இரண்டு வாரங்கள் தென் ஆப்ரிக்காவிற்கு ஒரு நாள் தொடர் விளையாட சென்று விட்டு அவன் வீடு வர, பிரிவை தாங்க இயலாமையால் எப்போதும் இல்லாத விதமாக, “எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. நீ ஊர் சுத்திட்டே இருக்க. பொண்டாட்டி கூட இருக்கணும்னு பொறுப்பே இல்லாம, விளையாட போற” என்று புகார் வாசித்து சிணுங்கினாள் நந்தனா.
சிரித்துக் கொண்டே, “என் மேனேஜரா ஆகிடுறியா பொண்டாட்டி?” என்று அவன் கேட்க, அதற்கு அதிர்ச்சியுடன் விழி விரித்தாளே தவிர பதில் சொல்லவில்லை.
“ஷர்மா, ரவி ஏன் உன் ப்ரெண்ட் சுகாஸ் வரை, எல்லோருக்குமே அவங்க வைஃப் தானே மேனேஜர்ஸ். பேசாம, நீயும் எனக்கு மேனேஜரா வந்திடு. என் கூடவே சுத்தலாம். என் வேலையை நீ பார்க்கலாம். அப்புறம் எந்நேரமும் என் கூடவே இருக்கலாம்” அவன் சொல்லிக் கொண்டே போக, அவன் மார்பில் தலை சாய்த்து உறங்குவதாக பாவனை செய்தாள் அவள்.
“கேடி” என்று முணுமுணுத்தான் நிரஞ்சன்.
எந்த பக்கம் போனாலும் கதவை அடைத்தாள் நந்தனா. அவனுக்கு காற்றில் முட்டிக் கொள்வது போல இருந்தது. வலிக்கவும் இல்லை. வழியும் கிடைக்கவில்லை.
விக்ரமாதித்தனின் வேதாளம் போல விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் மனைவியிடம் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசினான் அவன்.
விளைவு?
“என்னை கொண்டு போய் மும்பையில் விடுங்க” என்றாள் நந்தனா.
“நீங்க என்ன கூட்டிட்டு போறது. நானே டிக்கெட் புக் பண்ணி மும்பை போறேன். உங்க தொல்லை தாங்கலை” என்று ஒற்றை காலில் நின்று அவனது இரத்த அழுத்தத்தை உயர்த்தினாள்.
“வர்ற கோபத்துக்கு கடிச்சு வச்சுடுவேன் போடி” என்று கடித்தான் அவன்.
“இப்ப வேற பார்க்கவே பளபளன்னு பப்பாளி போல இருக்கியா, சும்மாவே கடிக்கணும் போல தான் இருக்கு. உன் பேச்சு அதை இன்னும் அதிகமாக்குது. அதுக்கு நீயே சான்ஸ் கிரியேட் பண்ணி கொடுக்காத. ஓடிப் போய்டு” அவன் எச்சரிக்க, எட்டி அவன் கன்னம் கடித்து விட்டு எழுந்து ஓடினாள் அவள்.
“மெதுவா நந்து. ஓடாத” கத்தினான்.
நாட்கள் அப்படியே நகர்ந்தால் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது?
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு அந்தந்த அணியினர் குறிப்பிட்ட அளவிலான வீரர்களை மட்டும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஐபிஎல் போட்டி விதிமுறையில் இருக்க, இந்த ஆண்டும் அவரவர் அணியில் முக்கிய வீரர்களை பெரும் பணம் கொடுத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, தொடர்ந்து அவர்களை அணியில் கொண்டது அணி நிர்வாகங்கள்.
சென்னை அணி கேப்டன், நிரஞ்சன், ராஜ், ரவி நால்வரையும் தேர்வு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த புகைப்படங்களை செய்தி நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, தங்களது இணைய பக்கங்களில் அதிகாரப் பூர்வமாக வெளியிடவும் செய்தது.
நிரஞ்சனுக்கு பல கோடிகளை கொடுத்தே கையெழுத்து வாங்கி இருந்தனர்.
மனைவி இல்லாத சென்னை அணி அவனுக்கு நினைக்கவே தொண்டை அடைக்கும் உணர்வு. பேனா பிடித்து கையெழுத்து போட முடியாத அளவு நடுக்கம்.
அன்றிரவு மீண்டும் அதே பேச்சை அவன் ஆரம்பிக்க, “உங்களுக்கு என் மேல அக்கறையே இல்லையா? ஏன் என்னை வீணா டென்ஷன் பண்றீங்க? இதை பத்தி இன்னொரு முறை பேசினீங்க. அவ்வளவு தான்” மூச்சு வாங்க, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு எச்சரித்தாள் நந்தனா.
மறு வாரம் மருத்துவர் அவனை கடுமையாக கண்டித்தார்.
“அவங்க பிரஸர் ஏன் இவ்வளவு அதிகமா இருக்கு? நீங்க கவனிக்கறது இல்லையா?” என்று அவர் கேட்க,
“எல்லாம் என்னால தான்” என்று அவனுக்கு கத்த வேண்டும் போலிருந்தது.
“சாரி டாக்டர்” என்றான் குற்ற உணர்வுடன்.
இனி மனைவியுடன் இது குறித்து பேசக் கூடாது என்று குறித்துக் கொண்டான். ஆனால், ஒன்றை மனதில் அழுத்தி அழுத்தி வைக்க, அது அதிக அழுத்தத்துடன் மேலே முட்டிக் கொண்டு வந்தது.
ஜனவரியில் அந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக வீரர்கள் ஏலம் தொடங்க, அவனது பதட்டம் இன்னும் அதிகரித்தது. ஆனாலும், ஒன்றும் செய்ய முடியா நிலை தான்.
நாட்கள் விரைந்து ஓட, அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரே ஒரு மாதம் தான் என்று வந்து நின்றது காலம்.
நாட்களை விரல் விட்டு எண்ணி கொண்டிருந்தான் நிரஞ்சன்.
அவனுக்கு ஒரு வழியும் கிடைத்த பாடில்லை. உடல் முழுக்க பதட்டத்துடன் கேள்விகளோடு சுற்றினான் அவன்.
எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு தானே?
வீட்டில் காட்ட முடியாத கோபத்தை விளையாட்டில் வெறியாய் வெளிப்படுத்தினான். ஆடுகளத்தில் தெறிக்க விட்டான்.
அவனது அதிரடி ஆட்டத்தை அசதியுடன் பார்த்தாள் நந்தனா. ஆனால், அணி அவனை கொண்டாடியது. விமர்சகர்கள் வியந்து புகழ்ந்து தள்ளினார்கள்.
இந்த பக்கம் இந்த முகம் என்றால், பத்திரிகையாளர்களிடம் கடின முகம் காட்டினான்.
முன்பு போல ஒதுங்கி போகாமல் நக்கலாக பதில் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
அன்று மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பயிற்சி அளிக்க சுகாஸின் அகாடெமி சென்றிருந்தான் நிரஞ்சன். நந்தனாவும் அவனோடு வந்திருந்தாள் தான். கிரிக்கெட்டின் மற்றொரு கோணத்தை, தொழில் நுட்ப நுணுக்கங்களை குறித்து மாணவர்களிடையே உரையாற்றினாள் அவள்.
அது நட்புக்காக செய்தது என்பது அவனுக்கு புரிந்தது. அந்த அளவாவது அவள் இறங்கி வந்தததில் அவனுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும், அவளது உரையை கேட்ட பின், இவளை வெறுமனே வீட்டில் உட்கார வைத்து விட்டோமே என்று தவித்துப் போனான் நிரஞ்சன்.
இரவு சென்னை திரும்ப விமான நிலையம் வந்தார்கள் அவர்கள்.
எப்படி தான் செய்தி கிடைக்குமோ, மோப்பம் பிடிப்பார்களோ, அவர்களுக்கே வெளிச்சம். அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை வழி மறித்து, “ஹாய் நிரஞ்சன். சுகாஸோட அகாடெமி விசிட் பண்ண வந்தீங்களா? எனி ஸ்பெஷல் ரீசன்?” என்று அவனை கேள்வி கேட்க,
அவர்களை வழியனுப்ப வந்திருந்த சுகாஸ்,
“எஸ். என் ஸ்டூடண்ட்ஸை ட்ரெயின் பண்ண வந்தார்” என்று பதிலளித்தான். அடுத்தடுத்த கேள்விகள் சராமரியாக தொடுக்கப்பட, சளைக்காமல் சிரிப்புடன் பதில் கொடுத்தார்கள் இருவரும்.
அந்நிலையில் தான் அவர்களின் பார்வை நந்தனாவின் மேல் விழுந்தது.
“அவங்க கிரிக்கெட்டை விட்டு நிரந்தரமா விலகி இருக்காங்களா? என்ன காரணம்?” தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான கேள்வி, அதுவும் மனைவியை பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்க,
“நன் ஆப் யூவர் பிசினஸ்.” ஏளன புன்னகை உதட்டோரம் நெளிய சொன்னான் நிரஞ்சன்.
“அவளோட முடிவு அது. அதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?” நேரடியாக கேட்டான் நிரஞ்சன்.
“நிரஞ், அது.. ” என்று கூட்டம் சமாளிக்க பார்க்க,
“விளையாட்டை பத்தி பேசுங்க. என்னைப் பத்தி, என் பர்பாமென்ஸ் பத்தி மட்டும் பேசுங்க. என் பொண்டாட்டி பத்தி பேசக் கூடாது. புரிஞ்சுதா?” தீர்க்கமாக சொல்லி விட்டு உள்ளே நடந்தான்.
“ரூடா பேசுறீங்க நிரஞ்” ஒருவன் ஆட்சேபிக்க, அவனிடம் கையசைத்து, “நீங்க முன்ன டைம்ஸ் ஆஃப் இந்தியால தானே இருந்தீங்க. இப்போ எந்த சேனல்? பழைய சேனல் கூட உங்களுக்கு என்ன பிரச்சனை?” குரலை தழைத்து அவனிடம் நேர் பார்வை பார்த்துக் கேட்டான் சுகாஸ். மொத்த கூட்டமும் கொல்லென்று சிரித்தது.
அந்த பத்திரிக்கையாளன் முகம் சுருங்க, “பெர்சனல் கேள்வி கேட்டா எங்களுக்கும் இப்படி தான் இருக்கும் மேன். நாங்களும் உன்னை போல ஹுயூமன்ஸ் தான்” என்றான் சுகாஸ், அடக்கப்பட்ட கோபத்துடன்.
“தாங்க்ஸ் கைஸ்” என்று பொதுவாக சொல்லி விட்டு, நந்தனா, நிரஞ்சனிடம் ஓடி வந்தான்.
“கூல் டவுன் நிரஞ்” அவன் தோளில் தட்டிக் கொடுத்தான். நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நந்தனா நாக்கை துருத்தி காட்டினாள்.
“உன்னை..” என்று மனைவியை முறைத்தான் நிரஞ்சன். சிரித்தனர் சுகாஸிம், நந்தனாவும்.
“நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம். டேக் கேர் கைஸ். ஹேப்பி ஜர்னி” என்று அவர்களுக்கு விடைக் கொடுத்தான் சுகாஸ்.
விமான பயணம் முழுவதும் இறுக்கமாகவே வந்தான் நிரஞ்சன்.
மறுநாள் காலையில், “நந்து..” என்று அவன் அழைக்க, “நான் எங்கேயும் போகல. வேலைக்கு போகறதா இல்லவே இல்ல. அண்ட், இது பத்தி இன்னொரு முறை என்கிட்ட பேசாதீங்க” திட்டவட்டமாக மறுத்து விட்டாள் நந்தனா.
“நான் இந்த சீசன் ஐபிஎல் விளையாட போறதில்லை நந்து. விலகிட போறேன்” அவன் சொல்ல, அவன் பேசும் மொழி புரியாத பாவம் அவளிடம். விழிகள் அதிர்ச்சியில் விரிய, உறைந்து நின்றாள் நந்தனா.
ஒரே ஒரு போட்டியில் இருந்து அவன் விலகியதற்கே எத்தனை பதறினாள் அவள். இப்போது என்னவென்றால் முழுதாக விலகுகிறேன் என்றல்லவா சொல்கிறான் கணவன்.
“டீம் மேனேஜ்மென்ட்டை நேர்ல பார்த்து சொல்லணும். சேகர் கிட்ட டாகுமெண்ட் ரெடி பண்ண சொல்லி இருக்கேன். மதியம் ரெடியாகிடும்…” மேலே அவனை பேச விடாமல், “நோ….” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தினாள் நந்தனா.
அவனை நெருங்கி வந்து நின்று நேராக பார்த்தாள். ஐந்து மாத வயிறு இருவருக்கும் இடையில் இடித்து கொண்டு நின்றது.
“நீங்க.. விளையாடணும். அதெப்படி விளையாடம இருப்பீங்க? காண்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கீங்க? பெரிய பிரச்சினை ஆகும்” அவனுக்கு புரிய வைத்து விடும் வேகம் அவள் குரலில் இருக்க,
“உன் ப்ரெண்ட் கூட தான் காண்ட்ராக்ட் சைன் பண்ணி இருந்தான். ஆனா, அவன் போன வருஷம் விலகினான் தானே? என்ன பெருசா பிரச்சனை ஆச்சு?” நிதானமாக நிரஞ்சன் கேட்க, வாயடைத்து போனாள் நந்தனா.
“சொல்லு நந்து”
அவரவர் வாக்கு வாதங்களை வீம்புடன் முன் வைக்கத் தொடங்கினர். நீண்ட விவாதம் நீண்டுக் கொண்டே சென்று இறுதியில் சண்டையில் போய் முடிந்தது.
மனைவியின் உடல் நிலையை அடியோடு மறந்தே போனான் நிரஞ்சன். அவன் மனம் முழுவதும் அவளது வேலை மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.
“என்னமோ பண்ணுங்க. எனக்கு என்ன வந்தது. நான் போறேன். எங்க அப்பா கிட்ட போறேன். கிரிக்கெட்டும் வேண்டாம். நீங்களும் வேண்டாம்” கண்ணை மூடி கத்தினாள் நந்தனா.
அடுத்த நிமிடம் தாமதிக்காது வீட்டை விட்டு வெளியேற படிகளில் படபடவென்று இறங்கினாள். பதறி அவள் பின்னே ஓடினான் நிரஞ்சன்.
“நந்து நில்லு” என்று அவன் கதரும் போது, அவள் வீட்டின் கடைசி படிகளில் கால் வைத்திருந்தாள்.
“நந்து.. வீட்டுக்குள்ள வா.” அதட்டினான்.
“போடா.. நீ இந்த வருஷம் ஐபிஎல் ஆடுவேன் சொல்லு. அப்போ தான் வருவேன்” என்று பதிலுக்கு திரும்பி கத்தினாள். பார்வை அவன் மேல் இருக்க, படியில் காலை தவற விட்டிருந்தாள். தடுமாறி, நிலை குலைந்து, பிடிமானம் இன்றி கைகள் காற்றில் பறக்க, கீழே விழுந்தாள் அவள்.
“நந்து…” விளையாட்டு வீரனுக்கே உரிய வேகத்தில் மின்னலாய் மனைவியை அடைந்து, அவளை கைகளில் ஏந்தினான் நிரஞ்சன்.
காலம் அவனை விட வேகமாக இருக்க, அவன் மேல் மோதி சரியப் பார்த்தாள் நந்தனா. மனைவியை இறுக்கமாக தன் மேல் சாய்த்தான் நிரஞ்சன். ஆனாலும், அவள் தலை சரிந்து தரையை தொட்டிருந்தது.
“அ..ப்…பா…” என்று அரற்றினாள். அதீத வலியில் சுருங்கியது அவள் முகம்.
“நந்து… நந்து..” மனைவியை தூக்கி மடியில் இட்டு, கன்னம் தட்டினான். வயிற்றில் பாதுகாப்பாக கை வைத்து, முகம் வருடினான்.
கண்ணை சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்த நந்தனா, “நிரஞ்..” கையை உயர்த்தி அவன் கழுத்தில் கோர்க்க போனாள். உடலில் வலுவில்லாது போக உயர்த்திய கரம் அந்தரத்தில் நிற்க, அப்படியே கண் மூடி, ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்தாள் அவள்.
முதலில் அதிர்ச்சியில் உறைந்த நிரஞ்சன், அடுத்த அரை மணி நேரத்தில் அவளை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தான்.
ஆட்டம் தொடரும்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.