டும். அப்புறம் ஒரு நல்ல நாளாப்பார்த்து கல்யாணத்த வச்சிக்கலாம்” என்று சொல்ல, அதைக்கேட்டு கைலாஷின் முகமோ மாறிப்போனது.
திருமணப்பேச்சி வார்த்தையை எப்படி முறிப்பது என்று உள்ளுக்குள் சில கணங்கள் தவித்த கைலாஷோ “இல்லம்மா..” என்று இழுக்க, யசோதாவோ புருவம் சுருக்கி அவரைப் பார்த்தார்.
“இவ்வளோ நடந்ததுக்கப்புறம் இந்த கல்யாணம் சரி வரும்ணு எனக்கு தோணலமா” என்றவரை நெஞ்சில் கைவைத்தப்படி அதிர்ந்துப்போய் பார்த்தார் யசோதா.
கைலாஷோ சத்யமூர்த்தியின் அருகில் சென்று அவரின் கரத்தைப் பற்றி, “சாரிடா” என்க, “என்னடா நமக்குள்ள..” என்று நட்புரீதியாக கைலாஷின் முதுகை தட்டிக்கொடுத்த சத்யமூர்த்தி,
“நீ முதல்ல வர்ஷாவ கவனி. பாவம் அவ உள்ளுக்குள்ள ரொம்பவே உடைஞ்சிப்போயிருக்கா.. எப்போ ஃப்ளைட்..?” என்று கேட்டவரிடம் அதற்கான விவரங்களை சொன்ன கைலாஷ் சிறிதுநேரம் அவர்களிடம் பேசியிருந்துவிட்டு செல்ல,
“என்னங்க இப்படி சொல்லிட்டுப்போறாரு..?” என்று கேள்வியெழுப்பினார் யசோதா.
“விடு யசோதா… நாம ஆசைப்பட்டாலும் நடக்கறது என்னவோ அது நடந்துதன ஆகும். அம்மா அடிக்கடி சொல்றமாதிரி இதுதான் யுனிவர்ஸோட விருப்பமோ.. என்னவோ.. நீ எதையும் மனசபோட்டு குழப்பிக்காத யசோதா.” என்றார் அவரை சமாதானப்படுத்தும் விதமாக.
“இல்லங்க… யாதவ் கண்விழிச்சிக்கேட்டா..? அவனுக்கு என்னங்க பதில் சொல்றது..?” என்றவரின் கேள்வி சத்யமூர்த்தியையும் மௌனம் கொள்ளத்தான் செய்தது.
தந்தையின் விரும்பத்திற்காக மட்டும் அவன் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையே. அவனும் விருப்பப்பட்டு முழு ஈடுபாடுடன் தானே இந்த திருமணத்திற்கு சம்மதித்தது. சம்மந்தப்பட்டவனிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் அவர்களாக எப்படி இந்த திருமணத்தை நிறுத்தலாம்..?
முதலில் யாதவ் கண்விழித்து, உடல்நிலை சரியாகட்டும் அதன்பின் திருமணம் கூறித்து கைலாஷிடம் பேசிபார்க்கலாம் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார் சத்யமூர்த்தி.
தான் நினைத்ததுப்போலவே இந்த திருமணம் நின்றுபோனது குறித்து சந்தோஷப்படுவதா.. இல்லை பேரன் இருக்கும் நிலையைப் பார்த்து கவலைப்படுவதா… என்று உள்ளுக்குள் குழம்பிப்போனார் கிரானி. எது எப்படியோ முதலில் அவன் உயிர்பிழைக்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் பிராத்தனையாக இருந்தது.
இரண்டு மருத்துவமனைகளில் அவனுக்கு இதயம் கிடைத்தப்போதும் அது அவனின் இரத்தவகைக்கு ஒத்துப்போகமல் போகவே யாதவின் நிலையோ நொடிக்கு நொடி கவலைக்கிடமாகிக்கொண்டேயிருக்க, சொன்னதுப்போலவே கைலாஷ் தம்பதியினர் வர்ஷாவை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு கிளம்பிச் சென்றனர்.
அன்ன ஆகாரம் இல்லாமல் எப்போது அவன் கண்விழிப்பான் என்று சதா அவன் அருகிலேயே அமர்ந்திருந்த யசோதா மற்றும் அவனுடைய பாட்டியை பார்க்கும் போதெல்லாம் யாழினியின் மனமுமே கலங்கித்தான் போயின.
இத்தனை காலங்கள் தன் அருகிலேயே இருந்த ஒருவர் திடீரென இல்லை என்பதை எப்படி சம்மந்தப்பட்டவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியும்..? பிடித்தமான ஒன்றை தொலைப்பது ஒரு வகை வலி என்றால் அதை மொத்தமாக இழப்பது என்பது இன்னும் அதிக வலி இல்லையா…?
இரண்டு நாட்கள் ஆகியுமே யாதவ் கண்களை திறக்கவேயில்லை. அமர்ந்தநிலையில் அவன் கரத்தைப்பற்றியவாறு தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்த யசோதாவை எழுப்பியது என்னவோ அவனின் உடல் அசைவுதான். மகன் கண்விழித்துவிட்டான் என்று சந்தோஷத்தில் கண்களைத்திறந்தவருக்கு அவன் நிலை இன்னும் பேரிடியாகத்தான் இருந்தது.
ஸ்டோக்கால் அவன் உடல் படுக்கையிலிருந்து தூக்கி தூக்கி போட மகனை இந்த நிலையில் பார்த்த யசோதாவோ “யாதவ்” என்று கதறியேவிட்டார். வெகு சிரமப்பட்டு செவிலியர் அவரை வெளியே அழைத்து செல்ல, யாழினியோ துரிதமாக செயல்பட்டு அவனுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் சிகிச்சை கொடுத்தாள். பின் நரம்பியல் மருத்துவர் வரவழைக்கப்பட்டு முறையாக அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்னதான் மருத்துவக்குழு இருபத்திநான்கு மணிநேரமும் அவன் அருகிலேயே இருந்து அவனுக்கு சிகிச்சை கொடுத்தாலும் யாதவின் நிலையோ தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது.
இதில் இருபது சதவீதம் மட்டுமே இயங்கிகொண்டிருந்த அவன் இதயத்தின் ஹார்ட் ரேட் மற்றும் ஆக்ஸிஜன் லெவல் மேலும் குறைந்துக்கொண்டே செல்ல, அவனின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க எக்மோ கருவி பொருத்தப்பட்டது.
எக்மோ என்பது உடலில் இதயமோ அல்லது நுரையீரலோ சரியாக செயல்படாத பட்சத்தில் செயற்கையான முறையில் உடலில் இருக்கும் அசுத்த இரத்ததை சுத்தமாக மாற்றி மீண்டும் உடலுக்கு செலுத்தும். கழுத்துநரம்பில் இணைக்கப்பட்டிருக்கும் குழாயின் உதவியோடு உடம்பிலிருக்கும் இரத்தம் வெளிக்கொண்டுவரப்பட்டு, ஆக்சிஜனேட்டர் மூலமாக அந்த இரத்தத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு நீக்கப்பட்டு ஆக்சிஜன் நிரம்பிய இரத்தத்தை தொடைப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் குழாய் மூலமாக மீண்டும் உடலிற்கு செலுத்துவதுதான் எக்மோ கருவியின் செயல்பாடு. இந்த எக்மோவும் ஒரு தற்காலிக தீர்வே. இதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
குழாய் மூலமாக உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்லும் வரை அந்த குழாய்களில் இரத்தம் உறைந்துவிடாமல் இருப்பதற்காக ஹெப்பாரின் என்ற மருந்து செலுத்தப்படும். இந்த மருந்து இரத்தம் உறைவதை தடுப்பதால் மூளை நரம்புகளிலிருந்தும் ஏற்கனவே அடிப்பட்ட பகுதிகளிலிருந்தும் இரத்தம் கசிய வாய்ப்புகள் அதிகம்.
வாய், தொண்டை, கழுத்து பகுதி மற்றும் கால் பகுதி என்று அனைத்து இடங்களிலும் டியூப் சொருக்கப்பட்டு இருக்கும் அவனை பார்த்த மாத்திரத்திலேயே யசோதா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழஆரம்பித்துவிட்டார். பின் சத்யமூர்த்திதான் அவரை அங்கிருந்து அழைத்து சென்று சமாதானப்படுத்தினார்.
இரண்டு நாட்கள் இப்படியே செல்ல யாதவின் உடல் நிலையிலும் எந்தவித மாற்றமும் இல்லாமலேயே இருந்தது. அவள் நினைத்ததுப்போலவே அவனுக்கு அடிப்பட்ட இடங்களிலிருந்து இரத்தம் கசிய அவன் நிலமை மேலும் மோசமாகிப்போனது.
ஒரு மருத்துவராக அவன் பிழைப்பது இனி கடினம் என்றுதான் அவளுக்கும் தோன்றியது. மகனைப்பார்க்க வந்த சத்யமூர்த்தியோ பார்வையாலே அவன் பற்றி வினவ,
“சார் இன்னைக்கு மார்னிங் லேந்து உங்க சன் சரியான ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்ல. இன்னைக்குள்ள ஹார்ட் கிடைச்சாக்கூட வீ டூ சம்திங். இல்லனா..” என்று இழுத்தவள் அதற்குமேல் எதுவும் சொல்லமுடியாமல் தலையை இடவலமாக ஆட்ட, அவள் கூறியதைக் கேட்டு சத்யமூர்த்தியின் கண்களோ குளமாகின. அவரும் எவ்வளவு நேரம் தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருப்பார். உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது பெற்ற மகன் அல்லவா. அருகில் சென்று மகனின் தலையை இதமாக வருடிவிட்டவரின் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க, மேற்கொண்டு அங்கு இருக்காமல் அவர் அந்த அறையிலிருந்து வெளியேற, யாழினியோ மெல்ல அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
என்னதான் மருத்துவகுழு அவனுக்கு தேவையான மருந்துகளை ஊசிமூலமாக செலுத்தி அவன் அருகிலேயே இருந்து அவனை கவனித்துக் கொண்டாலும் நோயாளியும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டுமல்லவா…
இரத்தம் ஏறிக்கொண்டிருந்த அவன் கரத்தை மெல்ல தொட்டவள்,
“மிஸ்டர். யாதவ்.. நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா..?” என்றாள் மென்னையான குரலில். அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே மேற்கொண்டு அவளேதான் தொடர்ந்தாள்.
“உங்களுக்கு ஹார்ட் கிடைக்க எல்லாவிதத்துலயும் நாங்களும் டிரைப் பண்ணிட்டுதான் இருக்கோம். ஸோ பிளீஸ் டோண்ட் லாஸ் யுவர் ஹோப். வெளியில உங்க அம்மா, பாட்டி, சார் எல்லாருமே ரொம்பவே உடைஞ்சிப்போயிருக்காங்க.. அவங்களுக்கு காலத்துகும் ஆறாத காயத்த கொடுத்துடாதீங்க. மனசுக்கு நெருக்கமானவங்கள பிரியற வலிக்கு மட்டும் இந்த உலகத்துல மருந்தே கிடையாது. பிளீஸ் உங்க நம்பிக்கையை இழந்துடாதீங்க.. நீங்க கியூர் ஆகிடுவீங்க” என்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவனை தேற்றிக்கொண்டிருந்தாள் யாழினி. அவள் கண்முன்னே மூவர் படும் வேதனை அவளை அவ்வாறெல்லாம் பேசவைத்தது.
இனி அவன் பிழைக்கமாட்டான் என்ற செய்தி கேள்விபட்டு மூவரும் இடிந்துபோய் அமர்ந்திருக்க, அவர்களின் மனநிலையை அப்படியே மாற்றியது என்னவோ பெங்களூர் மருத்துவமனையிலிருந்து வந்த அந்த போன்கால்தான்.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் யாதவின் இரத்தவகையோடு ஒத்துப்போக அந்த இதயத்தை சென்னைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைந்தேறின.
தனி விமானத்தில் ஒரு மணிநேரத்திற்குள் இதயத்தை சென்னைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தது அவர்களின் மருத்துவ நிர்வாகம். அது இரவு நேரம் என்பதால் பெரும்பாலும் சிட்டியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றாலும் விமானநிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு வரும் வழிகளை தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது காவல்துறை.
சம்மந்தப்பட்ட மருத்துவமனையை போனில் தொடர்புக்கொண்டு தனக்கு தேவையான விவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டவள் ஆப்ரேஷனுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தாள்.
யாதவிற்க்கு இதயம் கொடுப்பவரின் தந்தையிடம் கையெழுத்து வாங்கியப்பின் அவரின் உடல் ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட, மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பமே சுக்குநூறாக உடைந்துப்போயிருந்தது.
மார்புபகுதியை தவிர்த்து உடல் முழுவதும் பச்சை நிற துணியால் மூடப்பட்டிருக்க, கார்டியாக் ரெட்ராக்டர் என்ற கருவியின் உதவியோடு அவரின் மார்புபகுதி மெல்ல மெல்ல பிளக்கப்பட, அந்த மார்புக்கூட்டிற்குள் துடித்துக்கொண்டிருந்தது யாதவிற்க்கு கொடுக்கப்போகும் அந்த இதயம்.
நடந்த விபத்தில் இதயத்தில் அடிப்பட்டு இருக்கிறதா..? இதயத்தின் அளவு சரியாக இருக்கிறா..? என்று பரிசோதித்த மருத்துவக்குழு பின் கார்டியோ பிலீஜியா முறையில் இரண்டு லிட்டர் பொட்டாசியம் கலந்த மருந்தை அந்த இதயத்திற்குள் செலுத்த அம்மருந்து இதயம் துடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியதோடு (கார்டியாக் அரெஸ்ட்) அந்த இதயத்தை 40c-க்கு குளுமைப்படுத்தயது. அந்த இதயத்திற்குள்ளிருந்த டோனரின் இரத்தம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு அதுவரை சிவப்பு நிறத்தில் இருந்த இதயமோ வெளிர்ந்த நிறத்திற்கு மாற அதன் பின்னே அந்த இதயம் வெட்டி எடுக்கப்பட்டு பிரிசர்வேட்டிவ் சொலிவிஷன் அடங்கிய பாலிதின் பைக்குள் வைக்கப்பட்டது. பின் அந்த இதயத்தின் 4 டிகிரி செல்சியஸ் குளுமையை கட்டுக்குள் வைப்பதற்காக அந்த பாலிதீன் பையை ஐஸ் பெட்டியில் வைத்து, அதன் பின்னே அந்த இதயத்தை எடுத்துக்கொண்டு விமான நிலையம் நோக்கி விரைந்தனர்.
வெட்டி எடுக்கப்பட்ட இதயமானது குறைந்தது ஐந்துமணிநேரத்திற்குள்ளாவது இதயம் வேண்டுவோருக்கு பொருத்தப்பட வேண்டும் என்பதால் ஒரு நொடியைக் கூட விரயம் செய்யாமல் இதயத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
அங்கு ஆப்ரேஷன் ஆரம்பித்த அதேநேரத்தில்தான் யாழினியும் தன்னுடைய மருத்துவ குழுவுடன் யாதவிற்கு ஆப்ரேஷனை ஆரம்பித்திருந்தாள். முதன் முறையாக தன்னுடைய தலைமையில் நடக்கும் ஆப்ரேஷன் என்பதால் ஒருவித பதற்றம் அவளை தொற்றி கொண்டிருந்தாலும், தன்னை நம்பி கொடுத்திருக்கும் பொறுப்பு என்பதால் மிக கவனத்துடனே செயல்பட்டாள். கார்டியாக் ரெட்ராக்டர் என்ற கருவி மூலம் யாதவின் மார்பு பகுதி பிளக்கப்பட்டது. ஆப்ரேஷன் நடந்து முடிக்கும் வரை அவன் உயிருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் இதயம் மற்றும் நுரையீரலின் வேலையை செய்யும் கார்டியோ பல்மோனரி என்ற கருவியோடு பொருத்தப்பட அதன்பின்னே அவனின் பலவீனமான இதயம் வெட்டி நீக்கப்படவும், டோனரின் இதயம் அவர்களின் மருத்துவமனையை வந்தடையவும் சரியாக இருந்தது.
பிளாஸ்டிக் பையிலிருந்த இதயத்தை எடுத்து சக மருத்துவர் ஒருவர் அந்த இதயத்தை யாழினியின் கையில் கொடுக்க, அந்த வெளிறிப்போயிருந்த இதயத்தை வாங்கியவளின் கைகளோ காரணமேயில்லாமல் நடுங்கியது. அதேநேரம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை அவள் இதயமும் உணரவேசெய்தது. முதன்முறையாக தான் செய்யும் ஆப்ரேஷன் என்பதால் தனக்குள் ஏற்பட்ட பதற்றம்தான் இது என்று தன்னை சமன் படுத்திக்கொண்டவள், அந்த இதயத்தை யாதவின் மார்புக்கூட்டில் வைத்து பொறுத்த ஆரம்பித்தாள். ஒருவித பதற்றத்தில் அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வைத்துளிகளை செவியலியர் துடைத்துவிட தனக்குள் இருந்த பதற்றத்தையெல்லாம் ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்தவள் நிதானமாகவும், பொறுமையாகவும் அத்தோடு நேரத்தை விரயம் செய்யாமலும் வால்வுகளை இதயத்தில் அதற்கான இடத்தில் பொறுத்தினாள். பொறுத்தப்பட்ட இதய வால்வுகள் மூலமாக யாதவின் இரத்தம் அந்த இதயத்திற்குள் செலுத்தப்பட அதுவரை வெளிறிப்போயிருந்த இதயம் மீண்டும் சிவப்பு நிறமாக மாறியதோடு துடிக்கவும் ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆப்ரேஷன் முடித்து வெளியில் வந்தவள் சத்யமூர்த்தியை பார்த்து கட்டை விரலை உயர்த்திக்காட்ட, அவளின் கரத்தைப்பற்றி குலுக்கி சத்யமூர்த்தி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த, யசோதாவும், கிரானியும் அவளை கட்டியணைத்து, உச்சிமுகர்ந்து தங்கள் நன்றியையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினர்.
ஆப்ரேஷன் முடிந்து ஆறு மணிநேரம் கழித்தே மெல்லிய முணகலுடன் மெல்ல கண்விழித்தான் யாதவ் கிருஷணன். கண்கள் மங்களாக தெரிய, புருவம் சுருக்கி இமைகளை ஒரு முறை அழுத்தமாக மூடித்திறந்தவனுக்கு அப்போதுதான் தன் எதிரில் நின்றுக்கொண்டிருந்த சத்யமூர்த்தியின் முகம் தெளிவாகத்தெரிந்தது.
அவன் தலையை இதமாக வருடிவிட்டப்படி, “ஆர் யூ ஓகே யாதவ்?” என்று கேட்டவரிடம், கஷ்டப்பட்டு தலையை அசைத்தானே தவிர வாய்திறந்து பேசவில்லை. தன் அருகில் கலங்கிய விழிகளுடன் இருந்த யசோதாவையும், அவன் கரத்தை பற்றியவாறு இருந்த கிரானியையும் ஒருப் பார்வை பார்த்தவன்,
பின் “மாம்… வர்ஷா..?” என்க, யசோதாவோ விழிகளில் கலக்கத்துடன் சத்யமூர்த்தியை பார்த்தார்.
சத்யமூர்த்தியோ, “நத்திங் டூ வொரி… ஷி ஈஸ் ஃபைன்” என்று மெலிதாக புன்னகைத்தவாறே சொல்ல,
வெகுசிரமப்பட்டு “ம்” என்றவன் மருந்தின் உதவியால் மீண்டும் உறங்க ஆரம்பித்திருந்தான்.
இனி அவன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிந்தப்பின் அவன் குடும்பமே மகிழ்ச்சியில் பூரித்துப்போயிருந்தது.
அதன் பின் அவ்வப்போது அவன் கண்களைத்திறக்கும் போதெல்லாம் யசோதாவும், கிரானியும் அவன் அருகிலேயே இருந்தனர்.
யாழினியோ முடிந்தமட்டும் அவன் கண்களில் படாமல், அவன் உறங்கும் நேரத்தில் மட்டும் சென்று அவனை பரிசோதித்து வந்தாள்.
“எப்படி இருக்கான் அந்த ஹெட் வெயிட்” என்று கேட்டவாறு கேண்டினில் காஃபி குடித்துக்கொண்டிருந்தவளின் முன்னால் சென்று அமர்ந்தாள் மீரா.
“அன்னைக்கு அத்தனைப்பேர் முன்னாடி என்னப் பேச்சி பேசுனான்… இப்பப்பாரு உன்னாலதான் அவன் உயிர் பொழச்சியிருக்கான். இப்ப எங்க வச்சிப்பானாம் அவன் மூஞ்ச?” என்று கோவமாக அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“மீரா” என்று அவளைத் தடுத்தாள் யாழினி. மீரா போலெல்லாம் அவள் இதுவரையுமே நினைக்கவில்லை. அன்று அவன் பேசியதையோ… இன்று அவனை அவள் காப்பாற்றியதையோ எதையுமே அவள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஒரு மருத்துவராக அவள் தன் கடமையை செய்தாள் அவ்வளவே.
“சரி அவன் எப்படியிருந்தா நமக்கென்ன…? நீ சொல்லு கல்யாணப்பொண்ணே… எப்போ ஊருக்கு கிளம்புற…?” என்று விழிகளை உருட்டி அவள் கேட்க,
“எதுக்கு…?” என்றாள் யாழினி.
“என்ன விளையாடுறீயா நீ.. இன்னும் பத்துநாள்-ல மேரேஜ்-அ வச்சிக்கிட்டு எதுக்கு-ன்னு கேட்குற..? அதான் ஆப்ரேஷன் முடிஞ்சி அவன் நல்லாதன இருக்கான். பாவம்டி அந்த வெங்கட் நீ போன்-அ எடுக்கலன்னு எனக்கு போன் பண்ணி உன்ன பத்தி கேட்டுகிட்டு இருக்கான். முதல்ல அவர்கிட்ட பேசு யாழினி” என்றவளை தன் கோவப்பார்வையாலே அடக்கினாள் யாழினி.
அவளின் கோவம் எதனால் என்பதை புரிந்துக்கொண்டவளோ, “கமான் யாழினி இதுதான் நிஜம்… இத நீ அகசப்ட் பண்ணித்தான் ஆகணும். புரிஞ்சிக்கோ.” என்று அவள் சொல்லும் போதே யாழினியின் கண்கள் மெல்ல கலங்கின.
“யாழினி” என்று அணுசரனையாக அவள் கரத்தை பற்றியவள், “நமக்கு பிடிச்சியிருக்கோ பிடிக்கலையோ எல்லாத்தையும் கடந்துப்போறதுதாண்டி வாழ்க்கை. காதலிச்சவனதான் கல்யாணம் பண்ணிக்கணும்னா… இங்க முக்கால்வாசி பொண்ணுங்க அவ்வையாராதாண்டி இருக்கணும். மறக்கப் பழகிக்கணும்” என்றவள் சொல்ல,
“நீ மறந்துட்டியா மீரா…?” என்றவளின் கேள்வி மீராவின் இதயத்தை சுருக்கென தைத்தது. அவள் முகம் மாற,
“உன் பையனுக்கு சர்வேஷ்-னு ஏன் பேர் வச்ச..?” என்றவளின் அடுத்தக்கேள்வி மீராவை இன்னுமே நிலைகுலைய வைத்தது.
சர்வேஷ் மற்றும் மீராவிற்கு இடையேயான நான்கு வருட காதலைப்பற்றி யாழினியும் அறிவாள்தான். அவர்களின் காதலை அடுத்த நிலையான திருமணத்திற்கு கொண்டு சென்றபோது சாதி, அந்தஸ்து என்று இரு குடும்பமுமே அவர்களின் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் போகவே அந்த இடத்திலேயே அவர்களின் காதலும் முறிந்துப்போனது.
“நீ மட்டும் இல்ல மீரா.. இந்த உலகத்துல பாதிப்பொணுங்க அப்படித்தான் இருக்காங்க.. மனசுக்குள்ள ஒருத்தனோட காதல் நினைவையும், கழுத்துல இன்னொருத்தவன் கட்டுன தாலியையும் சுமந்துகிட்டு அந்த காதல்-அ மறக்கவும் முடியாம.. இந்த வாழ்க்கையை முழுசா ஏத்துகவும் முடியாம நரக வேதனையைதான் அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க.
இந்த சமுதாயத்த பொறுத்தவரைக்கும் பொண்ணுங்க எப்பவும் சூசிங் ஆப்ஷன்-லதான் இருக்கணும். சூஸ் பண்ற இடத்துல இருக்ககூடாது அப்படித்தன..?” என்றாள் ஆதங்கத்துடன். அவள் கூறுவதும் நூறு சதவிகிதம் உண்மைதானே. என்னதான் இந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வி, வேலை என்று விண்ணைத்தொட்டாலும் வீட்டிற்குள் அவர்களின் விருப்பு வெறுப்புகளை சுதந்திரமாக சொல்ல அனுமதியும் இல்லை.. கேட்க ஆட்களும் இல்லை என்பதுதானே நிதர்சனம்.
ஒரு சிறு மௌனத்திற்கு பின், “நீ சொல்றதும் கரெக்ட்தான் யாழினி. ஆனா அதுக்காக போனத நினைச்சி இப்படியே இருந்திட முடியாதே.. லைஃப்-ல மூவ் ஆன் ஆகணுமில்ல. மூவ் ஆன் ஆகு யாழினி” என்க.
“என் லைஃபே அவன்தான்னும் இருக்கும் போது என்னால எப்படி மூவ் ஆன் ஆகமுடியும் மீரா..?” என்று கேட்டவளின் வார்த்தைகளில் வலிகள்தான் அதிகம் இருந்தது.
“நீ கேட்கலனாலும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது அவங்களோட கடமையில்லயா..? அம்மாவையும் கொஞ்சம் நினைச்சிப்பாரு. ஒரு ஆளா இருந்து உன்ன எவ்வளோ கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாங்கன்னு. அவங்க சந்தோஷத்துக்காக..” என்று அவள் தன்மையான குரலில் சொன்னபோதும் யாழினியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“மத்தவங்களுக்காக யோசிச்சி.. மத்தவங்களுக்காக விட்டுக்கொடுத்து… மத்தவங்களுக்காக சிரிச்சி… மத்தவங்களுக்காக வாழ்ந்து… இப்படி மத்தவங்களுக்காக மட்டுமே வாழற வாழ்க்கையில யாழினி எங்க மீரா..? மத்தவங்க விருப்பப்படி வாழறதுக்கு இது அவங்க லைஃப் இல்ல மீரா இது யாழினியோட வாழ்க்கை” என்க,
அவளோ, “உனக்கு பிடிச்சமாதிரிதான் உன் வாழ்க்கை அமையலையே.. அப்போ அவங்களுக்காகவாவது வாழலாம் இல்லையா…? ஆத்விக் உன் லைஃப்-ல இல்லன்றதுதான் விதி போல” என்றவள் ஆணித்தனமாக சொல்ல,
“ஆத்வில் என் லைஃப்-ல இல்ல-ன்றதுதான் விதின்னா அந்த விதி எதுக்காக என்னையும் அவனையும் பார்க்க வச்சிது..? எதுக்காக என் மனசுல அவன் மேல காதல வரவச்சிது..? இப்போவரைக்கும் அந்த விதியால ஏன் அவன மறக்க வைக்க முடியல..?” என்று சீறியவள், “இதுதான் விதிதான் அந்த விதியையும் என் காதல் மாற்றி எழுதும்” என்று வைராக்கியமாக சொன்னவள் விறுவிறுவென அங்கிருந்து வெளியேற மீராவோ செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்னதான் அவள் ஆணித்தனமாக சொன்னாலும் யாழினிக்கு திருமணம் நடந்தே ஆகவேண்டுமென்று நினைத்த மீரா அவளின் திருமண பத்திரிக்கையை மருத்துவமனையில் இருக்கும் சக மருத்துவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.
விஷயம் கேள்விப்பட்டு சத்யமூர்த்தி தம்பதியினர் அவளின் கேபினுக்கே சென்று புடவை, நகை, பணம் அடங்கிய தாம்பூலத்தட்டுடன் அவளை வாழ்த்தியதோடு அவளுக்கு விடுப்பும் கொடுக்க யாழினிதான் பேசுவதறியாது அமைதியாகிப்போனாள். இதெல்லாம் நிச்சயம் மீராவின் வேலைதான் என்று அவளும் அறியாமல் இல்லை. இருந்தும் அமெரிக்கா சென்றிருக்கும் இதயநிபுணர் மெய்யப்பன் இரண்டு நாட்களில் திரும்பி வர இருப்பதால் அவர் வந்த பின்னே தான் இங்கிருந்து செல்வதாக சொல்லி சமாளித்தாள்.
ஆப்ரேஷன் முடிந்து இரண்டு நாட்கள் வரையுமே மயக்க நிலையில் இருந்தவன், அன்று யசோதா மற்றும் கிரானியின் உதவியுடன் மெல்ல எழுந்து அமர்ந்தவன் இலகுவாக அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, அப்போதுதான் சத்யமூர்த்தி அந்த அறைக்குள் நுழைந்தார்.
மகனைப் பார்த்து முறுவலித்தவாறே அவன் அருகில் சென்று அவர் அமர, அவரின் கரத்தை இதமாக பற்றியவனோ, “சாரி டேட். உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டல்ல” என்றான் மெலிதாக புனகைத்தவாறே தன்மையான குரலில் அவர்கள் மூவரையும் பார்த்து.
அவனின் அந்த புன்னகையும், தன்மையான குரலும், அவனின் மன்னிப்பும் புதுமையாக இருந்தது அவர்கள் மூவருக்கும்.
“கஷ்டப்படுத்தல…. தவிக்கவிட்டுடடா கிருஷ்ணா…” என்று செல்லமாக அவன் கன்னத்தை கிள்ளி அங்கிருந்தவர்களின் மனநிலையை மாற்றினார் கிரானி.
நால்வரும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க “டேட்” என்று அழைத்தவன்,
“எனக்கு யாரு ஆப்ரேஷன் பண்ணா..?” என்று வினவ, சத்யமூர்த்தியின் முகமோ மாறியது. அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சிலகணங்கள் தடுமாறியவர் உடனே முக மலர்ச்சியுடன்,
“நம்ம ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் டீம் தான்” என்று முறுவலித்தப்படியே அவர் சொல்ல,
“ஐ வாண்டூ மீட் தெம்” என்றவனின் வார்த்தையைக்கேட்டு அவர் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். அவன் உடல் இருக்கும் நிலையில் அவனுக்கு ஆப்ரேஷன் செய்தது யாழினிதான் என்று தெரியவந்தால் யாதவ் எந்த நிலைக்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அது அவனின் உடல்நிலைக்கு சரியில்லை என்று நினைத்தவர்,
“இப்போ ஏன்..?” என்று ஆரம்பிக்கும் போதே,
“அரேஞ் பண்ணுங்க டாட்” என்று ஒரே வார்த்தையில் அந்த பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான் யாதவ் கிருஷ்ணன்.
அன்று மதியமே அவனுக்கு ஆப்ரேஷன் செய்த பத்துபேர் கொண்ட மருத்துவகுழுவையும் அவன் முன்னால் நிறுத்தியிருந்தார் சத்யமூர்த்தி. அவளை மட்டும் தனியாக அவன் முன் நிற்கவைத்து அவனை கோவப்படுத்துவதற்கு பதிலாக அவனுக்கு ஆப்ரேஷன் செய்த மொத்த மருத்துவக்குழுவையும் அவன் முன்னால் அவர் நிறுத்த,
படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி தன்முன்னால் நின்றுக்கொண்டிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் நிதானமாய் பார்த்தவனின் விழிகளோ, அனைவருக்கும் பின்னால் ஒரு ஓரமாய் முகத்தில் மாஸ்க் அணிந்தப்படி விழித்தாழ்த்தியபடி நின்றுக்கொண்டிருந்த யாழினின் மீது படிய, அவனின் இதழ்களிலோ மெலிதாக புன்னகை பரவியது.
இதழ்களில் பரவிய மெல்லிய புன்னகையுடனே சிலக்கணங்கள் அவளையே பார்த்திருந்தவன், “தேங்க் யூ” என்றான் அவள் மீதிருந்த பார்வையை விலக்காமலேயே.