ஒருவார பயணத்தை இன்னும் நான்கு நாட்கள் நீட்டித்து, சிவமித்ரா தாஜ்மஹால் பார்த்ததில்லை என்பதால், கடைசி இரண்டு நாட்கள் டெல்லி, ஆக்ரா என்று சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் தேனிலவு பயணத்தை முடித்துக் கொண்டு இருவரும் விமானத்தில் சென்னை வந்து இறங்கினர். அங்கிருந்து அவர்களின் காரில் ஊருக்கு திரும்ப வேண்டும், அதனால் விமான நிலையத்திலிருந்து கார் பார்க்கிற்கு செல்லும் வழியில்,
சக்திவாசனின் கையோடு கைகோர்த்தப்படி, “சக்தி, நம்ம கல்யாணத்தை பத்தி இங்க என்னோட வேலைப் பார்த்த டீச்சர்ஸிடம் சொல்லியிருந்தேன். எல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க, சென்னை வந்தா கண்டிப்பா எங்களை வந்து பாருன்னு சொன்னாங்க, இப்போ எல்லாம் ஸ்கூலில் தான் இருப்பாங்க, ஊருக்குப் போறதுக்கு முன்ன அங்க போய் அவங்களை பார்த்துட்டு வந்துடுவோமா?” என்று சிவமித்ரா கேட்க,
“நீ சாதாரணமா கேட்டாலே நான் மாட்டேன்னு சொல்ல மாட்டேன். இப்படியெல்லாம் கேட்டா அதை உடனே செய்ய மாட்டேனாடி என் செல்லப் பொண்டாட்டி, கண்டிப்பா நாம அவங்களை போய் பார்த்துட்டு வரலாம்,” என்றான் சக்தி.
மித்ரா, மித்து, டீச்சரம்மா, பொண்டாட்டி என்று எப்போது எப்படி கூப்பிடுவான் என்று தெரியாது. ஆனா இதையெல்லாம் விட அவன் டி போட்டு அழைப்பதை தான் அவள் வெகுவாக ரசிப்பாள். இப்போதும் அவன் அழைத்ததை ரசித்தவள், யாராவது அவர்களை கவனிக்கிறார்களா? என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு, “சோ ஸ்வீட்,” என்று அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட,
“நீ அப்படியே கன்னத்தில் முத்தம் கொடுத்தாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன் பொண்டாட்டி,” என்று கன்னத்தை அவள் அருகில் கொண்டு வந்து காட்டியபடி அவன் கூறவும்,
“அய்யோ இது பொது இடம்,” என்றாள் அவள்,
“இது உனக்கு மட்டுமே சொந்தமான இடம் மித்து,” என்று அவன் கன்னத்தை தொட்டுக் காட்டி தீவிரமாக கூற,
“அய்யோ நாம இருப்பது பொது இடம்னு சொன்னேன்.” என்றாள்.
அதற்குள் அவர்கள் கார் அருகில் வந்துவிட்டிருந்ததால், காரில் ஏறி அமர்ந்து அது கிளம்பியதும், “நாம ஒருவாரம்னு சொல்லிட்டு நம்ம ஹனிமூன் ட்ரிப்பை முடிச்சுட்டு வர பத்து நாளுக்கு மேல ஆகிடுச்சு, நாம இன்னைக்கு வருவோம்னு சொல்லியிருந்தோம், வீட்டில் அத்தை, மாமா, அம்மா எல்லாம் நம்மளை எதிர்பார்த்துட்டு வேற இருப்பாங்கல்ல, நாம கொஞ்சநேரத்திலேயே அவங்களை பார்த்து பேசிட்டு உடனே கிளம்பிடலாம்,” என்று அவள் கூற,
“நம்ம இன்னும் பத்து நாள் கழிச்சு தான் வருவோம்னு சொன்னாலும் அவங்க சந்தோஷம் தான் படுவாங்க மித்து, நாம சந்தோஷமா குடும்பம் நடத்தணும், அதுதான் அவங்களுக்கு வேணும், ஆனா ஒன்னு மித்து, அவங்க மட்டும் இந்த ஹனிமூன் பிளான் பத்தி சொல்லலைன்னா நாம இன்னும் அப்படியே தான் இருந்திருப்போமோ என்னவோ,
எனக்கு உன்னை இப்படி எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போகணும்னு ஆசையா தான் இருந்தது. ஆனா நீ என்ன சொல்லுவியோன்னு ஒருபக்கம் கேட்க தயக்கமா இருந்தது. அப்பா சொன்னதுக்குப் பிறகு உன்னிடம் கேட்டப்போது கூட நீ யோசிப்பன்னு தான் நினைச்சேன். ஆனா நீ உடனே ஒத்துப்பன்னு நினைக்கவேயில்லை.” என்று அவன் வியப்போடு கூறினான்.
“நீங்க என்னிடம் கேட்கும்போதே நான் ஒத்துக்கணுமே என்கிற எதிர்பார்ப்பை கண்ணில் வச்சிக்கிட்டு ஒரு தவிப்போட கேட்டீங்களா? என்னால அதுக்கு மறுப்பு சொல்லவே முடியல,” என்று அவள் பதில் கூறவும்,
“உன்னோட நிலைமை எனக்கு புரியாம இல்லை. கல்யாணம் நடந்துடுச்சேன்னு அந்த வாழ்க்கையை அப்படியே ஏத்துக்க உனக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும், ஆனா எனக்காக பார்த்து சீக்கிரமாகவே உன் மனசை மாத்திக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மித்து,” என்றான் அவன்,
அதைக்கேட்டவளோ, “என் மனசை நான் கட்டாயப்படுத்தி மாத்திக்கல, நீங்க உங்க குணத்தால, நீங்க நடந்துக்கும் முறையால மாத்திட்டீங்க,” என்று அவள் சொல்ல, அதற்கு புன்னகைத்துக் கொண்டவன்,
“நான் வேலை விஷயமா அப்பப்போ சென்னை வந்திருந்தாலும் நிறைய இடம் எனக்கு தெரியாது. உனக்கு நாம போகிற இடத்துக்கு வழி தெரியுமா?” என்று கேட்டான்.
“எனக்குமே இங்க இருந்து போகறதுக்கு தெரியாது. ஸ்கூல் லொகேஷன் கூகுள் மேப்ல போட்டு அதுப்படி போகலாம்,” என்று அவள் சொல்ல, அவனும் அதேபோல வழிப்பார்த்து அவளை அழைத்து சென்றான். போகும்போதே சென்னை வந்ததையும், சிவமித்ரா பணி புரிந்த பள்ளிக்கு செல்வதையும் விவரமாக கூறி, இரவிற்குள் வீட்டிற்கு வந்துவிடுவோம் என்ற தகவல்களையும் வீட்டு பெரியவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டனர்.
பள்ளிக்கு சென்றதும் சிவமித்ராவை பார்த்து அவளுடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். “ரெண்டாவது கல்யாணத்தை பத்தி யோசி மித்ரான்னு சொல்லிட்டே இருப்போம், ஆனா அவ அதைப்பத்தி பெருசா யோசிக்கல, சரி சொந்த ஊருக்கு போறா அங்கேயாச்சும் அவளுக்குள்ள ஒரு நல்ல மாற்றம் வரட்டும்னு நினைச்சோம், ஆனா இப்படி ரெண்டு மாசம் கூட முடியல, கல்யாணமே நடந்திருக்கும்னு நாங்க எதிர்பார்க்கவேயில்லை.”
“உங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு மித்ரா விவரமா சொன்னா, உங்க அப்பா இப்படி ஒரு அதிரடி முடிவு எடுக்கலன்னா இவ லைஃப் எப்படி இருந்திருக்குமோ, இப்போ இவளை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்களையும் உங்க குடும்பத்தையும் கிரேட்னு தான் சொல்லணும்,” என்று ஆளாளுக்கு சக்தியை புகழ்ந்து தள்ளினர்.
அதற்கு அவன் தகுதியானவன் தான் என்று மித்ராவும் அவர்கள் பேசுவதை கேட்டு அமைதியாக இருக்க, அவனுக்கு தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பின் பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
அது மதிய நேரம் என்பதால், “இங்கேயே ஏதாவது சாப்பிட்டு போகலாம் மித்து,” என்று அவன் சொல்லவும், “இங்க ஒரு வெஜ் ரெஸ்ட்டாரன்ட் தெரியும், ரொம்ப நல்லா இருக்கும், ஒருமுறை டீச்சர் ஒருத்தங்க ட்ரீட் வச்சாங்கன்னு அங்க தான் போய் சாப்பிட்டோம், அதில்லாம அங்க பக்கத்து தெருப்பக்கமா தான் நாங்க குடியிருந்தோம், அதனால அங்க அம்மாக்கு அடிக்கடி தேங்காய் போளி வாங்கிட்டு போய் கொடுப்பேன். அவங்களுக்கு அது பிடிக்கும்,” என்று அவனை அந்த உணவகத்துக்கு அழைத்து சென்றாள்.
உணவகம் வாசலிலே இறங்கியதும், “இதோ இந்த பக்கம் போனா நாங்க குடியிருந்த வீடு வரும்,” என்று ஒரு திசையை காட்டி கூற,
“அங்க போய் யாரையாவது பார்க்கணுமா?” என்று அவன் கேட்டான்.
“வேணாம் வேணாம் அங்க அந்த அளவுக்கு யார் கூடவும் அவ்வளவு பழக்கம் இல்லை. ஹவுஸ் ஓனரும் பக்கத்துல இல்லை. அதனால வேண்டாம் என்றும் மறந்து விட்டாள்.
பின் உணவகத்தின் உள்ளே நுழைந்து இருக்கைப் பார்த்து சாப்பிட அமர்ந்ததும், “ஃப்ளைட்ல டிராவல் செய்ததா தெரியல, காலையில் சாப்பிட்டது செரிக்காத மாதிரி ஒரு பீல். அவ்வளவா பசியும் இல்லை. அதனால எனக்கு ஏதாவது லைட் ஃபுட்டா போதும், தயிர் சாதம் சொல்லுங்க,” என்று அவள் சொல்ல,
அவனுக்குமே வண்டி ஓட்டிக் கொண்டு போக வேண்டும் என்பதால் நிறைய சாப்பிட வேண்டாம் என்று தோன்றியதால், ஒரு மினி மீல்ஸ் ஆர்டர் செய்தான். அவர்கள் சொன்ன உணவும் உடனே வரவே சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது சக்தியோ, “ உன்னோட வேலை பார்த்த டீச்சர்ஸ் எல்லாமே ரொம்ப நல்லவங்க மித்து, உன் மேல ரொம்ப அக்கறையா இருக்காங்க, உனக்கு கல்யாணம் நடக்கணும்னு அவங்க ரொம்ப எதிர்பார்த்திருக்காங்கன்னு நல்லாவே புரியுது. உண்மையா அவங்க சந்தோஷப்பட்டு பேசினாங்க, என்ன என்னை தான் கொஞ்சம் புகழ்ந்தது போல எனக்கு தோணுச்சு,” என்றவன்,
அன்னைக்கு மண்டபத்துல என்ன ஒரு கேள்வி கேட்டீயே, நான் வேண்டாம்னு சொல்லியும் ஏன் தாலி கட்டீனீங்கன்னு, அப்போ எனக்கு உண்மையா என்ன தோணுச்சுன்னா உனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா அவசியம். உன் நிலையை வச்சு யாரும் உன்னை எதுவும் பேசிட கூடாதுன்னு நினைச்சேன். அதுமட்டுமில்லாம இந்த வாய்ப்பை விட்டா நீ எனக்கு திரும்ப கிடைக்க மாட்டியோன்னு ஒரு பயமும் எனக்கு வந்துச்சு, அதனால் தான் நீ மறுத்தும் நான் தாலி கட்டிட்டேன்.
ஆனா அப்புறம் யோசிச்சு பார்க்கும்போது நான் சுயநலமா நடந்துக்கிட்டேனோன்னு ஒரு கில்டி ஃபீலிங். ஒருவேளை உன் விருப்பத்துக்கு அன்னைக்கு மதிப்பு கொடுத்து உன் கழுத்துல நான் தாலி கட்டாமல் இருந்திருந்தால் உனக்கு இன்னும் நல்ல வாழ்க்கை கூட கிடைத்திருக்கும் இல்ல, டீச்சர்ஸ் எல்லாம் பேசும் போது எனக்கு அதுதான் தோணுச்சு,” என்ற அவனது பேச்சு சிவமித்ராவிற்கு பிடிக்கவே இல்லை.
ஒருவேளை அன்றே இந்த பதிலை அவன் கூறியிருந்தால், இவன் எவ்வளவு நல்லவன். இவனை போய் நாம் வேண்டாம் என்று மறுத்தோமே அப்படி எல்லாம் அவளுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு இருக்கும், அவனை நல்லவிதமாக நினைத்திருப்பாள். ஏன் அவளும் தான் அவன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் வேறு ஒரு நல்ல பெண் அவனுக்கு மனைவியாக கிடைத்திருக்கலாம் என்று கூட நினைத்திருக்கிறாள்.
அப்படி நினைத்ததெல்லாம் சிம்லா செல்வதற்கு முன்னர். அதில் முதல் நான்கு நாட்கள் எப்படியோ, ஆனால் அடுத்த இந்த ஒரு வாரத்தில் விலகி இருந்த நேரம் குறைவு தான் என்பது போல் இருவரும் வெளியில் ஒட்டிக் கொண்டு திரிந்தவர்கள், உறக்கத்தில் கூட அணைத்தப்படி தான் உறங்கினர். அப்படி இருக்க இப்போது இவன் இப்படி பேசுவது அவளுக்கு கோபத்தை தான் வர வைத்தது. அவன் என்னவன், அப்படியிருக்க எப்படி இப்படி பேசுவான்? என்ற உரிமை கலந்த கோபம் அது. அதனால் அவன் பேசியதற்கு பதில் பேசாமல் அவனை முறைத்து விட்டு அவள் சாப்பிட ஆரம்பிக்க,
அவன் குனிந்து சாப்பிட்டு கொண்டிருந்ததால், அவள் முறைத்தது தெரியாமல், அவள் ஏதாவது அதற்கு பதில் கூறுவாள் என்று அவன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் வேகம் வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவ்வளவாக பசியில்லை என்றவள் இப்போது வேகமாக சாப்பிடுவதை பார்த்தால், ஒருவேளை கோபமோ என்று நினைத்தவன், வாய் வார்த்தையில் “ஏதாச்சும் என்மேல கோபமா மித்து,” என்று அவளிடம் கேட்க,
“கோபமா? அதெல்லாம் இல்லையே, நீங்க பேசியதை கேட்டு அப்படியே சந்தோஷம் பொங்குது,” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் சாப்பிடவும், அவள் கோபமாக தான் இருக்கிறாள் என்பதை அவளது பதில் சொல்லும் விதமே சொல்லியது.
தேனிலவு பயணத்தை முடித்து வந்தபின் இப்படியெல்லாம் பேசுவது சரியில்லை என்பது அவனுக்கு புரிகிறது தான், ஆனால் அவன் நிறத்தை பற்றி அவள் பேசியிருந்தது எப்படி முன்பு மனதை உறுத்திக் கொண்டிருந்ததோ, அதேபோல் இன்னொரு உறுத்தலும் அவனுக்கு இருந்தது. அதை உறுத்தல் என்று கூட சொல்ல முடியாது. சின்னம் மன சுணக்கம் என்று கூட சொல்லலாம்,
அது என்னவென்றால் அவளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது அவள் முதல் திருமண வாழ்க்கை. அசோக்கிடம் கெட்டப் பழக்கங்கள் இருந்திருக்கலாம், ஆனாலும் அவனுடனான மண வாழ்க்கை அவள் மகிழ்ச்சியாக தானே வாழ்ந்திருப்பாள். அது அவ்வளவு விரைவில் முடிவிற்கு வருமென்று அவள் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டாள். இப்போது அதை கடந்தும் வந்திருப்பாள்.
ஆனால் மறு திருமணம் என்பது கிடைத்ததை வைத்து வாழ்க்கையை நல்ல மாதிரியாக வாழ வேண்டும் என்ற மனநிலையை தானே அவளுக்கு கொடுத்திருக்கும், அவளை மிக்க மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டுமென்று அவன் எவ்வளவு செய்தாலும் அதை அவள் மனம் முழுமையாக ஏற்று கொள்ளுமா? இல்லை இவனுக்காக ஏற்றுக் கொள்வாளா? இப்படியெல்லாம் எப்போதாவது நினைத்து பார்ப்பதுண்டு.
அன்று சிம்லாவில் அசோக்கிடம் இருந்த கெட்டப்பழக்கத்தால் அவன் இறந்ததாக பேசும்போது கூட, இவனுக்கு அந்த பழக்கம் வேண்டாம் என்ற அக்கறையில் பேசினாலும், அசோக் இறந்தபோது அவள் எவ்வளவு துடித்திருப்பாள். அவன் இல்லாமல் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பாள் என்றெல்லாம் அவன் மனம் நினைக்க ஆரம்பிக்கவும் தான் அப்போது என்னென்னவோ பேசிவிட்டான். ஆனால் அதிலும் ஒரு நல்லதுபோல் அவர்களுக்குள் இருந்த தயக்கங்கள் சரியாகிவிட்டது.
இருந்தாலும் இதோ இப்போது கூட ஆசிரியர்கள் அனைவரும் இவனை புகழ்ந்த போது, என்னவோ அவளுக்கு வாழ்க்கை கொடுத்த வள்ளல் போல் அவனைப்பற்றி பேசும்போது, அது அப்படியில்லை அவள் என் வாழ்க்கையில் வந்தது எனக்கு கிடைத்த வரமென்று கத்தி சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அவளுக்குமே அப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றிடக் கூடாது. அப்படி ஒரு எண்ணத்தில் இவனோட வாழ அவள் நினைத்திடக் கூடாது. அவளை அவளுக்காக, அவள் மேல் கொண்ட காதலுக்காக அவன் ஏற்றுக் கொண்டதுபோல் அவளும் அவனை அவனுக்காக, அவன் காதலுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தான் அவன் மனம் நினைக்கிறது. அதில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிடுகிறான். ஆனாலும் இனி இப்படி பேசி அவளை வருத்தப்பட வைக்காமல் கவனமாக இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும், “அத்தைக்கு தேங்காய் போளி பிடிக்கும்னு சொன்னீயே, வாங்கிட்டு போகலாமா மித்து,” என்று அவன் கேட்க,
அவன் மீது இன்னும் கோபம் குறையாமல் இருந்தாலும் அதற்கு தலையாட்டிக் கொண்டவள், “அத்தையும், மாமாவும் இதை சாப்பிடுவாங்களா?” என்று கேட்கவும்,
“அம்மா சாப்பிடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அப்பா சுகர் பேஷண்ட் அதனால அவருக்கு காரமா வேற ஏதாச்சும் வாங்கிப்போம்,” என்றான்.
பின் அவர்களுக்கு தேவையானதை வாங்கியவர்கள், அதை பார்சல் செய்யும்வரை, சாப்பிட்டதற்கும் வாங்கியதற்குமான பணத்தை செலுத்த சக்தி போக, பணம் செலுத்துமிடம் வாசல் அருகே இருந்ததால் சிவமித்ராவும் அவன் அருகே நின்றிருந்தவள், அந்த உணவகத்தில் நுழைந்தவரை பார்த்து, ‘இவர் எங்கே இங்க?’ என்று அதிர்ச்சியானாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.