அவளுக்கு அந்த மைதானமே அரை வட்டமிட்டு சுழல்வது போலிருந்தது. மயங்கி சரிந்து விடாமல் இருக்க, கண்ணை மூடி மூடித் திறந்தாள் நந்தனா.
“தண்ணி குடி நந்தனா” எப்போது அவளுக்கு அருகில் வந்தான் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. ராஜ் நீட்டிய தண்ணீர் பாட்டிலை வாங்கி தொண்டையில் சரித்தாள். அப்போது அது அவளுக்கு தேவையாகவும் இருந்தது.
பாட்டிலை இறுக பற்றியபடி திரையையும், மைதானத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.
நிரஞ்சனின் கைகள் அந்தரத்தில் இருக்க, “நிரஞ்…” என்று கத்தியபடி அவனிடம் ஓடி வந்தார் கேப்டன்.
அவனை பின்னிருந்து அவர் பிடித்து இழுக்க, அதே நேரம் நிரஞ்சனின் கரம் எதிரில் இருந்தவனின் தோளின் மேல் அழுத்தமாக பதிந்தது. அவனை தோளோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான் அவன். பந்து வீச்சாளனின் முகத்தில் அதை எதிர்பாராத அதிர்ச்சி.
அங்கு அரங்கேறி கொண்டிருந்ததை அரங்கமே கலவையான குழப்பத்துடன் வேடிக்கைப் பார்க்க, “ஓ, என்ன நடக்குது இங்க? ரெண்டு பேரும் கட்டி தான் பிடிக்கறாங்க கைஸ். வேற எந்த டிராமாவும் இல்ல.” என்று சிரிப்புடன் கிண்டலாக வர்ணனையாளர் சொல்ல, நந்தனாவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது.
ஆனாலும், அங்கு நடப்பவை அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தாள் அவள்.
அந்த பவுலரின் காதில் நிரஞ்சன் ஏதோ மேடை ரகசியமாக கிசுகிசுக்க, அவனது உதட்டசைவை படிக்க முயன்றாள் அவள். ம்ஹூம். அவளால் உள்வாங்க முடியவில்லை.
அங்கே களத்தில் நிரஞ்சனின் வார்த்தைகளை கேட்டு, குபீரென்று வெடித்து சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார் கேப்டன்.
பவுலரின் முகம் திரை முழுவதும் காண்பிக்கப் பட, அவரையே பார்த்தாள் நந்தனா. அவமானத்தில் சிறுத்து, கோபத்தில் கனன்று கொண்டிருந்தது அவர் முகம்.
அன்றொரு நாள் பார்ட்டி ஹாலில் நிரஞ்சன் சிரித்து பேசி, கொட்டமடித்துக் கொண்டிருந்த அதே பவுலர்.
அவளுக்கு அப்பொழுது சுகாஸ் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
“ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் கேள்விப்பட்டு இருக்கியா?” என்று அவள் கேட்ட போது,
“அப்படினா என்னனு கேட்கற ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருக்கான். உன் ஆளு. அவனைப் பார்த்துக்கோ” எத்தனை சரியாக மனிதர்களை கணித்து வைத்திருக்கிறான் சுகாஸ்.
இந்த புதிய நிரஞ்சன் வெற்றியை கொண்டாடுகையில் யார், எவர் என்று பார்ப்பதில்லை. எதிரியையும் நண்பாய் பார்க்கும் குருட்டு கொண்டாட்டம். நண்பர்கள் தான் பெரும்பாலும் எதிரியாவார்கள் என்று தெரிந்தும் அசட்டையாக சுற்றும் நிரஞ்சன்.
கிரிக்கெட்டில் பொதுவாகவே இது போன்ற சீண்டல்கள் வழக்கம் தான். பந்து வீச்சாளர்கள் நன்றாக பேட் செய்துக் கொண்டிருக்கும் வீரனை கோபமடைய செய்ய வேண்டும் என்றே தகாத வார்த்தைகளால் சீண்டி, கிண்டலடித்து, தொல்லை கொடுத்து அவர்களின் கவனத்தை ஆட்டத்தின் மேலிருந்து திசைத் திருப்பி அவுட்டாக செய்வது எப்போதும் நடப்பது தான். அதற்கு “ஸ்லெட்ஜிங்” (Sledging) என்று பெயர்.
பெரும்பாலும் இதை வெளிநாட்டு அணியினர் தான் செய்வார்கள். குறிப்பாக அதிக முறை உலக கோப்பை வென்ற இரண்டு அணிகள் இதையொரு வெல்லும் உத்தியாகவே பல காலமாக கடைப் பிடித்து வந்தது.
இப்போது தொழில் நுட்பம் நன்றாக வளர்ந்து, ஐபிஎல் போன்ற போட்டிகளில் பல நாட்டு வீரர்களும் கலந்து, இணைந்து ஆடுவதால் வீரர்களுக்குள் இணக்கமான ஒரு உறவும், நட்புமே நீடித்து வந்தது.
இன்று இந்திய வீரர் ஒருவன், சக இந்திய வீரனான நிரஞ்சனிடம் இப்படி மோசமாக நடந்து கொண்டது அவளுக்கு நம்புவது கடினமாக தான் இருந்தது.
போட்டி என்று வந்து விட்டால், வீரர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழிறங்குவார்கள் தான். ஆனால், இப்படி தனிப்பட்ட தாக்குதல். அதுவும் நிரஞ்சன் சீண்டப்பட்ட கோபத்தில் அவனை எதிர்த்து அடிக்க போகும் அளவிற்கு என்றால், நிச்சயம் மோசமான வார்த்தைகளை வீசியிருக்கிறான் என்பது புரிய அவளுக்கு பதட்டத்தில் உள்ளங்கைகள் கூட வேர்த்தது.
கெட்டதிலும் ஒரே நல்லதாக நிரஞ்சன் தன் கோபத்தை உடனே கட்டுக்குள் கொண்டு வந்து, நிதானத்தை தவற விடாமல் இருந்தது தான். இல்லையன்றால் நாளை எல்லா செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் அவன் தான் இருந்திருப்பான். சக வீரனை அடித்த தமிழக அணி வீரர் என்று தலைப்பு செய்தியாகி இருப்பான்.
அத்தோடு நிற்காமல் பல தொலைக் காட்சிகளுக்கு விவாதப் பொருளாகி இருப்பான்.
பவுலரை விட்டு நகர்ந்து, குனிந்து தரையில் கிடந்த அவனது பேட்டை எடுக்கப் போனான் நிரஞ்சன். எதிரணியின் கேப்டன் அவனிடம் ஓடி வந்து அவன் பேட்டை எடுத்து நீட்டினார்.
“சாரி..” என்றார்.
“இட்ஸ் ஓகே பாய்” என்று திரும்பியவன், நிலை தடுமாறி தரையில் கிடந்தான்.
“டிராமா தொடர்கிறது” என்று வர்ணித்து சிரித்தனர் வர்ணனையாளர்கள்.
சத்தமாக சிரித்துக் கொண்டே தன் பேட்டால் நிரஞ்சன் தலையில் அடிப்பது போல செய்தார் கேப்டன்.
அப்படியே விழுந்த வாக்கில் அவரிடம் கைக் கூப்பி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். மைதானம் மொத்தமும் சிரிப்பில் அதிரத் தொடங்கி இருந்தது.
கேப்டன் கைக் கொடுத்து தூக்கி விட எழுந்து பேட்டை அவரைப் போலவே தரையில் ஊன்றி ஸ்டைலாக நின்றான் நிரஞ்சன்.
“ஷோ ஆஃப்” முணுமுணுத்தாள் நந்தனா.
அவனது பேட்டின் நுனி ஓங்கி அடித்ததில் சிதைந்திருக்க, அவனுக்காக புதிய பேட் கொண்டு வரப்பட்டது.
நிரஞ்சனின் தோளில் தட்டி, “சாரி” என்று விட்டு, அமைதியாக அவனைக் கடந்துப் போனார் ஆக்ரோஷத்திற்கு பெயர் போன எதிரணியின் கேப்டன்.
“கீப் காம் அண்ட் பிளே யுவர் பெஸ்ட் கிரிக்கெட் நிரஞ்” என்று அவனிடம் சொன்ன கேப்டன் அவரிடத்தில் போய் நிற்க, பந்தை சந்திக்க தயாராக நின்றான் நிரஞ்சன். பவுலரை அசையாமல் பார்த்தான் அவன். அந்த கண்களில் இருந்த தீவிரத்தை பார்த்த நந்தனாவிற்கு உடல் சிலிர்த்தது.
அடுத்து நடக்கப் போவதை ஓரளவு சரியாக கணித்து விட்டவளின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மென்னகை. கன்னச் சதை கடித்தும் அதை மறைக்க அவளால் முடியவில்லை.
அப்போதும் திரை முழுவதும் அவள் முகத்தை தான் காட்டினார்கள். நிரஞ்சனின் பார்வை திரையில் இருந்த மனைவியின் முகத்தை தொட்டு விட்டு மீண்டது.
“உன்னை எப்பவும் தலை குனிய விட மாட்டேன் பொண்டாட்டி” முணுமுணுத்து கொண்டான் அவன்.
“நிரஞ்சன்… நிரஞ்சன்… நிரஞ்.. நிரஞ்” என்று பெங்களூரின் சின்னசுவாமி ஸ்டேடியத்தை அவன் பேரை மந்திரமாக ஒதி அதிர விட்டார்கள் சென்னையின் மகத்தான மஞ்சள் ரசிகர்கள்.
பெங்களூர் அணியின் கேப்டன் அந்த பவுலரை கடுமையாக எச்சரித்திருக்க, அவன் முகத்தில் ஜீவனே இல்லை.
அவன் ஓடி வந்து முதல் பந்தை எறிந்தான். பந்து அவன் கைகளில் இருந்து வெளிவந்ததைப் பார்த்துக் கொண்டே அவன் சரியாக நிற்க, மறுகணம் பந்து பார்வையாளர் அரங்கிற்குள் சிக்ஸராக பறந்திருந்தது.
நிரஞ்சன் நின்ற வாக்கிலேயே பந்தை பறக்க விட்டிருந்ததில் குழம்பிப் தான் போனான் பவுலர்.
புதிய பந்தை கையில் வாங்கி, அடுத்த பந்தை வீசினான். இம்முறை வலப்பக்கம் பறந்திருந்தது சிக்ஸ்.
“அண்ட், அது இந்த ஒவரின் இரண்டாவது சிக்ஸர்.” கத்தினார்கள் வர்ணனையாளர்கள்.
அத்தோடு நிறுத்தி விடவில்லை நிரஞ்சன். ஒருவித இறுக்கத்துடன், உறுதியுடன் அடுத்தடுத்து வந்த அனைத்து பந்துகளையும் சிக்ஸராக அடித்து நொறுக்கினான் அவன்.
ரசிகர்களை எல்லா பக்கமும் திரும்ப வைத்து வான வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான் அவன்.
அதுவும் கடைசி பந்தை கேப்டனை போல மண்டியிட்டு, அவரின் ஸ்பெஷலிட்டியான ஹெலிகாப்டர் ஷாட்டை நிரஞ்சன் அடிக்க,
“சிக்ஸ் அகைன்” என்ற ஆர்ப்பரிப்பை கேட்டபடியே கேப்டன் ஓடி வந்து அவனை அணைத்து சிரிப்புடன் பாராட்டினார்.
அங்கே அரங்கமே விசிலடிக்க, பெங்களூர் நகரத்திற்கே கேட்டிருக்கும் அந்த சத்தம்.
அந்த ஒவரின் முதல் பந்தை தவற விட்டு, அடுத்த ஐந்தே பந்துகளில் ஐந்து சிக்ஸ் அடித்து 30 ரன்கள் எடுத்திருந்தான் நிரஞ்சன்.
அந்த பவுலரின் முகம் அவமானத்தில் செத்திருந்தது. பதிலடியை நேர்மையாக ஆட்டத்தில் திருப்பிக் கொடுத்திருந்தான் நிரஞ்சன்.
அவனது தனிப்பட்ட ஸ்கோர் 50 என்றது திரை. வெறும் பதினாறு பந்துகளில் 50 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்திருந்தான் அவன்.
மஞ்சள் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
தனது பேட்டை வானை நோக்கி உயர்த்தினான் நிரஞ்சன்.
பேட்டை முத்தமிட்டு திரையில் தெரிந்த மனைவியின் முகத்தை நோக்கி அந்த முத்தத்தை பறக்க விட்டான் நிரஞ்சன். நந்தனாவின் வெட்கச் சிரிப்பை உலகமே கண்டு ரசிக்க, அத்தனை கேமராக்களும் அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டது.
“யூ ஆர் தெ பெஸ்ட் நிரஞ்சன்.”
“சென்னையின் புதிய கிங், எங்கள் வீட்டுப் பிள்ளை நிரஞ்சன்” என்று எங்கு திரும்பினாலும் விதவிதமான வாசங்களுடன் பதாகைகளை தூக்கிப் பிடித்திருந்தார்கள் ரசிகர்கள்.
அதில் சில நந்தனாவின் கண்களை ஈர்த்து இழுத்தது.
“மேரி மீ நிரஞ்சன்” கண்டதும், கள்ளச் சிரிப்பு வந்தது.
“லவ் யூ நிரஞ்சன்” என்று பார்த்ததும், “ஐ லவ் ஹும் டூ” என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டாள்.
தொடர்ந்த ஆட்டத்தில் நிரஞ்சன் அதிரடி காட்ட, கேப்டன் நிதானமாக ஆடினார். பதினேழாவது ஓவரில் சென்னை அணி அந்த போட்டியை வெற்றிகரமாக வென்றிருந்தது.
அந்நேரம் அவனிடம் ஓடி வந்து, “சாரி, நிரஞ்” என்ற பவுலரை தூசியாக கூட மதிக்காமல், புறக்கணித்து விட்டு கை வீசி நடந்தான் நிரஞ்சன்.
இதுவரை நண்பனாக நினைத்து, மதித்து, மரியாதை கொடுத்து பழகிய ஒருவன், பதிலுக்கு என்ன செய்து விட்டான்.
அவனைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டான்? ‘உன்னை என்றைக்கும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டேன்’ தனக்குள் உறுதியாக சொல்லிக் கொண்டான் நிரஞ்சன்.
அவனது கோபம் அவனது நடையில் வேகமாக வெளிப்பட, அவனோடு இணைந்து கொண்டார் கேப்டன். இருவரும் எதிரணி வீரர்களுக்கு கைக் கொடுத்துக் கொண்டே நடந்தனர்.
“வெல் டன் நிரஞ்” ஒற்றைக் கையால் அவனை தோளோடு அணைத்து சொன்னார் கேப்டன்.
“கிரவுண்டல நிக்கும் போது எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்ட கூடாது நிரஞ். அவனை அடிக்காம, மைக்ரோ செகண்ட்ல நீ சுதாரிச்சு அணைச்சது பக்கா கேம் பிளே. எதிராளிக்கு எப்பவும் நம்ம பலவீனத்தை காட்டவே கூடாது. அப்புறம் அதையே நமக்கு எதிரா பிடிச்சு தொங்கிட்டு, சீண்டிட்டே இருப்பானுங்க. நீ எப்பவும் போல, ஐ டோண்ட் கேர் ஆட்டிட்யூட்டோட இரு” அதிகம் பேசாதவர் அன்று அவனுக்காக அறிவுரைகளை அள்ளிக் கொடுக்க, அர்ப்பணிப்புடன் கேட்டுக் கொண்டான் நிரஞ்சன்.
“சுயர் கேப்டன்” என்றான் அவன்.
“நான் எப்பவும், எல்லோருக்கும் சொல்றது தான். நான் ஃபாலோ பண்ற ஒன்னு. முடிஞ்சா நீயும் செய். நியூஸ் பேப்பர் பார்க்காத. ஸ்போர்ட்ஸ் பகுதி போகவே போகாத. அதே தான் ஆன்லைன், சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ், வெப்சைட்ஸ் எல்லாத்துக்கும். அந்தப் பக்கமே தலை வைக்காத. ஒன்னு அவன் நம்மை அதிகம் புகழுவான். இல்லனா, மகா மட்டமா நம்மை மட்டம்தட்டி விமர்சனம் பண்ணுவான். ரெண்டுமே நம்மளோட மன அமைதிக்கு நல்லதில்ல. எண்ட் ஆஃப் த டே, நம்மளோட மன நிம்மதியும், அமைதியும் தானே நமக்கு முக்கியம்?” என்று அவர் கேட்க, “எஸ். எஸ். கேப்டன்” தடுமாறினான் நிரஞ்சன்.
“என்ன கேப்டன்? அண்ணா சொல்லி கூப்பிடு” என்றவர், தனது நடையை நிறுத்தி விட்டு, அவனை நன்றாக திரும்பிப் பார்த்தார். அவர் நிற்க, நிரஞ்சனின் நடையும் நின்று விட்டது. மைதானத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். சென்னை அணி ஊழியர்கள் இருவருக்கும் குடிக்க குளிர்பானங்கள், தண்ணீர், துண்டு என்று கைகளில் அவர்களுக்கு தேவையானதை அள்ளிக் கொண்டு வந்து ஓரமாக ஒதுங்கி நின்றனர்.
நிரஞ்சனின் தோளில் அழுத்தமாய் கைப் பதித்து, “விளையாட்டில் எதிரிகள் சகஜம் நிரஞ். அவங்க தான் நமக்கு ஆட்டத்தை சுவாரசியமாக்குறது. எதிரிகள் தானா சேருவாங்க. ஆனா, இங்க பிரண்ட்ஸை தேர்ந்தெடுக்கும் போது ரொம்ப கவனமா இரு.” என்றவரின் பார்வை, பெங்களூர் அணியின் பந்து வீச்சாளரை தொட்டு மீள, தலை குனிந்தான் நிரஞ்சன்.
“எதிரி எப்பவும் முகத்துக்கு நேரா தான் சவால் விடுவான். முதுகில் குத்த மாட்டான். நம்ம கூட கடுமையா போட்டி போட்டு ஜெயிக்க தான் விரும்புவான். ஒரு நாளும் நம்ம காலை வாரி விட்டு ஜெயிக்க நினைக்க மாட்டான். ஆனா, நண்பன்னு சொல்லிட்டு கூடவே இருக்கறவன் தான் நீ கற்பனை பண்ணி பார்க்காததை எல்லாம் செய்வான். எல்லோருக்கும் ஒரு எல்லை கோடு வச்சுக்கோ.”
“தாங்க்ஸ் ண்ணா” ஆத்மார்த்தமாக சொன்னான் நிரஞ்சன்.
புன்னகையுடன் அவனைத் தழுவி, “நான் பார்த்த பெஸ்ட் பிளேயரில் நீயும் ஒருத்தன். இப்படியே இரு” என்று விலகி நடந்தார் அவர்.
அவரின் பாராட்டில் மனம் நெகிழ அவருக்குப் பின்னே நடந்தான் நிரஞ்சன்.