கான்ஃப்ரன்ஸ்-காக அமெரிக்கா சென்றிருந்த மெய்யப்பன் இரண்டு நாட்கள் கழித்தே சென்னை திரும்ப, யாதவ் குறித்த அனைத்து தகவல்களையும் அவரிடம் ஒப்படைத்தவள் அன்று இரவே ஊருக்கு கிளம்பியிருந்தாள்.
காரில் அழைத்து சென்றுவிடுவதாக வெங்கட் சொன்னப்போது பிடிவாதமாக மறுத்தவள், எப்போதும்போல் பேருந்திலேயே செல்ல ஆயத்தமானாள். சொல்லப்போனால் அதுதான் அவளுக்கு பிடித்திருந்தது.
படிப்பதற்காக சென்னை வந்தவள் அதன் பின் அதிகம் ஊர் பக்கமெல்லாம் செல்லவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவகாமியே அவளை சென்னை வந்து பார்த்து சென்றவண்ணமாக இருந்ததே அதற்கான காரணம் கூட. அத்தோடு பார்வதி தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என்பதால் சிவகாமியும் யாழினியின் முழுப்பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தார்.
அப்படியே அவள் ஊருக்கு செல்வதாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை கோவில் திருவிழாவிற்காகத்தான் செல்வாள். அதுவும் பார்வதியுடன் மட்டுமே. அதேசமயம் யாழினியும் ஆத்விக்கால் ஊருக்கு செல்வதிலெல்லாம் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவள் கல்லூரி சேர்ந்த போதுதான் அரசு வேலையில் இருந்த அவளுடைய சித்தப்பா குன்னூருக்கு வேலை மாற்றுதலாகி செல்ல, அவளும் கல்லூரி விடுதியிலேயே தங்கிக்கொண்டாள். அதன் பின் அவள் ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஆத்விக்தான் கடலூர் வரை அவளுடன் பேருந்திலேயே வந்து அவளை விட்டு செல்வான்.
ஜன்னலோர இருக்கையில் அவனுக்கு அருகில் அமர்ந்து பேசியபடியும், எப்போதும் அவன் கைகளில் இருக்கும் சிறிய அளவிலான டேப்ரிக்கார்டரில் அவனுக்கு மிகவும் பிடித்தமான இளையராஜா பாடல்களை ஹெட் செட்டில் கேட்டவாரு அவனுடன் பயணிக்கும் அந்த இரவு நேர பேருந்து பயணம் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதனாலே யாழினி பேருந்து பயணத்தை அதிகமாகவே விரும்பினாள்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து கடலூர் பேருந்தில் ஏறியவள், ஆத்விக் எப்போதும் சொல்வதுப்போல ஜன்னலோர இருக்கையை விடுத்து, மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவில் அமர்ந்துக்கொண்டாள். பேருந்து மெல்ல நகர ஆரம்பிக்க யாழினியோ பின்னருக்கையில் சாய்ந்து அமர்ந்து அவன் வைத்திருப்பது போன்ற சிறிய அளவிலான டேப்ரிக்கார்டரை ஆன் செய்து அதன் ஹெட்செட்டை காதில் பொறுத்தி இளையராஜா பாடலை கேட்டவாறு மெல்ல இமைகளை மூடியவள், அவனுடன் இருந்த நிமிடங்களை அசைப்போட ஆரம்பித்திருந்தாள்.
அவள் பேருந்து கடலூர் பேருந்து நிலையத்தை வந்தடையவே காலை நான்கு மணியாகியிருந்தது. அவள் ஊர் கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் இருப்பதால் நினைத்த நேரத்திற்கு பேருந்து இருக்காது என்பதால் யாழினியை அழைத்து வருவதற்காக சிவகாமி முன்னமே தென்னரசை அங்கு அனுப்பி வைத்திருந்தார்.
நட்பு ரீதியாக இருவரும் ஒருவருக்கொருவர் நலனை விசாரித்துக்கொண்டதோடு சரி அதன் பின் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அரைமணிநேர பயணத்திற்கு பின்னே ஊருக்குள் நுழைந்திருந்தது அவர்களின் பைக்.
ஊரின் எல்லையில் சீரியல் லைட்களால் ஒளிர்ந்துக்கொண்டிருந்த அம்மன் உருவத்தைப்பார்த்தவளுக்கு அப்போதுதான் அவர்கள் ஊர்திருவிழாவே நினைவிற்கு வந்தது. அவர்கள் ஊருக்குள் இருக்கும் மாரியம்ம-னுக்கு ஒவ்வொரு ஆண்டு ஆடி கடைசிவெள்ளியில் வெகுவிமர்சியாக நடக்கும் திருவிழாதான் அது. சொல்லப்போனால் இந்த கோவில் திருவிழாவில்தான் யாழினி முதன் முதலாக ஆத்விக்கை பார்த்தது கூட. மின்விளக்குகளால் ஒளிர்ந்துக்கொண்டிருந்த அந்த கோவில் கோபுரத்தை பார்த்தவளுக்கு இதயம் கனக்க, சிரமப்பட்டு தன் பார்வையை வேறுபக்கம் மாற்றிக்கொண்டாள்.
தென்னரசு அவள் வீட்டு வாசல் முன் பைக்கை நிறுத்த, அதுவரை வாசலைக் கூட்டிப்பெருக்கிக்கொண்டிருந்த சிவகாமியோ, மகளைப் பார்த்த சந்தோஷத்தில் கையிலிருந்த துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு ஓடிவந்து அவளை கட்டியணைத்து உச்சிமுகர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“நல்லாயிருக்கியாத்தா..?” என்று அன்பொழுக அவர் கேட்க, யாழினியோ தலையை மட்டும் அசைத்தாளே தவிர பதிலுக்கு அவர் நலன் பற்றியெல்லாம் விசாரிக்கவில்லை. விசாரிக்காவிட்டாலும் தன் பார்வையாலே அவர் நலனை அறிந்துக்கொண்டவள்,
வாங்கிவந்திருந்த பொருட்களையெல்லாம் சிவகாமியின் கைகளில் கொடுத்தவள் சிறிது நேரம் அவரிடம் பேசியிருந்துவிட்டு அதன் பின்னே தன்னுடைய அறைக்கு சென்றாள். படுக்கையில் தொப்பென்று விழுந்தவள் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
விளக்கு கரி படிந்திருக்கும் கூரை வீடு மாடிவீடாகியிருந்தது. சாணம் கொண்டு மொழுகிய தரை கிரானைட்டாக பளபளத்தது. மண்ணெண்னை வாசம் வீசும் விளக்குகள் மின்விளக்குகளாக உருமாறியிருந்தது. கிழிந்த பாய் பஞ்சுமெத்தையாகவும்… சாளரம் காற்று ஏ.சிக் காற்றாக மாறியிருக்க இந்த மாற்றங்கள் எதுவுமே அவள் மனதை கவரவில்லை. இந்த ஏழு வருடத்தில் அவள் வீடு மட்டுமல்ல இந்த உலகமே மாறிப்போயிருக்க அவள் மட்டும் அப்படியேதான் இருந்தாள். பஞ்சுமெத்தை முள்ளாக மேனியை குத்தியதோ என்னவோ படுக்கையிலிருந்து எழுந்தவள் ஓடிக்கொண்டிருந்த ஏ,சி-யை ஆஃப் செய்துவிட்டு சாளரம் கதவைத்திறந்துவிட்டவள் பின் வெற்று தரையிலேயே படுத்துக்கொண்டாள்.
இதோ அவள் படுத்திருக்கும் அந்த இடத்தில்தான் அவள் அவனை முதன் முதலாக பார்த்தது கூட. அதனால் தானே பிடிவாதமாக இந்த இடத்தில் அறையை எழுப்பசொன்னவள், அதையே தன் அறையாகவும் ஆக்கிக் கொண்டாள். அவனைப்பார்த்த அந்த முதல் நிகழ்வு பசுமையாக அவள் மனக்கண்முன்னே விரிய யாழினியின் விழிகளிலிருந்து வந்த கண்ணீர் சொட்டு சொட்டாக தரையில் விழுந்து தெறித்தது.
“யாழினி.. பார்வதி வந்துட்டாப்பாரு…” என்று கதவைத்தட்டி அவர் சொல்ல மெல்ல எழுந்து சென்று கதவைத் திறந்தாள் யாழினி.
“ஏய்…. யாழினி.. எப்படி இருக்க..?” என்று கேட்டவாறே அவளை கட்டி அணைத்து அவள் கன்னத்தில் பார்வதி முத்தமிட,
“சித்தி… எப்படியிருக்கீங்க..? சித்தப்பா வரலையா..?” என்று கேட்டவளுக்கு, பார்வதி கண்ஜாடையால் திண்ணையில் அமர்ந்திருப்பவரைக் காட்ட, அவரிடம் சென்று அவரின் நலனை விசாரித்தவள், பின் பார்வதியிடம் பேசிக்கொண்டிருக்க,
“யத்தா… வந்துப்பேசிக்காலாம் சீக்கரம் குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிக்கிட்டு வெரசா வா… கோவில்-கு பொங்கல் வைக்க போகணும்” என்று சிவகாமி அவசரப்படுத்த, அவளும் புடவையை வாங்கிக்கொண்டு குளிக்க சென்றாள்.
சொந்த பந்தம் என்று அனைவரும் கூடி பொங்கல் வைத்து, படையல் போட்டு விழா சீரோடும் சிறப்போடும் நடக்க, யாழினிதான் எதிலுமே பிடித்தமில்லாமல் ஒரு ஓரமாகவே நின்றுக் கொண்டிருந்தாள். இதில் தெரிந்தவர், தெரியாதவர் என்று யாரோ யாரோ அவளிடம் வந்து பேசிய வண்ணம் இருக்க அவளுக்கோ எப்போது வீட்டிற்கு செல்வோமென்றிருந்தது.
ஒரு வழியாக பூஜை முடிந்து வீடு வந்து சேரவே மாலையாகியிருந்தது. வீட்டிற்குள் விருந்தினர் அனைவரும் குழுமியிருக்க யாழினியோ தனிமைவிரும்பி தோட்டம் பகுதிக்கு விரைந்தாள். காலாரா சிறிது நேரம் நடந்தவள் பின் அந்த மாமரத்தின் கீழிருந்த கயிற்று கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
அது மாலை மங்கும் நேரம் என்பதால் பறவைகள் எல்லாம் சத்தம் போட்டவாறு பறந்துசென்று தாம் தம் கூட்டுக்குள் அடைந்த வண்ணம் இருந்தது. சுற்றியிருந்த தென்னை மரங்களோ சில்லென்ற காற்றை நாலாபுறமும் வாரி இறைத்துக்கொண்டிருக்க, யாழினியோ கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்த சூரியனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மறைந்துக்கொண்டிருந்த சூரியனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் சிந்தனையை கலைத்தது என்னவோ பக்கத்து வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளின் விளையாட்டுதான்.
ஒரு செங்கலின் நடுமத்தியில் விபூதியால் மூன்று பட்டைகள் போட்டு அந்த கல்லை கடவுள் போல பாவித்து, வாய்க்கு வந்ததை மந்திரமாகவும், நீர் விட்டு கிளறிய மண்ணை பிரசாதமாக படைத்து விளையாடிக்கொண்டிருந்தது அந்த சிறுவர், சிறுமியர் கூட்டம்.
இதே விளையாட்டைத்தானே அன்று அவளும் விளையாடினாள் தென்னரசு மற்றும் தன் சக தோழமைகளுடன்.
அப்போது யாழினிக்கு பத்து வயதிருக்கும். ஈரமணலை கொட்டாங்குச்சியின் முழு கொள்அளவிற்கு அழுத்தி, அந்த கொட்டாங்க்குச்சியை தலைக்கீழாக கவிழ்த்து அதன் மேல் இரண்டு தட்டு தட்டி மெல்ல அந்த கொட்டாங்குச்சியை எடுக்க, அந்த ஈரமண்ணோ மாவிளக்கு வடிவத்தில் அழகாய் இருந்தது. அது போன்று மூன்று செய்து அவர்கள் உருவாக்கியிருந்த அந்த கல்லின் முன் அவள் வைக்க, தென்னரசோ வாய்க்கு வந்ததை மந்திரமாக சொல்லியவாறு, முன்னமே சுக்குநூறாக கிழித்து வைத்திருந்த பேப்பரை பூ-வென்று அந்த கல்லின் போட, மற்றொரு சிறுவனோ நீளமான இரண்டு விளக்குமாறு குச்சியை ஊதுவத்தி போல கோவைப்பழத்தில் குத்திவிட்டு, தட்டில் சிறுக் கல்லை எடுத்து வைத்து அவர்களின் கடவுளுக்கு ஆரத்திக் காட்ட,
“இந்த வருஷம் ஐந்தாவது பாஸ் பண்ணிடனும் கடவுளே“ என்று இமைகளை இறுக்கமாக மூடி வேண்டிக்கொண்டிருந்தாள் யாழினி.
அதேநேரம் “ஏய் யாழினி” என்று கோவமாக சிவகாமி கத்திய கத்தில் மொத்த சிறுவர் கூட்டமுமே சிட்டாக பறந்திருந்தது அவள் ஒருத்தியை தவிர்த்து. பயத்தில் சேற்றுக் கரைப் படிந்திருந்த கரத்தால் பாடவாடையை இறுக பற்றிக்கொண்டவள் விழிகளில் அச்சத்துடன் சிவகாமியையே பார்த்திருக்க,
ஓடி வந்து அவரை அணைத்துக்கொண்டவளோ “ரொம்ப வேர்க்குதம்மா” என்றாள் செல்ல சிணுங்கலுடன்.
தன்னை விட்டு அவளை விலக்கிய சிவகாமியோ, “வேர்க்குதோ இல்லையோ நீ மேச்சட்டைப்போட்டுதான் ஆகணும். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம கட்டிக்கப்போறவன் முன்னாடி இப்படியா இருப்ப..?” என்றவரின் வார்த்தைகளிலிருந்த அர்த்தங்கள் எதுவும் அவளுக்கு புரியவேயில்லை. அவளைப்பொறுத்தவரை மேலாடை அணிந்தால் வியர்த்து கசகசக்கும் அதனால் அது அவளுக்கு தேவையில்லை. அவளின் ஒல்லியான உடல்வாகிற்கு மேலாடை இல்லாமல் இருப்பது ஒன்றும் சிவகாமி சொல்வதுபோல் பெரிய அபத்தமாகலாம் இல்லை. அவளுக்கு வயதுதான் பத்தை எட்டியிருந்ததே தவிர பார்ப்பதற்கு அவள் ஆறு வயது சிறுமி போலத்தான் இருந்தாள்.
“அம்மா.. மாமாவும்தான் மேச்சட்டை போடல” என்றாள் அவள் பதிலுக்கு.
“ச்சு… மாமாவும் நீயும் ஒன்னா..? இனி நீ மேச்சட்டை போட்டுத்தான் வெளியில வரணும்” என்றவர் கண்டிப்பானக் குரலில் சொல்ல,
“அம்மா..” என்று கண்சிமிட்டியவள் மீண்டும் சிவகாமியை கட்டி அணைத்துக்கொள்ள. சிவகாமியால் அதற்கு மேலும் கோவத்தை இழுத்துபிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை.
“போக்கிரி பொண்ணு” என்றவாறு அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவர், “சரி சரி சீக்கரம் போய் குளி” என்க,
அவளோ, “இப்போ எதுக்கம்மா..? நான் இன்னும் கொஞ்சநேரம் விளையாடிட்டு அப்புறமா குளிக்கறேனே“ என்றாள் விழிகளை உருட்டி.
“பார்வதி சித்தி வந்துடுவாளே.. அப்போ நீங்க எங்க கூட கோவிலுக்கு வரலையா..?” என்று அவர் கேள்வியெழுப்ப,
“அம்மா… சித்தி வராங்களா..?” என்றவள் விழிகள் விரித்துக் கேட்க, சிவகாமியோ அவள் நெற்றியில் செல்லமாக முட்டி ஆமாம் என்க, யாழினியோ சந்தோஷத்தில் “ஐ.. ஜாலி..” என்று துள்ளிக்குத்தித்தாள். இங்கு வரும்போதெல்லாம் பார்வதி அவளுக்காக புதுவகை ஆடைகள், வளையல், மணி, உதட்டு சாயம், நெயில் பாலிஷ் என்று வாங்கிவருவதே அவளின் இந்த சந்தோஷத்திற்கு காரணமும் கூட.
“போ போ சித்தி வர்றதுக்குள்ள சீக்கரமா குளிச்சிட்டு.. உள்ள பாவாடை சட்டை எடுத்துவச்சியிருக்கேன் அதப் போட்டுக்கோ. அம்மா மாட்டுக்கு தண்ணிக்காட்டிட்டு வந்துடறேன்” என்று சொல்லையவாறே அவர் தோட்டம் பகுதிக்கு விரைய, அவளோ துள்ளிக்குதித்தவாறு குளிக்கச்சென்றாள்.
பெயருக்கென்று குளித்துமுடித்தவள், மேல்சட்டையை விடுத்து எப்போதும் போல பாவாடையை மட்டுமே அணிந்துக்கொண்டாள். முகத்தில் பவுடரை அப்பிக்கொண்டவள், ஏனோ தானோவென்று தலைவாரி பின்னலிட்டுக்கொண்டு மீண்டும் விளையாட சென்றிருந்தாள்.
சொன்னதுப்போலவே மாட்டிற்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்த சிவகாமியின் கண்களில் அவள் மேல்சட்டைப் பட,
“நான் அவ்வளோ சொல்லியும் சட்டை போடாம போயிருக்காளே… இவள..” என்று கோவத்தில் பற்களை கடித்தவர், கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அவள் விளையாடும் இடத்திற்கு சென்றவர்,
“யாழினி” என்று கோவத்தில் கர்ஜிக்க, யாழினியோ அவர் கைகளில் சிக்காமல் வீட்டிற்கு ஓட்டமெடுத்திருந்தாள்.
சிவகாமியும் விடாமல் அவளை துரத்திக்கொண்டே வீட்டிற்கு வர, வீடு, தோட்டமென்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த யாழினி எதிரில் வந்து நின்ற பார்வதியை கவனிக்கவில்லை.
அவர் மீது மோதி நின்றவள் அவரை அன்னார்ந்துப் பார்த்து, “சித்தி..” என்று அவரைக் கட்டியணைத்துக்கொள்ள,
“யாழினி குட்டி” என்றவர் இருக்கைகளாலும் அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொள்ள, யாழினியின் கடைவிழிப்பார்வையோ பார்வதியை ஒட்டியவாறு நின்றுக்கொண்டிருந்த அந்த புதியவனின் மீதே படிந்திருந்தது.
அழகாக வாரப்பட்ட சிகை, கால்களில் வெள்ளை நிற ஷீ, நீல நிற முழு நீள பேண்ட், வெள்ளை நிற அரைக்கை டீ-ஷர்ட் என்று டிப்டாப்பாக இருந்த அந்த சிறுவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி.
இதுப்போலெல்லாம் யாரும் உடையணிந்து இதற்கு முன்னால் அவள் பார்த்ததில்லை. அவள் பார்த்ததெல்லாம் பரட்டை தலையுடன் வெளிறிய கசங்கிய சட்டையும், கிழிந்த கால் சட்டையும் அணிந்த சிறுவர்களைத்தான்.
வேற்று தேசத்து மனிதர்களை பார்ப்பதுப்போல அவள் அவனையே அதிசயமாக பார்த்திருக்க, அந்த சிறுவனோ ஒற்றைக் கன்னத்தில் குழி விழ அவளைப்பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பு அவளுக்குள் என்ன மாற்றம் செய்ததோ அவனைப் பார்க்கமுடியாமல் சட்டென்று விழிகளை தாழ்த்தி கொண்டவள், பார்வதியின் பின்னால் சென்று தன்னை மறைத்துக்கொண்டாள்.
மூச்சி வாங்க துடைப்பத்துடன் உள்ளே நுழைந்த சிவகாமியைப் பார்த்த பார்வதியோ, “என்ன ஆத்தாளும் மவளும் ஓடிப்புடிச்சி விளையாடிக்கிட்டு இருக்கீங்க போல” என்று கேலிசெய்ய,
கையிலிருந்த துடைப்பத்தை ஒரு ஓரமாக போட்டவர், “சொல்ற பேச்ச எங்கயாவது கேட்குறாளா..? மேச்சட்டைப்போடாம போய் விளையாடுறா.. என்னன்னு நீயே கேளு” என்றவரின் பார்வை அப்போதுதான் அங்கு சிரித்த முகத்துடன் நின்றுக்கொண்டிருந்த அந்த சிறுவனின் மீது படிய, அவரோ பார்வையாலே பார்வதியிடம் யார் என்று வினவினார்.
“பேர் ஆத்விக்.. நம்ம வீட்டுக்கு பக்கத்துலதான் அவங்க வீடு. எப்பவும் நம்ம வீட்லதான் இருப்பான்.. நம்ம ஊர் திருவிழாப் பத்தி சென்னேன். திருவிழாக்கு போயேஆகணும்னு அவங்க பாட்டிக்கிட்ட ஒரே அடம். அதான் என் கூடவே கூட்டிட்டு வந்துட்டேன்-க்கா” என்று பார்வதி சொல்ல, அவனின் அருகில் சென்று அவன் தலையை இதமாக வருடிவிட்ட சிவகாமியோ, “வாயா” என்று அவனை உபசரிக்க, “ஹாய் ஆண்டி” என்றான் பதிலுக்கு ஆத்விக்.
“பாரேன் எவ்வளோ அழகா பேசுறான்னு” என்று சிரித்தப்படி சொன்னவர், இருக்கைகளாலும் அவனுக்கு நெட்டு முறிக்க, ஆத்விக்கிற்கோ இதெல்லாம் புதுமையாக இருந்தது.
அதுவரை அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த யாழினிக்கோ அவன் முன்னால் மேல்சட்டை இல்லாமல் இருப்பது ஒரு மாதிரியாக இருக்க யாரும் அறியாவண்ணம் உள்ளே சென்று மேல் சட்டையை எடுத்து அணிந்துக்கொண்டவள், அந்த மண்ணென்னை விளக்கு வெளிச்சத்தில் கண்ணாடியில் தன் பிம்பத்தைப்பார்த்தாள். ஈரத்தோடு பவுடர் அடித்திருந்ததால் முகத்தில் ஆங்காங்கே பவுடர் பூத்துப்போயிருக்க, தன் பாவாடையால் அதை துடைத்து சரி செய்தவள், சிலிப்பிக் கொண்டிருந்த முடிகளை சீப்பால் சீவி படியவைத்தப்பின்னே அவன் முன் சென்று நின்றாள்.
“அக்கா மாமா எங்க..?” என்று விழிகளில் தேடலுடன் பார்வதி கேட்டபோது, விரக்தியான பெருமூச்சை விட்ட சிவகாமியோ,
“எங்க இருக்கும்.. எதாவது சாராயக் கடையிலதான்” என்றவரின் வார்த்தைகளில் வலிகள் மட்டுமே நிரம்பியிருந்தது.
பின் பார்வதிதான் இருவரையும் அமரவைத்து அவர்கள் இருவருக்காகவும் தான் வாங்கி வந்திருந்தவைகளைக் காட்ட யாழினிக்கோ மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவனால் அவள் அமைதியாகவே இருந்துவிட்டாள்.
அவர் வாங்கிவந்திருந்த ஆடைகளிலே வெள்ளைநிறத்தில் ஆங்காங்கே சிவப்பு நிற சிறிய அளவிலான ரோஜாப்பூ போட்டிருந்த அந்த கவுன்தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அவள் பார்வதியிடம் தெரிவித்தபோது,
“ஆத்விக் நீ எடுக்க சொன்ன கவுன் தான் யாழினிக்கும் பிடிச்சியிருக்காம்” என்று பார்வதி சொல்ல, அதைக்கேட்ட யாழினிக்கோ அப்படி ஒரு சந்தோஷம் உள்ளுக்குள்.
பின் அந்த கவுனைப்போட்டுக்கொண்டே அவள் அவர்களுடன் கோவிலுக்கு கிளம்பிசெல்ல. இருகைகளையும் கூப்பி கண்கள் மூடி ஏதோ வேண்டிக்கொண்டிருந்த ஆத்விக்கின் மீதே அவளின் கடைவிழிப்பார்வை நிலைத்திருந்தது.
தனக்கு அருகில் இருக்கும் அவனை மேலிருந்து கீழாக பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் அவனின் கை,கால் நகங்களின் மீது படிந்தது. கை, கால் விரல்கள் சுத்தமாகவும், நகங்கள் திருத்தபட்டும் அழகாய் இருக்க, குனிந்து தன் கால்களை பார்த்தாள். பொட்டல் மண் கொண்டு பவுடர் அடித்ததுப் போல இருந்தது அவளின் புழுதிப் படிந்த கால்கள். பின் தன் கை நகங்களை பார்த்தாள் அது திருத்தப்படாமல் நீண்டு இருந்ததோடு கருமை நிற அழுக்கு அதிகமாகவே படிந்திருக்க, அவன் பார்த்துவிடாதவாறு நத்தை தன் கூட்டிற்குள் இழுத்துக்கொள்வதுபோல ஒரு சேர கை, கால் விரல்களை சுருக்கிகொண்டவள், வீட்டிற்கு சென்று முதல் வேலையாக நகங்களைத் திருத்தினாள்.
மின்சார வசதிகள் இல்லை என்பதால் வீட்டின் திண்ணையிலே அனைவரும் வரிசையாக படுத்துக்கொள்ள சிவகாமிக்கோ ஆத்விக்கை நினைத்து சங்கடமாக இருந்தது,
“பட்டணத்துலே வளர்ந்த புள்ளைக்கு இதெல்லாம் சுத்தப்பட்டு வருமா பார்வதி…. அவன் தான் ஆசைப்பட்டானா நீயும் கூட்டிட்டு வரணுமா..? பாவம் காத்தாடி இல்லாம இந்த கொசுக்கடி-ல எப்படி அந்தப்புள்ள தூங்கும்” என்று புலம்பியவர், வீட்டின் முன் கூட்டி ஒதுக்கிவைத்திருந்த குப்பையை எறியூட்டி அதில் வேப்ப இலைகளை பறித்துப்போட்டார் கொசுவை விரட்டும் பொருட்டு. ஆனால் ஆத்விக்கோ பயணக் களைப்பிற்கு படுத்த உடனே உறங்கிப் போயிருந்தான்.
அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்திருந்த தென்னரசோ எப்போதும்போல் பார்வதியிடம் யாழினி பற்றி கோல்முட்ட ஆரம்பித்திருந்தான்.
“மக்கு” என்று சொல்லிவிட்டு அவன் சத்தம் போட்டு சிரிக்க, யாழினிக்கோ முதன் முதலாக அவன் மீது கோவம்தான் வந்தது. இத்தனைக்கும் தென்னரசு அவளை எப்போதும் மக்கு என்றுதான் அழைப்பான். அவன் மட்டுமல்ல பள்ளியில் அவளுடன் படிக்கும் சக மாணவ, மாணவியர் முதல் ஆசிரியர்கள் வரை அவளை அனைவரும் அவ்வாறுத்தான் அழைப்பார்கள். அப்போதெல்லாம் யார்மீதும் அவள் கோவம் கொண்டதுமில்லை, அதை அவள் பெரிய அவமானமாகவும் நினைத்ததில்லை.
ஆனால் இன்று ஏனோ அவளால் அவ்வாறு இருக்கமுடியவில்லை.. காரணம் ஆத்விக் என்ற புதியவன் முன்னிலையில் அல்லவா தென்னரசு அவளை மக்கு என்று அழைத்திருக்கின்றான். சொல்லப்போனால் இன்றுதான் அவமானம் என்ற ஒன்றை முதன்முறையாக அவள் உணர்ந்திருந்தாள்.
கலங்கிய விழிகளுடன் அவள் தென்னரசுவையே பார்த்திருக்க, தொன்னரசோ அவளின் புராணங்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்திருந்தான்.