சக்திவாசன் அங்கிருந்து சென்றதும், “ஸ்கூலில் ஏதோ கட்டிட வேலை நடக்குது போலயே மாமா,” என்று கண்ணப்பனிடம் சிவமித்ரா கேட்க,
“ஆமாம் ம்மா, நம்ம ஸ்கூல் கேர்ள்ஸ் டாய்லட் அங்கங்க இடிஞ்சு மோசமா இருக்கு, அதுல போக பிள்ளைங்க ரொம்ப சங்கடப்படுது, கவர்மென்ட்க்கு மனு எழுதி போட்டும் உடனே எந்த நடவடிக்கையும் எடுக்கல, அதான் நாமளே ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பக்கத்தில் டாய்லட் கட்டுவோம்னு நான் யோசனை கூறினேன். ஆனா சக்தி தான் அந்த செலவை அவனே பார்த்துக்கிறதா சொல்லி, அவனே அதுக்கான வேலையை கவனிச்சுக்கிறான். அந்த கட்டிட வேலை சம்பந்தமா அடிக்கடி ஸ்கூலுக்கு வருவான். அதான் அவனே இன்னைக்கு என்னை கூட்டிட்டு வந்தான்.” என்று அவர் விளக்கமாக கூறவும், அவளும் அதை கேட்டு வியப்பானவள்,
“இப்போ சக்தி என்ன செய்றாங்க மாமா?” என்று கேட்டாள். அதன்பின் தான் கேட்டிருக்க கூடாதோ என்று அவள் யோசிக்க,
அதற்குள், “நமக்கு சொந்தமா இருந்த சக்கரை மில்லை என் அப்பாவுக்கு பிறகு அவன் தான் பார்த்துக்கிறான். அதுதான் உனக்கு முன்னமே தெரியுமே, கூட கரும்புல வீணா போகும் இலைகளை வச்சு உரம் தயாரிக்க ஒரு உர தொழிற்சாலை ஆரம்பிச்சு ஒருவருஷமா நடத்திட்டிருக்கான். தொழில்னு வந்தாலே லாபம் நஷ்டம்னு இருக்கத்தான் செய்யும், அதையே நம்பிட்டு இருக்க முடியாதில்லையா? அதனால டவுன்ல ஒரு சினிமா தியேட்டரை விலைக்கு வாங்கி நடத்திட்டு இருக்கான். ரெண்டு பழைய கல்யாண மண்டபம் விலைக்கு வந்தது, அதையும் வாங்கி புதுப்பிச்சி நடத்திடு இருக்கான்.” என்று கண்ணப்பன் சொல்லி கொண்டே போகவும்,
தங்களை விட கண்ணப்பன் வாத்தியார் குடும்பம் கொஞ்சம் வசதியானவர்கள் என்பது தெரியும், கண்ணப்பன் அப்போதே படிப்பு முடித்து ஆசிரியராக பணி புரிந்ததால், அவர்கள் சர்க்கரை ஆலையை சக்தி தான் அதன்பின் எடுத்து நடத்த ஆரம்பித்தான். அதுவும் அவளுக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் சர்க்கரை ஆலையை நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா? என்று அப்போது அதை அலட்சியமாக தான் நினைத்தாள்.
ஆனால் இன்று அவன் உயரத்தை பார்த்து பிரம்மிப்பாக தான் இருந்தது. ஆனாலும் அவனை வேண்டாமென்றும் சொல்லிவிட்டோமே என்றெல்லாம் இப்போதும் அவளுக்கு தோன்றவில்லை. இது முன்போன்று அலட்சியம் என்று சொல்ல முடியாது. இப்போதெல்லாம் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகி கொண்ட அவளது எண்ணம் என்று கூட சொல்லலாம், நேற்று அவனிடம் அப்படி பேசியது கூட இப்படி ஒரு நிலையில் இவர்கள் முன் வந்து நிற்கும்படி ஆகிவிட்டதே என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை தான், ஆனால் உடனே நம் நிலைமைக்கு இவர்களை ஏன் பேச வேண்டும்? என்று அப்போதே தன் தவறை உணர்ந்து கொண்டாள். இதையெல்லாம் மனதில் நினைத்து கொண்டவள்,
“இப்போ உங்க மகன் ஒரு பெரிய தொழிலதிபர்னு சொல்லுங்க,” என்று கண்ணப்பனிடம் சொல்லி சிரித்தாள்.
“ஆமாம் ஆமாம், இப்போ 3வது கல்யாண மண்டபமும் அவனே இடம் வாங்கி கட்டி முடிச்சிட்டான். அதுல தான் அவன் கல்யாணத்தை நடத்தணும்னு தேவிகாவுக்கு ரொம்ப ஆசை. ஆனா அவன் பிடி கொடுக்கவேயில்லை. மகன் கல்யாணம் நடக்காம அங்க எந்த கல்யாணமும் நடக்க கூடாதுன்னு திறப்பு விழா வைக்கவே வேணாம்னு சொல்லி கிட்டத்தட்ட ஆறுமாசமா அந்த கல்யாண மண்டபம் சும்மாவே இருந்தது. அப்புறம் தேவிகாவோட பிடிவாதம் தெரிஞ்சு அப்புறம் தான் சக்தி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். நான் கூட சக்தி கடைசிவரைக்கும் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டானோன்னு ரொம்ப கவலைப்பட்டேன்.” என்று பேசி கொண்டே போனவர்,
‘இந்த பெண்ணிடமே இதையெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறோமே’ என்பதை உணர்ந்து சங்கடத்தோடு சிவமித்ராவை பார்க்க,
“பொண்ணு எந்த ஊர் மாமா, என்ன செய்றாங்க?” என்று அவரின் சங்கடத்தை உணர்ந்து அவள் பேச்சை மாற்றினாள்.
“பொண்ணு ஊரு மரக்காணம், நம்ம தேவிகா சொந்தம் மூலம் வந்த சம்பந்தம் தான், பொண்ணு டிகிரி முடிச்சிருக்கா, ஆனா அவங்க வீட்டில் அந்த பொண்ணை வேலைக்கெல்லாம் அனுப்பல, கல்யாணம் முடிஞ்சதும் சக்தியோட இருந்து தொழிலை பார்த்துக்கிட்டாலும் சரிதான், இல்லை தேவிகாவுக்கு வீட்டில் கூடமாட ஒத்தாசையா இருந்தாலும் சரிதான், அது கல்யாணத்துக்கு பிறகு அவங்க ரெண்டுப்பேரும் முடிவு செய்துக்கட்டும்,” என்று கண்ணப்பன் சொல்லி கொண்டிருக்கும்போது, பள்ளியில் மணியடிக்க,
“சரிம்மா, ஃபர்ஸ்ட் பெல் அடிச்சிட்டாங்க, அடுத்த பெல் அடிச்சதும் அசெம்ப்ளி ஆரம்பிச்சுடும், அங்க வச்சே உன்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திடலாம், அப்புறம் கிளாஸ் எடுக்கறதெல்லாம் அப்புறம் ஏ.ஹெச்.எம்மிடம் கலந்து பேசி முடிவெடுக்கலாம்,” என்றவர்,
அதற்குள் அவருக்கான அறை வரவும், “எங்க உன்னோட வேலைக்கான ஆர்டரை கொடு,” என்று அதை வாங்கி பார்த்து,
“சயின்ஸ் டீச்சர் தான் இங்க தேவைப்படுதுன்னு சொல்லியிருந்தோம், அப்படியே அனுப்பிச்சுருக்காங்க, ரொம்ப நல்லது ம்மா, சரி வா அசெம்ப்ளிக்கு போகலாம்,” என்று அவளை அழைத்து சென்றார்.
பள்ளியில் அன்று பெரிய அளவில் பணிகள் இல்லையென்றாலும், நாளையிலிருந்து அவள் எந்தெந்த வகுப்பிற்கு பாடம் எடுக்க வேண்டும், அவள் எந்த வகுப்பு ஆசிரியை என்பதையெல்லாம் அவளுக்கு அறிவித்திருந்தனர். அதை குறித்து கொண்டவள், மாலை பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானாள். அதற்கு முன் கண்ணப்பனிடம் சொல்லி கொண்டு போகலாம் என்று அவரை சென்று பார்க்க, அவருக்கு வேலை இருப்பதால் அவளை கிளம்பச் சொல்லி அவர் கூறவும், அவளும் தனியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
தூரம் என்று தெரிந்தும் நடந்தே வந்ததில் அவளுக்கு சோர்வாக இருக்க, அங்கு வந்து பார்த்தால், வீடு வேறு பூட்டியிருந்தது. ‘அம்மா எங்க போனாங்க?” என்று நினைத்தவள், ராஜலஷ்மியை அலைபேசியில் தொடர்பு கொள்ள,
அழைப்பை ஏற்றவரோ, “வீட்டுக்கு வந்துட்டீயா மித்து மா, இன்னைக்கு நமக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவங்க சக்திக்கு நலங்கு வைக்கிறாங்களாம், வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போனாங்க, அதான் போகலன்னா நல்லா இருக்காதுன்னு வந்தேன்.” என்று அவர் விஷயத்தை கூறவும்,
“சரி, வீட்டில் சாவியை வச்சிட்டு போறது தானே ம்மா,” என்று கேட்டாள்.
“வைக்கணும்னு நினைச்சு மறந்து வந்துட்டேன். பக்கத்தில் தானே இருக்கு வீடு, வந்து வாங்கிட்டு போயேன்.” என்று அவர் கூறவும்,
‘திரும்ப சக்திவாசனை பார்க்க வேண்டுமா?’ என்று நினைத்தவள்,
“நீ இருக்கியே, எதுக்கு இப்படியெல்லாம் செய்ற?” என்று அன்னையை கடிந்தபடி அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.
அவள் அங்கே போகும்போது நேற்று போலவே சக்தி மனையில் அமர்ந்திருக்க, அவனுக்கு நலங்கு வைத்து கொண்டிருந்தனர். அவள் உள்ளே வந்ததும் அவளை பார்த்தவன், பின் பார்வையை தாழ்த்தி கொண்டான். ஆனாலும் அந்த நொடிப் பார்வையிலேயே அவளின் சோர்வை அறிந்து கொண்டவன்,
‘ஸ்கூலில் இருந்து நடந்தே வந்திருப்பா போல,’ என்று சரியாக யூகித்தான். உடனே அருகிலிருந்தவரிடம் அவளுக்கு குடிக்க ஏதாவது கொடுக்க சொல்லி கூறினான்.
அதை அறியாதவளோ, ‘நேத்து ஏதோ தெரியாம பேசிட்டேன். அதுக்கு ரொம்பத்தான் ஓவரா சீன் போட்றான். நேத்து பார்த்துட்டே இருந்தான். இன்னைக்கு என்னவோ பார்க்க கூடாத ஆளை பார்த்தது போல பார்வையை திருப்பிக்கிறான். எனக்கு மட்டும் இங்க வரணும்னு ஆசையா என்ன?” என்று நினைத்து கொண்டவள், தேவிகாவை பார்க்க,
அவள் வருகையை அவரும் விரும்பவில்லை என்பது அவர் பார்த்த பார்வையிலேயே அவளுக்கு தெரிந்து விடவும், “அம்மா சாவியை கொடு,” என்று ராஜலஷ்மியிடம் அவள் வீட்டு சாவியை கேட்டாள்.
அப்போது யாரோ அவளுக்கு சூடாக காஃபி எடுத்து வந்து கொடுக்க, அவளுக்கு அதன் தேவையிருந்ததால் அதை வாங்கி பருகினாள்.
அதற்காக அவள் அங்கு இருக்க வேண்டியிருக்க, அங்கு இருந்தவர்கள் அவளின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தானே, அதில் ஒரு பெண்மணியோ சிவமித்ராவை பற்றிய விவரம் தெரியாமல், “அக்கா நலங்கு வைக்க ஒன்பது பேருக்கு ஒருத்தர் குறையறதா சொன்னீங்களே, இதோ மித்ரா வந்திருக்காளே, அவளை நலங்கு வைக்கச் சொல்லுங்க,” என்று சொல்ல,
நேற்றே சிலருக்கு விஷயம் தெரிந்துவிடவும், “மித்ரா நலங்கு வைக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா மலர்,” என்று இன்னொரு பெண்மணி கூறினார்.
“ஏன் க்கா,” என்று அப்போதும் அந்த பெண்மணி புரியாமல் கேட்க,
“மித்ராவோட புருஷன் இப்போ உயிரோட இல்லை. அது உனக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவளை வைத்து கொண்டே அவர்கள் பேசி கொண்டனர்.
“அய்யோ அப்படியா? எனக்கு விஷயம் தெரியாதே,” என்று அந்த பெண்மணி வருத்தப்பட, எனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்று அங்கிருக்கும் இன்னும் சிலரும் அதையே கூறியவர்கள்,
“எப்படி ராஜி க்கா நடந்துச்சு, எங்களுக்கெல்லாம் சொல்லவேயில்லை,” என்று ராஜலஷ்மியிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
ராஜலஷ்மிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நடந்த விவரங்களை சொல்லி கொண்டிருக்க, சிவமித்ராவிற்கோ அங்கே நிற்கவும் முடியாமல் அங்கிருந்து செல்லவும் முடியாமல் ஒருவித சங்கடத்துடன் இருந்தாள்.
இதில் அனைத்தையும் கேட்டப்பின், “நீ இங்கல்லாம் வரலாமா மித்ரா, விஷயம் தெரியாம உன்னை நலங்கு வேற வைக்க சொல்லிட்டோம், உனக்கு தேவையில்லாத சங்கடம் வேற,” என்று அந்த பெண்மணி பேச, மனையில் அமர்ந்திருந்த சக்திக்கு பயங்கர கோபம் வந்தது. நலங்கும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென்று அவன் எழுந்திருக்கலாம் என்று நினைத்த நேரம்,
“அதான் தெரிஞ்சுடுச்சே, இப்போதும் அந்த பொண்ணை காயப்படுத்துவது போல பேசுவீங்களா? விஷயம் தெரிஞ்சு அமைதியா போகாம, எதுக்கு இங்க வரேன்னு கேட்கறீங்க? இதுதான் நாகரீகமா?” என்று அப்போது வீட்டிற்கு வந்த கண்ணப்பன் அவர்களை பார்த்து கேட்டவர்,
“சிவா ம்மா, நீ வீட்டுக்கு போ,” என்று அவளிடம் கூறினார்.
சிவமித்ராவும் அன்னையிடம் சாவியை கேட்க, “நானும் வரேன்.” என்று ராஜலஷ்மியும் மகளோடு வீட்டிற்கு சென்றார்.
அவர்கள் போனதும், “ஒரு அஞ்சு பேர் வச்சாலே போதும், சீக்கிரம் நலங்கு வச்சு முடிங்க,” என்று சக்தி சிடுசிடுத்தான்.
வந்தவர்கள் நலங்கு வைத்து முடித்து கிளம்பியதும், “என்ன தேவிகா இது, வந்தவங்களை பேசவிட்டுட்டு நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க,” என்று கண்ணப்பன் மனைவியிடம் கோபப்பட,
“நான் என்னங்க செய்யட்டும்? இப்படி ஒரு சங்கடம் நடக்கும்னு எனக்கு முன்னமே தெரியுமா? அவங்க ராஜலஷ்மியை விசேஷத்துக்கு கூப்பிட்டதே எனக்கு தெரியாது, இதில் மித்ராவும் இங்க வருவான்னு தெரியாது. இதில் நான் என்னமோ வேணும்னே செய்த மாதிரி பேசறீங்க,” என்று பதிலுக்கு தேவிகாவும் கோபப்பட, கண்ணப்பன் அத்துடன் அமைதியாகிவிட்டார்.
ராஜலஷ்மியோ அங்கிருந்து வந்ததிலிருந்து புலம்பியப்படி இருந்தார். “வீடு தேடி வந்து கூப்பிட்டு இப்படித்தான் மனசை கஷ்டப்படுத்தி அனுப்புவாங்களா? என் பொண்ணு நலங்கு வைக்க முடியாதாம், அப்போ நான் மட்டும் நலங்கு வைக்கலாமா? நானும் தானே புருஷனை இழந்தவ, என்னை மட்டும் எதுக்கு கூப்பிட்டாங்களாம், விஷயம் தெரிஞ்சதும் அதை மனசோட வச்சிக்க வேண்டியது தானே, இப்படித்தான் நடந்துப்பாங்களா?
இப்படி ஒன்னு நடக்கும்னு நாங்க எதிர்பார்த்தோமா? அந்த கடவுளுக்கு எங்க மேல என்ன கோபம்னு தெரியலையே, ஜோசியம், ஜாதகம்னு எல்லாம் பார்த்து தானே இந்த கல்யாணத்தை செஞ்சு வச்சோம், இந்த கல்யாணம் முடிஞ்ச ஆறுமாசத்திலேயே என் புருஷன் போய் சேர்ந்தாரு, நானாச்சும் நல்லா வாழ்ந்தவ, ஆனா இவ வாழற வாயசு தானே, இவளுக்கும் ஏன் இப்படி ஒரு நிலைமை. நாங்க யாருக்கு என்ன தீங்கு செய்தோம்னு எங்களை இப்படி ஒரு நிலையில் வச்சிருக்க, நானும் சரி, என் புருஷனும் சரி யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்க நினைச்சதில்லையே, அப்புறம் ஏன் இப்படி? போன ஜென்மத்துல செஞ்சதுக்கு எங்களுக்கு இப்படி ஒரு தண்டனையா? இல்லை இந்த ஜென்மத்தில் செஞ்சதுக்கு இந்த தண்டனையா?” என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே அவர் பாட்டுக்கு பேசியப்படி இருக்க,
கண்ணப்பன் வாத்தியார் வீட்டில் நடந்தது கூட சிவமித்ராவிற்கு வருத்தத்தை தரவில்லை. ஆனால் அவளின் அன்னை புலம்பியது தான் அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது. அதுவும் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் என்று ராஜலஷ்மி புலம்பியதே அவளது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது. ஏனோ அந்த நொடி சக்திவாசனின் முகம் தான் அவள் கண் முன்னே வந்து போனது. அவன் நேசத்தை உதாசீனம் செய்ததால் தான் தனக்கு இப்படியெல்லாம் நடந்ததோ?” என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சிவமித்ரா வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்கள் பள்ளிக்குச் சென்றிருக்க, இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை. இரண்டு நாட்கள் பள்ளிக்கு சென்ற அனுபவம் நன்றாக தான் இருந்தது. அவள் அந்த பள்ளிக்கு புதியவள் என்பது மட்டுமில்லாமல், தலைமை ஆசியருக்கு தெரிந்தவள் என்பதாலும் அனைவரும் அவளிடம் இனிமையாகவே பழகினார்கள். மாணவர்களும் நல்ல மாதிரியாக நடந்து கொண்டார்கள்.
என்ன பள்ளிக்கு நடந்தே சென்றுவிட்டு வருவது அவளுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. உடனே ஒரு வண்டி வாங்க வேண்டுமென்று அவள் மனம் நினைக்க தான் செய்தது. ஆனாலும் கையில் இருக்கும் கொஞ்சம் சேமிப்பையும் செலவு செய்துவிட்டால், ஒரு அவசர தேவைக்கு என்ன செய்வது என்று தான் அவள் யோசித்து அமைதியாக இருந்தாள்.
அப்போது தான் காலை உணவு சாப்பிட்டுவிட்டு அவள் ஓய்வாக வீட்டில் இருக்க, கண்ணப்பன் அவளை அலைபேசியில் அழைத்து உடனே அவளையும் ராஜலஷ்மியையும் அவரது வீட்டிற்கு வரச் சொன்னார். ‘திரும்ப திரும்ப சக்தியையும் அவங்க அம்மாவையும் பார்க்க வேண்டியதா இருக்கே,’ என்று நினைத்து அவள் சலித்து கொண்டாலும், ஏதாவது முக்கிய காரணமாக இருக்குமென்று நினைத்து உடனே அன்னையை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றாள்.
அங்கே சென்றபோது சக்தியும் அங்கு தான் இருந்தான். கண்ணப்பனோ ஒரு துணிப் பையை அவள் கையில் கொடுக்க, அதை பிரித்து பார்த்தால், அதில் ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அவள் புரியாமல் கண்ணப்பனை பார்க்கவும், “பணமா? எதுக்கு ண்ணா இது?” என்று ராஜலஷ்மி வாய்விட்டே கேட்டார்.
“எப்போதும் உங்க வயலில் விளையும் கரும்பை நாங்க தானே எங்க சர்க்கரை ஆலைக்காக குத்தகைக்கு எடுப்போம், அதுக்கு குறிப்பிட்ட வருஷத்துக்குன்னு அக்ரிமென்ட் போடுவோம், அது முடிஞ்சு திரும்ப போடுவோம், கடைசியா ராஜவேலு இருக்கும்போது போட்ட அக்ரிமெண்ட் போனவருஷத்தோட முடிஞ்சு போச்சு, இந்த வருஷம் திரும்ப அக்ரிமென்ட் போட உங்களை தொடர்பு கொள்ள முடியல, அதான் நீங்க இங்க வரும்போது கணக்கு வழக்கு பார்த்துக்கலாம்னு நாங்க அக்ரிமென்ட் ஏதும் போடாமலே உங்க வயல் கரும்பை எடுத்துக்கிட்டோம், அதுக்கான பணத்தை கொடுக்கணுமில்ல,
சக்தி என்ன சொன்னான்னா, அடுத்த வருஷத்துக்கும் சேர்த்து அக்ரிமென்ட் போட்டு அதுக்கான பணத்தையும் சேர்த்து அவங்களிடம் கொடுத்துடுங்கன்னு சொன்னான். அதுக்குப்பிறகு உங்களுக்கு விருப்பம்னா எங்களுக்கே குத்தகைக்கு விடலாம், அது உங்க விருப்பம். இப்போதைக்கு இந்த ரெண்டு வருஷத்துக்கான பணம். இல்ல இந்த வருஷத்துக்கு மட்டும் போதும்னா அதுக்கான பணத்தை கொடுத்திட்றோம்,” என்று கண்ணப்பன் விளக்கமாக கூற,
“எங்களுக்கு குத்தகைக்கான அக்ரிமென்ட் முடிஞ்சது ஞாபகத்தில் கூட இல்லை. நீங்களா சொல்லலன்னா எங்களுக்கா எப்போ இது தோனியிருக்கும்னு கூட தெரியல, இதில் உங்களுக்கு குத்தகைக்கு விடாம அதை வச்சு நாங்க என்ன செய்யப் போறோம்,” என்று ராஜல்ஷ்மி கேட்டார்.
சிவமித்ராவோ, “உங்களுக்கு குத்தகை விட்றதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல மாமா, நீங்க சொன்னமாதிரியே அக்ரிமென்ட் போட்டுக்கலாம், ஆனா இப்போ உடனே இந்த பணம் கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு, உங்க வீட்டில் கல்யாணம் நெருங்கிடுச்சு, அதுக்கான செலவுகளெல்லாம் இருக்குமில்ல,” என்று சொல்ல.
“அதுஅதுக்குன்னு பணமெல்லாம் ஒதுக்கி வச்சாச்சு ம்மா, இது உங்களுக்கு சேர வேண்டிய பணம். உடனே கொடுத்தா உங்களுக்கு உதவியாக இருக்குமில்ல,” என்று கண்ணப்பன் கூறியவர்,
“சரி இந்த அக்ரிமென்ட்டை படிச்சு பார்த்து ரெண்டுப்பேரும் கையெழுத்து போடுங்க,” என்று அவர்களிடம் சக்திவாசன் கொடுத்த பத்திரத்தை நீட்டினார்.
அவர்கள் கையெழுத்து போட்டு முடித்தததும், “சிவா ம்மா, பணத்துக்கு யோசிச்சு தானே வண்டி அப்புறம் வாங்கிக்கலாம்னு நினைச்ச, இப்போ இந்த பணத்தை வச்சு வண்டி வாங்கிக்கோயேன். இல்லை இந்த பணத்துக்கு வேற தேவை இருந்தா, கொஞ்சம் முன் பணம் கட்டி நீ சொன்னமாதிரி இன்சால்ட்மென்ட்ல கூட வண்டி எடுத்துக்கோ,” என்ற கண்ணப்பன்,
“முந்தாநேத்து நீ வண்டியை பத்தி பேசும்போது கூட எனக்கு பணப் பிரச்சனையா இருக்கும்னு தோனல, அதேபோல இந்த குத்தகை விஷயம் சக்தியே பார்த்துக்கிறதால, அதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரல, அப்புறம் சக்தி தான் எனக்கு இதை ஞாபகப்படுத்தினான். நீ பணத்துக்கு தயங்கி தான் வண்டி வாங்க யோசிக்கறதாகவும் சொன்னான். அப்புறம் தான் எனக்குமே அப்படி இருக்குமோன்னு தோனுச்சு, அதுக்காகவே இந்த பணத்தை உடனே கொடுக்கணும்னு நினைச்சோம், சரி வண்டி விஷயமா என்னம்மா முடிவெடுத்திருக்க,” என்று கேட்டார்.
தன் நிலைமையை யோசித்து சக்திவாசன் உடனே இந்த ஏற்பாட்டை செய்ததை நினைத்து சிவமித்ராவிற்கு வியப்பாக இருந்தது. அவளுக்குமே வண்டியின் தேவை இப்போது அவசியமாக இருந்ததால், “நான் ரெடி கேஷ் கொடுத்தே வாங்கிக்கிறேன் மாமா,” என்று அவள் பதில் கூற,
“அப்போ சக்தியோட இப்பவே விழுப்புரம் போய் அவனோட ஃப்ரண்ட் ஏஜென்சியில் வண்டியை எடுத்துடுங்க,” என்று அவர் கூறினார்.
‘இவனோட போகணுமா?’ என்று அவள் யோசித்த நேரம்,
தேவிகாவும் அப்போது அங்கு வந்தவர், கண்ணப்பன் கூறியதை கேட்டு, “என்னங்க இப்போ எதுக்கு இத்தனை அவசரம், நாளை மறுநாள் கல்யாணம். இப்போ சக்தியை அலைய வைக்கணுமா?” என்று கேட்டார்.
மனைவி எதற்காக சொல்கிறாள் என்பது கண்ணப்பனுக்கு புரிந்து தான் இருந்தது. ஆனாலும் தன் மகனையும் அவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். மகன் இந்த கல்யாணத்திற்கு சம்மத்தித்ததால் இறுதிவரை அந்த பெண்ணுக்கு உண்மையானவனாக தான் இருப்பான்.
அதேபோல் ஆண்துணை இல்லாமல் இருக்கும் இந்த பெண்களை தங்களின் சுயநலத்துக்காக எப்படியோ போகட்டும் என்று விடவும் முடியாது. அதை மனதில் கொண்டு,
“இப்போ சக்தி இதுக்குன்னு போல, வேற ஒரு வேலையா அவன் விழுப்புரத்துக்கு போக இருக்கான். சிவாக்கும் இன்னைக்கு ஸ்கூல் லீவ், இப்பவே போய் வண்டி எடுத்தா, அந்த பொண்ணுக்கு ஈஸியா இருக்கும், அதுக்குன்னு தனியா போகவும் தேவையில்லை. அதனால இன்னைக்கே போகட்டும்,” என்று மனைவியிடம் உறுதியாக கூறியவர்,
“சக்தி உனக்கு இதில் ஏதாவது பிரச்சனையா?” என்று மகனிடம் கேட்க,
“அதான் நான் விழுப்புரத்துக்கு போக வேண்டியிருக்கே ப்பா, அப்புறம் எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது?” என்று அவன் பதில் கூறினான்.
தந்தையும் மகனும் முடிவெடுக்கவே அதன்பின் தேவிகா எதுவும் கூறவில்லை. சிவமித்ராவும் தான், அவளுமே எதுவும் மறுப்பு கூறாமல் சக்திவாசனோடு சென்றாள்.