“ஹாய்…” என்ற பழகிய குரலுக்கு பட்டென்று தலையை உயர்த்தினாள் நந்தனா. அவனது எத்தனை பேட்டிகளை விழி அகற்றாமல் பார்த்திருப்பாள் அவள். அந்த கரகர குரலை எத்தனை முறை ரசித்து உள்வாங்கி இருப்பாள். இதோ, இந்த நொடி அவள் முன் நிற்கிறான். ஆனால், இப்போதும் விழியகல பார்த்தாலே ஒழிய பேச முயலவில்லை.
“எப்படி இருக்கீங்க? பார்க்கவே முடியல?” அவன் தொடர்ந்து கேட்க,
“ஹாய், நிரஞ்சன்” என்றாள் நந்தனா.
அவ்வளவு தான், புன்னகையுடன் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையை நிறைத்தான் நிரஞ்சன்.
அவன் உட்கார எடுத்துக் கொண்ட இடைவெளியை நந்தனா தன்னை சமாளிப்பதற்கு எடுத்துக் கொண்டாள். கணத்தில் முகத்தில் உணர்ச்சி துடைத்து நேராக நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்.
அவர்கள் கொல்கத்தாவில் இருந்தார்கள். மறுநாள் சென்னை, கொல்கத்தா அணிக்கு இடையேயான போட்டி இருந்தது.
சென்னை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பழமை வாய்ந்த மைதானமும், இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மைதானமுமான ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
சென்னை அணியின் தலைமை அனலிஸ்ட் சிவராஜ் அழைத்ததின் காரணமாக அன்றைக்கு அவளும் மைதானத்திற்கு வந்திருந்தாள். சரியாக நிரஞ்சனின் கண்களிலும் பட்டு விட்டாள். இத்தனைக்கும் மைதானத்தின் ஒரு மூலையில், வீரர்களின் பார்வையில் இருந்து விலகி தான் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். ஆனாலும், நிரஞ்சனின் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை.
மைதானத்தின் நடுவில் நின்று பேட் செய்தாலும், ஒற்றை பார்வையின் வழியே ஒட்டு மொத்த மைதானத்தையும் கணித்து, எதிர் அணியினர் எங்கு நிற்கிறார் என்று கவனித்து பந்தை வீரர்கள் இல்லாத இடைவெளிகள் பார்த்து அடிக்கும் நிரஞ்சனின் கூர் விழிகளில் இருந்து அவளால் எப்படி தப்பிக்க முடியும்? அவளைக் கண்டதும் பயிற்சியை பாதியில் நிறுத்தி விட்டு, அவளிடம் வந்து விட்டான் அவன்.
நாளைய கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோற்றாலும் அரையிறுதி செல்வது உறுதி. ஆனால், அப்படி தோற்றுப் போகும் எண்ணமெல்லாம் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. குறிப்பாக நிரஞ்சனுக்கு.
அவனுக்கு கொல்கத்தா அணியின் மேலிருந்த கசப்பு, அந்த ஆட்டத்தை அவனுக்கு மிக முக்கியமாக்கி இருந்தது. அப்படியிருக்கையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபடாமல் தன் முன் வந்து நின்றவனை புருவங்கள் சுருங்க பார்த்தாள் நந்தனா.
“பிராக்டீஸ் பண்ணலையா?” அவள் கேட்க,
மெலிதான புன்னகையுடன்,
“முடிஞ்சது” என்றான் நிரஞ்சன்.
அத்துடன் நிற்காமல், “காஃபி?” என்று அவன் கேட்க, அந்த நேரடி அழைப்பை, அதுவும் இவ்வளவு விரைவாக எதிர்பார்க்காதவள், ஒரு நொடி தடுமாறி தான் போனாள். ஆனாலும் சமாளித்து, “நான் வேலையா இருக்கேன்” என்று மறைமுகமாக மறுக்க, அவனது பார்வை அவளைச் சுற்றிலும் ஆராய்ந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற சென்னை, கொல்கத்தா அணிகளின் போட்டி வீடியோ அவளது லேப்டாப்பில் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து குறிப்புகள் எடுத்து, தனது டேப்லெட்டில் பதிந்து கொண்டிருந்தாள் அவள்.
“ஓகே, இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரீயா? அப்போ சேர்ந்து ஒரு கப் காஃபி சாப்பிடலாமா?” அழைப்பை அவசரமாக முன் வைத்தான்.
“நாளைக்கு நீங்க விளையாடி முடிக்கும் வரை எனக்கு வேலை இருக்கு நிரஞ்சன். ஐ ஆம் சாரி” மென்மையாகவே மறுத்தாள் நந்தனா.
அவனுக்கு புரிந்தது. ஆனாலும், அவளின் மறுப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மெலிதான ஏமாற்றமும், கோபமும் ஒருங்கே வர பட்டென்று இருக்கையை தள்ளி விட்டு எழுந்து கொண்டான் அவன்.
அவளும் மேலே பேசவில்லை, அவனும் விடை பெறவில்லை. ஆனால், அவரவர் பாதையில் விலகித் தான் போனார்கள்.
நந்தனா அனலிஸ்ட் தான், ஆனால் வீரர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது பயிற்சியாளர் மட்டுமே, வீரர்களாக போய் அவளிடம் அறிவுரை கேட்டால் மட்டுமே உதவுவாள் அவள். மற்றபடி அவளே போய் எந்த ஒரு வீரனிடமும் பேசுவதில்லை. சிலர் விதிவிலக்கு. ஆனால், அது பழக்கதினாலும், பிரியத்தினாலும் வந்தது. சிலரின் திறமையை பார்த்து வியந்து அவளே போய் திருத்தங்கள் சொல்லி மெருகேற்றியது உண்டு.
ஆனால், அது எதிலும் நிரஞ்சன் வரவே இல்லை. ஆக, அவர்கள் கிரிக்கெட் சம்மந்தமாக சந்திக்கும் வாய்ப்புகள் அப்போது வரை நிகழவில்லை.
சுகாஸ் சொன்னதை வைத்து பயிற்சியில் நந்தனாவின் தலையீடு இருக்கும் என்றே நிரஞ்சன் நினைத்திருந்தான். ஆனால், அப்படி எல்லோரிடமும் அவள் பேசுவதில்லை என்பது அவனுக்குத் தான் தெரிந்திருக்க வில்லை.
நந்தனா, அவனிடம் சொன்னது தான் உண்மை. அவளுக்கு தலைக்கு மேல் வேலை இருந்தது. மறுநாள் போட்டிக்கு தேவையான புள்ளி விவரங்களை, ஏற்கனவே நடந்த போட்டியுடன் ஒப்பிட்டு, தகவல்களை அவள் சேகரிக்க வேண்டியிருந்தது.
அதைக் கொண்டே போட்டிக்கான இறுதி முடிவை கேப்டன் எடுப்பார். இறுதி முடிவு “தல” தான் எடுப்பார் என்றால் கூட, யார் அணியில் இருக்க வேண்டும், யாரை விலக்கி, யாரை அணியில் சேர்க்க வேண்டும், எந்த பேட்ஸ்மேன் எப்போது இறங்கினால் சரியாக இருக்கும், எந்த பந்து வீச்சாளரை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை அவள் அறிக்கையாக கொடுக்க வேண்டுமே.
அவளது குழு அறிக்கை தயாரித்து, தலைமை அனலிஸ்ட் பார்வைக்கு போய், அவர் சொல்லும் மாற்றங்களை செய்து, அதன் பின்னரே பயிற்சியாளர், கேப்டன் வரை அறிக்கை செல்லும், அதற்கு தேவையான நேரத்தையும், உழைப்பையும் அவள் போட வேண்டும்.
அவனுக்கு அது தெரிந்திருந்தும் கோபித்துக் கொண்டால், அவளுக்கு நல்லது தான். அவனை தவிர்ப்பது இன்னும் எளிது என்று தன் வேலையில் மூழ்கினாள் நந்தனா.
மறுநாள் கொல்கத்தா அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
கொல்கத்தா அணி அதிரடி ஆட்டம் ஆடி 200 சொச்ச ரன்களை சென்னை அணிக்கு டார்கெட்டாக வைத்திருந்தது. இத்தனைக்கும் சென்னை அணி கடுமையாக தான் பந்து வீசியது. ஆனால், அவர்கள் அணியில் ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தாலும், மறுபக்கம் ரன்களை அடித்து குவித்துக் கொண்டே தான் இருந்தார்கள் அவர்கள். இறுதியாக 200 பிளஸ் வந்து நின்றது ஸ்கோர்.
அவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய சென்னை அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 200 சொச்ச ரன்களை 19 ஓவர்களில் அடித்து முடித்திருந்தது.
சென்னை அணியின் இளம் மற்றும் அறிமுக வீரனான ராஜ் மற்றும் நிரஞ்சனே அந்த சாதனையை நிகழ்த்தியது. ராஜ் 101 ரன்கள் அடித்திருக்க, நிரஞ்சன் 91 ரன்கள் குவித்திருந்தான். மொத்த அணியும் அவர்களை வெற்றிக் களிப்புடன் கட்டித் தழுவியது.
மீடியாவும், ரசிகர்களும் அவர்கள் இருவரின் பெயரையும் மந்திரமாய் உச்சரித்தனர்.
மைதானத்தில் இருந்து அறைக்கு போகும் பாதையில் அவர்கள் நடக்க, ஓடி வந்து மூச்சிரைக்க அவர்கள் முன்னே நின்றாள் நந்தனா.
“கங்கிராட்ஸ்” என்றவள், நேராக ராஜின் முன்னே தான் நின்றாள்.
“தட் வாஸ் அ பெஸ்ட் கேம். உங்க ஒவ்வொரு ஷாட்டும் அப்படி இருந்தது. எல்லாமே டெக்ஸ்ட் புக் பெர்பெக்ஷன். ரீசன்ட் பாஸ்ட்ல யாரும் இவ்வளவு துல்லியமா ஆடி நான் பார்க்கவே இல்ல.” அவள் குரலில் வழிந்த ஆச்சரியத்தில் ராஜின் கண்கள் விரிந்தது.
உதடுகளும் புன்னகையில் பிரிய, “தேங்க்ஸ், தேங்க்ஸ்…” என்று அவன் நன்றி உரைக்க,
“நந்தனானு கூப்பிடுங்க” பளிச்சென்று அவனுக்கு தன் பெயரை தெரியப் படுத்தினாள் அவள்.
“கேம் தொடங்கும் போது கொஞ்சம் தடுமாறினது போல இருந்தது. ஆனா, நீங்க ஆறாவது ஓவரில் ஸ்டெடி ஆனதும் ஆரம்பிச்சது பாருங்க வான வேடிக்கை. வாவ் தான் போங்க. நீங்க தொட்ட ஒவ்வொரு பாலும், அடிச்ச ஒவ்வொரு ஷாட்டும்.. ப்ப்பா சான்சே இல்ல. வெல் டன்” பாராட்ட தயங்கவே இல்லை அவள். கூச்சத்துடன் அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டான் ராஜ்.
நந்தனாவின் வயதே தான் அவனுக்கும் இருக்கும் என்பதை ஒற்றைப் பார்வையில் கணித்த நிரஞ்சன், இருவரையும் பார்த்தபடி அப்படியே நின்று விட்டான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மைதானத்தில் நின்றிருக்கிறான், ஐம்பதுக்கும் மேலான ரன்களை ஒற்றை, இரட்டை ரன்களாக ஓடி ஓடியே எடுத்திருக்க, வியர்வை மழையில் நனைந்திருந்தான் அவன்.
உடலும், மனமும் ஓய்விற்கு கெஞ்சியது. முதலில் நல்ல கொதிநீரில் குளிக்க வேண்டும் போலிருந்தது. குறைந்த பட்சமாக அணிந்திருந்த ஜெர்சியை (Team Uniform) கழற்றி எறிந்து விட்டு, வேறு உடைக்கு மாற வேண்டும் போலிருந்தது.
அவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு வேறொன்றை வேண்டி நின்றது அவன் மனது. அது நந்தனாவிடம் இருந்து அவனுக்காக வெளிபடப் போகும் ஒரே ஒரு பாராட்டு வார்த்தைக்காக அவன் காத்து நிற்க, ராஜிடம் பேசி விட்டு, வேலை முடிந்தது என்று காற்றாய் பறந்திருந்தாள் அவள்.
மனதில் அப்பட்டமாக பரவிய பொறாமை உணர்வுடனும், கோபத்துடனும் உடை மாற்றும் அறையை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.
“பையா (bhaiya)” என்று நிரஞ்சனை அழைத்த ராஜ்,
“தேங்க்ஸ்” என்றான் மனதார, “நீங்க மட்டும் எனக்கு மாரல் சப்போர்ட் கொடுக்கலைன்னா, நான் கண்டிப்பா சொதப்பி இருப்பேன். நான் நின்னு கொஞ்ச பால்ஸ் வேஸ்ட் பண்ணி, அப்புறம் நிதானமா அடிச்சு ஆட சான்ஸ் கொடுத்தீங்க. தாங்க்ஸ் பையா.” என்றவன்,
“நந்தனா கிட்ட இருந்து பாராட்டு எல்லாம், என் கோச்சே நேரா வந்து முதுகுல தட்டி பாராட்டின மாதிரி இருக்கு. எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு பையா.” என்று சொல்லி முடிக்க, அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சி பெருகி வழிய, ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வியுடன் அவனைப் பார்த்த நிரஞ்சன்,
“தெரியுமாவா? ரொம்ப நல்லா தெரியும் பையா. ஆனா, அவளுக்கு என்னைத் தெரியாது” என்றவன், அடுத்து அவளின் தந்தையின் பெயரை சொல்ல நிரஞ்சனின் நடை அப்படியே நின்று விட்டது.
ஆனால், அந்த அதிர்ச்சியை எல்லாம் தூசியை போல உதறி தள்ளி விட்டு மீண்டும் அவள் முன் போய் நின்றான் அவன். விக்கிரமனின் வேதாளத்தை போல.
“ஹலோ, என்னை டீமுக்கு ரெக்கமண்ட் மட்டும் பண்ணி இருக்கீங்க. ஆனா, ஒரு வார்த்தை கூட நின்னு பேச மாட்டேங்கறீங்க? என்ன அநியாயம் இது?” நிரஞ்சன் ஆதங்கத்துடன் கேட்க, நந்தனா அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
“வாட்?” சங்கடமான சிரிப்புடன் கேட்டவள்,
“நான், உங்களை டீமுக்கு ரெக்கமண்ட் பண்ணேனா? என்ன சொல்றீங்க நீங்க? என் பேச்சை டீம் மேனேஜ்மென்ட் கேட்குமா என்ன? கிண்டல் பண்றீங்களா நிரஞ்சன்?” அவள் தீவிரமாக கேட்க, ஏற்கனவே மெலிதான சந்தேகத்துடன் இருந்தவன், அவளின் கேள்வியில் அந்த சந்தேகம் வலுக்க, அவளை அப்படியே பார்த்தபடி அசையாமல் நின்றான்.
‘இந்த சின்னப் பெண் சொல்லியா தன்னை அணியில் எடுத்திருப்பார்கள்? வாய்ப்பில்லை தான்’ மனதில் ஓடிய எண்ணத்துடன் நந்தனாவை பார்த்தான் நிரஞ்சன்.