சூரியன் அன்று உக்கிரமாக இருந்தான். அக்னி நட்சத்திரம் வெயிலை அக்னியாக பொழிந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்த படி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் சென்னை அணி வீரர்கள்.
நந்தனா, சுகாஸ் இருவரும் மௌனமாய் அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“நிஜமா ரிட்டயர்மென்ட் அநௌன்ஸ் பண்ண போறியா சுகாஸ்?” விடை அறிந்தே கேட்கப்படும் வினாக்களுக்கு என்ன விளக்கம் கொடுப்பது?
“நீ இன்னும் பத்து வருஷம் கிரிக்கெட் ஆடலாம். வயசும், வாய்ப்பும் இருக்கும் போது, ஏன் வெளில போற?” அவளுக்கு காரணங்கள் தெரியும். ஆனாலும், அவனே சொல்வது போல வராதே என்ற எண்ணத்துடன் சுகாஸிடம் கேட்க,
“வயசு இருக்கு. ஆனா, வாய்ப்பு இருக்கா நந்து?” கடினமான குரலில் கேட்டான் அவன்.
“உனக்கு தெரியாததா நந்து? என்னை ஏன் பேச வைக்கற?” சலித்துக் கொண்டான்.
“ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் சீரிஸ்க்கு சான்ஸ் கொடுத்திட்டு, அதுக்கு அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு கண்டுக்க மாட்டாங்க. வெட்டியா சான்ஸ் இல்லாம வீட்ல உட்கார்ந்து இருக்கணும். இவனுங்களை கேட்டா, நீ ஒழுங்கா ஆடலை. ஃபார்ம்ல இல்லைன்னு மொக்கை காரணம் சொல்லுவாங்க. ஆனா, அவங்களுக்கு வேண்டிய ஆளுங்களுக்கு மட்டும் வாய்ப்பை வாரி வழங்குவாங்க. இந்த கேவலமான பாலிடிக்ஸை சகிச்சுட்டு இங்க இருக்கணுமான்னு இருக்கு நந்து. மரியாதையா நாம விலகிறது நல்லது. இல்லையா?” என்று அவன் கேட்க, அவளுக்கு அப்பாவின் நினைவு வந்தது.
திறமை, அனுபவம் இதெற்கெல்லாம் இங்கு மரியாதையே கிடையாது என்று நினைக்கையிலே உலகின் மீதே கோபமாக வந்தது.
“ஐபிஎல் ஆரம்பிச்ச வருஷத்துல இருந்து சென்னைக்கு ஆடுறேன். கிட்டதட்ட பத்து வருஷத்துக்கும் மேலே. தமிழ்ல செல்ல பேர் வச்சு கூப்பிட்டு, என்னை அவ்ளோ ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சாங்க சென்னை ஃபேன்ஸ். ஆனா, மேனேஜ்மென்ட் என்ன பண்ணுச்சு? சாதிக்கும் போது தூக்கி வச்சு ஆடிட்டு, சரியும் போது தூர எறிய பார்க்கறாங்க. அவ்ளோ தான் என் மதிப்பா நந்து? என்னை மரியாதை இல்லாம நடத்தி, என்னோட ஃபிட்னெஸ் பத்திக் கேள்வி கேட்டு, அல்மோஸ்ட் வெளில போக சொல்லாத குறை தான். ஆனா, அதை அவங்க யோசிக்கறது தெரிஞ்சதும் நான் வெளில வந்துட்டேன்” அவன் குரல் கரகரக்க, அவனை கனிவாக பார்த்தாள் நந்தனா.
இந்திய அணி வீரர்கள் தேர்விற்காக வைக்கும் யோயோ தேர்வில் அவன் தோல்வியுற்றது அவனை இப்படித் தாக்கும் என்று அவனே எதிர்பார்த்திருக்க மாட்டான் என்பது புரிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏனென்றால், ஐபிஎல் ஆடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இங்கு கிடையாது.
“அவங்களை பொறுத்தவரை நாங்க என்ன பெருசா பேசிட்டோம் அப்படினு நினைக்கலாம். அவங்களுக்கு அது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு வலிச்சது. வலிக்குதுன்னு அவங்களுக்கு காட்ட நினைச்சேன். அதான், கேப்டன் எவ்ளோ எடுத்துச் சொல்லியும் கேட்காம இந்த வருஷம் ஐபிஎல்ல இருந்து விலகினேன். கிரிக்கெட் மூலமா வர்ற பேர், பணம், புகழ் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் நந்து. மரியாதை முக்கியம் இல்ல?” அவள் தலை தானாக ஆடியது.
“இப்போ நீ ஏன் கிரிக்கெட்டை விட்டுப் போற? நீ நீயா இருக்க முடியலைன்னு தானே? அதே தான் எனக்கும். நான், நானா கெத்தா இருக்க முடியாத இடத்தில நான் ஏன் இருக்கணும்? நான் பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கேன் தான். அதுக்காக என்ன வேணாலும் கேட்பாங்களா?”
“இதையெல்லாம் பார்த்தா இங்க குப்பை கொட்டவே முடியாது சுகாஸ்.
இந்த கோபம், ரோசம், சுயமரியாதை இதை வச்சு நாம ஊறுகாய் தான் போடணும். அவமானங்களை சகிச்சுட்டு வாழ..”
“என்னமோ பண்ணு போ” முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சொல்ல, அதில் தனக்கான அன்பையே கண்டான் அவன்.
“ப்ச், என்னை என்ன பண்ண சொல்ற நந்து? விளையாடும் போது எதிரணி ஆள் கிட்ட கூட ஈகோ காட்டாதவன் நான். ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்போட தான் ஆடுவேன். ஆனா, உலகம் ஏன் எனக்கான மரியாதையை தர மாட்டேங்குது” அவன் ஆற்றாமையுடன் கேட்க, அமைதியாய் வீரர்களின் பயிற்சியை வெறித்தாள் நந்தனா.
“ஹேய் சுகாஸ். எப்ப வந்த?” என்று கேட்டபடி கேப்டன் அங்கு வர, அவர்களின் பேச்சு தடைப்பட்டது.
இருவரும் எழுந்து அவரிடம் போனார்கள்.
“இவ கூட சண்டை போட வந்தேன்” என்றான் சுகாஸ். கண்ணை உருட்டினாள் நந்தனா.
அதைப் பார்த்து சத்தமாக சிரித்தார் கேப்டன். சுகாஸை இறுக்கமாக அணைத்து விடுவித்தார் அவர்.
“நீ உன் ப்ரெண்ட்டை பார்க்க வந்த. ஆனா, நாளைக்கு நியூஸ் எப்படி வரும்னு யோசிச்சா எனக்கு இப்பவே சிரிப்பா வருது” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்ல, அந்நேரம் அங்கு வந்தனர் சென்னை அணியின் சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களை நிர்வாகிப்பவர்கள்.
“அடப்பாவிகளா” என்று அதிர்ந்தான் சுகாஸ். அவனைப் போல அதிரவில்லை மற்ற இருவரும். இங்கு அனைத்துமே விளம்பரம் தான். வியாபாரம் தான் என்பது அவர்களுக்கு புரிந்தது.
நந்தனா அங்கிருந்து மெல்ல நழுவினாள்.
கேப்டன், “பாய்ஸ்” என்று உரக்க அழைக்க, பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அனைவரும் சில வினாடிகளில் சுகாஸை சுற்றி இருந்தனர். அவனுக்கு கடுப்பு தான். ஆனாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
வீரர்கள் அவனை சூழ்ந்து நலம் விசாரிக்க, அனைவருடனும் கலந்துரையாட தொடங்கினான் அவன்.
நிரஞ்சனை அவனே நெருங்கி, அவன் கன்னம் பற்றி கொஞ்சி, “சாரி நிரஞ்” என்றான். அத்தனையையும் கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தன.
“என் டார்லிங்கை ஒழுங்கா பார்த்துக்கோ. இப்பவும் உன்னை மிரட்ட தான் செய்யறேன். எப்பவும் அவளுக்காக கேள்வி கேட்க நான் இருக்கேன்” என்றான் சிரித்துக் கொண்டே.
அந்த சிரிப்பைப் பார்த்து, “நடிக்கப் போய் இருக்கலாம் நீ” என்றான் நிரஞ்சன்.
“நல்ல ஐடியா நிரஞ். யோசிக்கறேன்” என்று கண்ணடித்தான் சுகாஸ். சிரித்தார்கள் இருவரும்.
நந்தனா அங்கிருந்து போனதும் தன் வேலையை பார்க்கத் தொடங்கி இருந்தாள்.
காணொளியில் மூழ்கி அவள் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்க, பெருமூச்சுடன் அவள் அருகில் வந்து நின்றான் சுகாஸ்.
அந்த அரவத்தில் நந்தனா நிமிர்ந்து பார்க்க, “பிரியா தனியா இருக்கா. நான் கிளம்பறேன் நந்து” என்று விடை பெற்றான் அவன்.
“சந்தோஷமா இரு” என்று தலைக் கோதி விட்டுப் போனான். அவளுக்கு கண் கலங்கியது.
மனம் அலைபாய எழுந்து சென்று, காஃபியுடன் வந்து மீண்டும் அமர்ந்தாள் அவள். வேலை அவளை உள்ளே இழுத்துக் கொள்ள நேரத்தை மறந்து போனாள்.
“வீட்டுக்கு கிளம்பல நந்து?” என்று கோச் கேட்கவும் தான் நேரத்தை பார்த்தாள் அவள். ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்கள் விரிய, “இதோ கிளம்பிட்டேன் கோச்” என்று தனது கணினியை மூடி, அதற்கான பையில் வைத்தாள்.
தனது பொருட்களை எல்லாம் கையில் அள்ளிக் கொண்டு அவள் அலுவலக அறையை விட்டு வெளியில் வர, கண்கள் தாமாக கணவனை தேடியது.
மைதானத்தில் இல்லை அவன். கார் நிறுத்துமிடம் சென்றாள். அங்கேயும் அவனை காணவில்லை.
அவனது அலைப்பேசிக்கு அழைத்துக் கொண்டே வாயிலை நோக்கி வேக நடைப் போட்டாள். அவளது அழைப்பையும் எடுக்காமல் புறக்கணித்தான் அவன்.
அவள் மேலிருக்கும் கோபத்தில் விட்டு விட்டு சென்றிருக்கிறான் என நினைத்து கால் டாக்ஸி வரவழைத்து வீடு திரும்ப யத்தனித்தாள். கார் அவர்கள் பகுதியை நெருங்கும் போது ஏதோ தோன்ற, வண்டியை திருப்பி நேராக மாமனாரின் ஹோட்டலுக்கு விடச் சொன்னாள்.
அவள் எதிர்பார்த்ததை போல அங்கு தான் இருந்தான் அவன்.
“வா, வா நிரஞ்சன். எப்படி இருக்க?”
“என்ன தம்பி தனியா வந்திருக்க? மருமக எங்க?”
“கோபமா இருக்கியா?.என்னடா ஆச்சு? எவ்ளோ நேரமா கேட்டுட்டு இருக்கேன்? ஏதாவது பதில் சொல்றியா?”
“காட்டு கத்தல் கத்திட்டு இருக்கேன், அப்பான்னு ஒரு பயம், மரியாதை இருக்கா உனக்கு?”
“இப்போ பதில் சொல்லப் போறியா இல்ல உங்கம்மாக்கு போன் போடவா? ஆங், உங்கம்மாக்கு எல்லாம் பயப்பட மாட்ட நீ. மருமகளுக்கு ஃபோன் போடுறேன் இரு”
“சோத்துக்கு செத்தவன் மாதிரி ஏன்டா இப்படி சாப்பிடுற?” கிருஷ்ணகுமார் கடந்த ஒரு மணி நேரமாக மகனிடம் கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டிருக்கிறார். அவனோ, ஒரு வார்த்தை கூட அவரிடம் பேசாமல், உணவில் கவனம் செலுத்தி இருந்தான்.
அவனைப் போலவே பின் வாசல் வழியாக நுழைந்து, நேராக கிட்சனிற்குள் வந்தாள் நந்தனா.
பதட்டமும், பரபரப்புமாக அவள் வர, கிட்சென் மற்றும் உணவு அருந்தும் அறை இரண்டுக்கும் நடுவில் இருந்த ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் இடத்தில் நின்று சாப்பிட்டு கொண்டிருந்தான் நிரஞ்சன்.
பஞ்சத்தில் அடிப்பட்டது போல அவன் உணவை விழுங்கிக் கொண்டிருக்க, மகனை கரிசனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணகுமார்.
“போதும் தம்பி. இன்னும் எவ்ளோ சாப்பிடுவ. வயிறு கெட்டு போகும் தம்பி” அப்பா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அப்போது அங்கு அரக்கப் பரக்க வந்து நின்ற மனைவியைப் பார்த்தான் அவன்.
அவன் கண்களில் மின்னலாய் குற்ற உணர்வு ஓடி மறைந்தது. அவளை தனியாக விட்டு வந்ததை குறித்து வருந்தி, “சாரி” என்றான்.
சுவரில் ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து, சாய்ந்து நின்று உணவை உண்டு கொண்டிருந்த கணவனை கண்ணெடுக்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள் நந்தனா.
“வாம்மா” என்ற கிருஷ்ணகுமார், அவளுக்காக தண்ணீரை நீட்ட, “நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கேட்டு, தண்ணீரை வாங்கிக் கொண்டாள் நந்தனா.
அவள் பார்வை மீண்டும் கணவனின் மேல் பதிந்தது. அவனுக்கு அருகில் இருந்த சிறிய நீள் மேஜையில் காலி தட்டுகளாக அடுக்கி வைக்கப் பட்டிருக்க, அத்தனையும் அவன் தான் உள்ளே தள்ளியிருக்கிறான் என்பது புரிந்து அவனை கோபமாக முறைத்தாள் அவள்.
அவர்களை பொருட்படுத்தாமல் தயிர் சோறை, வத்தக் குழம்பு கலந்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான் நிரஞ்சன்.
“மீன் சாப்பிட்டு தயிர் சாப்பிட கூடாது தம்பி” அப்பாவின் அக்கறையை அலட்சியம் செய்தபடி அவன் உண்ண, அவனை நோக்கி நடந்தாள் நந்தனா.
அவன் கைப் பிடித்து வெளியில் இழுத்துக் கொண்டு போய், உணவருந்தும் அறையில் காலியாக இருந்த மேஜையில் அமர வைத்தாள்.
அவ்வளவு தான். அவனை சூழ்ந்து கொண்டார்கள் ரசிகர்கள். ஓடிப் போய் கையை கழுவி விட்டு வந்தான் அவன்.
“என்னை அலைய விட்ட இல்ல? அனுபவி” என்று முணுமுணுத்தாள் நந்தனா. அவனால் மனைவியை முறைக்க மட்டுமே முடிந்தது.
அது முன் மாலை நேரம் என்பதால் மிக சொற்ப வாடிக்கையாளர்களே ஹோட்டலில் இருந்தனர். அவர்களில் சிலர் நிரஞ்சனை அடையாளம் கண்டு விட அவனிடம் பேச ஆவலுடன் வந்தனர்.
அதில் சிலர் புகைப்படம் எடுக்க விரும்ப மனைவியை எட்டி இழுத்து தனக்கு அருகில் நிறுத்தினான் நிரஞ்சன்.
அவன் ரசிகர்களுடன் பேசத் தொடங்க, அங்கிருந்து நகர்ந்து உள்ளே மாமனாரை தேடிப் போனாள் அவள்.
கதவை திறந்ததும் குமித்து வைத்திருந்த காலி தட்டுகள் தான் அவள் கண்ணில் பட்டது. அதை கவலையுடன் பார்த்தாள் அவள்.
கோபம், வருத்தம், அழுகை, மன அழுத்தம் என அதீத உணர்வுகள் அவனைத் தாக்கும் போது மட்டுமே இப்படி அளவில்லாமல் உண்ணுவான் கணவன் என்பதை நன்கு அறிவாள் அவள்.
“என்னம்மா நடந்தது? அவனை கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்கறான். நீயாவது சொல்லலாம் இல்ல? என்ன வருத்தம் அவனுக்கு இப்போ?” மாமனாரின் கேள்வியில் மருண்டு விழித்தாள்.
கிருஷ்ணகுமாருக்கு இதற்கு முந்தைய இதே போன்ற நிகழ்வு கண் முன் வந்து போனது.
முதல் முறை நந்தனாவை பெண் கேட்டு போய் அவளின் தந்தை மறுக்க அப்போது இப்படி தான் கோபத்தை உணவோடு சேர்த்து விழுங்கினான் நிரஞ்சன். இரண்டாம் முறை சுகாஸ் திருமணத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் வெளியாகி, அப்போது நந்தனாவும் திருமணத்திற்கு மறுப்பு சொல்ல, சோகத்தை சுகமாக உணவில் தான் கரைத்தான் நிரஞ்சன்.
‘இப்போது என்னவோ?’ என்று கேள்வியாக மருமகளை பார்க்க, மெல்ல தொண்டையை செருமி சீர் செய்துக் கொண்டாள் நந்தனா.
“நான் வேலையை விட்டுட்டேன் மாமா” என்றாள் மெதுவாக.
கையில் இருந்த அலைபேசியை தவற விடப் பார்த்தார் அவர். சட்டென அதைப் பற்றி அவர் கைகளில் கொடுத்தாள் நந்தனா.
“ஏன் மா?” என்றவர். “அவனா காரணம்?” என்று வேகமாக கேட்க, பதட்டத்துடன், “இல்ல மாமா. நானா தான் வேலையை விட்டேன். கொஞ்சம் பிரச்சனை. சமாளிக்க முடியல” தந்தி போல பதில் சொன்னாள் அவள்.
அவரோ நம்பாத பார்வை பார்த்தார்.
“என்னை அங்க மாட்டி விட்டுட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?” கதவை திறந்து அடிக்குரலில் கத்தினான் நிரஞ்சன்.
அப்பா நின்றிருந்த நிலையைப் பார்த்ததும், “நேரமாச்சு பா. கிரவுண்ட்ல இருந்து நேரா இங்க தான் வந்தோம். வீட்டுக்கு கிளம்பறேன்.” என்றான், எதுவும் நடவாதது போல.
“நாளைக்கு வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும். பேசணும்” கட்டளையாக சொன்னார் கிருஷ்ணகுமார்.
“முடியாது பா. கொல்கத்தா கூட மேட்ச் இருக்கு. டிக்கெட் அனுப்பறேன். நீங்க வாங்க. நாங்க இன்னொரு நாள் பொறுமையா அம்மாவை பார்க்க வர்றோம்” என்றான்.
“தம்பி…” என்று அவர் ஏதோ சொல்ல வர, “வர்றோம் பா” என்று கத்தி விட்டு, மனைவியின் கைப் பிடித்து வெளியின் வந்தான் அவன்.
“நான் வந்து எல்லாம் சொல்றேன் மாமா” பின்னோடு வந்தவரைப் பார்த்து அவள் சொல்ல, தலையசைத்து உள்ளே சென்றார் கிருஷ்ணகுமார்.