காரின் கதவை மனைவிக்காக திறந்து விட்டான் நிரஞ்சன். அவளோ வீம்பாக ஏற மறுத்தாள், “சாரி நந்து. கோபமா இருந்தேன்…” அவன் கெஞ்சலாக ஆரம்பிக்க, முறைத்தாள் நந்தனா.
“பிளீஸ், பிளீஸ்” என்று கெஞ்சி அவளை காரில் ஏற வைத்தான்.
அவர்கள் அடையாரை அடையும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி மனைவியின் பக்கம் திரும்பினான்.
“இனி மேல் இப்படி பண்ண மாட்டேன் நந்து. என்னைத் தேடினியா? ரொம்ப அலைய விட்டுட்டேனா?” அவன் கேட்க கேட்க அவளுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.
காரில் விளக்கை அணைத்து அவன் மேல் பாய்ந்தாள் அவள்.
“எப்ப பாரு என்னை டென்ஷன் பண்ணி.. இதென்ன விளையாட்டு நிரஞ்சன்? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. நம்ம ரெண்டு பேரும் எப்போ தான் நம்ம வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க போறோம்?” அவள் கோபத்தில் பொரிய,
“அடிக்காத நந்து. நாளைக்கு மேட்ச் இருக்கு” அலறினான் அவன்.
அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவன் முகமெங்கும் அடித்து வைத்தாள்.
“அதென்ன வயசுக்கு ஏத்த மாதிரி நடக்கிறது? அப்படி ஒன்னும் அவசியமில்ல. சில ஃபீலிங்ஸை உன்கிட்ட மட்டும் தான் என்னால காட்ட முடியும். நீ என்கிட்ட எவ்ளோ டைம் சும்மாவே கோபிச்சுட்டு மும்பை போய் இருப்ப? அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?..”
“பழி வாங்குறியா டா? அதுக்கு இப்பவா சான்ஸ் கிடைச்சது உனக்கு? ஏற்கனவே எவ்ளோ டென்ஷன். இதுல என்னை அலைய விட்ட இல்ல? சென்னைல எனக்கு என்ன தெரியும்?” அவன் பாவமாக கண்ணையும் மூக்கையும் சுருக்க,
“நாளைக்கு உனக்கு மேட்ச் இருக்கா? இருக்கட்டும். கையை உடைச்சு விடுறேன், போய் நல்லா விளையாடு.” அவன் கையை இறுக்கி பிடித்தாள். அதில் அவளை சுற்றி அணைக்க முயன்றான் அவன்.
“கையை விடுடா” என்று பல்லைக் கடித்தபடி கத்தியவளின் பற்கள் அழுத்தமாக அவன் கழுத்தில் பதிந்திருந்தது.
“நந்து…” என்று வலியில் அரற்றியவனின் கரம் அவளின் கூந்தலை பற்றியது.
“பல் தடம் பதிய போகுது நந்து. யாராவது பார்த்து கேட்டா.. முதல்ல அதைப் பார்த்தா என்ன நினைப்பானுங்க” அவன் பதற, நிதானமாக தலையை உயர்த்தி கண்ணடித்தாள் நந்தனா.
அவன் தலை முடியை கொத்தாக பிடித்து, அவன் முகத்தை காரின் இருக்கையில் பின்னால் சாய்த்து, அவனது தாடையை நோக்கி குனிந்தாள்.
“ஐய்யயோ நந்து.” என்று அலறியவனின் அனைத்து செல்களும் ரெட் அலர்ட்டில் இயங்கியது. கண்ணிமைக்கும் கணத்தில் அவளை தனது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் நிரஞ்சன். சட்டென சிரித்து விட்டனர் இருவரும்.
அதே சிரிப்புடன் தான் வீடு திரும்பினார்கள்.
நந்தனா முதலில் வர, காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளின் பின்னே வந்தான் நிரஞ்சன்.
வீட்டிற்குள் நுழைந்தவள் ப்ரேக் அடித்து நிற்க, அவள் மேல் இடித்து அவனும் நின்றான். அங்கே நடுவீட்டில் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, தொலைக் காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்.
“என் பொண்ணு என்னைக்குமே அனலிஸ்ட் நந்தனாவா தான் இந்த உலகத்துக்கு தெரியணும்” என்ற அவரின் குரல் நிரஞ்சனின் காதில் எதிரொலிக்க, “இவரையும் இப்போ சமாளிக்கணுமா?” அலறினான் அவன்.
“அப்பா… எப்ப வந்தீங்க?” மனைவியின் குரல் கேட்டு நிரஞ்சன் அங்கு பார்க்க, அப்பாவுக்கு அருகில் அமர்ந்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.
அவன் அங்கேயே நிற்க தலையை திருப்பி, “வாங்க மாப்பிள்ளை.” என்றார் கார்த்திகேயன்.
அவன் இதயம் இரு மடங்காக துடிக்க, அவரிடம் சம்பிரதாய பேச்சுகள் பேசினான்.
“நெட் பிராக்டீஸ் முடிச்சுட்டு வர்றீங்க போல. போய் ரெப்ரெஷ்ஷாகிட்டு வாங்க மாப்பிள்ளை. சாப்பிடலாம்” என்று கார்த்திகேயன் சொல்ல, அதற்காக காத்திருந்தவன் எழுந்து மாடிக்கு இரண்டிரண்டு படிகளாக தாவி ஓடினான்.
அரை மணி நேரம் கழித்து அவன் கீழே வர, பூர்ணிமா அவனிடம் நலம் விசாரிக்க தொடங்கினார். எப்போதும் போல மிக இயல்பாக நடந்து கொண்டார்கள் அவர்கள். ஆனால், கணவன், மனைவி இருவரும் கேள்விகளை எதிர்நோக்கி காத்திருந்தனர். கார்த்திகேயன் எதையும் கேட்கவில்லை.
இரவு உணவை நிரஞ்சன் இரண்டு சப்பாத்தியுடன் முடித்து கொண்டு எழ, கார்த்திகேயன் அவனோடு எழுந்து கொண்டார்.
அம்மாவும் மகளும் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருந்தனர்.
“தோட்டத்துல நடக்கலாமா மாப்பிள்ளை?” அவர் கேட்க, “வாங்க, மாமா” என்று முன்னே நடந்தான் நிரஞ்சன்.
அவனுக்கு ஏனோ இப்போது பயமே இல்லை. மனது ஒரு விதமான அமைதியை அடைந்திருந்தது.
லேசாக சிரித்து, “உங்க கோபம் எனக்கு புரியுது மாப்பிள்ளை. அவ இப்படி ஒரு முடிவை எடுப்பான்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்று அவர் சொல்ல, இறுகியது அவன் முகம்.
“அச்சச்சோ. நான் உங்களை தப்பா சொல்லல மாப்பிள்ளை” அவன் தோளில் கைப் போட்டு, அவன் முகம் பார்த்து சொன்னார் அவர்.
“உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல மாப்பிள்ளை.” என்று வானம் பார்த்தவர், “உட்காருங்க” என்று அங்கிருந்த கல் இருக்கைகளை காண்பித்தார்.
இருவரும் அமர, “நந்தனா புத்திசாலி தான். ஆனா, ரொம்ப சென்சிடிவ்வான பொண்ணு. உங்களுக்கு அவளைப் பத்தி நான் சொல்லத் தேவையில்ல. இருந்தாலும் சொல்றேன். தனக்கு எது நடந்தாலும் அதை அறிவா யோசிச்சு சரியா ஹேண்டில் பண்ணிடுவா. ஆனா, அவளுக்கு பிடிச்சவங்களுக்கு ஒன்னுன்னா.. எல்லோரையும் போல இதயத்தால தான் யோசிப்பா.” அவர் சொல்வதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
“எனக்கு கிரிக்கெட் வாய்ப்பு கிடைக்காத கோபம் அவளுக்கு இன்னமும் இருக்கு. இப்போ சுகாஸ் விஷயத்தில் இன்னமும் காயம் பட்டிருக்கணும் அவ. பிரியா தான் அவளுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். அவ மூலமா தான் சுகாஸ் பழக்கம். படிப்பை முடிச்சு நேரா கிரிக்கெட்குள்ள வந்தா, ஒன்னுமே தெரியாது என் பொண்ணுக்கு. உங்களை எல்லாம் பார்த்து மிரண்டிருப்பா. அப்போ சுகாஸ் தான் அவளை பார்த்துக்கிட்டான். இப்ப கூட அவன் சொல்லி தான் நந்து வேலையை விட்டதே எனக்கு தெரியும். காலையில அவன் கூட தான் சென்னை வந்தோம் நாங்க”
‘ஒரு வார்த்தை சொன்னியா டா சுகாஸ்’ மனதில் அவனை தாளித்தான் நிரஞ்சன்.
“அவளுக்கு பிடிச்ச ரெண்டு பேரோட வாழ்க்கையில் ஏற்கனவே கிரிக்கெட் இல்லைனு ஆகிடுச்சு. அது உங்களுக்கும் நடந்திட கூடாதுன்னு அவ பயப்படுறான்னு நினைக்கறேன்” அவர் சொல்ல,
“ஐயோ மாமா. நான்..”
“உண்மையை சொல்லுங்க மாப்பிள்ளை. நானும், என் பொண்ணும் மறைமுகமா உங்களுக்கு பிரஸர் கொடுக்கறோம் தானே? உலகத்துக்கு இல்லைனாலும், என் பொண்ணுக்கு தினம் உங்களை நிரூபிக்க நினைக்கறீங்க இல்லையா?” அவன் கண்களைப் பார்த்து அவர் கேட்க, பொய் சொல்ல முடியவில்லை அவனால்.
“நந்து உங்களுக்கு அந்த அழுத்தத்தை கொடுக்க வேணாம்னு நினைச்சு இருக்கணும். நீங்க, நீங்களா இருக்கணும்னு தான்…”
“நான் விமர்சனத்தை சரியா ஹேண்டில் பண்ணி இருக்கணும் மாமா. கொஞ்சம் தடுமாறிட்டேன்…” குற்ற உணர்வுடன் அவன் ஆரம்பிக்க,
“அட போங்க மாப்பிள்ளை” என்று அவன் தோளில் தட்டினார் கார்த்திகேயன்.
“நீங்க நடந்துக்கிட்டது நார்மல் மாப்பிள்ளை. நாலு பேருக்கு முன்னாடி ஒருத்தர் நம்மை, ஏய்னு மரியாதை இல்லாமலே சொன்னாலே கோபம் பத்திகிட்டு வரும். நூறு கோடி மக்கள் பார்க்கற, படிக்கற நியூஸ்ல, நெட்ல உங்களை பத்தி தப்பா வந்தா, மோசமா விமர்சனம் பண்ணா? கேவலமா குடும்பத்தை உள்ள இழுத்தா.. கொலை வெறி வரத் தான் செய்யும் மாப்பிள்ளை. அது தான் மனுஷ இயல்பு. நேர்மையான விமர்சனங்களை நாமளும் ஏத்துக்க தான் செய்யறோம். ஆனா, எல்லா விமர்சனங்களும் நேர்மையா இருக்கறது இல்லையே” அங்கலாய்த்தார் அவர்.
“இப்போ தான் ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம். அப்போ எல்லாம் பிளேயர் வீட்டு மேலே கல் எறியரது. அவங்க உருவ பொம்மை எரிக்கறதுன்னு எவ்ளோ அராஜகம் பண்ணுவாங்க தெரியுமா இந்த ரசிகர்கள். காலம் மாற மக்களும் மாறுறாங்க. அவ்ளோ தான். ஆனா, தங்களை மாற்றிக்க மாட்டாங்க. ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு மன அழுத்தம் கொடுத்துட்டே இருப்பாங்க. பொதுவெளிக்கு வந்துட்டா.. நாம பொது சொத்துன்னு அவங்களுக்கு நினைப்பு. இதையெல்லாம் கடந்து வாங்கன்னு சொல்றது எனக்கு ரொம்ப ஈஸி. ஆனா, உங்க இடத்தில இருந்து பார்த்தா தான் உங்க நிலைமை புரியும்”
புரிதலுடன் புன்னகைத்தான் நிரஞ்சன்.
“நாலு பேர் நாலு விதமா சொல்லுவான் மாப்பிள்ளை. எதையும் கண்டுக்காம உங்களுக்கு சரின்னு பட்டதை செய்ங்க. உங்க கோச் சொல்றதை கேளுங்க போதும். கிரிக்கெட் அனிச்சை செயல் போல தானா வரணும் மாப்பிள்ளை. உங்களுக்கு தெரியாததா?” என்றவர்,
“எப்பவும் போல உங்களோட பெஸ்ட் கிரிக்கெட் ஆடுங்க” மீண்டும் அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“நந்தனா முடிவில் எனக்கு வருத்தம் தான். ரொம்பவே.. என்கிட்ட சொல்லாத மாதிரி, உங்க கிட்டயும் சொல்லி இருக்க மாட்டான்னு நினைக்கறேன்” அவர் கேட்க, குறுஞ்சிரிப்புடன் தலையசைத்தான் அவன்.
“எங்க அவ முடிவை மாத்திடுவோமோன்னு பயந்து நம்ம கிட்ட சொல்ல மாட்டா மாப்பிள்ளை. சின்னதில் இருந்தே அப்படி தான். உங்க கல்யாணத்துல கூட, எங்க கல்யாண தேதி முடிவு பண்ணிட்டீங்களா ப்பான்னு தானே கேட்டா? என்கிட்ட பெர்மிஷன் கேட்டாளா? கிடையாதே. அவளுக்கு சரின்னு பட்டா, அதை செய்திட்டு வந்து தான் நம்மகிட்ட சொல்வா. பெரும்பாலும் தப்பான முடிவெடுக்க மாட்டா. தப்பு பண்ண மாட்டா. அதுனால நானும் அவளை பெருசா கண்டிச்சது இல்ல. ஆனா, இப்போ”
“எனக்கு ரொம்ப கோபம் மாமா. என்கிட்ட டிஸ்கஸ் பண்ணி இருக்கலாம். ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருக்கலாம். அனலிஸ்ட் மாமா அவ…” அவன் குரல் உடைய,
“அவளால கிரிக்கெட் இல்லாம இருக்க முடியாது மாப்பிள்ளை. இப்ப கூட என்ன பண்ணிட்டு இருக்கா நினைச்சீங்க? சுகாஸ் ஓபன் பண்ண போற கிரிக்கெட் கோச்சிங் அகாடெமிக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா.”
“வாவ். நந்து முன்னாடி சொன்னா மாமா. ஆனா, நான் சரியா கவனிக்கல. ஆனா, இந்த சுகாஸ் சொல்லவே இல்ல பாருங்க மாமா. இன்னைக்கு கூட வந்து அப்படி சண்டை போட்டான். ஆனா, இதைப் பத்தி ஒன்னுமே பேசல”
நிரஞ்சன் கோபமாக சொல்ல,
“இப்ப தான் ஐடியா லெவல்ல இருக்காங்க மாப்பிள்ளை. அதான் சொல்லி இருக்க மாட்டான். அவன் வைஃப் பிரியா அப்பாவும் என்னை போல கோச் தானே? அதான் அவனுக்கு இப்படியொரு யோசனை. ஏதோ ஒரு வகையில் கிரிக்கெட்குள்ள இருக்கோம் நாங்க.”
“நல்ல ஐடியா மாமா. நிறைய பசங்க கிரிக்கெட்குள்ள வருவாங்க.” ஆத்மார்த்தமாக சொன்னான் நிரஞ்சன்.
“அதுக்கு தான் பிளான் டிசைன் பண்ணிட்டு இருக்கா நந்து. கொஞ்ச நாள் அதுல ஃபோகஸ் பண்ணுவா. அப்புறம் அவ தலை தானா நம்ம பக்கம் தான் திருப்பும்” சிரிப்புடன் அவர் சொல்ல, நிரஞ்சன் முகத்திலும் எதிரொலித்தது அது.
“அவளுக்கு எல்லாமே ரொம்ப ஈசியா கிடைச்சது மாப்பிள்ளை. அதான் அருமை, பெருமை தெரியல.” தீவிரமான குரலில், வருத்துடன் சொன்னார்.
“என்ன சொல்லுங்க மாப்பிள்ளை, கார்த்திகேயன் பொண்ணா இல்லாம இருந்திருந்தா அவ கிரிக்கெட் குள்ள வர்றது சாத்தியமா? ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கூட எங்க வேணாலும் படிக்கலாம். ஆனா, அனலிஸ்ட் படிப்பு, வேலை எல்லாம் அவ அப்பா எனக்கு கிரிக்கெட் தெரியப் போய் தானே அவளுக்கு தெரிஞ்சது? நான் இல்லனா என்ன பண்ணி இருப்பா?”
“கண்டிப்பா மாப்பிள்ளை. எனக்கும் அதுல சந்தேகமே கிடையாது. நான் என்ன சொல்ல வர்றேன்னா, அவளுக்கு எல்லாமே கையில வந்து விழுந்தது மாப்பிள்ளை. அனலிஸ்ட் கோர்ஸ் படிச்சுட்டு இருக்கும் போதே அவ திறமையை பார்த்து, தன் கூடவே வச்சுக்கிட்டார் இந்தியன் டீமோட அனலிஸ்ட் சிவராஜ். அவர் சொல்லி சென்னை டீம் வீடியோ அனலிஸ்ட் போஸ்ட் அவளுக்கு கிடைச்சது. கிடைச்ச பதவியை, வாய்ப்பை போராடி தக்க வச்சுக்கிட்டா தான். ஆனா.. அதோட அருமை தெரியலை பாருங்க மாப்பிள்ளை. சட்டுனு வேணாம்னு உதறிட்டு வந்துட்டா இல்ல?”
“அவளுக்கு ஸ்ட்ரெஸ் மாமா. அதான்..”
“உலகத்துல இருக்க எல்லாருக்கும் ஸ்ட்ரெஸ் இருக்க தான் செய்யுது மாப்பிள்ளை. அதுக்காக கையை வீசிட்டு வந்தா பிரச்சனைக்கு தீர்வாகிடுமா?” தீர்க்கமாக அவர் கேட்க, பதிலில்லை அவனிடம்.
“எதுவுமே நம்ம கையை விட்டு நழுவி போனதுக்கு அப்புறம் தான், அதோட மதிப்பு தெரியும். கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை கொஞ்ச நாள் நந்து வாழ்ந்து பார்க்கட்டும்.” அவர் சொல்ல,
“அவளை திரும்பவும் கிரிக்கெட்குள்ள நான் கொண்டு வருவேன் மாமா” தீர்க்கமாக தன் முடிவை சொன்னான் நிரஞ்சன்.
“எனக்கு அவளைப் பத்தி கவலையில்ல மாப்பிள்ளை. நீங்க இந்த நியூஸை எப்படி ஹான்டில் பண்றீங்களோன்னு பயந்துட்டு, உங்களுக்காக தான் ஓடி வந்தேன் நான்” சிரித்தபடி சொன்னார் கார்த்திகேயன்.
“தாங்க்ஸ் மாமா” என்றான் புன்னகையுடன்.
“அவ விரும்பினா திரும்ப வரட்டும் மாப்பிள்ளை. குழந்தையில் இருந்து அவளுக்கு கிரிக்கெட் தான் பொழுது போக்கு. முன்ன கார்த்திகேயன். இப்போ நிரஞ்சன். அவ வாழ்க்கையில் கிரிக்கெட் இருந்துட்டே இருக்கு. இனி மேலாவது அவ, அவளா வாழட்டும் மாப்பிள்ளை. லெட் ஹெர் லிவ் அ லிட்டில்” என்றார் தந்தையாக கரினசத்துடன்.
“ஒரு சுத்து உலகத்தை பார்த்திட்டு அப்புறம் அவ ஒரு முடிவுக்கு வரட்டும்” கார்த்திகேயன் சொல்ல, “சரி தான் மாமா” என்றான் நிரஞ்சன்.
“உங்க விஷயத்துல அவ முடிவு ரொம்ப சரி தான்” கண்களில் அன்பையும், பெருமிதத்தையும் தேக்கி நிரஞ்சனைப் பார்த்து, அவன் தோளில் தட்டிக் கொடுத்தார் கார்த்திகேயன்.