அதன்பின் தேவிகாவோ, “நேத்துல இருந்து என் பிள்ளை படாதபாடு பட்டுட்டான். பிறந்தநாள் அதுவுமா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்படி ஆகிடுச்சே, யார் கண்ணுப் பட்டுச்சோ,” என்று அவனை அமரவைத்து அவனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார்.
பின் தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்துவிட்டவர், “போய் தலைக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு வா சக்தி சாப்பிடுவோம்,” என்று அவனை அனுப்பியவர், மகனுக்குப் பிடித்த உணவை சமைப்பதற்கு சென்றார்.
சக்தி அவனது அறைக்கு செல்ல, அவனோடு பின்னே வந்த சிவமித்ராவோ அறைக்குள் வந்ததும் அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவள் அழுகையில் கரைய, அவளின் அழுகையை உணர்ந்தவனோ, அவளை இழுத்து முன்னே நிறுத்தியவன், “ஹே எதுக்கு அழற மித்து, அதான் எனக்கு ஒன்னும் ஆகலையே, நான் நல்லா தானே இருக்கேன். முதலில் அழறதை நிறுத்து,” என்று சொல்ல,
“எதுவும் நடக்கல சரி, ஏதாவது நடந்திருந்தா என்னால அதை நினைச்சுக் கூட பார்க்க முடியல, இதில் திரும்ப இப்படி ஏதாவது நடக்குமா? எனக்கு பயமா இருக்கு சக்தி,” என்று மீண்டும் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.
அவளை அணைத்தப்படி “சும்மா நம்மளை பயமுறுத்த அந்த எம்.எல். ஏ இப்படி செஞ்சுருப்பார். மத்தப்படி கெட்டதா எதுவும் நடக்காதுன்னு நம்புவோம், இங்கப்பாரு வீட்டில் எல்லாம் வயசானவங்க, நீதான் தைரியத்தோட அவங்களுக்கெல்லாம் ஆறுதலா இருக்கணும், நீயே இப்படி அழுதா எப்படி?” என்று அவன் கேட்க,
“உங்களுக்கு நடந்த மத்த பிரச்சனைக்கெல்லாம் நான் தைரியமா இருக்கலாம், ஆனா இது உங்க உயிர் சம்பந்தமான பிரச்சனை. இதுக்கு எப்படி நான் கலங்காம இருக்க முடியும், முன்ன உங்களையோ உங்க காதலையோ புரிஞ்சிக்காம இருந்துட்டேன். ஆனா இப்போ எல்லாம் நான் புரிஞ்சிக்கிட்டு, எனக்கு நீங்க முழுசா கிடைச்சும் அதை விதி நிலைக்க விடாம செய்தா, அதுக்குப்பிறகு இந்த உலகத்தில் நான் மட்டும் வாழ்ந்து என்ன பிரயோஜனம்,” என்று அவள் கூறினாள்.
அவளை அணைப்பிலிருந்து விடுவித்து அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன், “ஹே லூசு, என்ன பேசற, நீ சொன்னதை தான் நானும் சொல்றேன். முன்ன உன்னை என்னோட சேர விடாம பிரிச்ச விதி, இப்போ நானே எதிர்பார்க்காத நேரம் உன்னை என் வாழ்க்கையில் இணைச்சிருக்குன்னா, நாம நூறு வயசு வரை சேர்ந்து வாழுவோம் டி, உனக்கும் எனக்கும் எதுவுமே ஆகாது சரியா?” என்று சொல்ல,
“இது எனக்கு நீங்க ஆறுதலுக்கு சொல்றீங்களா தெரியல, ஆனா இதுதான் நடக்கணும், இதுக்கு முன்ன என் மனசு உங்களை விரும்ப ஆரம்பிச்சிடுச்சுன்னு தெரியும், ஆனா உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா அப்படின்னு நினைச்ச நொடி தான் நான் உங்க மேல வச்சிருக்க காதல் எனக்கு நல்லாவே புரிஞ்சுது, எப்போதுமே நான் உங்களை விட்டுப் பிரியக் கூடாது. ஆயுசுக்கும் உங்களோடவே இருக்கணும்னு என் மனசு நினைச்சுது. உங்களை நினைச்சு இத்தனை நேரம் என் இதயம் எத்தனை வேகமா துடிச்சுது தெரியுமா? ஏன்னா என் இதயம் முழுக்க நீங்கத்தான் இருக்கீங்க, ஐ லவ் யூ சக்தி,” என்றவள், அவனது முகம் எங்கும் முத்தமிட்டு மீண்டும் அவனை அணைத்துக் கொள்ள,
அவனுக்கு கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்ததற்கு மாறாக அவள் இதயத்தில் அவனுக்கு நிரந்தர இடம் கிடைத்ததுமில்லாமல், அவள் வாய்மொழியில் அதைக்கேட்டு அவனுக்கு எப்படி இருந்தது தெரியுமா? அவளை இறுக அணைத்து அந்த மகிழ்ச்சியை அவன் வெளிப்படுத்த, அவளுமே அந்த அணைப்பில் ஐக்கியமாகி போனாலும், திடீரென அவளது நிலை அவளுக்கு ஞாபகத்திற்கு வர,
“சக்தி, போதும் போய் குளிச்சிட்டு வாங்க,” என்று அவனை விட்டு விலகப் பார்க்க,
“ம்ம் எனக்கு போதாது. இப்படியே இருக்கத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு,” என்றான்.
“இப்படியே இருந்தா வலிக்கும்,” என்று அவள் சொல்லவும்,
“யாருக்கு? உனக்கா? எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ,” என்று இன்னுமே அவளை இறுக்கி அணைக்க,
“அய்யோ நான் எனக்கு சொல்லல,” என்றாள்.
“அப்போ எனக்கா? எனக்கு ஏன் வலிக்கப் போகுது? வண்டியிலிருந்து விழுந்ததை சொல்றீயா? அந்த வலியெல்லாம் இப்படி இறுக்கமா கட்டிப் பிடிச்சிக்கிட்டா சரியா போயிடும்,” என்றான்.
“நான் உங்களுக்கும் சொல்லல,” என்று அவள் கூறவும்,
“நாம ரெண்டுப்பேரும் கட்டிப்பிடிச்சிக்கிட்டா வேற யாருக்குடி வலிக்கும்,” என்று அணைப்பில் இருந்தப்படியே அவள் முகம் பார்த்து கேட்கவும்,
“ஒருத்தருக்கு வலிக்கும்,” என்று அவள் கையை கொண்டு வந்து அவனை விலக்கி இருவருக்கும் குறுக்கே அவள் வயிற்றில் வைக்க, முதலில் குழம்பியவன், பின் அவள் சொல்ல வருவது புரிந்தவனாக, “மித்து நீ சொல்றது உண்மையா?” என்று கேட்டவன், அவளை அணைப்பிலிருந்து விடுவிக்க,
“நாள் தள்ளிப் போயிருக்கு, ஆனா இன்னும் கன்ஃபார்ம் செய்யல, 90% கண்டிப்பா கரு உண்டாக்கியிருக்குன்னு தான் நினைக்கிறேன். கிட் வாங்கிட்டு வந்திருக்கேன். டெஸ்ட் செய்து பார்த்துட்டு முதலில் உங்களுக்கு தான் சொல்லணும்னு நினைச்சேன். அப்புறம் நீங்க வந்ததும் உங்களோடவே சேர்ந்து டெஸ்ட் செய்து பார்த்தா என்னன்னு தோனுச்சு, இப்போ சொல்லுங்க, உள்ள பாப்பாக்கு வலிக்கும் தானே,” என்று அவள் கேட்க,
“அம்மாவை போலவே உள்ள பாப்பாக்கும் வலிக்காது. ஆனாலும் கவனமா இருந்துப்போம்,” என்றவன், சரி முதலில் போய் டெஸ்ட் எடுத்து பார்ப்போம்,” என்று அவளை அவசரப்படுத்தினான். அடுத்து உடனே அந்த காரியத்தில் ஈடுபட, இரண்டு கோடுகள் வருகிறதா? என்று எதிர்பார்த்திருந்த அந்த நிமிடங்கள் ஒரு கலவையான மனநிலையில் இருவரும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே இருகோடுகள் வரவும், “மித்து,” என்று அவளை பக்கவாட்டில் அனைத்து அவளை முத்தங்களால் அர்ச்சித்தான்.
“இந்த சந்தோஷமான விஷயத்தை வீட்டுப் பெரியவங்களிடம் சொல்வோம் வா,” என்று அவன் அவசரப்பட,
“நான் சோர்வா இருப்பதை பார்த்து அத்தைக்கு ஆல்ரெடி சந்தேகம் தான், நானும் டெஸ்ட் செய்து பார்க்கணும்னு அவங்களிடம் சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ள இந்த பிரச்சனையெல்லாம் நடந்ததில் எல்லாமே அந்த டென்ஷனில் இருந்தோம்,” என்றாள்.
“உனக்கு இந்தமாதிரி சமயத்தில் இந்த பிரச்சனைகள் உனக்கு ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா இருந்திருக்குமில்ல,” என்று அவளுக்காக கவலைப்பட்டவன்,
“அப்போ உனக்கு வந்த சோர்வு இதனால தான், என்னால இல்லை தானே,” என்று கண்ணடித்தப்படியே கேட்க,
“இதுக்கு மட்டும் காரணம் யாராம்?” என்று கேட்டவளின் முகத்தில் நாணம் வந்து குடியேறிக் கொண்டது.
“சரி சரி அடியேன் தான் எல்லாத்துக்கும் காரணம் போதுமா?” என்று சொல்லி சிரித்தவன்,
“சரி எல்லோரிடமும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லுவோம்,” என்று அவளை வெளியில் அழைத்து சென்றான்.
மகன் இன்னும் குளிக்காமல் இருப்பதை பார்த்து தேவிகா கேள்வியெழுப்ப, “ஒரு சந்தோஷமான விஷயம் ம்மா, அதான் உடனே சொல்ல வந்தேன்.” என்றவனுக்கு, அதை எப்படி சொல்வது என்று புரியாமல்,
“மித்து, நீ சொல்லு,” என்று மனைவியிடம் கூற, அவளுக்குமே நாணத்தில் அதை சொல்ல தயங்கி, “நீங்க சொல்லுங்க,” என்றாள்.
“இப்படி ரெண்டுப்பேரும் சொல்லலைன்னா அந்த சந்தோஷமான விஷயத்தை யார் தான் சொல்றது?” என்று கண்ணப்பன் கேட்க,
“நாம தாத்தா, பாட்டியாக போறோம், அதான் அந்த சந்தோஷமான விஷயம்,” என்று தேவிகா கூறினார்.
அதைக்கேட்டு கண்ணப்பன் மகிழ்ச்சியாகி, “நிஜமாகவா சக்தி?” என்று கேட்க,
“அம்மா சொல்றது உண்மை தான் ப்பா,” என்று சக்தி கூறினான்.
“நேத்தே மித்ரா இந்த விஷயமா சந்தேகமா சொன்னா, டாக்டரிடம் போகலாம்னு சொன்னதுக்கு, ஏதேதோ மழுப்பும்போதே அவ சக்தியிடம் முதலில் சொல்ல விருப்பபட்றான்னு புரிஞ்சிக்கிட்டேன்.” என்றவர்,
மகனது பிறந்தநாளுக்காக செய்த இனிப்பைக் கொண்டு வந்து ஊட்டி, “போன பிறந்தநாளுக்கு என் மகனுக்கு ஒரு கல்யாணம் ஆகாதான்னு கவலைப்பட்டேன். இந்த பிறந்தநாளில் எனக்கு ஒரு பேத்தியோ இல்லை பேரனோ வரப் போகுது. இப்போதான் என் மனசு நிறைஞ்சிருக்கு,” என்று தேவிகா மகிழ்ச்சியோடு கூற, கண்ணப்பன் மற்றும் ராஜலஷ்மிக்குமே அதே மனநிறைவு தான்,
அதன்பின்னரான பொழுதுகள் இனிமையாக கழிய, அடுத்து உறங்குவதற்கு இருவரும் அறைக்கு வந்து படுத்ததும், “உங்க பிறந்தநாள் எப்போன்னு கேட்டதுக்கு ஏன் மாத்தி சொன்னீங்க?” என்று சிவமித்ரா அவன் பக்கமா திரும்பி படுத்தப்படி கேட்க,
“சும்மா விளையாட்டுக்கு தான், அதுவுமில்லாம நீயா என் பிறந்தநாளை தெரிஞ்சிக்கணும்னு நினைச்சேன்.” என்று சக்தி மல்லாக்க படுத்திருந்தவன் அதேநிலையில் பதில் கூறவும்,
“அப்படி தெரிஞ்சும் என்ன பிரயோஜனம்? நல்லா பெருசா கொண்டாடலாம்னு நினைச்சேன். கடைசியில் ஒரு கிஃப்ட் கூட வாங்க முடியாம போயிடுச்சு,” என்று அவள் வருத்தமாக கூறினாள்.
“நீ கிஃப்ட் கொடுக்கலன்னு யார் சொன்னது? நீ எனக்கு எவ்வளவு பெரிய கிஃப்ட் கொடுத்திருக்க தெரியுமா?” என்று இப்போது அவள் பக்கமாய் திரும்பி படுத்தப்படி அவன் கூற,
“நான் கன்சீவ் ஆனதை சொல்றீங்களா?” என்று கேட்டாள்.
“அது கடவுள் நம்ம வாழ்க்கைக்கு கொடுத்த கிஃப்ட். நான் சொன்ன கிஃப்ட் நீதான், அம்மா சொன்னாங்களே அதுதான், போன பிறந்தநாளுக்கு நீ என் வாழ்க்கையில் இல்லை அப்படி தான் என் மனசை தேத்திக்கிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு நீ என் மனைவியா, நம்ம குழந்தைக்கு அம்மாவா என் பக்கத்தில் உட்கார்ந்திருக்க, இதைவிட எனக்கு என்னடி பெரிய கிஃப்ட் வேணும்?” என்று கேட்டவனை நெகிழ்ச்சியாக பார்த்தவள்,
“நான் உங்களை வேண்டாம்னு சொன்ன நேரம் என்மேல உங்களுக்கு கோபம் வரலையா?” என்று அவள் கேட்க,
“உனக்கு பிடிச்ச மாதிரி என்னை படைக்காத கடவுள் மேல தான் எனக்கு கோபம் வந்தது.” என்று பதில் கூறினான்.
“அப்புறம் நான் இங்க திரும்ப வந்தபோது என்மேல கோபப்பட்டீங்களே ஏன்?” என்று அவள் கேட்க,
“அது என்னைப்பத்தி புரிஞ்சுக்காம பேசினியே அதனால,” என்று அவன் கூறவும்,
“ம்ம் அது மனசுல அப்போ ஒரு குற்ற உணர்வு, நான் இருந்த நிலை எல்லாம் அப்படி என்னை பேச வச்சிடுச்சு,” என்றாள்.
பின் அசோக் பற்றி பேச விரும்பாமல் அதை ஒதுக்கியவள், “ஒருவேளை நான் வேலை கிடைச்சு இந்த ஊருக்கு வராம இருந்திருந்தா, உங்களுக்கு பார்த்த பொண்ணோட உங்களுக்கு கல்யாணம் நடந்திருந்தா, அப்போ உங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?” என்று அவள் கேட்க,
“இப்போ இந்த பேச்சு தேவையா?” என்று அவன் கேட்க, அவன் ஒட்டி படுத்துக் கொண்டவள், ப்ளீஸ் சொல்லுங்க,” என்று கெஞ்சவும்,
“அம்மா, அப்பாக்காக தான் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா கண்டிப்பா அதை எனக்கு பிடிச்ச வாழ்க்கையா நான் மாத்தியிருப்பேன். அதில் நான் சந்தோஷமாகவும் இருந்திருக்கலாம், ஆனா இப்போ இருக்க மனநிறைவு கிடைச்சிருக்குமான்னு கேட்டா என்னிடம் பதில் இல்லை. அதை நான் நினைச்சுப் பார்க்கவும் விரும்பவில்லை.” என்றவன்,
அவனுமே அசோக் பற்றி பேசாமல், “நீ கேட்ட கேள்வியையே நான் கேட்கிறேன். ஒருவேளை நீ இங்க வேலை கிடைச்சு வராம, அங்கேயே இருந்திருந்தா உன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்டான்.
“எப்படி இருந்திருக்கும்? இப்படி ஒரு காதலையும் அன்பையும் புரிஞ்சுக்காத துரதிர்ஷ்டசாலியா, இப்படி ஒரு காதல் கிடைக்க பெறாத துர்பாக்கியசாலியா, ஏதோ வாழறோம்னு கடைமைக்காக வாழ்ந்துட்டு இருந்திருப்பேனா இருக்கும், இப்போ நானுமே மனநிறைவோட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று அவள் சொல்லவும்,
இதைவிட அவனுக்கு வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும், அவளின் தாய்மையை கருத்தில் கொண்டு வெறும் முத்தங்களால் மட்டும் அன்றைய இரவு அவளை கொண்டாடி தீர்த்தான்.
சிவசக்தி காம்ப்ளெக்ஸ்
சிவமித்ரா பேரில் இடம் வாங்கி கட்டிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் தான் அனைவரும் இப்போது ஒன்று கூடியிருந்தனர். தாத்தாவின் பெயர் திருமலைவாசன் பேரனின் பெயர் சக்திவாசன். அதனால் அவர்களின் சர்க்கரை ஆலை, திரையரங்கம், திருமண மண்டபம் அனைத்திற்கும் வாசன் என்ற பெயர் தான் இருக்கும், ஆனால் இந்த இடத்திற்கு இருவரின் பெயரையும் சேர்த்து வைக்க சக்தி முடிவு செய்திருந்தான். இனி ஏதாவது புதிதாக ஆரம்பித்தாலும் இதே பெயரில் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தான்.
இப்போது சிவமித்ராவிற்கு ஏழு மாதம் முடிந்து எட்டாவது மாதம் தொடங்கியிருந்தது. ஒருவாரத்திற்கு முன்பு தான் அவளுக்கு வளைக்காப்பு நடத்தி முடித்திருக்க, கை நிறைய கண்ணாடி வளையல்கள், மேடிட்ட வயறு, பூசினாற் போல் உடலமைப்பு என்று தாய்மையின் பூரிப்பில் அழகாக மிளிர்ந்தாள்.
அவளுக்கு குழந்தை பிறப்பறதற்குள் கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா வைப்பதற்கு வேகம் வேகமாக வேலைகளை பார்த்திருந்தான் அவன், கட்டிடத்தை திறந்து வைக்க முன்னாள் எம்.பி யை தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தான். அவர் செய்த உதவியால் தான் அவர்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்கவில்லை. எம்.எல்.ஏ மூலாமாக அவனுக்கு மீண்டும் ஆபத்து வருமோ என்று வீட்டில் அனைவரும் சிறிது நாட்கள் பயத்தில் தான் இருந்தனர். ஆனால் எம்.பி யும், கட்சி தலைவரும் கொஞ்சம் எம்.எல்.ஏ வை இன்னும் பயங்கரமாக எச்சரித்ததில் அவர் அதன்பின் இவர்கள் விஷயத்தில் தலையிடவில்லை.
இப்போதும் முன்னாள் எம்.பி யை சிறப்பு விருந்தினராக அழைத்ததால் அதிக வேலைகள் இருந்தது. சிவமித்ராவை எந்த வேலையும் செய்ய விடாமல் தேவிகாவும் ராஜலஷ்மியுமே அனைத்தையும் பார்த்துக் கொள்ள,
சக்திக்கும் வேலைகள் இருந்ததால், வேட்டியை மடித்துக் கட்டி, முழுக் கையை சட்டையையும் முழங்கை வரை அவன் மடித்து விட்டிருக்க, அவனது பிறந்தநாளுக்கு எந்த பரிசும் வாங்கிக் கொடுக்காததால், சிவமித்ரா அவளது வளைகாப்பின் போது அவனுக்கு வாங்கி கொடுத்த தங்க காப்பை அவன் கைகளில் அணிந்திருந்தவன், அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்க, ஓர் இடம் பார்த்து அமர்ந்திருந்தவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை சக்திக்கு அக்கா முறை கொண்ட உறவுக்கார பெண்கள் இருவர் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், “என்ன மித்ரா, எங்க தம்பியை வச்ச கண்ணு வாங்கமா பார்த்துட்டு இருக்கியே, இந்த நேரத்தில் புருஷனையே பார்த்துட்டு இருந்தா அவனை மாதிரியே குழந்தை பிறக்கப் போகுது,” என்று கேலியாக கூற,
“பிறக்கட்டும், எனக்கு அவங்களை மாதிரி தான் குழந்தை வேணும்,” என்ற சிவமித்ராவின் பதிலைக் கேட்டு,
“பார்த்தீயாடி கதையை, இவனை தானே முன்ன இவ வேண்டாம்னு சொன்னா?” என்று இப்போது இருவரில் ஒருவர் சொல்லவும்,
“அப்படியா? அது எப்போ?” என்று சிவமித்ரா தெரியாதது போல் கேட்ட கேள்வியில் பெண்கள் இருவரும் அதிர, அவர்கள் பேசுவதை கேட்டப்படி வேலை செய்து கொண்டிருந்த சக்தி வாய்க்குள்ளேயே புன்னகைத்து கொண்டான்.
“சரி, என் தம்பி இப்போ எப்படி இருக்கான்?” என்று ஒருத்தி கேட்க,
அதற்கு சிவமித்ரா பதில் சொல்வதற்குள், “நம்ம சக்தி மதுரை வீரன் கணக்கால்ல இருக்கான்.” என்று இன்னொரு பெண் பதில் கூறவும்,
“மதுரை வீரனா, ஏற்கனவே பொம்மியம்மா இருக்க, புதுசா எவளாவது வெள்ளையம்மா வரப் போறா,” என்று சொல்லி இருவரும் சிரிக்க, சிவமித்ராவிற்கு அந்த பேச்சு இனிக்கவில்லை.
அவர்களிடம் அவள் பதில் பேசுவதற்குள் அங்கு வந்த தேவிகா, “என்னங்கடி என் மருமகளிடம் வம்பிழுத்துட்டு இருக்கீங்க, அங்க உங்க சித்தப்பா தனியா வேலைப் பார்ர்துட்டு இருக்காரு, போய் அவருக்கு ஒத்தாசை செய்ங்க,” என்று அவர்கள் இருவரையும் அனுப்பியவர்,
“அவளுங்க ஏதோ விளையாட்டுக்கு பேசறாங்க மித்ரா. அதை பெருசா எடுத்துக்காத,” என்றார்.
பின், “இந்த எப்போ விசேஷம் ஆரம்பிக்கும்னு தெரியல, அதுவரைக்கும் இந்த ஜூஸை குடி.” என்று அவளிடம் கொடுக்க, அவளும் அதை வாங்கிக் குடித்தவள், மீண்டும் கணவனை சைட் அடிக்கும் வேலையைப் பார்க்க, அவனும் அது தெரிந்து மீண்டும் புன்னகைத்து கொண்டான்.
சொன்ன நேரத்திற்கு முன்னாள் எம்.பி சரியாக வரவும், விழா தொடங்கி சிறப்பாக நடந்தும் முடிந்தது. அதன்பின் வந்திருந்தவர்களுக்கு சாப்பாடு பந்தி நடந்து கொண்டிருக்க, கண்ணப்பன் அங்கு மேற்பார்வை பார்க்கவே, அந்த கட்டிடத்தின் ஒரு கடையில் வசதிகள் செய்து கொடுத்து சிவமித்ராவை ஓய்வெடுக்க சொல்லி அனுப்பியிருக்க, அவளுக்கு சாப்பாடு கொண்டு போகவிருந்த ராஜலஷ்மியிடமிருந்து வாங்கி கொண்ட சக்தி, அவளுக்கு அவனே எடுத்துக் கொண்டு சென்றான்.
அவன் சாப்பாடு கொண்டு வந்திருப்பது தெரிந்து, “நம்ம வீட்டில் எல்லாம் சாப்பிடும்போது நானும் சேர்ந்து சாப்பிட்றேன் சக்தி,” என்று அவள் கூற,
“அவ்வளவுநேரம் பசியோட இருப்பீயா? இப்பவே சாப்பிடு,” என்று சொல்லி அவன் ஊட்டி விடவும்,
“அப்போ நீங்களும் என்னோட சாப்பிடுங்க,” என்று அவனுக்கு அவள் ஊட்டிவிட்டாள்.
இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும், “அக்காங்க பேசினதில் கோபமா?” என்று அவன் கேட்கவும்,
“என்ன பேசினாங்க?” என்று அவள் கேட்க,
“அதான் மதுரை வீரன், வெள்ளையம்மா, ரெண்டு பொண்டாட்டினுலாம் பேசனாங்களே, அதுல கோபமா?” என்று அவன் கேட்க,
“அவங்க பேசினது பிடிக்கலை தான், ஆனா எனக்கு உங்களை தெரியாதா? எப்போதும் சக்தி மனசுல சிவமித்ரா மட்டும் தான் இருப்பா, அது தெரிஞ்சதால எனக்கு கோபமெல்லாம் வரல,” என்ற அவளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தவன்,
“அப்போ மித்ரா மனசுல?” என்று தெரிந்த பதில் தான் என்றாலும் வேண்டுமென்றே கேட்க,
“வேற யாரு? எப்போதும் இந்த சக்தி மட்டும் தான்,” என்ற அவளின் பதிலில் அவளை அவன் ரசனையாக பார்த்திருக்க, அவன் பார்வையே அடுத்து அவன் என்ன செய்வான் என்பது தெரிந்தவளாக,
“சக்தி இது பொது இடம்,” என்று அவள் சொல்லவும்,
“இது எனக்கு மட்டுமே சொந்தமான இடம்,” என்று எப்போதும் கூறும் பதிலை கூறியவன், அவளின் கன்னத்தில் அவனது முத்திரையை பதித்திருந்தான்.
என்றும் நீங்காத வாசமாய் அவளின் இதய வாசியாகிவிட்டான் சிவமித்ராவின் சக்திவாசன்.
சுபம்
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.