கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் நந்தனா. தொலைக் காட்சி நிறுத்தப்பட்டு பல நிமிடங்கள் ஆகியும் கூட, கண்களில் அந்த காட்சி ஓட, காதுகளில் செய்திக் குறிப்பு ஒலித்துக் கொண்டே இருக்க, அவளின் மனது ஒரு நிலையின்றி அலைபாய தொடங்கி இருந்தது.
அவளின் மனதை படித்தவனாக அவளை நெருங்கி இறுக்கமாக அணைத்து விடுவித்து விட்டு தன் வேலையில் மூழ்கினான் நிரஞ்சன்.
கணவனின் தொடுகை அவளை கொஞ்சமும் இளக்கவில்லை. மாறாக மேலும் இறுக தான் செய்தது.
அவளுக்கு நினைவு தெரிந்து தொலைக் காட்சி நிறுவனங்களும், மக்களும் இப்படி இருந்ததில்லை. அடுத்தவரின் வாழ்வை, சொந்த பக்கங்களை இப்படி எட்டிப் பார்த்ததில்லை. ஆனால், அது ஒரு காலம். அப்போதும் பிரபலங்களின் சொந்த வாழ்வை அறிந்து கொள்ளும் ஆவல் நிச்சயம் பலருக்கு இருந்தது தான். ஆனால், இப்போது போல வெறி கொண்டு அலைந்தது கிடையாது.
‘அப்படியும் சொல்ல முடியாது’ என்று அவள் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தது அவளின் மனசாட்சி. இளவரசி டயனாவின் மரணம் ஒன்று போதுமே அதற்கு சான்று.
பிரபலங்கள் தும்மினால் கூட அதை தலைப்பு செய்தியாக்கி விடும் அவசரம் இருக்கும் வரை அவர்கள் வாழ்வு இப்படித் தான் இருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் அவளுக்கு அப்படியே எழுந்து எங்காவது ஓடி விட வேண்டும் போலிருந்தது.
அவளையும், நிரஞ்சனையும் அறியாதவர்கள் இருக்கும் ஒரு தேசத்திற்கு தப்பியோடி விட வேண்டும். ஆனால், சாத்தியமற்ற ஒன்றை கற்பனை செய்து கூட பார்க்க விரும்பாமல் அந்த எண்ண ஓட்டத்தையே தடுத்து நிறுத்தினாள் நந்தனா.
அறையை தன் வேக நடையால் அளந்து கொண்டிருந்த கணவனை திரும்பி பார்த்தாள் நந்தனா.
அலைபேசியில் தான் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், அத்தனை ஆக்ரோஷமாக, வார்த்தைகளையும், வசவுகளையும் அவன் அள்ளி வீசுவதை பார்க்கையில் அவளுக்கு படபடப்பாக வந்தது.
தற்போது ஒளிப் பரப்பான செய்தி குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை கணித்தவள், அவனது பேச்சை கவனிக்க முயன்றாள்.
ஆனால், மனம் அதில் லயிக்காமல் அவளுக்கு வேறொன்றை குறித்து நினைவூட்டி பயமுறுத்தியது.
மூன்று நாட்களுக்கு முன்பு, “இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற போகிறேன்” என்று நிரஞ்சன் அவளிடம் சொன்ன நிமிடம் அவள் கண் முன் வந்து சென்றது.
அதைத் தொடர்ந்த அவர்களுக்குள் நிகழ்ந்த காரசாரமான வாக்குவாதம், சண்டை வரை நீண்டு, இறுதியில் விபத்தில் கொண்டு போய் விட்டதை செய்தி நிறுவனங்கள் அறிந்தால் என்னவாகும்?
அதுவும் அவள் இரண்டு நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில், மயக்கத்தில் இருந்தால் என்பதை அறிந்தால்? கூடுதலாக செய்திக்கு சுவை சேர்க்க அவள் கர்ப்பிணி வேறு.
ஒற்றை ரன் கிடைத்தால் போதும் என்று பந்தை, பேட்டின் நுனியால் தொட்டவனுக்கு, பந்து நேராக சிக்ஸருக்கு போனால் எப்படி இருக்கும்? ஜாக்பாட் தான். ஆடித் தீர்த்து விடுவார்கள்.
அதை நினைக்கையிலேயே அவள் உடல் முழுவதும் பதட்டம் சூழ, கைகள் அனிச்சையாய் நடுங்கத் தொடங்கியது.
அலைபேசியில் பேசிக் கொண்டே, ஓரப் பார்வையில் அவளைப் பார்த்த நிரஞ்சன் சட்டென அவளை நெருங்கி, அவள் முகத்தை இழுத்து தன் வயிற்றில் பதித்துக் கொண்டான்.
“இது நமக்கு புதுசில்ல நந்து. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். ரிலாக்ஸ்” என்றான். மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்த நந்தனாவின் கண்கள் அவனிடம் மன்னிப்பை யாசிக்க, “ப்ச், நந்து” என்று அவளை அதட்டி விட்டு, மீண்டும் அலைபேசிக்குள் அமிழ்ந்து போனான் அவன்.
“அவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? நான் ஆபீஸியல் ஸ்டேட்மென்ட் எதுவுமே கொடுக்காம, எப்படி நியூஸ் போடுவானுங்க?”
“எவன் சொல்லி நியூஸ் போட்டான் அவன்? எனக்கு தெரிஞ்சாகணும்?”
“அவன் போட்ட செய்திக்கு ஆதாரம் கொடுக்க சொல்லு அவனை. முடியாதா? நம்ம லாயர் பேசுவார் சொல்லு. அவரை முதல்ல அவனுங்க கிட்ட பேச சொல்லு. நோட்டீஸ் அனுப்ப சொல்லு மேன்”
ஆத்திரம் கண்ணை மறைக்க கத்திக் கொண்டிருந்தான் நிரஞ்சன். அவளுக்கு அவனது இந்த முகம் மிகவும் பழகியது. மைதானத்தில் நிதானத்திற்கு பெயர் போனவன் நிரஞ்சன். ஆனால், அவனது நிதானம் தவறினால், “சாது மிரண்டால் காடு கொள்ளாது” கதை தான். பெரும்பாலும் அவள் தான் சிக்கிக் கொள்வாள். ஆனால், இன்று அவனது டீம் மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர்.
“அப்படியொரு நியூஸ் வந்ததுக்கான தடமே இருக்கக் கூடாது சேகர். நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது”
“பெரிய அரசியல் கட்சி நடத்துற நியூஸ் சேனல்னா, அவன் இஷ்டத்துக்கு என்ன நியூஸ் வேணும்னாலும் போடுவானா?”
“அவன் ஒரு மொக்கை டீம் வச்சுட்டு கப் அடிக்க முடியலைன்னா, எப்பவும் ஜெயிக்கற டீம்ல இருக்கவனை டார்கெட் பண்ணுவானா? இருக்கு, இந்த வருஷமும் அவனுங்களுக்கு இருக்கு. மயிருங்க, வந்துட்டானுங்க. கப் அடிக்க துப்பில்ல. ஆனா, இந்த தேவையில்லாத வேலையெல்லாம் நல்லா பார்ப்பானுங்க.”
எல்லை மீறிக் கொண்டிருந்த கணவனின் கோபத்தைப் பார்க்கையில், நந்தனாவிற்கு தன் மேலயே கோபமாக வந்தது.
“நிரஞ்சன்…” அவள் குரலுக்கு திரும்பியவன் பேச்சை நிறுத்தவில்லை.
“******* கிட்ட சொல்லி வை. என்னை பத்தி மட்டும் தான் நியூஸ் போடணும். என் பொண்டாட்டியை பத்தி ஒரு வார்த்தை பேசினாலும், அவனுங்களை என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது. வார்ன் பண்ணி வை அவனுங்களை.”
“இவனுங்களுக்கு எல்லாம் என்ன தான்டா வேணும்? எங்களை நிம்மதியாவே வாழ விட மாட்டானுங்களா? என் பொண்டாட்டியை பத்தி எதுக்கு பேசுறானுங்க? அவளை ஏன் இதுக்குள்ள இழுக்கணும்? அவ தான் ஏற்கனவே கிரிக்கெட்டை…”
அதற்கு மேல் ஒரு வார்த்தையை கூட கேட்க முடியாமல், பல்லைக் கடித்து, தன் உணர்ச்சிகளை அடக்கி, பார்வையை எதிரில் இருந்த சுவரில் பதித்தாள் நந்தனா.
நாம் உயிராக நேசிக்கும் ஒன்றே நமக்கு எதிராக திரும்பினால்? என்ன தான் செய்ய முடியும்? கைக் கட்டி வேடிக்கைப் பார்ப்பதை தவிர?
அவர்களின் இத்தனை மன உளைச்சலுக்கும் காரணம் அவர்கள் இருவரும் அதிகமாக நேசிக்கும் கிரிக்கெட்.
நேசிக்கும் ஒன்றையே வெறுக்கும் நிலை அவளுக்கு.
தொலைக் காட்சி செய்தி குறிப்பும், அவளின் கணவனும் முடிக்காமல் விட்டதை முடித்து வைத்தது அவள் மனம்.
“இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் மனைவி நந்தனா, தனது வேலையை ராஜினாமா செய்து கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதின் காரணம் என்ன?” கடந்த வருடத்தின் செய்தி இப்போது அவளின் மனதில் ஓட, மனம் கலங்கி கண்ணீராக வழிய பார்க்க, உதடு கடித்து கண்ணீரையும் சேர்த்து உள்ளுக்குள் இழுத்தாள் நந்தனா.
அவள் நந்தனா கார்த்திகேயனாக இருந்து வரை அவள் மீது மீடியா வெளிச்சம் பட்டதே கிடையாது. அப்போதும் அவள் கிரிக்கெட்டில் தான் இருந்தாள். ஆனால், அவள் நந்தனா நிரஞ்சனாக மாற முடிவெடுக்கும் முன்னே உலகம் அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தது. அவளை பின் தொடர ஆரம்பித்தது.
ஊடக வெளிச்சம் தன் மேல் விழுவதை நந்தனா என்றுமே விரும்பியதில்லை.
நிரஞ்சனை முதலில் அவள் மணக்க மறுத்ததற்கு கூட அது தான் காரணம். அவனுக்கும் அது தெரிந்து தான் இருந்தது.
“ஹலோ, விளையாட்டை பத்தி பேசுங்க. என்னை பத்தி, என் பர்பாமென்ஸை பத்தி பேசுங்க. ஏன் தேவையில்லாம என் பொண்டாட்டியை, நந்தனாவை உள்ள இழுக்கறீங்க? அதுக்கு என்ன அவசியம்?”
மீடியாக்களைப் பார்த்து இதே கேள்வியை பல முறை கேட்டிருக்கிறான். ஆனால், நிரஞ்சனின் கேள்வியில் இருக்கும் நியாயம் யாருக்கும் புரியப் போவதில்லை.
“என் மனைவி நந்தனா கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் போது, அது அவளின், எங்களின் தனிப்பட்ட விஷயமாக இருக்கையில், அதைப் பற்றி நீங்கள் ஏன் பேச வேண்டும்? செய்தியாக்க வேண்டும்?” என்பது தான் நிரஞ்சனின் கேள்வி.
ஆனால், செய்தி ஊடங்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, நிரஞ்சனின் சக விளையாட்டு வீரர்களுக்குமே அந்த கேள்வி இருக்கத் தான் செய்தது. இன்றும் பதில் அறிய பலரும் வெகு ஆவலாக காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
எத்தனை வித கேள்விகள், யூகங்கள்? அவர்கள் பதிலளிக்க மறுத்த போது தாங்களாகவே ஒரு முடிவுக்கும் வந்து தானே விட்டார்கள்.
அனைவரின் விரல்களும் நிரஞ்சனை தான் குற்றம் சாட்டியது. அது அவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது.
அவனை அந்த குற்றச் சாட்டில் இருந்து விடுவிக்க தான் அவளும் விரும்பினாள். ஆனால், அதை நடத்திக் காட்டுவது அத்தனை எளிதாக இல்லை.
“நந்து” மென்மையாக அழைத்தவனை நிமிர்ந்து நோக்கும் துணிவின்றி அவள் தலை குனிய, “என்ன?” என்று அவளின் முகத்தை நிமிர்த்தினான் நிரஞ்சன்.
“சாரி” என்றவள், “நாம ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கறது..”
“யாருக்கும் தெரியாது. நியூஸ் வரை கண்டிப்பா போகாது. போக விட மாட்டேன். அதுக்கு நான் பொறுப்பு. நம்பு நந்து, பிளீஸ்” அவள் கேள்வியை முடிக்கும் முன்பே, உத்திரவாதமான பதிலை அவன் தர, விழி மூடித் திறந்தாள் நந்தனா.
அறைக் கதவை மெலிதாக தட்டி விட்டு, அந்நேரம் உள்ளே வந்தார் மருத்துவர் விஷால்.
அவரைப் பார்த்ததும் தான் அவள் செய்த மற்றுமொரு மடத் தனமும் அவளுக்கு உறைத்தது.
கணவனையே மறந்தது போல அல்லவா நடித்தாள் அவள். “கடவுளே, என்னைக் காப்பாத்து” முணுமுணுத்தவள், “ஹலோ, டாக்டர் விஷால்” என்று புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்து விட்டு, தனது வேலையை பார்க்கத் தொடங்கினார் அவர்.
மெல்ல தொண்டையை செருமி, அவரின் கவனத்தை ஈர்த்தவள், “டாக்டர்” என்று அழைக்க, அவளுக்கு தேவையான மருந்துகளை எழுதிய படியே, “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மிசஸ். நிரஞ்சன்?” என்று கேட்ட விஷால், “நான் நிரஞ்சனோட பயங்கர ஃபேன்” என்று சிரித்துக் கொண்டே பதிலும் சொல்ல, சங்கடமாக அவரைப் பார்த்தாள் நந்தனா. இது அவளுக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒன்று. மலர்ந்து புன்னகைத்தாள் நந்தனா.
“எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் மேட்ச்ஸஸ் பார்ப்பேன் மிஸஸ். நிரஞ்சன். முன்னாடி ஸ்கூல், காலேஜ் டைம்ல நானும் தெரு கிரிக்கெட் விளையாடினது உண்டு தெரியுமா?” விஷால் சொல்ல, சத்தமாக சிரித்தாள் நந்தனா. ஆனாலும், அவளின் கண்களில் தொக்கி நின்ற கேள்வியை படித்தவராக,
“என்னோட வேலையை நான் ரொம்பவே மதிக்கறேன் மிஸஸ். நிரஞ்சன். நீங்க என்னோட பேஷன்ட். உங்களை பத்தின எந்த தகவலும், என்னைக்கும் என் மூலமா வெளில போகாது. நீங்க என்னை நம்பலாம்.” என்று அழுத்தமாக சொல்ல,
ஒரு நொடி அவரை சந்தேகப் பட்டதற்கு தன்னைத் தானே நொந்துக் கொண்டாள் நந்தனா.
“ஐ அம்..” மன்னிப்பை கேட்க அவள் முன் வந்த நொடி, கை நீட்டி அவளின் பேச்சை தடுத்தார் மருத்துவர்.
“உங்க இடத்தில நான் இருந்தாலும், இதை தான் செய்திருப்பேன். இட்ஸ் ஓகே” என்றவர், “உங்க ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு. கைனகாலஜிஸ்ட் மட்டும் ஒரு டைம் வந்து உங்களை பார்த்திடட்டும். அவங்க கிட்ட உங்க டவுட்ஸ் எல்லாம் கேட்டுக்கோங்க. அவங்க சரினு சொன்னா, உடனே நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்”