நந்தனா இதை எதிர்பார்த்திருந்தாள் தான். ஆனாலும், கணவனிடம் இத்தனை ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை.
அதிலும் அவன் கண்ணீர் அவளை கலங்கடித்தது. அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடிந்தவளால், கண்ணீரை காண முடியவில்லை.
அவனிடம் முன்னரே சொல்லி இருக்க வேண்டுமோ? இந்த முடிவையே எடுத்திருக்க கூடாதோ? நடந்ததை, நடப்பதை அவள் இன்னும் கொஞ்சம் அதிக முதிர்ச்சியுடன் கையாண்டிருக்க வேண்டுமோ? பல வித சிந்தனைகள் இப்போதும் அவளை குழப்ப, அதே கண்களுடன் கணவனைப் பார்த்தாள்.
“ஏன் அழறீங்க நிரஞ்சன்?”
அவள் பக்கமாக காற்றை போல கண்களை வீசினான். அவளை எப்போதும் கனிவுடன் பார்க்கும் அந்த கண்கள் முதல் முறையாக வெறுப்புடன் பார்த்தது.
“ஆம்பளை அழ கூடாதா பொண்டாட்டி? நான் கிரிக்கெட் ஒழுங்கா ஆடலை. கேவலமா விமர்சனம் பண்ணாங்க. அதனால, நீ வேலையை விட்ட.. இப்போ, கோழை மாதிரி அழுதுட்டு இருக்கேன். இதுக்கு என்ன பண்ண போற?”
“அழுறவங்க எல்லாம் கோழை கிடையாது. அண்ட் நான் ஒன்னும் உங்களால வேலையை விடல” அவனை நெருங்கி தயக்கத்துடன் சொன்னாள்.
“எவனாவது காதுல பூ வச்சுட்டு இருப்பான். அவன் கிட்ட போய் சொல்லு உன் கதையை…” எரிந்து விழுந்தான்.
அவன் கைப் பிடித்து மெதுவாக, “பிளீஸ். புரிஞ்சுக்கோங்க….” என்று அவள் ஆரம்பிக்க, அவள் முடிக்கும் முன்பே கத்தத் தொடங்கி இருந்தான் அவன்.
“என்ன புரிஞ்சுக்கணும் நந்தனா? எனக்குப் புரியல” காற்றில் கைகளை வீசி கத்தினான்.
“அனலிஸ்ட் நந்தனா. அவளை பிரமிச்சு போய் பார்த்தேன் நான். அவ பார்க்கிற வேலை, அவளோட திறமை, அவ இருந்த இடம், அவளோட கிரிக்கெட் அறிவு இதெல்லாம் தான் என்னை ஈர்த்தது. காதல்ல விழ வச்சது. அவளை தான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன் நான். அவ கூட தான் குடும்பம் நடத்தினேன். எப்பவும் அவ தான் எனக்கு ஸ்பெஷல். எனக்கு அவ தான் வேணும். நீ… நீ.. இந்த வெறும் நந்தனா.. ”
சட்டென்று அவனது வாயை மூடினாள் நந்தனா. அவளின் பளிங்கு கண்களில் பளபளத்தது கோபம்.
“நந்தனா நிரஞ்சன். வெறும் நந்தனா இல்ல.” என்றாள் அழுத்தமாய்.
தனது முகத்தில் இருந்து அவளின் கையை வேகமாக தட்டி விட்டு, சத்தமாக சிரித்தான் அவன்.
“நிரஞ்சன் மனைவி. பெரிய பட்டம் தான். நெத்தில அடிச்சு ஒட்டிக்கோ” பாவனையாய் சொல்லி அவன் பல்லைக் கடிக்க, கண்ணை மூடித் திறந்தாள் நந்தனா.
“இங்க பாருங்க நிரஞ்சன். நான் ரொம்ப ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன்.”
“என்கிட்ட கேட்டியா? என்கிட்ட ஏதாவது சொன்னியா?” அவள் தோளை பற்றி அவன் உலுக்க,
“இந்த வேலை நீங்க என் வாழ்க்கையில் வர்றதுக்கு முன்னாடி இருந்தே நான் பார்க்கறேன் நிரஞ்சன். உங்ககிட்ட கேட்டா வேலைக்கு சேர்ந்தேன்…” மேலே என்ன சொல்லி இருப்பாளோ, அவன் உடல் மொழியை கண்டு மிரண்டு பேச்சை நிறுத்தினாள் நந்தனா.
“ஓஹோ? நீ அப்படி வர்ற? ரைட்டு. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே இந்த வேலையில் நீ இருக்க, சோ.. அது சம்பந்தமான உன்னோட முடிவு எதிலும் நான் தலையிட கூடாது? அப்படித் தானே?”
“இல்ல நிரஞ்சன். நான்..”
“என் பேரை சொல்லாத. கொன்றுவேன்” என்று மிரட்டியவன், அணிந்திருந்த ட்ராக் பேண்டில் இருந்து தனது அலைபேசியை எடுத்தான்.
“கிரிக்கெட் இருக்கே கிரிக்கெட். அது கூட என் வாழ்க்கையில் நீ வர்றதுக்கு முன்னாடியே வந்திடுச்சு பொண்டாட்டி” என்று கோணலாக சிரித்தவன், “அப்போ நானும் எனக்கு பிடிச்ச முடிவை, உன்னை கேட்காமலே எடுக்கலாம் தானே?” அவன் குரலே வில்லங்கமாக ஒலிக்க, என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்துடன் அவனைப் பார்த்தாள் நந்தனா.
அடுத்த நொடி யாருக்கோ அழைப்பு பறந்தது.
“சேகர், ஒரு முக்கியமான விஷயம் கேட்டுக்கோ. நான் ரிட்டயர்மென்ட் அனௌன்ஸ் பண்ண போறேன். சோ, அதுக்கான அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணு. இன்னைக்கே, இப்பவே.” அதைக் கேட்டதும் நந்தனாவின் இதயம் தொண்டைக்கு வந்து விட்டது.
“நிரஞ்சன், பிளீஸ்” என்று அவள் அலறியதை அவன் பொருட்படுத்தவே யில்லை.
“கேள்வி கேட்காத. நான் சொல்றதை செய்.” அலைபேசியில் பேசினாலும், அவளை பார்த்துத் தான் சொன்னான் நிரஞ்சன்.
“எஸ். நிரஞ்சன் கிருஷ்ணகுமார் ஆல் ஃபார்ம்ஸ் ஆஃப் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் சொல்லிடு” எகிறி குதித்து அவன் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கினாள்.
“ஹலோ சேகர்..” என்று அவள் காதில் வைக்க, அந்த பக்கமிருந்து காற்றே வந்தது. அலைபேசியை கண் முன் கொண்டு வர, அது உறங்கிக் கொண்டிருந்தது.
“என்ன பதறுதா? பதறுது தான? உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பதறுது இல்ல?” படபடவென கேட்டு, நக்கலாக அவன் பார்க்க,
அவனது மேனேஜரிடம் பேசுவது போல் அவளை மிரட்டி பயமுறுத்தி இருக்கிறான் என்று புரிய, கோபத்துடன் நிமிர்ந்தாள் நந்தனா.
“சும்மா பேச்சுக்கு சொல்லும் போதே அப்படியே பதறி துடிக்கிற? ஆனா, நீ எடுத்து இருக்க முடிவு மண்ணாங்கட்டியை கேட்டு நான் ரியாக்ட் பண்ணக் கூடாது. இல்ல? சரி, சரி பொண்டாட்டி. உன் முடிவு தான் சரினு உனக்கு ஜால்ரா தட்டனும்? அப்படித் தானே?”
ஒரு நொடி பயந்து பதறியதில் அவளுக்கு உடலே தூக்கி வாரிப் போட்டது.
அதற்கும் அவனிடமே தஞ்சம் அடைந்தாள். அவன் மார்பில் முகம் புதைத்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
இந்த முடிவை எடுக்க அவள் எத்தனை பாடுப் பட்டிருப்பாள்? அவளை, அவளது முடிவை இப்படி கண் மூடித்தனமாக எதிர்க்கும் கணவனை என்ன செய்வது என்று தெரியாமல் அவள் கவலையுற,
“ஏன் இப்படி பண்ண பொண்டாட்டி? என்னால தானே இந்த முடிவு? இந்த விமர்சனம் எல்லாம் எவ்வளவு நாளைக்கு? நீயே சொல்லு? நமக்கு பழகிடும் பொண்டாட்டி. நான் இனி மேல் எல்லாத்தையும் சரியா ஹேண்டில் பண்ணவேன் நந்து. பிளீஸ்…” அவள் முகத்தை நிமிர்த்தி அவன் சொல்ல, அழுகையை அடக்க உதடு கடித்தாள் நந்தனா.
“நான் இன்னும் கொஞ்சம் மெச்சூர்ட்டா நடந்துக்க டிரை பண்றேன் நந்து. அதுக்காக இப்படி ஒரு முடிவை.. ஏன் ஏன் எடுத்த பொண்டாட்டி? சென்னை டீம் மேனேஜ்மென்ட் உன்னோட ரெசிக்னேஷனை அக்செப்ட் பண்ணிட்டாங்களா? எப்படி?” அவன் கண்களில் தெரிந்த நம்பிக்கையில் உடைந்துப் போனாள் அவள்.
அவன் கண்களை நேராக பார்த்து அவளால் அதை சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.
அவன் மார்பில் முகத்தை பதித்து, “அது.. வந்து..” அவள் தடுமாற,
“என்ன சொன்னாங்க நந்து? சிவராஜ் எப்படி உன்னை வெளில போக விடுவார்? அவர் எப்படி ஓகே சொன்னார்?” சந்தேகத்துடன் அவன் கேள்விகளை அடுக்க, “அவங்க என்னோட முடிவை ஏத்துக்கிட்டாங்க” ஒற்றை வார்த்தையில் முடித்து வைத்தாள் அவள்.
அப்படியே அதிர்ந்து கண்கள் விரிய உறைந்து நின்றான் நிரஞ்சன். ஆத்திரத்தில் அனைவரையும் அர்ச்சித்தான். அப்போதும் அடங்கவில்லை அவன் கோபம்.
“என் பொண்டாட்டி பெரிய அறிவாளி நினைச்சேன். ஆனா, நீ மிகப் பெரிய முட்டாள். இந்த அறிவாளிங்க எல்லாம் ஏன் இப்படி முட்டாள் தனமான முடிவை சரியா எடுக்கறீங்கன்னு எனக்குப் புரியவே மாட்டேனுது? ஏற்கனவே ஒருத்தன் கிரிக்கெட்டை விட்டு விலகி இருக்கான். அந்த முட்டாள் சுகாஸ் கூட நீயும் சேர்ந்து…”
“நிரஞ்சன்..” எச்சரித்தாள்.
“என்ன நிரஞ்சன்? என்னடி அதட்டுற? உன் ப்ரெண்ட்டை சொன்னதும் கோபம் பொத்துட்டு வருதோ? அப்போ, எனக்கு எப்படி இருக்கும்? ஏன் இப்படி பண்ண பொண்டாட்டி?” கோபமாக தொடங்கி, முடிக்கும் போது அவன் குரல் மீண்டும் உடைய,
“புரிஞ்சுக்கோங்க நிரஞ்சன். ஐ ஆம் டன். என்னால முடியல. என்னோட லிமிட்டை தாண்டிப் போகுது எல்லாம். இதுக்கு மேல என்னால எதையும் ஹன்டில் பண்ண முடியும்னு தோணல. பயமா இருக்கு நிரஞ்சன்” கத்தினாள்.
“வாழ்க்கை, விளையாட்டு இரண்டையும் என்னால ஒரே மாதிரி பாலன்ஸ் பண்ண முடியல. எவ்வளவு டைம் உங்களுக்கு அட்வைஸ் பண்ணி இருப்பேன்?. ஆனா, என்னால ஹன்டில் பண்ண முடியல நிரஞ்சன். வாழ்க்கை, விளையாட்டு இரண்டையும் என்னால ஒரே மாதிரி கூட வேண்டாம். ஓரளவு கூட பாலன்ஸ் பண்ண முடியல.”
“ஒரு பக்கம் எனக்கு எல்லாமுமான நீங்க. இன்னொரு பக்கம் நான் நேசிக்கிற வேலை, ஒவ்வொரு நிமிஷமும் நான் ரசிச்சு பார்க்கற வேலை. ஆனா, இப்போல்லாம் என்னால முழுசா அதில் மூழ்கி வேலை பார்க்க முடியல. என் கவனம் கண்டபடி சிதறுது. வேலை, சொந்த வாழ்க்கை ரெண்டுக்கும் நடுவுல தவிச்சு தடுமாறுறேன் நான். என்னால முடியல நிரஞ்சன். ஒன்னை காப்பாத்த.. இன்னொன்னை இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு. விதி எனக்கு சாய்ஸ் கொடுக்கறதுக்கு வெயிட் பண்ணாம.. நானே ஒரு முடிவை எடுத்துட்டேன்” கதறி அழுத படி அவள் சொல்ல, உடைந்தான் அவன். அவளின் நியாயமான கவலை அவனை கல்லாக இறுக வைத்தது.
குற்ற உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் துளிர் விடத் தொடங்கியது. அதிவேகமாக கிளை பரப்பி வளரத் தொடங்கியது.
“நந்து. சாரி மா. இனி மேல் நான்..”
“வேண்டாம் நிரஞ்சன்” அவன் கண்களைப் பார்த்து மறுப்பை உறுதியாக சொன்னாள் அவள். அதில் அவளின் முடிவு குறித்தான மாற்றமின்மையும் உறுதியாக தெரிந்தது.
“அத்தனைக்கும் ஆசைப்படலாம் நிரஞ்சன். ஆனா, எல்லாத்தையும் வாழ்க்கை நமக்கு அள்ளிக் கொடுத்திடாது. ஏதாவது ஒன்னு தான் நிரந்தரம். யூ கான்ட் ஹவ் இட் ஆல். இல்லையா? கடலும் வேணும், கரையும் வேணும்னா எப்படி? வானமும் வேணும், வனமும் வேணும்னா? வாய்ப்பில்லையே நிரஞ்சன்? ஏதாவது ஒன்னை தானே தேர்ந்தெடுக்க முடியும்?” அவள் கேட்க,
“முட்டாள்” என்றான் மென்மையாக அவளை அணைத்து, அவனுள் கலவையான உணர்வுகள். அனைத்தையும் பின்னுக்கு தள்ளி கோபமும், வருத்தமுமே பிரதானமாக முன் நின்றது.
அவள் என்ன சொன்னாலும் அவளின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால். அவனுக்கு தனிமை வேண்டி இருந்தது. நிறைய சிந்திக்க வேண்டி இருந்தது. மனதை திசை திருப்ப வேண்டியிருந்தது.
எப்போதும் மனைவியிடம் மனதை திறப்பான். இம்முறை அவனது மற்றொரு கண்ணான கிரிக்கெட்டை நாடினான்.
“நான் நெட் பிராக்டீஸ் போறேன். நீ ரெஸ்ட்…”
“நானும் வர்றேன்” என்றாள் தயக்கத்துடன்,
“நீ அங்க வந்து? எல்லோரும் கிரிக்கெட் ஆடுறதைப் பார்த்து, ஐயோ என் லைஃப்ல கிரிக்கெட் இல்லையேன்னு உடைஞ்சு உள்ளுக்குள்ள அழப் போறியா? அதுக்கு தான் அங்க வரணும்னு ஆசைப்படுறியா?” அவள் கண்களை பார்த்து அவன் கேட்க,
“இந்த ஐபிஎல் சீசனை முடிச்சு கொடுத்துட்டு.. போக சொல்லி இருக்காங்க டீம் மேனேஜ்மென்ட்” திக்கி தடுமாறி, சிறு தயக்கத்துடன் அவள் சொல்ல, அவனுக்கு ஏதோ இடறியது. ஆனாலும், அந்நேரம் அவன் இருந்த மன நிலையில் எதையும் ஆராயவில்லை அவன்.
சென்னை அணி நிர்வாகத்தை திட்டிக் கொண்டே மனைவியைப் பார்த்தான்.
“வா, போகலாம்” என்றவன், அவளை அறையை நோக்கித் திருப்பி, “போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா” என்று சொல்ல, அமைதியாய் சென்று தன்னை சீர் செய்து, முகம் திருத்தி, உடை மாற்றி வந்தாள் நந்தனா.
கார் பயணம் முழுவதும் இருவருக்கும் இடையில் அழுத்தமாய் மௌனம் அமர்ந்திருந்தது.
நந்தனா கணவனின் பேச்சையும், அவனது கோபத்தையும் அசைப் போட்டுக் கொண்டிருக்க, நிரஞ்சனின் கைகள் பழகிய சென்னையின் சாலையில் காரை லாவகமாக செலுத்த, மனதை குடைந்த கேள்விகளுக்கு மூளையை கொடுத்திருந்தான் அவன்.
அவனது எண்ணப் போக்கை உணர்ந்தவள் போல, “நீங்க.. எனக்காக யார் கிட்டயும் பேசக் கூடாது” என்றாள் நந்தனா.
“வாயை மூடிட்டு இரு பொண்டாட்டி. இருக்க கடுப்புக்கு காரை எங்கயாவது கொண்டு போய் மோத விட்ருவேன்” கையை ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தியபடி அவன் சொல்ல, வாயை மூடிக் கொண்டு, விரைந்து மறையும் சென்னை நகரத்தை வேடிக்கைப் பார்த்தாள் அவள்.
மைதானத்தை அடைந்ததும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருந்த வலைகளை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.
மெல்ல திரும்பி மனைவியை பார்த்து, “நாம இன்னும் பேசி முடிக்கல பொண்டாட்டி. உன் மேல இன்னும் கொலை வெறில தான் இருக்கேன். நைட் போய் மீதி கச்சேரியை வச்சுப்போம்.” மனதை பிராண்டிய குற்ற உணர்ச்சியை அவள் மேல் கோபமாக காட்டி விட்டுப் போனான் அவன்.
இதே மைதானத்தில் அனலிஸ்ட் நந்தனாவாக அவளை சந்தித்தது அவனுக்கு நினைவில் வந்தது.
ஆண்களிடம் இல்லாத கலை நயத்துடன், ஒவ்வொரு அடியையையும் நம்பிக்கையோடு எடுத்து வைத்து அவ்வளவு அழகாக, சீரான வேகத்தில் ஓடி வந்து அவள் பந்து வீசியது அவன் கண் முன் படமாக ஓடியது.
இன்று அவளின் முடிவிற்கு அவன் தான் காரணம் என்று அவனது மனசாட்சியே அவனை நோக்கி கை நீட்டி குற்றம் சாட்டியது.
அவர்களின் காதலுக்கு, கல்யாணத்திற்கு முக்கியமாக காரணமாக இருந்தது இந்த கிரிக்கெட் தான். அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால், மற்ற தம்பதிகளை போல இல்லாமல், வீட்டுத் தோட்டத்தில் அவனது பயிற்சிக்காக இருக்கும் வலையில் ஒன்றாக கிரிக்கெட் ஆடியவர்கள் அவர்கள்.
அவன் வீசும் பால்களை சிதறடித்து அவனை திணறடிப்பாள் அவள். ஆனால், இனி? இனியும் அதற்கெல்லாம் சமயம் வாய்க்கும் தான். ஆனால், முன்பை போல அதை ரசித்து, சிரித்து அவர்களால் செய்ய முடியுமா என்று கேட்டால் சந்தேகம் தான்.
மனைவிக்கு குழந்தையில் இருந்தே பிரியமான ஒன்றை இப்போது அவள் பிரிய காரணம், அவள் கணவன் தானே என்ற காரணம் அவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
அதன் விளைவு, பயிற்சியில் கவனம் சிதறியது. பந்துகளை அடிக்காமல் தவற விட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
தலைமை பயிற்சியாளர் அவனை நெருங்கி, “ஃபோகஸ் நிரஞ்” என்று விட்டு சென்றார். தலையை பலமாக உலுக்கி கொண்டான். ஆனாலும், அவனால் மனதை ஒன்று குவிக்க முடியவில்லை.
“ஆஆஆஆஆ” என்று மனதிற்குள் கத்தி, மன அழுத்தத்தை குறைக்க முயன்றான் அவன்.