அந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்திருக்க, சென்னை அணி வெற்றிகரமான தொடக்கத்துடன், தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி கொண்டிருந்தது.
அதற்கு முந்தைய இரு ஆண்டுகள் சென்னை அணி மிக மோசமான தோல்விகளை தழுவி இருந்ததால், இந்த முறை நிச்சயமாக மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
அதிலும் முந்தைய ஆண்டு பிளே ஆஃப் (Play off) தகுதி சுற்றுக்கே சென்னை அணி முன்னேறவில்லை என்பது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.
ஒட்டு மொத்த அணியும், வீரர்களும், அணி நிர்வாகமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பத்திரிக்கைகள், இணையம் என எல்லா பக்கமும் அவர்களுக்கு பலத்த அடி.
ஆனால், அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் நடப்பு தொடரின் முதல் போட்டியிலேயே ஐபிஎலில் பரம எதிரிகள் என்று அழைக்கப்படும் சென்னை அணியும், மும்பை அணியும் மோத, சென்னை அணி மிகச் சிறப்பாக ஆடி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதற்கடுத்து வந்த போட்டிகளிலும் தேவையான வெற்றிகளை குவித்து, தவிர்க்க முடியாத தோல்விகளையும் சமாளித்து பட்டியலில் முதல் இடத்தில் நின்றது.
சென்னை அணிக்கு நிகராக வெற்றிகளை பெற்று, புள்ளி பட்டியலில் அவர்களுக்கு அடுத்து நின்றது ஹைதராபாத் அணி.
பல வருட பயிற்சி மற்றும் அனுபவம் காரணமாக புதிய அணியில் விளையாடுவது நிரஞ்சனிற்கு எளிதாகவே இருந்தது. அணியினர் அனைவரும் தோழமையுடன் பழக, அவனுக்கு பெரிதாக வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.
இந்தத் தொடரில் இதுவரையிலும் அவனது ஆட்டம் நேர்மறை விமர்சனங்களை அதிகமாகப் பெற்று சிறப்பானதாக இருந்து விட, பயிற்சியாளரும், அணி நிர்வாகமும் அவனை பாராட்டி தட்டிக் கொடுக்க தவறவில்லை.
கொல்கத்தா அணியில் இருந்தவரை அவனுக்கென்று ஒரு தனிப் பெயர் இருந்தது. அந்த அணிக்கு பெரும் வெற்றிகளை, இரு முறை ஐபிஎல் கோப்பையை, சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தவர்களில் அவனும் ஒருவன்.
நிரஞ்சன் அந்த அணியில் இருந்து விலக நேர்ந்தது, மிக துரதிஷ்ட வசமானது. அவனால் தவிர்க்க முடியாமல் நேர்ந்த ஒன்று அது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சியாக தானிருந்தது. ஆனால், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத இடத்தில் அவனால் தான் தொடர்ந்து இருக்க முடியவில்லை. அமைதியாக அங்கிருந்து வெளியேறி விட்டான். எந்தவித சமரசங்களுக்கும் அவன் இடம் கொடுக்கவில்லை.
விளையாட்டில், விளையாட்டாக கூட தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க அவன் தயாராகவில்லை. விளைவு, கொல்கத்தா அணியில் இருந்து அவன் விலக, சென்னை அணி அவனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதில் அவனுக்கு பெரு மகிழ்ச்சியே.
நிரஞ்சனது ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அவனது சாதனை பட்டியல் மிக நீளமானது. அவன் சறுக்கிய வருடங்களும் உண்டென்றாலும், சாதித்த வருடங்கள் அவனுக்காக நின்று பேசியது.
மிக குறைந்த ஓவர்கள் (overs) என்பதால், பொதுவாகவே ஐபிஎலில் விளையாடும் ஒவ்வொரு வீரனும் துணிந்து, இறங்கி நன்றாக அடித்து ஆடவே செய்வார்கள்.
இங்கே அவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் தான் மேலே முன்னேற அவர்களுக்கு துருப்பு சீட்டு எனும் போது கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அடித்து ஆடி அதிசயங்களை நிகழ்த்துபவர்களே இங்கு அதிகம். ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த பல வீரர்கள், நேரடியாக அடுத்து இந்திய அணிக்கு தேர்வாக, அதைப் பார்த்த இளம் வீரர்கள் ஐபிஎலை தங்களின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக நினைத்து உயிரை கொடுத்து ஆடினார்கள். அதற்கு பலன் இருக்கவும் செய்தது.
ஆனால், நிரஞ்சனிற்கு அப்படி எந்தவொரு அழுத்தமும் இல்லை. ஏனென்றால், ஐபிஎல் என்ற ஒன்று அறிமுகமாகும் போதே அவன் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரனாக இருந்தான்.
அதற்கும் முன்னமே தன்னை கிரிக்கெட் உலகிற்கு நிரூபித்தும் இருந்தான் அவன்.
முதலில் தமிழக ரஞ்சி கோப்பை அணிக்கு விளையாடி, அதன் மூலம் 19 வயதிற்குட்பட்டோருக்கான (Under 19) இந்திய அணியில் இடம் பிடித்தான் நிரஞ்சன். வாய்ப்புகள் அப்படியொன்றும் எளிதாக வாய்த்து விடவில்லை அவனுக்கு.
பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் தனது திறமையை கடுமையாக விளையாடி நிரூபித்து தான், இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடித்தான் அவன்.
பொதுவாக வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சாதிப்பது அபூர்வம். பெரும்பாலும் எதையாவது ஒன்றை தான் தேர்ந்தெடுப்பார்கள். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்தவர்கள் அரிது. அவர்களே ஆல் ரவுண்டர் என்று அழைக்கப் படுவார்கள். மிக குறுகிய காலத்தில் நிரஞ்சன் ஆல் ரவுண்டர் ஆக மாறியிருந்தான்.
அவனது அந்த திறமையால் தான் 19 வயதிற்குட்பட்டோருக்கான
உலகக் கோப்பை இந்திய அணியில் அவனுக்கு இடம் கிடைத்தது, அன்றைக்கு கதறி அழுதே விட்டான் நிரஞ்சன்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடுவது அவனுக்கு வாழ்நாள் கனவு. அதிலும் அந்த இளம் வயதிலேயே அவனது கனவு நிறைவேறுவதற்கான முதல் படி கிடைக்க, அதில் ஓரடி எடுத்து வைக்கும் முன்னே உணர்ச்சி வசப்பட்டு போனான் அவன். இந்திய அணியில் இடம் பிடித்த செய்தி கேட்ட அன்று, குளியலறை கதவடைத்து, கொட்டும் தண்ணீருக்கு அடியில் நின்று கதறி அழுததை அவன் என்றைக்கும் மறக்கவே மாட்டான்.
இந்திய இளம் அணி அந்த வருடம் உலகக் கோப்பையை வெல்ல, உலக வழக்கம் போல் வெற்றி பெற்றவர்களை தூக்கிக் வைத்துக் கொண்டாடியது.
நிரஞ்சன் அத்தொடரில் அடித்த இரண்டு சதங்களும் (century), அவன் எடுத்த பத்து விக்கெட்களும் அவனது சாதனைப் பட்டியலில் முதல் இடத்தை மட்டுமல்ல, நிரந்தர இடத்தையும் பிடித்துக் கொண்டது.
அங்கிருந்து நேரடியாக இந்திய அணிக்கு தேர்வாகி விட்டான் நிரஞ்சன்.
சாதனைகள் மட்டுமல்ல, இடையிடையே பல சோதனைகளும் வரத் தான் செய்தது. போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, தேர்வு அரசியல் (Selection politics) என்று அத்தனையும் சகித்து தான் சாதிக்க வேண்டியிருந்தது.
தற்போது புதிதாக அவன் இணைந்திருந்த சென்னை அணியிலும் அவன் தன்னை நிரூபித்து விட, விளையாட்டை வாழ்க்கையாக தேர்வு செய்ததற்கு தன்னைத் தானே தட்டிக் கொடுத்து கொண்டான் நிரஞ்சன்.
அவனுக்கு வெற்றிகள் மகிழ்ச்சியை அளித்தாலும், மனதின் ஓரத்தில் மெல்லிய முணுமுணுப்பு அவனை தொல்லை செய்து கொண்டேயிருந்தது.
இதுவரை கலந்துக் கொண்ட எந்தவொரு போட்டிலும் அவன் நந்தனாவை காணவேயில்லை. அவனையும் அறியாமல் எப்போதும் அவன் கண்கள் அவளைத் தேடிக் கொண்டே தானிருந்தது. ஆனால், மீண்டும் அவளை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு அமையவேயில்லை.
வீர்களின் பயிற்சி மைதானத்திற்கும் அவள் வந்தது போல தெரியவில்லை.
போட்டிகளுக்காக அவர்கள் பல மாநிலங்களுக்கு பயணிக்க, அந்த நேரமும் வீரர்களுடன் பயணிக்கவில்லை அவள்.
அவளைக் காண வேண்டும் என்ற ஆவலும், அவளை காண காத்திருந்த பொறுமையும் மெல்ல மெல்ல அவனுக்கு கரைந்து கொண்டிருந்தது.
எந்த ஊருக்கு சென்றாலும், அணியினர் அனைவருக்கும் ஒரே ஹோட்டலில் தான் அறைகள் எடுக்கப்படும். தனக்கு மிக அருகில் தான் அவளும் இருக்கிறாள் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியா அவன் நிலை அவனுக்கு அப்படியொரு எரிச்சலை உண்டாக்கியது.
அவளை சந்தித்த முதல் நாளே அவளை பற்றி தெரிந்து கொள்ள, சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.
ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என்று எங்குமே அவளில்லை.
அவளைக் குறித்து வேறு யாரிடமும் அவனுக்கு விசாரிக்க மனம் வரவில்லை.
அவன் நினைத்தால் ஒரே நிமிடத்தில் அவளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து விடலாம் தான். ஆனால், பதில்கள் வரும் முன் ஏன், எதற்கு என்ற கேள்விகள் முளைக்கும். அந்த கேள்விகள் மெல்ல வளர்ந்து இருவரையும் இணைத்து பேசும் என்பது புரிந்து தான் அவளைக் குறித்த விசாரணையில் இறங்கவில்லை அவன்.
அன்றைய இரவு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்க, வெற்றி கொண்டாட்ட பார்ட்டியில் அவளை சந்திந்து விடும் எண்ணத்துடன் நிரஞ்சன் வழி மேல் விழி வைத்து காத்திருக்க, நந்தனாவோ மிக கவனமாக அவனைத் தவிர்த்தாள். அவன் மட்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் போதுமா? அவளும் முன் வந்தால் தானே சந்திப்பு சாத்தியம்?
நந்தனாவின் வேலை எப்போதும் பின்னணியில் இருந்து பார்ப்பது என்பதால், அவனைத் தவிர்ப்பது அவளுக்கு எளிதாகவே இருந்தது.
வீரர்களை நேரடியாக சந்திக்கும் ஒவ்வொரு இடத்தையும், நிகழ்வையும் நேர்த்தியாக தவிர்த்தாள் அவள். போட்டி நடக்கும் போதும் கேமரா வெளிச்சம் விழும் எந்தவொரு இடத்திற்கும் அவள் செல்லவில்லை. இன்றில்லை, அவள் என்றுமே கேமரா முன் செல்ல விரும்பியதில்லை. சென்னை அணியில் ஒருத்தியாக தன்னை அவள் எப்போதுமே வெளிப்படுத்திக் கொண்டதும் கிடையாது. அதையே தான் இப்போதும் பின் பற்றினாள் நந்தனா.
ஆனால், அவள் விலகி இருப்பதற்கு காரணம் அது மட்டுமல்ல.
இதுவரை அவள் சந்தித்த எந்த ஒரு கிரிக்கெட்டரின் மீதும் அவளுக்கு ஈர்ப்பு வந்ததில்லை. அவர்களின் மீது மரியாதை, பிரம்மிப்பு, ரசிக மனம் எல்லாம் அவளுக்கு இருந்தது உண்டு. ஆனால், ஈர்ப்போ அதைத் தாண்டிய எந்தவித உணர்வோ ஒருநாளும் வந்ததில்லை.
ஓரிரு வீரர்கள் அவளிடம் வழிந்ததும் உண்டு. வழி மறித்ததும் உண்டு. டேட்டிங், டின்னர் என்று அழைத்ததும் உண்டு. ஆனால், அதையெல்லாம் ஒரு புன்னகையுடன் புறக்கணித்து விட முடிந்த நந்தனாவால், நிரஞ்சன் கிருஷ்ணகுமார் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசக் கூட முடியும் என்று தோன்றவில்லை.
ஏதோ ஒன்று அவனை நெருங்க விடாமல் அவளைத் தடுத்தது. எப்போதும் போல தனது மனதிற்கு செவி சாய்த்தாள் நந்தனா.
கிரிக்கெட் விளையாட்டு பலருக்கு பொழுது போக்கு. ஆனால், அவளுக்கு அது தான் செய்யும் தொழில். தெய்வமாக வணங்கவில்லை என்றாலும், தொழிலுக்கான மரியாதையை காத்தாள் நந்தனா.
விளையாட்டையும், வாழ்க்கையையும், வேலையையும் ஒன்றோடொன்று கலந்து, வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள அவள் தயாராகவில்லை.
ஆனால், எல்லாம் சில நாட்களுக்கு தான். நிரஞ்சன் அவளைத் தேடி வந்து, அவள் முன் நிற்கும் வரை தான். அதன் பின் தடுமாறிய மனதை, தடம் மாறிட துடித்த அறிவை அவளால் தடுக்க முடியவில்லை.