அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா.
எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவளும், நிரஞ்சனும் தான் இருந்தார்கள், விதவிதமான புகைப் படங்களில்.
சிலவற்றில் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு, சிலதில் மலர்ந்து சிரித்தபடி, புன்னகைத்தபடி, அணைத்தபடி, என்று பார்ப்பதற்கே அத்துணை அழகாக இருந்தது.
அவர்கள் வீட்டில் கூட இத்தனை புகைப்படங்கள் இல்லை. ஆனால், மகள், மருமகன் புகைப்படங்களால் வீட்டை நிறைந்திருந்தனர் அவளின் பெற்றோர்.
அங்கிருந்த புகைப்படங்களிலேயே அவளுக்கும் மிகவும் பிடித்தது, நிரஞ்சனின் தங்கை நிவேதா வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படம் தான்.
அவள் பட்டுச் சேலையிலும், அவன் பட்டு வேட்டியிலும் நிற்கும் படம். மனைவியின் இடையில் கரம் கோர்த்து, பற்கள் தெரிய சத்தமாக சிரிக்கும் நிரஞ்சன். அவனை சிரிப்புடன் ஏறிட்டு முறைக்கும் அவள். அட்டகாசமான புகைப்படம். அவள் விழிகள் இரண்டும் பல்லாயிரம் தடவையாக அவன் சிரிப்பில் மயங்கி விரிந்தது.
நந்தனாவிற்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவளுக்கு கிரிக்கெட்டின் மேல் தீராக் காதல். ஆனால், அதை சாதாரணமாக பின்னுக்கு தள்ளியது நிரஞ்சனின் மேலான காதல்.
“உலகம் பார்க்கற நிரஞ்சன் வேற, ஒரிஜினல் நிரஞ்சன் வேற நந்தனா. நிரஞ்சனை உனக்கு நான் கத்துத் தர்றேன். இல்ல, நீயே கத்துப்ப” கணவன் கல்யாணம் பற்றி முதல் முறையாக பேசிய நிமிடங்கள் அவள் கண் முன் வந்துப் போனது.
அவன் சொன்னது உண்மை தான். அவனின் உண்மையான முகத்தை திருமணத்திற்கு பின் தான் கண்டாள் அவள். அப்போதும் அவனைப் பிடிக்கத் தான் செய்தது. அவன் எப்படி இருந்தாலும் அவளுக்கு பிடிக்கத் தான் செய்யும் என்பதையே தாமதமாக தான் புரிந்து கொண்டாள் அவள்.
நேசிக்கும் ஒருவரை அவரின் நிறை, குறைகளோடு ஏற்பது தானே உண்மையான அன்பு?
கிரிக்கெட் வீரன் நிரஞ்சனை விட, கணவன் நிரஞ்சனை அதிகம் பிடித்தது. அவனோடு திருமணத்தை மறுத்தது எல்லாம் இப்போது அவளுக்கே அபத்தமாக பட்டது.
அடித்தாலும், பிடித்தாலும் அவனுடனான வாழ்க்கை அத்தனை சுவாரசியமாக சென்றது. சிரிப்பு, கோபம், சண்டை, சமாதானம், காதல், ஊடல், கூடல் என அவளின் நாட்களுக்கு சுவை கூட்டினான் அவன்.
அவள் ஒற்றைக் காலை மடக்கி தரையில் ஊன்றி, சிக்ஸர் அடிக்கும் புகைப்படமும், அதையொட்டியே நிரஞ்சன் அதை ஆவென்று வாய் பிளந்து பார்க்கும் படமும் இருக்க, அவள் முகத்தை நிறைத்தது புன்னகை.
அதிரடி ஆட்டக் காரனை அவள் அசர வைத்த கணம் அது.
“என்ன நீ அசால்ட்டா சிக்ஸ் அடிக்கற? அப்புறம் பால் போடுற எனக்கு என்ன மரியாதை?” நிரஞ்சனின் பொய்யான கோபக் குரல் காதில் ஒலிக்க, அவள் இதழ்கள் தாமாக புன்னகையில் விரிந்தது.
அந்நேரம் சரியாக அவளின் நினைவின் நாயகனே அலைபேசியில் அழைக்க, அம்மாவின் மடியில் இருந்து எழுந்து அறைக்குள் போனாள்.
“நந்து…” எடுத்ததும் கெஞ்சலாக அழைத்தான்.
“பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேன். லஞ்ச் சாப்பிட்டேன். ரெஸ்ட் எடுக்கறேன்” அவன் கேட்கும் முன்பாக அவள் பதில் சொல்லத் தொடங்கி இருந்தாள்.
“நீ மட்டும் எனக்கு எத்தனை கண்டிஷன் போடுற நந்து? ஆனா, நான் கால்ல விழுந்து கெஞ்சினாலும் இறங்கி வர மாட்ட. இது உனக்கே நியாயமா இருக்கா?” கோபமாக சலித்தான்.
“என்ன வேணும் நிரஞ்சன்?”
“நான் என்ன பண்ணனும்? நான் என்ன பண்ணா, நீ திரும்பவும் கிரிக்கெட்..”
“ப்ச், திரும்ப திரும்ப அதையே ஏன் பேசறீங்க?”
“நான் என்ன பண்ணனும் நந்து? அதை மட்டும் சொல்லு?”
“ம்ம். சொல்லிடுவேன்” மிரட்டினாள்.
“பிளீஸ், சொல்லு. நான் தலைகீழா நின்னாவது செஞ்சுடுறேன்.”
“அப்படியா?”
“கண்டிப்பா நந்து. என்னை நம்பலயா நீ?” அவன் குரலில் லேசாக கோபம் எட்டிப் பார்க்க,
“சென்னை வின் பண்ற ஃபர்ஸ்ட் மேட்ச்ல… நீங்க…” அவள் தயங்க,
“பட்டுனு சொல்லு நந்து” ஊக்கினான் அவன்.
“நம்ம தாதா (Dada) இங்கிலாந்துக்கு எதிரான மேட்ச் வின் பண்ணப்போ, என்ன பண்ணார் ஞாபகம் இருக்கா? எப்படி செலிபிரேட் பண்ணார்னு…”
“ஏய், பொண்டாட்டி. லூசா நீ?” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை யூகித்து அவன் கத்த, சிரிப்பை அடக்கினாள் நந்தனா.
“எஸ். அவரை மாதிரியே சட்டையை கழட்டி, அதை கையில் வச்சு சுத்தணும் நீங்க” அவள் சிரிப்புடன் சொல்ல, அந்த பக்கமிருந்து பதிலே வரவில்லை. அசாதாரண அமைதி.
“நிரஞ்சன்…” என்றாள் மெல்ல.
அவன் மனைவியான அவள் முன்பு இயல்பாக, உடை மாற்றவே அவனுக்கு பல நாட்கள் பிடித்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.
அப்படியிருக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், கோடி ரசிகர்கள் தொலைக்காட்சி வழியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவன் சட்டையை கழற்றுவது, நிஜத்தில் என்ன, கனவில் கூட நடக்கவே போவதில்லை என்பது அவளுக்கு நூறு சதவீதம் நிச்சயமாக தெரியும்.
“என் பொண்டாட்டி தானே நந்து நீ? என்னை என்ன செய்ய சொல்ற, தெரியுதா?” மனைவியிடம் அதை எதிர்பார்த்திருக்க வில்லை நிரஞ்சன். கோபத்தை மீறிய உணர்வில், “என்னை ரொம்ப டார்ச்சர் பண்ற நீ” என்று விட்டு அழைப்பை துண்டித்தான் அவன்.
எப்போதும் போல அவர்களுக்குள் விளையாட்டு வினையாகிப் போனதில், “அச்சோ” என்று நாக்கை கடித்துக் கொண்டு புலம்பினாள் அவள்.
“சாரி” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். அதை பார்த்த பின்பும் பதில் அனுப்பவில்லை அவன்.
தேவையில்லாத வேலை பார்த்து விட்டோம் என்று நொந்து கொண்டாள் நந்தனா. கணவன் அவள் பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்வான் என்று நினைத்து அதை அப்படியே மறந்துப் போனாள் அவள்.
“போன்ல மாப்பிள்ளை தானே நந்து? எப்போ வர்றார்?” அறைக்குள் தலையை நீட்டி பூர்ணிமா விசாரிக்க, “மும்பை மேட்ச் விளையாட இங்க வருவார் மா. அப்போ, அவர் கூடவே நானும் கிளம்பிடுவேன்.” கணவன் கண்டிப்பாக வருவான் என்ற உறுதியில் சொன்னாள் அவள்.
“ஓ சரி சரி. உன் மாமியார் கிட்ட பேசணும் நந்து. உனக்கு ஏழாம் மாசம் வளைகாப்பு பண்ணனும். அதுக்கு அப்புறம் நீ இங்கேயே, எங்க கூட இருக்கலாம். இத்தனை மாசம் சென்னையிலேயே இருந்துட்ட நீ. எனக்கும் மாசமா இருக்கும் உன்னை தாங்கணும்னு ஆசை இருக்கும் இல்ல?” அறைக்குள் நுழைந்து, மகளின் முகம் வருடி அவர் கேட்க, அம்மாவின் அன்பு அவளை நெகிழ்த்தியது.
“நீங்க சென்னை வாங்கம்மா பிளீஸ். எனக்கு.. எனக்கு…” அவள் தடுமாற,
“என்னடா?” என்றார் கேள்வியாக,
“எனக்கு நிரஞ்சன் கூடவே இருக்கணும் போல இருக்கு மா.” என்ற மகளின் வார்த்தையில், மகிழ்ந்து போனார் பூர்ணிமா.
மாதம் ஒருமுறை கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வருவதும், மறுநாளே கணவனிடமே ஒடுவதுமாக இருந்த மகளின் வாழ்க்கையை குறித்து ஆரம்பத்தில் அவ்வளவு கவலைக் கொண்டார் பூர்ணிமா. கார்த்திகேயன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால், அவர்கள் கவலை அவசியம் அற்றது எனும் படி, சில நாட்களிலேயே மகளை மீண்டும் மகிழ்ச்சியாக பார்க்கும் போது, அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்று தங்கள் மனதை சமாதானப் படுத்தி கொள்வார்கள் அந்தப் பெற்றோர்கள்.
சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போக செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல் இருந்த நம்பிக்கையில் அவள் முடிவை கேள்விகளின்றி அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் அவர்கள்.
இப்போதும் மகள் கணவனோடு இருக்க வேண்டும் என்று சொல்ல, பூரித்து புன்னகைத்தார் பூர்ணிமா.
“உன் விருப்பத்தை மீறி நாங்க என்ன செய்திட போறோம் நந்து மா. நீ மாப்பிள்ளை கூடவே இரு டா. நாங்க அங்க வந்து உன்னைப் பார்த்துக்கறோம்” பூர்ணிமா சொல்ல, பூவாய் மலர்ந்தது அவள் முகம்.
“அம்மா டின்னர் செய்யப் போறேன் நந்து. நீ ரெஸ்ட் எடு” என்று விட்டு அவர் வெளியேற, படுக்கையில் சரிந்தாள் நந்தனா.
கணவன் கண்களுக்குள் வந்து சிரித்தான்.
காரணமின்றி அவன் சிரிக்க மறந்த நாட்களும் இப்போது அவளுக்கு நினைவில் வந்தது.
“ஒரு ரன் நந்து. ஒரே ஒரு ரன், நான் எடுத்திருந்தா அன்னைக்கு முடிவே மாறி இருக்கும். ஆனா, அந்த யார்க்கர் பால் என்னை…” புலம்பினான் நிரஞ்சன்.
“நிரஞ்சன், அன்னைக்கு நடந்தது எதுக்கும் நீங்க பொறுப்பில்ல. நீங்க ஒரு ரன் எடுத்து சூப்பர் ஒவர் போய் இருந்தாலும், கப் மும்பைக்கு தான் போய் இருக்கும்” அந்த வருடத்தின் ஐபிஎல் தோல்வியை கடந்து வரவே அவனுக்கு பல மாதங்கள் பிடித்தது.
அவள் தான் பல்வேறு விதமாக பேசி அவனை அந்த குற்ற உணர்வில் இருந்து வெளியில் கொண்டு வந்தாள்.
“அப்பாடா” என்று அவள் நிமிரும் நேரம், உலக கோப்பை வந்தது.
அரை இறுதி வரை சென்று, தோல்வியை தழுவி திரும்பியது, மீண்டும் அவனின் மன அமைதியை கலைத்து போட்டது.
அந்நேரம் ரசிகர்கள், விமர்சகர்கள் கொடுமை போதாதென்று இந்திய அணி நிர்வாகமும் வீரர்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்தது.
அவர்களுக்கு கட்டுப்பாடுகளை, பயிற்சிகளை மிகக் கடுமையாக்கியது.
இந்திய அணி வெளிநாடுகளுக்கு, போட்டித் தொடர்ளுக்காக செல்லும் போது, இனி அவர்களின் மனைவி, காதலி என்று யாரும் உடன் வரக் கூடாது என்ற விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப் போகிறோம் என்று வீரர்களை மிரட்டியது நிர்வாகம்.
மனைவி, காதலி உடன் இருந்தால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று காரணம் சொன்னார்கள்.
“நாங்க என்ன ரோபோக்களா?” கொதித்தனர் வீரர்கள்.
நிரஞ்சனால் நிர்வாகமும், பயிற்சியும், விமர்சனங்களும் கொடுத்த மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதளவில் பெரிதும் துவண்டான் அவன்.
அந்த மாதம் நியூசிலாந்து தொடருக்கு சென்று விட்டு, வெற்றியுடன் மட்டும் திரும்பாமல் தோள் பட்டையில் காயத்துடனும் திரும்பினான்.
ஓய்வு அவனை ஓய செய்தது. ஆனாலும், அவனது போராட்ட குணம் அவனை விட்டு போகாதிருக்க, அதில் இருந்தும் மீண்டு வந்தான் அவன்.
அவன் இயல்பு நிலைக்கு மீள அடுத்தடுத்த போட்டிகள் அவனுக்கு பெரிதும் உதவியது.
பழைய நிரஞ்சனாக மாறியிருந்தான் அவன். அவனது பேட்டிங், பவுலிங் சிறப்பாகி, அதிரடிக்கு திரும்பி இருந்தான்.
அந்நிலையில் தான் அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் ஆரம்பமானது.
கிரிக்கெட்டை போல தான் நந்தனாவின் திருமண வாழ்க்கையும் இருந்தது. எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுடன், முடிவுகளுடன் அவளுக்கு அதிர்ச்சியையும், இன்ப அதிர்ச்சியையும் மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தது.
நிரஞ்சன், அவன் நேசிக்கும் கிரிக்கெட் என இரண்டின் மேலும் அவளுக்கு தீராக் காதல் இருந்ததினால் அனைத்தையும் எளிதில் கடந்தாள் நந்தனா.
மனதை தொட்டு சொல்ல வேண்டும் என்றால், திருமண வாழ்க்கையை ரசித்து தான் வாழ்ந்தாள் அவள்.
அவளுக்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. ஏமாற்றங்களை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் சுலபமாக அவளால் அதை எதிர்கொள்ள முடிந்தது.
கணவனுடன் ஒன்றாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு, உடற்பயிற்சி செய்து, கிரிக்கெட் ஆடி, கதை பேசி, சிரித்து என அவர்கள் சந்தோசமாக இருந்த நாட்கள் தான் அதிகம். ஆனாலும், சண்டையிடும் நாட்களின் எண்ணிக்கையும் அவளை அதிகம் தொல்லை செய்யவே செய்தது.
அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் தொடங்க இரண்டு நாட்களே இருந்த நிலையில் அவளுக்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தான் சுகாஸ்.
அவளிடம் கொடுக்கப்பட்ட சென்னை அணி வீரர்களின் பட்டியலில் சுகாஸின் பெயர் இல்லாதிருக்க, பட்டியலை மீண்டும் மீண்டும் திருப்பி திருப்பி சரி பார்த்தாள் அவள்.
முடிவில் சிவராஜிடம் போய் நின்றாள்.
“இந்த சீசன் சுகாஸ் விளையாடல நந்து” தன் வேலையில் கவனமாக அவர் சொல்ல,
“ஏன்?” என்றாள் நம்ப முடியாத அதிர்வுடன்.
“தெரியல. அவனே விலகிட்டான். மேனேஜ்மென்ட் கூட ஏதோ பிரச்சினை போல” என்றவர்,
“ப்ச், டீமும், ஃபேன்ஸிம் அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். ஆனா, அவன் வர மட்டான் போல” என்று முடித்து விட்டு, தன் வேலையில் மூழ்கினார் அவர்.
அவசர அவரமாக அவனை அழைத்தாள். அவளின் அலைபேசி அழைப்புகளை எடுக்கவே இல்லை சுகாஸ். இருபதிற்கும் மேற்பட்ட முறைகள் முயன்று விட்டு, இறுதியில் நிரஞ்சனின் எண்ணில் இருந்து அழைத்தாள் நந்தனா.
“பிளீஸ், நிரஞ்..” என்று அவன் தொடங்க,
“இட்ஸ் மீ” என்று கத்தினாள் அவள்.
“பிளீஸ், என்னை எதுவும் கேட்காத நந்து. என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது.” அவள் மௌனமாக செவி சாய்க்க,
“ஆனா, காரணத்தை உன்கிட்ட கண்டிப்பா ஒரு நாள் சொல்வேன் நந்து. நடந்ததை ஜீரணிக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடேன் பிளீஸ்” அதற்கு மேல் அவனை எதுவுமே கேட்கவில்லை நந்தனா.
இந்த முடிவை வலிக்க, வலிக்க தான் எடுத்திருப்பான் அவன் என்பது அவன் குரலிலேயே தெரிய, “ஓகே. ஆனா, உன்னை டீமில் பார்க்க ஐ ஆம் வெயிட்டிங் சுகாஸ்” என்றாள் குரலில் அவன் மீதான நட்பையும், அன்பையும் தேக்கி.
“தாங்க்ஸ் நந்து” என்றான் சுகாஸ்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.