நிரஞ்சனுடன் பேசி விட்டு உறங்கப் போனாள். ஆனால், மறுநாள் முழுவதும் அவன் அழைக்கவே இல்லை.
நந்தனா குட்டி போட்ட பூனை போல வீட்டை சுற்றி வந்தாள். அவளுக்கு படபடப்பாக இருந்தது. காரணம் அன்றைக்கு தான் சென்னை அணி அந்த வருடத்தின் முதல் ஐபிஎல் போட்டியை ஆடவிருந்தது.
கார்த்திகேயன் அதிசயமாக அன்று சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார். மகளின் நடவடிக்கைகளை ஓரக் கண்ணால் பார்த்தாரே தவிர, எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவர்.
மாலை நெருங்க நெருங்க அறைக்குள்ளேயே அலை மோதினாள்.
சரியாக போட்டி தொடங்க சில நிமிடங்களே இருக்க, டாஸ் போட இரு அணிகளின் கேப்டன்களும் உள்ளே வந்தனர்.
கார்த்திகேயன் ஹாலில் அமர்ந்து போட்டியை தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அறைக்குள் அமர்ந்து காதில் விழுந்த வர்ணனையை கேட்டுக் கொண்டிருந்தாள் நந்தனா.
அவள் தான் இப்போதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதே கிடையாதே. சரியாக ஒரு வருடமாக போகிறது அவள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி.
அன்றைய போட்டி சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார்.
அவரிடம் அணி குறித்து கேட்கப் பட, மெல்ல எழுந்து ஹாலிற்கு சென்று சோஃபாவில் அமர்ந்தாள் நந்தனா.
கார்த்திகேயன் மகளை பார்த்து புன்னகைத்தார். அவள் நன்றாக அமர இடம் கொடுத்து நகர்ந்து அமர்ந்து, மடியில் வைத்துக் கொள்ள குஷனை நீட்டினார். கைகள் அனிச்சையாய் அதை வாங்க, அவள் கண்கள் தொலைக் காட்சியில் நிலைத்திருந்தது.
“எஸ். சுகாஸ் இந்த வருஷம் விளையாடுறார். வீ ஆர் ஹேப்பி டு ஹவ் ஹிம் பேக்” என்றார் கேப்டன். அவர் அறிவித்த மறுநொடி சென்னை சேப்பாக்கம் மைதானம் விசில் சத்தத்தில் அதிர்ந்தது.
அவளுக்கு கர்ப்ப கால ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்ய, சின்ன விஷயங்களுக்கு கூட அதீதமாக உணர்ச்சி வசப்பட்டாள் நந்தனா. ஆனால், அந்த நொடி சுகாஸை சென்னை அணியின் மஞ்சள் உடையில் மைதானத்தில் பார்த்தும் மனம் மகிழ்ச்சியில் பொங்க கண்கள் கலங்கியது.
உதடு கடித்து அழுகையை அடக்கினாள் அவள்.
மீண்டும் அவனை மைதானத்தில் பார்ப்பதற்கு, பிரியாவுடன் சேர்ந்து எத்தனை போராடி இருப்பாள் அவள். இருவரும் அதட்டி, மிரட்டி, பிளாக் மெயில் செய்து அவனை ஒத்துக் கொள்ள வைத்திருந்தனர்.
சென்னை அணி பீல்டிங் செய்ய களத்தில் இறங்கியது. நிரஞ்சன், சுகாஸ் இருவரும் ஒன்றாக பேசி சிரித்துக் கொண்டே மைதானத்திற்குள் நுழைய, இன்ப மிகுதியில் இஷ்டத்திற்கு துடித்தது அவள் இதயம். அவளது மகிழ்ச்சியை உணர்ந்தது போல, வயிற்றில் இருந்த குட்டியும் உதைத்து அசைய, “எஸ் குட்டி. அப்பா ஆடுறாங்க. சுகாஸ் மாமா இஸ் பேக்” கைகள் வயிறை வருட, மனதோடு பேசினாள்.
அன்றைக்கு மூன்று ஓவர்கள் பந்து வீசிய நிரஞ்சன் அதிசயமாக விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. நோ பால் வீசவும் இல்லை. அவள் அதை தான் சாதனையாக பார்த்தாள். முகம் மலர புன்னகைத்தாள்.
அவளுக்கு அப்படியே எழுந்து சென்னைக்கு ஓடி விட மாட்டாமோ என்றிருந்தது. தொலைக் காட்சியை விட்டு நகரவில்லை அவள் கண்கள்.
சென்னை அணி சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் கூட பஞ்சாப் அணியை 130 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டிருந்தது.
சென்னை அணிக்கு ராஜ் மற்றும் ஷான் தொடக்க ஆட்டக் காரர்களாக களத்தில் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே ராஜ் மூன்று ரன்கள் எடுத்து வெளியில் வர, “நோ..” என்று கத்தினார்கள் சென்னை ரசிகர்கள்.
“இப்ப சுகாஸ் இறங்குவான் பாருங்க ப்பா” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேட்டை சுழற்றிய படியே வந்த சுகாஸ் மூன்றாவதாக களத்தில் இறங்கினான்.
அடுத்த ஓவரில் ஷான் பத்து ரன்கள் எடுத்து அவுட்டாக, “மாப்பிள்ளை இறங்குவார்” என்றார் கார்த்திகேயன் வேகமாக.
“இல்ல ப்பா. சாம் இறங்குவான்” என்றாள் நந்தனா உறுதியாக. அப்பாவும், மகளும் தொலைக்காட்சியை வெறித்து நோக்க, பூர்ணிமா கூட அங்கே வந்து அமர்ந்தார்.
மகளை ஆச்சரியமாக பார்த்த பூர்ணிமா, “நீ.. நீ சிவராஜ் அண்ணா கிட்ட பேசினியா?” என்று கேட்டே விட்டார்.
“ம்மா, நான் சும்மா கெஸ் பண்ணேன் மா. எனக்கு சென்னை டீமை பத்தி தெரியாதா? சிவராஜ் சாரை விட, கேப்டன் எப்படி யோசிப்பார்னு ஜஸ்ட் கெஸ் பண்ணேன் மா. அது சரியா இருந்திடுச்சு” சிரிப்புடன் சொன்ன மகளை பார்த்தது பார்த்தபடி இருந்தார் பூர்ணிமா. மகள் கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசிக்கிறாள், ஆழ்ந்து, ரசித்து அதை செய்கிறாள் என்பது புரிய அவர் கண்களில் கவலையின் ரேகைகள்.
“சிக்ஸ்” ஆர்ப்பரித்தது மைதானம். சுகாஸ் தனது பாணியில் இரண்டு அடிகள் இறங்கி வந்து பந்தை பறக்க விட்டிருந்தான். மஞ்சள் ரசிகர்கள் ஆரவாரித்தனர்.
சுகாஸ் பெரிதாக அதிரடி காட்டாமல் நிதானமாக ஆடினான்.
மறுபுறம் சாம் அதிரட காட்ட, சிக்ஸ் செல்ல வேண்டி அவன் அடித்த பந்து கேட்ச்சாகி இருந்தது. அவன் எரிச்சலுடன் முணுமுணுத்து கொண்டே வெளியேற, “ஏற்கனவே மூணு விக்கெட் போய்டுச்சு. ரவி இல்லனா கேப்டன் இறங்க வாய்ப்பு அதிகம். மாப்பிள்ளையை கடைசி ஓவருக்கு அடிக்க ஆள் வேணும்னு இப்போ..”
“ப்பா..” என்று இடைப் புகுந்து ஆட்சேபித்தாள் மகள்.
“நிரஞ்சன் தான் இறங்குவார்” அவள் அழுத்தமாக சொல்ல, அங்கே, “நிரஞ்.. நிரஞ்” என்ற கூச்சலுக்கு நடுவே களத்தில் இறங்கினான் நிரஞ்சன்.
சுகாஸ் ஓடிச் சென்று அவனை அணைத்து விடுவிக்க, ‘ஐயோ, என்னை அழ வைக்கறானுங்க’ மனதில் முணுமுணுத்தாள் நந்தனா.
நிரஞ்சன் எடுத்ததும் அடித்து ஆட ஆரம்பித்திருந்தான். அவனிடம் சொல்லப்பட்டதும் அது தான்.
“அடிச்சு ஸ்கோரை ஏத்தி விட்டுட்டு வா நிரஞ். மிச்சத்தை உனக்கு பின்னாடி இறங்குறவன் பார்த்துப்பான்” என்றே சொல்லியிருந்தார் கேப்டன்.
அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்துக் கொண்டிருந்தது.
அடுத்த ஓவரில் இரண்டாம் ரன் எடுக்க இருவரும் மூச்சை பிடித்துக் கொண்டு ஓட, அங்கே பந்து எதிரணி வீரனின் கைக்கு சென்றிருந்தது. “அச்சோ ரன் அவுட்டாக போறான் சுகாஸ்” சத்தமாக கத்தியே விட்டாள் நந்தனா.
“நந்து..” கார்த்திகேயன் மகளை அதட்ட, “நான் டென்ஷன் ஆகலை ப்பா” என்றாள், அவள் தோள்களை குலுக்கி, அங்கே பேட்டை நேராக நீட்டியபடி தரையில் சறுக்கி, வழுக்கி சென்று கொண்டிருந்தான் சுகாஸ்.
மூன்றாம் நடுவர் சோதிக்க, திரையில், “நாட் அவுட்” என்று வந்ததை பார்த்தும் தான் அவளுக்கு மூச்சே சீரானது.
கை, கால்களை உதறியபடி எழுந்து நின்றான் சுகாஸ். அவனது மஞ்சள் உடை, செம்மை பூசி இருந்தது.
நிரஞ்சன் அவனிடம் ஓடிப் போய் நிற்க, “என்னை ஒன்னும் சொல்ல மாட்டா நந்து. உன் பொண்டாட்டி உன்னை தான் இதுக்கு உதைப்பா” அவனின் உதட்டசைவை படித்தாள் அவள். மற்றதை ஆங்கிலத்தில் சொன்னவன், பொண்டாட்டியை மட்டும் தமிழில் சொல்ல அவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
இருவரும் ஒன்றாக திரும்பி கேமராவை பார்த்து புன்னகைத்தனர். அது தனக்கான புன்னகை என்பது அவளுக்கு புரியத் தான் செய்தது.
கிரிக்கெட் பார்க்கும் சுவாரசியத்தில் அவள் உணவை மறந்திருக்க, கணவருக்கு தட்டில் வைத்து கொடுத்து விட்டு, மகளுக்கு உணவை தானே எடுத்து ஊட்டினார் பூர்ணிமா.
“ஷோ ஆஃப்” என்று அவனை கலாய்த்து கொண்டிருந்தான் சுகாஸ்.
பதினாறாம் ஓவரின் முடிவில் சென்னை அணி அந்த வருடத்தின் முதல் போட்டியை வென்று, அந்த ஆண்டுக் கணக்கை வெற்றியுடன் தொடங்கியது.
“திறமையும், அனுபவமும் மைதானத்தில் நிற்கும் போது இது தான் நடக்கும் மக்களே. மூத்த வீரர்கள் சுகாஸ் மற்றும் நிரஞ்சன் தங்களை மீண்டும் நிரூபித்த நாள் இன்று” வர்ணனையாளரின் வார்த்தைகள் அவளை நெகிழ்த்தியது.
பேட்டை வான் நோக்கி உயர்த்தி மக்களின் பாராட்டை ஏற்றுக் கொண்டான் நிரஞ்சன்.
அதன் பின் ஆழ்ந்த மூச்சிழுத்து கொண்டான். பேட்டை தரையில் வைத்து விட்டு அவன் ஜெர்சியில் (t- shirt – team uniform) கை வைக்க, நந்தனாவின் இதயம் தொண்டைக்கு வந்து விட்டிருந்தது.
“நிரஞ்..” கத்தியபடி சுகாஸ் ஓடிச் சென்று நிரஞ்சனை இறுக அணைத்து அந்த வெற்றியை கொண்டாடினான். அவனை கைப் பிடித்து ஜெர்சியை கழற்ற விடாமல் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தியிருந்தான் சுகாஸ்.
“தாங்க்ஸ் சுகாஸ்” இங்கே முணுமுணுத்தாள் நந்தனா.
“ஓ மை காட் நிரஞ். முட்டாளா நீ?” என்றான் சிரித்துக் கொண்டே. மேலே அவன் சொன்னானோ அவளுக்கு தெரியவில்லை. கேமராவை முறைத்த கணவன் முகம் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.
சுகாஸ் வாய் விட்டு சிரித்தபடி நிரஞ்சனின் தோளில் தட்டினான். இருவரும் ஒன்றாக சிரித்தபடி, எதிரணி வீரர்களுக்கு கைக் கொடுத்துக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினர்.