விழுப்புரத்தில் இருச்சக்கர வாகனம் விற்பனையகத்தில் சக்திவாசனோடு நின்றிருந்தாள் சிவமித்ரா. அவளை காரில் தான் அழைத்து சென்றிருந்தான். அந்த பயணம் முழுவதுமே அவளோடு அவன் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி நடந்து கொள்வது ஒருபக்கம் அவளுக்கு கோபத்தை வரவழைத்தாலும், அவனுக்கு நாளை மறுநாள் திருமணம். அவனது மனைவியாக வரப்போகும் பெண்ணுக்கு எல்லாம் தெரியுமோ என்னவோ? அதனால் இதற்குப்பிறகு முடிந்தவரை இவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே அனைவருக்கும் நல்லது. அதனால் இவன் பேசவில்லையென்றாலும் பரவாயில்லை என்று நினைத்து கொண்டாள்.
அவனது வேலையை முதலில் முடித்து கொண்டவன், பின்னர் தான் அவளை விற்பனையகத்திற்கு அழைத்து சென்றான். அவனது நண்பனின் விற்பனையகம் என்பதால், அந்த நண்பனுக்கும் அவனுக்கும் நலம் விசாரிப்பு முடிந்ததும். “நான் போன்ல சொன்னேன் இல்ல, இவங்களுக்கு தான் வண்டி வாங்க வந்திருக்கோம்,” என்று அவளை குறிப்பிட்டு கூறிய சக்திவாசன்,
“உனக்கே தெரியும், எங்க ஊரில் எல்லாம் மண் ரோடு தான், அதுல ஓட்டிட்டு போறதுக்கு ஏத்தது போல வண்டியா சொல்லு,” என்று நண்பனிடம் கூற, அந்த நண்பனும் அங்கிருந்த மாடல்களை காட்டி அதன் சிறப்புகளை எடுத்து கூறியவன், கடைசியா மூன்று மாடல்களை காட்டி இது சரியாக வரும் என்று யோசனை கூறவும், கடைசியாக சிவமித்ராவை முடிவெடுக்க சொல்லி இருவரும் கூறினார்கள்.
அவளும் அந்த மூன்றில் ஒன்றை காட்டி அதையே வாங்கி கொள்வதாக கூறியவள், அதில் அவளுக்கு பிடித்த நிறத்தை தேர்ந்தெடுத்தாள். அவர்கள் இருவரும் காரில் வந்ததால், அந்த நண்பனே அவர்கள் வீட்டில் வண்டியை கொண்டு வந்து விடுவதாக கூறவும், பின் வண்டிக்கான பணத்தை செலுத்திவிட்டு இருவரும் விற்பனையகத்திலிருந்து வெளியே வரும்போது சக்திவாசனின் அலைபேசி இசைத்தது.
அவன் அதை ஏற்று பேச ஆரம்பிக்க, அதுவரை அவள் காத்திருந்தாள். மறுமுனையில் யார் என்ன பேசினார்களென்று தெரியவில்லை. “என்ன? எப்படி? எங்கே? என்னவாம்?” என்று ஒவ்வொரு கேள்வியும் அதிர்ச்சியோடு கேட்டு கொண்டிருந்தவன், கடைசியாக அங்கு என்ன பேசினார்களோ தெரியவில்லை. கையிலிருந்த அலைபேசியை நழுவ விட்டான். அவனும் கொஞ்சம் தடுமாற, அருகில் நின்றிருந்த சிவமித்ரா அதை கவனித்தவள், “சக்தி என்னாச்சு?” என்று அவனை தாங்கிப்பிடித்தாள்.
சக்தியும் உடனே சுதாரித்து கொண்டவன், “ஒன்னுமில்ல,” என்று அவளது பிடியிலிருந்து விடுவித்து கொண்டான். கீழே விழுந்த அலைபேசியை குனிந்து எடுத்தவன், “பஸ்ஸோ, இல்லை ஒரு ஆட்டோவோ பிடிச்சு நீ வீட்டுக்கு போ, எனக்கு வேற ஒரு இடத்துக்கு போகணும்,” என்றவனின் குரலே ஏதோ பிரச்சனை இருப்பதாக சிவமித்ராவிற்கு தோன்றியது.
“என்னாச்சு சக்தி, யாரு போன் பேசினா? யாருக்கு என்ன பிரச்சனை? ஏதோ பதட்டமா தெரியறீங்க?” என்று அவள் கேட்க,
“உன்னை வீட்டுக்கு போன்னு சொன்னேன். முதலில் கிளம்பு,” என்று அவளிடம் கோபப்பட்டான்.
இனி எப்படி கேட்டாலும் சொல்ல மாட்டான் என்பது புரிந்து அங்கிருந்து வந்துவிட்டாள். ஆனால் அவன் கோபப்பட்டு பேசிய போது அவனது கண்களில் கண்ட வலி ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது. ‘என்ன பிரச்சனையாக இருக்கும்? தொழிலில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமா? ஆனால் அதற்கு சக்தி இத்தனை கலங்குவானா? அப்படி இருக்குமென்று தோன்றவில்லை. அப்படியானால் வேறு ஏதாவது பிரச்சனையா? யாருக்காவது ஏதாவதா? ஒருவேளை அவனது அப்பா, அம்மாவிற்கு ஏதாவதா? அங்கிருந்து கிளம்பும்போது அவர்கள் நன்றாக தானே இருந்தார்கள்,” என்று விபரீதமாக சிந்தித்தவள்,
அவர்கள் ஊருக்கு போகும் பேருந்தில் ஏறி அமர்ந்தபின், அவளது அன்னையை அலைபேசியில் அழைத்தவள், “அம்மா, அங்க எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு?” என்று கேட்டாள்.
ராஜலஷ்மியோ ஒன்றும் புரியாமல், “நல்லா போயிட்டிருக்கா? என்ன கேட்கிற நீ?” என்று பதில் கேள்வி கேட்க,
பிரச்சனை என்ன என்பது தெரியாமல், நேரடியாக எதுவும் கேட்க முடியாது என்பதால், “பக்கத்தில் யாருக்காச்சும் ஏதாவது பிரச்சனையா ம்மா?” என்று கேட்டாள்.
“அப்படி ஏதுமில்லையே. எதுக்கு இப்படி கேட்கிற? ஏன் யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? நீ வண்டி வாங்க தானே போன, வாங்கினியா? இல்லையா?, அதைப்பத்தி சொல்லாம, வேற ஏதோ பேசிட்டு இருக்க,” என்று ராஜலஷ்மி மகள் என்ன கேட்கிறாள் என்பது புரியாமல் பேசவும்,
“ஒன்னுமில்ல ம்மா, நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்.” என்று அலைபேசியை வைத்தவளுக்கு, பயணம் முழுதும் சக்திக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்? என்ற கேள்வியே மனதில் ஓடி கொண்டிருந்தது.
விழுப்புரத்திலிருந்து அவள் ஊருக்கு வர 45 நிமிடம் ஆக, அவள் வீட்டிற்கும் வந்ததும், ராஜலஷ்மியோ பதட்டமாக அவளிடம் வந்தவர், “மித்து உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம சக்தி கல்யாணம் செய்துக்க இருந்த பொண்ணு தற்கொலைக்கு முயற்சி செய்து இப்போ சீரியஸா ஹாஸ்பிட்டலில் இருக்காளாம், கையை வெட்டிக்கிட்டு ரத்தம் நிறைய போயிடுச்சாம், ரொம்ப லேட்டா தான் பார்த்தாங்களாம், வீட்டிலேயே பேச்சு மூச்சில்லாம இருந்தாளாம், விஷயம் கேள்விப்பட்டு கண்ணப்பன் அண்ணன் கிளம்பி போயிருக்காரு, தேவிகா அண்ணி அழுது புலம்பிட்டு இருக்காங்க, இப்போ அவங்க எதிர் வீட்டு செல்வி சொல்லி தான் எனக்கு விஷயமே தெரியும்,” என்று விஷயத்தை கூறிவிட்டு,
“இது உனக்கு முன்னமே தெரியுமா மித்து, அதான் போனில் அப்படி கேட்டீயா?” என்று கேட்டார்.
“நாளை மறுநாள் கல்யாணம். கட்டிக்கிற பொண்ணு தற்கொலைக்கு முயற்சி செய்தா என்கிற விஷயத்தை கேட்டா சக்திக்கு எப்படி இருக்கும்? ஏன் இந்த பொண்ணு இப்படி செஞ்சான்னு தெரியலையே, ஒருவேளை இந்த கல்யாணம் அவளுக்கு பிடிக்கலையா? இல்லை வேற காதல் ஏதாச்சும் இருக்குமா? எதுவா இருந்தாலும் சக்தி மனசு எவ்வளவு கஷ்டப்படும், எதுவா இருந்தாலும் அந்த பொண்ணு முன்னமே சொல்லி தொலைச்சிருக்க வேண்டியது தானே, சக்திக்கு மட்டும் ஏன் திரும்ப திரும்ப இப்படி நடக்குது? என்று ராஜலஷ்மி பேசி கொண்டே போக,
“ஒருவேளை அன்னை சொல்வது தான் உண்மையான காரணமாக இருக்குமா? என்று நினைத்த சிவமித்ரா அப்படியே அங்கிருந்த நாற்காலியில் தளர்வாக அமர்ந்தாள்.
இதுமட்டும் உண்மையாக இருக்குமானால் சக்தியின் நிலையை அவளால் யோசித்து பார்க்க முடியவில்லை. ஏற்கனவே தான் ஒருத்தி அப்படி ஒரு வலியை அவனுக்கு கொடுத்தது போதாதா? மீண்டும் அதே நிலையா? அதுவும் இத்தனை கொடுமையாகவா?
இந்த திருமணம் குறித்து அவனது பெற்றோர்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவனை கஷ்டப்பட்டு இந்த திருமணத்திற்கு ஒத்து கொள்ள வைத்ததாக கண்ணப்பன் மாமா கூறினாரே, இப்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அவர்கள் நொறுங்கி போயிருப்பார்களே,” என்று நினைக்கும்போதே, ஏற்கனவே ஒருவித குற்ற உணர்வில் இருந்தவளுக்கு, அது அவ்வளவு வருத்தத்தை கொடுத்தது.
காலையில் கண்ணப்பன் அழைப்பதற்கு முன்பு தான் சக்திவாசனின் திருமணத்திற்கு செல்வதை குறித்து அன்னையோடு பேசி கொண்டிருந்தது அப்போது அவளது நினைவிற்கு வந்தது. இவர்கள் வந்த மறுநாள் இரவே கண்ணப்பனும் தேவிகாவும் இவர்கள் வீட்டிற்கு வந்து முறைப்படி பத்திரிக்கை வைத்து இவர்களை திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.
அதுகுறித்து ராஜலஷ்மியோ, “சக்திக்கு என்ன செய்றது? உன் கல்யாணத்துக்கு அவங்க நகை சீரா செய்தாங்க, ஆனா அப்படி செய்யும் அளவுக்கு இப்போ நம்ம நிலைமை இல்லையே மித்து,” என்று கூற,
“அவங்க நகை செய்த அளவுக்கெல்லாம் நம்மால இப்போ முடியாது ம்மா, முடிஞ்ச அளவுக்கு பணமா செய்திடுவோம், அப்புறம் நீ மட்டும் கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடு, நான் வரல,” என்றாள் சிவமித்ரா.
“நீ வராம போனா நல்லா இருக்காது மித்து, நடந்தை மறந்து கண்ணப்பன் அண்ணன் நமக்கு எவ்வளவு ஒத்தாசையா இருக்காரு, இப்போ நீ வேலை செய்யும் ஸ்கூலுக்கு அவர் தான் ஹெச்.எம் வேற, அந்த முறைக்காகவாவது நீ கல்யாணத்துக்கு வர வேண்டாமா?” என்று ராஜலஷ்மி கூறவும்,
அவளுக்குமே அன்னை சொல்வது சரியென்று பட, “சரிம்மா, கல்யாணத்துக்கு வர முடியாது. நாளைக்கு ரிஸப்ஷன்க்கு வேணும்னா வரேன்.” என்று சொல்லி கொண்டிருந்தாள். ஆனால் இப்போதைய நிலைமை சக்தியின் திருமணம் நடைபெறுமா என்பதே தெரியாமல் இருக்கிறதே,
இதெல்லாம் யோசித்தப்படி எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ, ராஜ்லஷ்மி மீண்டும் அவள் அருகில் வந்தவர், “மித்து, நான் நினைச்ச மாதிரி தான் நடந்திருக்கு, அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லையாம், சக்தி கருப்பா இருக்கறதால வேண்டாம்னு வீட்டில் சொல்லியிருக்கா, ஆனா வசதி வாய்ப்பு நிறைய இருக்கு, இந்த சம்பந்தத்தை விட்டுடக் கூடாதுன்னு அவங்க வீட்டில் அந்த பொண்ணை கட்டாயப்படுத்தியிருக்காங்க, நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா செத்துடுவோம்னு மிரட்டியிருக்காங்க,
அதான் இத்தனைநாளா அந்த பொண்ணு அமைதியா இருந்திருக்கு, கடைசி நிமிஷத்தில் நீங்க என்ன மிரட்டனீங்கல்ல, நான் இப்போ என்ன செய்றேன் பாருன்னு தற்கொலை வரைக்கும் போயிருக்கு, நம்ம சக்திக்கு என்ன குறைச்சல், அவனை கல்யாணம் செய்துக்கிறது சாவறதே மேலுன்னு அந்த பொண்ணு முடிவெடுத்திருக்காளே, இவளுக்கெல்லாம் அப்புறம் நல்ல வாழ்க்கை அமையுமான்னு பாரு,” என்று மகளை வைத்து கொண்டே இப்படி பேசுகிறோமே என்று உணராமல் அவர்பாட்டுக்கு புலம்ப, அன்னை பேசியதெல்லாம் அவளுக்கு சொன்னது போலவே சிவமித்ராவிற்கு தோன்றியது.
“சரி ஹாஸ்பிட்டலில் இருந்து கண்ணப்பன் அண்ணன் வந்துட்டாரான்னு தெரியல, அந்த பொண்ணுக்கு என்னன்னும் தெரியல, சக்தியும் விழுப்புரத்திலிருந்து நேரா ஹாஸ்பிட்டல்க்கு போனதா தான் சொன்னாங்க, அதனால ஒரு எட்டு அங்க போய் பார்த்துட்டு வரேன்.” என்று ராஜலஷ்மி கூற, சிவமித்ராவிற்கும் நிலவரம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றதால், அவளும் ராஜலஷ்மியோடு உடன் சென்றாள்.
இருவரும் அங்கு சென்றபோது அப்போது தான் கண்ணப்பனும் சக்தியும் வீட்டிற்கு வந்திருந்தனர். அதில்லாமல் உறவினர்கள் மூலமாக வந்த சம்பந்தம் என்பதால், விஷயம் கேள்விப்பட்டு அவர்களும் வந்திருந்தனர். வீட்டின் வெளியே முற்றத்தில் தேவிகா அழுதபடி அமர்ந்திருக்க, கண்ணப்பன் மனைவிக்கு ஆறுதலாக நின்றிருந்தார். சுற்றிலும் உறவினர்கள் கூட்டம். சக்திவாசன் அவர்களிடமிருந்து ஒதுங்கி தனியே நின்றிருந்தான். அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று சொல்ல முடியாமல் அவன் முகம் அத்தனை இறுக்கத்துடன் இருந்தது.
இவர்கள் நேராக கண்ணப்பனிடம் சென்றதும், “அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கா ண்ணா,” என்று ராஜலஷ்மி அவரிடம் கேட்க,
“உயிருக்கு ஆபத்தில்லைன்னு சொல்லிட்டாங்க ம்மா,” என்று அவர் பதில் கூறினார்.
“அவங்களை சும்மாவா விட்டுட்டு வந்தீங்க மாமா, இப்படி செஞ்சு இருக்காங்க, பஞ்சாயத்தை கூட்டணும் மாமா, இப்படி நடந்ததுக்கு அவங்க நமக்கு பதில் சொல்லியே ஆகணும்,” என்று அந்த கூட்டத்தில் ஒருவர் ஆவேசமாக பேச,
“பஞ்சாயத்தை கூட்டி இப்போ என்ன செய்ய சொல்லுற, என் மகனை பிடிக்கலன்னு தற்கொலை வரைக்கும் போன பொண்ணை திரும்ப பேசி கல்யாணம் செஞ்சு வைக்கவா முடியும்?” என்று கண்ணப்பன் கேட்டார்.
“அதுக்குன்னு அப்படியே விட்றதா, நம்ம சக்திக்கு என்ன குறை மச்சான், அவன் ஒரு கருப்பு வைரம், மண்ணுக்குள்ள இருக்க வரைக்கும் அந்த வைரத்தோட மதிப்பு தெரியாதுன்னு சொல்வாங்க, அதுபோல நம்ம சக்தியோட தங்கமான மனசு அந்த பொண்ணுக்கு தெரியல போல, இப்போ எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சு கல்யாணத்துக்கும் அழைச்சிருக்கோம், அத்தனை பேருக்கும் நாம தானே பதில் சொல்லணும்,” என்று ஒருவர் கேட்க,
“அப்படின்னா அவங்களும் அவங்க சொந்த பந்தத்துக்கு பதில் சொல்லித்தானே ஆகணும்,” என்றார் கண்ணப்பன்.
திடீரென ஒருவர் சிவமித்ராவை பார்த்து, “இந்த பொண்ணு எந்தநேரம் நம்ம சக்தியை வேணாம்னு சொல்லுச்சு தெரியல, நம்ம சக்திக்கு அதுல இருந்து நல்லதே நடக்கல,” என்று குறை கூற,
அவளோ இங்கே வந்திருக்க கூடாதோ? என்பது போல் அனைவரையும் கலக்கமாய் பார்த்தாள். “எதுக்கு இப்போ பழசையெல்லாம் பேசிக்கிட்டு,” என்று கண்ணப்பன் அந்த நபரை கண்டிக்க,
“பேசாம எப்படி? நிச்சயம் வரைக்கும் வந்து இந்த பொண்ணால ஒருமுறை சக்தி கல்யாணப் பேச்சு நின்னுது. இப்போ ஊரை கூட்டி அழைச்சு கல்யாணம் வரை வந்து நின்னு போயிடுச்சு, ஒன்னுக்கு ரெண்டுமுறை கல்யாணம் தட்டிப் போனா நம்ம சக்திக்கு திரும்ப கல்யாணம் கூடி வருமான்னு தெரியலையே,” என்று வயதான பெண்மணி ஒருவர் கூறினார்.
“அதுமட்டுமா, நம்ம சக்திக்கு அந்த கல்யாண மண்டபத்தில் தான் முதலில் கல்யாணம் நடக்கணும்னு நம்ம தேவிகா எவ்வளவு ஆசையா இருந்தா, இப்போ சக்தி கல்யாணம் நின்னு போனதால, நம்ம சக்தியை போல அந்த கல்யாண மண்டபமும் இனி ராசியில்லாத மண்டபமா ஆகிடும்ல, யாரு திரும்ப அந்த மண்டபத்தில் கல்யாணம் செய்ய நினைப்பா?” என்று இன்னொரு பெண்மணி கேட்க,
‘இவர்களெல்லாம் நடந்த நிகழ்விற்கு ஆறுதல் கூற வந்திருக்கிறார்களா? இல்லை மேலும் வருத்தத்தை அதிகப்படுத்த வந்திருக்காங்களா?’ என்று சிவமித்ரா இப்போது அனைவரையும் புரியாமல் பார்த்தாள்
தேவிகாவோ, அவர்கள் பேசியதை கேட்டு, “என் மகனுக்கு குறிச்ச முகூர்த்தத்தில் அதே மண்டபத்தில் கல்யாணம் நடக்கும்,” என்றார் ஆவேசமாக,
“என்ன புரியாம பேசிட்டு இருக்க தேவிகா, நாளை மறுநாள் கல்யாணம். இன்னைக்கு கல்யாணப் பொண்ணு இந்த கல்யாணம் பிடிக்கலன்னு தற்கொலை செய்ய போயிடுச்சு, ஆனா குறிச்ச முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கும்னா எப்படி நடக்கும்?” என்று ஒருவர் கேட்கவும்,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. குறிச்ச முகூர்த்தத்தில் என் மகன் கல்யாணம் நடக்கும், நடக்கணும், அப்படி நடக்கலன்னா அதுப்பிறகு நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.” என்றார் தேவிகா. அதில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியாக, அப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நின்றிருந்தான் சக்திவாசன்.
“என்ன தேவிகா இப்படியெல்லாம் பேசற?” என்று கண்ணப்பன் மனைவியை கண்டிக்க,
“நான் ஒன்னும் சும்மா பேசறதா நினைச்சுக்காதீங்க, நீங்க என்ன செய்வீங்களோ, எப்படி தேடுவீங்களோ தெரியாது. குறிச்ச முகூர்த்தத்தில் என் மகன் கல்யாணம் நடக்கணும், இல்லை அன்னைக்கு என் பிணத்துக்கு மாலை போட்டு இதே இடத்தில் எல்லாம் கூடி ஒப்பாரி வைங்க,” என்று உறுதியாக கூறினார் தேவிகா.
“என்ன தேவிகா நீ, என்னம்மா நீ, அய்யோ என்ன இவ இப்படி பேசுறா,” என்று அவரவர் தேவிகாவின் பேச்சில் அதிர்ச்சியாகி பேச,
“சரி, நீ சொன்னது போல குறிச்ச அதே முகூர்த்தத்தில் நம்ம மகன் கல்யாணம் நடக்கும் போதுமா?” என்றார் கண்ணப்பன்.
அவர் இப்படி ஒரு பதில் கூறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. “என்ன ண்ணே, அண்ணி தான் புரியாம பேசறாங்க ண்ணா, நீங்க அவங்களை சமாதானம் செய்யாம, இப்படி பேசறீங்க, அதெப்படி அதே முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கும்?” என்று ஒரு உறவினர் கேட்க,
“ஏன் நடக்காது? நான் சொன்னமாதிரி குறிச்ச முகூர்த்தத்தில் என் மகன் கல்யாணம் நடக்கும்,” என்ற கண்ணப்பனின் உறுதியான பேச்சை கேட்டு, சுற்றியிருந்தவர்கள் இப்போது வியப்பாகினர்.
ஆனால் சிவமித்ராவோ, “எப்படி இந்த கல்யாணம் நடக்கும்?” என்ற கேள்வியோடு அவரை பார்க்க,
‘தந்தை எந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார்?’ என்று தன்னிலையில் இருந்து மாறி சக்திவாசன் தந்தையை அதிர்ச்சியாக பார்த்தான்.
கணவரின் பேச்சை கேட்ட தேவிகாவோ, “என்னங்க, என்னை சமாதானம் செய்ய நீங்க இப்படி சொல்லல தானே,” என்று சந்தேகத்துடன் கேட்க,
“நான் சொன்னதை என்னைக்காவது செய்யாம விட்ருக்கேனா தேவிகா,” என்று கண்ணப்பன் கேட்டார்.
“அப்போ ஏதாச்சும் பொண்ணை முடிவு செய்து வச்சிருக்கீங்களா மாமா, யாரு அந்த பொண்ணு,” என்று ஒருவர் கேட்க,
பின் அவர்கள் சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் முருகனை கூப்பிட்டவர், “இங்கேயே நம்ம முக்கியமான சொந்தங்களெல்லாம் இருக்காங்க, இதில்லாம இந்த ஊர்க்காரங்க, தூரத்து சொந்தம் எல்லோரிடமும் இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டு வா, ஆனா நாளைக்கு எந்த விசேஷமும் இல்லை. முகூர்த்தம் அன்னைக்கு எல்லோரையும் நம்ம மண்டபத்துக்கு வரச் சொல்லிடு,” என்று அவனுக்கு உத்தரவை பிறப்பித்தார்.
“மருது,” என்று அவரின் உறவுக்காரன் ஒருவனை அழைத்தவர், “முருகனுக்கு நம்ம தூரத்து சொந்தக்காரங்க நம்பரெல்லாம் கொடு,” என்று அவனுக்கும் உத்தரவை பிறப்பித்தார்.
என்ன முடிவில் இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று பார்த்து கொண்டிருந்த சக்திவாசன், “அப்பா, ஏற்கனவே ரெண்டுமுறை நான் பட்டது போதாதா? திரும்பவும் விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரியாத ஒரு பொண்ணை என் தலையில் கட்ட நினைக்கறீங்களா? அம்மா அழுதா அவங்களுக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு என்னப்பா இதெல்லாம்? இத்தோட இதை விட்டுடுங்க, எனக்கு இந்த ஜென்மத்துக்கு கல்யாணமே வேண்டாம்,” என்று கோபப்பட்டான்.
ஆனால் அந்த கோபத்தை பெரிதாக எடுத்து கொள்ளாத கண்ணப்பனோ, “அதான் நாளை மறுநாள் குறிச்ச முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கும்னு சொன்னேனே, எல்லாம் சரியா முகூர்த்தத்துக்கு அந்த மண்டபத்துக்கு வந்து சேருங்க,” என்று உறவினர்களிடம் கூற,
“கண்ணப்பன் வாத்தியார் சும்மா எதுவும் சொல்ல மாட்டார். அவர் இவ்வளவு தீர்மானமா சொல்றார்னா ஏதாவது பொண்ணை முடிவு செய்து வச்சிருப்பார். எதுவா இருந்தாலும் நாளை மறுநாள் காலையில் தெரிஞ்சிட போகுது,” என்று பேசியப்படி அவர்களெல்லாம் அங்கிருந்து சென்றனர்.