“ம்ம். எப்பவோ ஒரு சண்டையில அப்பா அதை சொல்லி உங்களை திட்டின ஞாபகம் இருக்கு மா” அவள் நமுட்டு சிரிப்புடன் சொல்ல,
“ஆமா, ஆமா. அவருக்கு அதை சொல்லாட்டி தூக்கமே வராது” சலித்து கொண்டு தொடர்ந்தார் பூர்ணிமா.
“பொழுது போகாம கிரிக்கெட் ஆடுற வேலை வெட்டி இல்லாத, வெட்டி பயலுக்கு எல்லாம் என் பொண்ணை கொடுக்க முடியாது சொல்லிட்டார்” பூர்ணிமா சொல்ல,
“அதுக்கு அப்பா என்ன சொன்னாங்க?”
“நீயென்ன இப்ப மாதிரி நினைச்சியா டா நந்து? அப்போ எல்லாம் பெரியவங்க தான் சம்மந்தம் பேசுவாங்க. இந்த காலம் மாதிரி கிடையாது” என்றவர்,
“உங்க அப்பா வீட்ல, சரி தான் உலகத்தில் இல்லாத பொண்ணுன்னு எழுந்து போய்ட்டாங்க. ஆனா, உங்கப்பா என்னை பிடிச்சிருக்கு சொல்லி பிடிவாதமா…”
“இதையும் அப்பா சொல்லி இருக்கார் மா. ஒத்த கால்ல கொக்கு மாதிரி நின்ணு உன்னை கட்டினதுக்கு, ஒத்தையாவே இருந்து இருக்கலாம்னு சொல்வாரே” நந்தனா சொல்ல,
“உங்கப்பாக்கு இருக்க கொழுப்பு இருக்கே” என்று சிரித்த பூர்ணிமா,
“கிரிக்கெட் இல்லனா என்ன பண்ணுவன்னு அன்னைக்கு எங்கப்பா கேட்டப்ப, உங்கப்பா பதில் சொல்ல முடியாம சிலையா நின்னார் நந்து மா. கிரிக்கெட் தவிர ஒன்னுமே தெரியாது அவருக்கு. படிப்பை பாதியிலயே நிறுத்திட்டு தான் கிரிக்கெட் ஆட போய் இருக்கார். அன்னைக்கு அப்படியே மரம் மாதிரி நின்னார்”
“அப்பா பாவம்” வருந்தினாள் மகள்.
“ம்ம். ஆனா, உங்கப்பா அதே கேள்வியை மாப்பிள்ளை கிட்ட கேட்டப்போ. கொஞ்சம் கூட யோசிக்காம பதில் சொன்னார் டா அவர். என் குடும்பத்தை என்னால காப்பாத்த முடியும்னு பளிச்சுன்னு சொன்னார். மாப்பிள்ளை கிரிக்கெட்டில் சாதிச்சது கூட உங்கப்பாவை இம்ப்ரஸ் பண்ணல. உன்னை நல்லா பார்த்துப்பேன் சொன்னது தான் அவருக்கு ரொம்ப பிடிச்சது நந்து மா”
“அப்புறமும் ஏன் மா அவரை வேணாம் சொன்னார் அப்பா. ஏன் பொண்ணு தர முடியாது சொன்னார்?”
“உங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகப் போகுது. இந்த கேள்வியை இப்போ கேட்கற நந்து. ஆனா, அப்பா முன்னாடியே சொன்னாரே? அது உன் முடிவுன்னு” பெருமூச்சு விட்டு, தலையசைத்தாள் அவள்.
“நீ தான் எங்க உலகம் நந்து மா. மாப்பிள்ளைக்கு உன்னை மனசு நிறஞ்சு தான் தாரை வார்த்து கொடுத்தோம்”
“நான் அவரோட சந்தோசமா தான் இருக்கேன் மா” சட்டென அம்மாவை நிமிர்ந்து பார்த்து சொன்னாள் அவள்.
“தெரியும் நந்து மா. ஒரு அம்மாக்கு மக முகத்தை பார்த்தே கண்டுபிடிக்க முடியாதா? நீ சந்தோசமா இருக்கனு எனக்குத் தெரியும். ஆனா, ஏன் இவ்வளவு குழப்பமா இருக்க?”
இதுவரை யாரும், ஏன் அவள் மகா புத்திசாலி என்று நினைக்கும் தந்தையும், கூடவே இருந்து சதா அன்பை பொழியும் கணவனும் கூட கேட்காத கேள்வியை தாய் கேட்க, அவரை அதிர்ந்து பார்த்தாள் நந்தனா.
“ம்மா..” என்றாள்.
“மனசுல எந்நேரமும் எதையோ போட்டு யோசிச்சு குழப்பிட்டு இருக்க தானே?”
அம்மாவை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
ஆனால், மறுக்க தோன்றவில்லை.
“அப்பா கதையை எதுக்கு சொன்னேன் தெரியுமா நந்து?” அவள் மறுப்பாக தலையை அசைக்க,
“அந்த காலத்துல இப்போ போல வசதிகள் கிடையாது டா. உங்கப்பா உலகம் சுத்தும் போது, நான் ஊருல தான் இருப்பேன். கிரிக்கெட் மட்டும் தான் அவருக்கு தெரியும். வேற எதுவுமே தெரியாது. அன்பை கூட வெளிப்படுத்த தெரியாத அப்பாவியா தான் இருந்தார் அப்போ. கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட்ல மேல வந்துட்டே இருந்தார் டா. எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது, நீயும் என் வயித்துல வந்த..”
“என்னம்மா ஆச்சு?”
“அப்பா கைக்கு வந்த சான்ஸ் நந்து மா. இந்திய டீமுக்கு கிட்டத்தட்ட செலக்ட் ஆகிட்டார். ஆனா, கடைசி நேரம் வேற ஒருத்தருக்கு தூக்கி கொடுத்துட்டாங்க.”
“அப்பா சொல்லி இருக்கார் மா. ஞாபகம் இருக்கு” வலியுடன் சொன்னாள் மகள்.
“அன்னைக்கு உங்கப்பா வாழ்க்கையே வெறுத்து போய் ஊருக்கு வந்தார் நந்து. முழுசா ஒரு வாரம் எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்து இருந்தார். பசி, தூக்கம், சுற்றியிருந்த எங்களை… எல்லாத்தையும் மறந்து ஒரு தனி உலகத்துல மூழ்கிட்டு இருந்தார் டா. நான் வற்புறுத்தி உலுக்கி கேட்கவும் தான் விஷயத்தை சொன்னார். எல்லாமே போச்சு பூரணி, நான் என்ன பண்ண போறேன் இனி. உன்னையும், குழந்தையையும் எப்படி காப்பாத்துவேன்? எனக்கு கிரிக்கெட் தவிர எதுவுமே தெரியாதுன்னு வேதனையோட கதறுனார் நந்து மா” அவர் குரலில் இப்போதும் வேதனையின் சாயல்.
அம்மாவிற்கு தேறுதல் சொன்னாள் மகள். அவரின் மடி சாய்ந்து கொண்டாள் நந்தனா.
குனிந்து மகளின் முகம் பார்த்து, “அந்த அதிர்ச்சியை என்னால தாங்க முடியல நந்து. டெலிவரிக்கு பத்து நாள் இருந்தது. ஆனா, அப்பவே வலி எடுத்து நீ பிறந்துட்ட. உன்னைப் பார்த்ததும் அப்பாவுக்கு ஒரு புது நம்பிக்கை வந்திருக்கு நந்து குட்டி”
அவர் சொல்ல,
“அப்பா நிறைய டைம் சொல்லி இருக்கார் மா” என்றாள் நந்தனா சிரித்துக் கொண்டே.
“ஒரு வாரம் உன்னை கீழேயே இறக்கி விடாம, கையில தூக்கி வச்சிட்டே திரிஞ்சார். உனக்கு பசியாத்த மட்டும் தான் என்கிட்டயே கொடுப்பார்னா பார்த்துக்கோ.” சிரித்துக் கொண்டனர் இருவரும்.
“நான் எதிர்பார்க்கவே இல்ல நந்து. திடீர்னு மும்பை கிளம்பிட்டார். என்னனு கேட்டா, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் பூர்ணி. நீயும் என் கூட சீக்கிரமே மும்பை வர மாதிரி இருக்கும். ரெடியா இருன்னு சொல்லிட்டு போனவர் தான்”
“மும்பை டீம் கோச்சா திரும்பி வந்திருப்பார்” பெருமையாக சொன்னாள் நந்தனா.
“ஆமா டா. ஆனா, அன்னைக்கு அப்பா மனசொடிந்து போகாம, தெளிவா ஒரு முடிவெடுத்ததால மட்டும் தான் அவரால கோச்சாக முடிஞ்சது நந்து மா. சும்மா ஒன்னும் யாரும் அவருக்கு அந்த பதவியை தூக்கி கொடுக்கல.”
“அப்பா மிரட்டி வாங்கினாங்க. தெரியும் மா”
“அந்த முடிவெடுக்க அவருக்கு எவ்வளவு மனத் தைரியம் தேவைப் பட்டிருக்கும் நந்து? யோசிச்சு பாரு. இன்னைக்கு மாதிரி நியூஸ், ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் அப்போ கிடையாது. டீமுக்குள்ள நடக்கற எந்த செய்தியும் வெளில வராது. செலக்சன் டீம் எல்லாம் கமிட்டி பார்த்து பண்றது தான். அவங்க வச்சது தான் எழுதப்படாத சட்டம் அங்க. அவங்களை மீறி யாரும், எதுவும் பண்ண முடியாது.
ஆனா, எனக்கு நீங்க வாய்ப்பு கொடுக்கல இல்ல? உங்க ஆளுங்களுக்கு தூக்கி கொடுத்தீங்க இல்ல? அப்போ அதுக்கு பதிலா, நான் கேட்கிற இந்த பதவியை கொடுங்கடான்னு மிரட்டி தான் வாங்கினார் உங்கப்பா. இல்லனா, கிரிக்கெட் கோட்டையான மும்பையில், தமிழ்நாட்டு கார்த்திகேயனுக்கு கோச் ஆகுறது சாத்தியமா? நீயே சொல்லு?”
“அப்பா ஹீரோ தான் இல்லம்மா” அவள் குரலில் அப்படியொரு பெருமிதம்.
“நமக்கு எப்பவுமே அவர் ஹீரோ தான் டா. ஆனா, அவருக்கு நீ தான் எல்லாம். அவர் உன்னை வளர்க்கல. நீ தான் அவரை வளர்த்த நந்து குட்டி. வாழ்க்கை, கிரிக்கெட் ரெண்டுத்து மேலயும் அவருக்கு திரும்பவும் பிடித்தம் வர நீ தான் காரணம்.”
தந்தை பல முறை அதை சொல்லியிருக்க, புன்னகைத்தாள் நந்தனா.
“வாழ்க்கை ரொம்ப அழகானது நந்து மா. அது எப்பவும் நமக்கு பல வாய்ப்புகளை கொடுத்துட்டே தான் இருக்கும். நமக்கு நிறைய சாய்ஸ் கொடுக்கும். ஆனா, சரியானதை தேர்ந்தெடுக்கறது நம்ம கையில தானே இருக்கு?
நமக்கு தேவையான, தெளிவான முடிவை நாம தான் எடுக்கணும். நமக்கு என்ன வேணும்னு நாம தான் முடிவு பண்ணனும். நம்மை விட, நமக்கு என்ன வேணும்னு யாரால் சொல்ல முடியும்? சொல்லு?” சிந்தனையில் சுருங்கியது அவள் கண்கள்.
“உனக்கு என்ன குழப்பம்னு எனக்கு தெரியல நந்து மா. ஆனா, நல்லா யோசிச்சு தெளிவான முடிவா எடு. வாழ்க்கை விளையாட்டு இல்லடா. அடுத்த போட்டியில் ஜெய்ச்சுக்கலாம்னு அசட்டையா இதுல இருக்க முடியாது.” என்றவர், “பிரச்சனையை அம்மா கிட்ட சொல்ல முடியும்னா சொல்லு நந்து” என்றார் அவள் கன்னம் பற்றி.
‘என் வாழ்க்கையில் எல்லாமே இருக்கு மா. ஆனா, எதுவுமே இல்லாத மாதிரி இருக்கு. நிரஞ்சனும், நானும் ஒன்னா தான் ஓடிட்டு இருக்கறோம். ஆனா, ஒன்னை நோக்கி ஓடல. ஆளுக்கொரு பக்கமா ஓடிட்டு இருக்கோம்னு தோணுது. அவர் அவரா தான் இருக்கார். அன்பா தான் இருக்கார். ஆனாலும், எதுவோ குறையுது.
அவர் பிராமிஸ் பண்ண மாதிரி எங்க வாழ்க்கையை அவ்வளவு சுவாரசியமாக்கி இருக்கார். ஆனாலும், ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுது மா. எதுவுமே திருப்தி தரல. எதுக்காக இப்படி ஓடிட்டு இருக்கேன்னு இருக்கு? எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உட்கார்ந்திடணும் போல இருக்கு மா’ மனதில் ஓடிய எண்ணத்தை அம்மாவிடம் சொல்லும் துணிவு இல்லாமல், மனதிலேயே பேசிக் கொண்டாள் அவள்.
“அம்மா கிட்ட சொல்ல முடியலனா பரவாயில்ல நந்து. ஆனா, இப்படி குழப்பிட்டே இருக்காத டா. மனசு அமைதியா இருந்தா தான், நாம நிம்மதியா இருக்க முடியும்” பூர்ணிமாவின் பாசம் அறிவுரைகளாக வர, அமைதியாய் கேட்டுக் கொண்டாள் நந்தனா.
தனித்தனியாக சென்ற மாமனும், மருமகனும் மாலை ஒன்றாக திரும்பி வந்தனர்.
கணவனுடன் காரில் ஏறினாள், காலமும் அவர்களோடு சேர்ந்து காற்று வாங்கியவாறு ஊர் சுற்றியது.
மைதானத்தில் இருந்து வந்த ஆரவார குரல்கள் அவளை நடப்பிற்கு இழுத்து வந்தது.
அம்மாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதில் வலம் வர, தெளிவாக ஒரு முடிவெடுக்க முடிந்தது.
பல நாட்களாக குழப்பத்திலேயே இருந்தவள் அன்று நிரஞ்சன் அவனாகவே ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கிறான் என்பதை அறிந்ததும், ஒரு நிலையான முடிவிற்கு வந்திருந்தாள்.
அவள் ஏற்கனவே எடுத்த முடிவு தான். ஆனால், இத்தனை நாட்களாக செயல் படுத்தும் தைரியம் இல்லாமல் இருந்தவளின் மனம் இன்று தனிச்சையாக முடிவை நோக்கி நகர்ந்திருந்தது.
கணினி திரையில் போட்டியை நிறுத்தி விட்டு தனது மெயிலை திறந்தாள் நந்தனா.
ஒரு மாதத்திற்கு முன்பு அடித்து வைத்திருந்த ஈ-மெயிலை இப்போது படித்து பார்த்து சரிப் பார்த்துக் கொண்டாள்.
அதை உரியவருக்கு அனுப்பும் முன்பு மனம் பதறியது. அவள் கைகள் நடுங்கியது. கண்கள் மளுக்கென்று குளம் கட்டி நின்றது. இத்தனை துன்பமாக இருக்கும் என்று அவள் நினைத்து பார்த்திருக்கவில்லை.
நெஞ்சை அடைக்கும் உணர்வில் கண்கள் கரித்துக் கொண்டு வர, கேமரா கண்களில் விழுந்து விடாமல் இருக்க உள்ளே நகர்ந்து அமர்ந்தாள் அவள்.
கொஞ்சம் தண்ணீர் குடித்து மனப் பதறலை சீர் செய்தாள். நடுங்கிய கைகளால் ஈ -மெயிலை அனுப்பி விட்டு, ஆழ மூச்செடுத்து நிமிர்ந்தாள். மனதில் இனம் புரியா ஆழ்ந்த அமைதி பரவ, கண்களும், இதழ்களும் புன்னகையில் விரிந்தது.
“என்ன ஒரே ஸ்மைலி ஃபேஸா இருக்கு? என்ன விஷயம் பொண்டாட்டி?” அவளுக்கு காஃபி கோப்பையை நீட்டியபடி அருகில் வந்து அமர்ந்தான் நிரஞ்சன்.