வந்து கொண்டிருந்தவர் அசோக்கின் அன்னை. அங்கு பக்கத்தில் ஒரு மருத்துவமனைக்கு வந்தவர், வீட்டிற்கு போய் சாப்பிட நேரமாகுமென்று அந்த உணவகத்தில் சாப்பிட வந்தவர், அங்கு சிவமித்ராவை நிற்பதை அவரும் கவனித்தார். இருவருக்குமான தூரம் குறைவு என்பதால் அவள் கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிறும் அவள் நெற்றி வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவளுக்கு மணமானதை அவருக்கு உணர்த்தியது.
பணம் செலுத்தியவன் எதிரே வந்த பெண்மணியை மனைவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவள் இந்த பகுதியில் தான் வசித்தாள் என்பதால், “யார் மித்து அது, உனக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேட்டான்.
அவள் திருமணத்திற்கு சென்றிராததால் அவனுக்கு அவரை யாரென்று தெரியவில்லை. அசோக்கை மட்டும் தான் மித்ராவோடு பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம், ‘ரெண்டுப்பேரும் எவ்வளவு பொருத்தமா இருக்காங்க, அவள் சொன்னது சரிதான், அவளுக்கு நான் ஏற்றவன் கிடையாது. அசோக் தான் பொருத்தமானவன்.’ என்று மனதை சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறான்.
கணவன் கேட்டதற்கு, “அவங்க அசோக்கோட அம்மா,” என்று அவள் சொல்லவும், அவர் அருகே வரவும் சரியாக இருந்தது.
அவர் யாரென்பதை தெரிந்து கொண்டவன், “வணக்கம் ம்மா,” என்று அவரிடம் பேச,
சிவமித்ராவும், “எப்படி இருக்கீங்க?” என்று அவரிடம் நலம் விசாரிக்கவும்,
“ஒத்த ஆம்பிளை பிள்ளையை பறிகொடுத்துட்டு எப்படி என்னால நல்லா இருக்க முடியும்,” என்றவர்,
“ஆனா புது தாலி, புது புருஷன்னு நீ நல்லா சந்தோஷமா இருக்கப் போல?” என்று கேட்டார்.
அவரைப்பற்றி அவளுக்கு தெரியுமென்றாலும் அந்த பேச்சு சிவமித்ராவிற்கு ஒருவித அதிர்ச்சியை கொடுக்க, சக்தியும் அவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்காகவன், “என்ன பேசறீங்க நீங்க? உங்க மகன் இறந்தது உங்களுக்கு எவ்வளவு மனவேதனையை தந்திருக்கும்னு எனக்குப் புரியுது. அதுக்காக இவ மறு கல்யாணமே செய்துக்க கூடாதா? எந்த காலத்தில் இருக்கீங்க நீங்க?” என்று அவரிடம் கோபமாக கேட்கவும்,
“என் மகனுக்கு இது சாகற வயசா? அவன் சாவுக்கு காரணம் இவ தானே, என் மகனை நிம்மதியா வாழ விட்டாளா இவ, இங்க போகணும், அங்க போகணும், இது வேணும், அது வேணும்னு அவனை நச்சரிச்சு காரியத்தை சாதிச்சுப்பா, அப்படி கொரானா காலத்தில் எங்க என் மகனை கூட்டிக்கிட்டு சுத்தினாளோ, அவனுக்கு கொரானா வந்து எங்களை ஒரேடியா விட்டுட்டு போயிட்டான். இவளுக்கு இன்னொரு புருஷன் கிடைச்சுட்டான். எங்களுக்கு எங்க மகன் கிடைப்பானா?” என்று அவர்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேச,
அதற்கு சக்தி பதில் பேசுவதற்கு முன் சிவமித்ராவே, “என்ன சொன்னீங்க, உங்க மகன் இறந்ததுக்கு நான் காரணமா? எப்படி உங்களால இப்படி பேச முடியுது? ஆமா எனக்கு வேண்டியதெல்லாம் உங்க மகனிடம் கேட்டேன் தான், அவங்களிடம் தானே நான் அதெல்லாம் கேட்க முடியும், அவங்க நல்ல வேலையில் இருக்காங்க, கை நிறைய சம்பாதிக்கிறாங்க, அவங்களால இதெல்லாம் செய்ய முடியும்னு நினைச்சு தானே கேட்டேன். ஆனா அவங்களால அது முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அவங்களுக்கு அந்த அளவு சம்பாத்யம் இல்லை. எந்த வேலையிலும் நிரந்தரமா இருந்ததில்லை. என்னை கல்யாணம் செய்றதுக்கு கொஞ்ச மாசம் முன்ன தான் அவங்க அந்த வேலையில் சேர்ந்திருக்காங்க, இதெல்லாம் மறைச்சு பொய் சொல்லி என்னை கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்துட்டு எப்படி மனசாட்சி இல்லாம பேசிறீங்க,
அதுமட்டுமா? அவருக்கு இருக்க கெட்டப்பழக்கமும் உங்களுக்கு தெரியும், இருந்தாலும் எவளோ ஒருத்தி வந்து தானே அவஸ்தை படப் போறான்னு தானே இருந்தீங்க, அந்த கெட்டப்பழக்கம் தான் உங்க மகனோட உயிரை எடுத்திருக்குன்னு உண்மை உங்களுக்கு புரியாதா? லாக்டவுன் டைம்ல கூட ஃப்ரண்ட்ஸோட பார்டின்னு இஷ்டத்துக்கு உங்க மகன் ஊர் சுத்தினது உங்களுக்கு தெரியாதா? எல்லாம் உங்களை கேட்டு செய்யும் உங்க மகன் அதை சொல்லாமலா விட்டாங்க, அதுக்கெல்லாம் பணம் செலவாகலையா? இல்லை அவர் சம்பாத்யம் பத்தி தெரிஞ்சும் அடிக்கடி நீங்க அவங்களிடம் பணம் கேட்டு வாங்கலையா?
கொரானா வந்து அவரை பிரைவேட் ஹாஸ்பிட்டல் கொண்டு போனா காப்பாத்திடலாம்னு தான் அவங்களை அங்க கூட்டிட்டுப் போனேன். அப்போ அவங்க பேங்க்ல சேவிங்ஸ்னு சுத்தமா இல்லை. அந்த நிலைமையில் கூட அவங்க ஏமாத்தினது எனக்கு தெரியல, அவங்களை காப்பாத்தணும் என்கிற எண்ணத்தில் என் பேங்க்ல இருந்த பணம், அம்மாவோடந்பென்ஷன் பணம், நகைங்க, பைக்னு எல்லாம் விக்க வேண்டிய சூழல் வந்துச்சு, அப்போ என்ன உதவின்னு நீங்க வந்து செய்தீங்க, உதவியை விடுங்க, மகன் செத்துட்டான்னு இப்போ உருகற நீங்க, அப்போ வந்து பார்த்தா எங்க உங்களுக்கு கொரானா வந்துடப் போகுதுன்னு வந்து ஒருமுறை கூட பார்க்கல நீங்க,
எங்க அம்மாக்கும் உங்க வயசு தானே இருக்கும், ஆனாலும் என்னோட அவங்களும் அந்த கொரானா வார்டுக்கு வெளியே தவம் இருந்தாங்க, அசோக் இறந்ததுக்கு பிறகு கூட வந்து செய்ய வேண்டிய காரியங்கள் முடிஞ்சதும் போனவங்க தானே நீங்க, அப்புறம் நான் என்ன ஆனேன்னு எட்டிப் பார்த்தீங்களா?
அவ்வளவு முயற்சி செய்தும் அசோக்கை காப்பாத்த முடியாம போயிடுச்சு, கையில் சேவிங்ஸ்னு ஒன்னும் இல்லன்னாலும் இருக்க வீடும், அவங்க ஆஃபிஸ்ல ஏதாச்சும் பணம் வரும்னு நினைச்ச போதுதான் நீங்க எங்களை ஏமாத்தின முழு விவரமும் எங்களுக்கு தெரிஞ்சது. அப்பவே உங்களை பொதுவில் வச்சு ஏன் இப்படி செய்தீங்கன்னு கேட்க என்னால முடிஞ்சிருக்கும், அப்பா இறந்துட்டாலும் எங்களுக்கும் ஆளுங்க இருக்காங்க, ஆனா கேட்டு என்னாக போகுது. போன வாழ்க்கை போனது தானேன்னு தான் நாங்க அமைதியா போயிட்டோம், அதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவீங்களா?
உங்க மகன் இறந்ததும் கையில் எந்த சேவிங்ஸும் இல்லாம தனியா ரெண்டு லேடிஸா எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு தெரியுமா? அப்படி கஷ்டப்படணும்னு எங்களுக்கு அவசியமில்லை. என்னத்தான் அப்பா, அம்மா பார்த்து செய்த கல்யாணமா இருந்தாலும் ஒருவிதத்தில் இது நான் தேடிக்கிட்ட வாழ்க்கை. அதான் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்க இங்க இருந்து கஷ்டப்பட்டேன். இதெல்லாம் நினைக்கும்போது சுத்தமா என் மனசு விட்டுப் போச்சு. நீங்களும் உங்க மகனும் கொடுத்த ஏமாற்றம் அசோக் மேல இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் காணாம போச்சு, அதனால எனக்கு மறு கல்யாணம் செய்துக்கவும் எந்த தயக்கமுமில்லை புரிஞ்சுதா?
இருந்தாலும் திரும்ப இன்னொருத்தரை நம்பி கல்யாணம் செய்ய பயமா இருந்ததால தான் மறு கல்யாணத்தை பத்தி யோசிக்காம இருந்தேன். ஆனா இப்போ இவங்க என் வாழ்க்கையில் வந்தது என்னோட அதிர்ஷடம்,” என்று சக்தியின் கையோடு கைகோர்த்தப்படி கூறியவள்,
“சொல்லப்போனா இவங்க தான் என் வாழ்க்கையில் முதலில் வந்தவங்க, என் அப்பா, அம்மா விருப்பப்படி இவங்களை கல்யாணம் செய்திருந்தா அசோக் என் வாழ்க்கையில் வந்திருக்கவே மாட்டாங்க, ஆனா அப்போ அப்பா, அம்மா கட்டாயத்துக்காக இவங்களை கல்யாணம் செய்திருந்தா இவங்க அன்பும் காதலும் எனக்கு புரிஞ்சிருக்காமலே கூட போயிருந்திருக்கலாம், ஆனா இப்போ இவங்க அன்பையும் காதலையும் நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். அதை எனக்கு புரிய வைக்கத்தான் எனக்கு இப்படியெல்லாம் நடந்தது போல,
எப்போ இவங்களோட என் வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ, அப்பவே அசோக்கோட வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கனவா நினைச்சு நான் மறந்துட்டேன். இப்போ என் மனசு முழுக்க இவங்க மட்டும் தான் இருக்காங்க, இதைக்கேட்டு ஒரு அம்மாவா உங்களுக்கு வருத்தமா இருக்கலாம், ஆனா ஒரு பெண்ணா, சகமனுஷியா யோசிச்சு பார்த்தீங்கன்னா இதில் எந்த தப்பும் இல்லைன்னு புரிஞ்சிப்பீங்க, அப்படி புரிஞ்சுக்காம நான் நல்லா இருக்கக் கூடாதுன்னு நீங்க நினைச்சாலும், சாபம் விட்டாலும், உங்க சாபம் பலிக்கும் அளவுக்கு அளவுக்கு நீங்க நல்லவங்க இல்லை. அதனால நாங்க ரொம்ப சந்தோஷமா நல்லாவே வாழுவோம்,” என்றவள், அவரின் பதிலை கூட கேட்கமால்,
அவர்கள் வாங்கிய உணவு தயாராக இருக்கவும், அதை வாங்கிக் கொண்டு, “வாங்க சக்தி,” என்று அவனை அழைத்து செல்ல,
மருமகளை மகளாக பார்க்க வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் அவரது மகனை திருமணம் செய்து வந்தபோது அவளை மருமகளாக கூட பார்த்தாரா என்று தெரியவில்லை. அவள் கேட்டதையெல்லாம் செய்து மகிழ்ச்சியாக வைத்திருந்தாள். அவள் மூலமாக அவள் பெற்றோரிடம் பணத்தை கறக்கலாம் என்ற நினைப்பில் தான் அவரது எண்ணமும் அவரின் மகனது எண்ணமுமாக இருக்க, அந்த என்ணத்தின் பலனாக தன் மகனின் மரணம் வந்தும், மாறாத மனம் அவள் பேச்சிலா மாறப்போகுது. அவள் நினைத்தது போல் அவளுக்கு சாபம் விட்டு தன் மனக்குறையை தீர்த்துக் கொண்டார் அவர்.
இங்கே தன் கைப்பிடித்து அழைத்து சென்ற மனைவியை பார்த்த சக்திவாசனுக்கோ தன் மனைவி இத்தனை கஷ்டப்பட்டாளா? என்று ஒருபுறம் அவளை நினைத்து அவன் மனம் வருத்தப்பட்டாலும் இன்னொருபுறம் அவனுக்கு மனைவி பேசியதை கேட்டு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவள் வாய்மொழி வழியாக அவள் மனம் முழுவதும் அவன் தான் இருக்கிறான் என்ற விஷயத்தை கேட்டு அவன் எப்படி உணர்ந்தான் என்று வாய்விட்டு சொல்ல முடியாது. இந்த தருணத்திற்காக தானே அவன் காத்திருந்தான். அவனை மணந்த பின் அவள் தெளிவாகிவிட்டாள். அவன்தான் இன்னும் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் போட்டு குழம்பிக் கொண்டிருந்தவன் இப்போது அவளின் மனதை முழுவதும் அறிந்துக் கொண்டவன், காரில் ஏறி அமர்ந்ததும் “மித்து,” என்று அவளை அணைத்துக் கொண்டான்.
அவன் இப்படி செய்வான் என எதிர்பார்க்காதவளுக்கு அந்த அணைப்பிற்கான காரணமும் புரியவில்லை. அசோக்கின் அன்னையிடம் படபடவென மனதில் உள்ளதை கொட்டிவிட்டாலும் எல்லாம் உணர்ந்து தான் பேசினாள். ஆனாலும் என்ன பேசினோம் என்பது அவளுக்கு கோர்வையாக ஞாபகத்தில் இல்லை. இதில் அவரிடம் பேசிவிட்டு வந்ததில் இதயம் வேகமாக துடிக்கவும், அவனது அணைப்பு தேவையான ஒன்றாய் இருக்க, அதற்கு அனுமதித்தவள், நேரமாக நேரமாக அவன் அணைப்பு இறுகிக் கொண்டே போகவும்,
“சக்தி, பொது இடத்தில் சென்ன செய்றீங்க நீங்க?” என்று அவனிடம் கேட்க,
“இது பொது இடம் கிடையாது டி, இது எனக்கு மட்டுமே சொந்தமான இடம்,” என்று அவன் சொன்னது அவளை மட்டுமல்ல, அவன் கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த அவளின் இதயத்தில் அவனுக்கு தந்த இடத்தைப்பற்றி, அவனுக்கு மட்டுமே இப்போது சொந்தமான இடத்தைப்பற்றி,
“என்ன சக்தி இது, காமெடி செய்துக்கிட்டு, நம்ம கார்ல இருந்தாலும் நாம மெயின்ரோட்ல இருக்கோம் என்பது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கா இல்லையா?” என்று அவள் கேட்கவும், மனதேயில்லாமல் அவளை அணைப்பிலிருந்து விடுவித்தவனக்கும் அவளும் அவனுக்கு மட்டுமாய் இப்போது தனிமை வேண்டுமென்று விரும்பியவன்,
“மித்து, நாம இன்னும் ஒருவாரம் இங்க சென்னையில் இருந்து நம்ம ஹனிமூனை கன்டினியூ செய்வோமா டி,” என்று கேட்கவும்,
“உதை விழும் உங்களுக்கு, ஏற்கனவே ஒருவாரம்னு சொல்லிட்டு பத்துநாள் இருந்துட்டு வந்திருக்கோம், ஸ்கூல் வேற ரீஓபன் செய்துட்டாங்க, இதில் இன்னும் ஒருவாரமா? அதெல்லாம் முடியாது.” என்றாள்.
“ஹனிமூன்ல முதல் நாலு நாள் வேஸ்ட் செய்துட்டோம் மித்து,” என்று அவன் பாவமாக கூற,
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றாள் பதிலுக்கு,
“அடிப்பாவி இப்படி சொன்னா எப்படி? நீ முதலிலேயே கொஞ்சம் க்ரீன் சிக்னல் காண்பிச்சிருக்கலாம்,” என்று அவன் கூற,
“ஹனிமூன்க்கு வர ஒத்துக்கிட்டதே க்ரீன் சிக்னல் தான், அதை நீங்க புரிஞ்சிக்கலன்னா நான் செய்ய முடியும்?” என்ற அவளின் பதிலைக் கேட்டு, அவன் பாவமாக விழிக்க, அவளுக்கு சிரிப்பு வந்தது.
“இந்த ஹனிமூனோட நம்ம வாழ்க்கை முடியப் போறதில்ல சக்தி. இதுதான் நம்ம வாழ்க்கையின் தொடக்கம். இன்னும் நிறைய காலம் நாம சேர்ந்து தான் இருக்கப் போறோம், சந்தோஷமா வாழப் போறோம், புரியுதா?” என்று அவள் கேட்க,
ஆமாம் இனி அவன் வாழ்நாள் முழுக்க அவளும் அவனுமாக தானே பயணம் செய்யப் போகின்றனர். அது புரிந்தவனாக,
“இதுக்கு மட்டுமாச்சும் அனுமதி கொடு டி,” என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “என் வாழ்க்கையில் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் டி, ஐ லவ் யூ.” என்றவனது மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
வாசம் தேவை..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.