போட்டி அதன் இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக செல்ல, இருவரும் அதில் மூழ்கிப் போனர்கள்.
அன்றும் சென்னை அணி அதன் புதிய இயல்பாக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
தொடர் தோல்வியினால் வீரர்களுக்கு மட்டுமல்ல, சென்னை அணியை சார்ந்த அனைவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நந்தனா மறுநாள் நடக்கவிருக்கும் மீட்டிங்கை நினைத்து இப்பொழுதே மானசீகமாக உடல் சிலிர்த்துக் கொண்டாள்.
அதைக் காட்டிலும் தான் அனுப்பி இருக்கும் ஈ – மெயிலுக்கு எப்படி எதிர்வினை ஆற்றப் போகிறார்களோ என்று இப்போதே பயங்கொள்ள தொடங்கி இருந்தாள் அவள்.
ஆனால், என்ன நேர்ந்தாலும் சரி. அவள் தன் முடிவில் இருந்து மாறப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
“திரும்பவும் தோத்துட்டோம் நந்து. பேசியே கொல்ல போறானுங்க. இந்த மீடியா வேற சும்மா இருக்காதே” புலம்பியபடியே எழுந்துக் கொண்டான் நிரஞ்சன்.
அன்றைக்கு அவர்கள் வீடு திரும்பும் போது நள்ளிரவு ஒரு மணியாகி இருந்தது.
மாலை வெயிலிலும், இரவு பனியிலுமாக பல மணி நேரங்கள் வெளியில் அமர்ந்திருந்தால் உடல் வியர்வையில் நனைந்து உலர்ந்திருக்க இருவரும் முதல் வேலையாக குளிக்கப் போனார்கள்.
அவனது வெற்று முதுகில் முகம் பதித்து நின்றாள். கையில் எடுத்த உடையை அப்படியே வார்டு ரோபில் திரும்ப வைத்து விட்டு, மெல்ல மனைவியின் கரம் பற்றி அவளை தன்னை நோக்கித் திருப்பினான் நிரஞ்சன்.
இப்போது முகத்தை அழுத்தமாய் அவன் மார்பில் பதித்துக் கொண்டாள் அவள்.
அவர்கள் இருவரின் வாழ்வையும் தலைகீழாக மாற்றப் போவதில்லை என்றாலும், வெகு நிச்சயமாக பெரிதான மாற்றத்தை கொண்டு வரப் போகும் முடிவை, யாரிடமும் கேட்காமல், அவ்வளவு ஏன் கணவனிடம் கூட ஆலோசிக்காமல் எடுத்திருந்தாள் அவள்.
அது அவனுக்கு தெரிய வந்தால் என்ன செய்வான் என்பதை நினைக்கையிலேயே அவளுக்கு உள்ளுக்குள் உதறியது.
அதை விட நாளை சென்னை அணி நிர்வாகம் அவளிடம் கேட்கப் போகும் கேள்விகளுக்கு இப்போதே பதில்களை ஒத்திகைப் பார்க்கத் தொடங்கி இருந்தாள் அவள்.
கணவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் வேறு வரிசை கட்டி நின்றது. அதன் முடிவாக வரப் போகும் வார்த்தை போருக்கு அவள் தயாராகவே இல்லை. அவள் உடலிலும் மனதிலும் துளி கூட தெம்பில்லை.
அந்த நிமிடம் கழுத்தை நெரித்த அத்தனையையும் மறந்து விட விரும்பினாள் அவள்.
அவளும், கணவனும் மட்டுமேயான ஓர் உலகத்திற்குள் தொலைந்து போக விரும்பினாள்.
எந்த வித கேள்விகளும் இன்றி அவளை அப்படியே புரிந்துக் கொண்டான் நிரஞ்சன். அவள் உச்சரிக்காமலயே அவள் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவனாக, அவளது உச்சியில் இதழ் பதித்தான்.
அவன் இதழ்கள் மனைவியின் முகத்தில் முத்த ஊர்வலத்தை தொடங்கியது.
அவர்களின் பணிச் சூழல் காரணமாக இருவருமே ஒரு வித மன அழுத்தத்தில் தான் இருந்தனர். கண்ணாடி மனநிலை. இறுகப் பற்றினால் சில்லு சில்லாக நொறுங்கி விடும் நிலை.
அவர்களின் அலைப்புற்ற மனம் அமைதியை விரும்ப, இருவருக்கும் ஒருவரை ஒருவர் அதிகமாக தேடியது.
மார்பில் பதிந்திருந்த மனைவியின் முகத்தை இரு கைகளிலும் அள்ளி எடுத்தவன், அலைபாய்ந்த அந்த கண்களுக்குள் புதைந்துப் போக விரும்பினான். கண்ணிமைக்கும் கணத்தில் அவளை தனக்குள் கொண்டு வந்தவன், அவளுள் தொலைந்துப் போனான்.
மூன்று மணியளவில் அவன் சூடாக தோசை வார்த்து கொடுக்க, தக்காளி சட்னி தொட்டு, அவதி அவதியாக அதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் நந்தனா.
“இன்னும் ஒரு தோசை நந்து”
“ம்ஹூம். போதும்” என்றவள், அவனுக்கு தோசை வார்க்க, சூடாக உண்ணத் தொடங்கினான் நிரஞ்சன்.
பத்து நிமிடங்களில் கையில் பிளாக் டீயுடன் அவர்களின் அறைக்கு திரும்பி இருந்தனர். பால்கனி சோஃபாவை நிறைத்தனர்.
இருவருக்கும் நடுவில் கனமான கேள்விகள் கேட்கப்பட காத்திருக்க, தழுவிய காற்றுக்கு உடலை கொடுத்து விட்டு கண் மூடி அமர்ந்திருந்தனர் இருவரும்.
நந்தனா தான் அதற்கு மேலும் தள்ளிப் போட விரும்பாமல் முதலில் பேச்சைத் தொடங்கினாள்.
“இன்னைக்கு மேட்ச் நீங்க ஏன் விளையாடல நிரஞ்சன்?”
எதிர்பார்த்திருந்த கேள்வி தான். ஆனாலும், அவள் கேட்கும் போது பதிலின்றி இருளை வெரித்தான் அவன்.
“ஏன் நிரஞ்சன்?” அவன் பக்கமாக திரும்பி அமர்ந்து, அவன் தோளை தொட்டுக் கேட்டாள்.
“எப்படி சொல்லன்னு தெரியல நந்து. இப்ப யோசிச்சா சில்லியா இருக்கு. ஆனா, அந்த நிமிஷம் எனக்கிருந்த கோபத்துல என்னால அப்படியொரு முடிவு தான் எடுக்க முடிஞ்சது”
“என்ன கோபம் நிரஞ்சன்? எதுக்காக கோபம்? இதுவரை நீங்களா ஒரு மேட்ச் கூட மிஸ் பண்ணது கிடையாது தானே? இப்ப மட்டும் ஏன்?”
கோபத்தில் கிரிக்கெட்டை ஒதுக்கினானா கணவன்? என்ற ஆதங்கம் அவளுக்கு. ஏனோ அவன் முடிவை சாதாரணமாக அவளால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.
“போன மேட்ச்ல நான் டீம்ல இருந்தேன். ஆனா, எனக்கு ஒரு ஒவர் கூட கொடுக்கல கேப்டன். என்னை பவுலிங் பண்ணவே சொல்லல. அதே தான் பேட்டிங்கும் நடந்தது. நான் இறங்க வேண்டிய இடத்தில ரவி இறங்கினான். டீம்ல இருக்கும் போதே என்னை மதிக்காம ஒதுக்கினா.. எனக்கு எப்படி இருந்திருக்கும்?”
“நிரஞ்சன் இதெல்லாம் ஒரு காரணமா?”
“எனக்குத் தெரியும். நீ இப்படித் தான் சொல்லுவன்னு. உனக்கு என்னோட வலி புரியப் போறதில்ல. எனக்கு எவ்ளோ இன்சல்டிங்கா இருந்தது தெரியுமா? அதான் இன்னைக்கு வேணும்னு ட்ராப் அவுட் ஆனேன்”
அவளுக்கு அப்படியே தலையில் ஓங்கி அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
அவன் முகத்திலேயே, “குரோ அப்” என்று கத்த வேண்டும் போலிருந்தது.
அவனை நேராகப் பார்த்து, “மேட்ச் தொடங்கும் முன்னமே கேப்டன் கிட்ட கேம் பிளான் இருக்கும். ஆனா, எல்லா நேரமும் அவர் அதை ஃபாலோ பண்ண மாட்டார். மோஸ்ட்லி உள்ளுணர்வை வச்சு அந்த நிமிஷ முடிவெடுக்கறவர் அவர். அது நிறைய நேரம் சரியாவும் இருக்கும். அதனால் தான் சக்சஸ்புல் கேப்டனா இருக்கார் அவர். உங்களுக்கு அது தெரியும் தானே? அவருக்கு கீழ தானே இந்தியன் டீம்ல ஆடுனீங்க? வேர்ல்ட் கப் அடிச்சீங்க?” அவள் நிதானமாக கேட்க, அவனிடம் ஆழ்ந்த அமைதி.
“பஞ்சாப் டீம்ல எல்லோருமே நல்லா பேட் பண்ணுவாங்க. ஒருவேளை நீங்க பவுல் பண்ணி இருந்தா.. நிறைய வோய்டு அண்ட் நோ பால் போட்டு…”
“ஓஹோ. நான் கேவலமா பால் போட்டு அவனுங்களுக்கு ரன்னை வாரி வழங்கி இருப்பேன்னு சொல்ற. அப்படித் தானே?” அடக்க முடியா கோபத்தில் அவன் மார்பு கூடு ஏறியிறங்க கத்தினான் நிரஞ்சன்.
“நான் அப்படி சொல்லவே இல்லையே?”
“அப்போ உன்னோட ரிப்போர்ட் அப்படி சொல்லுச்சா?” கத்தியவனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் நந்தனா.
அவளது வேலையை அவன் இதுவரை கேள்விக் கேட்டதே கிடையாது. இன்று கேட்கும் நிலை வந்திருக்கிறது என்றால், தன் மேலும் கோபமாக இருக்கிறானா கணவன்?
முகத்தை உயர்த்தி, “கிரிக்கெட்டை கத்து தா. வாழ்க்கையை கத்துத் தா. அப்படினு கேட்ட நிரஞ்சன் எங்க போனார்?” அவன் கண்களை பார்த்து அவள் கேட்க, தாடை இறுக அவளின் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டான் அவன்.
“உங்களுக்கு என்ன கோபம் நிரஞ்சன்? முதல்ல யார் மேல கோபம்? என் மேலயா? நான் சொல்லி நீங்க கேட்கப் போறீங்களா என்ன?”
“நீ சொல்லி நான் என்ன கேட்கல நந்து? இல்ல தெரியாம தான் கேட்கறேன். நீ சொல்லி என்ன கேட்கல நான்? நீயே சொல்லு கேட்போம்” கண்களில் கனல் பறக்க கத்தினான்.
அவளுக்கு கைகள் உதறியது. டீ கோப்பையை அழுத்தமாக பற்றினாள்.
“கிரிக்கெட் ஆட எது முக்கியம் நந்தனா? ஃபிட் பாடி ஆர் மைண்ட்?”
“ரெண்டுமே. ஆனா, இட்ஸ் அ மைண்ட் கேம் ஃபர்ஸ்ட். கிரவுண்ட்குள்ள இருக்கற வரை அசாத்திய கவனம் இருக்கணும். அலர்ட்டா இருக்கணும். அது தான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்.”
“எல்லாம் சொல்றது ஈஸி.” என்று சலித்தவன், “நீ சொல்றதை கேட்க கூடாதுன்னு, ஃபாலோ பண்ணக் கூடாதுன்னு எனக்கென்ன வேண்டுதலா நந்து? அதை எப்பவும் மனசுல வச்சுட்டு தான் பால் போடுறேன். ஆனா, அது கொடுக்கற அழுத்தமும், பதட்டமும் என்னை இன்னும் மோசமா பவுல் பண்ண வைக்குது. என்னை என்ன பண்ண சொல்ற? கேம் பிரஸர். அதுக்கும் மேல உன்கிட்ட என்னை நிரூபிக்கணும்னு அந்த பிரஸரும் கூட சேர்ந்துக்குது. எண்ட் ரிசல்ட், என்னை அறியாம நோ பால் போடுறேன். ஐயோ, சொதப்பாத டா நிரஞ்சான்னு மனசுக்குள்ள கத்திட்டு ஓடி வந்தா, அதுவும் தப்பான பாலா போகுது. நான் என்ன பண்ணட்டும் நந்து?” கைகளை காற்றில் வீசி, ஆவேசமாக கத்தினான்.
“பேட்டிங்கை பொறுத்தவரை முதல்ல மைண்ட் தான் ஆக்டிவா இருக்கணும். இல்லையா? நீ ஈசியா சொல்ற. யார்க்கர் பால் கவனம்னு. ஆனா, பவுலர் என்ன பால் போட போறான்னு கணிக்கவே மைக்ரோ செகண்ட்டுக்கும் கம்மியான நேரம் தானே எங்களுக்கு கிடைக்கும். அதுக்குள்ள ஒரு பேட்ஸ்மன் எத்தனை வேலை பார்க்கணும். நீயே சொல்லு?” என்றவன்,
“என்ன மாதிரி பால் வரப் போகுது. என்ன ஷாட் அடிச்சா சரியா இருக்கும்? எந்த பக்கமா அடிக்கறது? எந்த பக்கம் ஆள் நிக்கலனு நோட் பண்ணி அந்த கேப்ல அடிச்சு விடணும். குருட்டாம் போக்குல ஒரு ஷாட் அடிச்சா, அவுட் ஆக வேண்டியது தான். நீ எப்பவும் சொல்ற மாதிரி, எதிர்ல இருக்கவனுக்கு என்னோட மைனஸ் நல்லா தெரியும். சோ, என்னை குழப்பி விட்டு தான் அவனும் பால் போடுவான். ப்ச், ஐ ஹேட் திஸ் நந்தனா” இது போல விளக்கம் அளிப்பதே சோர்வை அளிக்க, தலையை பின்னுக்கு சாய்த்தான் நிரஞ்சன்.
“என்கிட்ட என்ன நிரூபிக்கணும் நீங்க? முதல்ல ஏன் நிரூபிக்கணும்னு நினைக்கிறீங்க? உங்க திறமை உலகத்துக்கே தெரியும் நிரஞ்சன். உங்க அனுபவத்துக்கு முன்னாடி, நான் எல்லாம் ஒன்னுமே கிடையாது. கிரிக்கெட்டில் கத்துக் குட்டி நான் நிரஞ்சன்” வலக் கரத்தை அவன் கன்னத்தில் பதித்து அவள் கேட்க,
“உனக்காக நான் இதுவரை என்ன செய்திட்டேன் நந்து? எதுவுமே செய்யல. உன் அழகை விட, அறிவை பார்த்து மயங்கி தான் உன்னை கல்யாணம் பண்ணேன். ஏன்னு எனக்கேத் தெரியல. ஆனா, மனசு எப்பவும் உன் பாராட்டுக்கு ஏங்குது. நமக்கு நெருக்கமானவங்க பாராட்டுறதும், தட்டிக் கொடுக்கறதும் தனி தெம்பு தானே?” என்றவன்,
“ஐ ஃபெயில்டு யூ நந்து.” என்றான் முடிவாக. அந்த குரலில் இருந்த சோகமும், வருத்தமும், கரகரப்பும் அவளை கண் கலங்க செய்தது. ஏற்கனவே அவன் வார்த்தைகளில் நொறுங்கி போய் இருந்தாள் அவள்.
“என்ன பேசறீங்க நிரஞ்சன்? எனக்காக என்ன செய்யல நீங்க? நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷமாக போகுது. வாய் விட்டு நான் இது வேணும்னு எதையும் கேட்கற மாதிரி நீங்க வச்சதே இல்ல.” அவனிடம் இருந்து கசப்பான சிரிப்பொன்று வெளிவந்தது.
“நீயும் சம்பாதிக்கற நந்து. நான் இல்லாமலும், உன்னால எல்லாத்தையும் வாங்கி இருக்க முடியும். இப்பவும் உனக்கானதை நீ தான் வாங்கற. சில நேரம் எனக்கும் சேர்த்து. ஆனா, நான் அதை சொல்லல” என்றவன்,
“கிரிக்கெட்டில் உனக்காக நான் என்ன செய்துட்டேன் நந்து? என்னோட பிரஸர், ஸ்ட்ரெஸ், ஃபெயிலியர் எல்லாத்தையும் உன் மேல தான் கொட்டி இருக்கேன். அதை தவிர உனக்கு என்ன செய்துட்டேன் நான்? அனலிஸ்ட் நந்தனாவின் புருஷனுக்கு ஒழுங்கா கிரிக்கெட் ஆடத் தெரியலன்ற பேரை தான் வாங்கிக் கொடுத்து இருக்கேன். என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு” சோஃபாவில் ஓங்கி குத்தினான்.