காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் கர்ம சிரத்தையாக தன் வேலையை செய்துக் கொண்டிருந்தது.
இந்திய அணி அடுத்தடுத்து ஆடிய போட்டிகளில் நிரஞ்சனின் ஆட்டம் நிபுணர்களிடையே பேசு பொருளானது.
அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவன் அடிக்கடி சொதப்பினான். பந்து வீச்சும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
அந்நிலையில் தான் அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் ஆரம்பமாகியது.
சென்னை அணியை பொறுத்தவரை அனைவருமே திறமையான வீரர்கள். அதிலும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் தான் அதிகம். ஒருவரை தனியாக பெயர் குறிப்பிட்டு சொல்லிட முடியாது, அத்தனை பேரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தங்களின் சிறந்த பங்களிப்பை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
அந்த வருடத்தின் முதல் போட்டியையை வெற்றிக் கணக்கில் தான் தொடங்கியது சென்னை அணி.
ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி, தோல்வி, வெற்றி, தோல்வி என்று மாற்றி மாற்றி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.
இந்திய அணி தங்களின் வீரர்களுக்கு உடல் தகுதிக்காக வைக்கும் யோ – யோ (Yo -Yo Test) தேர்வில் சுகாஸ் தோல்வியுற்றிருக்க, அணியில் இடம் பெறவில்லை அவன்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக வீட்டிலேயே இருந்தவன், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தான்.
ஒரு விளையாட்டு வீரனுக்கு உடல் தகுதி எத்தனை முக்கியம் என்பதை அவன் நன்கு அறிவான். அதிலும் ஓடி, ஓடியே ரன்கள் சேர்க்க வேண்டிய பேட்ஸ்மேன் அவன்.
தன்னைத் தானே குற்றம் சாட்டியது அவன் மனது. கோபம், ஏமாற்றம் என அனைத்தையும் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் காட்டினான் அவன்.
சென்னை கேப்டனுக்கு மிக நெருக்கமானவன், அவரது ஆலோசனைகளை அப்படியே ஏற்று வெறித்தனமாக ஆடினான். அந்த வருடம் அவனது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
நிரஞ்சன், ராஜ், வெளிநாட்டு வீரர்களான ஷான், மைக்கேல் பேட்டிங்கில் அதிரடி காண்பிக்க, சென்னையின் பவுலிங் அணி எப்போதும் போல ரன்களை வாரி வழங்கி, விக்கெட்களை அள்ளிக் கொண்டிருந்தது.
அன்றைய ஆட்டம் சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலானது.
போட்டி தொடங்கும் முன் ராஜ் மற்றும் சுகாஸ் நந்தனாவிடம் நின்றுப் பேசிக் கொண்டிருந்தனர்.
பேச்சு அன்றைய போட்டியை பற்றியதாக தான் இருந்தது. எதிரணி வீரர்களின் நிறை, குறைகள் மற்றும் மைதானத்தின் பிட்ச் (pitch) நிலையை சுற்றியே வந்தது.
கரும்பு தின்ன கூலியா? நந்தனா புள்ளி விவரங்களை தெள்ளத் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.
ராஜ் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து கொண்டிருந்தாள்.
“டார்லிங் அது என் தப்பில்ல. எத்தனை முறை சொன்னாலும், செகண்ட் ரன்னுக்கு ஒடுறதுக்கு முன்னாடி இன்பார்ம் பண்ணவே மாட்டேங்கறானுங்க. குரல் குடுக்காம குடுகுடுன்னு ஓடி வந்தா, நான் என்ன பண்றது? என் ஹைட்டுக்கு பாய்ஞ்சு படுத்தாலும், கோட்டை தொட முடியல” அவன் சொல்ல சொல்ல, சுகாஸ் பேட்டை நீட்டியபடி தரையில் சரக்கென்று விழும் காட்சி கண்ணில் வர, அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
தொடக்க ஆட்டக் காரர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே களம் இறங்கினார்கள்.
நிரஞ்சனின் பார்வை அழுத்தமாக அவர்கள் மேல் தானிருந்தது.
சென்னையின் இளம் வீரனான ராஜ் ஆட்டம் தொடங்கியதும் மைதானத்தை தன் வசமாக்கி இருந்தான். நந்தனாவின் வார்த்தையை பொய்யாக்காமல் மூன்றாம் ஒவரிலயே ரன் அவுட்டாகி, ராஜை முறைத்துக் கொண்டே வெளியில் வந்தான் சுகாஸ்.
தொடர்ந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் ஒவ்வொருவராக வந்து சொற்ப ரன்களில் வெளியேற கடைசி ஓவர் வரை ராஜ் மட்டுமே நின்றான்.
நிரஞ்சன் பேட் செய்ய இறங்கும் முன் மனைவியின் முன் வர, அவள் நிமிர்ந்து கூட அவனைப் பார்க்கவில்லை.
கை நீட்டி அவளின் காஃபி கோப்பையை எடுத்தான் அவன்.
ஒவ்வொரு மிடறாக அவன் குடிக்கத் தொடங்க, லேப்டாப்பில் இருந்து தலையை உயர்த்தி, “ஆல் த பெஸ்ட்” என்றாள் நந்தனா.
“அவ்வளவு தானா?” என்ற அவனின் கேள்விக்கு ஒரு தலையசைப்பு மட்டுமே பதிலாக வர, அழுத்தமாக அவளைப் பார்த்து விட்டுப் போய் வீரர்களுடன் அமர்ந்தான் அவன்.
ஐந்தாவது வீரனாக நிரஞ்சன் இறங்கி வெறும் இருபது ரன்களே எடுத்திருந்த நிலையில், எதிரணியின் தீபக் வீசிய யார்க்கர் பந்தை நிரஞ்சன் தடுக்க தவற, ஸ்டம்ப்கள் (stumps) தெறித்திருந்தது.
“யார்க்கர் பால் கவனம்” என்று மனைவி என்றோ சொன்ன வார்த்தைகள் அவனுக்கு அந்நேரம் நினைவில் வந்தது தான். ஆனால், மைக்ரோ வினாடிக்கும் குறைவான நேரத்தில், மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். அவன் பந்தை கணித்து தடுப்பதற்குள் ஸ்டம்ப்கள் பறப்பது அவனுக்கு எப்போதும் நடப்பது தான்.
ஆத்திரத்துடன் முணுமுணுப்பாக திட்டிக் கொண்டே வெளியில் வந்தான் அவன்.
ஆட்டத்தின் முடிவில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு வைத்தது சென்னை.
முதல் ஓவரிலேயே இருபது ரன்கள் எடுத்து சென்னை அணி ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்தார் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல்.
சென்னை அணியின் பந்து வீச்சை மைதானம் முழுவதும் சிக்ஸ் மற்றும் ஃபோர்களாக சிதறடித்து கொண்டிருந்தார் அவர். பதட்டத்தில் நிரஞ்சன் இரண்டு வைட் பால்கள் போட, அதையும் சிக்ஸருக்கு பறக்க விட்டார் ராகுல். அடுத்து பந்து வீச நிரஞ்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை கேப்டன்.
தனது அதிரடி ஆட்டத்தினால் ராகுல் ஒருவரே 90 ரன்கள் எடுத்து, பதினெட்டாம் ஓவரின் முதல் பந்திலேயே தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்திருந்தார்.
அந்தத் தோல்வி சென்னை அணிக்கு பலமான அடி. லீக் சுற்றில் இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே அவர்களுக்கு இருந்தது. அதில் அதிக ரன்கள் வித்தியாசத்துடன் சென்னை அணி வெற்றிப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்ற நிலை.
இணையம் முழுவதும் சென்னை அணி குறித்த மீம்கள் தான். கேலி, கிண்டல், விமர்சனம் மற்றும் வசைகளால் நிறைந்திருந்தது.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. உறங்குவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தாள் நந்தனா.
நிரஞ்சன் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தான். அன்றைய போட்டி குறித்து மூத்த வீரர்கள் இருவர் ஸ்டுடியோவில் அமர்ந்து அலசிக் கொண்டிருந்தனர்.
ராஜின் ஆட்டத்தை பாராட்டியவர், அவனோடு நின்ற நிரஞ்சனையும் பாராட்டத் தவறவில்லை.
அத்தோடு நிறுத்தி இருக்கலாம் அவர்.
“கார்த்திகேயன் ஸ்டூடண்ட் தானே ராஜ்? கலக்கறான்” என்றவர்,
“நிரஞ்சன் மாமனார் கிட்ட கிரிக்கெட் கத்துக்கணும்.” என்று விளையாட்டாக சிரித்துக் கொண்டே சொல்ல, விளையாட்டில் எதுவுமே விளையாட்டு இல்லை என்று நிரூபித்தான் நிரஞ்சன்.
கையில் இருந்த டிவி ரிமோட்டை கண் மண் தெரியாத கோபத்தில் அவன் தூக்கி ஏறிய, அச்சமயம் அவனைத் தேடி அங்கு வந்த நந்தனாவின் கால்களில் வந்து விழுந்தது அது.