பெங்களூரில் நிரஞ்சன் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, நந்தனா தன் வேலையில் மூழ்கி இருந்தாள்.
போட்டி நாளும் வந்தது. ஒவ்வொரு வருடமும், “இந்த வருடம் கப் எங்களுக்கே” என்று முழக்கமிடும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிருக்கவில்லை.
இந்த வருடமும் அவர்களுக்கு வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது.
அன்றைய போட்டியில், “தலைவன் இருக்கிறான்” என்று சென்னை அணி ரசிகர்களை மார்தட்டிக் கொள்ள செய்தார் கேப்டன்.
தொடக்க வீரர்கள் நால்வரும் சொற்ப ரன்களில் வெளியேறி இருக்க, நிரஞ்சன் மற்றும் கேப்டன் மட்டுமே நின்று அணிக்கு வெற்றியை தேடித் தந்திருந்தனர்.
அவர்களின் வழக்கமாக கடைசி பந்து வரை ஆட்டத்தை இழுத்து, ரசிகர்களின் இதய துடிப்பை இரு மடங்காக்கி, தலைவன் பாணியில் நிரஞ்சன் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிக்க, எப்போதும் உணர்ச்சிகளை வெளிக்கட்டாத நந்தனா கூட இருக்கையில் இருந்து எழுந்து நின்று, ஆர்ப்பரித்து கைத் தட்ட தொடங்கி இருந்தாள்.
சென்னை அணி அந்த வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட, நிரஞ்சனை கையில் பிடிக்க முடியவில்லை.
சென்னை அணி நிர்வாகம் அனைவரையும் பாராட்டி தட்டிக் கொடுத்தது.
நிரஞ்சன் அளவுக்கு இல்லையென்றாலும் நந்தனாவும் வெளிப்படையாக மகிழவே செய்தாள். ஆனால், நிரஞ்சனின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. அவனால் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
தோல்வியை விட வெற்றியை கையாள்வது தானே கடினம்?
மனைவியிடம் மட்டுமல்ல அனைவரிடமுமே அதீத அன்பு காட்டினான் அவன்.
நிரஞ்சன் பேசிக் கொண்டிருந்த வீரனை கைக் காட்டி, “அந்த ***** போன வருசம், ஏன் இந்த வருஷம் கூட என்னெல்லாம் பண்ணான் தெரியுமா? வேணும்னு பாலை இவன் தலையில போட்டான். ரன் எடுக்க ஒடும் போது இடையில வந்து இடிச்சு தள்ளி விட்டான். இவன் பௌலிங் பண்ண ஓடி வரும் போது, பாதில கைக் காட்டி நிறுத்தி கடுப்பேத்தி இருக்கான். ஆனா, உன் ஆளு.. அவன் கிட்ட போய் பேசிட்டு இருக்கான். இவனுக்கு என்னாச்சு?” சுகாஸ் கொதிக்க,
“ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப் (Sportsmanship) கேள்வி பட்டு இருக்கியா?” என்றாள் நந்தனா கிண்டலாக,
“என்ன? ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்பா? மை ஃபூட் (My foot). அப்படின்னா என்னனு கேட்கற ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருக்கான் உன் ஆளு.” என்றவன்,
“அவனை கொஞ்சம் பார்த்துக்கோ நந்து. அப்படியே உன்னையும்…” என்றவனின் பார்வை தீர்க்கமாய் நிரஞ்சனின் மேலிருந்தது.
அந்நேரம் நிரஞ்சனின் கண்கள் நீச்சல் குளத்தின் அருகில் நின்றிருந்தவர்களை நோக்கி திரும்பியது. மனைவியை பார்த்து மலர்ந்து புன்னகைத்து அவர்களை நோக்கி வந்தான் அவன்.
ஒரு கையசைப்புடன் விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான் சுகாஸ்.
“என்னவாம் அவனுக்கு? என்னை முறைக்கறான்?” நிரஞ்சன் கேட்க, “தூக்கம் வருது” என்றாள் அவள்.
சென்னை அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்க, இருவரும் தங்களின் அறைக்கு நழுவினார்கள்.
மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப்பிற்கு தேர்வாகி இருந்தது.
சென்னை முதலில் மும்பையிடம் தொற்று பின்னர் டெல்லி அணியுடன் மோதி, வெற்றி பெற்று என்று கடின பாதையில் முன்னேறி எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அங்கே அவர்களுக்காக காத்திருந்தது சென்னையின் பரம எதிரி என்று அழைக்கப்படும் மும்பை அணி.
நீலமும், மஞ்சளும் மும்பையின் வான்கடே மைதானத்தை நிறைத்திருக்க, “சென்னை, மும்பை” என்ற ஆரவார குரல்கள் காற்றில் அலைமோதி கொண்டிருந்தது.
முதலில் களம் இறங்கிய மும்பை அணி சென்னையின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாது எட்டு விக்கெட்டுகள் இழந்து, 140 ரன்கள் அடித்திருந்தது.
141 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.
ராஜ் மற்றும் ஷான் அசத்தலான ஆரம்பத்தை கொடுக்க, ராஜை லாவகமாக வெளியேற்றி கொண்டாடியது மும்பை அணி.
தொடர்ந்து இறங்கிய சுகாஸ் இரண்டு ஒவர் நின்றாலும் அணிக்கு தேவையான ரன்களை சேர்த்து விட்டே வெளியேறினான்.
அடுத்து இறங்கிய கேப்டன் துரதிஷ்ட வசமாக ரன் அவுட்டாக மைதானமே மயான அமைதியானது. ரசிகர்கள் சோர்ந்து போய், ஓய்ந்து, சாய்ந்து இருக்கையில் அமர நிரஞ்சன் களத்தில் இறங்கினான்.
ஷான், நிரஞ்சன் கூட்டணி வெகு நிதானமாக ஆடியது. ஒவ்வொரு பந்தையும் துல்லியமாக கணித்து ஆடினான் நிரஞ்சன்.
ஷான் 70 ரன்கள் அடித்திருக்க, அவர் முகத்தில் அளவுக்கு அதிகமான சோர்வு. காலை அவர் இழுத்து இழுத்து ஓடுவதை கணினி திரை வழியே பார்த்த நந்தனா, “ஹி இஸ் ஹர்ட்” என்று சிவராஜிடம் சுட்டிக் காட்டினாள்.
போட்டி அதன் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்க, அவனைவரின் கவனமும் வெற்றி வாகை சூடுவதில் மட்டுமே இருந்தது. அதை பெற்றுத் தரப் போகும் வீரனை குறித்த அக்கறை அங்கே ஒருவருக்கும் இல்லை.
அத்தனை கேமராக்கள் நிகழ்வை நேரடியாக படம் பிடித்து உலகெங்கும் ஒளிபரப்பி கொண்டிருக்க, ஒருவர் கண்ணில் கூடவே சிக்கவில்லை அவன் காயம் என்று அரற்றியது அவள் மனம்.
ஓரமாக நின்றிருந்த மெடிக்கல் டீமை அவள் கையசைத்து அழைத்து, நிலைமையை விளக்கினாள். அவர்கள் உள்ளே செல்ல தயாராக நிற்க,
“மெடிக்கல் டீமை உள்ள அனுப்புங்க. அவர் கால்ல ரத்தம் சொட்டுது” அவள் சிவராஜிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பக்கம் மும்பை அணி வீரன் ஒருவன் தவறுதலாக நிரஞ்சனின் மேல் மோத, நிலை குலைந்து கீழே விழுந்திருந்தான் அவன்.
மெதுவாக மார்பை பற்றியபடி எழுந்து நின்றான் நிரஞ்சன். அவன் முக பாவத்தில் இருந்தே காயத்தை கணித்த நந்தனா கைகளை இறுக மூடினாள்.
பலத்த அடியே பட்டிருந்தாலும் அவளின் கூச்ச சுபாவி கணவன் இத்தனை கோடி பேர் முன்பு சட்டையை கழற்ற மாட்டான் என்பது அவளுக்கு நிச்சயம்.
கை, கால்களை உதறி அவன் நன்றாக நிற்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
ஆட்டத்தின் கடைசி ஒவருக்கு வந்திருந்தனர்.
ஆறு பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்தாக வேண்டிய சூழல்.
“சென்னை அணி கோப்பையை வெல்ல எட்டே ரன்கள் தேவை” என்று அறிவிப்பு வர, முதல் மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் சேர்த்திருந்தனர். நான்காம் பாலில் ஷான் காயம் காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட்டாக நிரஞ்சன் பதட்டத்துடன் அவரைப் பார்த்து, “சாரி” என்றான்.
அவனுக்கு தைரியம் சொல்லி விட்டு அவர் வெளியேற மருத்துவ குழு அவரை சூழ்ந்து கொண்டது.
ஐந்தாவது பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தனர்.
கடைசி பந்து. ஆனால், வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவை. ஆட்டம் டிராவில் முடிந்து, சூப்பர் ஒவர் (Super over) செல்ல ஒற்றை ரன் தேவை எனும் நிலை.
ஆறாவது பந்தை எதிர்க் கொள்ள தயாராக நின்றான் நிரஞ்சன்.
“என்னமோ சரியில்லை” என்றார் கணினி திரையையும், மைதானத்தையும் மாற்றி மாற்றி பார்த்த சிவராஜ். அவருக்கு அருகில் நின்ற கேப்டன், பயிற்சியாளர் இருவரும் ஒன்று போல, “என்ன சரியில்ல?” என்று பதட்டமாக கேட்க,
“அம்பயர் (Umpire)” என்றாள் நந்தனா.
“என்ன?” அமைதிக்கு பெயர் போன கேப்டன் பதட்டமாக, நிலைமையை துல்லியமாக கணித்த நந்தனாவிற்கு இதயம் நின்று விடும் வேகத்தில் துடித்தது.
மும்பை அணியின் உரிமையாளர் கைக் கூப்பி கடவுளை வேண்டி கொண்டிருக்க, சென்னை அணி ரசிகர்கள், “நிரஞ்சன், நிரஞ்சன்” என்று ஜெபித்து கொண்டிருந்தார்கள்.
பந்து வீச்சாளர், பந்து வீச ஓடி வந்து கொண்டிருக்க, “அவர் யார்க்கர் பால் போடப் போறார்” என்றாள் நந்தனா, சட்டென சரியாக கணித்து.
மற்ற மூவரும் அதிர்ந்து, “எஸ்” என்றார்கள் பதட்டமாக. அடுத்து நடக்கப் போவதை இப்போது அவர்களும் கணித்திருக்க, அனைவர் முகத்திலும் பதட்டம் சூழ்ந்திருந்தது.
நந்தனாவின் கண்களில் வைரமாய் மின்னியது ஒற்றை கண்ணீர் துளி.