நிரஞ்சன் மீண்டும் மீண்டும் அலைபேசியை பார்த்துக் கொண்டேயிருந்தான். அதில் இருந்த நந்தனாவின் இமெயிலை வாசித்துக் கொண்டேயிருந்தான். அவன் கைகளில் மெலிதான நடுக்கம். ஆள்காட்டி விரலால் அவனது கரத்தில் இதயம் வரைந்துக் கொண்டிருந்தாள் நந்தனா. எதையுமே உணரவில்லை அவன்.
அவன் கண்கள் ஆழமாய் அலைபேசிக்குள் அமிழ்ந்திருந்தது.
நந்தனா மீண்டும் வேலையில் சேர விரும்புவதாக சென்னை அணி நிர்வாகத்திற்கும், சிவராஜிற்கும் தனித்தனியாக அலுவல் ரீதியான கடிதம் எழுதி இருந்தாள். ஆனால், மெயிலை அனுப்பாமல் அப்படியே ட்ராஃப்ட்டில்(Draft) வைத்திருந்தாள்.
அந்த முடிவை மனைவி எப்போது எடுத்திருப்பாள் என்ற ஆர்வம் மிக, “உண்மையா நந்து? எப்போ?” என்று கேட்டான் நிரஞ்சன். அவன் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி, அதை மீறிய மகிழ்ச்சி. உணர்ச்சி மிகுதியில் கரகரத்தது அவன் குரல்.
“ஏன் இப்படி எமோஷனல் ஆகுறீங்க நிரஞ்சன்?” அவன் மார்பில் சாய்ந்தவாறே லேசாக அண்ணாந்து பார்த்து கேட்டாள்.
“ப்ச், என்ன நந்து? எல்லோரையும் போல நீயும் ஆம்பளை அழக் கூடாது சொல்லப் போறியா? மனுஷனா இருந்தா கோபம், வருத்தம், அழுகை, கண்ணீர் எல்லாம் சகஜம் பொண்டாட்டி. அதுல நான் மட்டும் விதிவிலக்கா என்ன?”
“ஆனா, நீங்க ஃபீல் பண்ணா எனக்கு கஷ்டமா இருக்கே” மூக்கை சுருக்கி அவள் சொல்ல, அதை கடிப்பது போல பாவனை செய்தான் அவன்.
“இந்த அதிசயம் எப்போ நடந்தது?” என்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தான்.
அவன் மார்பில் அழுத்தமாய் முகம் பதித்திருந்த நந்தனா, “அதுல தேதி இருக்குமே பாருங்க” என்றாள்.
அவள் சென்னையில் இருந்து கோபித்து கொண்டு மும்பை வந்த தினத்தைக் காட்டியது தேதி. ஏற்கனவே அவர்களுக்கு அனுப்பியிருந்த மெயிலில், பதில் எழுதி இருந்தாள். ஆக, அது நேரத்தையும் சேர்த்தே காண்பித்தது. நண்பகல் 2 மணி என்றது நேரம்.
அப்படியென்றால் அவன் ஐபிஎல் விளையாட போகிறான் என்று அவளுக்கு உறுதியாக தெரியும் முன்னே அவள் தன் முடிவை எடுத்து விட்டிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன், அவளது முகத்தை நிமிர்த்தி, “ரியலி நந்து? உன் மனசு அப்பவே மாறிடுச்சா? ஏன் என்கிட்ட சொல்லல?” என்று சினம் துளிர்க்க கேட்டான். ஆனால், கண்களில் சினத்தின் சாயலே இல்லை.
“காலைல உங்ககிட்ட சொல்ல நினைச்சேன். அதுனால தான்.. நான் என்ன பண்ணட்டும்னு உங்ககிட்ட கூட கேட்டேனே. அப்புறம் பொறுமையா நைட் சொல்லிக்கலாம்னு…” அவளின் வார்த்தைகள் தேய, தலைக் கோதி விட்டான்.
“இந்த மெயிலை டீம் மேனேஜ்மென்ட், சிவராஜ் சார் ரெண்டு பேருக்கும் ஏன் அனுப்பல நந்து?” அடுத்த கேள்வியை வீசினான்.
“உங்ககிட்ட கேட்காம.. உங்ககிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணாம.. எப்படி அனுப்ப?” அவன் கண்கள் வியப்பில் விரிய,
“இந்த முறை என் முடிவை உங்களை கேட்டு எடுக்கணும்னு நினைச்சேன். உங்ககிட்ட மொதல்ல விஷயத்தை சொல்லிட்டு அப்புறம் தான் எதையும் செய்யணும்னு இருந்தேன். அதான், அவங்களுக்கு மெயிலை அனுப்பல. எனக்காக நீங்க எவ்வளவோ செஞ்சு இருக்கீங்க.
மனைவியின் கனவை தொலைக்க விடாத கணவன் இங்க எத்தனை பேருக்கு கிடைப்பாங்க நிரஞ்சன்? மனைவியின் கனவை கலைக்கற கணவர்கள் தான் இங்க அதிகம். பொண்ணுங்க எத்தனை உயரத்துக்கு போனாலும் அவங்களுக்கான அங்கீகாரம் இங்க கிடைக்குதா? ப்ச், இல்லையே. ஆனா, நீங்க.. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க நிரஞ்சன்?” விழிகள் விரிய அவனை அதிசயமாய் பார்த்திருந்தாள் நந்தனா.
“உன்னோட அழகு மட்டுமில்ல பொண்டாட்டி. அறிவையும் பார்த்து தான் காதலில் விழுந்தான் இந்த பேட்ஸ்மேன்” அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்துச் சொன்னான்.
அப்படியே நிமிர்ந்த நிலையில் அவன் கண்களைப் பார்த்து, “நான் ரொம்ப லக்கி இல்ல?. என் வேலையை என்னை விட நீங்க தான் அதிகமா மதிக்கறீங்க, நேசிக்கறீங்க. என்னை.. என்னை..” அவளால் வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை.
சில சமயங்களில் வார்த்தைகள் கூட அதிகப்படி தானே? அன்பும், அருகாமையும், மௌனமும் உணர்த்தி விடாததையா வார்த்தைகள் உணர்த்தி விடப் போகிறது? கணவனை மேலும் ஒண்டினாள் நந்தனா. அவளின் தோளில் கைப் போட்டு தன்னோடு இறுக அணைத்து கொண்டான் நிரஞ்சன்.
அவனுக்கு சாதித்து விட்ட உணர்வு. கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய போது கூட கிடைக்காத பேரின்பத்தை அக்கணம் முழுமையாக உணர்ந்தான் அவன். மனம் மகிழ்ச்சியில் நிறைந்து தளும்பி கொண்டிருந்தது.
நாம் நேசிப்பவரின் மகிழ்ச்சியை அவர்களுக்கு மீட்டு தருவதை விட மகிழ்வான விஷயம், என்ன இருக்கப் போகிறது இந்த உலகில்? அந்த கணம் அத்தனை நிறைவாக உணர்ந்தான் அவன்.
உள்ளம் உவகை கொண்டிருக்க, அவனுக்கு மும்பை அதிர கத்த வேண்டும் போலிருந்தது.
அந்த நிமிடமே கிரிக்கெட் விளையாட வேண்டும் போலிருந்தது. அதிரடியாக அடித்து பந்துகளை தெறிக்க விட வேண்டும் போலிருக்க, தன்னை பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.
“நான்.. நான் திரும்ப கிரிக்கெட்குள்ள வர்றேன் நிரஞ்சன். உங்களுக்கு…” அவள் முடிக்கும் முன்பே அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான் நிரஞ்சன். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லாத அளவிலான நெருக்கம்.
மெல்ல அவளை விலக்கி, “எனக்கு வேற எதுவும் வேணாம் நந்து. உன்னை திரும்பவும் டீம்ல, கிரவுண்ட்ல பார்த்தா போதும். வீடியோ அனலிஸ்ட் நந்தனாவா, லேப்டாப் முன்னாடி காஃபி கப்போட உட்கார்ந்து, கண்ணை சுருக்கி நீ வீடியோவை கூர்ந்து பார்க்கறதை பார்த்தா போதும். ஐ வில் பி ஹேப்பி நந்து” அவளின் முகத்தை கைகளில் ஏந்தி சொன்னான். அவளுக்கு சட்டென கண்கள் கலங்கியது.
“ஷ்ஷ்ஷ், என்ன இது நந்து?” கடிந்து கொண்டு கண்ணீரை துடைத்து விட்டான்.
“அன்னைக்கு நீ மாமாவோட கிளம்பினதும், வீட்ல தனியா இருக்கவே பிடிக்கல நந்து. உனக்கு அடுத்து கிரிக்கெட் தானே என்னோட புகலிடம். அதான் கிளம்பி பிராக்டீஸ் போனேன். அங்க சிவராஜ் சார் என்னைப் பார்த்ததும், நிரஞ், என்னோட ஜீனியஸ் எங்கன்னு கேட்டார். நான் திருதிருன்னு முழிக்க, “ஒன் யியர் ப்ரேக் மேன். இதுக்கு மேல என்னால நந்து இல்லாம சமாளிக்க முடியாது. வேற யாரும் அவ அளவுக்கு நுணுக்கமா வேலை பார்க்க மாட்டேங்கறான். அவ எப்போ வர்றா? நான் கேட்டா சரியா பதில் சொல்ல மாட்டாங்கறா? உன்கிட்ட ஏதாவது சொன்னாளா நிரஞ்? மேனேஜ்மென்ட் வேற என்னை போட்டு கேள்வியா கேட்டு கொல்றாங்க. என்னால அவங்களுக்கு பதில் சொல்ல முடியல” அப்படினு புலம்பினார் மனுஷன்”
அவன் பேச பேச அவள் முகத்தில் மலர்ந்த புன்னகை.
“என்ன நடந்தது நந்து?” என்றவன், அவனே, “லெட் மீ கெஸ்” என்றான்.
“டீம் மேனேஜ்மென்ட் உன்னோட ரெசிக்னேஷன் அக்சப்ட் பண்ணி இருக்க மாட்டாங்க. சரியா? சென்னை டீமோட சப்போர்ட் ஸ்டாஃப் எப்பவும் பெஸ்ட்டானவங்களா தான் இருப்பாங்க. அவங்களை அவ்வளவு லேசா வெளில போக விட்டுடுவாங்களா என்ன?” என்று அவன் கேட்க, கீழுதட்டை கடித்து சிரிப்பை மறைத்தாள் நந்தனா.
“என் கோச் ஶ்ரீதரன் சாரை பல வருஷமா வற்புறுத்தி டீம்குள்ள கொண்டு வந்தவங்க, உன்னை அவ்வளவு சீக்கிரம் வெளில போக விட்டுடுவாங்களா என்ன?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்.
“இந்த ஐபிஎல் சீசன் முடிச்சு கொடுத்துட்டு ப்ரேக் எடுத்துக்கோ மா. நெக்ஸ்ட் சீசனில நாம கப் அடிக்கணும். அதுக்கு ரெடியா வந்திடு சொன்னாங்க. என்னோட ரெசிக்னேஷனை அவங்க..”
“அவங்க ஏத்துக்கவே இல்ல. எனக்குத் தெரியும் பொண்டாட்டி. எனக்குத் தெரியும். இதுல ஏதோ கோல்மால் இருக்குனு எனக்கு அன்னைக்கே மனசுல பட்டுச்சு. ஏதோ இடருதேன்னு அப்பவே நினைச்சேன்.” அவள் சொல்ல வந்ததை, சொல்லி முடித்தான் அவன்.
“எனக்கு அன்னைக்கு இருந்த கோபத்துல.. வருத்ததுல… வேற எதுவும் மனசுல பதியல. என்னால தெளிவா யோசிக்க முடியல அந்நேரம். என்னை எப்படி ஏமாத்தி இருக்க நீ?” அவன் வார்த்தையில் இருந்த கோபம் குரலில் சுத்தமாய் இல்லை.
“சாரி” என்றாள், அவன் கன்னத்தில் கைப் பதித்து,
“இந்த வருஷம் ஐபிஎல் ஆக்சன் (ஏலம்) ஆரம்பிக்கும் முன்னாடி எனக்கு கால் பண்ணாங்க. நான்.. நான் வரலைன்னு சொல்லிட்டேன். ஐபிஎல் சீசன் போட்டி தேதி அனௌன்ஸ் பண்ணப்பவும் எப்போ ஜாயின் பண்றீங்கன்னு கேட்டாங்க” தயக்கத்துடன் அவள் சொல்ல,
“அதுக்கும் முடியாது சொல்லி இருக்க நீ? இல்ல?” கோபமாய் எகிறினான் அவன்.
“ஏன்னா, அப்போ ரொம்ப குழம்பி போய் இருந்தேன் நிரஞ்சன். ஆனா, இப்போ ஓரளவு தெளிவா இருக்கேன். நீங்க என் கூட இருக்கும் போது இந்த உலகத்தையே லெஃப்ட் ஹேன்ட்ல டீல் பண்ணிடலாம்னு தைரியம் வந்திருக்கு. நமக்காக.. என்னோட வேலையை, கனவை தொடர முடிவு பண்ணிட்டேன் நிரஞ்சன். எல்லாமே உங்களால தான். என்னை திரும்ப கிரிக்கெட்குள்ள நீங்க தான் வர வச்சீங்க. நீங்க மட்டும் விடாம என்னை புஷ் பண்ணலன்னா.. நான் சத்தியமா கிரிக்கெட்டை மறந்திருப்பேன்.. சென்னை டீமை என்னோட ரேசிக்னேஷனை அக்செப்ட் பண்ண வச்சுருப்பேன்”
“ப்ச், நான் அப்படி ஒரு நாளும் நடக்க விட மாட்டேன் பொண்டாட்டி.” மேலே அவளை பேச விடாமல், பட்டென்று சொன்னான் அவன்.
“நந்தனா.. உன்னோட பேரின் அர்த்தமே, “நம் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருபவர்”. என்னோட ஹேப்பினஸ் நீ பொண்டாட்டி. ஆனா, நீ சந்தோசமா இருந்தா தானே நானும்…”
“போதும். போதும். ரொம்ப ஓவரா வசனம் பேசறீங்க” அவள் அலுத்துக் கொள்ள, அவ்விரவில் பத்தாவது முறையாக மனைவியை உணர்ச்சி பொங்க அணைத்து கொண்டான் நிரஞ்சன். அன்பை அணைப்பின் வழியே அளவில்லாமல் கடத்தினான்.
அவனின் ஒரு கரம் மனைவியின் தோளை சுற்றி, அவளின் கழுத்து டாட்டூவை வருட, மறுகரம் வயிற்றில் அழுத்தமாக பதிந்திருந்தது.
“தாங்க்ஸ் நந்து” என்றான் நெகிழ்வுடன். அக்கணம் பெற்றோரின் அலாதி அன்பை உணர்ந்த குழந்தை, மெல்ல தாயின் வயிற்றில் அசைந்து தன் இருப்பை அவர்களுக்கு உணர்த்தியது.
“பாப்பூ உதைக்கறா பொண்டாட்டி” அவன் கரம் மென்மையான அழுத்தத்துடன் அவள் வயிற்றில் பதிய, மீண்டும் ஒரு மெல்லிய அசைவு. இருவர் முகத்தையும் அவர்களே பார்த்திருக்க வேண்டும், அப்படியொரு பூரிப்பு.
“ஹா.. நந்து” ஆழ மூச்சிழுத்து மனைவியை விட்டு நகர்ந்து அமர்ந்தான் நிரஞ்சன். அவளது அலைபேசியை எடுத்து, மெயிலை அவனே சரி பார்த்து, திருத்தங்கள் செய்து, மனைவியிடம் ஒருமுறை காண்பித்து விட்டு, சென்னை அணி நிர்வாகம் மற்றும் சிவராஜ் இருவருக்கும் உடனே அனுப்பி வைத்தான்.
உண்மையில் அவனுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் சேர்த்தே அந்த வரத்தை தந்திருந்தாள் நந்தனா.
“ஹேய்… நீ சாதிச்சுட்டடா நிரஞ்சா” என்று அவன் கர்ஜிக்க, எட்டி அவன் கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழ்களை பதித்தாள் நந்தனா.
“லெட்ஸ் செலிபிரேட் திஸ் பொண்டாட்டி” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னவன், இந்த முறை தேடியது கேக்கை அல்ல.
நள்ளிரவு இரண்டு மணி போல, மாமனாருக்கு இன்ப அதிர்ச்சியை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டே உறங்கப் போனான் நிரஞ்சன்.
மறுநாள் விடியலில் உடற்பயிற்சி செய்ய வெளியில் வந்த மருமகனை முதல் முறையாக, முறைப் பார்க்காமல், கூச்சப்படாமல் இழுத்து அணைத்துக் கொண்டார் கார்த்திகேயன். அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. அவரின் ஏறியிறங்கிய தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்த வார்த்தைகளை சரியாய் படித்தான் நிரஞ்சன்.
அவன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு விலகினார் அவர். அங்கே வார்த்தைகளுக்கு தேவையில்லாது போக, ஒருவரையொருவர் பார்த்து மலர்ந்து புன்னகைத்துக் கொண்டனர்.
எட்டு மணி போல உறக்கம் கலைந்து எழுந்த நந்தனாவின் முன் மந்தகாச புன்னகையுடன் நின்றிருந்தான் நிரஞ்சன். உறக்கம் சுமந்த விழிகளில் அவனை நிரப்பி புன்னகைத்தாள். அவளின் அலைபேசியை நீட்டினான் நிரஞ்சன்.
“பாரு” என்றான், கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு.
கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு வாசித்தாள். “இந்த வருடத்தின் ஐபிஎல் வெற்றி கோப்பையை தூக்கி உயர்த்திப் பிடிக்க, ஒரு கை குறைவாக இருக்கிறது. சீக்கிரம் வந்து கைக் கொடு நந்தனா” என்ற பதிலை மெயிலில் அனுப்பி அவளை நெகிழ வைத்திருந்தனர் சென்னை அணி நிர்வாகத்தினர்.
“நாளைக்கு இவ்னிங் நாலு மணிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் பார்க்கலாம் நந்து. மும்பையை இந்த முறை ஜெயிச்சே ஆகணும். அதுக்கு தயாராக வரவும்.” என்று பதில் அனுப்பி இருந்தார் சிவராஜ்.
அன்றைய நாளின் விடியல் அவர்களுக்கு அற்புதமாக, அர்த்தமுள்ளதாக மாறியிருந்தது.
“தூங்கினது போதும் எழுந்திரு, எழுந்திரு. வேலை இருக்கு” என்று அவளை கைகளில் அள்ளி, குளியல் அறையில் கொண்டு விட்டான் நிரஞ்சன். அதன் பின்னான பொழுது அவர்கள் வசம் இல்லாமல் போனது.
பூர்ணிமா செய்தியை கேட்டதும் விருந்தே சமைத்து விட்டார். இனிப்புடன் தடபுடல் பட்டது உணவு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.