நந்தனாவின் கண்களில் உண்மை இருக்க, ஒரு நொடி குழம்பித் தான் போனான் நிரஞ்சன். அவள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக தான் அவனுக்குப் பட்டது.
அவளைப் பொறுத்தவரை அவள் பொய் சொல்லவில்லை. அதே நேரம் முழுதாக உண்மையையும் சொல்லி விட வில்லை. அவளது வேலையை தான் அவள் பார்த்தாள். நிரஞ்சனை மட்டுமல்ல அவனோடு ராஜ் போன்ற பலரை அணியில் எடுக்க அவர்கள் குழு தான் காரணம், அதனால் அவள் செய்தது என்று ஆகி விடுமா என்று தான் அவனிடம் மறுத்து பேசினாள் நந்தனா.
ஆனால், ‘சுகாஸ் ஏன் அப்படி சொன்னான்?’ என்ற யோசனையுடன் அவன் நிற்க, நந்தனா தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளின் லேப்டாப்பில் வீடியோ ஓட ஆரம்பிக்க, அந்த சத்தத்தில் கலைந்த நிரஞ்சன், அவளை நோக்கி கை நீட்டினான்.
அவள் அசையாமல் அமர்ந்திருக்க, அவனாகவே அவள் கரம் பற்றி, விரல்களை கோர்த்தான். பட்டென்று பதறி பிரித்து விட்டாள் அவள். தன் கையை வேகமாக உதறி மேஜையின் மேல் அவள் வைக்க, இணைக்கும் முன்னே பிரிந்த கைகளை பார்த்தபடி நின்றிருந்தான் நிரஞ்சன்.
“காஃபி?” என்றான் இம்முறையும்,
அவள் மறுக்க தான் போகிறாள் என்பதை கணித்து,
“நீங்க வேலையா இருக்கீங்க? அப்படித் தானே?” என்று அவன் கேட்க, உதடு கடித்து, “ஆம்” என்று தலையசைத்தாள் நந்தனா.
“ஓகே” என்றவன், அவள் முன்னிருந்த சூடான காபி கோப்பையை தன் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர, நந்தனா அதிர்ந்து, “நிரஞ்சன்” என்று கத்தினாள்.
அவன் லேசாக தலையை மட்டும் திருப்ப, “அது… அது, என்னோட காஃபி… நான் குடிச்சுட்டு இருந்தது…” என்று அவள் கை நீட்ட, மெதுவாக கோப்பையை உதட்டில் பொருத்தி, ஒரு வாய் காப்பியை ரசித்து அருந்தினான் நிரஞ்சன்.
நந்தனா அவனை இறுக்கத்துடன் முறைக்க, “கப்ல உங்க பேர் எழுதலையே? அப்புறம் எப்படி உங்க காஃபி ஆகும்?” என்றபடி அங்கேயே நின்று பொறுமையாக முழு கோப்பை காஃபியையும் குடித்து முடித்து, கப்பை அவள் கைகளில் திணித்து விட்டுப் போனான் அவன்.
இன்னமும் கோபத்துடன் அமர்ந்திருந்தவளை குறும்பு சிரிப்புடன் பார்த்து, லேசாக கண் சிமிட்டி, “சுகர் சேர்த்துக்க மாட்டியா நீ? ஆனாலும், காஃபி இனிப்பா தான் இருந்தது.” என்று நிரஞ்சன் சொல்ல, பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தாள் அவள்.
“ஒரே ஒரு கப் காஃபி. நீயா வந்தா பெட்டர். இல்லனா, ஓராயிரம் கப் காஃபி குடிக்கற மாதிரி ஆகிடும் நந்தனா. அண்ட், உண்மையை சொல்லணும்னா, ஐ லைக் தட் ஐடியா. உன் காபியில் கொஞ்சமே கொஞ்சம் சுகர் போடு போதும். இல்லனா, இப்ப போல நீ குடிச்சுட்டு கொடுத்தாலே போதும்” வெறுங்கையால் காற்றில் சிக்ஸர் அடித்து, அவன் கண்ணடிக்க, விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் நந்தனா.
முகத்தை தனது லேப்டாப்பிற்குள் புதைத்தாள் நந்தனா. ஆனால், மனது அதில் பதிய மறுத்தது.
நிரஞ்சன், அவன் மட்டுமே கண்களில் நின்றான். அவனைச் சுற்றியே வந்தது, அவளின் மனது. எத்தனை முயன்றும் அவளால் வேலையில் கவனத்தை திருப்ப முடியவில்லை.
அவள் அறிந்த நிரஞ்சன் பெண்களின் பின் சுற்றாதவன். இத்தனை வருட கிரிக்கெட் வாழ்வில் பெண்களுடன், நடிகைகள், மாடல்கள் என்று யாருடனும் இணைத்து பேசப் படாதவன், அதனாலேயே அவன் மேல் அவளுக்கு தனி மரியாதை இருந்தது.
ஆனால், தன்னிடம் மட்டும் எப்படி நெருங்கி வருகிறான்? என்ன எதிர்பார்க்கிறான்? கண்கள் முன்தினம் நடந்த போட்டியை, அதில் நிரஞ்சனின் பேட்டிங்கை கண்டுக் கொண்டிருக்க, அவள் மனது தனியாக யோசனையில் மூழ்கியது.
அடுத்தடுத்த ஐபிஎல் போட்டிகள் மிகக் கடுமையாக இருந்தது. புள்ளி பட்டியல் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அவர்களில் இருவருக்கு தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு என்பதால், ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறந்தது.
சென்னை அணி வெற்றிகரமாக பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து, அரையிறுதி செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
முதல் இடத்தில் இருந்த ஹைதராபாத் அணியுடன் அன்றைக்கு மோதினார்கள் அவர்கள். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, சென்னை அணி தொடக்கத்திலேயே மளமளவென்று விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.
ஒட்டு மொத்த சென்னை ரசிகர்களும் பதட்டத்தில் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தனர். எப்போதும் போல அனைவரின் ரத்த அழுத்தத்தையும் ஏற்றி விட்டு, 19 ஓவரின் முதல் பந்திலேயே 131 ரன்கள் அடித்து சென்னை அணி வெற்றியை தனதாக்கி கொண்டது. மைதானம் முழுவதும் நிறைந்திருந்த மஞ்சள் கூட்டம் ஆர்ப்பரித்து அடங்க மறுத்தது. உற்சாக குரல்களும், விசில்களும் மும்பையின் வான்கடே மைதானத்தை அதிர வைத்தது.
எங்கு திரும்பினாலும் வெற்றிக் கொண்டாட்டம் தான். ஏனென்றால், இந்த வெற்றியின் மூலம் சென்னை நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இறுதி போட்டிக்கு இன்னும் நான்கு நாட்கள் இடைவெளி இருக்க, அன்றைய இரவை கொண்டாடி தீர்த்துக் கொண்டிருந்தார்கள் சென்னை அணியினர். ஹோட்டலில் சக்சஸ் பார்ட்டி களைக் கட்டி இருந்தது.
நிரஞ்சன் அரை மணி நேரம் அங்கிருந்து விட்டு, பின்னர் அறைக்கு சென்றிடலாம் எனும் எண்ணத்துடன் தான் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தான்.
அங்கே ஒரே ஆட்டமும், பாட்டமும், போதையுமாக இருக்க, அமைதியாக ஒரு இருக்கையை தேடி அமர்ந்தான் அவன். அங்கிருந்து வெளியில் பார்க்க, நீச்சல் குளத்தின் அருகே நின்றிருந்த ஜோடி அவன் கண்களில் பட்டது.
பேச்சும், சிரிப்புமாக அவர்கள் நிற்க, அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. முதலில் அவன் ஏன் அப்படி உணர்கிறான் என்றே அவனுக்குப் புரியவில்லை.
மெல்லிய வெளிச்சத்தில் நீச்சல் குள நீரின் பிரதிபலிப்பு அந்த முகத்தில் தெரிய, தேவதையாய் ஒளிர்ந்த பெண்ணை இமைக்காமல் பார்த்தான் நிரஞ்சன்.
அவன் பார்ப்பதையே உணராமல் சுகாஸுடம் சுவாரசியமாக கதைப் பேசிக் கொண்டிருந்தாள் நந்தனா. அவ்வப்போது கைகளில் இருந்த குளிர் பானத்தை குடித்துக் கொண்டாள்.
“நான் காஃபி குடிக்க கூப்பிட்டா மட்டும், மேடத்துக்கு தலைக்கு மேல வேலை வந்திடும்” மெல்ல முணுமுணுத்து கொண்டான்.
அவளோ முட்டியிட்டு கேப்டனை போல ஷாட் அடித்து காண்பித்துக் கொண்டிருந்தாள். சுகாஸை போல இரண்டடி முன்னே இறங்கி அடித்து காண்பித்தாள். வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தான் சுகாஸ். விளையாட்டை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனும் ஆசுவாசத்துடன், அவளையே பார்த்துக் கொண்டு அவன் திரும்ப, அவன் அருகில் வந்து அமர்ந்தார் சிவராஜ்.
அவர் இது போன்ற பார்ட்டிகளில் எல்லாம் அதிகம் கலந்துக் கொள்ள மாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். இறுதி போட்டிக்கு செல்லும் மகிழ்ச்சியை கொண்டாட வந்திருக்கிறார் போல என்று எண்ணிக் கொண்டு அவரைப் பார்த்தான் அவன்.
“ஹலோ நிரஞ்சன். வெல் டன் மை பாய். கங்கிராட்ஸ் ஃபார் டுடேஸ் வின்” என்று அவனின் தோளில் தட்டிக் கொடுத்து, உரையாடலை அவரே ஆரம்பிக்க, அவரிடம் மேலே பேசுவது அவனுக்கும் எளிதாக இருந்தது.
அவர் கொஞ்சம் குடித்திருப்பார் போலும், நேரம் செல்ல செல்ல கையில் இருந்த கோப்பையின் பானம் குறைய குறைய, அவர் அதிகம் பேச ஆரம்பித்தார்.
நிரஞ்சன் இழுத்துப் பிடித்த புன்னகையுடன் அவருடன் பேசிக் கொண்டிருந்தான். மேலும் அவர் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் அவனுக்கு உபயோகமாகவும் இருக்க, அவரை தடுக்கவில்லை அவன். ஆனால், மணி நள்ளிரவை நெருங்கும் நேரம் அவனுக்கு சோர்வின் காரணமாக உடல் ஓய்விற்கு கெஞ்ச, “சார், ரொம்ப லேட்டாகிடுச்சு” என்றான் மெதுவாக.
“எஸ். யங் மேன். டயத்துக்கு படுக்கைக்கு போகணும். தூக்கம், ரெஸ்ட் ரொம்ப முக்கியம்” என்றவர், எழுந்து கொள்ள தடுமாற, கைக் கொடுத்து அவரை ஹாலில் இருந்து வெளியில் நடத்திக் கொண்டு வந்தான் நிரஞ்சன்.
அப்படியே அவரது அறை வரை உடன் சென்றான் அவன். மூன்றாம் தளத்தில் இருந்தது அவரின் அறை. லிப்டில் இருந்து அறை நோக்கி நடக்கையில், “நீ சென்னை அணிக்கு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் நிரஞ்சன்” தன்னை தோளோடு அணைத்து பிடித்திருந்தவனின் முகம் பார்த்து சொன்னார் அவர்.
இதற்காக தானே காத்திருந்தான் அவன். கொக்கை போல சட்டென கிடைத்த இரையை கொத்தினான் நிரஞ்சன்.
“நீங்க சொல்லி தானே சார் என்னை எடுத்திருப்பாங்க? சோ, உங்களுக்கு தான் அந்த கிரெடிட் போகும்”
“நோ, நோ, நிரஞ்சன். உன் பேரை எனக்கு சொன்னது மை லிட்டில் டார்லிங். ஜீனியஸ் அவ” என்று சிரித்துக் கொண்டே அவர் சொல்ல, நிரஞ்சனின் புன்னகை அப்படியே உறைந்தது.
“யார் அது?”
“நீ இன்னும் அவளை மீட் பண்ணல? ப்ச், அவ எப்பவும் முகத்தை காட்ட மாட்டா” என்று செல்லமாக சலித்தவர்,
“நந்தனா கார்த்திகேயன், என்னோட அசிஸ்டன்ட், வலது, இடது கை…” அவர் சொல்லிக் கொண்டே போக, நிரஞ்சனுக்கு அவளின் பெயரை தவிர எதுவுமே மனதில் பதியவில்லை.
சிவராஜ் பொதுவாக அதிகம் பேசாதவர் தான். ஆனால், உள்ளே சென்றிருந்த சரக்கு அவரை பேச வைத்தது.
“கொல்கத்தா டீம் உனக்கான மரியாதையை கொடுத்து இருக்கணும் நிரஞ்சன். ஒரு ஸ்ட்ராங் அண்ட் சீனியர் இந்தியன் பிளேயர் டீமில் இருக்கும் போது, கேப்டன் பதவியை அவனுக்கு கொடுக்காம, புதுசா வந்த அனுபவம் இல்லாத வெளிநாட்டு பிளேயருக்கு எப்படி கொடுப்பான் அவன்? என்ன விதத்தில் அது சரி? நீ அவங்களுக்கு ரெண்டு தரம் கப் அடிச்சு கொடுத்து இருக்க மேன். தே ஹவ் டு ரெஸ்பெக்ட் தட். ஆனா, அவனுங்க என்ன பண்ணானுங்க? உன்னை மதிக்கல. நீ வெளில வர எடுத்த முடிவு சரி தான்.” அவர் சொல்ல சொல்ல, மௌனமாய் கேட்டபடி உடன் நடந்தான் நிரஞ்சன்.
அவர்கள் உலகில் செய்திகள், ரகசியங்கள் இறக்கை முளைத்து பறக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறான் அவன். ஆனால், இப்போது தான் கண் கூடாக பார்க்கிறான்.
எங்கோ அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தலையை திருப்பி பார்த்தவன், அமைதியாய் நடந்தான்.
“கொல்கத்தா டீம் வீடியோ அனலிஸ்ட் என் கிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்ட பையன் தான். நந்தனாக்கு வெரி க்ளோஸ் ஃப்ரெண்ட். அவன் மூலமா நியூஸ் கேள்வி பட்டதும், நேரா என்கிட்ட தான் வந்தா நந்தனா. அந்த வருஷம் ஐபிஎல் நடந்துக்கிட்டு இருக்கும் போதே, அடுத்த வருஷம் நீ நிச்சயமா சென்னை டீமில் இருக்கணும்னு நாங்க அப்பவே முடிவு பண்ணிட்டோம் நிரஞ்சன்” அவன் தோளில் தட்டி சிரித்தார்.
“சென்னை டீம்ல ஏற்கனவே ஸ்ட்ராங் பிளேயர்ஸ் இருக்கறதால, மேனேஜ்மென்ட் உன்னை எடுக்கறதுக்கு ரொம்பவே யோசிச்சது. ஆனா, எங்க நந்தனா ரெடி பண்ண ரிப்போர்ட்டில் நீ தான் இரண்டாவதா இருந்த. கோச், கேப்டன் எல்லோரும் உன்னை நம்ம டீமில் பார்க்க ரொம்பவே ஆசைப்பட்டாங்க. அண்ட், ஹியர் யூ ஆர்” இரு கைகளையும் விரித்து அவர் சொல்ல, நிதானமின்றி நிலை தடுமாறினார் அவர்.
“சார், பார்த்து.. பார்த்து..” அவர் விழுந்து விடாமல் தடுத்து பிடித்தான் அவன். அவனுடன் இன்னுமொரு ஜோடி கரங்களும் இணைந்து கொண்டது. விழிகளை படக்கென்று அந்த முகத்திற்கு நேராக உயர்த்தினான் நிரஞ்சன்.
“இந்த நேரத்தில நீ ஏன் வெளில இருக்க?” சாவியை நீட்டியபடி அந்நேரத்திலும் அவர் பொறுப்பாக அவளைக் கேள்வி கேட்க, “உங்களை விட வந்தேன் சார்” என்று சமாளித்தாள் நந்தனா.
நிரஞ்சன் தன் பார்வையை நந்தனாவின் மேல் அழுத்தமாக நிலைக்க விட்டிருந்தான். அவனது மௌனத்தை கண்டுக் கொள்ளாமல் சிவராஜ் அறைக்குள் செல்ல உதவி விட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
ஹோட்டலின் சுவரில் ஒற்றைக் காலை பதித்து, மறு காலை தரையில் ஊன்றி, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு,
“அப்புறம் ஜீனியஸ்?” என்றவனின் கண்களிலும், குரலிலும் குறும்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்க, உதடு கடித்தாள் நந்தனா. சிவராஜ் சொன்னதை எல்லாம் அவளும் தானே கேட்டிருந்தாள்.