சூரியன் சிவப்பு கோளமாய் மெல்ல கீழிறங்கி கொண்டிருந்தான். நந்தனாவிற்குள் கோபம் சுள்ளென்று வேகமாக மேலெழுந்து கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு அவள் கேலியாக சொன்னதை நிரஞ்சன் இப்போது தீவிரமாக அவளுக்கே திருப்பிக் கொடுக்க, அவளுக்கு அப்படியொரு கோபம்.
இன்றிரவு உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று மனதில் கருவிக் கொண்டாள் அவள்.
ஒரு மாலை வேளையில் வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்க, நந்தனா ஒரு மூலையில் சிவராஜிடன் அமர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு வந்து பால் போடு, பொண்டாட்டி” என்று நிரஞ்சன் அழைக்க,
“வேலையா இருக்கேன் நிரஞ்சன்” என்று அவனை நிமிர்ந்தும் பாராமல் மறுத்து விட்டாள் அவள்.
ஒரு மணி நேரம் கழித்து நிரஞ்சன் தன் வலையில் இருந்து ஓய்விற்காக வெளியில் வர, அங்கே மற்றொரு வலையில் ராஜ் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது அவன் கண்ணில் விழுந்தது. அவனுக்கு பந்து வீசிக் கொண்டிருந்தது சாட்சாத் அவன் மனைவி நந்தனா தான்.
கடுப்புடன் பேட்டை கையில் சுழற்றிபடி அவர்களை நோக்கி நடந்தான் நிரஞ்சன். சத்தம் எழுப்பாமல் ஒரு ஓரமாய் சென்று அவன் நிற்க, அவனை முதலில் ராஜ் தான் கவனித்தான்.
“ஹாய் ண்ணா” என்று விட்டு, “நீ பால் போடு நந்து” என்று அவன் சொல்ல, சகஜமாக கணவனுக்கு புன்னகையை தந்து விட்டு பந்து வீசத் தொடங்கினாள் நந்தனா.
ராஜ் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்து கொண்டே அவள் பந்து வீச, அந்த பந்தை தன் முகத்திலேயே அவள் வீசியது போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தான் நிரஞ்சன்.
“என்னை எப்போ பார்த்தாலும் நோ பால் போடாத சொல்றியே? எங்க எப்படி போடாம இருக்கறதுன்னு நீ போட்டு காட்டுப் பார்ப்போம்” நிரஞ்சன் சத்தமாக தமிழில் சொல்ல, ராஜ் இருவரையும் புரியாமல் பார்த்தான்.
“இங்க பாருங்க நிரஞ்சன். அப்படி ஈசியா சொல்லிக் கொடுக்க முடியாதுன்னு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். உங்க ஹையிட்க்கு சில நேரத்துல கால் கோட்டை தாண்டி வெளில வர்றது தடுக்க முடியாது தான். முதல்ல நோ பால் பத்தி யோசிக்கவே கூடாது. அடுத்தது, நீங்க பால் போட எப்பவும் ஸ்டார்ட் பண்ற இடத்தை விட இன்னும் சில ஸ்டெப் முன்னாடி வந்து உங்க ரன்னிங் ஸ்டார்ட் பண்ணா.. சரியா இருக்கும் இல்ல? அதாவது உங்க ரன் அப்பை (Run up) டிஸ்டன்ஸ் குறைக்கணும். பதட்டப்படாம, கான்சியஸா ஆகாம அப்படியே ஒரு ஃப்ளோல போட்டா, லாண்டிங் சரியா இருக்கும்” நந்தனா விளக்க,
“சொல்றது ஈஸி” என்று தோள் குலுக்கினான் அவன். இரு முறை அவனைப் போலவே ஓடி வந்து பந்து வீசிக் காட்டினாள். பல டெக்னிகல் விளக்கங்களும் அவள் கொடுக்க, ஒருவித இறுக்கத்துடன் அவளை கவனித்தான் நிரஞ்சன்.
“கோபமா?” என்று கணவனை கரிசனத்துடன் கேட்டு அவன் கரம் பற்றினாள் நந்தனா. ஒரு கையசைப்புடன் ராஜிடம் விடைபெற்று நிரஞ்சனோடு நடந்தாள் அவள்.
அவனது வேக நடையிலேயே அவன் கோபம் தெளிவாக தெரிய, “எதுக்கு கோபம்?” கோர்த்திருந்த கரத்தில் அழுத்தத்தை கூட்டினாள்.
சலிப்புடன் திரும்பி அவளை முறைத்து, “எனக்கு பால் போட மட்டும் உனக்கு டைம் இல்ல. அப்படித் தானே?” என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்த, ஒற்றை விரல் நீட்டி அவன் புருவத்தை நீவி விட்டாள் நந்தனா.
“பொண்டாட்டி, வந்து பால் போடுன்னு சொன்னா? உடனே ஓடி வரணுமா? இங்க நான் உங்க பொண்டாட்டி கிடையாது. வீடியோ அனலிஸ்ட் நந்தனா” என்றாள், அவன் இடுப்பில் இடித்து,
“வேலையா இருந்தேன் நிரஞ்சன். ஃப்ரீயாக்கிட்டு உங்ககிட்ட வரலாம்னு பார்த்தேன். உங்களுக்கு ரவி பால் போட்டுட்டு இருந்தார். அதான் டிஸ்டர்ப் பண்ணல” அவள் விளக்க,
“ஓஹோ. அனலிஸ்ட் நந்தனா? ரைட்டு? ஆனா, என் கையை ஏன் பிடிச்சு தொங்கிட்டு வர்ற? என்னை உரசிட்டு, இடுப்புல இடிச்சுட்டு.. இதெல்லாம் என் பொண்டாட்டி மட்டும் தான் செய்ய முடியும். அனலிஸ்ட் நந்தனா கொஞ்சம் இல்ல, ரொம்பவே தள்ளி நில்லுங்க ” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவன் சொல்ல, அவனை மேலும் நெருங்கி அணைத்த படி நடந்தாள் அவள்.
அவன் முறைக்க,
“ரொம்ப வாய் பேசாதீங்க. அப்புறம் வீட்டுக்கு போனதும் கடிச்சு வச்சுடுவேன்” அவள் மூக்கை சுருக்கி, பல்லைக் கடித்துக் காட்ட, அடக்கமாட்டாமல் சத்தமாக சிரித்து விட்டிருந்தான் நிரஞ்சன்.
அந்த சிரிப்புடன் தான் அன்று வீடு திரும்பினார்கள் அவர்கள். ஆனால், அதை மனதில் வைத்திருந்து அவன் இன்று வேறு விதமாக அவளுக்கு திருப்பிக் கொடுக்க, கோபத்தில் கனன்றாள் அவள்.
அன்றைய போட்டி முடியும் வரை கணவனை தனியாக பிடிக்க முடியாது, அப்படியே அவர்களுக்கு தனிமை வாய்த்தாலும், மைதானத்தில் வைத்து விவாதிக்க முடியாது என்று வீடு திரும்ப காத்திருந்தாள்.
அவள் முன்னிருந்த மடிக் கணினி திரையில் போட்டி ஓடிக் கொண்டிருக்க, மனம் அதற்குள் செல்ல மறுத்தது.
அவளுக்கு அப்பாவின் நினைவு வந்தது. சில மாதங்களுக்கு முன் வீடு சென்ற நினைவு வந்தது.
மும்பையில் அவர்கள் வீட்டு மாடியில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள் அப்பாவும், மகளும். இரவில் இருளில் நட்சத்திரங்களை தேடிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள். மகளிடம் பொதுவான விஷயங்களை பேசியபடி இருந்தார் கார்த்திகேயன்.
திடீரென்று, “என்ன நந்து மா? மீடியா கொஞ்சம் ஓவரா தான் போறாங்க இல்ல? நிரஞ்சன் இந்த விமர்சனங்களை எல்லாம் ரொம்ப சீரியஸா எடுத்துக்கறாரா?” நடந்துக் கொண்டே கார்த்திகேயன் கேட்க,
“இல்லப்பா. அவர் மொபைல் பார்க்கறது, நியூஸ் கேட்கறது எல்லாம் ரேர் ப்பா. அடிக்கடி உலக நடப்பு அப்டேட் பண்ணிப்பார். அவ்ளோ தான். மத்த காசிப் செய்திகளுக்கு எல்லாம் பெருசா மதிப்பு கொடுக்க மாட்டார் பா.”
“அப்புறம் ஏன்டா டல்லா இருக்க?” அவர் அக்கறையுடன் கேட்க,
“அவர் தானே ப்பா, பார்க்க மாட்டார் சொன்னேன்? ஆனா, யாராவது அனுப்பி வச்சா?”
“என்னம்மா சொல்ற?”
“ம்ம். இதுக்குனே நாலு பேர் இருப்பாங்களே ப்பா. டேய் இதை பாருனு, டேய் அதை பாரு. உன்னை தான் சொல்லி இருக்காங்ன்னு லிங்க் அனுப்பி வைக்க நிறைய பேர் இருக்காங்களே. நிறைய நேரம் கண்டுக்க மாட்டார் பா. ஆனா, சில டைம் என்னனு பார்க்க ஓபன் பண்ணுவார். அப்படியே அப்செட் ஆகிடுறார்.”
“அப்படி லிங்க் அனுப்பற ஆளுங்களை பிளாக் பண்ணி விடு நந்து மா. என்ன இருந்தாலும், நாம எல்லோரும் நார்மல் மனுஷங்க தானே மா? அடிச்சா வலிக்க தானே செய்யும்? ஆனா, மாப்பிள்ளை இதையெல்லாம் கண்டுக்காம இருக்க பழகணும். இல்லன்னா ரொம்ப கொடுமையா இருக்கும் நந்து மா. முன்னாடி மாதிரி கேர்ஃப்ரீ ஆட்டிட்யூட்டோட இருக்கணும் அவர்” கார்த்திகேயன் சொல்ல, மௌனமாய் கேட்டபடி உடன் நடந்தாள்.
“நிரஞ்சன் பழையபடி நல்ல ஃபார்முக்கு வந்துட்டார். அசத்தலா ஆடுறார். அது தான் நமக்கு முக்கியம். இந்த விமர்சனங்களை எல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்க கூடாது மா.
இப்போ எல்லாம் விமர்சனங்கள் எங்கடா நேர்மையா இருக்கு? எல்லாம் அவனவனுக்கு ஒரு பிஆர் டீம் வச்சு, அவங்கவங்களே புரோமோட் பண்ணிக்கறாங்க.
டெக்னிகல்லா கிரிக்கெட் தெரிஞ்சு விமர்சனம் பன்றவன் ரொம்ப கம்மி டா. தனக்கு தான் எல்லாம் தெரியும்னு நினைச்சுட்டு கண்டபடி விமர்சனம் பண்ணி, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம தனிப்பட்ட தாக்குதல் நடத்தி, அடுத்தவனை காயப் படுத்தறவங்க தான் இப்போ அதிகம் டா. அவங்க சொல்றதை எல்லாம் மனசுல ஏத்தி, நம்ம நிம்மதியை நாம கெடுத்துக்க கூடாது நந்து மா”
அப்பாவின் அனுபவம் பேச ஆமோதித்தாள் மகள்.
“அப்பா இதுக்காக தான் அவ்வளவு பயந்தேன் நந்து மா. ஆனா, நீங்க ரெண்டு பேருமே இதை சரியா ஹாண்டில் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு அந்த முதிர்ச்சி இருக்கு.” என்றார் மகளின் தலைக் கோதி,
“கிரிக்கெட் தான் உங்களுக்கு வாழ்க்கை. கவனமா ஆடுங்க.” அவர் சொல்ல, புன்னகைத்தாள் நந்தனா.
“நேரமாச்சு. மாப்பிள்ளை வெயிட் பண்ணுவார். நீ போய் தூங்கு டா” என்று அவர் சொல்ல, “நீங்களும் படுங்க பா. நடந்தது போதும்” என்றபடி கீழிறங்கி வந்தாள் நந்தனா.
அவள் படுக்கையில் சரிந்ததும், அதற்காகவே காத்திருந்தது போல அவளை வளைத்தது நிரஞ்சனின் கரங்கள்.
அவன் கைகளில், அவன் காதலில், ஜன்னல் வழி வந்த காற்றில், எப்போதும் போல சிரித்து, சிலிர்த்து காலத்தையே மறந்து போனாள் நந்தனா.
பொழுது புலர்ந்தும் கூட அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மெல்ல அவளை எழுப்பினான் நிரஞ்சன்.
“ப்ச், டேய். ஆளை விடு டா. பொண்டாட்டி பொண்டாட்டி சொல்லியே மயக்கறான். பொண்டாட்டி தானே மயக்கணும்?” தூக்க கலக்கத்தில் அவள் உளற,
“புருஷனும் மயக்கலாம் டி பொண்டாட்டி” குனிந்து அவள் நெற்றியில் செல்லமாக முட்டி, காதில் காதலாக முணுமுணுத்தான் நிரஞ்சன்.
“பிராக்டீஸ் போறேன்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே,
“ஐயோ, இதுக்கு மேல என்னால முடியாது. எவ்ளோ பிராக்டீஸ் பண்ணுவ நீ?” அவன் கழுத்தை வளைத்து இழுத்து, தன்னோடு இறுக்கியபடி அவள் பொய்யான கோபத்துடன் கேட்க, சிரித்தான் அவன்.
“இப்ப யாரு ஸ்டார்ட் பண்றா? நீயா? நானா?” அவன் கிசுகிசுக்க, பட்டென்று கண் திறந்தாள் நந்தனா.
இரவு வெகுவாக நேரம் சென்றே உறங்கி இருக்க, போதிய உறக்கம் இல்லா கண்கள் நெருப்பாக எரிய, அவளின் கண்கள் படக்கென்று உறக்கத்திற்காக தானாக மூடிக் கொண்டது.
“பிராக்டீஸ் மேக்ஸ் அ மேன் பெர்ஃபெக்ட் பொண்டாட்டி” அவன் குரலில் சிரிப்பு வழிய, அவள் இதழ்களும் சிரிப்பில் மலர்ந்தது.
“டேய், எதை எதுக்கு சொல்ற நீ?” என்றவள், “எல்லாம் ஆல்ரெடி பெர்ஃபெக்ட்டா தான்..” முடிக்க முடியாமல் அவள் உதடு கடிக்க, நீண்டதொரு விசிலடித்தான் நிரஞ்சன்.
“ப்ச், எப்ப பாரு. என்னை கிண்டல் பண்ணிட்டு… போங்க நிரஞ்சன்” போக சொல்லி விட்டு, அவன் மார்பில் ஒன்றினாள் அவள். ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து, மனைவியின் வாசத்தை தனக்குள் நிரப்பிக் கொண்டான் நிரஞ்சன்.
“நெட் பிராக்டீஸ் போறேன் நந்து. நீ நல்லா ரெஸ்ட் எடு. இவெனிங் ஷாப்பிங் போகலாம். இல்லனா, டின்னர்? பீச்? உன் விருப்பம் தான். ஓகே?”
“ம்ம். ஓகே. டைம் என்ன?”
“அஞ்சு மணியாகுது நந்து” என்றபடி, மனைவியின் தலையை தலையணைக்கு மாற்றி விட்டு, எழுந்துப் போனான் அவன்.
எட்டு மணி வரை நன்றாக உறங்கி விட்டு, அதன் பின் எழுந்து குளித்து வெளியில் வந்தாள் நந்தனா.
அவளுக்கு மிக அழகான விடியலை தந்த அந்த நாள் முழுவதும் அழகாகவே நகர்ந்தது.
பெற்றோரின் நட்பை, அன்பை, நெருக்கத்தை பார்த்து வளர்ந்தவள் அவள்.
அந்த அழகிய நாட்களை போலவே, இப்போதும் பெற்றோருடன் அவள் பொழுது இனிமையாய் கழிந்தது.
பெற்றோரின் சின்ன சின்ன வம்பு சண்டையை வாய் பார்த்து அவர்களுக்கு நடுவராக நின்றாள் அவள்.
அம்மாவுடன் இணைந்து சமைத்தாள், அவர் கையால் ஊட்டி விட மதிய உணவை உண்டாள். அப்பாவுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்து விவாதித்தாள். அந்த தந்தைக்கு மகள் கிரிக்கெட் சொல்லிக் கொடுக்க, பெருமிதத்தில் பூரித்தது அவர் கண்கள்.
மதிய வேளையில் அவர் தன் வேலையை பார்க்க கிளம்ப, தனித்து விடப்பட்டனர் தாயும், மகளும்.