கணவனது அழைப்பு காதில் விழுந்தும் கூட அவனை நிமிர்ந்து நோக்காமல் அப்படியே நின்றாள் நந்தனா.
அவளின் கரம் பற்றி அறைக்குள் இழுத்துப் போனான் நிரஞ்சன். மௌனமாய் சென்று படுக்கையில் சரிந்தாள் நந்தனா.
அக்கணம் அவளின் மனமும், உடலும் தாங்கவியலா சோர்வில் துவண்டிருக்க, விழிகளை திறந்து வைத்திருப்பதே அவளுக்கு பெரும் பாடாக இருந்தது. ஆனால், அந்த சோர்வு அவளின் மூளைக்கு இல்லை போலும். இன்னமும் அது அதிவேகமாக சிந்தித்து கொண்டு தானிருந்தது.
எந்த வித கிரிக்கெட் பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, தன் திறமை ஒன்றின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, முட்டி மோதி மேலே வந்தவன் நிரஞ்சன். போட்டியும், பொறாமையும், கேவலமான அரசியலும் நிறைந்த இந்திய கிரிக்கெட் அணியில், கால் பதிப்பதே சாதனை தான். ஆனால், நிரஞ்சன் இன்றைக்கு இந்திய அணியில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்திருக்கிறான். பல வருடங்களாக கடுமையாக போராடி அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்
அது என்றுமே மாறி விடக் கூடாது என்பதில் நந்தனா மிகவும் கவனமாக இருந்தாள், இப்போதும் இருக்கிறாள்.
“நந்து”
மெல்ல திரும்பினாள்.
“சாரி” என்றான் நிரஞ்சன். பதில் சொல்லாமல், நகர்ந்து அவன் தோளில் தலை வைத்து கண்களை மூடிக் கொண்டாள் நந்தனா.
“ஐ மிஸ் யூ” என்றான் கரகரத்த குரலில். அதற்கும் அவளிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை.
‘நான் இங்க தான் இருக்கேன். உங்களுக்கு ரொம்ப நெருக்கத்துல.. எப்பவும்’ மனதில் சொல்லிக் கொண்டாள் நந்தனா.
ஆனால், நிரஞ்சன் மிஸ் செய்வதாக சொல்லும் நந்தனா, மனைவி நந்தனா இல்லை என்பதை அவள் நன்கு அறிவாள்.
அந்த நந்தனாவை திருப்பிக் கொண்டு வர அவளால் மட்டுமல்ல, யாராலும் முடியாதே.
இனி அந்த பாதைக்கு திரும்பப் போவதில்லை என்று அவள் தான் வெகு நிச்சயமாக முடிவு செய்து விட்டாளே.
ஒரு முடிவை எடுத்தப் பிறகு மாற்றிக் கொண்டே இருக்க முடியாதே. எத்தனை பெரும் போராட்டத்திற்கு பின் அந்த முடிவை எடுத்தாள்.
இப்போது கணவனே கெஞ்சிக் கேட்டாலும், அந்த முடிவு மாறப் போவதில்லை என்பது அவளுக்கு திண்ணம்.
“அத்தனைக்கும் ஆசைப்படலாம் நிரஞ்சன். ஆனா, எல்லாத்தையும் வாழ்க்கை நமக்கு அள்ளிக் கொடுத்திடாது. ஏதாவது ஒன்னு தான் நிரந்தரம். யூ கான்ட் ஹவ் இட் ஆல். இல்லையா? கடலும் வேணும், கரையும் வேணும்னா எப்படி? வானமும் வேணும், வனமும் வேணும்னா? வாய்ப்பில்லையே நிரஞ்சன்? ஏதாவது ஒன்னை தானே தேர்ந்தெடுக்க முடியும்?” பல மாதங்கள் முன்பு கணவனிடம் கேட்டது அவள் நினைவில் வந்தது.
வனத்தின் நடுவே வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து, வானத்தை இமைக்காமல் ரசிக்கலாம் தான். ஆனால், அதற்கொரு கொடுப்பினை வேண்டும். அது அவளுக்கு இல்லை எனும் போது அவளும் தான் என்ன செய்வாள்?
அத்தனை உடல் சோர்விலும் உறக்கம் வர மறுக்க, அவளுக்கு அப்பாவை பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர் குரல் கேட்க வேண்டும் போல, மீண்டும் அவரின் மகளாக மாற வேண்டும் போல..
மீண்டும் அவரின் மகளாக மட்டும் மாறுவது நடவாத ஒன்று. இனி என்றைக்கும் அவள் நிரஞ்சனின் மனைவி நந்தனா தான்.
“பிளீஸ், தூங்கு. யூ நீட் ரெஸ்ட்”
நிரஞ்சன் அக்கறையுடன் சொல்ல, தோளில் இருந்து முகத்தை நகர்த்தி அவன் மார்புக்கு மாற்றினாள்.
சீராக ஒலித்த அவனது இதய துடிப்பை கேட்ட படியே ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தாள் நந்தனா.
விடிவிளக்கு சிந்திய வெளிச்சத்தில் தூங்கும் மனைவியின் முகம் பார்த்தபடி, உறக்கம் தொலைத்து விழித்திருந்தான் நிரஞ்சன்.
அவன் விளையாட்டு வீரன் தான். ஆனால், வாழ்க்கை ஆடும் விளையாட்டில் அவனுக்கு எந்த பந்தை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.
வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டத்தை, வாழ்க்கையை அவனே தான் சிக்கலாக்கி கொண்டான். மனைவி அவன் மேல் கோபமாக இருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கவே செய்தது. அவள் தன்னை வெறுத்தால் கூட அவன் ஆச்சரியப் படவே மாட்டான். ஒவ்வொரு முறையும் பிரிவை நோக்கி அவர்கள் உறவை அவன் தான் நகர்த்தினான். இப்போதும் அவளுக்கு நெருக்கடி கொடுத்து அதையே தான் செய்கிறான்.
நந்தனாவிற்கு கிரிக்கெட் இரத்தத்தில் ஊறிய ஒன்று. அவனை போல பள்ளியில், பின் பதின்ம வயதில் என்று கிரிக்கெட் மேல் பைத்தியம் கொண்டு அதற்குள் வந்தவள் இல்லை அவள்.
பிறந்ததில் இருந்தே கிரிக்கெட் அவள் வாழ்வின் ஓர் அங்கம்.
ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் அவளும் ஓர் அங்கமாகி போனாள்.
ஆனால், இன்று அத்தனையையும் தூக்கி எறிந்து விட்டு, கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் மட்டுமே காண்கிறாள்.
‘அவளை போல ஒரு நிலை வந்தால், நான் என்ன செய்வேன்?’ தன்னைத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டான் நிரஞ்சன்.
பல முறை மனதை அறுத்த கேள்வி தான், ‘மனைவியா? கிரிக்கெட்டா?’
அவனுக்கு இப்படி ஒரு இக்கட்டு வந்திருந்தால் என்ன செய்திருப்பான்?
மேலே யோசிக்கவே அவனால் முடியவில்லை. சில வினாக்களுக்கான விடைகளை நாம் விரும்பவே போவதில்லை என்பதை உணர்ந்தவன் நெடு மூச்சொன்றை வெளியிட்டு கொண்டான்.
தன் மார்பில் பதிந்திருந்த மலர் முகத்தை பார்க்கையில் அனிச்சையாய் அவன் மனம் பின்னோக்கி பயணிக்கத் தொடங்கி இருந்தது.
அந்தி சாயும் நேரம். சூரியன் கொஞ்சம் சாந்தமாக இருக்க, வலைப் பயிற்சிக்காக (Net Practice) மைதானத்திற்குள் நுழைந்தான் நிரஞ்சன்.
மைதானமே காலியாக இருந்தது. அணியினர் யாரும் அப்போது வந்திருக்கவில்லை.
நாம் தான் முதல் ஆளாக வந்து விட்டோமா? என்று எண்ணிக் கொண்டே, பேட், பால் அடங்கிய தனது கிட் பையுடன் மைதானத்தின் உள்ளே அவன் நடக்க, அப்போது தான் அவன் கண்ணில் விழுந்தது அந்த காட்சி.
மைதானத்தின் வலது மூலையில் இருந்த வலையின் பின்னே ஒருவன் பயிற்சியில் ஈடுபட்டிருக்க, நேராக அவனை நோக்கி நடக்கத் தொடங்கினான் நிரஞ்சன்.
இரண்டாம் நிமிடம் அதிர்ச்சியில் அவனது நடை நின்று விட, கண்கள் தெறித்து விடும் அளவு வெறித்து பார்த்தான் அவன்.
சென்னை அணி மிகவும் கட்டுக் கோப்பானது என்று அவன் கேள்வி பட்டிருக்க, இங்கே பெண்ணொருத்தி பந்து வீசிக் கொண்டிருந்தாள்.
இது எப்படி சாத்தியம்? என்று புருவம் சுருங்க யோசித்தபடி அருகில் செல்ல, வேண்டும் என்றே லெக் ஸ்டம்பிற்கு வெளியே ஸ்பின் செய்து பந்தை தொட முடியாத படி வைடாக வீசினாள் அந்தப் பெண். அதை எதிர்பார்த்திராத பேட்ஸ் மேன் நொடியில் சுதாரித்து, நின்ற இடத்தில் இருந்தே ஸ்டைலாக, லாவகமாக கவர் டிரைவ் அடிக்க, மெலிதாக சிரித்தாள் அப்பெண். அந்தச் சிரிப்பு சத்தம் அவனை ஈர்க்க மேலும் அவர்களை நெருங்கி அப்பெண்ணின் முகத்தை கூர்ந்து கவனித்தான் நிரஞ்சன்.
எங்கோ பார்த்த முகம், அவன் நினைவில் அழுத்தமாக பதிந்திருந்த முகம். நினைவடுக்களில் அவளைத் தேடத் தொடங்கினான் நிரஞ்சன்.
ஆனால், அதற்குள் அவள் அடுத்தடுத்த பந்துகளை வீச, அசராமல் அடித்து நொறுக்கி கொண்டிருந்தான் பேட்ஸ்மேன். முதல் பந்தை தவிர, அடுத்து அவள் வீசிய அத்தனையும் ஷார்ட் பால் (short ball). பந்து வரும் வேகத்தை மிக துல்லியமாக கணித்து சரியாக அடித்து ஆடிக் கொண்டிருந்தான் பேட்ஸ்மேன். ஒரு பந்தை கூட தவற விடவில்லை அவன்.
“ஹிர்ரே, என்னால ஷார்ட் பாலை சரியா ஹாண்ட்ல் பண்ண முடியும் டார்லிங். தேங்க்ஸ் ஃபார் த டிப் (Tip)” பேட்டை காற்றில் தூக்கி சுழற்றியபடி, குதூகளித்து கத்தினான் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுகாஸ்.
அவனுக்கு அதுவரை பந்து வீசிக் கொண்டிருந்த பெண், “நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா ஷார்ட் பால்ல அவுட் ஆக மாட்டீங்க சுகாஸ். என்னால உறுதியா சொல்ல முடியும். அப்படியே உங்க ரன் அவுட்க்கு ஒரு சொல்யூஷன்…” என்று பேசிக் கொண்டே குனிந்து வலையின் ஓரமாக, தரையில் இருந்த அவளது லேப்டாப் மற்றும் டேப்லெட் இரண்டையும் எடுத்துக் கொண்டு வலையில் இருந்து வெளியில் வர, இன்ப அதிர்ச்சியுடன் அவள் முகம் பார்த்தான் நிரஞ்சன்.
“இந்த பெண், இந்த பெண்..” என்று அடித்துக் கொண்டது அவன் மனம்.
அப்படியே தலையை திருப்பி மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சென்னை அணியின் ஆதர்ச வீரன் சுகாஸை அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.
சுகாஸ் பட்டேல் பல வருடங்களாக சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். சென்னை அணியின் நிரந்தர வீரன் அவன். அது மட்டுமா, உலக கோப்பை வென்ற இந்திய அணியில் அவனும் இருந்தானே. இன்றைக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரன் அவன். நெருங்குவதற்கு எளிதானவன், பழகுவதற்கு மிக இனிமையானவன் என்பதை அவன் நன்கு அறிவான்.
ஆனால், அவனுக்கு ஒரு சிறு பெண் பயிற்சி அளிப்பதை, தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவதை, அதை அவன் இயல்பாக ஏற்றுக் கொள்வதை காண்கையில் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
“ஹேய் நிரஞ்சன், எப்போ வந்த? வெல்கம் டூ அவர் சென்னை டீம் மேன்” நிரஞ்சன் அங்கு நிற்பதை கவனித்து விட்டு, நெருங்கி வந்து அவனை வரவேற்றான் சுகாஸ்.
“தேங்க்ஸ்” என்று புன்னகைத்த நிரஞ்சனின் பார்வை தன் மேல் இல்லை என்பதை உணர்ந்த சுகாஸ், மெல்லத் திரும்பி தனக்குப் பின்னால் பார்த்து விட்டு, “அது நந்தனா. நம்ம டீமோட வீடியோ அனலிஸ்ட் (Analyst)” என்று அறிமுகப் படுத்த,
“வாவ்” அவனையும் அறியாமல் சத்தமாக சொல்லி விட்டிருந்தான் நிரஞ்சன். அவனுக்கு அப்படியொரு அதிர்ச்சி, அதனோடு பலத்த ஆச்சரியமும் கூட.